செவ்வாய், 12 டிசம்பர், 2017

கவிஞர் ஆலங்குடி சோமு பிறந்த தினம் டிசம்பர் 12 ,1932.



கவிஞர் ஆலங்குடி சோமு பிறந்த தினம்  டிசம்பர் 12 ,1932.

ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 - 6 சூன் 1990) தமிழ்த் திரைப்படபாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 - 1974 பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் ,
காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். [1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.
தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை

சில பிரபல பாடல்கள்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... ( அடிமைப் பெண் )
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)
இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களைன் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.
==தயாரித்த படங்கள்--
பத்தாம் பசலி
வரவேற்பு

ஆலங்குடி சோமு [பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர்]
தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக் காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு.
1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் திகதியன்று பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பளை அவசியந்தான்’’ என்ற பாடல். இஃது ஓர் நகைச்சுவைப் பாடல். படத்தில் இப்பாடல் காட்சியில் நகைச்சுவைச் செம்மல் குலதெய்வம் ராஜகோபாலும் மனோரமாவும் நடித்திருந்தனர். பாடலும் வெற்றியைப் பெற்றது.
1961-இல் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ படத்துக்காக ’கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்’, 1963-இல் ‘கலையரசி’ படத்தில் ’நீல வானப் பந்தலில்’, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் ‘அவனியெல்லாம் புகழ் மணக்கும் அம்மன் அருள்’, பி.பானுமதி பாடிய ’மயங்காத மனம் யாவும் மயங்கும்’ போன்ற பாடல்கள் ஆலங்குடியாரின் பிரபலமான பாடல்களாகும்.
1964-ஆம் ஆண்டு இரண்டு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவை ‘தொழிலாளி’, ‘தெய்வத்தாய்’. ‘தொழிலாளி’ படத்தில் ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ என்ற பாடல் பொதுவுடமை, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை அழகாக எழிய தமிழில் எடுத்துக் கூறிய பாடல். சோமு எம்.ஜி.ஆருக்காக எழுதிய முதல் பாடலும் இதுதான்.
1965-ஆம் ஆண்டு 10 படங்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. ‘இரவும் பகலும்’, ’எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒரு விரல்’, ‘கார்த்திகை தீபம்’, ‘எங்க வீட்டுப் பெண்’, ’பூஜைக்கு வந்த மலர்’, ‘நாணல்’, ’நீர்க்குமிழி’, ‘விளக்கேற்றியள்’ என்பவை அந்த பத்தில் அடக்கம். ‘இரவும் பகலும்’ படத்தில் ஆறு பாடல்களை எழுதினார். நடிகர் எஸ்.ஏ.அசோகன் பாடிய ஒரே பாடலான ‘இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்’, ரி.எம்.எஸ்.பாடிய ‘இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்’ பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றப் பாடல்களாகும். இதே ஆண்டில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’க்காக இவர் எழுதிய எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினருடன் பாடிய கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்’ என்ற பாடலை எழுதித்தரும்படி கேட்டவுடன் ஏழே நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார் ஆலங்குடி சோமு. எம்.ஜி.ஆரிடம் ஆலங்குடி சோமுவை அறிமுகப்படுத்தியவர் நடிகர் எஸ்.ஏ.அசோகன். இதே படத்தில் வரும் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ’மலருக்குத் தென்றல் பகையானால்’ பாடலும் இவர் எழுதியதே.
1968-இல் வெளிவந்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்ற ரி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடலைக் கேட்டு ரசிக்காத உள்ளங்கள் இல்லையெனலாம். இப்படத்தின் பாடல்களை நான்கு கவிஞர்கள் எழுதினார்கள். திரையில் இந்தப் படத்தின் தலைப்புப் பட்டியலில் [டைற்றில்] ஆலங்குடி சோமுவின் பெயரும் இடம்பெற்றிருக்கும். இசைத்தட்டில் இந்தப் பாடல் கவிஞர் வாலி எழுதியதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இணையதளங்களிலும், கவிஞர்களின் பாடல் பட்டியல்களிலும் ஆலங்குடி சோமு என்பதாகத்தானிருக்கும். இதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை’ என்ற பாடலும் இவர் எழுதியதுதான்.
1966-இல் ஆறு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். ‘காதல் படுத்தும் பாடு’, ‘சாது மிரண்டால்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘செல்வம்’, ‘தேன் மழை’, ‘நான் ஆணையிட்டால்’ ஆகிய படங்களே அவை. 1967-இல் ‘காவல்காரன்’, ‘அரசகட்டளை’, ‘பக்தப்ரஹலாதா’ போன்ற படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதினார். ரி.எம்.எஸ். பாடிய ‘அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்’ என்ற பாடல் மிக மிகப் பிரபலமானது. இதே படத்தில் மற்றொரு பாடல் ‘கட்டழகுத் தங்க மகள் திருநாளோ, அவள் கிட்டே வந்து கட்டி முத்தம் தருவாளோ’ என்ற பாடலும் மிகப் பிரசித்தம் பெற்றது. 1968-இல் ‘கணவன்’, ‘கண்ணன் என் காதலன்’, ’காதல் வாகனம்’, ‘சத்தியம் தவறாதே’, ‘தெய்வீக உறவு’, ‘பொம்மலாட்டம்’ படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். ‘பொம்மலாட்டம்’ படத்தில் சுசீலா பாடிய ‘மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி’, பாடல் ரசிகர்களை மயங்கச்செய்தது.
1969-இல் ‘அடிமைப்பெண்’, ‘அத்தை மகள்’, ’கன்னிப்பெண்’, ‘மனசாட்சி’ ஆகிய படங்களுக்கு எழுதினார். 1970-இல் ‘பத்தாம் பசலி’, ‘சொர்க்கம்’, 1971-இல் ‘குமரிக்கோட்டம்’ என்ற ஒரேயொரு படம். 1972-இல் ‘உனக்கும் எனக்கும்’, ‘வரவேற்பு’, ‘திருமலை தெய்வம்’ என்ற 3 படங்களுக்கு எட்டு பாடல்கள் எழுதினார். 1973-இல் ‘பொன் வண்டு’ என்ற ஒரே படம். 1974-இல் ‘இதயம் பார்க்கிறது’, ‘தாய் பிறந்தாள்’, ‘திருமாங்கல்யம்’ ஆகிய படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. 1975-இல் ‘பணம் பெண் பாசம்’, 1976-இல் ’ஆசை 60 நாள்’, 1977-இல் ’மழை மேகம்’, ’16 வயதினிலே’, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ ஆகிய 3 படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு 170 பாடல்கள் எழுதியுள்ளார் ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக எழுதியது ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது. பிற்காலத்தில் பாரிஸவாத நோயினால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.
இவர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாகேஷ், ஜெமினிகணேஷ், ராஜஸ்ரீ, பேபி ராஜி, வசந்தா, விஜயலலிதா நடித்த ‘பத்தாம் பசலி’ என்ற படத்தையும், ஜெய்சங்கர், ஜெயகௌசல்யா, ஜே.பி.சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாபிரபா, ஜஸ்டின் நடித்த ‘வரவேற்பு’ என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை. ஆனால் பத்தாம் பசலியில் இடம் பெற்ற ‘அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது’, ‘வெள்ளை மனம் கொண்ட பிள்ளையொண்ணு’, ’போடா பழகட்டும் ஜோடி’, ‘பத்தாம் பசலி மாமா…. மாமோய், அந்தப் பாடம் படிக்கலாமா’ ஆகிய பாடல்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது போல ‘வரவேற்பு’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் வண்ண மாலையில் நீ தொடும்போது’, ‘வரவேண்டும் மகராஜா தரவேண்டும் புதுரோஜா’, ‘ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்’ ஆகிய பாடல்களும் அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.
1973-74-ஆம் ஆண்டில் இவருக்கு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இலங்கை வானொலி, வர்த்தக சேவையின் ‘இன்னிசைச் சுவடுகள்’ நிகழ்ச்சியிலிருந்தும், இணையதளத்திலிருந்தும் இத்தகவல்கள் பெறப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக