புதன், 9 ஜனவரி, 2013

இய‌க்குன‌ர் கே.பாக்ய‌ராஜ் பிற‌ந்த‌ நாள் ஜ‌ன‌வ‌ரி 07



கே.பாக்யராஜ் (Bhagyaraj, 1951 ம் ஆண்டு பிறந்தவர், தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.
திரையுலக வாழ்க்கை
1978-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா முதல் படம் இயக்கும்போது, பாக்யராஜ் அதில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அடுத்த படமான 'புதிய வார்ப்புகள்' படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார். ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது 'சுவர் இல்லாத சித்திரங்கள்'. (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான 'கன்னிப்பருவத்திலே' படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதல் படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது. அடுத்து, சொந்த தயாரிப்பான ‘ஒரு கை ஓசை’ திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார். அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது.
அடுத்து வெளியான 'மௌன கீதங்கள்' 'இன்று போய் நாளை வா', ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு, மாபெரும் வெற்றிப் படங்களாயின. அடுத்து ஒரு மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக ‘விடியும் வரை காத்திரு’ என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜின் முத்திரை முழுமையாகப் பதிந்து, மாபெரும் வெற்றி ஈட்டிய திரைப்படங்கள் ‘அந்த 7 நாட்கள்', 'தூறல் நின்னு பேச்சு' போன்றவை. பின் ‘டார்லிங் டார்லிங்’ வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின், 1982 ம் ஆண்டு வெளியான 'முந்தானை முடிச்சு'. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்யராஜ் கையாண்ட சில விஷயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் 'எங்க சின்னராஜா', 'இது நம்ம ஆளு' போன்ற படங்களுக்கு பெரிய வசூலையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன.
சொந்த வாழ்க்கை
தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மிணி" ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருந்தார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு "சக்கரக்கட்டி" என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி வளர்ந்து வருகிறார்.
அரசியல் ஈடுபாடு.
துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சி ஒன்றைத் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தற்போது, தி.மு.க. கட்சியில் உள்ளார்.
இலக்கிய ஈடுபாடு
இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்யராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான 'இன்று போய் நாளை வா' என்னும் திரைப்படத்தில் கூட ஜெயகாந்தன் எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறு கதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தவர் பாக்யராஜ். பல ஆண்டுகளுக்கும் மேலாக, பாக்யா என்னும் பத்திரிகையை நடத்தி வருகிறார்.
பாக்யராஜ் உருவாக்கிய இயக்குனர்கள்
தமது குருவான பாரதிராஜாவைப் போலவே, பாக்யராஜும், பல திறமையான இயக்குனர்களை உருவாக்கினார். இவர்களில், பாண்டியராஜன் , பார்த்திபன் ஆகியோர் வெற்றிகரமான இயக்குனர்களாகத் திகழ்ந்தனர்.
ஒரு கை ஓசை
விடியும் வரை காத்திரு
இன்று போய் நாளை வா
மௌன கீதங்கள்
டார்லிங் டார்லிங் டார்லிங்
தூறல் நின்னு போச்சு
அந்த ஏழு நாட்கள்
முந்தானை முடிச்சு
சின்ன வீடு
தாவணிக் கனவுகள்
எங்க சின்னராசா
ஆராரோ ஆரிராரோ
சுந்தர காண்டம்
வீட்ல விசேஷங்க
பவுனு பவுனுதான்
ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி
அம்மா வந்தாச்சு
வேட்டிய மடிச்சுகட்டு
ரத்தத்தின் ரத்தம்
பாரிஜாதம்
ராசுக்குட்டி
'சொக்கத்தங்கம்
பிறரின் இயக்கத்தில் பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்
கிழக்கே போகும் ரயில்"
சிகப்பு ரோஜாக்கள்"
புதிய வார்ப்புகள்"
கன்னிப் பருவத்திலே"
பாமா ருக்மிணி'
பொய் சாட்சி
அன்புள்ள ரஜினிகாந்த் (கௌரவ வேடம்)
ருத்ரா
இது நம்ம ஆளு (எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கிய ஒரே படம்)
சிறப்புக் கூறுகள்:
நடிகராக
பாக்யராஜ் ஒரு நடிகராகத் தமது எல்லைகளை உணர்ந்தவராக விளங்கினார். அவர் தனக்கென உருவாக்கிக் கொண்ட பாத்திரத்தை அப்பாவித்தனமும் சாமர்த்தியமும் சம அளவில் கலந்தோடிய ஒரு பண்புக்கூறாக வடித்திருந்தார். இப்பண்புக்கூறு மிகப் பெரும் அளவில் அவருக்கு வெற்றியைத் தந்தது. தன்னைத் தானே விமர்சித்து கேலி செய்து கொள்ளும் ஒரு அரிய பண்பு அவரது குணச்சித்திரமாக படங்களில் வெளிப்பட்டு, ஒரு தனிப்பாணியை உருவாக்கின. ஒரு சராசரித் திரை நாயகனுக்கான இலக்கணங்களிலிருந்து விடுபட்டு, யதார்த்த உலகின் அன்றாட வாழ்க்கையில் பலங்களும் பலவீனங்களும் நிறைந்த மனிதனைச் சித்தரிப்பதாக அவரது பாத்திரங்கள் அமைந்தன. திரைக்கதை அமைப்பாளராக
இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என 1980-ம் ஆண்டுகளில் பாக்யராஜ் போற்றப்பட்டார். திரைக்கதை அமைப்பில் அவர் கொண்டிருந்த ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'அவசர போலீஸ் 100'. 1977-ம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், “அண்ணா நீ என் தெய்வம்”. இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்து, தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்யராஜ் உருவாக்கிய 'அவசர போலீஸ் 100' வெற்றிப்படமாக விளைந்தது. கமலஹாசன் நடித்த “ஒரு கைதியின் டைரி” திரைப்படத்திற்கு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் அமைத்திருந்தார். இப்படத்தைப் பின்னர் இந்தியில் அமிதாப் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்க 'ஆக்ரி ராஸ்தா' என்னும் பெயரில் பாக்யராஜ் இயக்கினார். இது மாபெரும் வெற்றி அடைந்தது.
இயக்குனராக
பாக்யராஜ் பாசாங்குகளற்ற, யதார்த்தமான ஒரு இயக்குனர். தமது படங்களின் வழியாகத் தம்மை ஒரு அறிவுஜீவி என நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயன்றதில்லை. பெரிய தொழில் நுட்பங்களையும் அவர் சார்ந்திருக்கவில்லை. அநேகமாக அவர் படங்களில் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளோ, வெளி நாட்டுப் படப்பிடிப்புகளோ இருந்ததில்லை. அவர் முழுக்க முழுக்க, தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி, தமது திறமைகள், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பித் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.
இசையமைப்பாளராக
“இது நம்ம ஆளு” திரைப்படத்திற்குப் பாக்யராஜே இசை அமைத்து, ஒரு பாடலையும் பாடியிருந்தார். மேலும் ஐந்து படங்கள் வரை இசையையும் தொடர்ந்தார். விமர்சனங்கள் பாக்யராஜ் தமது படங்களில் பாலியலை முன்னிறுத்துவதாக ஒரு விமர்சனம் எழுவதுண்டு. இதற்கு உதாரணமாக, மாபெரும் வெற்றி பெற்ற 'முந்தானை முடிச்சி'ல் முருங்கைக்காய், ‘சின்ன வீடு’ படத்தின் சில காட்சிகள், ‘இது நம்ம ஆளு’ போன்றவற்றைக் குறிப்பிடுவதுண்டு. ஆயினும், பாக்யராஜ், பாலியல் நெருக்கம் ஆபாசமாகத் தோன்றாதவாறு இவை அனைத்தையும் கணவன்- மனைவிக்கு இடையிலான நெருக்கத்தை மக்கள் விரும்பி ரசிக்கும் வகையில் வெளிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் பாக்யராஜின் திரைப்படங்கள் ஏறக்குறைய பாக்யராஜின் அனைத்துப் படங்களும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அந்தந்த மொழி பிரபல ஹீரோக்களால் நடிக்கப் பெற்று பெருவெற்றி பெற்றன. ஜிதேந்திரா, அனில்கபூர், ராஜேஸ்கன்னா, கோவிந்தா, சுனில்ஷெட்டி, அக்ஷயகுமார், சல்மான்கான், கிஷண்குமார், இப்படி ஏராளமான ஹிந்தி நடிகர்கள் இவரது மொழிமாறும் படங்களில் விரும்பி நடித்து வெற்றி வாகை சூடியுள்ளனர்.
உடன் நடித்த நாயகியர்
பாக்யராஜின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது பாத்திரத்தை முன்னிறுத்தியவையாகவே அமைந்தமையால், நாயகியருக்குப் பொதுவாக, பெருமளவில், அவற்றில் பணி இருந்ததில்லை. இருப்பினும், அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகா மற்றும் மௌன கீதங்கள் திரைப்படத்தில் சரிதா ஆகியோர் தமது பாத்திரங்களில் திறம்பட நடித்து நற்பெயர் பெற்றனர்.
பிரவீணா, பூர்ணிமா ஜெயராம் (இவர்கள் இருவரும் பாக்யராஜுடன் வாழ்விலும் இணைந்தவர்கள்), ரதி அக்னி ஹோத்ரி (பாக்யராஜின் முதல் நாயகி), ராதிகா, ஊர்வசி (பாக்யராஜின் அறிமுகமான இவரும் நகைச்சுவை மிளிரும் நடிப்பிற்குப் பெயர் பெற்றார்), பானுப்ரியா,குஷ்பூ,மீனாஷி சேஷாத்திரி ஆகியோர் பாக்யராஜின் திரை நாயகியரில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
இந்தியில் பாக்யராஜின் திரைப்படங்கள்
இந்தியில் பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் ஆக்ரி ராஸ்தா. ஆயினும், அவரது பல படங்கள் தமிழில் வெற்றிக் கொடி நாட்டியமையால் இந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டன. இவற்றில் பலவற்றில் இந்தி நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார். சிலவற்றில் கோவிந்தாவும், முந்தானை முடிச்சின் மறுவாக்கத்தில் ராஜேஷ் கன்னாவும் நடித்திருந்தனர். இவற்றில் இந்தியில் ஓ சாத் தின் என்ற பெயரில் வெளியான அந்த ஏழு நாட்கள் மற்றும் பேட்டா என்ற பெயரில் வெளியான 'எங்க சின்ன' ராசா ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி அடைந்தன..

பாக்யராஜ் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

இந்திய சினிமாவின் 'திரைக்கதை ஜித்தன்’ கே.பாக்யராஜ். பாக்ஸ் ஆபீஸ் வசூல், ரசிகர்களின் விசில் இரண்டும் சம்பாதிக்கும் திரைக்கதைகள் புனையும் கலைஞன். 'மிடாஸ் டச்’ இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து...

*ஈரோட்டில் கோஷா ஆஸ்பத்திரியில் பிறந்த தேதி – ஜனவரி 7. இரண்டு அண்ணன்களுக்குப் பிறகு கடைசித் தம்பி!

*முதல் வகுப்பையே அவரது தாத்தா கட்டாயத்தின் பேரில் இரண்டு தடவை படித்தார். பி.யூ.சி ஃபெயில் ஆன பிறகு, சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்!

*இதுவரை இயக்குநராகவும், நடிகராகவும், கதாசிரியராகவும் 57 படங்களில் பணியாற்றி இருக்கிறார். 'மெளன கீதங்கள்’, 'தூறல் நின்னு போச்சு’, 'முந்தானை முடிச்சு’, 'அந்த 7 நாட்கள்’ போன்ற படங்களின் திரைக்கதைகள் அபாரமானவை!
*'16 வயதினிலே’, 'கிழக்கே போகும் ரயில்’, 'சிகப்பு ரோஜாக்கள்’ படங்களில் சிறு வேடங்களில் நடித்த பாக்யராஜை, 'புதிய வார்ப்புகள்’ ஹீரோவாக அறிமுகம் செய்தவர் அவரது குரு பாரதி ராஜா!
*'புதிய வார்ப்புகள்’ படத்தில் 'உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா’ என ஒரு பெண் கேட்பார். 'நான் அநாதைங்க, அப்பா-அம்மா உயிரோடு இல்லை!’ என வசனம் பேசுவார் பாக்யராஜ். அந்தப் படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார் பாக்யராஜின் அம்மா. இன்னும் அந்தப் படத்தின் அந்தக் காட்சியைக் கடக்க நேர்ந்தால், கண்ணீர் கட்டும் பாக்யராஜீக்கு!
*ஏவி.எம்.நிறுவனத்தினர், அவர்களது ஆஸ்தான இயக்குநர்களான ஏ.சி.திருலோக சந்தர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை வைத்து தான் அப்போது படங்கள் தயாரித்துக் கொண்டு இருந்தனர். முதன்முதலாக அந்தப் பழக்கத்தை விடுத்து, 'முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்தது!
*இயக்குநர் ஆவதற்கான முயற்சிகளின்போது அறிமுகமான நடிகை பிரவீணா. அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது, இருவருக்கும் இடையே பூத்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால், அடுத்த சில வருடங்களில் நோயுற்று இறந்துவிட்டார் பிரவீணா!
*'ராஜா’ எனச் செல்லமாக அழைக்கும் பிரவீணா அளித்த 'ஆர்’ எழுத்து பதித்த மோதிரம் எப்போதும் பாக்யராஜ் விரலில் மின்னும் இடையில் அந்த மோதிரம் தொலைந்துபோக அதே டிசைனில் மோதிரம் அளித்த பூரிணிமா!
*பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்.மூத்த மகன் சாந்தனு தமிழ், மலையாள சினிமாக்களின் அங்கீகாரத்துக்கு உழைத்துக்கொண்டு இருக்கிறார் 'பாரிஜாதம்’ படத்தில் அறிமுகமான மகள் சரண்யா, தற்போது நகைகள் வடிவமைப்பில் கவனம் செலுத்துகிறார்!
*பாக்யராஜ்-பூர்ணிமா திருமணத்தை கருமாரி அம்மன் கோயிலில் நடத்திவைத்தவர் எம்.ஜி.ஆர். கூடவே இருந்து ஆசீர்வதித்தவர் சிவாஜி. இரண்டு திலகங்களுக்கு சேர்ந்து அபூர்வமாக நடத்திய திருமணம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்!
*தேனிலவு செல்லக்கூட நேரம் இல்லாமல் பரபரப்பாக இருந்தவர். வருடங்கள் கழித்து தன் குழந்தை, மைத்துனரோடு பெரிய பட்டாளமாகச் சென்று தேனிலவு கொண்டாடியதை இன்றும் சிலாகித்து ரசிப்பார்!
*தமிழகத்தின் மிகப் பெரிய தியேட்டர் மதுரை தங்கம். அங்கு 100 நாட்கள் ஓடிய படம் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்’ அதற்குப் பிறகு, 100 நாட்கள் ஓடிய படம் பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு’!
*'ஆக்ரி ராஸ்தா’, 'பாபா தி கிரேட்’, 'மிஸ்டர் பச்சாரா’ என மூன்று இந்திப் படங்கள் இயக்கி உள்ளார். இவருடைய பல திரைக்கதைகளை இந்திப் படங்களில் நடித்து ஸ்டார் அந்தஸ்து எட்டியவர் அனில்கபூர்!
*திருமணப் பரிசாக எம்.ஜி.ஆர் வழங்கிய ஆள் உயரக் குத்துவிளக்குகள் இரண்டு பாக்யராஜ் வீட்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றன. அதை எம்.ஜி.ஆரே பாக்யராஜ் வீட்டில் இறக்கிவிட்டு, வரவேற்புக்கு வந்தாராம்!
*”நான் 'சுட்டு’ எடுத்த படம் 'வீட்ல விசேஷங்க’ மட்டும்தான், மற்றபடி எல்லா படங்களும் என் சொந்தக் கற்பனை!’’ என்பார் துணிச்சலாக!
*'மன்ற முரசு’ இதழின் ஆண்டு விழாவில், பாக்யராஜ்தான் என்னுடைய கலை வாரிசு!’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தது, அரசியல் அரங்கில் பெரும் அதிரிச்சி அலைகளை உண்டாக்கின!
*சினிமாவின் நெருங்கிய நண்பர், ரஜினி! திடீரென்று கிளம்பி எங்கேனும் நல்ல ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருப்பார்கள்!
*பிரவீணா, ரதி, ஊர்வசி, ராதிகா, சுமதி, பூர்ணிமா, சரிதா,அஸ்வினி, ஷோபனா, சுலக்‌ஷணா, பிரகதி, ராதா, பானுப்ரியா,ரோகிணி,ஜஸ்வர்யா,நக்மா என ஏராளமான நடிகைகளோடு ஜோடியாக நடித்த இயக்குநர்- நடிகர் இவராகத்தான் இருப்பார்!
*கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனால், கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் இல்லை. திருமண நாள் அன்று மட்டும் தவறாமல் கருமாரி அம்மன் கோயிலுக்குச் செல்வார்!
*பாக்யராஜ் படங்களில் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தது 'தூறல் நின்னு போச்சு’, 'டார்லிங் டார்லிங்’ படத்தில் வில்லனை நீ அடிச்சிருக்கணும்!’’ என்று அவரிடம் குறைபட்டாராம் எம்.ஜி.ஆர்!
*நடிக்க ஆசைப்பட்டு வந்த பார்த்திபனை இயக்குநர் ஆக்கி அழகு பார்த்தார் பாக்யராஜ். அவரது புகழ் பெற்ற சிஷ்யர்களில் பாண்டியராஜன், லிவிங்ஸ்டனும் உண்டு!
*ஒரு முறை ராஜ்கபூரிடம், பாக்யராஜை அறிமுகம் செய்து இருக்கிறார் போனிகபூர், 'உன்னைத் தெரியுமே, 'டார்லிங் டார்லிங்’ பார்த்திருக்கேன். சூப்பர்!’ என்று ராஜ்கபூர் சொன்னபோது, நெகிழ்ந்து இருக்கிறார் பாக்யராஜ்!
*பாக்யராஜ் இசையமைப்பாளராகவும் ஆறு படங்கள் பணியாற்றியிருக்கிறார். 'ஆராரோ ஆரிரரோ’ படத்தில் இவர் இசையில் உருவான 'என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்’ பாடல் ஜானகியின் மனம் கவர்ந்த பாடல், அதற்காக ஜானகி பரிசளித்த பேனாவை ஞாபக அடுக்கிலும், அலமாரி அடுக்கிலும் பாதுகாத்துவைத்திருக்கிறார் பாக்யராஜ்!
*பாக்யராஜீக்கு மிகவும் இஷ்டமான வகுப்பு ஆசிரியர் பெயர் சண்முகமணி, அவரை நினைவு கூரும் விதமாகத்தான் 'புதிய வார்ப்புகள்’, 'சுந்தர காண்டம்’ எனத் தனது படங்களில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆசிரியருக்கு 'சண்முகமணி’ என்று பெயர் சூட்டுகிறார். அமெரிக்காவில் செட்டிலாகி விட்ட அந்த ஆசிரிருடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறார் பாக்யராஜ்!

*சிவாஜியை வைத்து 'தாவணிக்கனவுகள்’ இயக்கித் தன் தாகத்தைத் தணித்துக்கொண்டார். ஆனாலும், நண்பர் ரஜினிகாந்த்தை வைத்து முழு திரைப்படம் இயக்கியது இல்லை என்ற ஆதங்கம் இப்போதும் உண்டு. இன்னும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார் பாக்யராஜ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக