இயக்குநர் ரா. கிருஷ்ணன் பிறந்த தினம் ஜூலை 18 , 1909.
கிருஷ்ணன்-பஞ்சு ஓர் இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்கள் ஆவர். ரா. கிருஷ்ணன் (1909–1997) மற்றும் சா. பஞ்சு (1915–1984) ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ணன்-பஞ்சு என்ற பெயரில் 50இற்கும் மேற்பட்ட தமிழ் ,
தெலுங்கு , இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியிருந்தனர்.
ரா. கிருஷ்ணன்
பிறப்பு சூலை 18 , 1909
மதராசு (தற்போதைய சென்னை ), மதராசு மாகாணம்
இறப்பு 17 சூலை 1997 (அகவை 87)
சென்னை , தமிழ்நாடு , இந்தியா
பணி படத்தொகுப்பாளர் , இயக்குநர் ,
தயாரிப்பாளர் , எழுத்தாசிரியர்
செயல்பட்ட
ஆண்டுகள் 1944-1997
பிள்ளைகள் கஸ்தூரி, லலிதா, சந்திரமோகன், முரளி, மதுரம், மனோகர், உளாஸ், சிவாஜி, பராசக்தி, கே. சுபாஷ்
சா. பஞ்சு
பிறப்பு சனவரி 24 , 1915
உமையாள்புரம் , கும்பகோணம், தமிழ்நாடு
இறப்பு 6 ஏப்ரல் 1984 (அகவை 69)
சென்னை , தமிழ்நாடு , இந்தியா
மற்ற பெயர்கள் பஞ்சாபி
பணி படத்தொகுப்பாளர் , இயக்குநர் ,
தயாரிப்பாளர் , எழுத்தாசிரியர்
செயல்பட்ட
ஆண்டுகள் 1944–1984
வாழ்க்கைக் குறிப்பு
தொடக்ககால வாழ்க்கை
ரா. கிருஷ்ணன் 1909 சூலை 18 அன்று
தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். தொடக்கத்தில், கோவையில் செயல்பட்டு வந்த பக்சிராஜா ஸ்டுடியோவில் (அப்போதைய கந்தன் ஸ்டுடியோ ) பணியாற்றினார்.
சா. பஞ்சு 1915 சனவரி 24 அன்று
தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகிலுள்ள
உமையாள்புரத்தில் பிறந்தார். தொடக்கத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும், எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.
மறைவு
1984 ஏப்ரல் 6 அன்று சா. பஞ்சு தனது 69 ஆவது வயதில் சென்னையில் காலமானார். பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காதிருந்த ரா. கிருஷ்ணன், 1997 சூலை 17 அன்று தனது 87 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி தயாரிப்பு குறிப்புகள்
1944 பூம்பாவை தமிழ் லியோ பிக்சர்சு
1947 பங்கஜவல்லி தமிழ் தமிழ்நாடு டாக்கீஸ்
1947 பைத்தியக்காரன் தமிழ் என். எசு. கே. பிக்சர்சு எம். ஜி. இராமச்சந்திரன் துணை வேடத்தில் நடித்த திரைப்படம்
1949 ரத்தினகுமார் தமிழ் முருகன் டாக்கீஸ்
1949 நல்ல தம்பி தமிழ் என்.எசு.கே. பிலிம்சு, உமா பிக்சர்சு கா. ந. அண்ணாதுரை திரைக்கதை ஆசிரியராக அறிமுகமான திரைப்படம்
1952 பராசக்தி தமிழ் நேசனல் பிக்சர்சு சிவாஜி கணேசன் அறிமுகமான திரைப்படம்
1953 கண்கள் தமிழ் மோசன் பிக்சர்சு குழு
1954 ரத்தக்கண்ணீர் தமிழ் நேசனல் பிக்சர்சு
1955 சந்தா சகு கன்னடம்
1956 குலதெய்வம் தமிழ்
1957 புதையல் தமிழ் கமல் சகோதரர்கள்
1957 பாபி இந்தி ஏவிஎம் தயாரிப்பகம் குலதெய்வம் தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கம்
1958 மாமியார் மெச்சின மருமகள் தமிழ்
1959 பர்க்கா இந்தி ஏவிஎம் தயாரிப்பகம்
1960 திலகம் மலையாளம்
1960 தெய்வப்பிறவி தமிழ்
1960 பிந்த்யா இந்தி தெய்வப்பிறவி தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கம்
1961 சுகா சிந்தூர் இந்தி
1962 சாதி இந்தி
1962 மேன் மௌஜி இந்தி ஏவிஎம் தயாரிப்பகம்
1963 குங்குமம் தமிழ் ராசாமணி பிக்சர்சு
1964 வாழ்க்கை வாழ்வதற்கே தமிழ் கமல் சகோதரர்கள்
1964 சர்வர் சுந்தரம் தமிழ் ஏவிஎம் தயாரிப்பகம்
1964 மேரா குசார் கியா கை இந்தி
1965 குழந்தையும் தெய்வமும் தமிழ் ஏவிஎம் தயாரிப்பகம்
1966 பெற்றால்தான் பிள்ளையா தமிழ்
1966 லேத மனசுலு தெலுங்கு ஏவிஎம் தயாரிப்பகம்
1966 லாலா இந்தி அன்னை திரைப்படத்தின் மறுஆக்கம்
1968 டு கலியான் இந்தி ஏவிஎம் தயாரிப்பகம் குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தின் மறுஆக்கம்
1968 உயர்ந்த மனிதன் தமிழ்
1969 அன்னையும் பிதாவும் தமிழ்
1970 எங்கள் தங்கம் தமிழ்
1970 அனாதை ஆனந்தன் தமிழ்
1971 மெயின் சுந்தர் கூன் இந்தி சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் மறுஆக்கம்
1972 பிள்ளையோ பிள்ளை தமிழ்
1972 இதய வீணை தமிழ்
1972 அக்கா தம்முடு தெலுங்கு ஏவிஎம் தயாரிப்பகம்
1973 பூக்காரி தமிழ்
1974 சமையல்காரன் தமிழ் பவார்ச்சி திரைப்படத்தின் மறுஆக்கம்
1974 சந்தார்
1974 பத்து மாத பந்தம் தமிழ்
1974 கலியுக கண்ணன் தமிழ்
1975 வாழ்ந்து காட்டுகிறேன் தமிழ்
1975 காசுமீர் பல்லோடு தெலுங்கு
1975 அணையா விளக்கு தமிழ்
1976 வாழ்வு என் பக்கம் தமிழ்
1976 இளைய தலைமுறை தமிழ்
1976 என்ன தவம் செய்தேன் தமிழ்
1977 சொன்னதைச் செய்வேன் தமிழ்
1977 சக்கரவர்த்தி
1978 பேர் சொல்ல ஒரு பிள்ளை தமிழ்
1978 அண்ணபூரணி
1979 வெள்ளி ரதம் தமிழ்
1979 நீலமலர்கள் தமிழ்
1979 நாடகமே உலகம் தமிழ்
1980 மங்கல நாயகி
1985 மலரும் நினைவுகள் தமிழ்.
உடன் பிறவாத இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சு!
தமிழ்த்திரையுலகில் கிருஷ்ணன் - பஞ்சு சகாப்தம் ஒரு தனித்துவம் வாய்ந்தது. அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில் சமுதாய நோக்கத்தோடு வார்த்தெடுக்கப்பட்ட கதைகள், பொருள் பொதிந்த வசனங்கள், காதிற்கினிய கானங்கள் இருப்பது நிச்சயம்.
கிருஷ்ணனின் பூர்வீகம் தஞ்சாவூர். தந்தை ராகவேந்திரன். தாய் காமாட்சி பாய். மராட்டிய சமூகத்தை சேர்ந்தவர்கள்.
ரெயில்வேயில் அக்கவுண்டராகவும் காண்ட்ராக்டராகவும் இருந்த ராகவேந்திரன், மனைவியுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். சென்னையில் தான் இத்தம்பதியாருக்கு தலைப்பிள்ளையாக கிருஷ்ணன் 1911-ம் ஆண்டு பிறந்தார். கிருஷ்ணனுக்கு அடுத்து பிறந்தவர்கள் திருமலை, பட்டு என்ற இரு பிள்ளைகள்.
கிருஷ்ணன் காலத்தில் பேசும் படங்கள் கிடையாது. ஊமைப்படங்கள் பார்ப்பதே பாக்கியம் என்று மக்கள் நினைத்த காலம். கிருஷ்ணனுக்கு சினிமா பார்ப்பதில் அலாதிபிரியம். ஊமைப்படங் களையே பார்த்து ரசித்தார். அதேசமயம் கல்வி முக்கியமானதால், சென்னை கிருத்துவக்கல்லூரியில் படித்தார். படித்த படிப்பிற்கு பின்னர் பலன் கிடைத்தது.
தந்தையைப் போல் கிருஷ்ணனுக்கு ரெயில்வேயில் உத்தியோகம் கிடைத்தது.
நினைவுத்திரையில் சினிமா நிழலாடிக் கொண்டிருந்ததால், உத்தியோகம் பாகற்காயாய் கசந்தது. நாட்கள் ஆமையாக நகர்ந்தன. 1933-ம் ஆண்டுவரை இந்த மனத்தள்ளாட்டம் தொடர்ந்தது. இப்போது திரைப்படங்கள் பேச ஆரம்பித்துவிட்டன. கிருஷ்ணனின் எண்ணம் முழுவதும் சினிமாவின் பக்கம் திரும்பியது. இந்த சமயத்தில் கிருஷ்ணனுக்கு கேரள மாநிலத்திலுள்ள கொச்சிக்கு உத்தியோகம் மாற்றலாகி விட்டது.
ராஜினாமா
வெளியூர் சென்று வேலை பார்க்க விரும்பாத கிருஷ்ணன், வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
ராகவேந்திரரும் மகனின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை. சென்னையில் அந்த காலத்தில் பிரபலமான தியேட்டர்களில் ஒன்று பிரபாத். பிரபாத் டாக்கீசை சேர்ந்த கண்ணபிரான் என்பவர் ராகவேந்திரர் குடும்ப நண்பர். கண்ணபிரான் திரையுலகில் நல்ல செல்வாக்கு உடையவர். தன் குடும்ப நண்பனின் மூத்த குமாரன் வேலையில்லாதிருப்பதையும் திரைப்பட உலகில் பணியாற்ற விரும்புவதையும் அறிந்த கண்ணபிரான் ஒரு சிபாரிசு கடிதம் கொடுத்து வேல் பிக்சர்ஸ் நிறுவனத்தாரிடம் அனுப்பினார்.
வேல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர், கிருஷ்ணனை ஸ்டூடியோ லேபாரட்டரியில் சேர்த்துவிட்டார். பிரபல சினிமா அறிவுஜீவி ராம்நாத்தின் பொறுப்பில் தான் லேபாரட்டரி இருந்தது. ராம்நாத் தொடர்பு, கிருஷ்ணனின் பட்டறிவை வளர்த்துக் கொள்ள பயனுள்ளதாக இருந்தது.
ஆனால் தொடர்பு நீடிக்கவில்லை. ஸ்டூடியோவிலிருந்து ராம்நாத் விலகிக் கொண்டார். அப்போது வேல் பிக்சர்சார் வி.என்.சுந்தரம், எம்.எஸ்.கண்ணாபாய் ஆகியோரை கொண்டு 'மார்கண்டேயா' என்ற திரைப்படத்தை முருதாசா இயக்கத்தில் எடுத்து முடித்தனர்.
லேபாரட்டரி வேலையில் நல்ல பயிற்சி பெற்றிருந்த கிருஷ்ணன் 'மார்கண்டேயா'வின் பிரதிகளை அவரே தயாரித்து அளித்தார். இது நடந்தது 1935-ம் ஆண்டு.
கோவையில் சினிமா ருசி அறிந்த ஒருவர் மருதாசலம் செட்டியார். கோவையில் பிரிமியர் சினிடோன் என்ற சினிமா ஸ்டூடியோவை ஆரம்பித்தார். கிருஷ்ணனின் திறமையை அறிந்த செட்டியார் தனது புதிய ஸ்டூடியோவில் லேபாரட்டரி பொறுப்பாளராகப் பணிபுரியுமாறு கிருஷ்ணனை கேட்டுக் கொண்டார்.
புதிய இடம் என்பதால் சற்று தயக்கத்துடன் இந்த வேலையை கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். இங்கு தான் ஒட்டிப்பிறக்காத இரட்டையரை சந்திக்க போகிறோம் என்பதை கிருஷ்ணன் அப்போது தெரிந்து கொள்ளவில்லை. அப்படி விடிவெள்ளியாக வந்த நபர் யார்? பஞ்சு தான்! அவரைப் பற்றி சுருக்கம்:
பஞ்சுவும் தஞ்சாவூரைச் சேர்ந்தவரே. தஞ்சை மாவட்டம் உமையாள்புரத்தில் பி.சுப்பிரமணியம் - சுப்புலட்சுமி தம்பதிகளின் மகன். 1915-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி பஞ்சு பிறந்தார்.
பஞ்சு ஒரு பிராமணர். பெற்றோருக்கு ஒரே பிள்ளை. பஞ்சாபகேசன் என்பது முழுப்பெயர். பிள்ளை செல்வமாக வளர்ந்தது. பிறப்பிலேயே பஞ்சு முன்கோபி. பிள்ளை பிறப்பிலேயே பெற்றோரின் செல்லமானது அதை தூபமிட்டு வளர்த்துவிட்டது.
ஆனால் பிள்ளையிடம் பண்புக்கு பஞ்சமில்லை. துரதிஷ்டவசமாக பஞ்சுவின் தந்தை, பஞ்சுவுக்கு மூன்று வயதாகும் போதே காலமாகிவிட்டார். பின்னர் சுப்புலட்சுமி அம்மாள் குழந்தை
பஞ்சுவுடன் தன் தாத்தா வீட்டில் தஞ்சம் புகுந்தார்.
பள்ளிப்பருவம் வந்த நேரம் படிப்புக்காக பஞ்சு பெரம்பூரிலிருந்த தன் தாய் மாமனிடம் வந்து சேர்ந்தார். பெரம்பூரில் ஸி.ஸி.ஸி. உயர்நிலைப்பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி தேறினார். பின் பட்டப்படிப்பிற்காக பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து சில மாதங்கள் மட்டுமே படித்தார். பிறகு வேலை தேடும் அவசியம் பஞ்சுவுக்கு ஏற்பட்டது.
சென்னையில் வஜ்ஜிரவேல் முதலியார் 'எஸன்ஸ்' கம்பெனியில் அவருக்கு வேலை கிடைத்தது. வஜ்ஜிரவேல் முதலியார் எஸன்ஸ் கம்பெனி, சென்னை வால்டாக்கீஸ் ரோட்டில் அக்கால பிரபலமான ஒற்றவடை நாடகக் கொட்டகையின் எதிரே அமைந்திருந்தது. நாடக வாசனை சினிமா வாசனையாக வஜ்ஜிரவேல் மனதில் மலர்ந்தது.
எனவே வேலூரில் 'சந்திரபாரதி சினிடோன்' என்ற ஸ்டூடியோவை தொடங்கி 'சதி அகல்யா' என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தை பி.வி.சேஷய்யா என்பவர் இயக்கினார். இப்படத்தில் தான் முதல்முறையாக பஞ்சு உதவி இயக்குனராக பணியாற்றினார். இது நடந்தது 1933-ம் ஆண்டு. படவேலை முடிந்தது. அடுத்த வேலை? இப்போது பஞ்சுவின் தொழிலில் ஒரு விநோத முடிச்சு வீழ்ந்தது. ஏற்கனவே கிருஷ்ணனுக்கு வழிகாட்டிய பிரபாத் கண்ணபிரான், பஞ்சுவுக்கும் ஆதரவாக இருந்தார். பஞ்சு, கண்ணபிரான் முன் வந்து நின்றார். பஞ்சுவுக்கு வாழவழிகாட்ட வேண்டிய பொறுப்பு கண்ணபிரானுக்கு இருந்தது.
சதிலீலாவதி
ஏற்கனவே கோவை மருதாசலம் செட்டியார் ஒரு படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது தெரிந்ததே. இப்போது மருதாசலம் செட்டியார் தன்னுடன் நான்கு பங்குதாரர்கள் சேர்த்துக்கொண்டு மனோரமா பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பின் பெயரில் ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசன் எழுதிய 'சதிலீலாவதி'யை திரைப்படமாக்க திட்டமிட்டார்.
இப்படத்தை எம்.எல்.டான்டன் டைரக்ட் செய்வதாயிருந்தது. ஆனால் அவர் ஹாலிவுட் சென்றுவிட்டார். எனவே புதிய இயக்குனரை தேடவேண்டியிருந்தது. அப்போது 'டுவண்டீத் செஞ்சுரி பிக்சர்ஸ்' கம்பெனியின் கேமராமேனாக இந்தியாவிலிருந்த எல்லீஸ் ஆர்.டங்கன் படத்திற்கு இயக்குனராக அமர்த்தப்பட்டார். இந்நிலையில் பஞ்சுவை டங்கனிடம் சேர்த்துவிட்டார் கண்ணபிரான். தமிழ் தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த டங்கனுக்கு பஞ்சுவின் வருகை வரப்பிரசாதமாக இருந்தது.
நிகழ்வுகளை டங்கன் ஆங்கிலத்தில் விளக்கிக் கூற, கதை, திரைக்கதை, வசனம் போன்ற எல்லாத்துறைகளிலும் தமிழ் - ஆங்கில பரிவர்த்தனைகளை பஞ்சு சிறப்பாக செய்து டங்கனின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார்.
சந்திப்பு
ஏற்கனவே மருதாசலம் செட்டியாரின் லேபாரட்டரி பொறுப்பேற்றிருந்த கிருஷ்ணன் டங்கனுடன் ஒல்லியான ஒரு இளைஞனைப் பார்த்தார். அவன் தான் டங்கனுடைய 'கன்டின்யூடி அஸிஸ்டென்ட்' 'பஞ்சு' என்று சுருக்கி அழைக்கப்படும் பஞ்சாபகேசன் என்பதை கிருஷ்ணன் தெரிந்து கொண்டார்.
இது இருவர் வாழ்விலும் முக்கியமான தினமானதால் அவர்கள் சந்தித்த 1-2-1934-ந் தேதி முக்கியத்துவமாகக் குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணனும் பஞ்சுவும் ஈருடல் ஓர் உயிராயினர். இருவருடைய ஆர்வமும் திறனும் அவர்கள் நட்புக்கு வலுசேர்த்தது.
டங்கனின் இயக்கத்தில் ‘சதிலீலாவதி’யைத் தவிர, ‘சீமந்தினி’, ‘அம்பிகாபதி’, ‘இருசகோதரர்கள்’ போன்ற படங்களுக்கெல்லாம் பஞ்சு உதவியாளராக இருந்து பின் டங்கனிடமிருந்து விலகினார்.
கிருஷ்ணனோ, தன் நண்பர் பஞ்சுவை இயக்குனராக முயற்சிக்கும் படி அறிவுறுத்தினார். அம்முயற்சியில் அவருக்கு துணைநின்றார்.
பிறகு பஞ்சு மருதாசலம் செட்டியாரின் அழைப்பின் பேரில் டி.கே.எஸ். பிரதர்ஸ் - மூர்த்தி பிலிம்ஸ் இணைந்து கந்தன் ஸ்டூடியோவில் தயாரித்த 'குமாஸ்தாவின் பெண்' என்ற படத்திற்கு பி.என்.ராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். பின் அந்த ஸ்டூடியோவில் எடிட்டராக சேர்ந்துவிட்டார்.
கிருஷ்ணன் ஏற்கனவே அங்கு ஸ்டூடியோ லேபாரட்டரி பொறுப்பிலிருந்தார். இப்படி நண்பர்கள் இருவரும் ஒரே ஸ்டூடியோவில் பணியாற்றும் சந்தர்ப்பம் நிகழ்ந்தது. இது நடந்தது 1942-ம் ஆண்டு.
ஆராய்ச்சி மணி
கந்தன் கம்பெனியின் அடுத்த படம் மனுநீதி சோழனைப் பற்றியது. படத்தின் பெயர் 'ஆராய்ச்சி மணி'. இயக்குனர்: ராஜா சாண்டோ.
படத்தின் உச்சகட்ட காட்சியில், ஆராய்ச்சி மணியை மாடு அடிக்கும் காட்சியை படமாக்க வேண்டும். எவ்வளவு பயிற்சி அளித்தும் மாடு மணியை முட்டி அடிக்கவேயில்லை! ராஜா சாண்டோ பலமுறை முயன்றும் தோல்வியுற்று தளர்ந்து போனார். அருகிலிருந்த கிருஷ்ணன் - பஞ்சு, 'கந்தன் பணம் கரிகரியாய்ப் போகிறது' என்று கிண்டலாக சொல்ல இது ராஜாவின் காதுக்கு எட்டியது. உடனே ராஜா சாண்டோ நண்பர்களை அழைத்து, 'டேய் பசங்களா! கிண்டலா அடிக்கிறீர்கள்! இந்த காட்சியை நீங்கள் படமெடுங்கள் பார்க்கலாம்' என்றார்.
கிருஷ்ணனும் - பஞ்சுவும் ராஜா சாண்டோவின் கட்டளையை பணிவோடு ஏற்றுக்கொண்டு வேலையில் இறங்கினர்.
ஒரு மிருக வைத்தியரிடம் பசுவையும் அதன் கன்றையும் காட்டினர். படப்பிடிப்பின் போது கன்றுக்குட்டிக்கு மயக்கமருந்து கொடுத்து அது மயங்கி விழுந்து கிடந்தது.
தாய்ப்பசு கன்றின் அருகில் சென்று 'ம்மா' என்று சோகத்தோடு குரல் கொடுத்தது. மயங்கிய கன்றை நக்கிப் பார்த்து இங்கும் அங்குமாக ஓடித்தவித்தது. பசுவை நிற்கவைத்து ஒரு குளோஸப் எடுக்கப்பட்டது. மணியை பசுவின் கொம்பினால் தள்ளி முட்டச்செய்து அதையே எதிர்புறமாக (க்ஷீமீஸ்மீக்ஷீsமீ sலீஷீt) படமாக்கப்பட்டது. எடுத்த படத்தை போட்டுப் பார்த்தபோது பசு உக்கிரத்தோடு மணி அடிக்கும் காட்சி அற்புதமாக பதிவாகியிருந்தது. மயங்கிய கன்றைக் கண்ட பசு கண்ணீர் விட்ட காட்சியும் பதிவாகி அந்த கட்டத்தின் சிறப்பை உயர்த்தியது.
கிருஷ்ணன் - பஞ்சுவை ராஜா சாண்டோ பாராட்டினார். விநியோகஸ்தர்களும் பாராட்டினர். மகிழ்ச்சியில் மிதந்த ராஜா சாண்டோ, 'டேய் பசங்களா! நீங்கள் ரெண்டு பேருந்தாண்டா அடுத்த படத்திற்கு இயக்குனர்கள்!' என்று கூக்குரலிட கிருஷ்ணன் - பஞ்சுவுக்கு நல்ல காலம் பிறந்தது!
பூம்பாவை
ராஜா சாண்டோ சொன்ன வாக்கைக் காப்பாற்றினார். அடுத்து லியோ பிலிம்ஸாரின் 'பூம்பாவை' படத்திற்கு கிருஷ்ணன் - பஞ்சுவை இயக்குனர்களாக சிபாரிசு செய்தார்.
நண்பர்களும் தங்கள் வேலையை ஆரம்பித்தனர். இதற்கிடையில் ராஜா சாண்டோ நோய்வாய்ப்பட்டு காலமானார்.
'பூம்பாவை' பக்தி ரசம் கொட்டும் இசைச்சித்திரம். இப்படத்தில் தான் கே.ஆர்.ராமசாமி அறிமுகமானார். பூம்பாவையாக
யு.ஆர்.ஜீவரத்தினம் நடித்தார். படம் 1944-ம் ஆண்டு வெளிவந்து கே.ஆர்.ராமசாமிக்கு நல்ல பெயர் கிடைத்தது.
ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் டைரக்டர் பாலாஜி என்றும் ஆர்.கிருஷ்ணன் அண்டு எஸ்.பஞ்சாபி ஜெனரல் சூப்ரிவிஷன் என்றே போட்டிருந்தார்கள்.
பஞ்சு கோபமுற்று தயாரிப்பாளரை கடிந்து வெளியேறினார். பூம்பாவையின் வசனகர்த்தாவான சோமயாஜீலு, வித்யாபதி என்ற படத்தை தயாரிப்பதாக விளம்பரப்படுத்தினார்.
அவ்விளம்பரம் படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு என்று தெரிவித்தது. ஆனால் நண்பர்களைப் பொறுத்தமட்டில் எந்த பேச்சும் ஒப்பந்தமும் இல்லாத நிலையில் இந்த விளம்பரம் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விளம்பரம் வந்ததே தவிர படம் கைவிடப்பட்டது. ஆனால் அந்த விளம்பரம் காரணமாக நண்பர்கள் இருவரும் இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு என்றாகிவிட்டனர் என்பது மட்டும் சுவாரசியமான உண்மை.
'சேவா ஸ்டேஜ்' சகஸ்ஹர நாமம், கிருஷ்ணன் - பஞ்சுவிடம் நல்ல தொடர்பிலிருந்தார். என்.எஸ்.கே. நாடக சபா அப்போது 'பைத்தியக்காரன்' என்ற நாடகம் நடத்தி நல்ல வசூல் பார்த்தது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே.டி. பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சிறையில் வாடிய நேரம். அவர்களது மேல்முறையீடு நிலுவையில் இருந்தது. என்.எஸ்.கே. வழக்கு செலவுக்காக அவரது துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு பெருந்தொகை தேவைப்பட்டது. ஆகவே 'பைத்தியக்காரன்' கதையை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டது.
நாடகம் பார்த்து திருப்தி அடைந்த கிருஷ்ணன் - பஞ்சு, 'கதை சினிமாவுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது' என்றனர்.
திரைப்பட கம்பெனிக்கு 'என்.எஸ்.கே. பிலிம்ஸ்' என்று பெயரிடப்பட்டது. தமிழ்நாடு டாக்கீஸ் சவுந்தரராஜன், நியூடோன் ஜித்தன் பானர்ஜி மற்றுமொரு நியூடோன் பங்குதாரர் மூவரும் இணைந்து 'பைத்தியக்காரன்' என்ற பெயரிலேயே படம் தயாரிக்க தீர்மானித்தார்கள். படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. அவரது உதவியாளர்கள் ஏ.பீம்சிங் மற்றும் திருமலை ஆகியோர்.
முதல்முறையாக கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையர்கள் 'பைத்தியக்காரன்' இயக்குனர்களாக நியமிக்கப்பட்டபோது அவர்களுக்கு சந்தோஷத்தைவிட சங்கடமே உருவானது.
இந்த நேரத்தில் ஜூபிடர் பிக்சர்சார், அறிஞர் அண்ணாவின் 'வேலைக்காரி' கதையை வாங்கி கே.ஆர்.ராமசாமியை கதாநாயகனாக வைத்து படமாக்க முடிவெடுத்தனர். அறிஞர் அண்ணாவும் கே.ஆர்.ராமசாமியும், கிருஷ்ணன் - பஞ்சுவுக்கு நன்கு அறிமுகமானவர்கள். ஆதலால் அவர்களைக் கொண்டே 'வேலைக்காரி' படத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கே.ஆர்.ராமசாமியும் உடுமலை நாராயணகவியும் கிருஷ்ணன் - பஞ்சுவுடன் தொடர்பு கொள்ள, அவர்கள் தங்கள் நிலைமையை விளக்கி 'பைத்தியக்காரன்' படத்தை முடித்த பிறகு 'வேலைக்காரி' படத்தை இயக்குகிறோம் என்று கூறினர்.
'வேலைக்காரி' கை நழுவிப்போய் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் உருவாகத் தொடங்கியது.
'படங்கள் வருகின்றன; பை நிறைகிறது' என்பதைவிட நல்ல நண்பர்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்ய முடிகின்றதே என்ற மனநிறைவைத்தான் பெரியதாக எண்ணினோம்' என்று இந்த நிகழ்வைப்பற்றி இரட்டையர்கள் கருத்து கூறினார்கள்.
பணப்பற்றாக்குறையால், ‘பைத்தியக்காரன்’ தள்ளாடித்தள்ளாடி மெதுவாக வளர்ந்தது. இந்த நிலையில் பாகவதரும், கிருஷ்ணனும் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு, விடுதலையானார்கள்.
பைத்தியக்காரன் படத்தில் ஏற்கனவே எம்.ஜி.ஆர். இடம் பெற்றிருந்தார். அவருக்கு ஜோடி டி.ஏ.மதுரம்.
இப்போது என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலையாகி வந்ததால் அவருக்கு வேடம் சிருஷ்டிக்கப்பட்டது. மதுரத்துக்கு இரட்டை வேடமாக மாற்றப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணனுடனும் எம்.ஜி.ஆருடனும் நடித்தார்.
‘பைத்தியக்காரன்’ வெளிவந்து நடுத்தர வெற்றியைப் பெற்றது.
நல்லதம்பி
இதன்பின், 'மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டூ டவுண்' என்ற ஆங்கிலப்படத்தை தழுவி அறிஞர் அண்ணா 'நல்லதம்பி' என்ற திரைக்கதையை என்.எஸ்.கே. பிலிம்ஸ்க்கு கொடுத்தார். இப்படத்தையும் கிருஷ்ணன் - பஞ்சுவே இயக்கி வெற்றியை தேடித் தந்தனர். இப்படம் 1949-ம் ஆண்டில் வெளிவந்தது.
அதே ஆண்டே இவர்கள் இயக்கத்தில் பி.யூ.சின்னப்பா, பானுமதி நடித்த 'ரத்தினகுமார்' வெளிவந்தது.
1. கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் உருவான “உயர்ந்த மனிதன்” படத்தில் சிவாஜிகணேசன் - வாணிஸ்ரீ
2. “பராசக்தி” படப்பிடிப்பின்போது சிவாஜி கணேசனுடன் கிருஷ்ணன் - பஞ்சு
பராசக்தி
அடுத்து 1952-ம் ஆண்டில் வெளிவந்த நேஷனல் பிக்சர்ஸ் 'பராசக்தி' கிருஷ்ணன்-பஞ்சுவை இயக்குனர்கள் வரிசையில் முன்னணியில் நிறுத்தியது. தவிர நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படத்தில் தான் கதாநாயகனாகவே அறிமுகமாகி ஒரே நாளில் மாபெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். கலைஞரின் வசனம் படத்தில் மேலோங்கி நின்றது.
பராசக்திக்கு பிறகு 1953-ம் ஆண்டில் வெளிவந்த 'கண்கள்' திரைப்பட இயக்கத்தில் மட்டும் இன்றி தயாரிப்பிலும் கிருஷ்ணன்- பஞ்சு பங்கு கொண்டனர். 'கண்கள்' சம்பவங்கள் அதிகமில்லா சிறுகதையாய் இருந்ததால் மக்களிடம் அதிகமாகப் போய் சேரவில்லை.
1954-ம் ஆண்டில் இந்த இரட்டையர் இயக்கி, எம்.ஆர்.ராதா நடித்து வெளிவந்த 'ரத்தக்கண்ணீர்' பெரும் வெற்றி பெற்றது.கிருஷ்ணன் - பஞ்சுவின் திறமையை அறிந்த ஏவி.மெய்யப்ப செட்டியார், 'குலதெய்வம்' என்ற தங்கள் படத்தை அவர்களைக் கொண்டு இயக்கி வெற்றி பெற்றார்.
இதற்கு பிறகு கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்பட வரிசையில் மாமியார் மெச்சிய மருமகள் (1959), தெய்வப்பிறவி (1962), அன்னை (1962), வாழ்க்கை வாழ்வதற்கே (1964), சர்வர் சுந்தரம், பூம்புகார் (1964), குழந்தையும் தெய்வமும் (1965), பெற்றால் தான் பிள்ளையா (1966), உயர்ந்த மனிதன் (1968), எங்கள் தங்கம் (1970), ரங்கராட்டினம் (1971), இதய வீணை (1972), பிள்ளையோ பிள்ளை (1972), பூக்காரி (1973), பூம்புகார் (1974), பத்துமாத பந்தம் (1974), கலியுகக் கண்ணன் (1974), அணையாவிளக்கு (1975), பேர் சொல்ல ஒரு பிள்ளை (1978), அன்னபூரணி (1978), நாடகமே உலகம் (1979), நீல மலர்கள் (1979), வெள்ளிரதம் (1979), மங்கல நாயகி (1980) முதலான படங்களாகும். எனினும் 1963-ல் வெளிவந்த ‘குங்குமம்’ மற்றும் 1970-ல் வந்த ‘அனாதை ஆனந்தன்’ ஆகிய இரு திரைப்படங்கள் சரியாகப் போக வில்லை.
இவர்கள் தமிழுடன் இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழிப்படங்களையும் இயக்கினர். இவர்கள் இயக்கிய படங்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பதாகும்.
கிருஷ்ணன் - பஞ்சு திரை வாழ்க்கையும் நிஜவாழ்க்கையும் இணைந்தேயிருந்தது. கிருஷ்ணன் - பஞ்சு இருவரும் திருமணம் ஆனவர்கள். கிருஷ்ணன் பெரிய குடும்பஸ்த்தர். 1925-ம் ஆண்டு திருமணமானவருக்கு பத்து குழந்தைகள் இருக்கின்றனர்.
கிருஷ்ணனின் உறவுப்பெண்ணான சரோஜாவை, பஞ்சு திரு மணம் செய்து கொண்டார். பஞ்சுவுக்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். கிருஷ்ணனின் இளைய சகோதரர் பட்டு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மற்றுமொரு சகோதரர் திருமலை உதவி இயக்குனராக இருந்ததுடன் சிறந்த ஸ்டில் போட்டோகிராபராகவும் விளங்கினார்.
பஞ்சுவின் உதவியாளராக இருந்த ஏ.பீம்சிங் மாபெரும் இயக்குனராக மாறி பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், பாகப்பிரிவினை போன்ற அற்புத படைப்புகளை மக்களுக்கு அளித்தார். பீம்சிங்கின் புதல்வர் நரேந்திரனுக்கு தன் மகள் சவுமித்ராவை பஞ்சு மணம் செய்து வைத்து அவரையும் தங்கள் பாசக்குடும்பத்தில் கட்டிப்போட்டார். பீம்சிங்கின் மற்றொரு மகனான பி.லெனின் ஒரு புகழ்பெற்ற எடிட்டராக விளங்குகிறார்.
கிருஷ்ணன், பஞ்சு, பீம்சிங் மூவரும் இன்று இல்லை என்றாலும் அவர்கள் இயக்கிய படங்கள் மக்கள் இதயங்களில் வாழ்கின்றன.
பிளாஷ்பேக்: 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட கிருஷ்ணன்-பஞ்சு
தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் பக்கா கமர்ஷியல் இயக்குனர்களாகவும், விருது படங்களின் இயக்குனர்களாவும் இரு பாதையில் பயணம் செய்தவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் சிவகுமார் வரை பல நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் தான். இவர்களை பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு ஆவணப் படத்தை தயாரித்துள்ளார். அது நேற்று வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தில் கிருஷ்ணன்-பஞ்சு பற்றிய ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை சினிமாவுக்குள் கொண்டு வந்தது சதிலீலாவதி படத்தில் துணை இயக்குனர்களாக பணியாற்றிய கிருஷ்ணன்-பஞ்சு தான். பராசக்தி படத்தில் சிவாஜியை அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான். ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில முக்கியமான வரலாற்று பதிவுகள் வருமாறு:இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு இணை, தமிழ் - தெலுங்கு - இந்தி - கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றதன் மூலம், பிற தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகளும் அவர்களைப் பின்பற்ற வழியமைத்துக் கொடுத்தனர். கிருஷ்ணன் படத்தின் திரைக்கதையில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார், பஞ்சு படப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றை கவனித்துக்கொள்வார். மூன்று இந்திய மொழிகளில், நாற்பது ஆண்டு கால அளவுக்குள் ஐம்பத்தாறு திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர் இணை இவர்கள் மட்டுமே.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அறிமுகமான 'சதிலீலாவதி' (1936) படத்தின்போது தொடங்கிய இந்த (கிருஷ்ணன் பஞ்சு) கூட்டணி, 1952-இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் அறிமுகம் செய்தது. பின்னர் இந்த இரு திலகங்களுடனும் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிலேயே எவரும் செய்யாத சாதனையைச் செய்தது. மேலும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பானுமதி, சாரதா, எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, மைனாவதி, 'குலதெய்வம்' ராஜகோபால், மு.க.முத்து உட்படத் திறமையான கலைஞர்கள் பலரை அறிமுகம் செய்தவர்களும் இவர்கள்தான். 'ரத்தக்கண்ணீர்' படம் மூலம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவை சினிமாவுக்கு மீண்டும் அழைத்து வந்ததும் இவர்கள்தான்.கே.ஆர்.ராமசாமி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக உருவானதற்கும், நகைச்சுவை நடிகர்களான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், 'குலதெய்வம்' ராஜகோபால், டி.ஆர்.ராமச்சந்திரன், 'தேங்காய்' சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாகத் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கும் இவர்களே காரண கர்த்தாக்கள். 'மார்க்கண்டேய' நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், திரையுலகில் வெற்றி பெற்றதும் இவர்களால்தான்.அண்ணாதுரை, கருணாநிதி, திருவாரூர் தங்கராசு ஆகியோர் திரைப்பட வசனகர்த்தாக்களாகப் புகழ்வெளிச்சம் பெற்றதும் இவர்களால்தான். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கவிஞர் வாலி ஆகியோரை திரைக்கதை வசனகர்த்தாக்களாக அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாகப் புகழ்பெற்ற ஏ.பீம்சிங், எஸ்பி.முத்துராமன், ஆர்.விட்டல், பட்டு என்கிற பட்டாபிராமன், திருமலை மகாலிங்கம் ஆகியோரது வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர்களும் இவர்கள்தான். திரையுலகில் பின்னாளில் புகழ்பெற்ற கே.பாலசந்தர், ஜே.மகேந்திரன், ஆரூர்தாஸ் ஆகியோருடனும் பணியாற்றியுள்ளனர்.கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் மொத்தம் இயக்கியுள்ள படங்கள் 56. தமிழில் இவர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 41. இந்தியில் 11 படங்களையும், தெலுங்கில் 3 படங்களையும், கன்னடத்தில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளனர். இத்துடன் ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளனர். இவற்றில் இந்திப்படமான 'பாபி' 50 வாரங்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. 'பராசக்தி' (தமிழ்), 'லேத மனசுலு' (தெலுங்கு), 'தோ கலியான்' (இந்தி) ஆகியவை 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடின. மீதமுள்ளவற்றில் 21 படங்கள் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன. 31 படங்கள் 50 முதல் 75 நாட்கள் வரை ஓடியுள்ளன. தமிழ்நாட்டின் நான்கு முதல்வர்களான அண்ணாதுரை ('நல்லதம்பி'), கருணாநிதி ('பராசக்தி', 'பிள்ளையோ பிள்ளை' உட்பட 3 படங்கள்), எம்.ஜி.ஆர். ('பெற்றால்தான் பிள்ளையா', 'இதயவீணை', 'எங்கள் தங்கம்'), ஜெ.ஜெயலலிதா ('எங்கள் தங்கம்', 'அனாதை ஆனந்தன்', 'அக்கா தம்முடு') ஆகியோருடன் பணியாற்றியுள்ளனர்.இவர்கள் இயக்கிய 'குலதெய்வம்', 'தெய்வப்பிறவி', 'அன்னை', 'சர்வர் சுந்தரம்', 'குழந்தையும் தெய்வமும்' ஆகியவை தேசிய விருது பெற்றன. 'உயர்ந்த மனிதன்', 'எங்கள் தங்கம்' ஆகியவை தமிழக அரசின் பரிசுகளையும் பெற்றுள்ளன. இவை தவிர இவர்கள் பல்வேறு விதமான அங்கிகாரங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவை 40 ஆண்டுகள் ஆண்ட இரட்டை மன்னர்கள் இவர்கள் என்றால் அது மிகையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக