புதன், 30 நவம்பர், 2011

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்




கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்.
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.
அண்ணல் காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பினனர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தமது ஊரான அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பியவர்.
கொலைக் குற்றச்சாட்டு

அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.
இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்.
அம்பிகாபதி
மதுரைவீரன்
நல்லதம்பி
இவர் இயக்கிய படங்கள்.
பணம்
மணமகள்
இவர் பாடிய பாடல்கள்.
ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
ஆரவல்லியே (ஆர்ய மாலா)
கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
கண்ணனெந்தன் (கண்ணகி)
இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
சந்திர சூரியர் (அம்பிகாபதி)
தீனா...மூனா...கானா...(பணம்)
உன்னருளால் (ரத்னமாலா)
என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
நாலுக் கால் குதிரை (ஆசை)
தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
நல்ல பெண்மணி (மணமகள்)
ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)
மறைவு

1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் மறைந்தார்.
கலைவாணர் அரங்கம்.
தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.
என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.
என்.எஸ். கிருஷ்ணன்... தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...
நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!
வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்!

ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம் ஆனால், 'சதி லீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த 'மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!
'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!
தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை  கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.
என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!
உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.
1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு  அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!
'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!
சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!
''என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார், 'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்.
ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!
'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.
சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய தினம் அது!  

நன்றி -விக்கிபிடியா ,ல்ஷ்மன்சுருதி .

வியாழன், 17 நவம்பர், 2011

இசையமைப்பாளர் சலில் சௌதுரி ...

இசையமைப்பாளர் சலில் சௌதுரி ...
சலில் சௌதுரி வங்காள இசையமைப்பாளர். இந்தியாவின் பல மொழிகளின் திரைப்படங்களில் இசையமைத்தவர். சலீல் சௌதுரி வங்கத்தில் இருபத்துநான்கு பர்கானா மாவட்டத்தில் இன்று சுபாஷ் கிராம் என்றழைக்கப்படும் சிங்க்ரி போதா ஊரில் 1925 நவம்பர் 19 அன்று பிறந்தார். சலீல் சௌதுரி 1995 செப்டம்பர் ஐந்தாம்தேதி மரணமடைந்தார்.
இளமைப் பருவம் தன் இளமைப் பருவத்தை சலீல் சௌதுரி அஸாமிய தேயிலைத் தோட்டங்களில் கழித்தார். அஸாமிய தேயிலைத் தோட்ட ஊழியர்களின் பாடல்களும் அஸாமிய நாடோடிப் பாடல்களும் அவரை மிகவும் பாதித்துள்ளன. இசையார்வமுள்ள அவரது தந்தை பாக், பீத்தோவன், மொஸார்ட் போன்றவர்களின் இசைத் தட்டுகளைச் சேர்த்து வைத்திருந்தார். மேலை இசையில் சலீல் சௌதுரியின் ஈடுபாடு மிக இளம் வயதிலேயே உருவான ஒன்றாகும். மேலை இசையின் தாக்கமே கருவியிசைகளின் சாத்தியக்கூறுகளைப் பற்றியும் இசையில் ஒத்திசைவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவருக்கு கற்பித்தது. சலீல் சௌதுரியின் சாதாரண சினிமாப் பாடல்கள் கூட அவற்றின் ஒத்திசைவு மிக்க அமைப்புக்காகக் கவனிக்கத் தக்கவை. இந்துஸ்தானி இசையைத் தன் தந்தையிடமிருந்தும் அண்ணனிடமிருந்தும் கற்றார். சிறுவயதிலேயே அவர் ஒரு நாடோடி. அந்த அலைச்சல், வங்க பழங்குடி இசையையும் அவருக்குப் பழக்கப்படுத்தியது. சலீல் சௌதுரியின் இசையில், மேலை இசையும் நாட்டுப்புற இசையும் சரியான விகிதத்தில் கலந்து அதனை அழகூட்டின.
அரசியல் ஆர்வம்
பட்டப் படிப்புக்காகக் கல்கத்தா வந்த சலீல் சௌதுரி அன்றைய அரசியல் அலையால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸியரானார். 1946 ல் அவர் பாரதிய ஜன நாட்டிய சங்கம் என்ற அமைப்புக்காக பாடல்களை எழுதி இசையமைக்க ஆரம்பித்தார். அக்காலத்தைய சுதந்திர தாகத்தையும் உழைக்கும் மக்களின் எழுச்சியையும் பதிவு செய்ததன் மூலம் அப்பாடல்கள் வங்கக் கலாச்சாரத்தில் அழியா இடம்பெற்றன. 'பிஜார்பதி டொமர் பிஜார்' . 'ரன்னீர்', 'அபாக் ப்ரொதிபி' முதலியவை சலீல் சௌதுரியின் வார்த்தைகளிலேயே 'நம்பிக்கையின், விழிப்புணர்வின் பாடல்களாக' அமைந்தவை. தன் 20 வயதில் அவர் ஹேமந்த் குமார் பாடிய 'காயார் போது ' என்ற பாடலை இசையமைத்து வங்க இசையில் புதிய அலையை உருவாக்கினார். 'ப'ல்கீர் கான்' என்ற பெயரில் வந்த அவரது புதியவகைப் பாடல்கள் வங்க இசையின் அடுத்த கட்டத்தை உருவாக்கின
இசைத் திறமை
இசையை கோர்ப்பதில் சலீல் சௌதுரி செய்த சோதனைகளை அன்றுவரை இந்திய இசையில் எவருமே செய்தது இல்லை. பல்வேறு பாடகர்களை பலவிதமான மெட்டுக்களில் பாடச் செய்து அவற்றை இசையொருமையுடன் கோர்த்து பாடல்களை அமைக்கும் அவரது முறை அவரது திறமையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் . அவரே பாடல்களை எழுதி அவரே இசையமைத்து அவரே பின்னணி இசையை நடத்தி அனைத்து நுட்பங்களுடன் அவரே பதிவும் செய்வார். அவர் ஒரு மிகச் சிறந்த இசை நடத்துநர்.
நூற்றுக்கணக்கான வங்க இசைப் பாடல்களை அமைத்த சலீல் சௌதுரி 41 வங்க திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவரது முதல் படம் பரிபர்த்தன் [மாற்றம்] 1949 ல் வந்தது. 1994ல் வந்த' மகாபாரதி 'அவரது கடைசி வங்க திரைப்படம். அவரது வங்கப்பாடல்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் அவரே பாடல்களையும் எழுதினார். பிமல் ராய் 1954ல் சலில் சௌதிரியின் கதையான 'ரிக்ஷாவாலா'வை இந்தியில் 'தோ பிகா ஜமீன்' என்றபேரில் சினிமாவாக எடுத்தபோது சலீல் சௌதுரி அதற்கு இசையமைத்து இந்தியில் நுழைந்தார். அப்படம் 1954ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறப்பு ஜூரி பரிசு பெற்றது. ஆயினும் அப்படத்தின் அழியாப் புகழ்பெற்ற பாடல்களான' தர்த்தி கஹே புகார்' , 'ஹரியாலா சவான்', 'ஜாரே 'போன்றவை இந்தியாவெங்கும் விரிவாகக் கவனிக்கப்பட்டன
இந்தித் திரைப்படங்கள்
அதன்பின் சலீல் சௌதுரி இந்தி திரையிசையை மாயம் போல ஆக்கிரமித்துக் கொண்டார். பிராஜ் பாபு, நௌகரி, அமானாத், டாங்கேவாலி, வாஸ், பரிவார், ஜாக்டே ரகோ, அபராதி கௌன், ஏக் காவ் கி கஹானி, லால் பத்தி, முசா•பர், ஜமானா முதலியவை பெரும் புகழ்பெற்ற படங்கள். இப்படங்களின் பாடல்கள் இன்றும் வாழ்கின்றன. 1958 ல் மதுமதி படத்தில் வந்த 11 பாடல்களும் இந்தி இசையுலகை அதிரச் செய்தபோது சலீல் சௌதுரியின் அலை உச்சத்தை அடைந்தது. ' ஜா ரெ பர்தேசி' என்றபாடல் இந்திய இசையின் மிக மிக முக்கியமான ரொமாண்டிக் பாடல் எனலாம். 'சுஹானா ச•பர் ', 'தில் தடப் தடப் கெ 'முதலியவை இன்றும் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன. பரக் , உஸ்னே கஹா தா , சாயா , மாயா, காபூலிவாலா, னந்த், மேரே அப்னே, ரஜ்னிகந்தா , சோட்டி சி பாத், ஜீவன் ஜோதி, மிருகயா, னந்த் மகால் கியவை தொடர்ந்து வந்த இசை வெற்றிப்படங்கள். 1994ல் சுவாமி விவேகானந்தா படத்துக்கு இசையமைத்தபடி சலீல் சௌதுரி தன் இந்திப் பட வரிசையை முழுமை செய்தார்.
மலையாளத் திரைப்படங்கள்
தமிழ்நாட்டினர் சலில் சௌதிரியின் இசையை 'செம்மீன்' மலையாளப் படத்தின் பாடல்களின் வழியாகத்தான் உடனடியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். 'கடலினக்கர போணோரே', 'மானச மைனே வரூ' போன்ற பாடல்கள் அரை நூற்றாண்டு காலம் தமிழ் நாட்டையும் வசீகரித்தவை. இன்றும் கேரளத்தைப் போலவே தமிழ்நாட்டுக் கடற்கரையிலும் பலசமயம் அப்பாடல்களின் இசையே மீனவர்களின் இசையாக அறியப்படுகிறது. பிற்பாடு கடற்கரை சார்ந்த படங்களுக்குப் போடப்பட்ட பாடல்களில் எல்லாம் அவற்றின் சாயல் உள்ளது. அவற்றை அமைத்த சலீல் சௌதுரி ஒரு வங்காளி. சலீதாவின் இசையின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ள முக்கியமான தொடக்கப்புள்ளி இது. அவரது மெட்டுகள் அனைத்துமே அனேகமாக பற்பல இந்திய மொழிகளுக்கு மீண்டும் மீண்டும் போடப்பட்டவை. வங்கத்து மழைப்பாடல் மலையாள இரவு விடுதிப் பாடலாகும். இந்தியில் அது சோகப் பாடலாகலாம் . கலாச்சாரத்தின் சாரத்திலிருந்து பிறக்கும் இசைக்கு அனைத்து கலாச்சாரங்களையும் கடந்து மேலே நிற்கும் ஒரு பொது வெளியில் ஒளிவிட முடியும் என்று நிரூபித்தவர் சலீல் சௌதுரி
இன்றைய இந்திய திரையிசையின் அனைத்து பாணிகளிலும் ஆழமாக ஊடுருவிய தனித்துவம் மிக்க இசை மரபுக்கு சொந்தக்காரர் சலீல் சௌதுரி. மொழியின் எல்லைகளைக் கடந்து நிலவியல் தனித் தன்மைகளைக் கடந்து இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு உணர்ச்சிகரங்களின் தருணங்களை இசையில் பதிவுசெய்தது அவரது பாணி. லதா மங்கேஷ்கர் முதல் ராஜ் கபூர் வரை திரையுலகின் முதல்வர்கள் அவரை ' எக்காலத்திற்கும் உரிய திரையிசை மேதை ' என்று புகழ்ந்தனர். இசையமைப்பாளர்களான சங்கர் ஜெய்கிஷன் முதல் இஸ்மாயில் தர்பர் வரையிலானவர்கள் அம்மேதையின் இசையில் உணர்ச்சிகளுடன் கருவிகளின் இசையை இணைக்கும் அமைப்புமுறையை கண்டு பிரமித்துப் பாராட்டினர். ஆகவேதான் சலீல் சௌதுரி வங்க இசையில் தாகூருக்குப் பின்பு உருவான மிகப்பெரிய அலையை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார்.
சலீல் சௌதுரி இசையமைக்கத் தொடங்கியது 60 ஆண்டுகளுக்கு முன்பு. வங்காளம், இந்தி, மலையாளம்,. தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, ஒரியா, அஸாமியம் என ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் சலீல் சௌதுரி இசையமைத்துள்ளார். அவர் அடிபப்டையில் ஒரு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாடகாசிரியர் அத்துடன் வங்கத்தின் முக்கியமான அரசியல் செயல்வீரரும்கூட . மார்க்ஸியராக இருந்த சலீல் சௌதுரி அரசியல் போராட்டத்தில் சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார்.
கேரளாவில்
இருபது வருடங்கள் வங்கத்தில் கோலோச்சிய பின்பு 1965ல் சலீல் சௌதுரி தென் எல்லையில் கேரள மண்ணுக்கு வந்தார். முதல் படம் செம்மீன். இன்றும் மலையாள இசையை பல வெளி மாநிலத்தவர் செம்மீனின் இசைமூலமே அடையாளம் காண்கிறார்கள் என்பது ஓர் உண்மை. ஏழு ராத்ரிகள், ஸ்வப்னம், நீலப்பொன்மான், நெல்லு, ராகம். ராசலீலா, ப்ரதீக்ஷா, அபராதி, துலாவர்ஷம் தொடங்கி தும்போலி, கடப்புரம் வரை அவர் 23 படங்களில் 106 பாடல்களை உருவாக்கியிருக்கிறார் . மற்றும் மூன்று படங்களுக்கு அவர் பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கிறார். அரவிந்தன் இயக்கிய 'வாஸ்துஹாரா' என்ற மலையாளப் படத்தில் இரு வங்கமொழிப் பாடல்களை சலீல் சௌதுரி இசையமைத்திருக்கிறார். சலீல் சௌதுரி இசையமைத்த சில படங்கள் வரவேயில்லை. பல படங்கள் மிகப்பெரிய பாக்ஸ் •பீஸ் தோல்விகள். ஆனாலும் அவரது இசை ஒளி மங்கவில்லை. பல படங்கள் இன்று அவரது பாடலாலேயே அறியப்படுகின்றன. சலீல் சௌதுரியின் புதியவகை இசைக்கு ஏற்பப் பாடலமைக்க மலையாள பாடலாசிரியர்கள் திணறினர் . பலசமயம் அபத்தமான வரிகளை எழுதினர். அவை மேலும் அபத்தமாகப் படமாக்கப்பட்டன. ஆனாலும் அப்பாடல்கள் மலையாள மனதுக்கு அன்னியமாகவில்லை. அவற்றின் இசையே அவ்வுணர்ச்சிகளை எளிய மலையாள மனதுக்குக் கூட அளித்தன. ஒரு பாடலில் வரிகளும் பின்னணி இசையும் கூடிமுயங்கி முழுமைசெய்துகொள்ளும் சித்திரம் அவரால்தான் மலையாளிக்கு அறிமுகமாயிற்று
சலீல் சௌதுரி பெரும்பாலான இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர் என்பதை அவரது இசையில் ஏராளமான கருவிகள் எந்தவிதமான பிறழ்வும் இன்றி கூடி இசைவுகொள்வதன்மூலம் காணக்கிடைக்கிறது. 'தபலா முதல் சரோட் வரை, பியானோ முதல் பிகாலோ வரை அனைத்தையும் வாசிக்கத்தெரிந்த அபூர்வ மேதை' என்று சலீல் சௌதுரிவைப்பற்றி ராஜ்கபூர் ஒருமுறை சொன்னார். விசித்திரமான வாத்தியங்களைக்கூட இந்திய இசைக்கு ஏற்பப் பதப்படுத்தி இந்திய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வழிகாட்டியவர் அவர். ஓபோ [Oboe] •ப்ரெஞ்ச் ஹார்ன், மாண்டலின், சாக்ஸ•போன் போன்றவற்றை அவர் பாடல்களில் பயன்படுத்தியுள்ள முறை அபூர்வமானது. குறிப்பாக சலீல் சௌதுரிக்கு, பார்க்க கிளாரினெட் போல இருக்கும் இரட்டை ரீட் வாத்தியமான ஓபோ மேலுள்ள காதல் ஆச்சரியமான ஒன்று. பலபாடல்களில் அதை அவர் பயன்படுத்தியுள்ளார்
சலீல் சௌதுரியின் இசை தொடர்ந்த தேடல் கொண்டது. வித்தியாசம் மூலம் தன்னை நிலைநிறுத்துவது. மேலை இசை இந்துஸ்தானி இசை மற்றும் வங்க நாட்டுப்புற இசை ஆகியவற்றை நுட்பமாக ஊடுபாவாகக் கலந்து உருவாக்கப்பட்டவை அவரது பாடல்கள். பாடலின் திரைப்படத் தேவை, வணிக ரீதியான நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டுத் தன் தனித்தன்மையை இழக்காமல் படைப்பூக்கத்துடன் உருவாக்கப்பட்டவை அவரது பாடல்கள் என்பதுதான் குறிப்பாகச் சொல்லவேண்டியது. இன்று கலப்பிசை [ •ப்யூஷன்] மோஸ்தராக உள்ளது. சலீல் சௌதுரி அதற்கு முக்கியமான முன்னோடி. பாகேஸ்ரீ , கலாவதி, ஹமிர் கல்யாணி போன்ற ராகங்களுக்கு பின்னணி இசையாக மேலை நாட்டு இசையை அவர் அமைத்திருப்பதைக் காணலாம். அதேசமயம் அவர் மேலைநாட்டுப் பின்னணி இசையமைப்பு முறையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றவும் இல்லை. சலீல் சௌதுரியின் இசையை எந்த ஒரு வகைமைக்குள்ளும் அடக்க இயலாது. இசை எப்போதும் தன்னைக் கலைத்துக் கொண்டு மீள மீள புதுப்பித்துக் கொண்டு காலத்தின் தேவைக்கேற்பப் புதுவடிவங்கள் கொண்டு வளரவேண்டும். இல்லையென்றால் அது உறைந்து போய்விடும். ஆனால் முன் நகரும் உந்துதலில் நான் என் மரபை விட்டுவிடலாகாது என்பதே என் எண்ணமாகும் சலீல் சௌதுரி தன் இசையின் அடிப்படை பற்றிச் சொன்னது இது.
இணைமெட்டைத் [ obligato ] திறமையாக பயன்படுத்துவது சலீல் சௌதுரியின் இசையின் முக்கியமான உத்தி. மைய மெட்டுக்கு எதிரான மெட்டு பலதிசைகளில் பிரிந்து வளர்ந்து பாடலை ஒரு பின்னலாக மாற்றிவிடும். மேலை மரபிசையில் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படும் கூறு இங்கே இசையை வளரச்செய்யும் கூறாக கையாளப்படுகிறது. அவரது எதிர் மெட்டுகள் ஓபோ மாண்டலின் போன்ற வாத்தியங்கள் வழியாகவும் கூட்டுக் குரல் தனிக் குரல்கள் வழியாகவும் மெட்டின் குறுக்காக ஊடுருவிச் செல்லும்போது நாம் இசையின் மாயத்தை அறிகிறோம்.
சலீல் சௌதுரி மெட்டுதான் பாடல் என்று உறுதியாக நம்பினார். கேட்பவர் முதலில் கவனிப்பது மெட்டைத்தான், மெட்டுதான் பாடலின் அடிப்படை என்றார் அவர். அவரே ஒரு சிறந்த பாடலாசிரியராக இருந்தாலும் ஒரு சரியான மெட்டை கண்டடைந்துவிட்டால் அதற்குரிய வரிகளை உருவாக்குவது பெரியவேலை இல்லை என்றே அவர் எண்ணினார். தன் மெட்டுகள் மீது அவருக்கு இருந்த அபாரமான பிடிப்பும் பயிற்சியும் காரணமாக வங்கத்தில் ஒரு துள்ளல் நடனத்துக்குப் போட்ட அதே மெட்டையே மலையாளத்தில் ஓரு உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் போட அவரால் முடிந்தது. அவரது மலையாளப் பாடல்களில் பல சமயம் மலையாள மணம் இல்லை. இந்திப்பாடல்களில் இந்தி வாசனையும் குறைகிறது. ஆனாலும் அவை அவரது கனவுகள். ஆகவே அழியாத உணர்ச்சிகளினால் ஆனவை. அவ்வுணர்ச்சிகள் மானுடப் பொதுவானவை. இசை அவ்வுணச்சிகளின் மொழி. அதற்கு மொழி இல்லை. மொழியில் ஆழ வேரூன்றிய ஒரு கவிஞர் சலீல் சௌதுரி என்பதை நான் இங்கு நினைக்கவேண்டும். அவரது கவிதைகள் இன்றும் அழியாத முக்கியத்துவத்துடன் உள்ளன. ரவீந்திர பாரதி பல்கலையில் பாடமாக்கப்பட்டுள்ளன அவை. ஆனால் இசை என்பது மொழிகடந்தது என்று அவர் எண்ணினார்.
மரபுவாதிகளின் எதிர்ப்பை சலீல் சௌதுரி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் வங்க இசையை மேலைமயமாக்குகிறார் என்று சொல்லப்பட்டது. ஹார்மோனியமே மேலைநாட்டுக் கருவிதானே என்று சலீல் சௌதுரி அதற்குப் பதிலளித்தார். குரல் என்பது ஒரு பாடலின் ஒரு சிறு பகுதியே என்றார் சலீல் சௌதுரி. முன் நகர வாய்ப்பு அளிக்காத திறனாய்வு உதாசீனம் செய்யப்படவேண்டியது என்றார் அவர்.
சலீல் சௌதுரி மலையாளத்தில் இசையமைத்தபோது பாடலாசிரியர்களிடம் மோத நேர்ந்தது. அவர்கள் மெட்டுக்குப் பாடல் எழுதிப் பழக்கமில்லாதவர்கள் . மரபான யாப்பின் சொல்லாட்சிகளைக் கையாள்பவர்கள். சலீல் சௌதுரியின் மெட்டுகளுக்குப் பொருந்த அவர்கள் வரிகளை ஒடித்து மடக்கி மொழியை இம்சை செய்தனர். சலீல் சௌதுரி அதில் தெளிவாக இருந்தார். கவிதை என்பது கட்டுப்படுத்தப்பட்ட மொழியே என்பது அவரது எண்ணம். யாப்புக்கு கட்டுப்படலாமென்றால் ஏன் மெட்டுக்குக் கட்டுப்படலாகாது? தேவை சற்று இசையார்வம் மட்டுமே. தன் இறுதிக்காலத்தில் 'தம்புரான் 'என்ற படத்துக்கு இசையமைத்துவிட்டு சலீல் சௌதுரி சொன்னார் முதன்முறையாக மலையாளத்தில் தன் மெட்டும் பாட்டும் சரியானபடி இணைந்து வந்திருக்கிறது என்று. காரணம் அதற்குள் மெட்டுக்கு எழுத கவிஞர்கள் பழகிவிட்டிருந்தனர். அவ்விஷயத்தை மலையாளத்துக்குக் கொண்டுவந்ததே அவர்தான்.
சலீல் சௌதுரி மொழியறியாத மன்னா தேவ், லதா மங்கேஷ்கர் போன்றவர்களை மலையாளத்துக்குக் கொண்டுவந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். அதே சலீல் சௌதுரி தான் ஜேசுதாஸை வங்கமொழியிலும் பாடச்செய்தவர். மன்னா தேவ் பாடிப் புகழ்பெற்ற மலையாளப் பாடலான 'மானச மைனே வரூ' வின் வங்க வடிவத்தை ஜேசுதாஸ் பாடினார். அவரது போக்குக்குச் சிறந்த உதாரணம் இது.
1958 ல் சலீல் சௌதுரி எழுதிய கட்டுரை ஒன்றில் 'இந்தியத் திரையிசையின் எதிர்காலம்' இந்திய திரை இசை மெட்டுகள் சார்ந்து பின்னணி இசைக்கு அதிக இடமளித்தபடி முன் நகரும் என்று சொல்லியிருந்தார். அவர் போட்ட பாதையில் ஆர். டி. பர்மன் போன்றவர்கள் முன் நகர்ந்தார்கள். மலையாள இசையில் சலீல் சௌதுரியின் உதவியாளர்களான கெ ஜெ ஜாய் , சியாம் போன்றவர்கள் முன் நகர்ந்தனர்.
தமிழ்த் திரையிசையில் சவுதிரியின் பங்கு
இன்றைய தமிழ் திரைப்பட இசைக்கு உண்மையான முன்னோடி சலீல் சௌதுரி என்றால் அது மிகையல்ல. அவர் குறைவாகவே தமிழில் இசையமைத்திருக்கிறார். ஆனால் இன்றைய திரையிசையின் இரு பெரும் சக்திகளான இளையராஜா , ஏ. ஆர். ரஹ்மான் ஆகிய இருவருமே சலீல் சௌதுரியின் வழிவந்தவர்கள்தான் . இளையராஜா சலீல் சௌதுரியின் குழுவில் கித்தாரும் காம்போ ஆர்கனும் வாசிப்பவராக அறிமுகமானவர். அவரிடம் சலீல் சௌதுரியின் செல்வாக்கு நேரடியானது. அவரது கணிசமான பாடல்கள் சலீல் சௌதுரியின் பாணியை அப்படியே பின்பற்றுபவை. நாட்டாரிசையை மேலையிசையுடன் பிணைத்தல், பின்னணி இசையை பாடலுடன் பிரிக்கமுடியாதபடி பின்னி விரித்தல் போன்றவை அவர் சலீல் சௌதுரியிடமிருந்து கற்றுக் கொண்டவை. தான் சலீல் சௌதுரியின் ஒரு பெரும் ரசிகன் என்பதை இளையராஜா எப்போதுமே சொல்வதுண்டு. ராஜாவின் விரிவான பின்னணி இசை அமைப்பு முறைகள் [ chord progressions, choral background arrangements] மற்றும் இணை மெட்டைத் [ parallel melody/ obligato ] திறம்படப் பயன்படுத்தும் முறை ஆகியவை சலில் சௌதுரியின் பாணியிலிருந்து கற்றுகொண்டவை
ஏ. ஆர். ரஹ்மானின் தந்தை ஆர். கே. சேகர் சலீல் சௌதுரியின் குழுவில் பணியாற்றியவர். அதே பாணியில் பல படங்களுக்கு இசையமைத்தவர். ரஹ்மானின் பல அடுக்குகளிலான பின்னணி இசை நகர்வுகள் சலீல் சௌதுரியின் பாணி தான்.
தமிழ்த் திரைப்படங்களில் சவுதிரி
சலீல் சௌதுரி 1971ல் உயிர் என்ற படத்துக்கு பின்னணி இசையமைத்தார். செம்மீன் இயக்குநரான ராமுகாரியட் தன் கரும்பு என்ற தமிழ் படத்துக்கு இசையமைக்க 1972 ல் சலீல் சௌதுரிவை அழைத்தார். அப்படம் பின்பு கைவிடப்பட்டது. ஆனால் அதில் உள்ள 'திங்கள் மாலை வெண்குடை' 'கண்ணே கண்மணியே' போன்ற பாடல்கள் எழுபதுகளில் இலங்கை வானொலியில் மிகப் பிரபலமாக இருந்தன. 1978ல் கமலஹாசன் நடித்த மதனோத்சவம் தமிழில் பருவமழை என்றபேரில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது சலீல் சௌதுரியின் 'மாடப்புறாவே வா' ' தேன்மலர் கன்னிகள் ' 'கலைமகள் மேடை நாடகம்' 'அங்கே செங்கதிர்' போன்ற அரிய மெட்டுகள் இங்கே பிரபலமடைந்தன.
1977 ல் பாலுமகேந்திரா கன்னடத்தில் கோகிலா படத்தை இயக்கியபோது அதற்கு சலீல் சௌதுரி இசையமைத்தார். அவர் 1979ல் அழியாத கோலங்களை தமிழில் இயக்கியபோது சலீல் சௌதுரி அதற்கும் இசையமைத்தார். அதில் உள்ள ' பூ வண்ணம் போல நெஞ்சம்' 'நாள் எண்ணும் பொழுது' போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.
1980ல் சலீல் சௌதுரி இசையமைத்த 'தூரத்து இடிமுழக்கம்' அவரது கடைசி தமிழ்ப் படம். அதில் உள்ள 5 பாடல்கள் புகழ்பெற்றவை. 'மணிவிளக்கால் அம்மா' 'செவ்வெள்ளிபூவே' 'வலையேந்திச் செல்வோம்' ஆகியவற்றுடன் அதில் வரும் ஆங்கிலப்பாடலான 'There is a rainbow in the distant sky' யும் முக்கியமானது. ஆங்கிலப்பாடலை சலீல் சௌதுரியே எழுதினார். ஆனால் இப்படத்தில் வரும் 'உள்ளமெல்லாம் தள்ளாடுதே' என்றபாடல்தான் தமிழில் சலீல் சலீல் சௌதுரியின் சிறந்த பாடல் எனலாம். ஆனால் அன்றைய சிவாஜி , எம். ஜி. ஆர் யுகத்தின் தேவைகளை மென்மையும் நுட்பமும்கொண்ட சலீல் சௌதுரியின் இசையால் நிறைவேற்ற முடியவில்லை. அவரது நேரடிப்பங்களிப்புத் தமிழில் குறைவே.
ஒர் இசையமைப்பாளராக சலீல் சௌதுரியின் பங்களிப்பு நுட்பமாகப் பார்த்தால் மிகமிக ஆழமான ஒன்றாகும். இந்திய இசையானது லாபனையை மையமாகக் கொண்டது. நம் காதுகள் அப்படி இசை கேட்பதற்கு பழகிப் போனவை. இது பல நூற்றாண்டுகளாக நம்மில் ஊறிய விஷயம். சலீல் சௌதுரி மேலையிசையில் ஒருவித முழுமையை அடைந்திருந்த இசையொழுங்கை [Orchestra] நம் திரையிசையில் நிறுவினார். இன்று நாம் இளையராஜாவையோ ஆர். டி. பர்மனையோ ஏ. ஆர். ரஹ்மானையோ கேட்கும்போது சாதாரணமாகவே பின்னணி இசையையும் பின்னணி ஓசைகளையும் எல்லாம் இணைத்து நம் மனதில் ஒட்டுமொத்தமாக அவ்விசைக்கோலத்தை உருவாக்கிக் கொள்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் சலீல் சௌதுரி தான். இது மேலையிசையில் உள்ள ஒரு சிறப்பம்சத்தை இந்திய இசையுடன் வெற்றிகரமாகப் பிணைத்ததன் மூலம் உருவானது. இன்று உள்ள எல்லா திரையிசைப் பாடல்களும் இப்படிப்பட்ட கலப்பிசை தான். ஒரு தேசத்தின் இசை ரசனையை மாற்றியமைப்பது என்றால் அது சாதாரணமான விஷயமல்ல . தணியாத புதுமை நாட்டமும் பல்வேறுபட்ட இசை மரபுகளில் பயிற்சியும் கொண்ட சலீல் சௌதுரி போன்ற மேதைகளினாலேயே அது நிகழ முடியும்.

வியாழன், 10 நவம்பர், 2011

உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற டி. ஆர். மகாலிங்கம்...

உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற டி. ஆர். மகாலிங்கம்...
டி. ஆர். மகாலிங்கம் ...
தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (1923 – 1978) 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழ வந்தான் அருகே இருந்த செல்லூர் சேஷ அய்யங்கார் மிருதங்கம் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோவில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்துக்கு கிடைத்தது. பிரபல பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் எஸ். ஜி. கிட்டப்பா, மகாலிங்கம், எஸ்.சி.கிருஷ்ணன், எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் டி. எம். செளந்தரராஜன் வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.
பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13வது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்து போன ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். நடிக்க கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெட்கட்ராமன் இசை அமைத்த பாடலை பாடியபடியே அறிகமானார் மகாலிங்கம். கிருஷ்ணரைப் பற்றி தமிழ், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவலக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.
நடித்த திரைப்படங்கள்
நந்தனார்
சின்னதுரை
தெருப்பாடகன்
விளையாட்டு பொம்மை
மோகன சுந்தரம்
மச்ச ரேகை
நாம் இருவர்
ஸ்ரீவள்ளி
பவளக்கொடி
ஆதித்தன் கனவு
ரத்தினபுரி இளவரசி
ஆடவந்த தெய்வம்
அபலை அஞ்சுகம்
மணிமேகலை
அமுதவல்லி
ஸ்ரீவள்ளி (சிவாஜி கணேசனின்)
திருவிளையாடல்
ராஜராஜ சோழன்
அகத்தியர்
திருமலை தெய்வம்
கவலையில்லாத மனிதன்
திருநீலகண்டர்
தந்தைக்குப்பின் தமையன்
பண்ணையார் மகள்
என்னைப் பார்
மாலையிட்ட மங்கை
ஞான செளந்தரி
லைலா மஜ்னு
வேலைக்காரன்
தயாளன்
பிரகலாதா
மனோன்மணி
வேதாள உலகம்
மாயாவதி
ஸ்ரீகிருஷ்ண லீலா.

          மகாலிங்கம் புகழும் செல்வமும் ஓங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர். திரைப்பட உலகின் தவிர்க்கமுடியாத ஒரு தீங்கு சிலருக்கு வீழ்ச்சியும் ஏற்படத்தான் செய்யும். அப்படி நல்ல நிலையிலிருந்த டி.ஆர்.மகாலிங்கம், காலமானபோது அப்படியொன்றும் செல்வத்தின் சிறப்போடு இறக்கவில்லை. என்றாலும் மக்களால் மறக்கமுடியாத மனிதராக, இனிமையான பாடல்களுக்குச் சொந்தக் காரராக மக்களின் அன்புக்கு உகந்தவராக இருந்து மறைந்தார். வாழ்க அவர் புகழ்! 
நன்றி -விக்கிபிடியா.

புதன், 9 நவம்பர், 2011

தமிழ் திரையுகில் முதன் நடிக மன்னன் பி.யூ.சின்னப்பா...பிற‌ந்த‌ நாள் மே 5.




பி.யூ.சின்னப்பா..
வாழ்க்கை குறிப்பு
சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும்.
சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி எதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார்.

சிறு வயதிலேயே பல வேடங்களில் நடித்து ரசிகர்களை அசர வைப்பாராம். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
தம் தந்தை நாடகத்தில் பாடி வந்த பாட்டுகளையெல்லாம் சின்னப்பா பாடிக்கொண்டிருப்பாராம். அத்துடன் புதுக்கோட்டையில் நடந்த பஜனைகளில் அவர் அடிக்கடி கலந்துக் கொண்டு பாடுவது வழக்கமாம். இவரது கம்பீரமான இனிய குரல் கண்டு பஜனை குழுவினர் இவரை அடிக்கடி பாட அழைப்பார்களாம்.
பள்ளிக் கூடத்தில் சின்னப்பா நான்காவது வகுப்பு வரையில் படித்திருக்கிறார். ஆனால் அவருக்கு படிப்பில் அதிக ஈடுபாடு இல்லாததால் அதை நிறுத்தி விட்டு நாடகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டார்.
சின்னப்பாவின் ஆசை நாடகத்தின் மீதும் இசையின் மீதும் தான் என்று நினைக்க வேண்டாம். அவருக்கு ஐந்தாவது வயதான போதிலிருந்தே குஸ்தி, குத்துச்சண்டை, கம்பு சுற்றுதல் ஆகியவைகளிலும் அதிக விருப்பம் உண்டு. இப்படியாக அவரது எதிர்கால வாழ்க்கைக்கான முடிவு ஒன்றும் ஏற்படாமல், பல எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது குடும்பம் ஏழ்மை நிலையிலிருந்தது. வருமானமோ போதவில்லை.
சின்னப்பா குஸ்தி போட்டுக் கொண்டிருந்தால் வயிறு நிரம்பிவிடுமா என்ன? அதனால் ஏதாவது ஒரு சிறு தொகையையாவது அவர் சம்பாதித்தாக வேண்டியதாயிருந்தது. அதனால் அவர் கயிறு திரிக்கும் கடையொன்றில் 5 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார். நல்ல வேளையாக அவர் சில மாதங்களுக்கு மேல் இந்த வேலையில் நிலைக்கவில்லை.
கடைசியில் சின்னப்பா நாடகத் தொழிலிலேயே ஈடுபடவேண்டும் என்று அவரது தந்தை தீர்மானித்தார். அதன் படி சின்னப்பா தம் 8வது வயதில் தத்துவ மீனலோசனி வித்வபால சபாவில் சேர்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரில் இக்கம்பெனி பழனியாப்பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டு வந்தது. அப்பொழுது இந்தக் கம்பெனியில் டி.கே.எஸ். சகோதரர்கள் முக்கிய நடிகர்களாய் நல்ல புகழுடன் செல்வாக்குடனும் விளங்கி வந்தனர்.

கம்பெனியில் சேர்ந்த சின்னப்பாவை கவனிப்பாரில்லை. அவருக்குக் சில்லரை வேடங்களே கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் இருந்தால் தாம் முன்னுக்கு வர முடியாது என்பதை சின்னப்பா உணர்ந்து கொண்டு அந்த கம்பெனியிலிலுந்து ஆறு மாதத்தில் விலகி விட்டார். அந்த சமயத்தில் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெளி புதுக்கோட்டையில் நாடகம் நடத்தி வந்தது. ஸ்ரீ நாராயணன் செட்டியார் என்வரின் சிபாரிசின் பேரில் சின்னப்பா அந்தக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 15 ரூபாய் மாத சம்பளத்தில் சின்னப்பா 3 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டார்.

சின்னப்பாவுக்கு நடிக்க வேண்டும் பாட வேண்டும் என்ற பேராவல் அதிகம் இருந்தது வந்தது. ஆனால் அவருக்கு ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் முதலில் சாதாரண வேடங்கள் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், அவர் மற்ற வேடங்கள் சம்பந்தப்பட்ட வசனங்களைப் பேசுவது, பாட்டுகளைப் பாடுவது போன்றவைச் செய்து வந்தார்.

அவர் ஒரு நாள் கம்பெனி வீட்டில் சதி அனுசூயா நாடகப் பாட்டுகளை மிகவும் ரசித்து பாடிக் கொண்டிருந்தாராம். இவர் பாடியது மேல் மாடியிலிருந்த கம்பெனி முதலாளியான ஸ்ரீ சச்சினதாந்த பிள்ளையின் காதுக்கும் எட்டியதாம். இவ்வளவு நன்றாகப் பாடியவர் யார் என்று விசாரித்தாராம். அது சின்னப்பா என்ற தெரிந்ததும், அவரை மேல் மாடிக்கு வர வழைத்தார். அந்த பாடல்களை மீண்டும் பாடச்சொல்லி கேட்டார். அவருக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நிமிடமே அவர் சின்னப்பாவின் சம்பளத்தை 15 ரூபாயிலிருந்து 75 ரூபாய்க்கு உயர்த்தினார். சாதாரண நடிகராயிருந்த சின்னப்பாவை கதாநாயகனாக உயர்த்தப்பட்டார்.

அந்த கம்பெனியில் சின்னப்பா கதாநாயகன் நடிகனாக விளங்கியபோது, திரு.எம்.ஜி.ஆர். , பி.ஜி.வெங்கடேசன் , பொன்னுசாமி , அழகேசன் போன்றவர்கள் சின்னப்பாவின் ஜோடியாக பெண் வேடத்தில் நடித்து வந்தானர். மற்றும் காளி என்.ரத்தினம் , எம்.ஜி.சக்ரபாணி போன்றவர்கள் சக நடிகர்களாய் விளங்கி வந்தனர்.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகங்களிலேயே அப்பொழுது அதிகமான வசூலை அளித்தவகையில் ஒன்று பாதுகா பட்டாபிஷேகம் ஆகும். இந்த நாடகத்தை அவர்கள் சென்னையில் தொடர்ந்தால்ப் போல் ஒரு வருட காலம் நடத்தினார்கள். பரதன் வேடத்தில் தோன்றி வந்த சின்னப்பா பிரமாதமாக பொது மக்கள் ஆதரவைப் பெற்றார். புராண நாடகங்களில் மட்டுமல்லாமல் சந்திர காந்தா ராஜேந்திரன் போன்ற சமூக நாடகங்களிலும் சின்னப்பா தனிப் புகழ் பெற்றார்.

நாடக மேடையில் சின்னப்பா நடிப்பில் மட்டுமின்றி பாட்டிலும் மிகப் புகழ் பெற்றார். அப்பொழுதெல்லாம் பக்தி கொண்டாடுவோம் என்ற பாடல் மிக பிரபலமாக விளங்கியது. இந்த பாடலை சின்னப்பா மேடையில் பாடும்போது குறைந்தது அரை மணி நேரமாவது ஆகுமாம். அந்த அளவுக்கு ராக தாளத்துடன் பாடுவாராம் .சின்னப்பா பாடி முடிந்ததும் சங்கீத மழையில் மீண்டும் நனைவதற்துத் தான் அன்றைய ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்காத நாளே கிடையாதாம். இந்தப் பாட்டு அந்நாளில் சூப்பர் ஹிட் ஆகி மூலை முடுக்குகளில் எல்லாம் கூட சாதாரணமாக மக்களின் வாயில் ஒலித்து வந்நது.

அந்த மாதிரி மேடையில் சின்னப்பா நடிப்பிலும் பாட்டிலும் மிகப்புகழ் பெற்றதற்கு திருஷ்டி ஏற்பட்டு விட்டது போலும். அவரது புகழ் உச்ச நிலையில் இருந்த போது, அவரது தொண்டை உடைவது நாடக மேடை நடிகர்களின் தொழிலுக்கு ஒரு பெரிய கண்டம் ஆகும். இதிலிருந்து தப்பியவர்கள் ஒரு சிலர் தப்பாமல் மறைந்தவர்கள் அநேக பேர்.

பசு நிறைய பால் கறக்கும் வரையில் அதற்குப் புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, தவிடு, பசும்புல் உபசாரத்துடன் அளிக்கப்படும். பால் மறத்துப் போய் விட்டதென்றாலோ வெறும் வைக்கோலையும் பச்சைத் தண்ணீரையும் கொண்டு தான் அது உயிர் வாழ வேண்டும். இந்தப் பசுக்களைப் போலத்தான் அன்றைய பாய்ஸ் கம்பெனி பையன்ளையும் முதலாளிகள் நடத்தி வந்தார்களாம். பையன்களுக்கு குரல் இனிமையாக இருக்கும் போது கம்பெனிகளில் அவர்களுக்கு மரியாதையும், ராஜயோகமும் உபசாரமும் பலமாயிருக்குமாம். அத்துடன் அழகான துணிகளும், நல்ல ஸ்பெஷல் சாப்பாடும், கைவிரல்களுக்கு மோதிரம், காப்பு, காதுக்குக் கடுக்கன், சையின் எல்லாம் ஒன்றொன்றாய்ச் செய்து போடுவார்களாம். பையனின் உறவினர்கள் வரும் போது அவர்களுக்கும் பிரமாதமான விருந்து நடக்குமாம்.

குரல் உடைந்து, இனிமை குறைய ஆரம்பித்ததும், மேற்படி நகைகள் ஒவ்வொன்றாய் கழட்டபடுமாம். ராஜயோக மரியாதைகளும் தனிச்சாப்பாடும் ஒவ்வொன்றாய் குறைந்து போகுமாம். கடைசியில் பையன் கம்பெனியிலிருந்து விலக வேண்டிய நிலமை ஏற்படும் போது, கோவலன் மாதவியை விட்டுப்பிரியும் காட்சியைத்தான் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியருக்குமாம்.

பையனிடம் உள்ள நல்ல துணிமணிகளும், படுக்கை, பெட்டி, சாமான்கள் முதலியயாவும் பறிமுதல் செய்யப்படுமாம். அது மட்டுமல்ல பையனுக்கு நல்ல திசையிருந்து வந்த காலத்தில் அவனுக்குப் பொது மக்களால் அளிக்கப்பட்ட தங்க, வெள்ளி மடல்கள்,பரிசுகள் இவைகளையும் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள் முதலாளிகள். பையனுக்கு கம்பெனி பாக்கி நிறைய இருந்ததாகவும், அதற்காகவே இப்பறிமுதல் வைபவம் நடந்ததாகவும் அவர்கள் காரணம் கூறி விடுவது வழக்கமாம். பையன் ஆண்டிக்கோலத்தில் நிராதரவாய்,அழுத கண்ணுடன் வருவானாம்.

அந்த காலத்தில் பையன்கள் உருப்படாமல் போனதற்கும் அவர்கள் கம்பெனிக்குக் கம்பெனி தாவியதற்கும், நாடக நடிகர்கள் ஏழ்மை நிலைமையிலேயே உழன்றதற்கும், நாடக முதலாலிகளின் இத்தகைய மோசமான பகற்கொள்கை நடத்தை தான் காரணம் என்று சின்னப்பா கூறியுள்ளார். இந்த விஷயமெல்லாம் நாடகப் பையன்கள் எல்லோருக்குமே தெரிந்தது தான் இருந்தது. ஆனால் அவர்களால் பாவம் என்ன செய்ய முடியும்.

தனிச்சாப்பாடு, தனிச்சம்பளம், மரியாதைப் போச்சு, தங்கச் சங்கிலி காப்பும் கழட்டலாச்சு, விட முடியுமோ இந்தக் கனவான் ஒரு மூச்சு.

வெளியேற்றிடவும் ஏற்பாடு செய்யலாச்சு! என்று இது போன்று கிண்டல் பாடட்க்களை பாடி, ஒருவருக்கொருவர் தமாஷ் செய்து கொள்வது ஒன்று தான் அவர்களால் முடிந்தது. வேதனையிலும் அவர்களுக்கு ஒரு வேடிக்கை.

சின்னப்பாவுக்கும் இந்த நிலைமையெல்லாம் தெரிந்திருந்தது. அவரது நிலைமையெல்லாம் தெரிந்தது. அவரது குரல் தகராறு செய்ய ஆரபித்தவுடனயே, தமக்கும் சீக்கிரமே இது போன்ற வெயியேற்று உபசாரங்கள் ஆரம்பமாகிவிடும் என்பதை உணர்ந்தார். ஆனால் மற்ற பையன்களை போலவே தாமும் முதலாளிகளின் அட்டூழியங்களுக்கு ஆளாகி, அழுத கண்ணுடன் அநாதையாய் வெளியேற விரும்பவில்லை. ஆதலால் அவர் பல நாள் யோசித்து கடைசியில் ஒரு யோசனை தோன்றியது.

முதலில், தம் பாட்டிக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதாகவும் ஒரு முறை வந்து விட்டுப் போகும் படியும் தகப்பனாரை தந்தி கொடுக்கும் படி செய்தார். பிறகு தம் பெட்டியை எம்.ஜி.சக்கரபாணியிடம் கொடுத்து விட்டு, அவரது பெட்டியைத் தாம் வாங்கிக் கொண்டு சின்னப்பா மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் விலகி தந்திரமாக தம் ஊர் போய் சேர்ந்தாராம்.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியை விட்டபின் சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கலானார்.

இந்த சமயத்தில் அவருக்கு தம் சங்கீதத் திறமையை விருத்தி செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. திருவையாறு சுந்தரேச நாயனக்காரரிடம் காரை நகர் வேதாசல பாகவதரிடம் சில காலம் சின்னப்பா சங்கீதம் கற்றுக்கொண்டார். சுமார் 500 உருப்படிகள் வரை அவர் பாடம் பண்ணி விட்டார். வர்ணம், பல்லவி, ஸ்வரம், இவைகளையெல்லாம் அவர் கற்றுக் கொண்டார். நாடக மேடையை மறந்து சங்கீத வித்துவானாகவே மாறி விட வேண்டும் என்று அவர் அப்போது நினைத்தார். ஆனால் இவை மூலம் அவருக்குக் கிடைத்த வருமானம் அவருடைய தேவைக்கு போதாமலிருந்தது? அதனால் தான் அவர் சங்கீத வித்வானாவதற்கு தீவிரமாய் முயலவில்லை.

சங்கீதத்தை ஒரு பக்கம் பயின்ற படியே சின்னப்பா தேகப் பயிற்சி வித்தைகளையும் கற்றுக் கொள்ள தொடங்கினார். புதுக்கோட்டையில் உள்ள தால்மியான் கொட்டடி என்கிற சாமியாசாரி கொட்டடியில் சேர்ந்து ராமநாத ஆசாரியிடம், கத்திச் சண்டை, கம்புச்சண்டை, போன்றவைகளில் நல்ல தேர்ச்சி பெற்று வந்தார். இது தவிர சுருள் பட்டா வீசுவதிலும் சின்னப்பா சூரர் ஆகிவிட்டார்.

சுருள் பட்டா என்பது அந்தக்காலத்தில் ஊமையன் உபயோகித்த ஆயுதமாகும். அதாவது கடிகாரத்தின் மெயின் ஸ்பிரிங் போன்ற இந்தக் கத்தியின் ஒரு நுனியைக் கையில் மாட்டிக் கொண்டு சுமார் 30 அல்லது 40 அடி தூரத்திலுள்ள எதிரி மீது வீசுவார்கள். கத்திச் சுருள் மின் வேகத்தில் பறந்து கொண்டு செல்லும். அதன் நுனியில் பொருத்தப்பட்ட கத்தி எதிரியின் தலையைக் கொத்திக் கொண்ட பின் மீண்டும் சுருண்டு கொண்டு வீசியவரிடமே தலையுடன் வந்து விடும். ஆனால் இந்தப் பட்டா வீசுதலுக்கு மிகுந்த பயிற்சியும் தைரியமும், அவசியமாகும். குறி தவறாகவோ, அஜாக்கிரதையாகவோ வீசினால் எதிரியின் தலைக்குப் பதில் வீசியவரின் தலையே பறிபோய் விடும்.

காரைக்குடியில் சாண்டோ சோம சுந்தரம் செட்டியார் என்பவர் ஒரு தேகப்பயிற்சிக் கழகத்தை நடத்தி வந்தார். இக்கழகத்தில் சின்னப்பா சேர்ந்தார் ஸ்ரீ சத்தியா பிள்ளை என்ற வாத்தியாரிடம் அவர் குஸ்தி கற்றுக்கொண்டார்.

வெயிட் லிப்டிங் அதாவது கனமான குண்டுகளைத் தூக்குவது. இதிலும் சின்னப்பா பயிற்சி எடுத்துக் கொண்டார். இது சம்பந்தமான போட்டியில் 150 பவுண்டு வரையில் தூக்குபவர்களுக்கெல்லாமே ஒரு வெள்ளி மெடல் பரிசு வழங்கப்படுவது வழக்கமாம். சின்னப்பாவே 190 பவுண்டு வரையில் தூக்கி விசேஷப் பரிசுகளைப் பெற்றிருக்காராம்.

அன்றைய மைசூர் சமஸ்தானத்தில், பயில்வான் பசுவய்யாவுக்கு அடுத்த பயில்வான்களாக நஞ்சுண்டப்பா, ஆஷக் உஷேன், சியாமசுந்தர் முதலியவர்கள் புதுக்கோட்டைக்கு விஜயம் செய்தபோது அவர்களுடன் பாராட்டு பெறுவதற்காக ரகசியமாய் குஸ்தி போட்டுப் பார்த்திருக்கிறாராம் சின்னப்பா. புதுக்கோட்டையின் சுற்றுப்புரங்களில் ஆண்டுதோறும் குஸ்திச் சண்டை, கம்புச் சண்டை, கத்திச் சண்டை இவை சம்பந்தமான காட்சிகள் நடைபெறுவது வழக்கமாம். சின்னப்பா சிலமுறை தம் பெயரை மாற்றி வேறு பெயர் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு குஸ்திச் சண்டையிட்டுக் காட்டியிருக்கிறாராம்.

உடம்பு பூராவும் பிரம்பு வளையங்களை மாட்டிக் கொண்டு தீ பந்தங்கள் சொருகிய கம்புகளை கையில் ஏந்தி, சண்டை போடுவது ஒரு ஆபத்தான விளையாட்டல்லவா? இந்த விளையாட்டை சின்னப்பா புதுக்கோட்டையில் அன்றைய நீதிபதி ஸ்ரீ ரகுநாதய்யர் முன்னிலையில் செய்து காட்டி, சிறப்பு பரிசுகளை சின்னப்பா பெற்றிருக்கிறார்.

அந்த சமயத்தில் சின்னப்பபாவுக்கு நிரந்தரமான வருமானம் இல்லாதிருந்தது. நாடகங்களுக்கு கூப்பிட்டால் போவார். கச்சேரிசெய்ய அழைத்தால் அதற்கு செல்வார். குஸ்தி, கம்புச் சண்டை போன்ற போட்டிகளிலும் கலந்துக் கொள்வார். வேற கொஞ்சக் காலம் சொந்தமாக ஒரு பயிற்சி நிலையமும் நாடக கம்பெளியையும் நடத்தியும் பார்த்திருக்கிறார். எதையானாலும் சரி துணிந்து செய்து பார்த்துவிட வேண்டும் என்று மனப்பான்மை உடையவர் சின்னப்பா. இதற்கு உதாரணமாக அவர் கொஞ்ச காலம் மாந்திரீகம் கற்றுக் கொண்டதைக் குறிப்பிடலாம்.

ஸ்பெஷல் நாடகங்களுக்கு போய் வந்த நேரத்தில் சின்னப்பா ஸ்ரீ கந்தசாமி முதலியாரை மானேஜராகக் கொண்ட ஸ்டார் தியேட்டரிகள் என்ற கம்பெனியில் சேர்ந்து, அந்த குழுவுடன் ரங்கூனுக்குப் போய் நாடகங்களில் நடித்து விட்டு வந்தார். எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர்., சந்தானலட்சுமி, பி.எஸ்.சிவபாக்கியம், எம்.ஆர்.சுவாமிநாதன், எம்.ஜி.சச்ரபாணி, பி.ஜி.வேங்கடேசன் ஆகியோர் இந்த குழுவுடன் இருந்தனர். ரங்கூன் ஹரி கிருஷ்ணன் ஹாலில் சுமார் ஆறுமாத காலம் நாடகங்கள் நல்ல ஆதரவுடன் நடைபெற்றன. ராஜம்மாள், சந்திரகாந்தா போன்ற சமூக நாடகங்கள் மிகுந்த பொதுமக்கள் ஆதரவை பெற்றன.

சினிமாவில் சேர்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன் சின்னப்பா புளியம்பட்டிக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும், பல ஊர்களில் எம்.ஆர். ஜானகியுடன் நிறைய நாடகங்களில் நடித்து விட்டு இந்தியா திரும்பினார். சந்திரகாந்தா நாடகத்தில் சின்னப்பா பிரலமாக விளங்கி வந்ததை அறிந்த ஜூபிடர் பிக்சர்ஸார் சின்னப்பாவை தங்கள் தயாரித்த சந்திரகாந்தா படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். சந்திரகாந்தா படத்தில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பாவின் நடிப்பும், பாட்டும், சிறப்பாக அமைந்திருந்தன.

சந்திரகாந்தா படம் 1936ல் வெளிவந்தது இப்படத்தில் அவரது பெயர் சின்னசாமி என்றே வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகே சின்னசாமி என்ற பெயர் சின்னப்பா வாக மாறியது.

பிறகு சின்னப்பா பஞ்சாப் கேசரி, ராஜ மோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி ஆகிய ஐந்து படங்களில் நடித்தார். இப்படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது. எனவே கொஞ்ச காலம் படங்களில் நடிக்காமலிருக்க வேண்டியதாயிற்று. முதலில் தொண்டை தகராறு செய்தது. பிறகு அவருக்கு படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்காமற் போனது. இவையேல்லாம் அவரது மனதைக் கலக்கி விட்டன. இதன் விளைவாக அவர் கடுமையான வைராக்கிய விரதங்களைத் தொடங்கினாராம். சுமார் நாற்பது நாள் அவர் சரியான அன்ன ஆகாரமின்றி மௌன விரதத்தை கடைபிடித்து வந்தாராம். அதனால் அவர் உடம்பு மிகவும் இளைத்துப் போயிற்றாம். இந்த சமயத்தில் தான் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் அவரை பார்க்க வந்தார்.

தொழிலின்றி இருக்கும் நடிகர்களுக்கு துணிந்து சந்தர்ப்பம் அளிப்பதிலும், புதிது புதிதாய் நடிகர்களைப் படங்களில் புகுத்துவதிலும் சாதனை படைத்தவர் டி.ஆர்.சுந்தரம், ஆகவே வேலையின்றி இருந்து வந்த சின்னப்பாவைத் தேடிப்பிடித்து தம் உத்தமபுத்திரன் படத்தில் அவருக்கு கதாநாயகன் வேடத்தை அளித்தார்.

1940ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படம் சூப்பர்ஹிட் ஆகியது. சின்னப்பாவின் இரட்டை வேட நடிப்பு ரசிகர்களை அசர வைத்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலும், சூப்பர் ஹிட் ஆகி வசூலில் சாதனை படைத்தது. அந்த வருட சினிமா பட தேர்தலில் உத்தமபுத்திரன் முதல் இடத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து அன்றைய சினிமா உலகில் சின்னப்பா சூப்பர் ஆக்டர் ஆக திகழ்ந்தார்.

அதன் பின்னர் தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன், மனோண்மணி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றுள் மனோண்மணியில் தான் சின்னப்பா அதிகம் பாராட்டுதல் பெற்றார்.

இந்த கால கட்டங்களில் தான் ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர் ரசிகர்களும், நடிக மன்னர் பி.யூ.சின்னப்பா ரசிகர்களும் ஆங்காங்கே மோதி கொண்டனர். சில இடத்தில் அடிதடியும் நடந்து உள்ளது.

பிருதிவிராஜனில் பிருதிவிக்கும், சம்யுத்தைக்கும் ஏற்பட்ட கதைக் காதல் அவ்வேடத்தில் நடித்த சின்னப்பா, ஏ.சகுந்தலா இவர்களிடையே நிஜக்காதலாய் முடிந்தது. இருவரும் தம்பதிகளாயினர்.

சின்னப்பா ஏ.சகுந்தலாவை 05.07.1944.ந் தேதி அன்று சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

சின்னப்பா ஆர்யமாலா படத்தின் மூலம் நிறைய புகழை பெற்றார். பிறகு வந்த கண்ணகி படம் சின்னப்பாவை பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகனாக ஆக்கியது.

கண்ணகிக்குப் பிறகு சின்னப்பா குபேரகுசேலர், ஹரிச்சந்திரா, ஜெகதலப்ரதாபன், மஹா மாயா ஆகிய மூன்று படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன. மஹாமாயா சுமாரான படமாய் இருந்தது. ஆனால் சின்னப்பாவை பொருத்தவரையில் நடிப்பில் படத்திற்குப் படம் அசத்தி வந்திருந்தார்.

சின்னப்பாவின் பாட்டுகள் இசைத்தட்டுகளில் வெளிவந்த நல்ல விற்பனையாகியது. ரேடியோவில் ஒரே ஒரு தடவை ( 1938ம் வருடம்) பாடியிருக்கிறார். ஆனால், அவர்கள் அப்போது அளித்த சன்மானம், சின்னப்பாவுக்கு இதற்காக ஏற்பட்ட செலவை விடக் குறைவாயிருந்ததால் ரேடியோ விஷயத்தில் அவர் அக்கறையே கொள்ளாமல் விட்டு விட்டாடர்.

சின்னப்பா நடித்து வெளிவந்த மற்ற படங்கள் பங்கஜவல்லி, துளசி ஜலந்தா, விகடயோகி, கிருஷ்ணபக்தி முதலியவையாகும். கிருஷ்ணபக்தி அவருக்கு நிறைய புகழை வாங்கி தந்தது.

மங்கையர்கரசி யில் மதுராந்தகன், காந்தரூபன், சுதாமன் என்று மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இதுவும் ஒரு சூப்பர் ஹிட் படமாக சின்னப்பாவுக்கு அமைந்தது.

சின்னப்பா நடித்து வெளிவந்த கடைசி படங்கள் வன சுந்தரி, ரத்னகுமார், சுதர்ஸன் ஆகும். சுதர்ஸன் என்ற படம சின்னப்பா மறைவுக்கு பிறகு தான் வெளிவந்தது.

சின்னப்பா பத்திரிகை விமர்சனங்களுக்கும், பத்திரிக்கை காரர்களுக்கும் தனி மதிப்பளித்து வந்தார். ஒரு முறை லட்சுமிகாந்தன் இவரைப் பற்றி ஏதோ எழுதியிருந்ததை ஒரு நண்பர் இவரிடம் எடுத்துக் காட்டினாராம். லட்சுமிகாந்தனைத் திட்டுவதற்குப் பதிலாக, சின்னப்பா நம்மிடம் ஆயிரம், ஆயிரம் தவறுகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க அவைகளை எடுத்துக் காட்டுபவரிடம் எதற்காக சண்டை போட வேண்டும் என்று கேட்டாராம்.

தமிழ் திரையுகில் முதன் முதலில் நடிக மன்னன் என புகழப்பட்ட சின்னப்பா 23/09/1951 ம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

சின்னப்பாவுக்கு ஒரே மகன் அவர் பெயர் பி.யு.சி.ராஜபகதூர் ஆகும்.

ராஜபகதூர் கோயில் புறா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

கோயில் புறா படம் அவருக்கு எந்த பெயரும் வாங்கி தரவில்லை. இதை தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நடித்தார்.

சினிமாவில் ராஜபகதூர் வளர்ந்து வந்த நேரத்தில் காலமானார்.

ந‌ன்றி‍ ல‌ஷ்மிஸ்ருதி.