திங்கள், 17 செப்டம்பர், 2018

நடிகர் கேப்டன் ராஜு காலமானார்

 நடிகர் கேப்டன் ராஜு காலமானார்!

குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் என பல தோற்றங்களில் நடித்த 68 வயதான மலையாள நடிகர் கேப்டன் ராஜு இன்று காலை உயிரிழந்தார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கேப்டன் ராஜு. குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் என தனிப்பட்ட நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் இவர். தமிழில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, ஜீவா, தாய்நாடு, சூரசம்ஹாரம், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 1950-ல் பிறந்த இவர் முதலில் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். பிறகு 37 வருடங்கள் மலையாள சினிமாவில் பணியாற்றியுள்ளார் . திரைப்படங்கள் மற்றும் டி.வி சீரியல், விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.
நீண்ட நாள்களாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ஓமன் நாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தரப்பட்ட சிகிச்சைகள் பெரிதும் பலனளிக்காததால் அங்கிருந்து கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்டார். ஓமனில் இருந்து அமெரிக்கா செல்லும் போது திடீரென விமானத்தில் இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் புறப்பட்ட விமானம் மீண்டும் ஓமனில் தரையிறக்கப்பட்டது. பின்னர் கேரளா அழைத்து வரப்பட்டார். தொடர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று காலை கொச்சியில் உள்ள தன் வீட்டில் காலமானார். மலையாளம் உட்பட பல்வேறு திரையுலகினர் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகேயுள்ள ஓமலூர் இவரின் சொந்த ஊர். ராணுவத்தில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்ததால் கேப்டன் என்கிற அடைமொழி பெயருடன் ஒட்டிக் கொண்டது. ஒரு வடக்கன் வீர கதா, ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு, நம்பர்-20 மெட்ராஸ் மெயில், கேரள வர்மா பழசிராஜா போன்ற புகழ்பெற்ற படங்களில் கேப்டன் ராஜு நடித்துள்ளார். கடைசியாக 2017-ம் ஆண்டு 'மாஸ்டர்பீஸ்' என்ற படத்தில் நடித்தார். இரு மலையாளப் படங்களையும் இயக்கியுள்ளார்.
மரணமடைந்த கேப்டன் ராஜுவுக்கு பிரமீளா என்ற மனைவியும் ரவி என்கிற மகனும் உள்ளனர். நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக