நடிகர் எம். கே. ராதா நினைவு தினம் ஆகஸ்டு 29 ,
எம். கே. ராதா (20 நவம்பர் 1910 - 29 ஆகஸ்டு 1985), இந்தியத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராகப் பணியாற்றியவர். இவர், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து முத்திரை பதித்தார். மொத்தம் 50 திரைப்படங்களில் நடித்தார்.
இளமைக் காலம்
எம். கே. ராதா சென்னை, மைலாப்பூரில் எம். கந்தசாமி முதலியார் என்பவருக்குப் பிறந்தார்.
நாடகம்
தன் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்து, எம். ஜி. ஆருடன் எம்.கே.ராதா நடித்து வந்தார்.
திரைப்படம்
1936இல் எஸ். எஸ். வாசன் எழுதிய சதிலீலாவதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்தில் எம். ஜி. ஆர். ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின்னர் மாயா மச்சேந்திரா, துளசிதாஸ் ஆகிய படங்களில் ராதா நடித்தார். அதை அடுத்து "இலங்கைக்குயில்" தவமணிதேவியுடன் வனமோகினி திரைப்படத்தில் நடித்தார்.
ஜெமினியின் தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி முதலான படங்களில் ராதா நடித்தார்.
1948இல் ஜெமினியின் சந்திரலேகா படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் இந்தியில் தயாரிக்கப்பட்ட சந்திரலேகாவிலும் கதாநாயகனாக நடித்தார்.
ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எம். கே. ராதா கதாநாயகனாக, பானுமதியுடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்தார்.
பின்னர் ஜெமினியின் சம்சாரம் படத்தில் புஷ்பவல்லியுடன் இணைந்து நடித்தார். ஜெமினியின் அவ்வையார் திரைப்படத்தில் பாரி மன்னனாக நடித்தார். பின்னர் நல்லகாலம், போர்ட்டர் கந்தன், கற்புக்கரசி, வணங்காமுடி, பாசவலை, கண்ணின் மணிகள் முதலிய படங்களில் நடித்தார்.
பிற திரைப்படங்கள்
சந்திர மோகனா அல்லது சமுகத்தொண்டு 1936
அனாதைப் பெண் 1938
சதி முரளி 1940
தாசி அபரஞ்சி 1944
ஞானசௌந்தரி (1948 திரைப்படம்) 1948
சௌதாமணி 1951
மூன்று பிள்ளைகள் 1952
நல்லகாலம் 1954
கிரகலெட்சுமி 1955
புதையல் 1957
நீலமலைத்திருடன் 1957
உத்தம புத்திரன் 1958
விருதுகளும் சிறப்புகளும்
1973இல் தமிழக அரசின் கலைமாமணி பட்டம்
2004இல் இந்திய அஞ்சல் துறை எம். கே. ராதா நினைவாக அவரது உருவப் படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டது.
எம். கே. ராதாவின் நினைவைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு, சென்னை, தேனாம்பேட்டை அருகில் உள்ள பகுதிக்கு எம். கே. ராதா நகர் என்று பெயரிட்டது.
குடும்பம் & மறைவு
எம்.கே.ராதாவுக்கு ஞானாம்பாள், ரத்தினம் என்ற 2 மனைவிகள். 6 மகன்கள், 2 மகள்கள். 29 ஆகஸ்டு 1985 அன்று மாரடைப்பால் காலமானார்.
//
சர்ச்சைக்கு நடுவே அறிமுகமான சாகச நடிகர்: எம்.கே. ராதா.
வரிசையாக மூன்று படங்கள் ஓடிவிட்டால் போதும். ஐந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கதாநாயகன் 5 கோடி சம்பளம் கேட்கும் காலம் இது. 1950களில் நிலைமையே வேறு. தியாஜராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என்று பெரிய நடிகர்கள் கோலோச்சிய கால கட்டத்தில், இவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் பெற்ற முன்னணி நாயகன். அதுவும் ஒரு ஆண்டோ இரு ஆண்டோ அல்ல; 1941-ல் தொடங்கி 1954 வரை சுமார் 13 ஆண்டுகள்.
அவர் ஜெமினி நிறுவனத்தின் கம்பெனி நடிகராக இருந்து பல புகழ்பெற்ற படங்களில் நடித்த ‘பத்மஸ்ரீ’ எம்.கே. ராதா. தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டப் படமாகிய ‘சந்திரலேகா’விலும், ரசிகர்களை வாய்பிளக்க வைத்த இரட்டை வேடப் படமாகிய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திலும் நடித்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம். ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர புருஷன்’ என்று அழைக்கப்பட்ட எம்.கே. ராதா சென்னையில் பிறந்து வளர்ந்து சினிமாவில் நுழைந்து தலைநிமிர்ந்து நின்றவர். அவர் பெயரின் முன்னெழுத்தில் உள்ள எம், மெட்ராஸைக் குறிக்கிறது.
கலைக் குடும்பம்
புகழ்பெற்ற நாடகாசிரியராக இருந்தவர் எம். கந்தசாமி முதலியார். அவரது மகன்தான் எம்.கே. ராதா. 1909-ம் ஆண்டு பிறந்த ராதாவுக்கு அப்பாவின் நாடகக் கம்பெனி பெரும் தாக்கத்தை உருவாக்கியது. வீட்டில் நடக்கும் நாடக ஒத்திகைகள் அவருக்குள் மனப்பாடம் ஆகின. இன்றைய வடசென்னையின் ஒரு பகுதியாகிவிட்ட தங்கசாலையில் இருந்த ‘ஹிந்து பயலாஜிக்கல் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்தார். ஆனால் படிப்பில் ஆர்வம் செல்லாமல் நாடகத்தில் மேலோங்கிய மகனின் ஈடுபாட்டைக் கண்டு 9 வயதில் லோகிதாசன் வேடம் கொடுத்தார் அப்பா. வளர வளர வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் ராதா. கந்தசாமி முதலியாரின் நாடகக் கம்பெனியில் பிரகாசித்த பல நடிகர்கள் பின்னாளில் சினிமா உலகில் நுழைந்து புகழ்பெற்றார்கள். எனவே எம்.கே. ராதாவும் திரையில் நுழைய விரும்பியதில் ஆச்சரியமில்லை.
பரபரப்பான அறிமுகம்
மகன் சினிமாவில் நடிக்க விரும்புவதை அறிந்ததும் சினிமாவுக்கு ஏற்ற கதையைத் தேடினார் கந்தசாமி முதலியார். அப்போது கே.பி. கேசவன் நடித்து வந்த கிருஷ்ணசாமிப் பாவலரின் ‘பதி பக்தி’ என்ற நாடகம் புகழ்பெற்று விளங்கியது. அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுப் படவேலைகளைத் தொடங்கினார். ஆனால் திடீரென்று உரிமையை ரத்து செய்தார் கே.பி. கேசவன். தன் நடிப்பில் அந்த நாடகத்தை சினிமாவாகத் தயாரிக்க கேசவன் விரும்பியதுதான் காரணம்.
கந்தசாமி அசரவில்லை. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எஸ்.எஸ்.வாசன், தனது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிவந்த ‘சதிலீலாவதி’ என்ற தொடர்கதை கவர்ந்தது. கந்தசாமி அதைப் படமாக்க விரும்பினார். கோயம்புத்தூர் மருதாசமல் செட்டியார் தயாரிக்க முன்வந்தார். கந்தசாமி வசனம் எழுதினார். பின்னாளில் ஜெமினி பிக்ஸர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி சாதனைகள் படைத்த வாசனுக்கு இதுவே முதல் படம். எம்.கே.ராதா முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்க, 19 வயது எம்.ஜி.ஆர். ‘ரங்கையா நாயுடு’ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அறிமுகமானார். என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்கள். இயக்குநர் எல்லீஸ். ஆர். டங்கனுக்கும் அதிகாரபூர்வமான முதல் படமும் இதுவே.
படம் ரிலீஸுக்குத் தயாரானபோது கேசவன் தங்களது ‘பதி பக்தி’ கதையை திருடி ‘சதி லீலாவதி’ படத்தை எடுத்துவிட்டதாக வழக்குத் தொடுத்து படத்தின் வெளியீட்டைத் தடுத்தார். ஆனால் கதாசிரியர் வாசன் நீதிமன்றத்தில் “சதி லீலாவதி படத்தின் கதை ஹென்றி வுட் என்ற ஆங்கிலப் பெண் எழுத்தாளர் எழுதிய ‘டேன்ஸ்பரி அவுஸ்’ என்ற (Henry Wood's Danesbury House) நாவலின் தாக்கத்தில் எழுதப்பட்டது” என்று தெளிவுபடுத்தினார். பிரச்சினை தீர்ந்தது. தமிழ் சினிமாவில் கதையால் ஏற்பட்ட முதல் சர்ச்சையும் இதுவே.
இத்தனை பரபரப்புக்கு நடுவே 28.3.1936 ல் வெளியான ‘சதி லீலாவதி வெற்றி பெற்றது. படத்தின் நாயகி எம்.எஸ். ஞானாம்பாளையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் எம்.கே. ராதா.
பிரம்மாண்ட நாயகன்
சதி லீலாவதியின் வெற்றிக்குப் பிறகு அடுத்து வந்த இரு வருடங்களில் ‘மாயா மச்சீந்திரா’, ‘சந்திரமோகனா’ ‘துளசிதாஸ்’, ’ சதிமுரளி’ ஆகிய படங்களில் நடித்தார் . எல்லாம் சுமாரான வெற்றியைப் பெற்றன. அப்போது ‘இலங்கைக் குயில்’ என்று அழைக்கப்பட்ட சிங்களத் தாரகை தவமணிதேவியுடன் இணைந்து ‘ வனமோகினி’ என்ற படத்தில் நடித்தார். ஹாலிவுட்டில் அப்போது பிரபலமாக இருந்த டார்ஜான் வகைப் படமாக முழுக்க முழுக்கக் காட்டிலேயே படமாக்கப்பட்ட அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்தச் சமயத்தில் ஜெமினி ஸ்டூடியோவைத் தொடங்கிய வாசன் தனது கம்பெனியின் நிரந்தர நடிகராக எம்.கே. ராதாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டத் தயாரிப்பாக ஜெமினி தயாரித்த ‘சந்திரலேகா’ படத்தின் நாயகனாக ராதா நடித்தார். ‘சந்திரலேகா’ வரலாறு காணாத வெற்றிபெற்றது. ராதாவுக்குப் பெரும்புகழையும் கொண்டுவந்து சேர்த்தது. ராதாவும், வில்லனாக நடித்த ரஞ்சனும் மோதும் கத்திச் சண்டைக் காட்சியைப் பார்த்து மிரண்ட ரசிகர்கள் திரும்பத் திரும்ப திரையரங்கு நோக்கிக் குவிந்தனர். தமிழ் சினிமாவின் முதல் சாகச நாயகன் (ஆக்ஷன் ஹீரோ) என்றும் எம்.கே. ராதாவைப் பேச வைத்தது இந்தப் படம்.
‘சந்திரலேகா’வை இந்தியிலும் தயாரித்த வாசன் அதிலும் ராதா - டி.ஆர். ராஜகுமாரி ஜோடியை நடிக்கவைத்து பாலிவுட்டிலும் பெரிய வெற்றியை ஈட்டினார். அதன் பின்னர் மீண்டும் ஒரு பிரமாண்டமாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தைக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்தார் வாசன். ராதா, விஜயன் - விக்ரமன் என்ற இரட்டையர்கள் வேடம் ஏற்றார். பானுமதி கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் ஆர். நாகேந்திர ராவ் என்ற கன்னட நடிகர் வில்லனாக அறிமுகமானார்.
1940-ல் பி.யு. சின்னப்பா நடிப்பில் வெளியான ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் ‘ மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடப் படமாக வெளிவந்தது. ஆனால் ஆங்கிலப் படத்தில் பயன்படுத்தப்பட்ட கேமரா தந்திரங்களைத் தமிழில் துல்லியமாகக் கையாள முடியவில்லை. ஆனால் ‘அபூர்வ சகோதரர்கள்’ அந்தக் குறையைப் போக்கியது. ரசிகர்கள் இரட்டை வேடக் காட்சிகளை கண்டு வியந்தனர். விஜயனாகவும் விக்ரமனாகவும் வேறுபாடு காட்டிய ராதாவின் நடிப்பு உயர் தரமாக இருந்தது.
சமூக நடிப்பிலும் சாதனை
சந்திரலேகாவுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் படத்துக்குப் பிறகு பல சமூகக் கதைகளிலும் நடித்து சாதனை படைத்தார் ராதா. கம்பீரமான ராஜா வேஷங்களில் அசத்திய இவர் ‘சம்சாரம்’ என்ற படத்தில் சாமானிய மனிதனாக, நாடக பாணி நடிப்பின் தாக்கம் இல்லாமால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.
ராஜேந்திர ராவ் இயக்கிய ‘அன்பே தெய்வம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்த ராதாவுக்கு இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவின் தயாரான சந்தியா ஜோடியாக நடித்தார். 50 படங்களில் நடித்திருக்கும் இவர் மீது அளப்பரிய பாசமும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை விழா ஒன்றில் எம்.கே. ராதாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார். மத்திய அஞ்சல் துறை ராதாவின் உருவப் படத்தை அஞ்சல் உறையில் வெளியிட்டு கவுரவம் செய்தது.
அபூர்வ தகவல்கள் - எம்.கே.ராதா
எம்.கே.ராதா நாயகனாக நடித்த முதல் படம் சதிலீலாவதி (1936), இதே படம்தான் எம்.ஜி.ஆருக்கும் முதல்படம். இப்படத்தில் எம்.ஜி.ஆர். துணை வேடத்தில் அறிமுகமானார். அதேபோல் நடிகர் டி.எஸ். பாலையாவுக்கும் இதுதான் முதல்படம். அத்துடன், இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனுக்கும் இது முதல் பட வாய்ப்பாக அமைந்தது.
பி.ஒய்.அல்டேகர் இயக்கத்தில் கே.பி.கேசவன் நடித்த பதிபக்தி (1936) என்ற படமும், சதிலீலாவதி படமும் ஒரே கதையைக் கொண்ட படங்களாக இருந்தன. இது சம்மந்தமாக இப்படத் தயாரிப்பாளர்களுக்குள் கோர்ட்டில் வியாஜ்ஜியம் (வழக்கு) நடந்தது. சினிமா கதை சம்மந்தமாக நடைபெற்ற முதல் வழக்கு இது.
எம்.கே.ராதாவுடன் சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா ஆகிய இரு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
சிவாஜி நடித்த அம்பிகாபதி படத்தில் சிவாஜியின் தந்தை கம்பராக எம்.கே.ராதா நடித்தார். சிவாஜி இரு வேடங்களில் நடித்து பெரு வெற்றி பெற்ற "உத்தம புத்திரன்' படத்திலும் சிவாஜியின் தந்தையாக எம்.கே.ராதா நடித்திருந்தார். இவை தவிர, சிவாஜி நடித்த வணங்காமுடி, புதையல் ஆகிய படங்களிலும் எம்.கே.ராதா சிவாஜியுடன் நடித்துள்ளார்.
மற்றும் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், என்.எஸ்.கிருஷ்ணன், ஏ. நாகேஸ்வரராவ், ரஞ்சன், ஜெமினி கணேசன், டி.ஆர்.ராஜகுமாரி, பி.பானுமதி, அஞ்சலிதேவி ஆகிய பிரபல நடிகர் நடிகைகளுடன் நடித்துள்ளார் எம்.கே.ராதா.
அரசு ஊழியர்களே மாத ஊதியமாக ரூ.100 பெற்று வந்த காலத்தில், ராதாவுக்கு மாத ஊதியமாக ரூ.300 வழங்கிய ஜெமினி ஸ்தாபனம் அவரைத் தங்கள் நிறுவனத்தின் நிரந்தர நடிகராக வைத்திருந்தது.
எம்.கே. ராதா நடித்த 30 படங்களில், தாஸி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி, ஞானசெüந்தரி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், மூன்று பிள்ளைகள், ஒüவையார் ஆகிய 8 படங்கள் ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்களாகும். சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், ஒüவையார் ஆகிய 4 படங்களும் ஜெமினி நிறுவனத்தின் வெற்றிப் படங்களாகி வசூலைக் குவித்தன.
1948 ஆம் ஆண்டிலேயே 30 லட்சம் ரூபாய்கள் செலவில், 1500 நடிகர்களை நடிக்க வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் சந்திரலேகா. டிக்கட் கெüண்டரில் சர்க்கஸ் செய்தாவது இப்படத்தின் சர்க்கஸ் காட்சியைக் கண்டு களித்தார்கள் ரசிகர்கள். ட்ரம் டான்ஸ் காட்சியில் ட்ரம்மிலிருந்து வந்த வீரர்கள், விரோதிகளை மட்டுமா தாக்கினார்கள், ரசிகர்களையும் அல்லவா தாக்கிவிட்டுச் சென்றார்கள். ராதாவும் ரஞ்சனும் செய்யும் கத்தி சண்டையானது, பிரிஸினர் ஆஃப் ஜெண்டா என்ற ஆங்கிலப் படத்தில் ரெனால்ட் கோல்மென் செய்யும் சண்டைக்கு நிகராக இருந்ததாக அப்போது விமர்சிக்கப்பட்டது.
நல்ல காலம் என்ற படம் வெளியானபோது, ராதாவின் பெயருடன் "அகில உலகப் புகழ்' என்ற அடை மொழி இணைந்து வந்துள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சந்திரலேகா படம் கண்ட வெற்றியின் விளைவாக வந்த பரிசுதான் இந்த அடைமொழி.
எம்.கே. ராதா நடித்த 16 படங்கள் சமூகக் கதையமைப்பினைக் கொண்ட படங்களாகவும், 14 படங்கள் சரித்திர கதையமைப்பினைக் கொண்ட படங்களாகவும் அமைந்துள்ளன.
23 படங்களில் நாயகனாகவும், 7 படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார் எம்.கே.ராதா. இவர் இரு வேடங்களில் நடித்தது அபூர்வ சகோதரர்கள் படம் மட்டுமே.
நாடகமேடைத் தாக்கம் இன்றி இயல்பாக நடிக்கக் கூடிய இவரின் அழகு, சினிமாவின் சுந்தர புருஷன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது. திரைத் துறையில் இவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். இவருடன் நடிக்கும் மூத்த கலைஞர்கள் ஸ்டுடியோவிற்குள் வரும் பொழுது, இவர் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் சொல்வார்.
எம்.கே.ராதாவின் தந்தையார் கந்தசாமி முதலியார் நடத்திய நாடகக் கம்பெனியில் எம்.ஜி.ஆர். நடித்து வந்தார். குருவின் மைந்தர் ராதாவை எம்.ஜி.ஆர்., "அண்ணன்' என்று மரியாதையாகவே அழைப்பார். அந்த மரியாதையின் வெளிப்பாடாக, விழா ஒன்றில் ராதாவின் தாள்தொட்டு வணங்கினார் எம்.ஜி.ஆர்.
சதி லீலாவதி படத்தில் நாயகியாக நடித்த எம்.ஆர்.ஞானாம்பாளையே மணந்து கொண்டார் ராதா. முதல் மனைவி ஞானாம்பாளுக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி ரத்தினத்திற்கு 6 புதல்வர்களும் 2 புதல்விகளும் உள்ளனர். மனோகரன், ராஜா, கமலாசரன், விஜயன் ஆகிய நான்கு புதல்வர்கள் பொறியாளர்கள். ரவீந்திரன் என்ற புதல்வர் ஒளிப்பதிவாளராகவும், சுகுமார் என்ற புதல்வர் மருத்துவராகவும் உள்ளனர். கமலாம்பாள் என்ற ராதாவின் புதல்வி, நடிகை எம்.ஆர்.சந்தானலக்ஷ்மியின் மருமகளாவார். இந்திரா என்ற ராதாவின் புதல்வி, நடிகையும் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் துணைவியுமான ஈ.வி.சரோஜாவின் உறவினராவார்.
மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய கே.ஆர்.சுந்தரேசன் என்பவர் தயாரித்து இயக்கிய ரேவதி (அல்லது) தியாக உள்ளம் (1960) படத்தில் எம்.கே. ராதா, பி.எஸ்.சரோஜா, ஜமுனா ஆகியோர் நடித்தனர். தியாக உள்ளம் என்ற இப்படத்தின் தலைப்பு நான்கு முறை தியாகத்திற்கு உள்ளானது. சந்திப்பு என்ற பெயரில் இப்படம் தொடங்கப்பட்டது. தியாக இதயம் என்ற பெயரில் தணிக்கையானது. பின்பு தியாக உள்ளம் என்ற பெயரில் மலேசியாவில் திரையிடப்பட்டது. ரேவதி என்ற பெயரில் மறு தணிக்கைக்குள்ளாகி மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படியெல்லாம் நடந்தும் இப்படம் சென்னையில் திரையிடப்படவில்லை.
பாரதியாரின் கவிதையை நினைவூட்டும் தலைப்பில் அமைந்த கண்ணம்மா என் காதலி படத்திற்கு வசனம் பாடல்கள் எழுதி இயக்கியவர் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. உலகப்போர் பின்னணி கதையமைப்பினைக் கொண்ட இப்படத்தில் ராதாவின் ஜோடியாக நடித்தவர், கொத்தமங்கலம் சுப்புவின் மனைவி எம்.எஸ்.சுந்தரிபாய்.
சதி லீலாவதி, பதி பக்தி படப்போட்டியில் இரு படங்களுமே வெற்றி இலக்கையடைந்தன. ஆனால், சிட்டாடல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.மகாலிங்கமும் எம்.வி.ராஜம்மாவும் நடித்து 21.05.1948 இல் திரைக்கு வந்த ஞானசெüந்தரி படத்துக்கு போட்டியாக, ஜெமினி தயாரிப்பில் எம்.கே.ராதாவும் வி.என்.சுசிலாவும் நடித்து 18.06.1948 இல் திரைக்கு வந்த ஞானசெüந்தரி படு தோல்வியடைந்தது. இரண்டும் ஒரே கதை. வரலாற்றுக் கதைகளுக்கு வழக்கும் தொடுக்க இயலாது. ராதாவுக்கு வேறொருவரின் கட்டைக் குரல் டப்பிங், கிறிஸ்துவ வரலாற்றுக் கதையில் அம்மதத்திற்கு சம்மந்தமே இல்லாத மாற்று கலாசார வசனம், போன்ற காரணங்களால் படம் தோல்வியடைந்தது. படத்தில் அளவுக்கதிகமாக ஒலித்த பாடல்களினால், இப்படத்தை கானசெüந்தரி என்று விமர்சித்தனர். தோல்வியைத் தாங்காத எஸ்.எஸ்.வாசன், படத்தின் அனைத்து தடயங்களையும் அப்பொழுதே அழித்து விட்டார்.
தரிசனம் படத்தின் ஏ.வி.எம்.ராஜன் போன்று, குடும்பச் சுமை தாளாமல் குடும்பத்தை விட்டு "சம்சாரம்' பட நாயகன் ஓடிப் போனது, சம்ஸ்காரமாய் விமர்சிக்கப்பட்டாலும், படம் சம்சாரங்களால் விரும்பப்பட்டு, ஜெமினிக்கு வசூலை வாரித் தந்தது. ஜெமினிக்கு வசூலைத் தந்தது போலவே, பிச்சைக்காரர்களுக்கும் வசூலைப் பெருக்க ஒரு வாய்ப்பளித்தது இப்படம். அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே என்ற இப்படப்பாடலை ரயில்களில் பாடியபடி பல ஆண்டுகளுக்கு தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டார்கள் பிச்சைக்காரர்கள்.
சினிமா உலகில் சுந்தர புருஷனாக இருந்த இவர், போர்ட்டர் கந்தன் படத்தில் சிரமப்படும் கூலி ஆளாக பொலிவற்ற தோற்றத்துடன் நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை. படம் தோல்வியில் அமைந்தது.
ஒüவையார் படத்தில் பாரி வள்ளல், தாஸி அபரஞ்சி படத்தில் விக்கிரமாதித்தன், பக்த துளஸிதாஸ் படத்தில் துளஸிதாஸர், ஞானசெüந்தரி படத்தில் பிலேந்திரன், அம்பிகாபதி படத்தில் கம்பர் போன்ற வேடங்களில் நடித்த ராதா, இவ்வேடங்கட்கு நேர் மாறான வேடங்களான குடிகாரன், திருடன், பொறுப்பில்லாதவன் போன்ற வேடங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையினை நன்கு வெளிப்படுத்தினார்.
கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதிய புதையல் படத்தில் நடித்துள்ளார் எம்.கே.ராதா., சந்திரலேகா படத்தில் நாடோடிப் பெண்ணாக நடித்துள்ளார் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி., சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா ஆகிய இரு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்., ஆக, மூன்று தமிழக முதலமைச்சர்களுடன் கலைத் தொடர்பு கொண்டுள்ளார் எம்.கே.ராதா.
எம்.கே. ராதா நடித்த படங்கள்
சதிலீலாவதி (1936) சந்திரமோகனா (அல்லது) சமூகத் தொண்டு (1936) பக்த துளஸிதாஸ் (1937) அனாதைப் பெண் (1938) மாயா மச்சீந்திரா (1939) சதி முரளி (1940) வனமோகினி (1941) பிரேமபந்தன் (1941) 9. தாஸி அபரஞ்சி (1944) 10. கண்ணம்மா என் காதலி (1945) ஞானசெüந்தரி (1948) சந்திரலேகா (1948) அபூர்வ சகோதரர்கள் (1949) செüதாமினி (1951) சம்சாரம் (1951) மூன்று பிள்ளைகள் (1952) ஒüவையார் (1953) நல்ல காலம் (1954) போர்ட்டர் கந்தன் (1955) கிருஹலட்சுமி (1955) கண்ணின் மணிகள் (1956) பாசவலை (1956) நீலமலைத் திருடன் (1957) அன்பே தெய்வம் (1957) அம்பிகாபதி (1957) புதையல் (1957) கற்புக்கரசி (1957) வணங்காமுடி (1957) உத்தம புத்திரன் (1958) ரேவதி (அல்லது) தியாக உள்ளம் (1960).
சென்னை மயிலாப்பூரில் 1910 ஆம் ஆண்டில், நாடக ஆசான் கந்தசாமி முதலியாரின் மைந்தராக பிறந்தார், மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்ற எம்.கே.ராதா. சென்னை தங்கசாலையிலுள்ள இந்து பயாலஜிகல் போர்டு ஹை ஸ்கூலில் படித்தார். 9 வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். இவரது தந்தை நாடக ஆசானாக இருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, மற்றும் பாலமோகன ரஞ்சன சபா, டி.கே.எஸ். நாடக சபா ஆகிய நாடக கம்பெனியில் நடித்தார் ராதா.
ராதா தமது 75 ஆம் அகவையில் 29.08.1985 இல் மாரடைப்பினால் காலமானார். அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், அவர் துணைவியார் வி.என்.ஜானகியும் மற்றும் அரசியல் கலையுலக பிரமுகர்களும் ராதாவிற்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்கள்.
1960 இல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்தது. 1971 இல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்தது. இவரை கெüரவிக்கும் விதமாக, சென்னை சங்கரதாஸ் சுவாமிகள் மன்றம் இவரது பெயரில் "எம்.கே.ராதா விருது' வழங்கி கலைஞர்களை கௌரவித்து வருகிறது.
நன்றி -விக்கிபீடியா ,தி இந்து தமிழ்,சினிமா எஸ்பிரஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக