வியாழன், 5 ஜனவரி, 2012


இயக்குனர் கே.பாக்கியராஜ் பிறந்த நாள் ஜனவரி 07 
கே.பாக்கியராஜ் (1953ஆம் ஆண்டு பிறந்தவர்), தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகத் திரைப்படக்கலை பயின்ற இவரது அந்த ஏழு நாட்கள் திரைப்படம் தமிழில் எளிய, ஆயினும், பொருள் வாய்ந்த அழுத்தமான திரைக்கதைக்கு ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிற திரைப்படங்களில் ஒன்று.
திரையுலக வாழ்க்கை.
1970ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில், குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறிக் கொண்டிருந்த இயக்குனர் பாரதிராஜாவின் பட்டறையில் தமது திரை வாழ்க்கையை பாக்கியராஜ் துவங்கினார். பாரதிராஜாவின் முதல் படமான பதினாறு வயதினிலே படத்தில் தயாரிப்பு தொடர்பான சிறு சிறு வேலைகளைக் கவனித்து வந்த அவர், பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதி ராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் இரண்டு காட்சிகளில் தோன்றும், ஆனால் நினைவில் நிற்பதான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசன உதவியும் அவர் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கியராஜின் பெயர் முதன் முதலாகத் திரையில் மிளிர்ந்த படம் இது.
தமது அடுத்த படமான புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் பாரதிராஜா பாக்கியராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார். ரத்தி அக்னிஹோத்ரி (பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்னணிக் கதாநாயகியாக உருவாகி, கமலஹாசனுடன் ஏக் துஜே கேலியே திரைப்படத்தில் இணைந்து நடித்தார்) அவரது இணையாக நடித்த இப்படம் வெற்றிக் கொடி நாட்டவே, இதன் பிறகு பாக்கியராஜிற்கு திரையுலகில் ஏறுமுகம்தான்.
ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்கியராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள். (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). இதில், சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்கியராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அமைந்திருந்த இப்படம் பெருவெற்றி பெறவில்லை எனினும், பாக்கியராஜிற்கு புகழைப் பெற்றுத் தந்தது. அடுத்து, ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி பாக்கியராஜின் முத்திரை பதியலானது.
பொதுவாக அப்பாவியான இளைஞன்; ஆயினும், சிக்கல்கள் நேர்கையில் அதைத் தனது தனி வழி கொண்டு சமாளிக்கும் திறமையும் கொண்டவன் என்னும் கருத்துரு ஒன்றை பாக்கியராஜ் தமக்காக இத்திரைப்படத்திலிருந்து அமைத்துக் கொண்டார். அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச் இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது. இப்படத்தின் முடிவு கவிதையாக அமைந்ததாக குமுதம் பத்திரிகை பாராட்டியிருந்தது.
இதை அடுத்து ஒரு மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்கியராஜ் இயக்கி நடித்தார். ஆயினும், அவர் முன்னரே உருவாக்கி வைத்திருந்த அப்பாவி இளைஞன் என்னும் பிம்பத்துடன் பொருந்தாமையால், இது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதை அடுத்து வெளியான இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள் ஆகியவை பாக்கியராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு, மாபெரும் வெற்றிப் படங்களாயின. பாக்கியராஜின் முத்திரை முழுமையாகப் பதிந்து, மாபெரும் வெற்றி ஈட்டிய திரைப்படம் 1982ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்கியராஜ் கையாண்ட சில விடயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பரபரப்பாக பேசப்படுபவை.
1990ஆம் ஆண்டுகள் துவங்கி பாக்கியராஜின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. சில பெரும் அளவில் தோல்வியுற்றன. மிஸ்டர் இந்தியா என்னும் இந்தித் திரைப்படத்தைத் தழுவி அவர் இயக்கி நடித்த ரத்தத்தின் ரத்தமே தோல்வியுற்றது. தனது மகன் சாந்தனுவை சிறுவனாக அறிமுகம் செய்து அவர் இயக்கி நடித்த வேட்டிய மடிச்சுக்கட்டு படமும் தோல்வியுற்றது. பாக்கியராஜின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது போல ஒரு தோற்றம் உருவாகலானது.
2003ஆம் ஆண்டில் அவர் தனது மகள் சரண்யாவை நாயகியாக அறிமுகம் செய்து இயக்கிய பாரிஜாதம் திரைப்படம் மாறுபட்ட ஒரு திரைக்கதை அமைப்பைக் கொண்டிருப்பினும், வெற்றிப்படமாகத் திகழவில்லை. சரண்யாவும் முன்னணி நடிகையாகவில்லை.
தற்போது கலைஞர் தொலைக்காட்சியில், பாக்கியராஜின் திரைக்கதை அமைப்பில் விளக்கு வெச்ச நேரத்திலே என்னும் தொடர் வெளியாகி வருகிறது.
சொந்த வாழ்க்கை
தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்கியராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரவீணா என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்கியராஜின் இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், பாமா ருக்மிணி ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்கியராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்கியராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருந்தார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி வளர்ந்து வருகிறார்.
அரசியல் ஈடுபாடு
துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்கியராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சி ஒன்றைத் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தற்போது, தி.மு.க. கட்சியில் உள்ளார்.
இலக்கிய ஈடுபாடு..
இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்கியராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான 'இன்று போய் நாளை வா' என்னும் திரைப்படத்தில் கூட ஜெயகாந்தன் எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறு கதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தவர் பாக்கியராஜ். பல ஆண்டுகளாக மேலாக, பாக்யா என்னும் பத்திரிகையை நடத்தி வருகிறார்.
பாக்கியராஜ் உருவாக்கிய இயக்குனர்கள்.
தமது குருவான பாரதிராஜாவைப் போலவே, பாக்கியராஜும், பல திறமையான இயக்குனர்களை உருவாக்கினார். இவர்களில், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் வெற்றிகரமான இயக்குனர்களாகத் திகழ்ந்தனர்.
பாக்கியராஜ் இயக்கி நடித்தவை
சுவரில்லாத சித்திரங்கள்
ஒரு கை ஓசை
விடியும் வரை காத்திரு
இன்று போய் நாளை வா
மௌன கீதங்கள்
டார்லிங் டார்லிங் டார்லிங்
தூறல் நின்னு போச்சு
அந்த ஏழு நாட்கள்
முந்தானை முடிச்சு
சின்ன வீடு
தாவணிக் கனவுகள்
எங்க சின்னராசா
ஆராரோ ஆரிராரோ
சுந்தர காண்டம்
வீட்ல விசேஷங்க
பவுனு பவுனுதான்
ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி
அம்மா வந்தாச்சு
வேட்டிய மடிச்சுகட்டு
ரத்தத்தின் ரத்தம்
பாரிஜாதம்
ராசுக்குட்டி
சொக்கத்தங்கம்
பிறரின் இயக்கத்தில் பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்
கிழக்கே போகும் ரயில்"
சிகப்பு ரோஜாக்கள்"
புதிய வார்ப்புகள்"
கன்னிப் பருவத்திலே"
பாமா ருக்மிணி'
பொய் சாட்சி
அன்புள்ள ரஜினிகாந்த் (கௌரவ வேடம்)
ருத்ரா
இது நம்ம ஆளு (எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கிய ஒரே படம்)
நடிகராக
பாக்கியராஜ் ஒரு நடிகராகத் தமது எல்லைகளை உணர்ந்தவராக விளங்கினார். அவர் தமக்கெனவே உருவாக்கிக் கொண்ட பாத்திரத்தை அப்பாவித்தனமும் சாமர்த்தியமும் சம அளவில் கலந்தோடிய ஒரு பண்புக்கூறாக வடித்திருந்தார். இப்பண்புக்கூறு மிகப் பெரும் அளவில் வெளியாகி வெற்றி பெற்றவற்றில், முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு, அந்த ஏழு நாட்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தம்மைத் தாமே கேலி செய்து கொள்ளும் ஒரு அரிய பண்பு அவரது குணச்சித்திரமாக அவரது படங்களில் வெளிப்பட்டு, ஒரு தனிப்பாணியை உருவாக்கின. ஒரு சராசரித் திரை நாயகனுக்கான இலக்கணங்களிலிருந்து விடுபட்டு, யதார்த்த உலகின் அன்றாட வாழ்க்கையில் பலங்களும் பலவீனங்களூம் நிறைந்த மனிதனைச் சித்தரிப்பதாக அவரது பாத்திரங்கள் அமைந்தன.(கண்ணாடி அணிந்து நடித்த முதல் நாயகன் அவரே; பின்னர் இதுவே ஒரு நடைமுறைப் பாணியாகக் கொஞ்ச காலம் நிலவியது. இதைக் கொண்டே சின்னவீடு படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியையும் அமைத்ததே அவரது ஆற்றல்).
திரைக்கதை அமைப்பாளராக
இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என 1980ஆம் ஆண்டுகளில் பாக்கியராஜ் போற்றப்பட்டார். திரைக்கதை அமைப்பில் அவர் கொண்டிருந்த ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான அவசர போலிஸ் 100. 1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்துத் தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்கியராஜ் உருவாக்கிய அவசர போலிஸ் 100 வெற்றிப்படமாக விளைந்தது. கல்கி (இதழ்) மாபெரும் தொழில்நுட்பவாளர் (Master Craftsman) என்று அவரைப் பாராட்டியது.
கமலஹாசன் நடித்த ஒரு கைதியின் டைரி திரைப்படத்திற்கு பாக்கியராஜ் திரைக்கதை அமைத்திருந்தார். ஒரளவே வெற்றி பெற்ற இப்படத்தைப் பின்னர் இந்தியில் அமிதாப் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்க ஆக்ரி ராஸ்தா என்னும் பெயரில் இயக்கினார். இது மாபெரும் வெற்றி அடைந்தது.
இயக்குனராக
நகைச்சுவையை முதன்மையாகக் கொண்டிருப்பினும், பாக்கியராஜ் தாம் இயக்கிய திரைப்படங்களில் யதார்த்தமும் மனித நேயமும் அடிநாதமாக விளங்குமாறு அமைத்திருந்தார். 'என்னுடைய காத்லி உங்கள் மனைவி ஆகலாம்; ஆனால், உங்கள் மனைவி எனக்குக் காதலி ஆக முடியாது' என்று உயர் பண்பினை வெளிப்படுத்திய அந்த ஏழு நாட்கள், தனது காதலிக்காகப் பொறுமையுடன் காத்திருக்கும் வேளையில், பண்பையும் காத்திருந்த தூறல் நின்னு போச்சு, தனது இளமைக்காலத் தோழிக்காக பொறுமையுடன் அவமானங்களைச் சகித்துக் கொள்ளும் டார்லிங் டார்லிங் டார்லிங் இராணுவத்தில் சேர்ந்து விட்ட தனது மாமனை மணக்கக் காத்திருக்கும் கிராமத்துப் பெண்ணிடம் காதல் கொள்ளும் பவுனு பவுனுதான் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
பாக்கியராஜ் பாசாங்குகளற்ற, யதார்த்தமான ஒரு இயக்குனர். தமது படங்களின் வழியாகத் தம்மை ஒரு அறிவுஜீவி என நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயன்றதில்லை. பெரிய தொழில் நுட்பங்களையும் அவர் சார்ந்திருக்கவில்லை. அநேகமாக அவர் படங்களில் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளோ, வெளி நாட்டுப் படப்பிடிப்புகளோ இருந்ததில்லை. அவர் முழுக்க முழுக்க, தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி, தமது திறமைகள், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பித் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இந்த வகையில் இந்தி நடிகர்/ இயக்குனர் ராஜ் கபூருக்கு ஈடாக பாக்கியராஜைக் குறிப்பிடலாம். (சங்கம் போன்ற ராஜ்கபூரின் சில திரைப்படங்கள் பிரம்மாண்டமாக அமைந்தவை எனினும், அவரது துவக்க காலத் திரைப்படங்களான, ஆவாரா, ஜாக்தே ரஹோ, ஸ்ரீ 420 போன்றவை இப்பாணியில் அமைந்தவையே). ராஜ் கபூர் இந்தியாவின் மிகப் பெரும் காட்சியாளர் (Greatest Showman) எனவும், இந்தியாவின் சார்லி சாப்ளின் எனவும் புகழப் பெற்றவர். இப்பாராட்டுக்கள் பாக்கியராஜுக்கும் பொருந்துபவையே.
தமிழில், இது போன்ற எளிமையான, அழுத்தமான பாணியைக் கையாண்ட பிற இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பீம்சிங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், இவர்கள் நடிகராகத் திகழவில்லை. இரண்டையும் செவ்வனே செய்த மிகச் சில இயக்குனர்களில் ஒருவர் பாக்கியராஜ்.
இசையமைப்பாளராக
இளையராஜாவுடன், இடையில் ஏற்பட்ட ஒரு சிறு மனத்தாபம் காரணமாக, இது நம்ம ஆளு திரைப்படத்திற்குப் பாக்கியராஜே இசை அமைத்து, ஒரு பாடலையும் பாடியிருந்தார். ஆயினும், இதை அவர் தொடரவில்லை. அவர் இசை அமைத்த ஒரே படம் இதுவேயாகும்.
விமர்சனங்கள்
பாக்கியராஜ் தமது படங்களில் பாலியலை முன்னிறுத்துவதாக ஒரு விமர்சனம் எழுவதுண்டு. இதற்கு உதாரணமாக, மாபெரும் வெற்றி பெற்ற முந்தானை முடிச்சின் முருங்கைக்காய், சின்ன வீடு படத்தின் சில காட்சிகள், இது நம்ம ஆளு போன்றவற்றைக் குறிப்பிடுவதுண்டு. ஆயினும், பாக்கியராஜ், பாலியல் நெருக்கம் ஆபாசமாகத் தோன்றாதவாறு இவை அனைத்தையும் கணவ்ன- மனைவிக்கு இடையிலான நெருக்கமாக வெளிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இது இரசிக்கத் தக்கதாகவே அமைந்தது. வர்த்தக ரீதியிலான வெற்றிக்குத் தேவையான கூறுகளைக் கொண்டு, அதே நேரம் அவற்றை அருவருப்பின்றி, இரசிப்பிற்கு உரியதாக அமைக்கும் பாக்கியராஜின் திறமைக்கு இது ஒரு சான்று.
தமது அனைத்துப் படங்களிலும், தாம் உருவாக்கிய அப்பாவி இளைஞன் என்னும் கருத்துருவையே முன்னிறுத்தியதால், பாக்கியராஜால் மாறுபட்ட வேடங்களைத் தாங்கி நடிக்க இயலவில்லை. அவ்வாறு மாறுபட்டு அவர் நடித்த விடியும் வரை காத்திரு படம் வெற்றி பெறவில்லை. இது குறித்து, ஒரு இயக்குனர் என்ற முறையில் தமக்குப் பின்னடைவே என அண்மையில் ஒரு நேர்காணலில் பாக்கியராஜ் கூறியிருந்தார்.
உடன் நடித்த நாயகியர்
பாக்கியராஜின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது பாத்திரத்தை முன்னிறுத்தியவையாகவே அமைந்தமையால், நாயகியருக்குப் பொதுவாக, பெருமளவில், அவற்றில் பணி இருந்ததில்லை. இருப்பினும், அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகா மற்றும் மௌன கீதங்கள் திரைப்படத்தில் சரிதா ஆகியோர் தமது பாத்திரங்களில் திறம்பட நடித்து நற்பெயர் பெற்றனர்.
பிரவீணா, பூர்ணிமா ஜெயராம் (இவர்கள் இருவரும் பாக்கியராஜுடன் வாழ்விலும் இணைந்தவர்கள்), ரதி அக்னி ஹோத்ரி (பாக்கியராஜின் முதல் நாயகி), ராதிகா, ஊர்வசி (பாக்கியராஜின் அறிமுகமான இவரும் நகைச்சுவை மிளிரும் நடிப்பிற்குப் பெயர் பெற்றார்), பானுப்பிரியா, குஷ்பூ, மீனாஷி சேஷாத்திரி ஆகியோர் பாக்கியராஜின் திரை நாயகியரில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
இந்தியில் பாக்கியராஜின் திரைப்படங்கள்.
இந்தியில் பாக்கியராஜ் இயக்கிய திரைப்படம் ஆக்ரி ராஸ்தா. ஆயினும், அவரது பல படங்கள் தமிழில் வெற்றிக் கொடி நாட்டியமையால் இந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டன. இவற்றில் பலவற்றில் இந்தி நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார். சிலவற்றில் கோவிந்தாவும், முந்தானை முடிச்சின் மறுவாக்கத்தில் ராஜேஷ் கன்னாவும் நடித்திருந்தனர். இவற்றில் இந்தியில் ஓ சாத் தின் என்ற பெயரில் வெளியான அந்த ஏழு நாட்கள் மற்றும் பேட்டா என்ற பெயரில் வெளியான எங்க சின்ன ராசா ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.
நன்றி ::)விக்கிபிடியா .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக