ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம் பிப்ரவரி 25.



'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம் பிப்ரவரி 25.
நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார்.
1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகர் ஆனவர் தவக்களை. ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் உயர்ந்தவர்.
அவர் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 42.
தவக்களை 496 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய 6 மொழி படங்களில் நடித்துள்ளார்.
தவக்களையின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Thavakkalai” Chittibabu
1983 ஆம் ஆண்டு ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாக்கியராஜின் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ’முந்தானை முடிச்சு’ படத்தைப் பார்த்திருப்பவர்கள் அதில் கதாநாயகி பரிமளமாக நடித்திருந்த ஊர்வசியையும் அவருடன் இணைந்து நடித்திருந்த மூன்று பொடியன்களான சின்ன சுரேஷ், மாஸ்டர் சுரேஷ், தவக்களை சிட்டிபாபு முதலியவர்களையும் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள். இப்பொடியன்களை விலக்கி வைத்துவிட்டு அப்படத்தை நிச்சயமாக எவராலும் ரசித்திருக்கமுடியாது. அவ்வாறு ஒரு வெற்றிக் கூட்டணியாக படம் முழுக்க கலாய்த்தவர்கள் இச்சிறுவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்தான் இந்த தவக்களை என்ற சிறுவன். இவரது இயற்பெயர் சிட்டிபாபு. படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘தவக்களை’. அந்தக் கதாபாத்திரத்தின் பெயரே பின்னாளில் அவருக்கு நிலைத்துவிட்டது. அத்துடன் ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேல் ஓஹோவென படங்களில் கொடிகட்டி பறந்தவர் இந்த தவக்களை. பார்ப்பதற்குத்தான் பொடியன். ஆனால் 1983-லியே இச்சிறுவனின் வயது 13.
இப்படத்தில் இடம்பெற்ற ‘நான் புடிச்ச மாப்பிள்ள தான், நாடறிஞ்ச மன்மதன் தான்’ என்ற பாடல் காட்சியில் ஊர்வசியுடன் இவர் போடும் ஆட்டமும் பாடலின் இடையிடையே வரும் வயதுக்கு மீறிய இச்சிறுவனின் வசனங்களும் அன்றைய ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. அடுத்து அவ்வூருக்கு ஆசிரியராக பொறுப்பேற்க வரும் பாக்கியராஜை வரவேற்று அவரிடத்தில் பலவிதமான கேள்விகளைக் கேட்டு குடைந்துவிட்டு பாக்கியராஜுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே ஊர்வசி அவர் கொண்டுவந்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக திருடி இப்பொடியன்களிடம் கொடுக்க அவற்றை இவர்கள் கடத்தும்போது குழந்தைக்கு வைத்திருக்கும் பால் புட்டியை எடுத்துச் சப்பும் தவக்களையின் அடாவடித்தனங்கள் எளிதில் மறக்கவியலாது.
இவரது தாய் மொழி தெலுங்கு. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணிக் கலைஞர்களுடன் நடித்துள்ளான். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், நவாபேட்டை. இவருக்கு நன்றாக நடனமாட வரும். நடிகை அனுராதாவின் தந்தை கிருஷ்ணகுமாரிடம் நடனம் கற்றிருக்கிறார்.
தாயின் பெயர் சுப்புலட்சுமி, தந்தை பெயர் விஜயகுமார். இவரும் ஒரு நடிகர். முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க வருவதற்கு முன்னரே தமிழ், தெலுங்கு மொழிகளில் குரூப் டான்சில் சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். பயணங்கள் முடிவதில்லை தமிழில் சிட்டிபாபுவை ஓரளவிற்கு அடையாளம் காண வைத்த படம்.
‘பொய் சாட்சி’ படத்தின் துணை நடிகர் முகவராக இவனது தந்தை இருந்த காரணத்தால் ஒரு நாள் அருணாசலம் ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பின்போது தந்தையுடன் சென்றிருக்கிறார். அப்போது நடிகர் குள்ளமணிதான் இவனை நடிகர் பாக்கியராஜிடம் சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இயக்குநர் கே.பாக்கியராஜ் சென்னையில் தான் எப்போதோ பார்த்த இச்சிறுவனை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து ‘முந்தானை முடிச்சு’ படத்திற்குத் தேர்வு செய்தார். ஏவி.எம்மிற்கு அழைத்துச் சென்றார். கோபிச்செட்டிப் பாளையத்திற்கும் அழைத்துச் சென்றார். படம் வெளிவந்த பின் பையன் ஏகத்துக்கும் பிஸியாகிவிட்டான். ‘முந்தானை முடிச்சு’ ஆரம்ப, அறிமுக, பாராட்டு விழாக்களில் பங்கேற்றான். ஒரே வருடத்தில் பல மேடைகளைப் பார்த்து பெரிய ஆளாகிவிட்டான்.
தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கும் முன்பே இவர் ‘நேனு மாஅவிடே’ [1981] போன்ற சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்த மேலும் சில படங்கள்:
ஓசை, என் இரத்தத்தின் இரத்தமே,  நீங்கள் கேட்டவை, தங்கமடி தங்கம், நாலு பேருக்கு நன்றி, பொண்ணு பிடிச்சிருக்கு, நேரம் நல்ல நேரம், ஆத்தோர ஆத்தா, மணந்தால் மஹாதேவன்.
நவம்பர் 1983 பேசும் படம் இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக