நடிகை மஞ்சுளா விஜயகுமார் நினைவு தினம் ஜூலை 23, 2013.
மஞ்சுளா விஜயகுமார் (செப்டம்பர் 9, 1953 - சூலை 23, 2013) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் , தெலுங்கு,
கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா , சிறீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
நடிப்பு
மஞ்சுளா முதன் முதலில் 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார். 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆருடன் இணைந்து
ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் பல படங்களில் சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் , என். டி. ராமராவ் , கமல்ஹாசன் ,
விஸ்ணுவர்தன் , ரஜனிகாந்த் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார். 2013 சூலை 23 இல் இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.
தூக்கம் கலைத்த மஞ்சுளா தூங்கிப்போனார்!
‘‘பொதுவாக இரண்டு ஹீரோயின்கள் சேர்ந்து நடிக்கும்போது மனசுக்குள் ஈகோ எட்டிப் பார்க்கும். ஆனால் நானும் மஞ்சுளாவும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘நேற்று இன்று நாளை’ என மூன்று படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தபோதும் ஒரு நாள்கூட போட்டி, பொறாமைகளுக்கு இடம் கொடுத்ததில்லை. எங்களுக்குள் நல்ல நட்புறவு இருந்தது. தொடர்ந்தது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் மஞ்சுளா துறுதுறுவென பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு எதிர்ப்பதமாக நான் ரொம்ப அமைதி. எதையும் வெளிப்படையாகப் பேசுவார். நன்றாக பரதம் ஆடக்கூடியவர். நானும் அவரும் தண்டாயுதபாணி பிள்ளை மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டோம். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளை இட்டவன் நீதான்...’ என்ற போட்டிப் பாடலில் நானும் மஞ்சுளாவும் ஆடினோம். அதைப் பார்த்து, ‘ரெண்டு பேருமே பிரமாதமா ஆடுனீங்க’ என்று எம்.ஜி.ஆரே பாராட்டினார்.
1971ல் தொடங்கி, 1975 வரை ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘இதயவீணை’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘நேற்று இன்று நாளை’ என அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். அதே காலகட்டத்தில் நானும் எம்.ஜி.ஆர் ஜோடியாக ஆறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். இதில்கூட எங்களிடையே ஒற்றுமை இருக்கிறது.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றிருந்தபோது இருவரும் ஒரே அறையில்தான் தங்கினோம். ஒருநாள் காலை 6 மணிக்கெல்லாம் மேக்கப் போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று முதல் நாள் இரவே தகவல் சொல்லியிருந்தார்கள். நல்ல தூக்கத்தில் இருந்தபோது மஞ்சுளா என்னைத் தட்டி எழுப்பினார். ‘மேக்கப் போட லேட் ஆகிடுச்சு... இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க. சீக்கிரமா எழுந்து ரெடியாகு’ என்று அவர் சொல்ல, அரக்கப் பரக்க குளித்து முடித்து மணியைப் பார்த்தால், அப்போதுதான் நள்ளிரவு 12.30 ஆகுது.
‘என்ன மஞ்சு இப்படி பண்ணிட்டீங்களே’ என்று கேட்டால், ‘தூக்கத்தில் மணி பாக்கலை’ என்று கூலாகச் சொன்னார். மொத்த ஹோட்டலுக்கே கேட்கும்படி நாங்கள் சத்தமாகச் சிரித்தோம். அன்று என்னை எழுப்பிய மஞ்சுளா, இப்போ நிரந்தரமா தூங்கப் போயிட்டதை நினைச்சா மனசு பாரமா இருக்கு!’’ நன்றி விக்கிப்பீடியா. குங்குமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக