சனி, 24 பிப்ரவரி, 2018

நடிகை ஸ்ரீதேவி காலமானார் பிப்ரவரி 25, 2018.



நடிகை ஸ்ரீதேவி காலமானார் பிப்ரவரி 25, 2018.

நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


ஸ்ரீதேவியின் அகால மரணத்தை அவருடைய மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர், மகள் குஷி இருவரும் உயிர்பிரியும் போது உடனிருந்திருக்கிறார்கள். மூத்த மகள் ஜான்வி திருமண விழாவுக்கு செல்லாததால் மும்பை இல்லத்தில் இருந்திருக்கிறார்.
54 வயதே நிரம்பிய ஸ்ரீதேவியின் திடீர் மரணச் செய்தி பாலிவுட், கோலிவுட் திரைப் பிரபலங்களை மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1969 ஆம் ஆண்டில் வெளியான துணைவன் திரைப்படத்தில் நான்கு வயது குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வெகுகாலம் கோலோச்சியவர்.
தமிழகத்தின் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி சிவாஜி, ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்தவர். இயக்குனர் பாலச்சந்தரின் வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 16 வயதினிலே மயில் கேரக்டர் ஸ்ரீதேவியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திய திரைப்படமாக அமைந்தது.
மூன்றாம் பிறை திரைப்படத்தில் கமலுக்கு இணையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி.
மத்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ(2013), ஃபிலிம்பேர், இந்தி சினிமாக்களில் சிறந்த பங்களிப்பு செய்ததிற்கான ‘MAMI’ உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார்.




ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட நடிகை கவுதமி, அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் மறைவுச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது ரசிகர்களுக்கு இந்த நாள் கருப்பு தினம் என கூறியுள்ளார். வாழ்க்கை எத்தனை சிறியது என ஸ்ரீதேவியின் மரணம் உணர்த்துவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா, தனது வருத்தத்தை பதிவு செய்து கொண்டார். இவர்கள் தவிர இந்தி நடிகை, சுஷ்மிதா சென் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள், ‌தங்களின் இரங்கல் செய்தியை இணையதளங்களில் பதிவிட்டு ‌வருகின்றனர்.



வசீகர நாயகி ஸ்ரீதேவி

4 வயதில் திரையுலகில் அறிமுகமாகி தனித்திறமையாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் திரை ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. தமிழ், மலையாளம், கன்னடம், ஹந்தி என தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஸ்ரீதேவி. காலத்தால் அழியாத காந்த நடிப்பாற்றல் 13 வயதிலேயே கதாநாயகியாக நடித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, 1967-ஆம் ஆண்டு தமது 4 வயதில் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமானார். அசத்தும் நடிப்பாற்றல் காரணமாக தமது 13 வயதிலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் 1976-ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படமே ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த திரைப்படம்.கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வசந்தகால நதி தனிலே... வைரமணி நீரலைகள் என்ற பாடல் கேட்க ரசணையாவும், பார்க்க த்ரில்லாகவும் இருக்கும். ரஜினி, கமல் ரஜினியுடன் ஸ்ரீதேவியின் நடிப்பும் இந்த படத்தில் மிளிர்ந்தது.
மூன்று முடிச்சில் அறிமுகமானலும் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 16 வயதினிலே திரைப்படம் மூலம் தான் ஸ்ரீதேவி பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டார். இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள செந்தூரப்பூவே பாடலும். சப்பாணின்ன சப்புன்னு அடிச்சிரு என பேசிய வசனமும் ஸ்ரீதேவியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.


பின்னாளில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழிகளிலும் தம் நடிப்பாற்றலால் ரசிர்களை கவர்ந்தார் ஸ்ரீதேவி. தமிழில் ஜொலிக்கத் தொடங்கிய பின் மலையாளத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ஆலிங்கனம், குட்டவும் சிக்ஷையும், ஆத்யபாடம், ஆ நிமிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
1978 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார் ஸ்ரீதேவி. இவர் நடித்த முதல் ஹிந்தி திரைப்படம் சோல்வா சாவன். ஹிந்தியில் அவரது இரண்டாவது படமான ஹிம்மத்வாலா பெரும் வெற்றியை பெற்றது. இதன்பின்னர் சத்மா, சாந்தினி ஆகிய திரைப்படங்களும் பெரும் வெற்றியை பெற்றன. புகழின் உச்சத்தில் இருந்த போது 1986-87களில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து சில வதந்திகள் பரவின.
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும், பரினாமத்தையும் வெளிப்படச் செய்தது. மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்ரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியை திரையில் பிரதிபலித்தன. இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும்.

பாலிவுட் நடிகர் அனில்கபூரின் அண்ணனும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூரை ஸ்ரீதேவி மணந்தார். திருமணத்திற்கு பின்னர் ஆறாண்டுகள்கழித்து சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். 14 ஆண்டுகளுக்கு பின் இங்க்லீஷ், விங்க்லீஷ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் அவர் கால்பதித்தார். இந்த திரைப்படம் தமிழிலும், இந்தியிலும் தயாரிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
மீண்டும் கோகிலா, ப்ரியா என பலதிரைப்படங்களில் வெற்றிக்கொடி கட்டிய ஸ்ரீதேவிக்கு 2013 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. மீண்டும் கோகிலா திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது கிட்டியது. தேவராகம் திரைப்படத்திற்காக டொரண்டோ விருதினை ஸ்ரீதேவி பெற்றார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார் ஸ்ரீதேவி..
கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ரவி உதய்வார் இயக்கத்தில் மாம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அவரது 54 ஆவது பிறந்த நாளைகொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அவர் அறிமுகமான துணையான வெளியான அதே தினத்தில் 50 ஆண்டுகள் கழித்து மாம்வெளியானது. இப்படி தலைமுறை கடந்து ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி மூச்சு நின்றிருக்கிறது. எனினும் ரசிகர்களின் உணர்வுகளில் என்றும் ஈரக்காற்றாய் அவ்வவ்போது கடந்து செல்வார். நன்றி புதியதலைமுறை.


⚫இறப்பதற்கு முன் கடைசியாக அவர் அந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக