புதன், 30 நவம்பர், 2011

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்




கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்.
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.
அண்ணல் காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பினனர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தமது ஊரான அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பியவர்.
கொலைக் குற்றச்சாட்டு

அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.
இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்.
அம்பிகாபதி
மதுரைவீரன்
நல்லதம்பி
இவர் இயக்கிய படங்கள்.
பணம்
மணமகள்
இவர் பாடிய பாடல்கள்.
ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
ஆரவல்லியே (ஆர்ய மாலா)
கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
கண்ணனெந்தன் (கண்ணகி)
இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
சந்திர சூரியர் (அம்பிகாபதி)
தீனா...மூனா...கானா...(பணம்)
உன்னருளால் (ரத்னமாலா)
என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
நாலுக் கால் குதிரை (ஆசை)
தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
நல்ல பெண்மணி (மணமகள்)
ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)
மறைவு

1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் மறைந்தார்.
கலைவாணர் அரங்கம்.
தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.
என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.
என்.எஸ். கிருஷ்ணன்... தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...
நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!
வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்!

ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம் ஆனால், 'சதி லீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த 'மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!
'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!
தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை  கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.
என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!
உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.
1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு  அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!
'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!
சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!
''என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார், 'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்.
ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!
'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.
சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய தினம் அது!  

நன்றி -விக்கிபிடியா ,ல்ஷ்மன்சுருதி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக