செவ்வாய், 21 ஜூன், 2016

இயக்குனர் இராம.நாராயணன் நாராயணன் நினைவு நாள் ஜூன் 22


இயக்குனர் ராம நாராயணன் நினைவு நாள் ஜூன் 22
ராம நாராயணன், (ஏப்ரல் 3, 1949 - சூன் 22, 2014) இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார்.சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இராம.நாராயணன், தமிழ், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, இந்தி, போஜ்புரி ஆகிய 9 மொழிகளில் 126 படங்களை இயக்கி செய்து சாதனை படைத்துள்ளார். வேறு எவரும் இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட படங்களை 9 மொழிகளில் இயக்கியதில்லை.

இராம.நாராயணன் வாழ்க்கை வரலாறு

இராம.நாராயணனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. தந்தை பெயர் இராமசாமி. தாயார் மீனாட்சி ஆச்சி. ராமசாமி சென்னையில் மருந்துக்கடை (பார்மசி) நடத்தி வந்தார். இராம.நாராயணன் காரைக்குடியில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.யு.சி படித்தார்.

சிறு வயதிலேயே திரைப்படத் துறைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும் இராம.நாராயணனுக்கு இருந்து வந்தது. எப்படியாவது பட உலகில் நுழைந்து, சினிமாவுக்குப் பாட்டு எழுதவேண்டும், கதை-வசனம் எழுதவேண்டும் என்று விரும்பிய அவர், பி.யு.சி. தேறியதும், சென்னைக்கு புறப்பட்டார்.

இராம.நாராயணனின் தந்தையின் மருந்துக்கடை சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தது. அந்த மருந்துக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார். கடையநல்லூரைச் சேர்ந்த காஜாவும், பட வாய்ப்பு தேடி அலைந்து கொண்டு இருந்தார். அப்போது எம்.ஏ.காஜாவுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒரே நோக்கத்தில் இருந்ததால் விரைவில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். எப்படியாவது பட உலகில் புகுந்து விடவேண்டும், எந்தத் துறையானாலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவுடன், பட வாய்ப்புக்காக இருவரும் தீவிரமாக முயற்சி செய்தனர்.

சினிமா வாய்ப்பு

1976-ம் ஆண்டு 'ஆசை 60 நாள்'' என்ற படத்திற்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இராம.நாராயணனும், எம்.ஏ.காஜாவும் சேர்ந்து கதை-வசனத்தை எழுதினார்கள். படத்தில் கதை, வசனம் என்று டைட்டில் கார்டு போடும்போது தங்களது பெயரை 'ராம்-ரகீம்' என்று குறிப்பிட்டனர்.

விஜயகுமார் கதாநாயகனாக நடித்த இந்தப்படம், வெற்றிப் படமாக அமைந்தது. படத்தை துரை இயக்கினார். உமா சித்ரா பிலிம்ஸ் தயாரித்தது. அதே தயாரிப்பில் 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்ற படத்திற்கும் ராம்-ரகீம் என்கிற பெயரில் கதை, திரைக்கதை, வசனத்தை இந்த இரட்டையர்கள் எழுதினார்கள். இந்த படத்தையும் துரை இயக்கினார்.

1977-ல் தேவிப்பிரியா என்ற பட நிறுவனத்தை, இராம நாராயணன் தொடங்கினார். சிவகுமார் கதாநாயகனாக நடிக்க, துர்காதேவி' என்ற படத்தை தயாரித்தார். திரைக்கதை, வசனத்தை இராம.நாராயணனும், காஜாவும் சேர்ந்து `ராம்-ரகீம்' என்ற பெயரிலேயே எழுதினார்கள்.

இதேபோல் 1979-ம் ஆண்டு, 'மாந்தோப்பு கிளியே' என்ற படத்தை எம்.ஏ.காஜா தயாரித்து இயக்கினார். இதன் கதை-வசனம் 'ராம்-ரகீம்.' நகைச்சுவை நடிகர் சுருளிராஜனுக்கு பெரிய புகழ் தேடிக்கொடுத்த படம் இது. அடுத்தபடியாக இராம.நாராயணன் "ஒரு தொடர்கதை ஒரு விடுகதை'' என்ற படத்தை தயாரித்தார். படத்தை எம்.ஏ.காஜா இயக்கினார். நடிகர் விஜயனும், ஷோபாவும் நடித்தனர்.

1978-ம் ஆண்டு இராம.நாராயணன் தேவி பிரியா பிலிம்ஸ் சார்பில் மீனாட்சி குங்குமம்' என்ற படத்தை தயாரித்தார். அதை காரைக்குடி நாராயணன் இயக்கினார். அதனைத் தொடர்ந்து வேலும் மயிலும் துணை, பவுர்ணமி நிலவில்' ஆகிய படங்களையும் இராம. நாராயணன் தயாரித்தார்.

தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கிய இவர் தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். குரங்கு, பாம்பு உள்ளிட்ட விலங்குளை வைத்து ரசிக்கும் படியான திரைபடங்களை எடுப்பது இவருக்கு வை வந்த கலை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தவர்.

இதுவரை 126 திரைப்படங்களை இயக்கியுள்ள இராம.நாராயணன் இந்தியாவிலேயே அதிக திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


திரைப்படங்கள்
குட்டிப் பிசாசு (தமிழ், தெலுங்கு, கன்னடம்), சுமை, ஆடிவெள்ளி, சிவப்பு மல்லி, சிங்கக்குட்டி, வேங்கையின் மைந்தன், சிவந்த கண்கள், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய திரைப்படங்களில் பணி புரிந்துள்ளார்.

மரணம்
இராம நாராயணன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சூன் 22, 2014 அன்று சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூரில் மரணமடைந்தார்.
நன்றி-விக்கிபீடியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக