செவ்வாய், 31 ஜனவரி, 2017

நடிகர் நகேஷ் நினைவு தினம் ஜனவரி 31

நடிகர் நகேஷ் நினைவு தினம் ஜனவரி 31.

நாகேஷ் ( செப்டம்பர் 27 , 1933 - ஜனவரி 31 ,
2009 ) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு , தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார் .
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை
பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார். புதுவசந்தம் , சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த
ஆனந்த்பாபு இவர்தம் மகனாவர்.
நடிப்புத் துறையில்
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர்
மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன் ,
எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
கதாநாயகனாக
நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம் , நவக்கிரகம் ,
எதிர் நீச்சல் , நீர்க்குமிழி , யாருக்காக அழுதான் , அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கமல்ஹாசன் உடனான நட்பு
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல
கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார்.
மைக்கேல் மதன காமராஜன் , மகளிர் மட்டும் ,
அவ்வை சண்முகி , பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம்
தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும்.
புதுவசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த்பாபு இவர்தம் மகனாவர்.
இதனையும் காண்க
நாகேஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் விவரம் பார்க்க, நாகேஷ் நடித்த தமிழ் திரைப்படங்கள்

ஜனவரி.31 - நாகேஷ் நினைவு தினம் - 25 நினைவுகள்..
நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!...

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது.

*நகைச்சுவை நடிகர் நாகேஷ்*

அவர்களின்,

*தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...*

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

*வானொலி:*

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

*நாகேஷ்:*

நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது,

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,

குறுக்குப் பலகைகள் போட்டு,

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து,

*கிரஹப் பிரவேசத்தன்று*

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,

எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு *கிரஹகப் பிரவேசம்* நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.

ஆடுமாடுகள் மேயும்.

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.

அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக