ஞாயிறு, 1 ஜூலை, 2018

பாடகர் ஏ. எம். ராஜா பிறந்த தினம் ஜூலை 1, 1929.


பின்னணி பாடகர் ஏ .எம் .ராஜா பிறந்த நாள் ஜூலை 01 
ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா (ஜூலை 1, 1929 - ஏப்ரல் 7, 1989) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி.

வாழ்க்கைக் குறிப்பு
ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.

திரையிசைப் பாடகராக
இசையார்வம் கொண்ட ஏ.எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார் கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச்.எம்.வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.

1951 இல் கே.வி. மகாதேவன் ஏ.எம்.ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் அழியாத காதல் வாழ்வில்... என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கருநாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப்பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான முகமது ரஃபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா.

துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச்செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான ஆடாத மனமும் ஆடுதே, பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா, ஓகோ எந்தன் பேபி போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். மைனர் லைஃப் ரொம்ப ஜாலி போன்ற பாடலகளையும் அவர் தன் பாணியில் பாடியுனார். முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ. எம். ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடினார். மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் கலையே என் வாழ்க்கையின் வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். தேன்நிலவு படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.

அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ, கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட நிலவும் மலரும், இதய வானின் உதய நிலவே, கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்கக் காட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ. எம். ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்),, கண்களின் வார்த்தைகள் புரியாதோ' (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.

ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை புகழ்பெற்றவை.

நடிகராக
ஏ.எம்.ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப் பற்றிய படமான 'பக்க இந்தி அம்மாயி' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுவாக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்தி அம்மாயி' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ.எம்.ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நடித்தார்.

1955இல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலவின் பாவனையிலே என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ.எம்.ராஜா தம்பதியின் குழந்தைகளில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர்.

ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் தான் பம்பாய்க்குச் சென்று இந்திப்படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ன்' படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹயே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடும் முறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். சிங்களப் படத்தில்கூட அவர் பாடியிருகிறார்.

இசையமைப்பாளராக
இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த "சோபா". அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக்கியது. 1959இல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். அக்காலத்து மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்று அது. தமிழில் இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவுக்கும் அதுவே முதல் படம்.

ஸ்ரீதரின் இயக்குனத் திறமைக்காக மட்டுமன்றி பாடல்களுக்காகவும் மிக்க புகழ் பெற்றிருந்த படம் இது. "வாடிக்கை மறந்தது ஏனோ" போன்ற காதல் பாடல்கள் "காதலிலே தோல்வியுற்றாள்" போன்ற துயரப்பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, தேன் நிலவு, விடி வெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும் ஆடிப் பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார்.

ஆடிப்பெருக்கு என்ற படத்தில் பி. சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..' என்ற பாடல். சுசீலாவின் உச்சத்திற்குபோகும் திறனுக்குப் பதிலாக ஆழத்திற்குச் (base) செல்லும் திறனை வெளிப்படுத்தும்.

பிற திரைப்படங்கள்
விடிவெள்ளி (திரைப்படம்)
வேறு மொழிகளில்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ.எம்.ராஜா மட்டுமே. 1952இல் தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில் 'லோகநீதி' என்ற படம் வழியாக மலையாளத்தில் ஏ.எம்.ராஜா நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச்சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. ஆனாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். கேரளத்தின் முதல் 'சூப்பர் ஸ்டாரா'ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ.எம்.ராஜா அறுபதுகளில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார். .

ராஜாவின் பல முக்கியமான பாடல்களுக்கு தேவராஜன் இசையமைத்தார். ராஜா பாடிய பெரியாறே பெரியாறே போன்றபாடல்கள் தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். வடக்கு கேரளத்தின் காதல்பாட்டுகளான 'மாப்பிளைப்பாட்டு'களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. உதாரணமாக 'உம்மா' படத்தில் வரும் 'பாலாணு தேனாணு ' என்றபாடலில் என் சைனபா ! என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலா க்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ.எம்.ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. காச கங்கையுடெ கரையில்.. போன்றபாடல்களை மலையாளத் திரையிசையின் 'கிளாசிக்'குகளாகவே சொல்லலாம்.

தெலுங்கில் ஏ.எம்.ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் அப்பு சேஸி பாப்பு கோடு படத்தில் இடம்பெற்ற 'மூகாவைனா எமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே' ]இன்றும் ந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற 'சூடுமடே செலியா' 'பாலிஞ்சர ரங்கா', 1957ல் அக்கா செல்லுலு ப்டத்தில் இடம்பெற்ற அந்து மாமிடி போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மரேனா' என்ற பாடத்தான். [லிபாபா 40 தொங்கலு]. அலாதீன் அற்புத தீபம் படத்தில் இடம்பெற்ற 'அண்டால கொனெட்டிலோனா' [1957] 'அமர சந்தேசம் 'படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என அவரது அழியாப்பாடல்களின் பட்டியலைப் பெரிதும் நீட்டமுடியும்.

பிற்காலம்
நடுவே திரைவாழ்க்கையில் ஏ.எம்.ராஜாவுக்கு ஓர் இடைவெளி விழுந்தது. தன் மெல்லிசைக்கச்சேரிகள் வழியாக அவர் வாழ்க்கையை நடத்தினார். பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைபபளர் வி. குமார் ஏ.எம்.ராஜாவை அவரே அமைத்துக்கொண்ட அஞ்ஞாதவாசத்திலிருந்து மீட்டு பாடவைத்தார். ரங்கராட்டினம் படத்துக்காக ஏ.எம்.ராஜா பாடிய முத்தாரமே உன் ஊடல் என்னவோ? அன்று மிகப்பெரிய ஒருஅலையாக நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டது. புகுந்தவீடு படத்துக்காக ராஜா பாடிய செந்தாமரையே செந்தேனிதழே... அடுத்த அலை. இரு பாடல்களுமே சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 1973ல் வீட்டுமாப்பிள்ளை படத்தின் வழியாக இசையமைப்பாளராகவும் ஏ.எம்.ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த ராசி நல்ல ராசி ஒரு வெற்றிப்பாடல். 1975ல் 'எனக்கொரு மகன் பிறப்பான்' படத்திற்காகவும் ஏ.எம்.ராஜா இசையமைத்தார். இக்காலகட்டத்தில் 'தாய்க்கு ஒரு பிள்ளை', 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'பத்துமாத பந்தம்', 'அன்பு ரோஜா', 'இது இவர்களின் கதை' போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 1970ல் ஏ.எம்.ராஜா மலையாளத்தில் 'அம்ம எந்ந ஸ்திரீ' படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார். 1970ல் 'காதலெனும் காவியம்' முதல் 1993 ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் 'செந்தமிழ்பாட்டு' படத்தில் 'வண்ணவண்ண மெட்டெடுத்து' வரை அந்த பயணம் நீண்டது.

மறைவு
ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டு இருந்தார். 1989, ஏப்ரல் 7 ஆம் நாள் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் தொடருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் தொடருந்தைத் தவறவிட்டு விட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் புகையிரத நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார்.


மெல்லிசை பாடுவதில் இந்திப் பாணியைப் புகுத்தியவர் ஏ.எம்.ராஜா. இவரது பாட்டும் இசை அமைப்பும், சலசலப்பு இல்லாத சுகமான ராகம். ஐம்பதுகளின் ராஜா இவர். இன்னிசையை விரும்பும் பலர், இன்றும் இவரது ஒலிநாடாக்களை நாடுகிறார்கள்.... தென்றலில் தவழ்ந்துவரும் குரல்களைக் கேட்டிருப்பீர்கள், குரலில் தவழ்ந்து வரும் தென்றலைக் கேட்டதுண்டா? மென்மையான மெல்லிசையைக் கேட்டிருப்பீர்கள், மென்மையே மெல்லிசை ஆனதைக் கேட்டதுண்டா? சுமார் அரை நூற்றாண்டுக்கு முன், மந்தமாருதமாய் வீசத் தொடங்கிய ஏம்.எம்.ராஜாவின் மெல்லிசையை நீங்கள் செவிகுளிரக் கேட்டிருந்தால் நிச்சயம் உண்டு.... ! இந்த ராஜா, ஜெமினி வாசனின் மோதிர விரலால், குட்டு வாங்கி அல்ல, ‘ஷொட்டு‘ வாங்கி, பின்னணி பாடத் தொடங்கியவர். பின்னணிப் பாடகர்கள் சிறந்த இசை அமைப்பாளர்கள் ஆவதில்லை என்கிற பொது விதியை மாற்றி, தான் இசை அமைத்த ஒரு சில படங்களிலேயே முத்திரை பதித்தவர். நாட்காட்டி இரண்டாயிரத்தை தாண்டி குதித்தோடிக் கொண்டிருக்கும் இன்றும், நம் செவி மடங்களில் சதிராடிக் கொண்டிருக்கும் குளு குளு சங்கீதத்திற்கு சொந்தக்காரர். மேலோட்டமான மெல்லிசை என்பது புல்லின் இதழில் நழுவும் பனித்துளி. காலச்சூரியன் கண் சிமிட்டுவதற்க முன் அது காணாமல் போகும். ஆனால் ராஜாவின் மெல்லிசைப் பாணி, அழகான மெட்டுக்கள், கருத்துள்ள வரிகள் என்ற பலங்களுடன் வந்ததால், காதுக்கு மட்டுமல்ல, கருத்திற்கும் குளர்ச்சியாக உள்ளது.

      ஏ.எம்.ராஜா பிறந்தது ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாவட்டமான சித்தூர். களி தெலுங்கும் கவின் தமிழும் கலந்தொலிக்கும் அந்த மாவட்டத்தில் ராமாபுரம் என்றொரு ஊர்.

மன்மதராஜுவின் வேண்டுதல்

      இந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அங்கே வாழ்ந்தவர் மன்மதராஜு அவருக்கும் பக்கத்து ஊரான ரேணுகாபுரத்து லக்ஷமம்மாவிற்கும் பிறந்த முதல் குழந்தை நாகம்மா. அதன் பிறகு, ஏழு ஆண்டுகளுக்கு வேறு பிள்ளை இல்லை. ஆண் பிள்ளை வேண்டுதலுடன் ரேணுகாபுரத்தில் ஒரு பிள்ளையார் கோவில் கட்டினார் மன்மதராஜு அவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண் குழந்தை பிறந்தது.

மனிதன் நினைப்பதுண்டு....

        வாரிசைக் கொடுத்த கடவுள், மன்மதராஜுவின் ஆயுசை எடுத்துக் கொண்டான். குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் மன்மதராஜு மரணம் அடைந்தார். ஒரு மாதக் குழந்தையாக தந்தையை இழந்தவர் ஏ.எம்.ராஜா. ஏமல மன்மதராஜு ராஜா. ரேணுகாவுரத்தில் ராஜாவின் பள்ளி நாட்கள் தொடங்கின. படிப்பு நன்றாக வந்தது. நல்ல பாட்டும் வந்தது. ‘ராஜா சிறுவனாக இருந்த போதே அவன் எங்கு சென்றாலும் அவனைப் பலர் பாடச் சொல்லுவார்கள்‘ என்று நினைவு கூர்கிறார் ராஜாவின் மூத்த சகோதரி நாகம்மா. (ராஜாவைப் பற்றி ஜிக்கியிடம் பேசிக் கொண்டிருந்த போது தற்செயலாக நாகம்மாவை சந்திக்க நேர்ந்தது. ராஜாவின் பிறப்பு / இளம் பிராயம் குறித்து அரிய தகவல்கள் கிடைத்தது.) படிப்பும் பாட்டுப் பயிற்சியும் பத்தாவது முடித்து, இன்டர்மீடியட் படிப்பிற்காக வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் ராஜா சேர்ந்தார். படிப்பிலும் கவனத்தைச் சிதறவிடாமல், வேலூர் தமிழ் இசைக் கழகத்தில் நரசிம்மலு நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். “வேலூரில் முஸ்லிம்கள் நிறைந்த கஸ்பா பகுதியில் இருந்தோம். ஜன்னல் பக்கத்தில் உக்காந்துகிட்டு, புல்புல் தாராவை வாசிப்பான். அப்படியே இந்தி சினிமாப் பாட்டையெல்லாம் ராஜா பாடுவான். அவன் பாட்டைக் கேட்க ஜன்னலுக்கு வெளியே ஒரு கூட்டம் சேர்ந்துடும். சினிமாப் பார்க்க காசில்லேன்னா, கொட்டகைக்குப் பின்னால் நின்னுகிட்டு பாட்டை யெல்லாம் கேப்பான்.“ தமக்கை நாகம்மாவின் நினைவுகள் இவை. பட்டப்படிப்பிற்காக, சென்னை வந்தார் ராஜா. பச்சையப்பன் கல்லூரியின் விடுதியில் தங்கி பி.ஏ. படித்து வந்தார். கல்லூரி இசைப் போட்டியில் வென்ற ராஜாவின் குரலைப் பதிவு செய்ய விரும்பியது ஹெச்.எம்.வி. இசை நிறுவனம்.

ஜெமினி வாசனின் அழைப்பு

       ‘ஓ....ஹ்ருதய ராணி‘, ‘எந்த தூரம் ஈ பயணம்‘ என்று தாய்மொழி தெலுங்கில் ராஜா எழுதி, மெட்டமைத்து பாடிய பாடல்கள் பதிவாயின. ‘ஓ.... ஹ்ருதய ராணி‘ பாடலை பலர் விரும்பிப் கேட்டார்கள். இந்தக் கால கட்டத்தில் சம்சாரம் என்ற படத்தை தெலுங்கிலும் தமிழிலும் எடுத்துக் கொண்டிருந்தார் ஜெமினி எஸ்.எஸ். வாசன். தெலுங்கு சம்சாரத்தில் பாடிய கண்டசாலாவின் தமிழ் உச்சரிப்பு வாசனுக்கு திருப்தி அளிக்காத தருணத்தில், ‘ஓ....ஹ்ருதய ராணி‘ பாடலை வானொலியில் தற்செயலாக கேட்டார் வாசன். கூப்பிட்டனுப்பினார்.

‘சம்சாரம் சம்சாரம், சகல தர்ம் சாரம்‘

        ராஜாவின் தமிழ் உச்சரிப்பிள் எந்த இடைஞ்சலும் இல்லை என்று ஜெமினியில் உறுதி செய்து கொண்டார்கள். படப்பாடல் பதிவானது. இசை அமைப்பாளர் ஈமனி சங்கர சாஸ்திரி. ‘சாம்சாரம், சம்சாரம், சகல தர்மசாரம்‘ என்ற பாடல். 1951 – ல் வந்த சம்சாரம் பெண்களின் கண்ணீரைக் கசக்கிப் பிழிந்த படம். ராஜாவின் முதல் பாடல் இன்றும் அவ்வப்போது நம் காதில் விழுந்துகொண்டு தான் இருக்கிறது. நல்ல வேளை பாட்டில் அதிகமான ஒப்பாரி இல்லை. சில பின்னணிப் பாடகர்கள் அழுது தீர்ப்பார்கள். ராஜாவிடம் அது கிடையாது. அவர் இன்றும் விரும்பப்படுவதற்கு அவர் பாட்டில் உள்ள ஒரு சௌக்கியம்மதான் காரணம். ஏ.எம்.ராஜா பின்னணி பாடி, வெளிவந்த முதல் படம் சம்சாரம். ஆனால், அவர் ஒப்பந்தமான முதல் படம் குமாரி (1952) என்கிறது, துர்காராவ என்பவரை ஆசிரியராகக் கொண்டு 1956 – ல் வெளியான ஒரு தென்னிந்திய திரைப்பட டைரக்டரி.

எம்.ஜி.ஆருக்குப் பின்னணிப் பாட்டு

      எம்.ஜி.ஆரும் மாதுரி தேவியும் நடித்த ராஜா – ராணி படமான குமாரியில் ஏ.எம்.ராஜா ஒரு பின்னணிப் பாடகியுடன் இணைந்து டூயட் பாடினார். அந்தப் பாடகியின் பெயர் ஜிக்கி. ராஜாவின் வருங்கால மனைவி. கே.வி.மகாதேவன் இசையில், குமாரியில் ராஜாவும், ஜிக்கியும் இணைந்து பாடிய முதல் பாட்டு ‘இருளிலே நிலவொளிபோல் அவர் வருவார்‘. அதைத் தவிர, ‘அழியாத காதல்‘, ‘காதல்சோலை‘ என்று தொடங்கும் இரண்டு ஸோலோ பாடல்களையும் குமாரியில் ராஜா பாடினார். (நல்ல நடிகர்களை வீணடித்த படம். விமர்சனத்திற்கு அருகதையற்ற படம் அன்று அந்நாளைய பேசும் படம் கமாரியை விளாசியது.)

பதிமூன்று பாடகர்களின் ‘உலகம்‘

    வாய்ப்புகளின் விரிவடைந்த வட்டமாய் வந்தது 1953. ஆசை மகன் படத்தில், ராஜா – லீலாவின் குரல்களில் காதல் லீலையில் குதூகலித்த பாடல் ‘ஓடமீதிருந்தே, காதல் கனாவிலே‘ சதுஸ்ர கதியில் சதிராடிவரும் மெட்டு. எல்லோரும் மறந்து போன இசை அமைப்பாளர் ஞானமணியின் இசை அமைப்பில் உலகம் என்றொரு படம். கே.வி.மகாதேவன் உட்பட 13 பாடகர்கள் பின்னணி பாடிய படம். இதில், ஏ.எம். ராஜா, எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலில் ஒலிக்கிறது காதலின் சோகத்தை பிரதிபலிக்கும் ஒரு பாடமல். ‘என் பிரேம ராணி, காதலினாலே உள்ளம் உடைந்தேனே!‘ உலகம் படத்திலோ ராஜா பாடிய இன்னொரு பாடல் – இது பி.லீலாவுடன் – ‘இசை பாடி நாளுமே ஆசையாக ஆடுவோம்!“ ‘பெற்ற தாய்‘ படத்தில் பி. சுசீலாவுடன் வசீகரமான டூயட் ‘ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு – ஏதும் அறியாதவன் போல‘. இது சுசீலா திரை உலகில் பாடிய முதல் பாடல். படத்திற்கு இசை பெண்டியாலா நாகேஸ்வர ராவ்.

எம்.எஸ்.வி.யின் முதல் படத்தில் ராஜா

        இதே 1953ல் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தியுடன் இணையும் முன்பே இசை அமைத்த முதல் படம் ஜெனோவா வெளிவந்தது. படத்தில் ராஜாவிற்கு குறைந்தது நான்கு பாடல்கள். சுரதாவின் வரிகளும், லீலாவின் குரலும், ராஜாவுடன் இணைந்த பாடல். ‘கண்ணுக்குள் மின்னல் காட்டும் தெய்வ காதல்.‘ (ஜெனோவாவிற்கு இசை அமைத்தவர்கள் பற்றிய குறிப்பு, விஸ்வநாதன் – ராமமூர்த்தி மீதான கட்டுரையில் காணலாம்). கலைஞர் மு. கருணாநிதியின கதை வசனத்தில் எம்.ஜி.ஆர். குத்துச் சண்டை வீரராக நடித்த படம், நாம் (1953). ஜூபிடருக்காக மேகலா பிக்சர்ஸ் தயாரித்தது. இதில் கலைஞரின் பாடல் வரிகளுக்கு அவரது மைத்துனர் சி.எஸ். ஜெயராமன் இசை அமைக்க, ஏ.எம்.ராஜா – ஜிக்கி பாடினார்கள்: ‘பேசும் யாழே பெண் மானே – வீசும் தென்றல் நீதானே‘. எம்.ஜி.ஆர். –வி.என்.ஜானகி பாடுவதாக அமைந்த பாடல் இது. மு.க.வின் கற்பனையில் உதித்த பாடல் என்பதற்கு பேசும் யாழேவில் கொஞ்சம் தர்க்கமும் உண்டு --- ‘யாழே நான் என்றால் நாதம் நீ தானே‘ என்றாள் தலைவி. அதை ஏற்கமாட்டான் தலைவன் – ‘நாதத்தில் பேதம் உண்டு, நமக்கது வேண்டாமே‘ ..என்பான்! சட்டசபை விவாதம்போல் இதுவுமொரு சர்ச்சை போலும். ராஜாவின் பாட்டு வழக்கம்போல் அனாயாசமாகச் செல்லும். ‘பெண்‘ என்பது மட்டும் ‘பென்‘ என்று ஒலிக்கும். ஒரு சுழி குறைந்ததால் பொருள் விபரீதமாகிவிடவில்லை.

பாடல் தரும் நீரலைகள் பார்

        காமாந்தகாரனாக நடிகர் திலகம் நடித்த படம் திரும்பிப்பார் (1953). மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய படத்திற்கு இசை அமைத்தவர் ஜி. ராமநாதன். இந்தப் படத்தில் கானாம்ருதமாய் பொழியும் ஒரு பாடல், ‘கன்னியரின் வெள்ளை மனம் போல், காதல்தரும் நீரலைகள் பார்‘. கண்ணதாசனின் கபடமில்லாத வரிகளை, குளிர்ந்த நீரலைகளாய் வழங்கும் குரல்கள்: ராஜா – கே.ராணி.

சின்ன சின்ன வீடு கட்டி: ஒரு சின்ன கதை

       மருமகள் (1953) படத்தில் ‘சின்ன சின்ன வீடு கட்டி‘ எனறு அமைதியும் இனிமையும் நிறைந்த ஒரு பாடல். பழம்பெரும் நடிகையும் பாடகியுமான பி.ஏ. பெரியநாயகியும் ராஜாவும் இணையும் பாடல் இது. பெரியநாயகியின் குரல் பழங்காலதது வெண்கல சாரீரம். ராஜாவின் குரலோ சங்கீத சாமரம். இருந்தும் இந்த இணைவில் ஒரு சுகம்! இந்தப் பாடலுக்குப் பின்னணியாக ஒரு சின்ன கதை. இசை மேதை சி. ஆர். சுப்பராமனின் இசையில் ஒரு பழம் பெரும் பாடகர் இந்தப் பாடலை பாடவிருந்தார். ஆனால், அவரது உச்சரிப்பில் பாடலின் முதல் இரண்டு வரியில் ‘கட்டி‘ என்பது ‘கட்சி‘ என்று ஒலித்ததாம். ஏ.எம்.ராஜாவைப் பாட வைக்கலாம் என்று சுப்பராமன் எண்ணினார். “பாடுபவர் என்னை விடத் தெளிவாகப் பாடினால்தான் ஒப்புக் கொள்வேன். இல்லை என்றால் நானே பாடுவேன்,‘ என்றார் அந்தப் பழம் பெரும் பாடகர். ராஜா வந்தார். அட்சர சுத்தமாகப் பாடினார். பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொண்ட முதல் பாடகரின் அனுமதியுடன் ராஜா பெரியநாயகிக் குரல்களில் சின்னச் சின்ன வீடு கட்டி பாடல் பதிவானது. மறைமுக வார்த்தைகள் எதற்கு? சி.எஸ். ஜெயராமன் ஒரு எழுத்தை உச்சரிப்பதில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்திருக்கலாம். ஆனால் அவரும் பெரியநாயகியும் இணைந்து அந்தப் பாடலைப் பாடியிருந்தாலும் நன்றாகவே இருந்திருக்கும் என்பதுதான் என் அபிப்பிராயம்.

ராஜா – ஜிக்கிக்கு ராஜ்கபூர் அழைப்பு

        ராஜாவிற்கு 1953ல் நல்ல பாடல்களைத் தந்த இன்னொரு படம் அன்பு. டி.ஆர்.பாப்பாவின் இசை அமைப்பில் சிவாஜி கணேசனுக்கு ராஜா குரல் கொடுத்த இந்தப் படத்தில், ராஜாவிற்குப் பலவிதமான பாடல்கள். இவற்றுள் 45 வயதாகியும் இளமை குன்றாத ஒரு பாடல் ‘எண்ண எண்ண இன்பமே, வாழ்வினில் என்னாளும்‘ பாடியவர்கள் ராஜா – ஜிக்கி. அன்பு வந்த ஆண்டிலேயே இந்தப் பாட்டு ஜோடிக்கு அகில இந்திய அழைபபு வந்தது. அழைப்பு விடுத்தவர் ராஜ்கபூர். தமிழிலும தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வந்த தன்னுடைய ஆஹ் படத்திற்கு இரண்டு மொழியிலும் பாட ராஜா – ஜிக்கியை அவர் தேர்ந்தெடுத்தார். சங்கர் – ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூர் – நர்கீஸ் ஜோடிக்கு இந்தியில் முகேஷும், லதாவும் பாடினார்கள். பம்பாய்க்குப் பறந்து சென்று ராஜாவும் ஜிக்கியும் அதே பாடல்களை தமிழ் / தெலுங்கில் பாடினார்கள்.

கம்பதாசனின் காவிய வீச்சுக்கள்

         உதட்டசைப்பிற்கும், மெட்டிற்கும் தக்கபடி அமைய வேண்டிய பாடல் வரிகள் என்றாலும், கம்பதாசன் பாடல்களில் காவிய வீச்சு தெரிந்தது. சங்கர் ஜெய்கிஷனின் மெட்டுக்களில் அழகுக்கு அழகு செய்வது போன்ற பாடல்கள். ‘அன்பே வா, அழைக்கின்ற தெந்தன் மூச்சே‘ (ராஜா-ஜிக்கி), ‘கண்காணாததும் மனம் கண்டுவிடும்‘ (ராஜா – ஜிக்கி), ‘மின்னல் போல் ஆகும் இந்த வாழ்க்கையே வானவில் போலும், இளமை ஆனதே ஆம்‘ (ராஜா)...இத்யாதி. (கம்பதாசன் புனைந்த இந்தப் பாடல்களை எழுதியவர் ‘மினு கத்ரக்‘ என்கிறது ‘ஆசையினாலே மனம்‘ என்ற தலைப்பில் எச்.எம்.வி. நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒலிநாடா தொகுப்பு. மினு கத்ரக், இந்தப் பாடல்களை பம்பாயில் ஒலிப்பதிவு செய்த வடநாட்டு சௌன்ட் இன்ஜினீயர் (ஒலிப்பதிவு பொறியாளர்) என்று தெரிகிறது. இவரைப் பாடலாசிரியர் என்று எப்படிக் குறிப்பிட்டார்கள் என்று புரியவில்லை.)

புது வீடு வந்த நேரம்

       வாய்ப்புகளும் வளமும் குவிந்த காலத்தில் ராஜா ஊதாரித்தனமாக நடக்கவில்லை. சென்னை ஜி.என். செட்டி சாலையில் மேற்கே, சின்னையா தெருவில் தனக்கொரு பங்களா கட்டிக் கொண்டார். ‘A.M Rajah. B.A.’ என்ற பெயர் பலகையுடன் அமைந்த வீட்டின் பெயர் ‘லட்சுமி இல்லம்.‘ ராஜாவின் தாயார் பெயர் லக்ஷமம்மா. பேசும் படம் சினிமா பத்திரிகையின் 1953க்கான சிறந்த பின்னணிப் பாடர் விருது ராஜாவிற்கு வழங்கப்பட்டது. (1952ல் அது சி. எஸ். ஜெயராமனுக்கு அளிக்கப்பட்டிருந்தது). “சென்ற வருஷத்தின் படங்க்ள் பலவற்றிலும் பின்னணியில் பாடியிருக்கிறார் ஏ.எம்.ராஜா. அவரது குரலினிமை ரசிகர்களை வெகுதூரம் கவர்ந்திருக்கிறது. ஆகவே அவரைச் சிறந்த பின்னணிப் பாடகர் என்று தேர்ந்தெடுத்து கௌரவிக்கிறோம்“ என்கிறது பேசும் படம். தமிழ்த் திரையின் தலைசிறந்த பின்னணிப் பாடகர் என்ற பெயருடன் முன்னேறிய ஏ.எம்.ராஜாவை, 1954லும் பல வெற்றிப் பாடல்கள் எதிர்கொண்டு அழைத்தன. மனோகரா, ரத்தபாசம், எதிர்பாராதது, இல்லற ஜோதி என்று ராஜாவின் மென்மையான குரலால் மெருகேறிய பாடல்கள் பல. ‘சிங்கார பைங்கிளியே பேசு, செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு‘ என்ற உடுமலை நாராயண கவியின் வரிகளை முதுபெரும் இசைஅமைப்பாளர் எஸ்.வி. வெங்கடராமனின் இசையில் ராஜாவும், ஆர் ஜெயலட்சுமியும் பாடினார்கள். பணம் படுத்தும் பாடு படத்தில் சோகம் இழையோடு ஒரு சிரஞ்சீவி காதல் பாடல் ‘என் நெஞ்சின் பிரேம கீதம் இரு கண்ணில் காணுவாயே‘. ஓர் அழகான காதல் கீதம் இது.

பொற்சிலையை சிற்பி எப்படி செதுக்குவான்?

          எதிர்பாராதது படத்தில் காதல் வேதனையைக் கனிந்து சொல்லும் பாடல் – ‘சிற்பி செதுக்காத பொற்சிலையே‘. சி.என். பாண்டுரங்கம் இசை. கவிஞர் காமாட்சிசுந்தரத்தின் பாடல். ராஜாவின் ரம்மியமான ராகம். இந்தப் பாடல் உருவாக்கப்படும் போது படத்தின் பாகஸ்தர்களில் ஜி. உமாபதி ஒருவர். ‘பொற்சிலையை சிற்பி எப்படி செதுக்குவான்...கற்சிலையே என்று மாற்றுங்கள்‘ என்றாராம் உமாபதி. கவிஞர் காமாட்சி, கதை வசனகர்த்தா ஸ்ரீதர்...போன்றோர் இதை ஏற்கவில்லை. கோபித்துக் கொண்ட உமாபதி படத்தயாரிப்பிலிருந்து விலகிக்கொண்டார். கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். கவிதை, இசை போன்றவற்றில் சொல்லின் பொருள் ஒரு சட்டத்திற்குள் அடங்கும் படமல்ல. எல்லைகளை மீறுவதுதான் கலை. அடுத்த ஆண்டு பல மாபெரும் திருப்பங்களைக் கொண்டு வந்தது. எம்.ஜி.ஆருக்காக குலேபகாவலியில் ராஜா இசைத்த காதல் கீதம். ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ‘ மிகப் பெரிய அளவில் வெற்றி கண்டது. இனிமையான பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்தப் பாடல், ராகத்தில் ராஜா – ஜிக்கி குரல்களில் ஒலிக்கும் ஒரு நாத ஜாலம். மெட்டமைப்பு கே.வி.மகாதேவன். (விஸ்வநாதன் – ராமமூர்த்தி தெரிவித்த தகவல்). இப்படி திரை உலகில் நடந்துவிடுவது உண்டு. வெளியே தெரிவிப்பவர்கள் குறைவு. தெலுங்குத் திரையிசையில் பல சரித்திரங்கள் படைத்த எஸ். ராஜேஸ்வர ராவின் இசையில் விஜயாவின் மிஸ்ஸியம்மா வெளி வந்தது.
நன்றி - விக்கிபீடியா ,  லஷ்மன் ஸ்ருதி ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக