செவ்வாய், 31 மே, 2016

இயக்குனர் மணிரத்னம் பிறந்த நாள் ஜூன் 02



மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2, 1956) இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. ஏ. ஆர். ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்தவர் இவர்.

ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். சென்னையில், மனைவி சுஹாசினி மற்றும் மகன் நந்தனுடன் வாழ்கின்றார் மணிரத்னம்.

இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன.

இவரது வெற்றித் திரைப்படங்களில் சில
1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
1984 - உணரு (மலையாளம்)
1985 - இதய கோவில்
1985 - பகல் நிலவு
1986 - மௌன ராகம் (பாக்யராஜின் "அந்த ஏழு நாட்கள்" திரைப்படத்தின் தழுவல் என்று விமர்சனங்களுக்கு உள்ளானது)
1987 - நாயகன்
1988 - அக்னி நட்சத்திரம்
1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)
1990 - அஞ்சலி
1991 - தளபதி (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாக கருதப்பட்டது)
1992 - ரோஜா இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது
1993 - திருடா திருடா
1995 - பம்பாய்
1997 - இருவர்
1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
2000 - அலைபாயுதே
2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன
2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
2010 - ராவணன்(இந்தி)- திரைக்கதை இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது
2013- கடல்
2015-ஓ காதல் கண்மணி

மணிரத்னம் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

*தீபாவளிக்கு  முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள்,உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி சைவ விருந்து அளிப்பர். பாட்டும் ஆட்டமும் அவசியம் உண்டு.


*கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால்,கடிகாரத்தை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்து, நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்.


*மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். மாப்ளே, மதுரைக்காரர். ஜீன் 2...பிறந்த தேதி!.


*தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்  ரியர்க்‌ஷன் காட்டவே மாட்டார். இரண்டையும் புறம்தள்ளி விடுகிற இயல்புடையவர்.!


*கதை விவாதத்துக்கு எப்பொதும் துணை சேர்க்கவே மாட்டார். எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக்கும். சந்தேகம் இருந்தால் மட்டும், ராக்கெட்டோ ஜாக்கெட்டோ சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்வார்!.


*முழு ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலில்தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே. பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்க்ரிப்ட் கம்ப்யூட்டர்மயமாகி விடும்!.


*படம் ரிலீஸான தினத்தன்று கொஞ்சம்கூட டென்ஷன் ஆக மாட்டார். தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார். நிதானமாக அன்றைக்கு அடுத்த பட்த்தின் வேலையை ஆரம்பிப்பார்!.


*நந்தனுக்குப் பரீட்சை என்றால் அன்று அலுவலகத்துக்கு விடுமுறை போடுவார். மகனுக்கு சொல்லிக்கொடுக்கத்தான் இந்த விடுமுறை!.


*நல்ல படமாகவும் இருக்க வேண்டும், அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்த வித்த்தில் ’16 வயதினிலே’ பட்த்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்!.


*காரில் ஏறி உட்கார்ந்ததும் முதல் வேலையாக ஸீட் பெல்ட் போட்டுக்கொள்வார். எல்லோரையும் அவ்விதம் செய்யத்தூண்டுவார்!.


*படத்துக்கு பூஜை கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டுவது, பூசணிக்காய் உடைப்பது,ராகுகாலம்,எமகண்டம் இப்படி  எதையும் பார்க்க மாட்டார். தன் உழைப்பு ஒன்றையே நம்புவார்!.


*பாலாவின் ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை!.


*தன்னிடம் இருந்து எந்த அசிஸ்டென்ட் வெளியே வாய்ப்பு தேடிப் போனாலும் அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, வாய்ப்பு  கிடைக்கும் வரை பயன்படுத்திக் கொள்ளச் சொல்வார்!.


*மனைவியை எப்பொழுதும் ‘ஹாசினி’ என்றே அழைப்பார். சுஹாசினியும் இவரை சிம்பிளாக ‘மணி’!.


*பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும். அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து ‘என்க்குப் பெண் குழந்தை பிடிக்கும்’ எனச் சொல்லும் ஸீன் இருக்கும்!.


*மணிரத்னம் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை. ‘தளபதி’ படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். அவரின் திருமணமும் அப்புறம்தான் நடந்தது!.


*மணிரத்னம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்த்தாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது ‘இருவர்’. பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார்!.


*நடிகர்களிடம் இப்பிடித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக் காட்ட மாட்டார். அவர்களை இயல்பாக் நடிக்கவிட்டு, தேவையான கரெக்‌ஷன்களை மட்டுமே கொடுத்துப் படமாக்குவதையே விரும்புவார்!.


*மணிரத்னத்தின் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும்.கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குப் புரிபடும் இந்த உண்மை!.


*தனிமை விரும்பி, அவரைத் தெரிந்துகொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள்!.


*மணியின் மானசீக குரு, அகிரா குரோசோவா. அவரது படங்களைத் திரையிட்டுக்  காண்பதை அதிகம் விரும்பும் மனசு!.


*கொடைக்கானலில் மணியின் கனவு இல்லம் கிட்ட்த்தட்டத் தயார். பெரிய தியேட்டரும் உள்ளே உண்டாம்!.


*மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களாக ‘ரியல் இமேஜ்’ ஜெயேந்திரா,பி.சி.ஸ்ரீராம், ச்ந்தோஷ்சிவன் மூவரைச் சொல்லலாம். மாதம் ஒரு தடவையாவது ச்ந்தித்துச் சிரிப்பது வழக்கம்!.


*உடை, தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார். சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும். எவ்வளவு கிராண்ட் ஃபங்ஷனாக் இருந்தாலும் கவலையேபடாமல் எளிமையின் வடிவில் வருவார்!.


*உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக ‘நாயகன்’ டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்ட்து. மிகப் பெரிய கெளரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது அதைத் தடுத்தவர் மணிரத்னம்!.

இசைஞானி இளையராஜா பிறந்த நாள் ஜூன் 02


இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம 
இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.

நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.

இவருடைய இசைப்பணிகள் எண்ணில் அடங்காதவை. இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா சிறந்த இசை அமைப்பாளராக வளர்ந்து உள்ளார்.

இசை நடை மற்றும் தாக்கம்
இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்
இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
"How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
"Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
"India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
"ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
"இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
"மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
பார்க்கவும்: இளையராஜா இசையமைத்த திருவாசகப் பாடல்களுக்கு உரை தரும் விக்கி நூல்கள் வலை தளம்

சாதனைகள்
இளையராஜா, இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார்.
லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).
விருதுகளும் பட்டங்களும்
தமிழக அரசின் கலைமாமணி விருது
1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது
இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.
பத்ம பூசண் விருது
இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
2009இல் - பழஸிராஜா (மலையாளம்)
2016இல் - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)[3]
பங்குபெறும் பிற துறைகள்
இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் :

சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
வழித்துணை
துளி கடல்
ஞான கங்கா
பால் நிலாப்பாதை
உண்மைக்குத் திரை ஏது?
யாருக்கு யார் எழுதுவது?
என் நரம்பு வீணை
நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
இளையராஜாவின் சிந்தனைகள்

இசைஞானி. இளையராஜா. 73 வது பிறந்த தினவிழா
==================================
இசைஞானி இளையராஜா .பற்றிய சில 73 குறிப்புகள்...
1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

2. பிறந்த தேதி : 2.6.1943
3. தந்தை : டேனியல் ராமசாமி

4. தாய் : சின்னத்தாய்

5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
6. கல்வி : எட்டாம் வகுப்பு
7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )
8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி
9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)
10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25
ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது
11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால்
அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே
ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.

“என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன்
மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய
வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.
12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில்
தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும்,
பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து
இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.
13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இன்றும்
கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய்
இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.
14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.
15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு
பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத
அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது
என்று கூறியிருக்கிறார் இளையராஜா.
16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள்
ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு
ரயில் ஏறினார்.
17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்
18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை
நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர்.
19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக்
கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக்
கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.
20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும்
அங்கேயே பயிற்சி பெறலானார்.
21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை
வாசிப்பதில் தேர்ந்தவர்.
22 .க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது
கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது
1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல
இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட  கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து
கொண்டார்.
24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி
வந்துள்ளார்கள்.
25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த
ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால்
அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை
இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.
26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும்,
இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும்போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங்
அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார்.
27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில்
சேர்ந்தார்.
28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின்
உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.
29.. முதல் படம் “அன்னக்கிளி”
தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர்
பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார்.
30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய  அனைவருக்கும்
பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு
எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது
திறமையை நிரூபித்தார் இளையராஜா.
31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில்
அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய்
உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”.
32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது.ஆனால் சினிமாவில்
சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.
33. கதை கவிதை கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த
புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது.ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு
கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள்.
35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின்
வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன்
காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன்
வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.

36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று
புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார்.  
37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான்
புத்துயிர் பெற்றன.
38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான்
கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார். 
39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு
அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான
ஒன்று.
40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில்
இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை
ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள்.
வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை.
இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே
இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும்.
ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க
வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக
முடிந்துவிடும்.
சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்கவேண்டியதில்லை.
அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.
41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே
கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார்.
மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம்
என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.

42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.
43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.
44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்
46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார்.
1985  - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987  - சிந்து பைரவி (தமிழ்)
1989  - ருத்ர வீணை (தெலுங்கு)
2009  - பழஸிராஜா (மலையாளம்)
2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)
47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’
ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று
அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.
48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘இளையராஜா
இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர். பண்டிட் பீம்ஸென் ஜோஷி,
பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து
அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும்
பாராட்டிப் பேசினார்.
49. கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம்
வாங்கினேன்.அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது
என்று அடிக்கடி சொல்வார்.
50. கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ்
செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு
பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும்
‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.
51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால்
பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக
வெளியீட்டு விழாவில் பேசினார். அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும்
போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.
52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை
ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை
மும்மூர்த்திகளில் ஒருவரான ”
தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும்
காணிக்கையாக்கினார்.
53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர்
ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார்.
இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில்
இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
56. 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.
57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர்,
58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக்கொடுத்து இதற்கு
காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக்
கொடுத்திருக்கிறார்.
59.  பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று
வெள்ளம் என்று வர்ணிப்பார்.
60.அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா
மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.
61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட
தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. ஹிந்தி பாடல்களை கேட்பதையும்
பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து
தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான
சாதனையை செய்தவர் இளையராஜா.
62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.
63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த
இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.
64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப்
புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.
65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து
சாதனை படைதுள்ளார்.
66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை
என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.
67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின்
இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.
69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.
70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க
இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது. அதே இணையதளம்
இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.
71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75
ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின்
“ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.
72. இளையராஜா எழுதிய புத்தகங்கள் :
1. சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
2. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
3. வழித்துணை
4. துளி கடல்
5. ஞான கங்கா
6. பால் நிலாப்பாதை
7. உண்மைக்குத் திரை ஏது?
8.யாருக்கு யார் எழுதுவது?
9. என் நரம்பு வீணை
10. நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை,
இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
11. பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
12. இளையராஜாவின் சிந்தனைகள்.
73. 1000 படங்களைத்தாண்டி தன் இசைப்பயணத்தை தொடரும் பெருமைக்குரிய இந்திய
இசையமைப்பாளராக உலகை வலம் வரும் இமாலய மனிதர் ”இசைஞானி இளையராஜா”
73 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் ”இசைஞானி. இளையராஜா”.அவர்கள் நூறாண்டு
வாழ்ந்து இன்னும் ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க இறைவன் அருள் வேண்டி  வாழ்த்தி வணங்குவோம்

நடிகர் மாதவன் பிறந்த நாள் ஜூன் 01



ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த இவர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் நிறையப் படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.

மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:

அலைபாயுதே
கன்னத்தில் முத்தமிட்டால்
ஆய்த எழுத்து
மின்னலே
ரன்
என்னவளே
தம்பி
அன்பே சிவம்
பிரியசகி
ஜேஜே
ப்ரியமான தோழி
நள தமயந்தி
பார்த்தாலே பரவசம்
டும் டும் டும்
லேசா லேசா
வாழ்த்துகள்

மாதவன் என்றாலே பல பெண்கள் மயங்கிய காலம் உண்டு. இன்னமும் மாதவனை நினைத்து பல பெண்கள் உருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 'உனக்கு என்ன அரவிந்த்சாமி என நினைப்பா?' என ஆண்களைக் கேலி செய்த காலம் போய், ' இவரு பெரிய மாதவன்' என கேட்கும் காலம் மாறியதும் உண்டு.
வசீகரப் புன்னகைக்கு சொந்தக்காரராக மாதவன் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். முதல் படத்திலேயே தான் பெரும் புகழைப் பெற்றாலும் அதற்கு மயங்கியதில்லை மாதவன். வருடத்திற்குப் பல படங்கள் என நடிக்காமல் சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் திறமையான நடிகர் மாதவர்.
சமீபத்தில் ஆர்.மாதவன் நடித்து வெளிவந்த தனு வெட்ஸ் மனு பெரிய வெற்றியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் தன்னைத் திறமையுள்ள நடிகராக அடையாளம் காட்டியுள்ளார். ஆஸ்ட்ரோ உலகம் இவரைப் பற்றிய சில விசயங்களைத் தொகுத்து வழங்குகிறது.
ஆர்.மாதவனின் முழுப்பெயர் மாதவன் பாலாஜி ரங்கநாதன்
மாதவனுக்கு இந்திய இராணுவத்தில் சேர ஆசை. ஆனால் இவரின் பெற்றோருக்கு இவர் மேனஜ்மென்ட் படித்து மின்னணு துறையில் பட்டம் பெற ஆசை.
மாதவன் ரசிகர்களால் மேடி என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தன் மனைவி சரிதா பிர்ஜேவை 1999ம் ஆண்டு கரம்பிடித்தார்.
1992ம் ஆண்டு மாதவன், ஜப்பானில் நடைப்பெற்ற இளம் வியாபாரிகளின் கருத்தரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துக் கலந்து கொண்டுள்ளார். அதோடு, பேச்சுப்போட்டியில் இந்திய அளவில் முதல் நிலை வெற்றியாளராக வென்றுள்ளார்.
மாதவனுக்குப் பிடித்த வண்ணம் மெருன், வெள்ளை.

மாதவன் கோல்ஃப் விளையாட்டில் கில்லாடி. அமிதாப் பச்சன் போல பிரபலங்களின் தொண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

மாதவனின் வழிகாட்டியாக இருப்பவர் இயக்குனர் மணி ரத்னம்
மாதவன் தொடக்கத்தில் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தவர். பின்னர் அலைபாயுதே படம் மூலம் பிரபலமானவர்.
2006ம் ஆண்டு ‘PETA’ நடத்திய இணையத்தள கணக்கெடுப்பில் மிகவும் அழகான சைவ ஆணாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாதவனின் முதல் திரை முத்தம் குரு படத்திற்காக வித்யா பாலனுடன் நடிக்கும் போதே. இதனால் பல வதந்திகள் உண்டாகின. எனவே, மாதவன் இதுவே தனது முதல் மற்றும் கடைசி திரை முத்தம் என அறிவித்தார். 

கவிஞர் காளிதாசன் காலமானார் (மே 29) 2016


பிரபல கவிஞர் காளிதாசன் ஞாயிற்றுக்கிழமை (மே 29) 2016 நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69. தாலாட்டு என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி சட்டம் என் கையில் உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.  Buy Tickets இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து வைகாசி பொறந்தாச்சு படத்தில் காளிதாசன் என்ற பெயரில் பாடல் எழுதினார். அந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதால் சுமார் 150 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதினார். ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற தலைமகனே கலங்காதே.. பாடல் இவர் எழுதியதுதான். 108 அம்மன் பெயர்களை வைத்து இவர் எழுதிய 'ஒரு தாலி வரம்...' பாடல் பிரபலமானது. உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் தஞ்சையில் உள்ள வீட்டுக்கு வந்தார். நேற்று உடல்நிலை மோசமாகி காலமானார். அவரது உடல் தஞ்சையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் மூலகொத்தலம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது. உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக எண். 50 நல்லப்ப வாத்தியார் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை என்ற விலாசத்தில் அவரது மகன் பாலசுப்ரமணியன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த காளிதாசனுக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.