புதன், 3 அக்டோபர், 2012

ச‌த்ய‌ராஜ் பிற‌ந்த‌ நாள் அக்டோபர் 3,


சத்யராஜ் (பிறப்பு- அக்டோபர் 3, 1954) புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ். இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார். எம்.ஜீ.ஆரின் தீவிர ரசிகன். சிபிராஜ் இவரது மகன். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர்.
வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார்.
லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதைநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர் பித்தன்.
1987 ல் சத்யராஜூம், அவருடைய மனைவியும் சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரை பத்திரிக்கை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடன் மற்றும் அமைச்சர் முத்துசாமியுடன் சென்றார். அப்போது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் என்பதால் திரை உலகத்தினரும் மகிழ்ந்தார்கள். அதன்பின் திருமணத்திற்கு வந்தமைக்கு எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்ல சென்ற போது எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையை பரிசாக கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ்.
பெரியார் திரைப்படம்.
சத்தியராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக பெரியாரிஸ்டுகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்தியராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்தியராஜிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழுணர்வு
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்தியராஜ் பங்கேற்றார். இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள்..
நடிகன்
வேதம் புதிது
விக்ரம்
வால்டர் வெற்றிவேல்
மலபார் போலீஸ்
பெரியார்
ஒன்பது ரூபாய் நோட்டு
குங்குமப்பொட்டுக் கவுண்டர்
இங்கிலிஸ்காரன்
சுயேட்சை எம்.எல்.ஏ
வில்லாதி வில்லன்
ஏற்போட்
இரண்டு முகம்
நண்பன்
முரட்டுக் கரங்கள் (கபாலி என்ற கொள்ளை கூட்டத்தலைவனாக)
எம்.ஜி.ஆர். பித்தன் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுடைய ரசிகர் ஆரம்பகாலத்தில் இருந்தே இவர் ஒரு தீவிர ரசிகராக இருந்தவர். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் பார்த்து பேச பல வருடங்கள் முயற்சித்துள்ளார். மக்கள் திலகம் நடித்த படங்களை பார்க்க தவறுவதில்லை. இப்படி இருந்த இவர் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று இவரும் ஒரு பிரபல நடிகராகிவிட்டார். பிறகு, என்ன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை ஈசியாக பார்த்து விடலாமே என்று நினைக்கும் போது, அவர் தமிழக முதலமைச்சராகிவிட்டார். இருந்தாலும் சத்யராஜ் அவர்களுடைய முயற்சியை விடவில்லை. இவருடைய நண்பர்களிடம் இதற்கு வழியை கேட்டு கொண்டே இருந்தார். பல வருடங்கள் முயற்சி செய்து கொண்டு இருந்த இவருக்கு ஒரு வழி கிடைத்தது. அதாவது சத்யராஜ் அவர்களுடைய தங்கைகளுக்கு திருமண ஏற்பாடு செய்து பத்திரிகை அடித்து கோயம்புத்தூரில் உறவினர்களுக்கு எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் சினிமா துறையில் முக்கியஸ்தர்களுக்கு கொடுக்க பத்திரிகை வந்து விட்டது. இது 1987 மே மாதம் கடைசியில் தன் தங்கையின் திருமண பத்திரிகையை முதல்வரிடம் நேரில் தானும் தன் மனைவியும் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு சென்று கொடுத்து அவரிடம் பேசி வணங்கி வாழ்த்தும் பெற்று வரனும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்தார் அதற்கான பலன் இரண்டே நாளில் கிடைத்துவிட்டது. ஒரு நாள் காலை 9 மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு திருமண பத்திரிகையுடன் தன் மனைவியையும் அழைத்து கொண்டு போனார். தோட்டத்திற்குள் போக தடை ஒன்றும் இல்லை. வீட்டு வராண்டாவில் அரசாங்க அதிகாரி ஒருவர் போலீஸ் அதிகாரி ஒருவரும் இருப்பார்கள். அவர்கள் சத்யராஜ் மனைவியுடன் வந்து இருப்பதை மேலே உள்ள இன்டர்காம் வழியாக மக்கள் திலகம் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு, மக்கள் திலகம் ஜானகி அம்மாளுடன் 15ந்து நிமிடத்தில் கீழே வந்து விட்டார். இந்த இருவரையும் பார்த்த அந்த இருவரும் நாம் யாரை பார்க்கிறோம் என்பது போல், பிரமித்து நிற்கிறார்கள். முதல்வரும், ஜானகி அம்மையாரும் அவர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன் அமர சொல்கிறார். சத்யராஜ் அவர்களுக்கு சற்று நேரம் ஆனந்தத்தில் பேச்சு வரவில்லை. பிறகு, தன் தங்கைகளுடைய திருமண பத்திரிகையை கொடுக்கிறார். அதை வாங்கி உடனே படிக்கிறார். முதல்வர் பத்திரிகையில் எந்த பிரமுகர் பெயரும் இல்லை மிக எளிமையான குடும்பப் பத்திரிகையாக இருந்தது. சற்று நேரம் மக்கள் திலகம் அவர்கள் எதையோ யோசித்து கொண்டு இருந்தார்.

சத்யராஜ் இப்போ ஒரு பெரிய நடிகர் மக்களுக்கெல்லாம் மிகவும் அறிந்தவர் நல்ல நடிகர் இவர். எந்த வித விளம்பரமும் இல்லாமல் தன்னுடைய தங்கைகளுடைய திருமணத்தை நடத்துகிறாரே இந்த திருமணத்திற்கு நாம் எப்படியும் போகவேண்டும் என்ற யோசனைதான் அது. பிறகு, சத்யராஜ் அவர்களை பார்த்து நானும் ஜானுவும் இந்த திருமணத்திற்கு வருகிறோம் என்றார் உடனே சத்யராஜ் அண்ணே நீங்கள் இந்த திருமணத்திற்கு வரவேண்டாம். இந்த பத்திரிகையில் உங்கள் பெயரை போடவில்லை. மேலும் காலை 4 மணிக்கு திருமணம் தயவு செய்து வரவேண்டாம்.

உங்களுடைய வாழ்த்துச் செய்தி மட்டும் கிடைத்ததால் போதும், அண்ணே உங்களை எப்படியாவது நேரில் பார்க்கனும் உங்களிடம் இரண்டு வார்த்தையாவது பேசனும் உங்களிடம் ஆசிர்வாதம் பெறனும் என்ற ஆசையோடு தான் வந்தேன். நீங்கள் இந்த நாட்டின் முதல்-அமைச்சர் நீங்கள் தயவு செய்து வர வேண்டாம்.

உங்களுடைய வாழ்த்து செய்தியே போதும் நீங்கள் நேரில் வந்த மாதிரிதான் என்னை மன்னிக்கனும் என்று சொல்லி முடித்தவுடனே மக்கள் திலகம் அவர்கள் சத்யராஜ் அவர்களுடைய தோள் பட்டையை தட்டிக்கொண்டே நான் வருவேன் என்று சொல்லி கொண்டே அவர்களை வழி அனுப்பி வைத்தார். பிறகு, அந்த பத்திரிகையை தன்னுடைய அரசு உதவியாளரிடம் கொடுத்து நாங்கள் இந்த திருமணத்திற்கு போகனும் மறக்காமல் ஞாபகப்படுத்துங்கள் முதல் நாளே போகனும் அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்யுங்கள் இந்த விசயம் ரகசியமாக இருக்கட்டும் என்று சொல்லிய மக்கள் திலகம் அவர்கள் பிறகு, காண வந்து இருந்த மற்றவர்களை எல்லாம் அழைத்து பேசினார். சத்யராஜ் அவர்களுடைய தங்கைகள் திருமண விழாவிற்கு முதல்நாளே தன் மனைவி ஜானகி அம்மாளுடன் கோயம்புத்தூர் புறப்படுகிறார். கூடபேச்சு துணைக்கு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமி அவர்களையும் அழைத்துச் செல்கிறார்.

இந்த விசயத்தை உடனடியாக முதல்வருடைய தனி செகரட்ரி கோவை மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுக்கிறார். இந்த தகவலை கேட்ட கலெக்டர் உடனே சத்யராஜ் வீட்டுக்கு சென்று முதல்வர் கோவைக்கு புறப்பட்டுவிட்டார். உடனே, ஏர்போர்ட்டிற்கு போகனும் நீங்களும் ஏர்போர்ட்டிற்கு வருவதுதான் நல்லது என்று சற்று கோபமாக பேசிவிட்டு, கலெக்டர் அவர்கள் முதல் அமைச்சரை வரவேற்க ஏர்போர்ட்டுக்கு சென்றுவிட்டார். கலெக்டர் கோபமாக ஏன் சத்யராஜிடம் பேசினார். முதல்வர் உங்கள் குடும்ப திருமணத்திற்கு வருகிறார் என்பதை ஏன் எனக்கு முன்னதாக தெரிவிக்கவில்லை என்றதற்காகத்தான். இதை அறிந்த சத்யராஜ் அவர்களும் உடனே ஏர்போர்ட்டுக்கு கிளம்பி சென்று மிக மிக ஆச்சர்யத்தோடு ஏர்போர்ட்டில் பிளைட்டில் இருந்து மாலை சுமார் 6 மணிக்கு தங்கத் தலைவன் மின்னும் ஒளியோடு தன் மனைவியோடு இறங்கும் காட்சியை சத்யராஜும் மற்றவர்களும் பார்க்கிறார்கள். மக்கள்திலகம் மைதானத்திற்கு வந்தவுடனே, சத்யராஜ் ஓடோ டி வந்து ராமருடைய பாதங்கள் தொட்டதுபோல் இந்த ராமச்சந்திரனுடைய பாதங்களை தொட்டு வணங்கி வரவேற்றார். பிறகு, விமான நிலையத்தில் இருந்து முதல்வர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ள விடுதிக்கு செல்ல காரில் ஏறும் போது அருகில் நின்று கொண்டிருந்த சத்யராஜை தன் காரிலே ஏற்றிக்கொண்டு உடன் வந்த அமைச்சர் முத்துசாமியும் அதே காரில் செல்கிறார்கள்.

அடுத்த நாள் காலையில் நடக்கும் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டே செல்கிறார்கள். இதன்படி அடுத்த நாள் காலை 4 மணிக்கு நடைபெறும் திருமணத்திற்கு முதல்வர் தன் துணைவியாருடன் மற்றும் அமைச்சர் முத்துசாமியுடன் செல்கிறார். திருமண மண்டபத்தில் கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் முதல்வர் வந்ததை அறிந்து எல்லோரும் சென்று வரவேற்கிறார்கள். தமிழக முதல்வரான மக்கள் திலகம் அவர்கள் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீர் என்று வந்து இருக்கிறாரே என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். இந்த விசயம் அப்போதைக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமண மேடையில் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்கி செல்கிறார். இந்த சம்பவத்தை நினைத்து சத்யராஜூம் அவரது குடும்பமும் "தெய்வமே" நேரில் வந்து வாழ்த்தி சென்றது போல, நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.

மக்கள் திலகம் அவர்கள் திருமண மண்டபத்தில் ஒரு மணி நேரம் அதற்கு மேல் இருக்கிறார்கள். மேடையில் ஐயர்கள் பூஜை அதாவது மாங்கல்ய பூஜை நடக்கும். இதற்கிடையில் இந்தத் திருமணத்திற்கு முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் வந்து இருக்கிறார். மேடைக்கு அருகில் அமர்ந்து இருக்கிறார் என்ற செய்தியை திருமணத்திற்கு வருகிறவர்கள் அறிந்ததும், உடனே முதல்வர் இருக்கும் இடத்திற்கு வந்து, அவரைப் பார்த்து வணங்கிச் செல்பவர்களும், அவருக்கு அருகிலேயே அமருபவர்களும் உண்டு. இப்படி இருக்கும் நேரத்தில் சிவாஜி, சிவகுமார் ஆகியோர் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். மக்கள் திலகம் திருமணத்திற்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்பதை அறிந்தவுடன் மக்கள் திலகம் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு நடிகர் திலகமும், சிவகுமாரும் வந்து நடிகர் திலகம் மக்கள் திலகத்தை கட்டிப் பிடித்துக் கன்னத்தைக் கிள்ளிக் கொண்ட காட்சியை கண்டவர்கள் மனமகிழ்ந்தார்கள். சிவாஜிக்கும், சிவகுமாருக்கும் முதல்வர் அருகிலேயே சேர்கள் போடப்பட்டது. மக்கள் திலகம், ஜானகி அம்மாள், சிவாஜி, சிவகுமார் இவர்கள் மேடைக்கு அருகில் வரிசையாக அமர்ந்து இருக்கும் அழகான காட்சியை பார்த்து பார்த்து ரசித்து அளவற்ற அளவிற்கு ஆனந்தப்பட்டார்கள். சத்யராஜ் அவர்களும், அவரது குடும்பமும் இதற்கு இடையில், திருமண மேடைக்கு அருகில் அமர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த நாதஸ்வரத்தையும், மேளத்தையும் கவனிக்கத் தவறதில்லை. மக்கள் திலகம் அவர்களுக்கு மேளக்கச்சேரி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு ஏற்ற மாதிரி அவர்களும் நல்ல நயத்துடன் வாசித்தார்கள். காலை 5 1/2 மணிக்கெல்லாம் திருமணம் முடிந்தது. மக்கள் திலகம் அவர்களும், ஜானகி அம்மாவும் இவர்கள் தங்கி இருக்கும் அரசு மாளிகைக்கு சென்றார்கள். அன்று கோவையிலேயே தங்கி இருந்து அடுத்த நாள் நடக்கும் சத்யராஜுடைய மற்றொரு தங்கையின் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு சென்னைக்கு புறப்படும் போது, சத்யராஜ் அவர்களும் ஏர்போர்ட்டுக்கு வழியனுப்ப வந்தார். வந்தவர் விமானம் நிற்கும் இடம் வரை வந்து, முதல்வர் படிக்கட்டில் ஏறி, விமானத்தில் நுழையும் வரை படிக்கட்டு அருகிலேயே நின்று கொண்டிருந்த சத்யராஜைப் பார்த்து கை அசைத்து வாழ்த்தினார் மக்கள் திலகம் இதில் ஒரு முக்கிய விஷயம் விமானப் பயணிகளைத் தவிர வேறு யாரும் விமானம் வரை போகக்கூடாது இது விமான நிலைய சட்டம். இதை மீறி சத்யராஜ் விமானம் வரை அருகே சென்று மக்கள் திலகம் அவர்களை வழிஅனுப்பியது மக்கள் திலகம் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மிக மிக ஆச்சர்யமாக இருந்தது. இதில் மற்றொரு விஷயம் சத்யராஜையோ அவரது குடும்பத்தையோ முன் அறிமுகம் இல்லாமல் அந்தக் குடும்பத் திருமண விழாவிற்கு கோயம்புத்தூருக்குப் போய், தன் மனைவியுடன் சென்று, இரண்டு நாள் அங்கேயே தங்கி, வேறு எந்தவித நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொள்ளாமல், அந்தத் திருமணத்திற்கு சென்று வந்தது. அதுவும், தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் எப்படி என்று இந்த விஷயத்தை ஆச்சரியமாக சினிமா துறை, அரசியல் துறையினர்கள் பரவலாக பேசினார்கள்.
மனிதநேயமுள்ள அன்புள்ளம், வள்ளல் குணம் உள்ள மக்கள் திலகம் அவர்களுக்கு, சொந்தம், பந்தம், பாசம் தன்னை ஒரு பெரிய புகழ் உள்ள நடிகன் என் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்திய கலைத்துறையில் உள்ள அத்தனை பேர்களும் தான் என்று அடிக்கடி சொல்வார். சத்யராஜ் அவர்களும் ஒரு நடிகர் குறுகிய காலத்தில் பிரபலம் ஆனவர்.   மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய உயர்வுக்கு அதிக செல்வாக்கை கொடுத்தது சினிமாவா? அரசியலா? என்பதை அடிக்கடி அளந்து பார்க்கக்கூடியவர். ஆனாலும் தனக்கு சினிமாதான் முதலில் அப்புறம்தான் அரசியல் என்று மக்கள் திலகம் நினைப்பவர்.

மக்கள் திலகம் அவர்களை புகழ் ஏணியில் ஏற்றுவிட்டது சினிமாதான் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மக்கள் திலகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது சினிமாதான். சத்யராஜ் அவர்கள் தன்னுடைய பரம ரசிகர் இப்போது அந்த மாமனிதருடைய பக்தராக உள்ளார். அவருடைய இல்லத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகைப்படத்தை வைத்து வணங்கி வருகிறார்.

பிறகு? ஒரு நாள் திரு. சத்யராஜ் அவர்கள் தன் மனைவியுடன் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு முதல்வரை சந்திக்க நேரத்தை தெரிந்து கொண்டு காலை 8.30 மணிக்கு செல்கிறார்கள். தோட்டத்திற்கு சென்றவுடன் சத்யராஜும் அவரது மனைவியும் வந்திருக்கும் தகவல் முதல்வருக்கு தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முதல்வரும் துணைவியார் ஜானகி அம்மையாரும் கீழே இறங்கி வந்து இவர்கள் பார்த்து குடும்ப நலனை விசாரிக்கிறார்.

அது சமயம் உடனே சத்யராஜ் அவர்கள் தனது தங்கையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தி சென்ற, உங்களுக்கு எனது குடும்பத்தினர் சார்பில் நானும் என் மனைவியும் நன்றி சொல்ல வந்து இருக்கிறோம். எங்களை வாழ்த்தி அனுப்புங்கள் என்று சொன்னபோது அவர்களை வாழ்த்தி விட்டு சத்யராஜ் அவர்களை பார்த்து தம்பி உனக்கு வேற ஏதாவது என்னால் உதவி வேண்டும் என்றால் கேள்! எதுவாக இருந்தாலும் செய்கிறேன் என்று அன்புடன் சிரித்து கொண்டே கேட்கிறார். உடனே, சத்யராஜ் அண்ணே நான் இப்போ நிறைந்த வசதியுடன் இருக்கிறேன். எனக்கு உங்களுடைய உடற்பயிற்சி பொருள்களில் இருந்து ஏதாவது ஒன்றை தாருங்கள். அதை நான் உங்களுடைய ஞாபகமாக தினமும் உடற்பயிற்சி எடுத்து செய்றேன் என்றார். உடனே மக்கள் திலகம் அவர்கள் சற்று யோசித்து அருகில் நின்று கொண்டிருந்த மாணிக்கத்திடம் மேலே உள்ள என்னுடைய கர்லா கட்டையில் ஒன்றை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார். உடனே கர்லா கட்டை வந்தது மக்கள் திலகம் அவர்கள் அந்த கர்லாகட்டையை தன் கைபட கொடுத்தார். அத்துடன் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும் உடல் நல்ல இருந்தால்தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம் என்று அறிவுரை சொல்லி வாழ்த்தி அனுப்பினார். இதை மறக்காமல் சத்யராஜ் அவர்கள் நடந்து வருகிறார் என்பதை நான் அறிவேன். இது வள்ளலுடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு சம்பவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக