புதன், 14 ஜூன், 2017

பாடகர் மலேசியா வாசுதேவன் பிறந்த நாள் ஜூன் 15 , 1944 .




பாடகர் மலேசியா வாசுதேவன் பிறந்த நாள் ஜூன்  15 , 1944 .

மலேசியா வாசுதேவன் ( சூன் 15 , 1944 -பெப்ரவரி 20 , 2011 ) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட
மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்
மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார்.
இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.

குடும்பம்

மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 26 சனவரி மாதம் 1976-இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள்: யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா. இவருடைய மகன் தமிழ்த் திரைப் படங்களிலும் மற்ற மொழி திரைப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பின்னணிப் பாடகராகவும் திகழ்கிறார். இவருடைய மகள் பிரசாந்தினி ஒரு பின்னணிப் பாடகி. வாரணம் ஆயிரம் ,
ஆடுகளம் போன்ற பல திரைப் படங்களில் பாடல் பாடியுள்ளார்.
பின்னணிப் பாடகராக
ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில்
கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.
அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.
நடிகராக
ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம் , ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் "சிலந்தி வலை" உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

இசையமைப்பாளராக

மலேசியா வாசுதேவன் ௭ண்பதுகளில் ஒரு சில தமிழ்த் திரைப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். குறிப்பாக
சாமந்தி பூ , பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப் படங்களுக்கு இசையமைத்தார்.
விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது.

மறைவு

சில ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 பெப்ரவரி 20 ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் கதாபாத்திர
2007 பிறகு
2007
நினைத்து நினைத்து பார்த்தேன்
2007 அடாவடி
2006 கொக்கி
2003 நிலவில் கலங்கமில்லை
2003 கையோடு கை
2002 புன்னகை தேசம்
2001 பத்ரி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
1999 பூப்பரிக்க வருகிறோம்
1998 தினந்தோறும்
1996 கோபாலா கோபாலா
1996
சும்மா இருங்க மச்சான் சும்மா இருங்க மச்சான்
1996 பூவே உனக்காக
1994 பாண்டியனின் ராஜ்ஜியத்தில்
1994 ஜல்லிக்கட்டு காளை
1994 அமைதிப்படை
1993 கருப்பு வெள்ளை
1993 திருடா திருடா காவல் அதிகாரி
1990 நீ சிரித்தால் தீபாவளி
1990 எங்கள் சுவாமி ஐயப்பன்
1989 தர்ம தேவன்
1989 அன்னக்கிளி சொன்ன கதை
1989 தென்றல் சுடும்
1988 தெற்கத்தி கள்ளன்
1988 தம்பி தங்க கம்பி
1988 ராசாவே உன்னை நம்பி
1988 கதா நாயகன்
1988 பூந்தோட்ட காவல்காரன்
1987 தீர்த்த கரையினிலே
1987 பரிசம் போட்டாச்சு
1987 ஊர்க்காவலன்
1987 ஜல்லிக்கட்டு
1987 இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
1987 பேர் சொல்லும் பிள்ளை
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு
1986 உன்னிடத்தில் நான்
1986 ஊமை விழிகள் ராஜா
1986 முதல் வசந்தம்
1985 கொலுசு
1985 ஒரு கைதியின் டைரி
1984 ஆயிரம் கைகள்
1983 எத்தனை கோணம் எத்தனை பார்வை
1982 நிழல் சுடுவதில்லை
1982
இதோ வருகிறேன் இதோ வருகிறேன்
1981 பாக்கு வெத்தலை
1980 சாமந்திப் பூ
1979 வெள்ளி ரத்னம்
1978 நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
1977 அவர் எனக்கே சொந்தம்

இசையமைத்த திரைப்படங்கள்

1980- சாமந்தி பூ
1981- பாக்கு வெத்தலை
1984-ஆயிரம் கைகள்



“தமிழ் சினிமாவில் டி.எம்.சௌந்தரராஜன் போலப் பாட யார் இருக்கிறார்?” என்று எனக்கு விபரந்தெரிந்த காலம் தொட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குத் தக்கதொரு பதிலாக வந்துசேர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன். ஆனாலும் அவர் டி.எம்.எஸ். மாதிரியும் பாடவில்லை, வேறு யார்போலவும் பாடவில்லை. அவர் அவர்மாதிரித்தான் பாடினார்.
கே.ஜே.ஜேசுதாஸ் சாயலில்தான் ஜெயச்சந்திரன் குரல் இருக்கிறது என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை உன்னிப்பாகக் கவனிப்பாருக்கு கண்டசாலா நினைவுக்கு வரவே செய்வார். பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலும்கூட ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ரகம்தான். இப்படிச் சொல்வதால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் அவரவருக் கான தனித்துவமே இல்லை என்பதாகாது. ஆனால், இந்த யாரின் சாயலும் இல்லாமல், இந்த யாரையும்விட தனது கம்பீரமான தனித்த குரலைத் தமிழ் சினிமாவில் நெடுங்காலத்துக்குப் பதிவு செய்தவர் டி.எம்.எஸ். மட்டுமே. தமிழை மிகச்சரியாக உச்சரித்த அவரின் அந்தக் குரலைத்தான் சாதாரண ரசிகன் “ஆண்” குரல் என்று அங்கீகரித்தான். அந்த ஆண் குரலுக்குப் பின்னாளில் வெற்றிடம் ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சத்தைப்போக்க தமிழ் சினிமாவிற்குள் வந்துசேர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன்.
கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வாசுதேவன் பிறந்தது மலேசியாவில். பிழைப்பு தேடி மலேசிய ரப்பர் தோட்டத்தைத் தஞ்சமடைந்த அவரது பெற்றோருக்கு அவர் எட்டாவது குழந்தை. மலையாள தேசத்தவர் என்றாலும் சுற்றி வசித்தவர்கள் தமிழர்களென்பதால் தமிழராகவே வளர்ந்தார் வாசு. தமிழ்ப் பள்ளியிலேயே படித்தார். தன்னோடு பிறந்த எல்லோருமே இசையை விரும்புகிறவர்களாய் இருந்தது வாசுதேவன் பாட்டுத்தேவனாகப் பரிணமிக்க ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தந்தது. இசை கற்றிருந்த அப்பாவிடமும், அண்ணனிடமும் ஆரம்பகாலத்தில் இசை பயின்றார். விளையும் பயிர் முளையிலே என்பதற்கு ஒப்ப எட்டு வயதிலேயே மேடையில் பாடத்தொடங்கியவர் அவர். அப்போதே அவருக்கு நடிக்கவும் விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த இரண்டு துறைகளிலும் மனிதர் புகுந்துவிளையாடியிருக்கிறார்.
Malaysia Vasudevan-3
இளைஞன் வாசுதேவன் மலேசியாவில் நாடகக் குழுவொன்றில் நடிகராகவும் பாடகராகவும் தனது கலைப் பயணத்தை மேலும் தொடர்ந்தபோது, தான் நடித்த “ரத்தப் பேய்” எனும் நாடகத்தைப் படமாக எடுக்க விரும்பி நாடகக் குழுவினரோடு சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் “ரத்தப் பேய்” உருவானது. அந்தப் படத்துக்கு இசையமைத்த அந்நாளைய இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் இசையில் ஒரு பாடலையும் வாசுதேவன் பாடினார். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக அப்போது பணியாற்றியவர் இளையராஜா. அப்போதே மலேசியா வாசுதேவனுக்கு இளையராஜா அறிமுகமாகிவிட்டார்.
இருந்தபோதிலும், மலேசியா வாசுதேவன் பாடிய முதல் தமிழ் சினிமாப் பாடல் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா நடித்த “டெல்லி டு மதராஸ்” எனும் படத்தில் வரும் “பாலு விக்கிற பத்தும்மா… உன் பாலு ரொம்ப சுத்தம்மா…” என்ற நகைச்சுவைப் பாடல்தான். இதற்கு வி.குமார் இசையமைத் திருந்தார். இந்தப் படத்தைத் தயாரித்த பொள்ளாச்சி ரத்தினத்துடன் வாசுதேவனுக்கிருந்த நட்பால் இந்த வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. இதற்குப் பின்னர் வாசுதேவன் இளையராஜாவின் “பாவலர் சகோதரர்கள்” குழுவில் இணைந்தார். ஒரு நாடகத்தில் அவரது குரலைக் கேட்க நேர்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அவருக்கு “பாரத விலாஸ்” படத்தில் ஒரு சின்ன வாய்ப்பைத் தந்தார். அது “இந்திய நாடு என் வீடு” என்ற பாட்டில் வரும் பஞ்சாபிக்காரர் பாடும் வரிகள். “சுனோ சுனோ பாய்… சுனோ சுனோ மே பஞ்சாப் வாலா கீத்து சுனோ…” என்று அமைந்த வரிகள் அவை. அதன் பிறகு “தலைப் பிரசவம்” படத்தில் ஒரு பாடலை அவர் பாடினார்.
குன்னக்குடி வைத்தியநாதன் அவருக்கு “குமாஸ்தாவின் மகள்” படத்தில் “காலம் செய்யும் விளையாட்டு… அது கண்ணாமூச்சி விளையாட்டு…” என்ற பாடலைப் பாட வாய்ப்பளித்தார். இந்தப் படத்தில்தான் ஒரு முக்கியத் திருப்பம் நிகழ்ந்தது. வாசுதேவன் என்றிருந்த அவரது பெயரை “மலேசியா வாசுதேவன்” என்று முதன்முதலில் மாற்றினார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜன்.
இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற நண்பரான மலேசியா வசுதேவனுக்கு தனது “16 வயதினிலே” படத்தில் ஒரு வாய்ப்புத்தர அவரால் முடிந்தது. அதுவும்கூட தற்செயலாக நடந்ததுதான் என்றாலும் பொருத்தமாக நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்த பாடலை அவருக்குத் தொண்டை சரியில்லாமல் போகவே மலேசியா வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா. “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முட்டி எதிரொலித்தது அந்தப் பாடல். மலேசியா வாசுதேவன் என்றொரு பாடகரை அழுத்தமாகத் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட பாடல் அதுதான். அந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். முன்னெப்போதும் கேட்டிராத முற்றிலும் ஒரு புதிய அழுத்தமான குரலை அவர்கள் கேட்டார்கள். தங்களது கிராமிய இசை வடிவிலேயே கேட்டார்கள். தமிழ் ரசிகர்களின் மனங்களில் இந்தப் பாடல் வாயிலாக அழுத்தமாக அமர்ந்துகொண்டார் மலேசியா வாசுதேவன்.


Malaysia Vasudevan-4
மூன்று பத்தாண்டுகள் ஓடிவிட்டன. மலேசியா வாசுதேவன் 8 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாகப் பாடிவிட்டார். அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையமைப்பில் அதிகபட்சமான பாடல்கள். எல்லா வகையான பாடல்களையும், எல்லா தரப்பினருக்காகவும் அவர் பாடியிருக்கிறார். வாசுதேவனின் முழு ஆளுமையையும் வெளிக்கொணர்ந்த பெருமை இளையராஜாவையே சாரும், அவர் பல இசையமைப்பாளரிடமும் பணியாற்றியிருந்த போதிலும். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடிப் பெருமை சேர்த்திருக்கிறார் மலேசியா வாசுதேவன்.
இளையராஜா அவருக்கு மென்மையான காதல் மெலடியில் நிறைய வாய்ப்பளித்திருக்கிறார். “இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது…” (சிகப்பு ரோஜாக்கள்), “வான் மேகங்களே வாழ்த்துங்கள், பாடுங்கள்…” (புதிய வார்ப்புகள்), “கோடைக் காலக் காற்றே…” (பன்னீர்ப் புஷ்பங்கள்), “பூவே இளைய பூவே… வரம் தரும் வசந்தமே… மடிமீது தேங்கும் தேனே… எனக்குத்தானே…”(கோழி கூவுது), “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ…”(தூரல் நின்னு போச்சு) இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். பட்டியல் முடியாது. அத்தனையும் அழகுப் பாடல்கள், அத்தனையும் தேனாக இனிக்கும் பாடல்கள்.
இவற்றுக்கு இணையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் பல பாடல்களை அவருக்குத் தந்திருக்கிறார். “எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை”(சரணாலயம்), “எண்ணியிருந்தது ஈடேற…”(அந்த ஏழு நாட்கள்) போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள்.
முரட்டுக்காளையில் அவர் பாடிய “பொதுவாக எம்மனசு தங்கம்” பாடல் இன்று வரையில் வரும் எல்லாக் குத்துப் பாடல்களையும் வென்றுகொண்டேயிருக்கிற அதிசயத்தைப் பார்க்கமுடிகிறது. உணர்ச்சி ததும்ப பாசம் இசைக்கும் “ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு”(தர்ம யுத்தம்) பாடல் தங்கைகளுக்காக அண்ணன்களின் அன்புக்குரல். “பட்டு வண்ண ரோசா வாம்…”(கன்னிப்பருவத்திலே), “பொன் மானத் தேடி நானும் பூவோடு வந்தேன்…”(எங்க ஊரு ராசாத்தி) போன்ற பாடல்கள் நாட்டுப்புற இசையின் நளினத்தோடு அன்பையும் சோகத்தையும் அள்ளி அள்ளி வழங்கும் பாடல்கள்.
மலேசியா வாசுதேவனுக்கு 16 வயதினிலேயில் வாய்ப்பளித்த அதே இயக்குநர் பாரதிராஜாதான் தனது “ஒரு கைதியின் டைரி” படத்தில் வில்லன் வேடம் தந்து நடிக்கவும் வைத்தார். தமிழ் சினிமாவின் மிக நல்ல குணச்சித்திர நடிகராக அவர் இன்னொரு அவதாரமெடுத்தார். 85 படங்களில் பல்வேறு பாத்திரங்களில் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். “எண்ணம் தோன்றியது எழுதத் தூண்டியது” என்பது அவர் எழுதி 2010 வெளிவந்த கவிதை நூல். ஆமாம், கவிஞராகவும் அவர் வெளிப்பட்டிருக்கிறார். படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக் கிறார். அவருடன் நெருக்கமாக இருந்த சகாக்களுக்கு அவரது இன்னொரு முகமும் தெரியும். விளம்பரமின்றி பிறருக்கு உதவும் முகம்தான் அது.
சாதாரணப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் அவர். தன்னை உயர்த்திக்கொள்ள அவர் தனது திறமை ஒன்றையே நம்பியிருந்தார். தனது குரலால் அவர் தமிழ் ரசிகர்களை பலகாலம் கட்டிப்போட்டிருக்கிறார். கலைக்கும், இப்படிப்பட்ட கலைஞனுக்கும் எங்காவது மரணம் உண்டா?
மலேசியா வாசுதேவன் பாடவந்த காலம் குறித்துக் கொஞ்சம் பரிசீலித்தால் அவரது பங்களிப்பு எத்தகைய மகத்தானது என்பதையும் நாம் உணரமுடியும். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசை மேதை கே.வி.மகாதேவன் கோலோச்சிய காலத்தில் டி.எம்.சௌந்தரராஜன் கொடிகட்டிப் பறந்தார். மெல்லிசைக்கு செவ்வியல் இசையே அடிப்படையாக இருந்தது. சினிமாவுக்குக் காவியத் தன்மை வழங்குவதில் போட்டி நிலவிய காலம் அது. அதற்கேற்ப செவ்வியல் தன்மைகொண்ட கவித்துவமான பாடல்கள் உருவாகின. அவற்றுக்கு இசை வடிவம் தந்தபோது டி.எம்.எஸ்.ஸின் குரல் அதில் பெரும் பங்காற்றியதை மறுப்பதற்கில்லை. ஏனைய பிரபலப் பாடகர்கள் பெண்தன்மை கலந்த குரலில் பாடிக் கொண்டிருக்க, சௌந்தரராஜன்தான் முழு ஆணின் குரலை முன்வைத்தார். காலம் மாறியது. இசைஞானி இளையராஜா முன்னணிக்கு வந்த காலம் சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கிய காலம். கிராமங்களை நோக்கி காமிராக்களைத் தூக்கிக்கொண்டு போகத் தொடங்கியபோது சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கியது.
செவ்வியல் மரபிலிருந்து வந்த பழைய இசையமைப்பாளர்களுக்கு மாற்றாக நாட்டுப்புற மரபிலிருந்து வந்துசேர்ந்த இளையராஜாவின் இசையில் மண் மணம் தூக்கலாக இருந்தது இந்த மாற்றத்தைக் கட்டியம் கூறியது. இந்தப் புதிய நிலைமைக்கு ஏற்ற குரலுடன் இளையராஜாவின் தேவைக்கேற்ப வந்துசேர்ந்தவர் மலேசியா வாசுதேவன் மட்டுமே. அதாவது, காலத்தின் தேவையாக வந்தவர் மலேசியா வாசுதேவன் என்றே சொல்வேன். எத்தனை பாடகர்களைப் பாடவைத்த போதிலும் இளையராஜாவின் புதிய சூழலின், புதிய அணுகுமுறையின் தேவையை நிறைவுசெய்த ஒரே பாடகர் மலேசியா வாசுதேவன்தான்.
Malaysia Vasudevan-2
முன்னமே குறிப்பிட்டதுபோல, டி.எம்.சௌந்தரராஜனை ரசித்துப் பழகியிருந்த ரசிகர்களின் ஏக்கத்தைப் பூர்த்திசெய்யும் விதமாக அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவராகவும் மலேசியா வாசுதேவன் ஒருவரே இருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எவருடைய இசையமைப்பில் பாடினாலும் அது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலாக மட்டுமே தோன்றும். இசையமைப் பாளரை இனங்காண்பது கொஞ்சம் சிரமமானதாக இருக்கும். மாறாக, மலேசியா வாசுதேவன் பாடுகிறபோதுதான் அது இளையராஜா இசையமைத்த பாடல், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல் என்று இனம் காணஇயலும்.
அதே நேரம் அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் முகமும் தெரியாமல் போகாது. தான் பாடும் பாடலின் இசையமைப்பாளரின் அடையாளத்தை மறைக்காமலேயே தன்னையும் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடிய நுட்பமான இயல்பு மலேசியா வாசுதேவனின் குரலின் தனிச் சிறப்பாக இருந்தது. இதுவே அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நின்றதற்கான பிரதான காரணமாகப் படுகிறது. இந்தத் தனித்துவக் குரல் வளத்தோடு அவரது நல்ல தமிழ் உச்சரிப்பும் அவருக்குக் கூடுதல் பலம் தந்தது.
பின்னாளில் மலேசியா வாசுதேவனுக்கு இணையான தனித்திறன் கொண்ட இன்னொரு பாடகர் தனக்குக் கிடைக்காத நிலைமையில்தான், தானே நாயகர்களுக்கு டூயட் பாட இளையராஜா துணிந்தாரோ என்னவோ. இதற்கு முன்பெல்லாம் இசையமைப்பாளர்கள் காட்சிப் பின்னணியில் தத்துவம் ததும்பும் சோக கீதம் இசைப்பதுதானே வழக்கம்? அப்படித்தானே எம்.எஸ்.விஸ்வநாதன் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
அதுதானே இன்றும் தேவா போன் றோர் வரையில் தொடருகிறது. அப்படியிருக்க இளையராஜா எதற்காக கதாநாயகர் களுக்காக பின்னணி பாடினார்? இந்தப் பாடலின் பொருளுடன் உடன்படாவிட்டாலும், “அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் ஒட்டி நின்று குப்பையாக வந்த உடம்பு” (குணா) என்று பாடிய இளையராஜாவை ரசித்த அளவுக்கு அவர் பாடிய டூயட் பாடல்களை ரசிக்கமுடியவில்லை. எங்களாலும் சமஸ்கிருதத்தை ஸ்பஷ்டமாக உச்சரிக்க முடியும் என்று நிரூபித்த அவரின் “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ” பாடலை அந்தக் காரணத்துக்காக ரசித்தவர்களால்கூட அவரது வேறு பல டூயட்களை முழுசாக ஏற்க முடியாமல் போனதென்றே கருதுகிறேன்.
இந்தப் பின்னணியில்தான் மலேசியா வாசுதேவன் நமக்கெல்லாம் வியப்பளிக்கிறார். தமிழ் சினிமாவின் வரலாற்றுத் தேவையெனவே அவர் இங்கு வந்துசேர்ந்தார். அந்தத் தேவையைத் தன்னால் இயன்றளவு நிறைவேற்றினார். இளையராஜா எனும் இசைஞானியின் உள்ளத்துக்கு நெருக்கமாக அமைந்திருந்தது அவரது குரல் வலிமை. தமிழில் எல்லா நாயகர்களுக்காகவும் அவர் பின்னணி பாடியிருக்கிறார். எல்லா வகையான கதை அமைப்புகளிலும் அவரது தெளிந்த கணீர்க் குரல் கச்சிதமாகவே பொருந்திப்போயிருக்கிறது. முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அவர் பாடியவை இவை எல்லாவற்றின் உச்சமாக உயர்ந்து நின்று இசையின் பேரின்பப் பிரவாகமாகவே பெருக்கெடுக்கிறது.
அதிலும் குறிப்பாக “பூங்காற்று திரும்புமா” பாடல் கேட்கிற ஒவ்வொரு பொழுதிலும் மனசைப் பிழிந்து ஏதேதோ செய்கிறது. இனம் தெரியாத உணர்வொன்று அப்பிக்கொள்ள நாம் செய்வதறியாது தவிக்கிறோம். உள்ளே அழுது, வெளியே சிரிக்கிற ரசவித்தையை இந்தப் பாடல் தனக்கேயுரிய வீரிய ஆற்றலின் துணைகொண்டு நிறைவேற்றிக் களிப்புறுகிறது. டி.எம்.எஸ். இல்லாத இடம் வெற்றிடமாகி விடவில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தி நிற்கிறது இந்தப் பாடல். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் தூண்டிவிட்ட நெருப்பைக் கொளுந்துவிட்டு எரியச் செய்து கேட்போரைச் சூடேற்றி, அவர்களது எண்ண ஓட்டங்களைச் சாம்பலாக்கிப் போடுகிறது பாடுகிற இந்தப் பாட்டுக்காரனின் கிறங்கடிக்கும் குரல் இனிமை.


பதினாறு வருடங்களுக்கு முந்தைய ஒரு பிற்பகல் நேரம். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பாடல் பதிவுக்கூடம் ஒன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ‘இன்றும் புதிது’ என்று பெயரிடப்பட்டிருந்த இசைத் தொகை ஒன்று அங்கு பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. சில சிறந்த பழைய தமிழ்த் திரைப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதைத் தற்காலத்தில் பிர பலமாயிருக்கும் பாடகர்களைப் பாடவைத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒலிப்பதிவு செய்து வெளியிடும் முயற்சி அது. நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனம் தான் அதைத் தயாரித்தது. ஆகவே மேற்பார்வைக்காக நானும் அங்கிருந்தேன். டி.எம்.எஸ். பாடிய ஓரிரு பழைய பாடல்களைப் பாடகர் மலேசியா வாசுதேவன் பாடுவதாக இருந்தது. அவருக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருந்தனர். வரும் வழியிலே அவரைப் பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்வத்தோடு நான் வெளியே நின்றுகொண்டிருந்தேன். நான் அவரை அதற்கு முன் நேரில் சந்தித்திருக்கவில்லை.
அந்தக் கட்டடத்தின் முன்னால் இருந்த சந்தில் வெள்ளை ஒளி நிரப்பி ஒரு வெள்ளைநிற சொகுசுக் கார் உள்ளே நுழைந்தது. அதிலிருந்து மலேசியா வாசுதேவன் இறங்கினார். ஐம்பது வயது இருக்கும். திடகாத்திரம். நீள்வடிவ முகம், கூர்மையான கண்கள். சாயங்காலச் சூரியன் அவருடைய மூக்குக் கண்ணாடியில் பட்டு எதிரொலித்தது. மேலே என் பக்கத்தில் அவரை வரவேற்க நின்று கொண்டிருந்த மாணிக்க விநாயகத்தைப் பார்த்துக் கைகளை அசைத்தார். அவர் உள்ளே நுழைய எல்லோரும் வணக்கம் சொல்லிக் கைகூப்பினர். அவரும் பதிலளித்தவாறு உள்ளே வந்தார். நானும் வணக்கம் சொன்னேன். ஆனால் அவருக்குப் பழக்கமான பலருக்கு மத்தியில் புதிதாய் நின்று கொண்டிருந்த என்மீது கவனம் செலுத்தாமல் சென்று விட்டார்.
ஏற்கனவே தாமதமாகியிருந்ததால், நேரடியாகக் குரல் பதிவுக்கூடத்துக்குச் சென்று ஹெட் ஃபோனை எடுத்து மாட்டிக்கொண்டார். பாடல் வரிகளையும், இசைக்குறிப்புகளையும் கொடுப்பதற்காக மாணிக்க விநாயகமும் உடன் சென்றார். அந்த ஒலிப்பதிவின் இசை நடத்துனரும் ஒருங்கிணைப்பாளருமான மாணிக்க விநாயகம் பிறகு புகழ்பெற்ற பாடகர் ஆனார். எனது அபிமான பாடகரான மலேசியா வாசுதேவனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைக்காமல் இருந்ததற்காக அன்று மாணிக்க விநாயகத்தின் மீது எனக்குக் கடுமையான வருத்தம்!
சிறிதுநேர ஆயத்தங்களுக்குப் பிறகு இசைத்தடம் ஒலிக்கத் துவங்க மலேசியா வாசுதேவனின் குரல் ஒலிபெருக்கியில் தெளிந்து முழங்கியது. “நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே...” நான் சிறுவனாக இருந்தபோது எனது செவியேறிச்சென்ற அதே குரல். எங்கள் பக்கத்து மலையடிவாரக் கிராமத்தில், தென்னங்கீற்று வேய்ந்த சினிமாக் கொட்டகையில் இருந்து எதிரொலித்த அதே குரல்! மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க நான் ஏங்கிய மலேசியா வாசுதேவனின் பல பாடல்களின் நினைவுகளுக்குள் முற்றிலுமாக மூழ்கிப் போனேன். மனம் எனது பால்ய காலங்களுக்கு சட்டென்று தாவிப் போனது.
பனிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும் அப்போது எனக்கு. அந்த சினிமாக் கொட்டகையில் வாரயிறுதி நாட்களில் பிற்பகல் மூன்று மணிக்கு ஒரு காட்சி இருக்கும். யாருமறியாமல் வீட்டை விட்டு சீக்கிரமாகவே கிளம்பிவிடுவேன். சிறிய உருவம் கொண்டிருந்த எனக்கு மலைப்பாதைகளின் வழியாக நடந்து சென்று சினிமாக் கொட்டகையை அடைவதற்கு ஒருமணி நேரம் ஆகிவிடும். முன்னதாகவே சென்று சேர்ந்து பாடல்கள் ஒலிக்கத் துவங்கும் நேரத்திற்காக வாசலிலே காத்திருப்பேன். சரியாக ரெண்டேகால் மணிக்கெல்லாம் அங்கிருந்த இரண்டு சாம்பல்நிறமான கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளிலிருந்து பாடல்கள் ஒலிக்கத்தொடங்கிவிடும். “ஏய்... முத்து முத்தா மொட்டு விட்ட வாசமுல்லே...” உச்சஸ்தாயியில் ஒலிக்கும் மலேசியா வாசுதேவனின் குரல் சூழ்ந்திருக்கும் மலைமுகடுகளில் எதிரொலித்து சமவெளியெங்கும் பரவி நிறையும். அது எல்லாவற்றையும் மறக்கச் செய்து ஒரு கனவு உலகத்துக்கு என்னை அழைத்துச் செல்லும்.
என் விருப்பத்திற்குரிய பல தமிழ், மலையாளம், ஹிந்திப் பாடல்கள் ஒலிக்க, கொட்டகையை ஒட்டியுள்ள வளைவான சாலையின் வழியே மெல்ல மெல்ல பக்கத்துக் கிராமங்களிலிருந்து மக்கள் கூட்டம் வந்து நிறையத்தொடங்கும். வரிசையில் நின்று, கஸேரா 4.00ரூ, சாரு பென்ச் 3.00ரூ, பென்ச் 2.00ரூ, தறா1.00ரூ என்று எழுதியிருக்கும் குறுகிய அரை வட்டமான திறப்பின் வழியே கையை நுழைத்து அனுமதிச் சீட்டைப் பெற்றுச் செல்வார்கள். விரைவில் கொட்டகையின் கூரையில் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் பாடல்கள் நிறுத்தப்பட்டு உள்ளே இருக்கும் ஒலிபெருக்கியில் மட்டும் கேட்கும்.
சினிமாக் கொட்டகையின் அருகே நெருங்கிச் சென்று உள்ளேயிருந்து ஒலிக்கும் பாடல்களைக் கேட்க முயற்சி செய்வேன். உள்ளே சென்று சினிமாவில் வரும் பாடல்களையும், இடைவேளையில் ஒலிக்கும் எனது விருப்பமான பாடல்களையும் கேட்க நினைப்பேன். ஆனால் பெரும்பாலும் என் பையில் ஒரு காசுகூட இருந்ததில்லை. பாடல்கள் முடிந்து படம் ஆரம்பித்ததும் வீட்டை நோக்கி மலைப்பாதையில் நடக்க ஆரம்பிப்பேன். கேட்டுக்கொண்டிருந்த பாடல்கள் உள்ளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க, தலையைத் தாள கதியோடு அசைத்துக் கொண்டு அலுப்பை உணராமல் நடந்து செல்வேன்.
சினிமாக் கொட்டகைக்குச் செல்ல முடியாத நாட்களில் வீட்டுக்கு அருகே இருக்கும் மலைக்குன்றில் ஏறிநின்று தூரத்திலிருந்து ஒலிக்கும் அந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பேன். குன்றின் உச்சியில் இரைந்து வீசும் காற்று சில நேரம் பாடல்களின் பல வரிகளைக் கொண்டு போய்விடும். எனினும் அங்கு நின்று கொண்டு தூரத்திலிருந்து மிதந்து வரும் பாடல்களைக் கேட்பது ஓர் அற்புதமான அனுபவம்.
மலேசியா வாசுதேவனின் பாடல்களைக் கேட்பதில் அப்போது என்ன காரணம் என்று விளங்காத வினோதமான மோகம் ஒன்றைக் கொண்டிருந்தேன். அவரது ‘ஒத்த ரூபா ஒனக்குதாரேன்’, ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’, ‘வெத்தல வெத்தல வெத்தலையோ’, ‘பட்டு வண்ண ரோசாவாம்’, கூடையிலே கருவாடு போன்ற பாடல்கள் எல்லாம் எனக்கு உவகையையும் உற்சாகத்தையும் தந்தது. இப்பாடல்கள் பாடப்பட்டிருந்த விதத்தின் மீது நான் ஒருவகையான காதலையே கொண்டிருந்தேன். ‘தண்ணி கறுத்திருச்சி’ பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏற்பட்ட விவரிக்கமுடியாத உற்சாகம் இன்னும் நினைவினுள் இருக்கிறது. இன்றும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அப்பாடல் என்னைப் புல்லரிக்கச் செய்கிறது!


‘செவ்வந்திப் பூமுடிச்ச’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ போன்ற பாடல்கள்கூட துள்ளலான தொனியில் அவர் பாடியிருக்கும் விதத்திற்காக எனக்குப் பிடித்திருந்தது. ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்’, ‘கண்ணத்தொறக்கணும் சாமி’, ‘வா வா வாத்தியாரே வா’, ‘ஆசை நூறுவகை’ போன்ற பாடல்கள் அவரது பாடல்களின் மீதான எனது விருப்பத்தை முழுமைப்படுத்தியது. மலேசியா வாசுதேவனின் பாடும்முறையில் இருந்த இயல்பான ஆற்றலும், நேர்மையான பாங்கும்தான் அவரது பாடல்களின் மீதான மோகத்தை எனக்குள் ஏற்படுத்தியது என்று பலகாலம் கழிந்து தான் எனக்குத் தெரிய வந்தது.
கேரளத்தில் பிரபல்யமடைந்த அவருடைய பெரும்பாலான பாடல்கள் வேகமான துள்ளிசையோடு கூடிய டப்பாங்குத்துப் பாடல்களே. எனவே அவருடைய மெல்லிசைப் பாடல்களையும், வேறுவகையான இசை பாணிகளிலமைந்த பாடல்களையும் கேட்கும் சந்தர்ப்பம் அப்போது எனக்கு வாய்க்கவில்லை. பிறகு ‘இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது’ (சிகப்பு ரோஜாக்கள்), ‘மலர்களே நாத ஸ்வரங்கள்’ மற்றும் ‘கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ’ (கிழக்கே போகும் ரயில்), ‘வான்மேகங்களே வாருங்கள்’ (புதிய வார்ப்புகள்), ‘மலர்களிலே ஆராதனை’ (கரும்புவில்), ‘பூவே இளைய பூவே’ (கோழி கூவுது), ‘பருவ காலங்களின் கனவு’ (மூடுபனி), ‘அடி ஆடு பூங்கொடியே’ (காளி), ‘பட்டுவண்ண சேலைக்காரீ’ (எங்கேயோ கேட்ட குரல்), ‘கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல’ (உனக்காகவே வாழ்கிறேன்) போன்ற பாடல்களைக் கேட்ட பின்னர், நமது காலத்தின் திறமைமிகுந்த தமிழ் சினிமா பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனே என்ற முடிவுக்கு வந்தேன். பல்வேறுவகையான உணர்ச்சிகளை மிகை இல்லாமல் யதார்த்தமாக வெளிப்படுத்தி வெகு இயல்பாகப் பாடும் திறன் கொண்டிருந்தவர். எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் மீண்டும் அவரது பல பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அவ்வெண்ணம் எனக்குள் மேன்மேலும் உறுதிப்படவே செய்கிறது.
டி.எம்.எஸ்.ஸைப் போலவே, மலேசியா வாசுதேவனும் தமிழில் மட்டுமே அதிகம் பிரபலமடைந்த பாடகர். மற்ற மொழிகளில் பாடுவது இவரது பலமாக இருந்ததில்லை. தனது தாய்மொழியான மலையாளம் உட்பட மற்ற மொழிகளின் உச்சரிப்பையும், நுணுக்கங்களையும் தன்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை என்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். எனவே பிறமொழிகளில் பாடும் வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால் நிர்ப்பந்தம் காரணமாகப் பத்துக்கும் குறைவான மலையாளப் பாடல்களையும், ஏறத்தாழ இருபது கன்னடப் பாடல்களையும், தெலுங்கில் ஓரிரு பாடல்களையும் பாடியிருக்கிறார். உச்சரிப்புப் பிழைகளையும் கடந்து மலையாளத்திலும், கன்னடத்திலும் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் பெரும் வெற்றியை அடைந்திருக்கின்றது. உதாரணத்திற்கு, பிரலயாந்தகா எனும் கன்னடப் படத்தில் இடம்பெற்ற ‘நாளே பருவே நன்னா கொடுவே’ என்ற நையாண்டிப் பாடல். இப்பாடலில் அவரது குரல் உருவாக்கிய இயல்பான துள்ளலும் பித்தும் கன்னடத்தில் கொடிகட்டிப் பறந்த மற்ற பல பாடகர்களைக் காட்டிலும் மிகுந்த திறமை வாய்ந்தவர் அவர் என்பதை நமக்குணர்த்தும்.
சோகமான தத்துவப் பாடல்களில் ஆரம்பித்த மலேசியா வாசுதேவனின் திரையிசைப் பயணம் மென்மையான காதல் ஜோடிப் பாடல்கள், வலுவான கிராமியப் பாடல்கள், நெஞ்சையள்ளும் காதல் பாடல்கள், பாசப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், டி.எம்.எஸ். சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் போன்றோரின் குரலை நகல் செய்து பாடிய பாடல்கள், முற்றிலும் மேற்கத்திய இசையிலமைந்த பல பாடல்கள் போன்றவற்றின் வழியே தொடர்ந்தது. ஆனால் துர்ப்பாக்கியமாக அவரது குரல் டப்பாங் குத்துப் பாடல்களுக்கே அதிகமாகப் பொருந்தும் என்று எப்படியோ முடிவு கட்டப்பட்டுவிட்டது. இவ்வாறாகவே மலேசியா வாசுதேவனுடைய பல்வகையான, பல்சுவையோடு பாடும் திறன் பலரால் கவனிக்கப்படாமலே போய்விட்டது.
அவர் பாடிய எத்தனையோ நல்ல பாடல்களைக் காட்டிலும் டப் பாங்குத்து வகைப் பாடல்களே தமிழ் நாட்டிலும் மிகவும் பிரபலமடைந்தது. ஆகவே அவருக்கு ஒரு குத்துப் பாடகர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. தீவிர தமிழ்த் திரை இசை ரசிகர்கள் சிலர் கூட இன்று வரை மலேசியா வாசுதேவன் ஒரு 6-8 (டப்பாங்குத்து தாளக்கட்டின் இசைச்சொல்) பாடகன் மட்டும் தான் என்றே நினைக்கின்றனர். தரமும் ஆழமும் குறைந்த இத்தகைய பாடல்களையே சங்கர்-கணேஷ் போன்ற இசையமைப்பாளர்கள் அவருக்குத் தொடர்ந்து வழங்கி வந்தனர். ஆனால் எத்தகைய பாடல்களை வழங்கினாலும் மலேசியா வாசுதேவன் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவற்றைப் பாடி வெளிப்படுத்தினார் என்பதே உண்மை. அவர் ஒரு குத்துப்பாடகர் என்ற முத்திரை விழுவதற்கு இதுவும் காரணமாயிற்று. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சில பாடல்கள் இசையின் தரத்தில் மேன்மையானதாக இல்லாவிட்டாலும், அவற்றை அவர் உண்மையோடும், துள்ளலோடும் பாடியிருக்கும் விதத்தைத் தான் நாம் கவனித்தாக வேண்டும்.
முப்பது வருடத்திற்கும் மேலாகத் திரையிசையிலும், பிறவகையான இசை முயற்சிகளிலும் மலேசியா வாசுதேவனின் பல்லாயிரம் பாடல்கள் அவருக்கே உரிய ஆற்றலோடு வெளிவந்திருக்கின்றன. வணிக வெற்றிகளை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட உலகின் போக்குகளில், குறிப்பாக சினிமா உலகின் போக்குகளில் அறியாமை நிரம்பியவராக இருந்த மலேசியா வாசுதேவன் மெதுவாகப் பேசும் குணம் கொண்ட மிக அன்பான மனிதர். எதையும் அடைவதற்காகவோ, உயர்ந்த நிலைக்குச் செல்வதற்காகவோ ஒருபோதும் தன்னை முன்னிறுத்தி சந்தைப்படுத்தாமல் இருந்தவர் அவர். அதனாலேயே ஒரு பாடகராக அவருடைய தமிழ் சினிமா பங்களிப்புகள் புகழப்படாமலும், பரிசீலிக்கப்படாமலும் இன்றுவரை பலரால் முற்றிலும் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கின்றது. மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையும் இசையும் கடந்து வந்த வழிகள் வியப்பூட்டுபவை.
ஏழைகளுக்கு வாழ்வதற்கு யாதொரு வழியும் புலப்படாமலிருந்த 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், வெள்ளையரின் சென்னை மாகாணத்துக்கு உட்பட்டிருந்த கேரளாவின் பாலக்காடு பகுதியிலிருந்து, பல குடும்பங்கள் வாழ வழி தேடி மலேசியாவுக்குக் கப்பலேறிச் சென்றது. ஒற்றப்பாலம் பகுதியைச் சேர்ந்த பதினேழு வயதான சாத்து நாயரும் குடும்பத்தினரும், பொல்ப்புள்ளி கிராமத்தைச் சேர்ந்த பனிரெண்டு வயதான அம்மாளு அம்மையும் அவரது குடும்பத்தினரும் மலேசியாவுக்கு இடம் பெயர்ந்த இந்தக் கூட்டத்தில் இருந்தனர். அக்குடும்பங்களுக்கு மலேசியாவில் க்ளாங் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்த ரப்பர் காடுகளில் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினரின் ஏற்பாட்டில் சாத்து நாயரும் அம்மாளு அம்மையும் திருமணம் செய்து, எட்டுக் குழந்தைகளின் பெற்றோர்களாயினர். அவர்களது எட்டாவது குழந்தையாக 1944 ஜூன் 15ல் வாசுதேவன் பிறந்தார்.
தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதியாக க்ளாங் பள்ளத்தாக்கு இருந்ததனால் அவருடைய குடும்பத்தினரின் தொடர்பு மொழியாகத் தமிழ் மொழி ஆகிவிட்டிருந்தது. ஆகவே, தமிழே வாசுதேவனுடைய வளர்ப்பு மொழியாகவும் விருப்ப மொழியாகவும் இருந்தது. பள்ளியிலும் தமிழ்வழிக் கல்வியே பயின்றார். சாத்து நாயர் இசையில் நாட்டம் கொண்டவராகவும், ஓரளவு இசையறிவு கொண்டவராகவும் இருந்தார். அவருக்குத் தெரிந்த இசையைக் குழந்தைகளுக்குப் போதித்தார். அவருடைய எல்லாக் குழந்தைகளும் பாடவும், இசையைப் புரிந்துகொள்ளவும் கூடியவர்களாக இருந்தனர். சிறுவயதிலேயே வாசுதேவன் இசையிலும் நடிப்பிலும் அதிக ஆர்வமுடையவராக இருந்தார். தனது எட்டாவது வயதிலேயே பார்வையாளர்கள் முன் பாடத் தொடங்கினார்.
ரப்பர் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்காக ஊர் ஊராகச் சென்று தமிழ் சினிமா போட்டுக் காட்டும் வழக்கம் அங்கே நிலவிவந்தது. தொழிலாளர்கள் பாய்படுக்கையோடு சென்று சினிமா பார்ப்பவர்களாக இருந்தனர். தொலைதூர ரப்பர் தோட்டங்களுக்கு நண்பர்களுடன் சைக்கிளில் சென்று அங்கு காண்பிக்கப்படும் சினிமாக்களையும் பார்த்துக் கொண்டிருந்தார் வாசுதேவன். அந்த சினிமாக்களின் தாக்கத்தால் பாடவும் நடிக்கவுமான ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது அவருக்கு. நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் பாடகர் டி.எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகராக மாறினார். வாசுதேவனின் விருப்பமான இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. இவர்கள் மூவரையும் ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என்பதே அவரது உக்கிரமான லட்சியமாக அப்போது இருந்தது.
வளர்ந்த பிறகு மலேசியாவில் இருந்த சில தமிழ் நாடகக் குழுக்களில் பாடக நடிகராக இணைந்து கொண்டார். இவ்வகையில், தமிழ் நாடக-சினிமாவின் பாடி நடிக்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்தான் வாசுதேவன் என்று சொல்லலாம். 1967ல், தனது 23வது வயதில் அவர் நடித்த ரத்த பேய் எனும் நாடகத்தை சினிமாவாக எடுக்க ஒரு மலேசியத் தயாரிப்பு நிறுவனம் முன் வந்தது. அப்படத்தை சென்னையில் படமாக்கத் திட்டமிட்டிருந்தனர். அந்தப் படப்பிடிப்புக் குழுவில் இணைந்து, முதன் முதலாகத் தன் தாய்நாட்டுக்கு 1968ல் வந்திறங்கினார் வாசுதேவன். அப்படத்தில் நடிக்கவும், ஜி.கே.வெங்கடேஷின் இசையமைப்பில் பாடவும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
படம் முடிந்ததும் தயாரிப்புக் குழு மலேசியா திரும்பிச்செல்ல, வாசுதேவன் சென்னையிலே தங்கியிருந்து சினிமாவில் பாடும் வாய்ப்புக்காக முயற்சி செய்ய முடிவெடுத்தார். அன்றிலிருந்து வாய்ப்புக் கேட்டு அலைந்து திரிந்த அவரது போராட்டம் பத்துவருட காலம் நீண்டது. தெரியாத ஊர், தெரியாத மக்கள், யாதொரு தொடர்புமில்லை, உதவி செய்யவும் யாருமில்லை! பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டு இசையமைப்பாளர்களையும், சினிமா கம்பெனி முதலாளிகளையும் சென்று பார்த்தார்.
தன்னை முன்னிறுத்தத் தெரியாதவராக இருந்ததனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிக்கவும் பாடவும் வாய்ப்புத் தேடி மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லும்போது, இங்குள்ளவர்களுக்கே வாய்ப்பில்லை, அதனால் அங்கேயே திரும்பிப் போகும்படி பெரும்பாலானோர் சொல்லியிருக்கின்றனர். சென்னையில் தொடர்ந்து இருக்க வழியில்லாத நிலை வந்தபோதெல்லாம் மலேசியாவுக்கே திரும்பிப் போய்விடலாம் எனும் எண்ணம் பலமுறை வந்திருக்கிறது அவருக்கு. ஆனால் திரும்பிச் செல்லும் முன்னர் ஏதேனும் ஒரு நல்ல சினிமாவில் ஒரேயொரு பாடலாவது பாடிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று உறுதியாய் இருந்தார்.
இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் அலுவலகத்துக்குத் தொடர்ந்து சென்று பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் அவரிடம் உதவியாளராக இருந்த இளையராஜாவைச் சந்தித்தார். இருவரும் நண்பர்களானார்கள். இளையராஜாவும் அவரது சகோதரர்களான கங்கை அமரனும் ஆர்.டி.பாஸ்கரும் சேர்ந்து ‘பாவலர் சகோதரர்கள்’ என்ற பெயரில் இசைக்குழு வைத்திருந்தனர். டி.எம்.எஸ். பாடல்களைப்பாடுபவராக அக்குழுவில் இணைந்து கொண்டார் வாசுதேவன். எம்.ஜி. ஆரால் அடிமைப்பெண் (1969) படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பாடிய முதல் பாடலே பெரும் வெற்றிபெற, ஒரு நட்சத்திரப் பாடகராக முன்வரத் தொடங்கியிருந்தார் அப்போது. அவரும் இளையராஜா சகோதரர்களின் குழுவில் பாடிக்கொண்டிருந்தார். பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர், இளையராஜா, எஸ்.பி.பி. போன்றவர்களின் நண்பர்கள் குழுவில் ஓர் அங்கமாக மலேசியா வாசுதேவன் மாறிய காலமும் அதுவே.
பாட வாய்ப்புக் கிடைக்கும் முதல் படமே பெரிய நிறுவனத்தைச் சேர்ந்ததாக அமைந்து, எம்.ஜி.ஆர். போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்தின் நடிப்பில் அப்பாடல் பெரும் வெற்றி அடையும்போது, அப்பாடகரின் எதிர்காலத்தை, ஏறுமுகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதே இல்லை! எஸ்.பி.பி.யின் வளர்ச்சியைப் பார்த்தால் இது புரியும். மலேசியா வாசுதேவனை விட எஸ்.பி.பி.யின் வணிகரீதியான உயர்வுக்கும், புகழின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம் அவர் எம்.ஜி. ஆரால் அறிமுகம் செய்யப்பட்டு அவரது ஆதரவைத் தொடர்ந்து பெற்றார் என்பதே. மலேசியா வாசுதேவனுக்கோ தமிழ் சினிமாவின் என்றென்றைக்குமான உச்ச நட்சத்திரம் எம்.ஜி.ஆரின் படங்களுக்குப் பாடும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை! உன்னைவிட மாட்டேன் என்று ஒரு எம்.ஜி. ஆர். படம், இளையராஜாவின் இசையமைப்பில் வருவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. அதில் மலேசியா வாசுதேவன் பாடிப் பதிவு செய்யப்பட்ட நம்பிக்கையூட்டும் ஒரு பாடலும் இருந்தது. ஆனால் அந்தப் பாடலோ, படமோ கடைசி வரை வெளியாகவேயில்லை!
மலேசியா வாசுதேவனுக்கு முதல் பாடும் வாய்ப்பு விளம்பரங்களில் தான் கிடைத்தது. ஏ.வி.ரமணன் போன்றவர்கள் உருவாக்கிய சில விளம்பரப் படங்களில் பாடினார். ஒலிப்பதிவுக் கூடத்தின் ஒலிவாங்கிகளில் பாடிப்பழகும் பயிற்சிக்களமாக இது அவருக்கு அமைந்தது. அப்பாடல்களை மீண்டும் மீண்டும் கவனித்துக் கேட்டு ஒலிப்பதிவுக்கு ஏற்ப பாடும் பயிற்சியைப் பெற்றார். தனது குறைகளைத் திருத்திக் கொள்ளவும் செய்தார்.
இளையராஜா குழுவின் ஒரு மேடை நிகழ்ச்சியைக் கண்ட எம். எஸ்.வி. வாசுதேவனின் சிறப்பான பாடும் முறையைப் பாராட்டி அவருக்கு வாய்ப்பளிப்பதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆயினும் எதுவும் நடக்கவில்லை. பலமுறை அவரை நேரில் கண்டு வாய்ப்புக் கேட்டிருந்தும் எம்.எஸ்.வி.யிடமிருந்து யாதொரு அழைப்பும் இல்லை. எம்.எஸ்.வி.யின் சொந்த ஊரான எலப்புள்ளி, வாசுதேவனின் தாயாரின் ஊரான பொல்ப்புள்ளியின் பக்கத்துக் கிராமமே. வாசுதேவன், எஸ்.ஜானகி போன்ற அற்புதமான பாடகர்களை எம்.எஸ்.வி. பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் இருந்ததும் அதே நேரத்தில் எஸ்.பி.பி. மற்றும் வாணி ஜெயராம் போன்றவருக்கு அதிக அளவில் வாய்ப்புகளை வழங்கியதும் ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

1972 ஆம் ஆண்டின் மத்தியில் வாசுதேவனுக்கு சினிமாவில் பாட முதல் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் பொள்ளாச்சி ரத்னம் என்ற தயாரிப்பாளருக்குத் தெரிந்தவராக இருந்தார். அவரின் மூலமாகவே அந்த வாய்ப்புக் கிட்டியிருந்தது. ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைப்பாட்டு. ‘பாலு விக்கிற பத்மா உன் பாலு ரொம்ப சுத்தமா?’ என்ற அந்தப் பாடலுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.
1973ல் பாரதவிலாஸ் படத்தில் வந்த ‘இந்திய நாடு என்வீடு’ என்ற டி.எம்.எஸ். பாடிய பாடலின் இடையில் வரும் சில வரிகளைப் பாட வைத்தார் எம்.எஸ்.வி. அதுவும் ஹிந்தி மற்றும் பஞ்சாபியில் அமைந்த வரிகள்! இதே படத்தில்தான் ‘சக்கபோடு போடு ராஜா, உன் காட்டில மழை பெய்யுது’ பாடலை டி.எம்.எஸ். பாடியிருந்தார். அதே வருடம் எம்.எஸ்.வி.யின் இசையில் தலைப்பிரசவம் எனும் படத்தில் ‘மாலையிட்டு பூமுடித்து’ என்ற பாடலைப் பாடினார் வாசுதேவன். ஆனால் அந்த வாய்ப்பும் பொள்ளாச்சி ரத்னத்தின் ஆதரவினால் கிடைத்ததேயாகும்.
வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதனின் இசையமைப்பில் குமாஸ்தாவின் மகள் (1974) எனும் படத்தில் ‘காலம் செய்யும் விளையாட்டு’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்புக் கிட்டும் வரை பெயரில்லாத, முகமில்லாத ஒரு பாடகராகவே வாசுதேவன் இருந்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் வாசுதேவனை ‘மலேசியா வாசுதேவன்’ என்று பெயர்மாற்றி படத்தின் டைட்டில் கார்டில் பெயர் வெளிவரவும் செய்தார். சிவகுமார் நாயகனாகவும், கமல்ஹாசன் எதிர் நாயகனாகவும் நடித்த படம் அது.
தன் ஆதர்ச இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.யின் இசையில் பல சிறந்த பாடல்களைப் பாடிவிட வேண்டும் என்பது பெரிய கனவாக மிஞ்சியிருந்தது. இக்கனவு அவருக்கு முழுமையாக நிறைவேறிவிட்டது என்று ஒருபோதும் சொல்லிவிட முடியாது. அவரது ஒட்டுமொத்த திரையிசைப் பயணத்தில் 15க்கும் குறைவான பாடல்களையே எம். எஸ்.வி.யின் இசையில் பாடியிருக்கிறார். அதில் பில்லா (1980) படத்தில் இடம்பெற்ற ‘வெத்தலையப் போட்டேண்டி’ என்ற பாடலே பெரிதும் ரசிக்கப்பட்டது. ஒரு டப் பாங்குத்து பாடலாயிருந்தும் அப் பாடலை அபூர்வமான சுவையோடு பாடியிருப்பார்.
சமீபத்தில் வெளிவந்த பில்லா படத்தில், பாடகர் கார்த்திக் பாடியிருக்கும் ‘வெத்தலையப் போட்டேண்டி’ ரீமிக்ஸ் பாடலைக் கேட்கும்போது சராசரிக்கும் மேலான ஒரு பாடகர் பாடுவதற்கும், ஒரு மேதை பாடுவதற்குமான வித்தியாசத்தை நம்மால் உணரமுடியும். எனது நண்பரான கார்த்திக் உட்பட்ட புதிய தலைமுறைப் பாடகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, மலேசியா வாசுதேவன் சாதாரணமாக நகலெடுக்கப்பட முடியாத ஒரு பாடகர். அவரது பாடல்களைப் பாடி மறு உருவாக்கம் செய்ய முயன்று உங்களை நீங்களே கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்பதே!
எம்.எஸ்.வி. - வாசுதேவன் கூட்டணியில் உருவான ‘எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை’ (சரணாலயம்) அற்புதமான ஒரு இசை அனுபவம். இதுவரை இப்பாடலைக் கேட்டிருக்காவிட்டால் உடனே கேட்டுப் பார்க்கவும். வாசுதேவனின் ஒப்பிடவியலாத மெல்லிசை பாடும் ஆற்றலை நிரூபிக்கும் அற்புதமான பாடல் இது என்பதை அறிய முடியும். இதே கூட்டணியில் அமைந்த மற்றுமொரு அருமையான பாடல் ‘எண்ணியிருந்தது ஈடேற’ (அந்த ஏழு நாட்கள்). துணைவி படத்தில் வரும் ‘முத்து மாணிக்க கண்கள்’ மிக அழகாக மலேசியா வாசுதேவன் பாடிய இன்னுமொரு எம்.எஸ்.வி. பாடல். “இப்பாடல்கள் வேறு யாராலேயும் இப்படி அற்புதமாகப் பாட இயலாது” என எம்.எஸ்.வி.யே வாசுதேவனைப் புகழ்ந்திருக்கிறார்!
1975-76ம் வருடங்களில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 1976ல் அவருடைய நண்பர் இளையராஜா அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது நெருங்கிய நண்பர் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போது தனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று நிச்சயமாக அவர் நம்பியிருந்திருக்கலாம். என்ன காரணத்தினாலோ அது கிட்டவில்லை. ஆனால் தனது இரண்டாவது படத்தில் இளையராஜா அவருக்களித்த ‘ஒத்த ரூபா ஒனக்குத்தாரேன்’ (பத்ரகாளி) என்ற பாடல் இன்றும் ரசிக்கவைக்கும், தமிழ்மண்ணின் கிராமிய உணர்ச்சிமிகுந்த பாடலாக இருக்கிறது.
இளையராஜா இசையமைக்க ஆரம்பித்த காலங்களில் அவரோடு அமர்ந்து இசையமைப்புப் பணிகளில் உதவியாக இருந்திருக்கிறார் வாசுதேவன். இளையராஜாவின் முதல் 14 படங்களில் உறவாடும் நெஞ்சம் என்ற படத்தில் ‘டியர் அங்கிள்’ எனத்தொடங்கும் சூழ் நிலைப் பாடல் ஒன்று வாசுதேவனுக்குக் கிடைத்தது. குழந்தைகளோடு சேர்ந்து பாடும் ஒரு பாடல் அது. எனினும் தனது வரிகளை மிகவும் உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பார். அவர் எனக்கே சொந்தம் என்ற படத்தில் ஏற்கனவே அனைவருக்கும் பரிச்சயமான ‘சுராங்கனி சுராங்கனி’ என்ற பைலா பாடலைப் பாடவைத்தார் இளையராஜா.
ரஜினிகாந்த் நடித்த புவனா ஒரு கேள்விக்குறி, சிவாஜிகணேசன் நடித்த தீபம் படங்களுக்கு இளைய ராஜா இசையமைத்தபொழுது தனக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பியிருந்திருக்கலாம். எனினும் பல காரணங்களால் அந்த வாய்ப்புகள் தரப்படவில்லை. தனது ஆதர்சமான நடிகர் சிவாஜிக்குப் பின்னணி பாடவேண்டும் என்ற கனவும் அப்போது நனவாகவில்லை. ஆனால் பிறகு தனது எல்லாப் பாடல்களையும் மலேசியா வாசுதேவனே பாடவேண்டும் என்று சிவாஜி கணேசன் வற்புறுத்திய கதையும் நடந்தது. அதேபோல் பின்னர் ரஜினிகாந்துக்காக மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் அனைத்துமே அவரது குரலுக்கும் நடிப்புப் பாணிக்கும் மிகப் பொருத்தமாக அமைந்தது.

தனது துர்காதேவி, துணையிருப்பாள் மீனாட்சி படங்களிலும் சில பாடல்களை வாசுதேவனுக்கு வழங்கியிருந்தார் இளையராஜா. 1978ல் வாசுதேவனின் அப்போதைய மற்றொரு நெருங்கிய நண்பரான பாரதிராஜா 16 வயதினிலே என்ற தனது முதல்படத்தை இயக்கினார். அப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களுடன் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ மற்றும் ‘செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா’ தமிழகம் முழுவதும் புகழின் உச்சத்துக்குச் சென்றது. உண்மையில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ ஜெயச்சந்திரனுக்கும் ‘செவ்வந்திப்பூ முடிச்ச’ எஸ்.பி.பிக்குமாக ஒதுக்கப்பட்டிருந்த பாடல்கள்! ஆனால் இப்பாடல்கள் வழியாக தமிழ் சினிமாவின் ஆளுமைமிக்க பாடகராக வாசுதேவன் உருவானார்.
16 வயதினிலே பாடல்கள் வெற்றி பெறும் வரை தானொரு பின்னணிப் பாடகராக வெற்றியடைவேன் என்று நம்பவே இல்லை என்று பின்னர் குறிப்பிட்டிருக்கிறார் வாசுதேவன்!
இளையராஜாவைப் பற்றி மலேசியா வாசுதேவன் எப்போதுமே “இளையராஜா எனக்குப் பெரும் உதவிகள் செய்திருக்கிறார். புகழ் பெற்ற பாடகனாக என்னை உருவாக்கியது அவரே. நான் நட்சத்திரப் பாடகனாக வரும்வரை எனக்குப் பின்பலமாக இருந்தார். பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எனது திறமையைச் சந்தேகித்தபோது அவர்களிடம் என்னை தீவிரமாகப் பரிந்துரைத்தவர் இளையராஜாதான். எனது பின்னணிப் பாடகராகும் போராட்ட வாழ்வில் நான் அடைந்த எல்லா வெற்றிக்கும் இளையராஜாவே காரணகர்த்தாவாக இருந்தார். எல்லாவகையான பாடல்களையும் பாடுவதற்கான வாய்ப்பு எனக்களித்தார். ரஜினிகாந்த் நடித்த மாவீரன், அதிசயப்பிறவி போன்ற படங்களில் வந்த எல்லாப் பாடல்களையும் எனக்கே அளித்தார். சிவாஜி நடித்த ராஜரிஷி படத்தில் டி.எம்.எஸ். குரல் வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டும், எனது பெயரை உறுதியாகப் பரிந்துரைத்தவர் இளையராஜா” என்றவாறெல்லாம் மிகவும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
“இளையராஜா இசையமைத்த, உங்கள் குரலில் வந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கக் கூடிய பல பாடல்கள் மற்ற பாடகர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதே” என்ற கேள்விக்கு, “எஸ்.பி.பி.க்கு சென்றிருக்க வேண்டிய ‘இந்த மின் மினிக்கு’, ‘வான் மேகங்களே’, ‘கோவில் மணியோசை’, ‘வா வா வசந்தமே’ போன்ற பாடல்கள் எனக்கும் வழங்கப்பட்டிருக்கிறதே” என்று பதிலளித்திருந்தார். ஒருபோதும் யாரையும் குறைசொல்லாத வாசுதேவன், தன் வெற்றிகளுக்காக இளையராஜாவைப் புகழ்ந்திருந்தாலும் அவருடைய குரலின் தீவிர ரசிகர்கள் பலரின் அபிப்ராயம் என்னவென்றால், முக்கியமான இன்னும் பல பாடல்களைப் பாட இளையராஜா அவருக்கு வாய்ப்பளித்திருக்கலாம் என்பதே. இளையராஜாவின் அணியில் இருந்த மிகச் சிறந்த பாடகர் இவரே என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
தான் பாடிய எல்லா கிராமியப் பாடல்களிலும் கிராமிய உணர்வின் துடிப்பும் வண்ணங்களும் வெளிப்படுத்தினார் வாசுதேவன். மேற்கூறப்பட்ட பல பாடல்கள் மட்டுமல்லாமல் ‘ஏறாத மலை மேலÕ (முதல் மரியாதை), ‘ஏத்தமய்யா ஏத்தம்’ (நினைவே ஒரு சங்கீதம்), ‘தாலாட்ட நான் பிறந்தேன்’ (தூறல் நின்னு போச்சு), ‘உன்னப்பார்த்த நேரம்’ (அதிசயப்பிறவி), ‘அரிசிகுத்தும் அக்கா மகளே’ (மண்வாசனை), ‘சொக்குப்பொடி கக்கத்தில’ (மாவீ ரன்), ‘ஆப்பக்கடை அன்னக்கிளி’ (பாயும் புலி), ‘ஆளானாலும் ஆளு’ (பாலைவனச் சோலை) போன்ற பல பாடல்களை அவர் பாடியிருக்கும் விதத்தில் நாம் தமிழ்க் கிராமியப் பாடல்களின் துள்ளல்களையும் உணர்வுகளையும் துல்லியமாய் உணரமுடியும்.
சமீபத்தில் வெளிவந்த ‘ஆளானாலும் ஆளு’ பாடலின் வடிவத்தைக் கேட்க நேர்ந்தால் துள்ளலான கிராமியப் பாடல்களை அதன் இயல்பான பாவங்களுடன் பாடுவதற்கு அசாதாரணமான பாடும் திறமைகொண்ட வாசுதேவன் போன்ற ஒரு பாடகன் வேண்டும் என்பது உறுதியாகிவிடும். மலேசியா போன்ற நவீன பிரதேசத்தில் வளர்ந்த ஒருவருக்குத் தமிழ் நாட்டுக் கிராமியப் பாடல்களைப் பாடுவதில் இருந்த ஆற்றல் என்பது ஆச்சரியமான ஒன்றே. சிறுவயதில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாடிய சில கிராமியப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தும், சென்னை வந்த பிறகு கங்கை அமரனும், இளைய ராஜாவும் மதுரையின் வட்டார வழக்கையும் பாடல் வகைகளையும் சொல்லிக்கொடுத்தும் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கூர்மையாக அவதானித்துக் கற்றுக்கொள்வதும் பாடப்படும் உணர்வின் ஜீவனுக்குள் அகழ்ந்து செல்லும் மேதமையும் அவரிடம் இயல்பாக இருந்தது என்பதே நிதர்சனமாகும்.
நாட்டுப்புறப் பாணியில் அமைந்த மென்மையான பாடல்களான ‘பொன்மானைத் தேடி’ (எங்க ஊர் ராசாத்தி), ‘பட்டுவண்ண சேலைக்காரி’ (எங்கேயோ கேட்ட குரல்), ‘குயிலுக்கொரு நெறம் இருக்கு’ (சொல்லத் துடிக்குது மனசு), ‘ஆத்து மேட்டிலே’ (கிராமத்து அத்தியாயம்), ‘ஆகாயம் பூமி என்றும் ஒன்றா’ (சாமந்திப்பூ), ‘கம்மாக்கரை ஓரம்’ (ராசாவே உன்னை நம்பி), ‘பெத்து எடுத்தவதான்’ (வேலைக்காரன்), ‘தானந்தனா கும்மி கொட்டி’ (அதி சயப்பிறவி), ‘தென்கிழக்குச் சீமையில’ (கிழக்குச்சீமையிலே), ‘வெட்டி வேரு வாசம்’ (முதல் மரியாதை) போன்றவற்றில் வெளிப்படும் உணர்ச்சிகளின் உயரத்தை அவர் காலத்தைச் சேர்ந்த எந்த ஒரு பாடகராலும் நெருங்க முடிந்ததில்லை. உதாரணத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைப்பில் வந்த ‘பட்டு வண்ண ரோசாவாம்’ (கன்னிப்பருவத்திலே) பாடலையும் இளையராஜா இசையமைப்பில் எஸ்.பி.பி. பாடிய ‘உச்சிவகுந்தெடுத்து’ (ரோசாப் பூ ரவிக்கைக்காரி) பாடலையும் உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள். இரண்டு பாடல்களுமே ஒரே கிராமியப் பாடலின் மெட்டில் அமைந்திருந்தும், ஏறத்தாழ ஒரே வகையான ஏக்க உணர்வுகளைக் கொண்டிருந்தும், பாடப்பட்டிருக்கும் பாவத்தை ஒப்பிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தனக்குக் கிடைத்த குறைவான செவ்வியல் இசை அடிப்படையில் அமைந்த பாடல்களையும் மேலான ஆர்வத்துடன் அனாயாசமாகப்பாடியிருக்கிறார் மலேசியா வாசுதேவன். ராஜரிஷி படத்தில் ‘புயல் என எழுந்ததடா’, ‘சங்கரா சிவசங்கரா’ பாடல்களும், மாவீரன் படத்தில் ‘அம்மா அம்மா’, பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் ‘இசையாலே நான் வசமாகிறேன்’, ஒருவர் வாழும் ஆலயம் படத்தில், ‘மலையோரம் மயிலே’, மணிப்பூர் மாமியார் படத்தில், ‘ஆனந்த தேன் காற்று’ (இதில் சி.எஸ்.ஜெயராமன் குரலைப் போல்), மருமகளே வாழ்க படத்தில் ‘அலங்காரம் அபிஷேகம்’, ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் ‘கதிரவன் எழுந்தான்’, கரும்பு வில் படத்தில், ‘மலர்களிலே ஆராதனை’, தணியாத தாகம் படத்தில் ‘பூவே நீ யார் சொல்லி’ போன்ற பாடல்கள் எல்லாம் கர்நாடக இசையின்ராக அடிப்படையில் அமைந்தவையாகும். சற்றும் வலிந்து பாடாமல் சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் இப்பாடல்களை அவர். இவற்றில், ஏ.ஏ.ராஜ் இசையமைப்பில் ‘பூவே நீ யார் சொல்லி’ பாடலில் ‘பூவே’ எனத் தொடங்கும் வார்த்தையின் முடிவில் வரும் சிறிய, ஆனால் கடினமான சங்கதியை அனாயாசமாக அவர் பாடியிருக்கும் விதம் அவரது பாடும் மேதமைக்குச் சான்று.
உச்சக்குரலில் பாடும் பல பாடல்களை எவ்வித தடுமாற்றங்களும், வீழ்ச்சிகளும் இல்லாமலே வெளிப்படுத்தியிருக்கிறார். மேற்சொன்ன ராஜரிஷி, மாவீரன் பாடல்களும், ‘எழுகவே’ (மாவீரன்), ‘மனிதன் மனிதன்’ (மனிதன்), ‘ஒரு தென்றல் புயலாகி’ (புதுமைப்பெண்), ‘மாமாவுக்கு குடுமா’ (புன்னகை மன்னன்) போன்ற இன்னும் பல பாடல்களும் அசாதாரணமான உச்சஸ்தாயியில் அமைந்த பாடல்கள் ஆகும். ‘மாமாவுக்கு குடுமா குடுமா’ ஒரு மிகச் சிறந்த நையாண்டிப் பாடல். அதன் ஒவ்வொரு அடியையும் மிகவும் உற்சாகமான தொனியில் அனுபவித்துப் பாடியிருப்பார்.
மேற்கத்திய இசைப்பாணியில் அமைந்த பாடல்களை அற்புதமாகப் பாடுவதில் வல்லவராக இருந்தார் வாசுதேவன். ‘கோடை காலக் காற்றே’ (பன்னீர் புஷ்பங்கள்), ‘தேடினேன் புதிய சுகம்’ (சங்கர்லால்), ‘இந்த மின்மினிக்கு’ (சிகப்பு ரோஜாக்கள்), ‘பாட்டு இங்கே’ (பூவிழி வாசலிலே), ‘பருவ காலங்களின் நினைவு’ (மூடுபனி), ‘ஏய் மைனா’ (மாவீரன்) போன்ற பாடல்களை, வேறு யாரால் இந்திய பாணியின் சாயல் துளி கூட இல்லாமல் இவ்வளவு துல்லியமாகப் பாடமுடியும்? ‘தேடினேன்’ பாடலில் கிஷோர் குமாரின் பாடும்முறையில் சிலசமயம் வருவது போன்ற துலக்கமான மேற்கத்திய இசையுணர்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். இதுபோன்ற பாடல்களைப் பாடும் முறையில் வாசுதேவனின் ஆற்றலை மதிப்பிடுவதற்கு யேசு தாஸ் பாடிய ‘லோல ராக காற்றே’ என்ற மலையாளப் பாடலைக் கேட்க வேண்டும். இது ‘கோடைகாலக் காற்றே’ பாடலின் மலையாள வடிவமாகும்!
இதயத்தில் ஒரு இடம் எனும் படத்தில் இடம்பெற்ற ‘காலங்கள் மழைக்காலங்கள்’ எனும் பாடலில் வலிமையான அவர் குரல் மென்மையான காதல் உணர்வைப் பரவச் செய்வதைக் கேட்டுணரலாம். ‘கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல’ (உனக்காகவே வாழ்கிறேன்) எனும் பாடல் கடினமான தாளக்கட்டில் அமைந்த ஒன்று. எனினும் அதை மிகவும் உணர்வுபூர்வமாகவும் மென்மையாகவும் அவர் பாடியிருக்கிறார். ‘கண்ணத்தொறக்கனும் சாமி’, ‘வா வா வாத்தியாரே வா’, ‘நிலா காயுது’ போன்ற பாடல்களில் காம உணர்வு அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். ‘ஒரு தங்க ரதத்தில்’ (தர்மயுத்தம்) பாடலில் சகோதரப் பாசத்தின் கதகதப்பை நாம் உணரமுடியும். ‘அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா’ (படம்- நண்டு) பாடலை அவர் பாடும் விதமும் அதில் அவர் வெளிப்படுத்தும் பாவங்களும் கஸல்மேதை மெஹ்தி ஹஸனின் பாடும்முறைக்கு நிகரானது என்றே சொல்வேன்!
இன்றுபோய் நாளைவா படத்தில் ‘பல நாள் ஆசை’ பாடலில் வரும் “இது மாலை சூடும் நேரம், இனி காண்போம் ராஜயோகம்” என்ற வரிகளைப் பாடியிருக்கும் விதத்தைக் கேட்கும்போது அது நம்மைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தும். தைப்பொங்கல் படத்தில் ‘பனி விழும் பூ நிலவே’ பாடல் அவர் பாடிய மிகச்சிறந்த காதற்பாடலில் ஒன்றாகும். ராக அடிப்படையில் அமைந்த ‘மலர்களே நாத ஸ்வரங்கள்’ (கிழக்கே போகும் ரயில்) பாடலில் முதல் வார்த்தையான “மலர்களே” என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதமே அப்பாடலில் பலநாள் லயித்திருக்கப் போதுமானது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வந்த ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலை எப்போது கேட்டாலும் ஆனந்தமே. இப்பாடலில் சரணத்தில் வரும் ‘மந்தாரைச் செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடுநேரம்’ போன்ற இடங்களில் அசாதாரணமான ஒரு பாவத்தைத் தொட்டு வெளிப்படுத்தியிருப்பார். ‘வெட்டி வேரு வாசம்’ பாடலில் வரும் ‘வேருக்கு வாசம் உண்டோ மா..னே’ எனும் வரிகளில் மா....னே என விளிக்கும் இடத்தில் வரும் உணர்ச்சியின் வெளிப்பாட்டின் அருகில் சாதாரணமாக எந்த ஒரு பாடகராலும் நெருங்கிச் செல்ல இயலாது.


முதல் மரியாதை படத்தில் இரண்டு வேறுவிதமான உணர்வுகள் ஒரே பாடலில் சங்கமிக்கும் படியாக அமைக்கப்பட்டிருந்த ‘பூங்காற்று திரும்புமாÕ பாடல் உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சத்தை தொட்ட அவரது மற்றுமொரு பாடல். ஒரே மெட்டிலும், இசையமைப்பிலும் அமைந்திருந்த அப்பாடல் ஆரம்பிக்கும்போது வரும் சோகமான மன நிலையிலிருந்து பாடலின் இறுதியில் சந்தோஷமான மனநிலைக்கு மாறும் ரசவாதம் நிகழ்ந்திருக்கும். பாடல் வரிகளாலும் வாசுதேவன் பாடும் முறையாலும்தான் அந்த மாற்றம் நிகழும். அதிசயப்பிறவி படத்தில் ‘ஒன்னப் பார்த்த நேரம்’ மற்றும் ‘தானந்தன கும்மி கொட்டி’ பாடல்கள் முழுதும் சந்தோஷம் பொங்கிப் பரவும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய ஒரே முக்கியமான பாடல் ‘தென்கிழக்குச் சீமையிலே’ மட்டுமே. சாதாரணமான மெல்லிசையில் அமைந்த ஒரு பாடலை திறன்மிக்க பாடகர் ஒருவரால் எவ்வளவு உச்சத்துக்குக் கொண்டுபோக முடியும் என்பதற்கு முத்தான உதாரணம் இந்தப் பாடல்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்ல முடியும். மலேசியா வாசுதேவனின் பாடும் விதத்தைப் பற்றி விரிவாகச் சொல்லவேண்டுமென்றால் ஒரு தனிப்புத்தகமே எழுத வேண்டிவரும்.
அவருக்கு மிகவும் தனித்துவமான குரல் இருந்தும் டி.எம்.எஸ். போலவும் மற்ற பாடகர்களைப் போலவும் நகலெடுத்து அற்புதமாகப் பாடுவார். ஆனால் அவரது தனிப் பாணியை மற்றவர்கள் நகல் செய்து பாடுவது மிகவும் கடினமான காரியம். சமீபத்தில் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில், தற்போது பிரபலமாக இருக்கும் க்ரிஷ் என்ற பாடகர் ‘பூவே இளைய பூவே’ பாடலை மலேசியா வாசுதேவன் முன்னிலையிலே மிகமோசமாகப் பாடுவதை காணநேர்ந்தது! நீங்கள் ஒரு பாடகராக இருந்தால், ‘கோடைகாலக் காற்றே’ பாடலில் மலேசியா வாசுதேவன் வெளிக்கொணர்ந்த அதே உணர்ச்சியோடு பாடிக் காட்டுங்கள் பார்க்கலாம்! யேசுதாஸால் கூட அது முடியவில்லை!
மலேசியா வாசுதேவன் ஒரு போதும் போலியான கச்சிதத்தையோ, செயற்கையான இனிமையையோ தனது பாடலில் உருவாக்குவதில்லை. அவருடைய சமகாலத்தைச் சேர்ந்த மற்ற சில பாடகர்களைப் போல வலிந்து பாடப்படும் சங்கதிகளையோ, பாடலின் இடையிடையே தேவையில்லாமல் முனகுவது, முக்குவது, சிரிப்பது, அழுவது போன்ற செயற்கைகளையோ நாடியதில்லை. பாடும்போது ஏற்படும் இயல்பான மனிதக் குறைகளை அவர் பொருட்படுத்தியதுமில்லை. ஆனால் பாடலின் உணர்ச்சிக்கேற்றவாறு இயல்பாகப் பாடிச்சென்று நுட்பமான உச்சத்துக்குச் செல்ல ஒருபோதும் தவறியதுமில்லை. மெஹ்தி ஹஸன், நுஸ்ரத் ஃபதே அலிகான், கிஷோர் குமார், முகம் மது ரஃபி, டி.ஆர்.மகாலிங்கம், ஏ.எம். ராஜா போன்ற மகத்தான பாடகர்களின் பாடும் முறையும் இவ்வாறானதாகவே இருந்தது எனபதை நாம் கவனிக்க வேண்டும்.
தனது விருப்பமான பாடகர்களாக லதா மங்கேஷ்கர், முகம்மது ரஃபி, கிஷோர் குமார், டி.எம்.எஸ், திருச்சி லோகநாதன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, யேசுதாஸ் ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கிறார் மலேசியா வாசுதேவன். ஆனால் ஆண் அல்லது பெண் ஜோடிப் பாடல்களில் பெரும்பாலும் சேர்ந்து பாடுபவர்களை விட சிறப்பாகப் பாடியிருக்கிறார் வாசுதேவன். எஸ்.ஜானகியைத் தவிர மற்றவர்களால் பலசமயம் இவருக்கு இணையாகப் பொருந்திப்போக முடிந்ததில்லை. ‘என்னம்மா கண்ணு’ பாடலாகட்டும், ‘நண்பனே எனது உயிர் நண்பனே’ பாடலாகட்டும் அல்லது அவரது எந்த ஒரு ஆண் ஜோடிப் பாடலாக இருக்கட்டும், அடுத்த முறை கேட்கும் போது இரண்டு பேர் பாடுவதையும் கூர்ந்து கவனியுங்கள். நான் இங்கு என்ன சொல்லவருகிறேன் என்பது நன்றாகப் புரியும்.
முன்சொன்னது போல தற்போது நிகழ்ந்து வரும் ரீமிக்ஸ் கலாச்சாரத்தில் இரக்கமேயில்லாமல் தாக்கப்பட்ட பாடகர் மலேசியா வாசுதேவன். ‘வெத்தலையப் போட்டேண்டி’, ‘ஆளானாலும் ஆளு’ பாடல்களின் உதாரணத்தையும் மேலே சொல்லியிருக்கிறேன். டி.இமானின் இசை ‘அமைப்புத் தவறில்’ ‘என்னம்மா கண்ணு’ பாடலைக் கார்த்திக்கும், ரஞ்சித்தும் பாடி எப்படி படுகொலை செய்திருந்தனர் என்பதை நாம் எல்லாரும் அறிவோம். தற்போதைய இளைய தலைமுறைப் பாடகர்களுக்கு இசை என்பது சுரங்களின் தொகுப்பு மட்டுமே என்றாகிவிட்டது போல் தோன்றுகிறது!
என்னை மிகவும் வருந்தியழ வைத்த கொடூரமான ரீமிக்ஸ் ‘தண்ணி கறுத்திருச்சி’ பாடல்தான். பாடகனே அல்லாத சிம்பு அற்புதமான அந்தப் பாடலைக் கடைசித்துணுக்கு வரை கொத்திக் குதறியிருந்தார். இந்தப் புதிய தலைமுறை குப்பையர்கள் (junkies) எப்போதைக்குமான அந்த அற்புதப் பாடலை வன்புணர்ந்து கொலைசெய்து விட்டது போல் உணர்ந்தேன். எரியிற நெருப்பில் எண்ணெயூற்றுவது போல இடையிடையே மலேசியா வாசுதேவனின் குரலையும் அசல் பாடலிலிருந்து வெட்டி, ஒலிக் குறிப்பை மாற்றி கோரமாக ஒலிக்க ஒட்டியிருக்கின்றனர். ‘ஆசை நூறுவகை’ ரீமிக்ஸ் பாடலில் யுவன்சங்கர் ராஜாவும் மலேசியாவின் குரலைத் தனது தந்தையின் களஞ்சியத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார். நவீனம் என்ற பெயரில் கடந்த காலத்தின் இசைப்போக்குகளையே மாற்றியமைத்தபல பாடல்களின் மீது வெட்கங்கெட்ட வகையில் இந்த ரீமிக்ஸ் அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது!
சாமந்திப்பூ, இதோ வருகிறேன், பாக்கு வெத்தல, கொலுசு, உறவுகள் மற்றும் ஆயிரம் கைகள் போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் வாசுதேவன். இவற்றிலிருந்து சாமந்திப்பூ படத்தின் மூன்று பாடல்கள் மட்டுமே எனக்குக் கிடைத்தது. இவற்றை வைத்து அவரது இசையமைக்கும் ஆற்றலை மதிப்பிட்டால், அவரைச் சிறந்ததொரு இசையமைப்பாளராகவே மதிப்பிடுவேன். ஏற்கனவே குறிப்பிட்ட 'ஆகாயம் பூமி இரண்டும் ஒன்றா' என்ற பாடலை அவரே பாடியிருக்கின்றார். 'மாலை வேளை.' பாடலை எஸ்.பி.பி.யும், 'கனவுகளே ஊர்கோலம் எங்கே' பாடலை எஸ்.ஜானகியும் பாடியிருக்கிறார்கள். மூன்றுமே அற்புதமான மெல்லிசைப் பாடல்கள். ஏறத்தாழ 85 படங்களில் நடிகராகவும் தோன்றியிருக்கிறார் வாசுதேவன். ஆனால் பாடகர் மலேசியா வாசு தேவன்தான் எட்டாத உயரத்தில் நிற்கிறார்.
தமிழ் சினிமா இசையின் போக்குகள் மாறத்தொடங்கிய பின்னர், அவருக்குப் பாடும் வாய்ப்புகளும் குறைந்துவிட்டன. இந்தப் பின்னணியில் 1989ம் ஆண்டு நீ சிரித்தால் தீபாவளி என்ற படத்தை அவர் தயாரித்தார். அப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. சொந்த வீடு உட்பட எல்லா பணத்தையும் இழந்தார். அதன்பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பாடல்களைப் பாடினார். அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'தென்கிழக்குச் சீமையிலே' பாடலும் அடங்கும். 1997ல் வந்த ரஹ்மானின் மின்சாரக் கனவு படத்தில் ‘பூ பூக்கும் ஓசை’ என்ற பாடலில் ‘ஹில்கோரே... ஹில்கோரே’ என்று அவரைக் கத்த வைத்ததையும் நாம் கேட்டோம்! அதற்குப் பிறகு அவரைப் பற்றி அதிகம் நாம் கேள்விப்படவேயில்லை.
ஒரு பேட்டியின்போது “எனது காலத்தின் எல்லா இசையமைப்பாளர்களையும் நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் வாய்ப்புக்காக அவர்களிடம் சென்றதில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளி விட்டு எனக்குக் கிடைக்கவேண்டும் என்றும் நினைத்ததுமில்லை. யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை. அதனால் வருத்தங்களும் இல்லை” என்று குறிப்பிட்டார். “ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். அதனால் வருத் தங்களோ வழக்குகளோ இல்லை. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறவில்லையே என்ற குறை உணர்ச்சி எனக்கில்லை, பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறைதான் இருக்கிறது. அதுவே போதும். இவ்வாழ்வில் பெருமைப்படுவதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை, வருத்தப்படுவதற்கும் ஒன்றுமில்லை. வாழ்க்கை போய்க்கொண்டேயிருக்கிறது. என்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து திருப்தியடையும் ஆள்தான் நான்” என்று அவர் சொன்னார்.
“பாடல்பதிவுக்காகவோ, மேடை நிகழ்ச்சிகளுக்காகவோ தரப்படும் பணத்தை நான் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததே இல்லை. மனிதர்களை நம்பினேன். சிலர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருந்தார்கள், பலர் அப்படி இல்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். பிறகு மேடை நிகழ்ச்சிகளையே வாழ்வின் இருப்பிற்காக நம்பி இருந்த காலத்தில் கூட சுத்தமாகப் பணமே வாங்காமல் அல்லது அரைகுறையாக வாங்கிக் கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்!
2003 ஆம் ஆண்டில் மேடை நிகழ்ச்சிகளுக்காக மலேசியாவில் இருந்தபோது மூளையில் ஏற்பட்ட கோளாறினால் கடுமையான பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அவரது உடம்பு செயலிழந்தது. சினிமாத் துறையினரிடமிருந்து எஸ்.பி.பால சுப்ரமணியத்தையும் கங்கை அமரனையும் தவிர ஆதரவான எந்த ஒரு குரலும் அவரை அழைக்கவே இல்லை. எந்தத் துறையில் பல பதிற்றாண்டுகள் பணியாற்றி அங்கு பலருக்கும் உதவி செய்திருக்கிறாரோ, அங்கிருந்து நலம் விசாரிக்கக் கூட எவரும் இல்லை. புகழின் உச்சியில் இருந்தபோது அவர் வீடு எப்போதும் விருந்தினர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என நிரம்பியிருக்கும். ஆனால் அவர் பொருளாதார ரீதியில் விழுந்து, புகழின் இறங்குமுகத்தில் இருந்தபோது எல்லோரும் மாயமாய் மறைந்துவிட்டிருந்தனர். அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டபோது முற்றிலுமாக அவரைப் புறக்கணித்து தனிமையில் விட்டனர். மலேசியா வாசுதேவன் என்ற உச்சநட்சத்திரப் பாடகர் மறக்கப்பட்ட ஒருவராக ஆகிவிட்டார். அவரைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லாத நிலையில் அவரது ரசிகர்களும் கூட அவரைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்கள்.
ஒருவழியாகக் கைவசம் இருந்த எல்லாச் செல்வங்களையும் செலவு செய்து கொஞ்சம் நலத்திற்கு மீண்டு வந்து அவ்வப்போது ஓரிரு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாழ்வு நகர்ந்தது. துரதிருஷ்டவசமாக 2008லும், 2009லும் மீண்டும் நோயின் தாக்குதலுக்கு ஆளானார். நடக்கவோ, பேசவோ இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார். மாதக் கணக்கில் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்தார். தொடர்ந்த சிகிச்சை மற்றும் உடற்பயிற்சியின் காரணமாக சிரமத்துடன் நடக்கவும், சிரமமில்லாமல் பேசவும் முடிகிறது இப்போது. இடது கை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறிய வரியைக் கூட, ஒரு சுரத்தைக்கூட அவரால் இப்போது பாட முடியவில்லை.
தன் வாழ்க்கையையே இசைக்கு அர்ப்பணித்த ஒரு மகத்தான பாடகனுக்கு இதைவிட என்ன பெரிய துயரம் நிகழமுடியும்? உயர் சிகிச்சைகள் மீண்டும் நலத்தைக் கொண்டு வரக்கூடும். ஆனால் எப்படி? இதுவே அவர் தற்போது கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருக்கும் எனப்படுகிறது. நவீன தமிழ் சினிமா இசையின் மிகவும் அபூர்வமான பாடகர்.. மிதமிஞ்சிச் செல்லாத உணர்ச்சிகளோடும், இசையின் மீதான தீராத வேட்கையுடனும் ஆச்சரியகரமான முறையில் தனது பாடல்களை வெளிப்படுத்திய பாடகர்... திரைப்படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கும் நமது கலாச்சாரத்தில் எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் மலேசியா வாசுதேவன். அவரது இசையும் வாழ்வும் இதுவே...
இது அகல்விளக்கு படத்தில் அவர் பாடிய பாடல் வரிகள்...
'எல்லோரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போகப்போறோம்?
கடைசியில எங்கே கொண்டு வைக்கப்போறோம்?’

2 கருத்துகள்:

  1. வணக்கம் அனைவருக்கும் திரு மலேசியா வாசுதேவனின் ரசிகன் நான் அவருடைய ராஜரிஷி பபாத்தில் பாடிய சங்கரா சிவ சங்கரா என்ற பாடலின் வரிகள் எவ்ளோவோ துழாவியும் கிடைக்கவில்லை இப்ப்பாடல் நான் மிகவும் விரும்பி கேட்ட ரசித்த பாடல் லிரிக்ஸ் வாலி அய்யாவினுடையது எனக்கு இப்பாடல் வரிகள் என் மெய்ளுக்கு அனுப்ப முடியுமா pls pls

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அனைவருக்கும் திரு மலேசியா வாசுதேவனின் ரசிகன் நான் அவருடைய ராஜரிஷி பபாத்தில் பாடிய சங்கரா சிவ சங்கரா என்ற பாடலின் வரிகள் எவ்ளோவோ துழாவியும் கிடைக்கவில்லை இப்ப்பாடல் நான் மிகவும் விரும்பி கேட்ட ரசித்த பாடல் லிரிக்ஸ் வாலி அய்யாவினுடையது எனக்கு இப்பாடல் வரிகள் என் மெய்ளுக்கு அனுப்ப முடியுமா pls pls

    பதிலளிநீக்கு