ஞாயிறு, 19 ஜூன், 2016

நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22


நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 

இளைய தளபதி விஜய்யின் இயற்பெயர் ஜோஸப் விஜய் சந்திர சேகர். ஜூன் 22, 1974-ல் சென்னையில் பிறந்தவர். திரைப்பட நடிகர், நடனக் கலைஞர், பாடகர், தயாரிப்பாளர் என பல முகங்கள் உண்டு. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா . நாயகனாக அறிமுகமானது, அப்பாவின் இயக்கத்தில் 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தில். நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த செந்தூரப் பாண்டி, விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய், 'புலி' வரை 58 படங்கள் வெளியாகி உள்ளன. அட்லி இயக்கத்தில் 59-வது படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

வாழ்க்கை!

ஆகஸ்ட் 25-ம் தேதி 1999-ம் ஆண்டு சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்தார். 2000-ல் சஞ்சய் என்ற மகனும், 2005-ல் திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்கு வரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய். இப்போது இருக்கும் புகழ், ரசிகர்களின் அன்பு ஆகியவற்றால் பொது இடங்களுக்குச் செல்லும்போது நிறைய இடையூறுகள் ஏற்படுவதால், அதைத் தவிர்த்து வருகிறார். அவரின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பி வந்து, அன்று முழுவதும் அம்மாவுடனும் குடும்பத்தாருடனும் நேரம் செலவுசெய்வது விஜய்யின் பழக்கம். கொஞ்சம் அம்மா பிள்ளை.


ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். சூப்பர் டூப்பர் படம் முதல் அட்டர் பிளாப் படங்கள் வரை தவறாது பார்த்துவிடுவார். ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பெருவாரியான சி.டி. கலெக்‌ஷன் அவர் வீட்டில் உண்டு. மாமிச உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. டிராமிசு எனப்படும் இத்தாலி கேக்கை விரும்பிச் சாப்பிடுவார் என காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் கூறியுள்ளார். அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை! இந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். அவர் நடித்து வெளியாகிற இந்திப் படங்களுக்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆசைப்படும் விஜய்க்கு இப்போதெல்லாம் அது முடியவில்லை. மனைவி சங்கீதாவை 'ஹாய் கீஸ்' எனச் செல்லமாகக் கூப்பிடுவார். எப்போதாவது கொஞ்சம் கோபமாக இருந்தால், 'வாங்க... போங்க...' தான்! வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. லண்டனில் சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்ச நாள் இருந்த பிறகு, அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் ட்ரிப் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையனும் பெண்ணும்தான். வீட்டில் டென்னிஸ். இப்போது இவருக்கு விடாப்பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்! சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவரது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். இப்போது பெண்ணுக்கும் அதே வீடியோக்கள், புகைப்படங்கள் சேகரிப்பு ஆரம்பம். நெருக்கமான கல்லூரி நண்பர்களை 'மச்சி' என்று அழைப்பார். மற்றவர்களை 'என்னங்கண்ணா'! கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். சின்னச் சின்ன சாப்பாடுகளை செய்து குடும்பத்தாரை அசத்துவது ஓய்வு நேர வேலை. அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்கும் எனப் பலர் சொல்லியிருக்கிறார்கள். எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்! வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு. அம்மா ஷோபா சந்திரசேகரை இசைக் கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு எப்போதும் முதல் ஆளாக ஆஜர் ஆவார். மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருகிறார் விஜய்.

சினிமா வாழ்க்கை!

எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிறமொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார். விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. தற்சமயம், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா. நிறைய புதுமுகங்களோடு ஜோடி சேர்ந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஜாலியாக ரெக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்பவும் அவரது சமீபத்திய பாடல்களில் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய். கொக்கோ கோலா, சன் ஃபீஸ்ட், போத்தீஸ் என, பல விளம்பரங்களில் நடித்தவர். விஜய் அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது அண்ணாமலை பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார். நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித் தான். காதலுக்கு மரியாதை (1998) படத்துக்காகவும், திருப்பாச்சி (2005) படத்துக்காகவும் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை இருமுறை பெற்றவர். 'விஜய் டி.வி"-யின் விருதுகளை 5 முறை வென்றுள்ளார். இவை தவிர, கில்லி (2004) - 'சென்னை கார்ப்பரேட் கிளப்'-பின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'தினகரன்' நாளிதழின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'ஃபிலிம் டுடே' சிறந்த நடிகர் விருது, பொதுச்சேவை அறிவிப்புக்கு (2005) வெள்ளி விருது, போக்கிரி (2007) - தமிழின் சிறந்த நடிகருக்கான 'அம்ரிதா மாத்ருபூமி' விருது, போக்கிரி (2007 )- சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, வேட்டைக்காரன் (2009) - சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, துப்பாக்கி, நண்பன் (2012) - விகடன் சிறந்த நடிகர் விருது... என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ’புலி’ படத்தின் 'ஏண்டி ஏண்டி' பாடலுடன் சேர்த்து 29 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இவருக்கு முதலில் பாடும் வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் தேவா இசையில் மட்டும் பத்து பாடல்களைப் பாடியிருக்கிறார். 'கத்தி' படத்தின் வசூல் 100 கோடிகளைத் தொட்டதில் தமிழில் ரஜினிக்குப் பிறகு 100 கோடி க்ளப்பில் இணைந்த நாயகன் விஜய்தான்.
நன்றி - சினிமா விகடன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக