புதன், 14 டிசம்பர், 2011

எம். ஜி. இராமச்சந்திரன் பிறந்த நாள் ஜனவரி 17,,நினைவுநாள் டிசம்பர் 24,

எம். ஜி. இராமச்சந்திரன் பிறந்த நாள் ஜனவரி 17,,நினைவுநாள் டிசம்பர் 24,
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (, ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
இளமைப்பருவம்
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரனும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார்.
இல்லறம்
எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். அவர் தங்கமணியை மணந்தார். தங்கமணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த இல்லற வாழ்க்கையால் தங்கமணி கற்பமானார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.[3]
செல்லப் பிராணிகள்
எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரை நியமித்திருந்தார்
எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
அரசியல் வாழ்க்கை
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடை பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும்,தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988 இல் பிரிந்து 1989ல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியிலிருந்த போதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[5] இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[6] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.
திட்டங்கள்
சத்துணவுத் திட்டம் இலவச வேட்டி சேலை திட்டம் வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
விருதுகள்
பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
இதயக்கனி - அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
நினைவிடம்
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது நினைவிடமாகப் போற்றி டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !
 * எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
 * பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !
 * எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
  *எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
 * விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
  *சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
 * முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
 * ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
 * நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்
 * எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
  *எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
  *காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
  *நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !
  *சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
  *எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
  *தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.
  *‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
  *அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !
  *ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
  ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
  *அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
  *எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
  *முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !
 * அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !
  *‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !
நன்றி -விக்கிபிடியா ,லஷ்மன்சுருதி .

திங்கள், 12 டிசம்பர், 2011

இசையமைப்பாளர் சந்திரபோஸ்


இசையமைப்பாளர் சந்திரபோஸ்.
சந்திரபோஸ் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும், நடிகரும் ஆவார்.1977 முதல் 90களின் ஆரம்பம் வரை இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இசையமைப்பாளராக
வி. சி. குகநாதனின் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளிவந்த மதுரகீதம் படத்தின் மூலம் அறிமுகமான சந்திரபோஸ் தொடக்க காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா என்ற பாடல் அவரை மிகப் பிரபலமாக்கியது.
பின் "மாங்குடி மைனர்', "மச்சானை பார்த்தீங்களா' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். "மச்சானைப் பார்த்தீங்களா' படத்தில் இடம்பெற்ற "மாம்பூவே சிறு மைனாவே' பாடல் என்றும் நினைவில் நிற்கும் பாடலாகும். இதைத் தொடர்ந்து "மனிதன்', "ஊர்க்காவலன்', "அண்ணா நகர் முதல் தெரு', "ராஜா சின்ன ரோஜா" உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற 'மெதுவா மெதுவா', சங்கர் குருவில் இடம் பெற்ற 'காக்கிச் சட்ட போட்ட மச்சான்', மக்கள் என் பக்கம் படத்தில் வரும் 'ஆண்டவனைப் பாக்கணும்' போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. வி. சேகரின் இயக்கத்தில் வெளிவந்த "நான் பெத்த மகனே" திரைப்படத்தில் இவர் கடைசியாக இசையமைத்திருந்தார்.
நடிகராக
அண்மைக்காலங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்து வந்தார். "கத்திக் கப்பல்' படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது "சூரன்' என்ற படத்தில் நடித்து வந்தார். "மலர்கள்', "திருப்பாவை", உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.
12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடித்த இவர், கலைஞர் நடித்த மணிமகுடம், கலைஞரின் பராசக்தி நாடகம் ஆகியவற்றிலும் நடித்திருக்கிறார்.
இவர் இசையமைத்த சில திரைப்படங்கள்.
மனிதன் (1987)
ராஜா சின்ன ரோஜா (1989)
பாட்டி சொல்லைத் தட்டாதே
புதிய பாடல் (1989)
விடுதலை (1986)
சிகாமணி ரமாமணி (1998)
முதலாளி அம்மா (1990)
அண்ணாநகர் முதல் தெரு (1988)
கலியுகம் (1988)
ஒரு தொட்டில் சபதம்
பார்வையின் மறுபக்கம் (1982)
இதய தீபம்
மாநகர காவல்
மச்சானை பாத்தீங்களா
சங்கர் குரு (1987)
தரையில் வாழும் மீன்கள் (1981)
ஆடுகள் நனைகின்றன (1981)
மாதவி வந்தாள் (1980)
சரணம் ஐயப்பா (1980)
முயலுக்கு மூனு கால் (1980)
மாங்குடி மைனர் (1978)
மதுரகீதம் (1977)[2][3]
பட்டிகாட்டு தம்பி
தாய் மெல் ஆனை
இவர் இசையமைத்த சில புகழ் பெற்ற பாடல்கள்.
பொய் இன்றி மெய்யோடு (சரணம் ஐயப்பா)
மாம் பூவே.. சிறு மைனாவே (மச்சானைப் பாத்தீங்களா)
சுப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா (ராஜா சின்ன ரோஜா)
பச்ச புள்ள ழுதிச்சின்னா பாட்டுப் பாடலாம் (புதிய பாதை)
தில்லிக்கு ராஜா-ன்னாலும் பாட்டி சொல்லத் தட்டாதே
காளை காளை முரட்டுக் காளை (மனிதன்)
இவர் பாடிய சில பாடல்கள்.
பூஞ்சிட்டுக் குருவிகளா..
ஏண்டி முத்தம்மா.. (ஆறு புஷ்பங்கள்)
மறைவு.
நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி 2010 செப்டம்பர் 30 இல் இறந்தார்[5][6]. மறைந்த சந்திரபோசுக்கு இராஜகுமாரி, கீதா என்ற இரு மனைவிகளும், சந்தோஷ்,வினோத் சந்தர் என்ற இரு மகன்களும், கௌரி என்ற மகளும் உள்ளனர்.
நன்றி -விக்கிபிடியா .