பாடகர் மலேசியா வாசுதேவன் நினைவு தினம் பிப்ரவரி 20
மலேசியா வாசுதேவன் (சூன் 15, 1944 - பெப்ரவரி 20, 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு 8வது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்
மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு, சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.
பின்னணிப் பாடகராக
ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.
அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.
நடிகராக
ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார் மலேசியா வாசுதேவன். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப்படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் "சிலந்தி வலை" உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்துக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது.
மறைவு
சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 பெப்ரவரி 20 ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார். அவருக்கு மனைவியும், யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி என்ற மகளும் உள்ளனர். யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். பிரசாந்தினியும் இப்போது பின்னணி பாடி வருகிறார்.
இவர் நடித்த சில திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் கதாபாத்திரம் இயக்குனர்
2007 பிறகு
2007 நினைத்து நினைத்து பார்த்தேன்
2007 அடாவடி
2006 கொக்கி
2003 நிலவில் கலங்கமில்லை
2003 கையோடு கை
2002 புன்னகை தேசம்
2001 பத்ரி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
1999 பூப்பரிக்க வருகிறோம்
1998 தினந்தோறும்
1996 கோபாலா கோபாலா
1996 சும்மா இருங்க மச்சான் சும்மா இருங்க மச்சான்
1996 பூவே உனக்காக
1994 பாண்டியனின் ராஜ்ஜியத்தில்
1994 ஜல்லிக்கட்டு காளை
1994 அமைதிப்படை
1993 கருப்பு வெள்ளை
1993 திருடா திருடா காவல் அதிகாரி l
1990 நீ சிரித்தால் தீபாவளி
1990 எங்கள் சுவாமி ஐயப்பன்
1989 தர்ம தேவன்
1989 அன்னக்கிளி சொன்ன கதை
1989 தென்றல் சுடும்
1988 தெற்கத்தி கள்ளன்
1988 தம்பி தங்க கம்பி
1988 ராசாவே உன்னை நம்பி
1988 கதா நாயகன்
1988 பூந்தோட்ட காவல்காரன்
1987 தீர்த்த கரையினிலே
1987 பரிசம் போட்டாச்சு
1987 ஊர்க்காவலன்
1987 ஜல்லிக்கட்டு
1987 இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
1987 பேர் சொல்லும் பிள்ளை
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு
1986 உன்னிடத்தில் நான்
1986 முதல் வசந்தம்
1985 கொலுசு
1985 ஒரு கைதியின் டைரி
1984 ஆயிரம் கைகள்
1983 எத்தனை கோணம் எத்தனை பார்வை
1982 நிழல் சுடுவதில்லை
1982 இதோ வருகிறேன் இதோ வருகிறேன்
1981 பாக்கு வெத்தலை
1980 சாமந்திப் பூ
1979 வெள்ளி ரத்னம்
1978 நெஞ்சில் ஆடும் பூ ஒன்று l
1977 அவர் எனக்கே சொந்தம்
உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது . தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாசுதேவனின் குரலும் ஜானகியின் குரலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன . தமிழிசையோடு கலந்துவிட்ட குரல்கள் அவை . வாசுதேவன் பாடிய உயிரோட்டமான பாடல்கள் , நமக்கு மகிழ்ச்சியையும் ,சோகத்தையும் , மனதிற்கு இதத்தையும் ,கொண்டாட்டத்தையும் , ஆறுதலையும் ,வாழ்வதற்கான நம்பிக்கையையும் தரக்கூடியவை .
மலேசியாவில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு தமிழக கிராமிய பாணியிலான பாடும் முறை எப்படி வாய்த்தது ? இளையராஜா முக்கிய காரணமாக இருக்ககூடும் .வாசுதேவன் , வார்த்தை உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் . எல்லாவிதமான பாடல்களிலும் மிகத் தெளிவான வார்த்தை உச்சரிப்பு . கிராமிய பாடல்களில் கிராமத்தான் போன்ற உச்சரிப்பு அவரது காலத்தில் இவரால் மட்டுமே முடிந்திருக்கிறது . எந்த மாதிரியான படாலாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட பாடலுக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார் .
அவர் பாடிய எந்தப்பாடலாக இருந்தாலும் முதல் இரண்டு வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள் . முதல் இரண்டு வார்த்தைகளிலேயே அந்தப்பாடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகிறார் .அதன் பிறகு, பாடல் முடியும் வரை நாம் அந்தக்குரலின் கட்டுப்பாட்டில் தான் இருப்போம் . தெரிந்தோ தெரியாமலோ சினிமாவில் பாடுவதில் சமத்துவத்தைக் கொண்டுவந்தவர் , வாசுதேவன் அவர்கள் . ஆம் , அவர் கதாநாயகர்களுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை , துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பவர்கள் ,குணச்சித்திர நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் அவரது குரல் ஒலிக்கிறது . அதிகமான திருவிழாப் பாடல்கள் பாடியவர் இவராகத் தான் இருப்பார் . 80 ,90 களில் வெளிவந்த பாடல்களில் கோவில் முன்பு ஒரு குழு ஆடத் தயாரானாலே நாம் முடிவு செய்து விடலாம் அடுத்து ஒலிக்கும் குரல் வாசுதேவன் குரலாகவே இருக்கும் .
நடிகரின் பெயராலோ , இசையமைப்பாளரின் பெயராலோ , படத்தின் பெயராலோ மட்டுமே அவரது அநேக பாடல்கள் கேட்கப்படுகின்றன . மலேசியா வாசுதேவன் பற்றி இசை விமர்சகர் ஷாஜி எழுதிய கட்டுரை அந்தப்போக்கை மாற்றியமைத்தது என்றே சொல்லலாம் . மிகச்சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை அது . அந்த ஒரு கட்டுரைக்காக நிறைய உழைத்திருக்கிறார் . அந்தக்கட்டுரை - மலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன் . எல்லோரும் அவரை மறந்திருந்த வேளையில் வாசுதேவன் பற்றி மிக விரிவாக எழுதப்பட்ட கட்டுரையிது . உயிர்மையில் வெளிவந்த இந்தக்கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . அவரை முற்றிலுமாக மறந்திருந்த திரையுலகமும் சற்றே திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் முகத்தைத் திரும்பிக்கொண்டது .
ஷாஜி ," இசையின் தனிமை " - என்ற தனது புத்தக கலந்துரையாடல் மூலமாக மலேசியா வாசுதேவனைப் பாராட்டி மகிழ்ந்தார் . அரிதாக அந்த நிகழ்வில் பங்குபெறும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது . அந்த நிகழ்வு பற்றி நான் ஷாஜிக்கு எழுதிய மின்னஞ்சலை அவரது வலைப்பதிவில் பிரசுரித்தார் . அந்தப் பதிவு - வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள் . அன்று பேசிய மலேசியா வாசுதேவன் " புகழ் நிலையற்றது " என்று கூறினார் . இதற்கு அவரது வாழ்க்கையே மிகச் சிறந்த உதாரணம் .
2010 டிசம்பர் மாதம் பொதிகை தொலைக்காட்சியில் அவரது பேட்டி ஒளிபரப்பானது . அந்தப் பேட்டியில் பாதியை மட்டுமே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது .அந்தப் பேட்டியில் அவர்,
" நாம் கலைஞர்களை உருவாக்க வேண்டும் , இளையராஜா என்னை உருவாக்கியதைப்போல, இன்று புதுப் பாடகர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை , இரண்டு மூன்று பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்புக் கிடைக்கின்றன. எல்லா வகையான (சோகம் ,தத்துவம் ) பாடல்களைப் பாட வாய்ப்பு கிடைப்பதில்லை . சோகம் ,தத்துவம் நிறைந்த பாடல்கள் இன்றைய படங்களில் இல்லை . சோகப்பாடல்கள் மட்டுமே மனிதனின் உணர்வுகளை ஊடுருவும் . புதுப் பாடகர்கள் எந்த மொழியில் பாடினாலும் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க வேண்டும். இந்த மாதிரியான தொலைக்காட்சியில் பேசக் கிடைக்கும் வாய்ப்புகள் எனது ஆதங்கத்தை
வெளிப்படுத்தஉதவுகின்றன. ஒரு பாடல் மட்டும் பாடினால் போதும் என்று
தான் சென்னை வந்தேன் . 5000 பாடல்கள் பாடிவிட்டேன் இதற்குமேல் என்ன வேண்டும் " என்று கூறினார் .
20-02-2011 அன்று மலேசியா வாசுதேவன் மரணமடைந்தபோது கூட பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை . அவரது மரணம் ரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் பாதித்தது . இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு மரணம் வரும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. திரையுலகின் அன்பும் , ஆதரவும் அவருக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருப்பார் . திரையுலகம் செய்யாததை ஷாஜி செய்தார் .ஷாஜியின் அன்பு அவருக்கு நிச்சயம் ஆறுதலாய் இருந்து இருக்கும் . மலேசியா வாசுதேவன்
பற்றிய ஷாஜியின் கட்டுரையின் அதிர்வுகள் இன்னும் என்னுள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன .
ஆனந்த விகடன் இதழில் ஒரு ஓரத்தில் வெறும் ஒரு பக்கத்தில் மட்டுமே மலேசியா வாசுதேவன் மரணம் பற்றிய குறிப்பு இருந்தது . உண்மையில் அவரது மரணத்தை விட அதிகமாக வலித்தது . ஒரு உன்னதமான இசைக்கலைஞனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா ?. இதே ஆனந்த விகடனில் ஒன்னுக்கும் உருப்படாத விசயங்கள் எல்லாம் பக்கத்தை நிரப்பும் போது வாசுதேவன் அவர்களுக்காக ஒரு மூனு பக்கம் கூட ஒதுக்க முடியவில்லை .எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம் ? வெறும் வணிகம் மட்டும் தான் வாழ்க்கையா ? மற்ற இதழ்களில் அந்த ஒரு பக்கமும் இடம் பெறவில்லை என்றே நினைக்கிறேன் .
நான் பார்த்த வரையில் பொதிகை தொலைக்காட்சி மட்டுமே வாசுதேவன் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை இரவு 10 . 15 க்கு என்றும் இனிமை பகுதியில் ஒளிபரப்பியது . ஆனால் , அவரது பாடல்களால் பயன் பெரும் அனைவரும் அவரை மறந்து விட்டனர் . அவரது இறப்பை விட வருத்தமான விசயம் ,
இறந்த பின்பும் அவரை புறக்கணிக்கும் இந்த உலகம் தான் .
வரலாற்றில் , தனித்துவம் மிக்கவர்களுக்கு எப்போது முக்கியத்துவம்
கொடுத்துள்ளோம் ? அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு பிறகு தான் அவர்களைக் கொண்டாடி வந்துள்ளோம் . வாசுதேவன் அவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட போது எனக்கு மகாகவி பாரதி தான் நினைவுக்கு வந்தார் . அவரை எப்படிப் புறக்கணித்தார்களோ , அது போலவே வாசுதேவன் அவர்களையும் புறக்கணித்து உள்ளோம் . இன்று எப்படிப் பாரதியை இந்த உலகம் கொண்டடுதோ , அதுபோலவே நாளை வாசுதேவன் அவர்களையும் இந்த உலகம் கொண்டாடத்தான் போகிறது .
பூங்காற்று திரும்பத் தான் போகிறது . அதை நாம் பார்க்கத்தான் போகிறோம் . எனக்கு தெரிந்த வரையில் தமிழ் மண்ணோடு கலந்துவிட்ட இரண்டு ஆண் குரல்கள் ஒன்று T.M.சவுந்தர்ராஜன், இன்னொன்று மலேசியா வாசுதேவன் .தமிழ், இயல் , இசை , நாடகம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது .
இசைத்தமிழில் இவர்கள் இருவருக்கும் நிச்சயம் இடம் இருக்கும் . காலத்தால் அழிக்க முடியாத குரல்கள் . இவர்களுக்கு யாருமே மாற்று இல்லை . மரணம், வாசுதேவன் அவர்களின் உடலுக்குத்தான் .
அவரது பாடல்களுக்கு இல்லை .
கலைஞனுக்கு என்றுமே அழிவில்லை !
அவர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் !
நன்றி --விக்கிபிடியா ,மானிடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக