திங்கள், 5 பிப்ரவரி, 2018

பாடலாசிரியர் பிறைசூடன் பிறந்த நாள் பிப்ரவரி 06.


பாடலாசிரியர் பிறைசூடன் பிறந்த நாள் பிப்ரவரி 06.

பிறைசூடன் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் ஆவார்.  இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார்.  தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார். . இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.

தொடக்கம்

பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஷ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார். அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார்.

பாடலாசிரியர் பணி

1980களில்
1984- சிறை
1988- என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
1989- ௭ன்ன பெத்த ராசா
1989- ௭ம்புருஷன்தான் ௭னக்குமட்டுந்தான்
1990களில்
1990- கேளடி கண்மணி
1990- அதிசயப் பிறவி
1990- சிறையில் பூத்த சின்னமலர்
1990- பெரிய வீட்டு பணக்காரன்
1990- பணக்காரன்
1990- ராஜா கைய வச்சா
1991- ஈரமான ரோஜாவே
1991- என் ராசாவின் மனசிலே
1991- கேப்டன் பிரபாகரன்
1991- இதயம்
1991- கோபுர வாசலிலே
1992- உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்
1992- உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
1992- ௭ன்றென்றும் அன்புடன்
1992- அமரன்
1992- நாடோடி பாட்டுக்காரன்
1996- தாயகம்
1996- லக்கி மேன்
1997- ஹரிச்சந்திரா
1997- தம்பி துரை
1998- ௭ங்க ஊரு ராசாத்தி
2000த்தில்
2001- ஸ்டார்
2001- சிகாமணி ரமாமணி
2004- மனதில்
2006- அமிர்தம்
2007- அடாவடி
2008- கொடைக்கானல்
2008- சிங்கக்குட்டி
2010களில்
2010- உனக்காக ௭ன் காதல்
2011- வட்டப்பாறை
2012- நாச்சியார்புறம்
2012- இளமை ஊஞ்சல்
2012- கஜன்
2013- மாசாணி
2013- உள்ளமெல்லாம் தள்ளாடுதே
2013- ஆர்யா சூர்யா
நடித்த திரைப்படங்கள்
2014: சதுரங்க வேட்டை
2016: புகழ்
வசனம் எழுதியது
2011:ஸ்ரீ ராமராஜ்ஜியம்.

பாடலாசிரியர் பிறைசூடன்.. நன்றி    நடோடி  ப்ளகர்
திரைப்பாடலாசிரியர்கள் பொறுத்த வரையில் எண்ணிக்கையில் ஏராளமானோர் வந்திருந்தாலும் கண்ணதாசனுக்குப் பிறகு வாலி,வைரமுத்து ஆகிய இரண்டு பேர்களைத் தவிர புலமைபித்தன்,முத்துலிங்கம், மு.மேத்தா, பொன்னடியான், காமகோடியான் என நீளும் பல பாடலாசிரியர்களை தீவிர திரை இசை ரசிகர்களைத் தாண்டி பலருக்குத் தெரிவதில்லை.
சில பாடல்களைக் கேட்கும்போது இத்தனை திறமையான பாடலாசிரியர்களை ஏன் இந்தத் திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற எண்ணம் இசைரசிகர்களுக்குத் தோன்றும். மிக பிரபலமான பாடல்களை எழுதியிருந்தும் வாலி,வைரமுத்து ஆகியோரைப் போன்று தொடர் வாய்ப்புகளைப் இவர்கள் பெறாமல் போனதன் பின்னணியில் இப்படியும் சில காரணங்களை யூகிக்கிறேன். திரைப்பாடல் சூழல் என்பது மெட்டைச் சொன்னதும் சொற்களை அதன் சூழலுக்கேற்ப கோர்த்தாக வேண்டும். அங்கே கவிஞனின் சிந்தனைக்கு எல்லை வகுக்கப்பட்டுவிடுகிறது. இந்த பரப்பிற்குள், இந்த கால கெடுவிற்குள் எழுதியாக வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இவர்களில் சிலருக்கு அதில் பொருந்திப் போகக்கூடிய தன்மை இல்லாதிருந்திருக்கலாம். அப்படியே இந்த எல்லைக்குள் எழுதும் திறமை இருந்தாலும் அது குறிப்பிட்ட வகைப் பாடல்களில் மட்டும் வெளிப்பட்டு மற்ற வகைகளில் தடுமாற்றம் நிகழ்திருக்கலாம். வாய்ப்புகளைத் தேடி பெறுவதற்கு சுயம் சார்ந்த கொள்கைகள் எதிராகவும் அமைந்து இருந்திருக்கலாம். ஆனாலும் கொடுத்த வரையிலும் சிறப்பான பங்களிப்பையே செய்திருக்கிறார்கள் அந்த வகையில் இவர்கள் நினைவு கூறத்தக்கவர்கள்.
பாடல்களுக்காக மட்டுமேயான தொலைக்காட்சி சேனல்களிலும்கூட பாடலாசிரியர்களின் பெயர்கள் இரட்டடிப்பு செய்தே பாடல்களை ஒளிபரப்பப்புகிறார்கள். அட்லீஸ்ட் இந்த சேனல்களாவது பாடலாசிரியர்களின் பெயர்களையும் பாடல் பற்றிய தகவல்களில் கொடுத்தால் இவர்களைப் பற்றி இன்னும் பரவலாக தெரிய வரும் என்ற ஆதங்கம் எப்போதுமே உண்டு. வாய்ப்புகள் இன்றி மற்றும் வயோதிகம் காரணமாய் ஒதுங்கியிருக்கும் இவர்களுக்கு இந்த விஷயம் சற்றே ஆறுதலைத் தருவதாகக்கூட இருக்கும்.
மேற்சொன்ன பாடலாசிரியர்கள் வரிசையில் தற்போதும் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் பாடலாசிரியர்களில் இன்னும் பெரிதாய் அங்கீகரிக்கப்பட வேண்டும் என நான் நினைப்பவர் கவிஞர் பிறைசூடன். இவரைப் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். எண்பதுகளின் இறுதியிலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஏராளமான பாடல்களை எழுதியிருக்கிறார். இப்போதும் கிடைக்கிற வாய்ப்புகளில் திறமையை காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.
கிராமப்புற பின்னணிக்கு மண்வாசனையோடு எழுதுவதிலும் நகர்புற காதலுக்கும் அதற்கே உண்டான அழகிலோடு எழுதிவதிலும் கைதேர்ந்தவராய் இருப்பது இவரின் சிறப்பு.
இளையராஜா-வைரமுத்து விரிசலுக்குப் பின் வாலி எத்தனையோ கிராமியப் பாடல்களை ராஜாவின் இசையில் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவற்றில் தமிழ் வாசத்தை நுகர்ந்த அளவிற்கு அப்பட்டமான மண்வாசத்தை என்னால் நுகர முடிந்ததில்லை. எடுத்துக்காட்டாக ’நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடல் கிராமியச் சூழல்தான்;வரிகளும் அப்படித்தான் இருக்கும். ஆனாலும் ’ஏந்திழைக்கு காத்திருந்தேன்’ என கிராமச் சூழலுக்கு பொருந்தாத வாலியிசம் எட்டிப்பார்க்கும்.இந்த ஏரியாவில் வைரமுத்து இறங்கி அடிப்பார். ராஜா இசையில் வைரமுத்து எழுத முடியாது போன சூழலில் அந்த இடத்தில் பிறைசூடனை ராஜா இன்னமும் பயன்படுத்தியிருக்கலாமோ என்கிற எண்ணம் ’என் ராசாவின் மனசில’ படத்தின் ’சோலப் பசுங்கிளியே’ பாடலை கேட்கும் தோறும் தோன்றும்.
வாலியின் வார்த்தை விளையாட்டு மற்றும் மெட்டுக்குள் சொற்களை அடக்கும் வித்தை ஆகியவற்றிற்காக மிகப் பிடிக்கும். அந்த வகையில் வாலிக்குப் பிறகு என்னைக் கவர்ந்தவர் பிறைசூடனே. சொல்லப்போனால் பிறைசூடனின் பல பாடல்களை வாலி எழுதியதாகவே நம்பியதுண்டு.
”பெண் மனசு காணாத இந்திரஜாலத்தை
அள்ளித்தர தானாக வந்துவிடு
என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு”
என்று ’உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தின் ’என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி’ பாடல் வரிகளில் இடம்பெற்ற சொற்களின் தேர்விலும்,
“கோயிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவோ
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ”
என்று கோபுர வாசலிலே படத்தின் ’காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ பாடலில் காதலில் தெய்வீகத்தை தொட்டுச் செல்லும் இந்த வரிகளை கொடுக்க வாலியைத் தவிர வேறு யாருமாக இருக்க முடியாது என நம்பிய என் ஆணித்தரமான நம்பிக்கையயும்,
“திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்
மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்
அதில் கன்னம் இடும் கன்னம் எனக் கெஞ்சும்”
என்று ஈரமான ரோஜாவின் ‘கலகலக்கும் மணியோசை’ பாடலின் சொற்கோர்வையும், வார்த்தை விளையாட்டும் வாலிக்கே உரித்தானது என்ற எனது நினைப்பையும் பிறைசூடன்தான் அசைத்துப் பார்த்தார்.
கோபுர வாசலிலே படத்தின் ’கேளடி என் பாவையே’ மற்றும் ’நாதம் எழுந்ததடி’ ஆகிய பாடல்களிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்திருப்பார். குறிப்பாக நாதம் எழுந்ததடி பாடலின் சூழலுக்கு இளையராஜா வாலியைவிடுத்து பிறைசூடனை தேர்வு செய்ததையும், அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய பிறைசூடனையும் வியந்திருக்கிறேன். இத்தனைக்கும் அந்த படத்தில் வாலியும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இம்மாதிரி ஒப்புமை படுத்த முடியாத தனித்துவமான பிறைசூடனையும் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் கேளடி கண்மணி படத்தின் பாடலொன்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.இந்த பாடலை அவர் எழுதிய சூழலே மிக சுவாரஸ்யமானது. பாடலின் மெட்டை கேசட்டில் பதிவு செய்து பாடலாசிரியரிடம் கொடுத்துவிடும் வழக்கமிருந்த அந்த நாட்களில் ஆரம்பத்தில் டேப் ரெக்கார்டர்கூட இல்லாமல், பக்கத்து வீடுகளில் கேசட்டை கொடுத்து ஒலிக்கவிடச் சொல்லியெல்லாம் பாட்டு எழுதியிருப்பதாக சில தொலைக்காட்சி நேர்காணல்களில் அவரே சொல்லியிருக்கிறார். அந்த மாதிரி பதிவு செய்யப்பட்டு இவர் கைக்கு கேசட் கிடைத்தும், சொன்ன நாட்களுக்குள் இவரால் அந்த மெட்டிற்கு பாடலை எழுத முடியாமல் ரைட்டர்ஸ் பிளாக் போல எதையுமே யோசிக்க முடியாமல் தவித்திருக்கிறார். ஒலிப்பதிவுக்கான நாளன்று ராஜாவின் அலுவலகத்திலிருந்து போன் வந்த போதும் எழுதிவிட்டதாகச் சொல்லிவிட்டு டாக்ஸி பிடித்து ஸ்டுடியோவிற்கு கிளம்பியிருக்கிறார்.பாதி வழி வரைக்குகூட எதுவுமே எழுதவில்லையாம். சிக்னலொன்றில் டாக்ஸி நின்றபோது,
“தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்” என்ற பழைய பாடல் டாக்ஸியிலிருந்து ஒலிக்கவும், தன்னையுமறியாமல் தென்றல் திங்கள் என்று முணுமுணுத்தவர் அப்படியே லீட் பிடித்து எழுதியதுதான், “தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும்” பாடல். இந்த பாடலின் சரணத்தில்,
”காவேரி ஆற்றின் மீனிங்கே
காதோடு மோதும் ஆனந்தம்”
என்று கொள்ளிடக்கரையில் பிறந்த பிறைசூடனின் அனுபவத்தில் விளைந்த இந்த வரிகளில் எத்தனை கவித்துவம்.
”ஆற்று நீரில் ஆட்டம் போட்டு ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்றைப் போலே நெஞ்சைவிட்டுப் போகுமா”
என்று தங்கமனசுக்காரன் படத்தின் ’மணிக்குயில் இசைக்குதடி’ பாடலில் நாம் சுமந்தலையும் பால்யத்தின் நினைவுகளை இரண்டே வரிகளில் சொல்லி அந்த நாட்களின் மொத்த நினைவுகளையும் கொக்கிப் போட்டு இழுத்து வரச் செய்திருப்பார்.
”இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை”
என்று செம்பருத்தி படத்தின் ’நடந்தால் இரண்டடி’ பாடலில் தத்துவமாய் ஆரம்பித்து தன்னம்பிக்கை விதைக்கும் வரிகளை நேர்த்தியாய் கதையின் போக்கிற்கும் தனித்துப் பார்த்தாலும் ரசிக்குபடியும் கொடுத்திருப்பார்.
ராஜாதி ராஜாவின் ”மீனம்மா மீனம்மா”, அதிசயபிறவியின் ”தானந்தன கும்மி கொட்டி”, கேப்டன் பிரபாகரனின் ‘ஆட்டமாதேரோட்டமா’ , தெனாலியின் ”போர்க்களம் எங்கே” , எல்லாமே என் காதலியின் ”உயிரே உயிரே இது தெய்வீக சம்மந்தமோ”, அரண்மனைக்கிளியின் “நட்டு வச்ச ரோசாச் செடி நாந்தான்” , பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் ‘உயிரே உயிரின் ஒளியே’ , மைடியர் மார்த்தாண்டனின் ‘ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்’ , சின்ன மாப்ளேயின் ‘வெண்ணிலவு கொதிப்பதென்ன ‘ என இவரின் வரிகளில் என விருப்பப் பாடல்களின் பட்டியல் பெரிதாய் நீளும்.
இத்தனை நல்ல பாடல்களை தந்திருந்தும் பெரிய எண்ணிக்கையிலான பாடல்கள் இவரிடமிருந்து வராமல் போனதற்கு அவரே பல இடங்களில் சொல்லியிருப்பது போல அவரின் பிடிவாதகுணமும், வாய்த்துடுக்கான பேச்சுமேக்கூட காரணமாய் இருந்திருக்கலாம்.கொஞ்சம் நெளிவு சுளிவுகளோடு இருந்திருந்தால் இன்னும் சில நூறு பாடல்கள் அவரிடமிருந்து கிடைத்திருக்குமே என்ற ஒரு ரசிகனின் ஆதங்கமாய் இதை இங்கே வெளிப்படுத்துகிறேன்.
ராஜா தொடங்கி ரஹ்மான் வரை பாடல்கள் எழுதியிருக்கும் பிறைசூடன் நிறைய பக்தி பாடல்களையும் எழுதி குவித்திருக்கிறார்.திரைப்பாடல் வாய்ப்புகள் அவருக்கு அத்திப்பூச் செயலாய் இருந்து வரும் சூழலில் பக்தி பாடல்கள்தான் தொடர்ந்து அவர் இயங்க உதவியாக இருந்திருக்கக்கூடும் என்பது அவரைப் பற்றிய தகவல் திரட்டலில் எனக்கு தோன்றிய விஷயம்.
’ஒரு மோதல் ஒரு காதல்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராய் அறிமுகமாகியிருக்கும் கே.ஆர்.கவின் பிறைசூடனின் வாரிசு. தனது தந்தையின் திறமையை இன்னும்  அழுத்தமாய் வெளி உலகிற்கு கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்போடு அவரை வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக