ஞாயிறு, 19 ஜூன், 2016

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24


கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்பம்
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு
அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[7] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

படைப்புகள்
திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்
கவிதை நூல்கள்
காப்பியங்கள்
மாங்கனி
பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
ஆட்டனத்தி ஆதிமந்தி
பாண்டிமாதேவி
இயேசு காவியம்
முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்
கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2.
கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, காவியக்கழகம், சென்னை
கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி
பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்
அம்பிகை அழகுதரிசனம்
தைப்பாவை
ஸ்ரீகிருஷ்ண கவசம்
கிருஷ்ண அந்தாதி
கிருஷ்ண கானம்
கவிதை நாடகம்
கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு
பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
பஜகோவிந்தம்
புதினங்கள்
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள்
சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
பிருந்தாவனம்
சிறுகதைகள்
குட்டிக்கதைகள்
வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
சமயம்
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
உரை நூல்கள்
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

பகவத் கீதை
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
திருக்குறள் காமத்துப்பால்
சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

அர்த்தங்களின் சுமையற்ற கண்ணதாசனின் வரிகள் தருவது தித்திப்பும் மயக்கமும்…

அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: 'வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'

எத்தனையோ முறை நான் கேட்ட பாடல் அது. அழகான சொற்களைக் கொண்டு நிரப்பப்பட்ட பாடல் அது என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று அந்த மஞ்சள் கொன்றை அந்தப் பாடலை எனக்குத் திறந்து காட்டியது. அந்த மஞ்சள் கொன்றையின் மலர்கள்தான் வசந்த காலத்தின் வைரமணி நீரலைகள் என்று எனக்குத் தோன்றியது. மனம் எவ்வளவு விசித்திரமானது. தனது நினைவறையில் எல்லாவற்றையும் கொட்டிவைத்து, சம்பந்தமில்லாததுபோல் தோன்றும் இரு விஷயங் களுக்குள்ளும் உறவு இருக்கிறது என்பதை ஏதோ ஒரு தருணத்தில் திடீரென்று உணர்த்திவிடுகிறது. மஞ்சள் கொன்றை அந்தப் பாடலைத் திறக்க, அந்தப் பாடல் எனக்கு வசந்த காலத்தைத் திறந்தது. நிழற்சாலை ஒன்றின் நடைபாதையில் பரவசத்துடன் நடக்க ஆரம்பித்தேன். கொய்யா, மாம்பழம், நாவற்பழம், சப்போட்டா, சீத்தாப்பழம் என்று வசந்தத்தின் வெவ் வேறு வண்ணங்கள் அந்த நடைபாதையில் போகும் வழியெல்லாம் தள்ளுவண்டிகளில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. வசந்தம் இன்னும் விரிந்து கொண்டே போனது. அன்று, வசந்தத்துக்கு என் கண்களைத் திறக்கச் செய்தார் கண்ணதாசன்.

காதுகளின் கவிஞன்

கண்ணதாசன் பாடல்களில் இசையையும் தருணங்களையும் அகற்றிவிட்டு வெறும் வரிகளாக வாசிக்கும் விமர்சகர்களுக்குப் பலமுறை அவரது வரிகள் ஏமாற்றம் தரலாம். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணதாசன் கண்களின் கவிஞன் அல்ல; செவியின் கவிஞன். கவிதைகள் காலம்காலமாகச் செவிக்கு உரியவையாகத்தான் இருந்திருக்கின்றன. செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லியது கவிதைகளுக்குத்தான் முற்றிலும் பொருந்தும். நீரில் நீலம் பிரியும் மைத்துளி போல செவியில் விழும் சொற்கள் மனதுக்குள் விரியும். எழுத்து, அச்சு என்பவையெல்லாம் அந்தச் சொற்களின் ஆவணக்காப்பகங்கள் போன்றுதான்.

தற்போது கவிதைகள் தமக்குரிய இசைத் தன்மையை விட்டுப் பார்வையை நோக்கித் திரும்பி விட்டன. கவிதைகள் காட்சிகளையே பெரிதும் தற்போது உருவாக்குகின்றன. கண்ணதாசன் அந்தக் காலத்துப் பாணர்களின் தொடர்ச்சி. அவரது பாடல்களைப் படிப்பதைக் காட்டிலும் இசையோடு கேட்கும்போது ஏற்படும் பரவசம் விளக்க முடியாதது. அது இசையால் மட்டுமே வருவதல்ல. முதற்காரணம், கண்ணதாசனின் வரிகள்தான். எடுத்துக்காட்டாக, 'போலீஸ்காரன் மகள்' என்ற திரைப்படத்தில் வரும் 'இந்த மன்றத்தில் ஓடிவரும்…' பாடலைப் பார்க்கலாம். அழகான மெட்டு, பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜானகி இருவரின் மதுரக் குரல்கள். இப்படி இருக்கும்போது இந்த வரி 'இந்தச் சபைதனில் ஓடிவரும்…' என்றோ, 'இந்தத் தோட்டத்தில் ஓடிவரும்…' என்றோ இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! 'மன்றம்' என்ற எளிய சொல்லில் இசை வந்து விழும்போது மாயாஜாலம் நிகழ்கிறது. மேலும், விசித்திரமான சூழலைக் கொண்டது அந்தப் பாடல். ஒரு தங்கை தன் காதலனை நினைத்து இப்படிப் பாடுகிறாள்:

நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கிறாள்

அவள் விடிந்த பின் துயில்கின்றாள்

என் வேதனை கூறாயோ?

ஒருத்தி தன் காதல் வேதனையைச் சொல்லும் இந்தப் பாடலின் இடையே அவளுடைய அண்ணன் வேறு நுழைந்துகொள்கிறான். தென்றலிடம் தன் தங்கைக்காக அவனும் தூதுவிடுகின்றான். இந்த அண்ணனையே மறந்துபோகும் அளவுக்கு அவள் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய காதலின் ஆழத்தைச் சொல்லும் அதே வேளையில், தனது தங்கைக்கு இந்த அண்ணனின் நினைவு இல்லாமல் போய்விட்டதே என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். காதல் பாடலில் அண்ணன் வந்தாலே ஓர் அபஸ்வரம்போல் ஆகிவிடும், இதில் அவன் தனது பொறாமை உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறானே! ஆனால், இசகுபிசகான இந்தத் தருணத்தையே பாடலுக்கு உயிரூட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்:

தன் கண்ணனைத் தேடுகிறாள்

மனக் காதலைக் கூறுகிறாள்

இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று

அதனையும் கூறாயோ...

தேன்பனி!

சொற்கள் இசைக்கு உயிர்கொடுக்க வேண்டுமே யொழிய, சொற்களுக்கு இசை உயிர்கொடுக்கக் கூடாது. அதனால்தான் 'மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்றான் பாரதி. கண்ண தாசனுடையதோ பனி போன்ற சொல்லின்பம். சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். லெப்பர்டி என்ற இத்தாலியக் கவிஞனின் வரிகளைப் பற்றி இதாலோ கால்வினோ இப்படிச் சொல்கிறார்: 'அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத் தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் பொருந்தும்.

பனி என்றால் தேன் கலந்த பனி! அப்படித்தான் சொல்ல வேண்டும் கண்ணதாசனின் வரிகளை. 'பனிபோல் குளிர்ந்தது கனிபோல் இனித்ததம்மா' என்ற வரிகளை வேறு எப்படிச் சொல்வது? இந்த வரிகளின் அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சொற்களை மெலிதாக முணுமுணுத்துப் பாருங்கள். எவ்வளவு தண்மை! எவ்வளவு தித்திப்பு! இதேபோல் சொல்லின்பம் தரும் ஒரு சில உதாரணங்களையும் பாருங்கள்:

'மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு'

(பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம்)

'பாலாடை போன்ற முகம் மாறியதேனோ

பனிபோல நாணம் அதை மூடியதேனோ'

(பாவாடை தாவணியில் - நிச்சயத் தாம்பூலம்) 'முதிராத நெல்லாட ஆடஆட

முளைக்காத சொல்லாட ஆடஆட'

(கட்டோடு குழலாட- பெரிய இடத்துப் பெண்)

'இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்'

(நாளாம் நாளாம்… - காதலிக்க நேரமில்லை)

தேன்மூடிய சிருங்காரம்

காதல், காம உணர்வுகளைப் பூடகமாகவும் இனிக்கஇனிக்கவும் சொன்னவர் கண்ணதாசன். ஒரு பெண் தன்னுடைய காம உணர்வுகளைச் சொல்வதைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், 'அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்' என்ற வரிகள் கண்ணதாசன் சொற்களில் சுசீலாவின் குரலில் வந்து விழும்போது ஒழுக்கவாதிகளுக்கும் மயக்கம் வருமே, அதை என்னவென்று சொல்ல! ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன வளுக்கு, அவன் 'ஒன்று' தந்த பிறகு உன்மத்தம் ஏறிக்கொள்கிறது. பிறகு, போதாது இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறாள். உண்மையில் அவள் வேண்டாம் என்று சொன்னதெல்லாம் கட்டுப் பாடுகளுக்குப் பயந்தல்ல; தனக்கு உன்மத்தம் ஏறி விடும் என்று பயந்துதான் என்பது பிறகு தெரிகிறது:

'தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்

ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்

அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்

ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள், போதாதென்றாள்...

அர்த்தத்துக்கு அடுத்த இடம்தான்

கண்ணதாசன் இப்படியெல்லாம் மயக்கம் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக்கொண் டிருப்பார்கள். இப்படிச் சொல்வது கண்ணதாசன் அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரில்லை என்பது அர்த்தம் அல்ல. அவரது தத்துவப் பாடல் களுக்குள் புகுந்தால் அவற்றிலிருந்தும் மீள முடியாது. சொற்களிலே கவிஞன் கிறுகிறுக்க வைக்கும் போது அங்கே அர்த்தம் நமக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விடும். 'உன்னை நான் கொல்லவா?' என்பதை கண்ணதாசன் தனக்கேயுரிய மொழியில் கேட்டால் 'கொல்லுங்கள்' என்றுதானே நமக்குச் சொல்லத் தோன்றும்.

கண்ணதாசனுக்குத் திரைப்படம், இசை, 'சிச்சுவேஷன்' எல்லாம் தனது உணர்வுகளையும், சோகங்களையும் கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. கண்ணதாசன் தனது இறுதிப் பாடலில் இப்படி எழுதியிருப்பார்:

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே!

உண்மையில், இது நம்மை நோக்கி அவர் வைக்கும் வேண்டுகோள். எப்படி மறக்க முடியும் கண்ணதாசன், உங்களை!

கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
*காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...


` *கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

` *சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

*`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

*எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

*`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

*வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

*`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

*’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

*கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
*கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

*காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

*ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

*முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

*படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

*`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

*`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

*தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

*காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

*திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

*திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

*`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

*`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

*தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
*`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்

*இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...
  `ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
   அவன் பாட்டை எழுந்து பாடு!


நன்றி-விக்கிப்பீடியா ,தமிழ் தி இந்து .லக்ஷ்மன்  ஸ்ருதி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக