திங்கள், 7 ஜனவரி, 2013

வெள்ளிவிழா இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் பிற‌ந்த‌ நாள் ஜ‌ன‌வ‌ரி 09.


வெள்ளிவிழா இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் 
தற்போதைய தலைமுறைக்கு வெறும் குணசித்திர/காமெடி நடிகராக அறியப்படும் ஆர்.சுந்தர்ராஜன், பா வரிசை இயக்குனர்கள் என அறியப்பட்ட பாலசந்தர்,பாரதிராஜா,பாலுமகேந்திரா,பாக்யராஜ் ஆகியோர் தங்கள் உச்சத்தில் இருக்கும் போதே தன் முத்திரையை பதித்தவர். குறுகிய இடைவெளியில் ஏழு வெள்ளிவிழா படங்களை தந்து அனைவரையும் அசத்தியவர்.
இயல்பான திரைக்கதை,மென்மையான பாடல்கள்,அருமையான நகைச்சுவை இந்த மூன்றும் இவர் படங்களின் வெற்றிக்கு காரணம். அதில் சில முக்கிய படங்களை பார்க்கலாம்
பயனங்கள் முடிவதில்லை
கமல் நடித்த வாழ்வே மாயமும் இதே கதைதான். சாகப்போகும் வியாதி உள்ள காதலன், காதலியின் நல்வாழ்வுக்காக அவளை வெறுப்பது போல் நடிப்பது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. இரண்டும் வெற்றி என்றாலும் பயனங்கள் முடிவதில்லை சூப்பர் டூப்பர் ஹிட். அந்த காலத்தில் புதியதாக டேப் ரிக்காடர்கள் வாங்கியவர்கள் முதலில் வாங்கும் பாடல் கேசட் இந்தப்பட கேசட்தான். கவுண்டமனியின் 'இந்த சென்னை மாநகரத்திலே' காமெடி சிறப்பாக பேசப்பட்ட ஒன்று.
வைதேகி காத்திருந்தாள்
விஜயகாந்துக்கு தாய்க்குலத்தின் ஆதரவு இந்த படத்தில் இருந்து தான் தொடங்கியது எனலாம். மூன்று கதைகளை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஒருவருக்கு இல்லதாதால் சோகம். ஒருவருக்கு அதிகம் இருந்ததால் சோகம் (தண்ணீர்). ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடலை மெல்லிசைக்குழுக்களும்,அழகு மலராட பாடலை கல்லூரியின் ஆண்டு விழாக்களில் ஆடும் பெண்களும் தத்து எடுத்துக்கொண்டனர். கவுண்டர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக வந்து ஆல் தியேட்டரையும் அதிரவைத்த படம்.
நான் பாடும் பாடல்
விதவை சென்டிமென்ட் படம். கெடா எப்ப வெட்டுவாங்க? ரெண்டு ரூவாய்க்கு இவ்வளோ கொடுக்கும் போதேய் நெனைச்சேன், பீஸ் போயிருச்சா? போன்ற கவுண்டரின் பன்ச் டயலாக்குகள், பாடவா உன் பாடலை,மச்சானை வச்சுக்கடி போன்ற பாடல்கள் எல்லம் சேர்ந்து நல்ல பொழுதுபோக்கு படம்.
குங்குமசிமிழ்.
மோகன்,ரேவதி,இளவரசி மற்றும் சந்திரசேகர் நடித்தது. நிலவு தூங்கும் நேரம் என்ற சூப்பர் ஹிட் பாடல் இடம்பெற்ற படம்.
அம்மன் கோவில் கிழக்காலே
விஜயகாந்துக்கு மற்றுமொரு பிரேக் தந்த படம்.
ராஜாதி ராஜா
இளையராஜா தயாரித்த படம். பிறகென்ன சொல்ல வேண்டும் பாடல்களைப் பற்றி.
மெல்லத் திறந்தது கதவு.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன், இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்த படம். மோகன்,அமலா,ராதா நடித்தது. குழலூதும் கண்னனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா?, வா வென்னிலா உன்னைத்தானே மேகம் தேடுதே போன்ற மறக்க முடியாத பாடல்கள் நிறைந்த படம். இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அமலா அவ்வளவு அழகாக இருந்ததில்லை என்பது அமலா ரசிகளின் கருத்து. ஏவிஎம் தயாரித்த படமிது.
இவை தவிர நினைவே ஒரு சங்கீதம்,என் ஆசை மச்சான்,திருமதி பழனிச்சாமி, சாமி போட்ட முடிச்சு போன்ற படங்களையும் இயக்கினார்.
90 களில் பெரும்பாலான கதானாயகர்கள் ஆக்சன் கதைகளில் நடிப்பதையே விரும்பியது,இவரது படங்களுக்கு ஆதாரமான லேடிஸ் ஆடியன்ஸ் தொலைக்காட்சிகள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியது, ரஹ்மானின் வருகையால் மெலடி பாடலை ரசிப்பவர்கள் குறைந்தது மற்றும் பொதுவாகவே குடும்பப்பாங்கான படங்களை ரசிப்பவர்கள் குறைந்தது இவற்றால் இவரது சில கடைசி படங்கள் தோல்வி அடைந்தன.
ஒயிலாட்டம் என்ற படத்தை இயக்கி,நடித்து தயாரித்தார். படம் வெற்றி பெறவில்லை. ஆனால் நடிப்பு என்னும் பாதை திறந்தது. அறியப்பட்ட நடிகராய் மாறிவிட்டார்.
அருமையான பாடல்களை ராஜா தந்திருந்தாலும், கவுண்டரின் நகைச்சுவை இருந்தாலும் இவரின் கதையும்,இயக்கமுமே அந்த படங்களை வெற்றி பெற வைத்தது. ஏனென்றால் அதைவிட நல்ல பாடல்களும்,நகைச்சுவையும் இருந்த படங்கள் பல தோல்வி கண்டுள்ளனவே?,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக