மூத்த இயக்குநர் ஏ சி திருலோகச்சந்தர் இன்று ஜூன் 15 (2016) காலமானார். அவருக்கு வயது 85. தென்னகத்திலிருந்து ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் படமான தெய்வ மகனை இயக்கிய சாதனையாளர் இவர். வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்தவர் ஏசி திருலோகச்சந்தர். திரையுலகில் மிகுந்த மரியாதைக்குரிய இயக்குநராகவும் சாதனையாளராகவும் பார்க்கப்பட்ட அவர், ஏவி எம் நிறுவனம் மூலம் அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் படம் வீரத் திருமகன். ஏவிஎம் தயாரித்தது.
சிவாஜியை வைத்து
அதன் பிறகு சிவாஜிகணேசனை வைத்து ஏராளமான படங்களை இயக்கினார் திருலோகச்சந்தர். பெரும்பாலான படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றவை. காக்கும் கரங்கள், இரு மலர்கள், என் தம்பி, திருடன், தெய்வ மகன், எங்க மாமா, எங்கிருந்தோ வந்தான், பாபு, அவன்தான் மனிதன், என்னைப் போல் ஒருவன், பைலட் பிரேம்நாத், வசந்தத்தில் ஓர் நாள் என தொடர்ந்து சிவாஜியை வைத்து 25 படங்கள் இயக்கினார்.
எம்ஜிஆர் சிவாஜியின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஏசி திருலோகச்சந்தர் எம்ஜிஆரை வைத்து இயக்கிய ஒரே படம் அன்பே வா.
ரஜினியை வைத்து
ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய ஒரே படம் வணக்கத்துக்குரிய காதலியே. தீர்க்க சுமங்கலி, பெண் ஜென்மம், பத்ரகாளி போன்ற படங்களும் ஏசி திருலோகச்சந்தர் இயக்கியவைதான்.
ஏவிஎம்முடன் அவர் கடைசியாக இயக்கியது அன்புள்ள அப்பா (1987). ஏவிஎம் படம். சிவாஜி - நதியா நடித்திருந்தனர். பாபு, தெரி கஸம், மெய்ன் பி லட்கி ஹூன் உள்ளிட்ட சில இந்திப் படங்கள் மற்றும் தெலுங்கில் 2 படங்கள் இயக்கினார். இறுதி வரை ஏவிஎம் நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார்.
ஆஸ்கர் படம்
தென் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய தெய்வ மகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது, 5 முறை பிலிம் பேர் விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த படங்களுக்கான தேர்வுக் குழுவின் தலைவராகவும் பலமுறை பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பம்
ஏசி திருலோகச்சந்தர் மனைவி பெயர் பாரதி. சமீபத்தில் காலமானார். இவருக்கு ராஜ், பிரேம் என இரு மகன்கள். ஒரே ஒரு மகள் மல்லிகேஸ்வரி. இவர்களில் பிரேம் அமெரிக்காவில் காலமானார்.
ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட முதல் தமிழ்ப் படம் இயக்கிய ஏசி திருலோகச்சந்தர்!
நன்றி -ஒன் இந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக