புதன், 12 ஏப்ரல், 2017

வீணைக் கலைஞர் எஸ். பாலச்சந்தர் அல்லது சுந்தரம் பாலச்சந்தர் நினைவு தினம் ஏப்ரல் 13, 1990.





வீணைக் கலைஞர் எஸ். பாலச்சந்தர் அல்லது சுந்தரம் பாலச்சந்தர் நினைவு தினம் ஏப்ரல் 13, 1990.

எஸ். பாலச்சந்தர் அல்லது சுந்தரம் பாலச்சந்தர் ( Sundaram Balachander, சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஒரு சிறந்த வீணைக் கலைஞராகவும் தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர். சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். தான் இயக்கிய திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.


குடும்பமும் இளமையும்

பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவர்களது பூர்வீகம் நன்னிலம் வட்டத்தில் உள்ள
ஸ்ரீவாஞ்சியம் கிராமம் ஆகும். தந்தை சுந்தரம் ஐயர் சென்னைக்கு வந்து சட்டப் படிப்பை முடித்த பின்னர் மைலாப்பூரில் வக்கீலாகத் தொழில் பார்த்து அங்கேயே குடியேறி விட்டார். சென்னையிலேயே பாலச்சந்தர் பிறந்தார். பாலச்சந்தரின் அண்ணன் ராஜமும் புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி சிவகவி என்ற திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.
தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார்.
கஞ்சிரா பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் வீணை , தபேலா , மிருதங்கம் ,
ஆர்மோனியம் , புல்புல்தாரா , தில்ருபா ,
சித்தார் மற்றும் செனாய் இசைக்கருவிகளை ஆசான் எவரும் இன்றி இசைக்கக் கற்றார்.
பாலச்சந்தர் 1952-ஆம் ஆண்டில் சாந்தா என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இராமன் என்ற மகன் உள்ளார்.

பணிவாழ்வு

தமது பன்னிரெண்டாவது அகவையிலேயே பாலச்சந்தர் சிதார் இசைப்பதில் தனிக் கச்சேரி நடத்துமளவு திறமை பெற்றார். பதினைந்து முதல் பதினெட்டு வயதிலேயே சென்னை அகில இந்திய வானொலியில் ஊதியம் பெறும் கலைஞராக பணியாற்றினார். விரைவிலேயே வீணை இசைப்பதில் நாட்டம் கொண்டு முழுநேரத்தையும் அதற்கே செலவிடலானார். இரண்டாண்டுகளில் எந்த ஆசிரியத் துணையுமின்றி கச்சேரி நடத்துமளவிற்கு பயிற்சி பெற்றார். குருவின் தாக்கமில்லாது இவரது பாணி தனித்துவமிக்கதாக அமைந்திருந்தது . கருநாடக இசை தவிர
இந்துத்தானி இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
திரைப்படங்களிலும் திரைக்கதை, இசையமைப்பு, பாடல்களை தாமே மேற்கொண்டு இயக்கத்தையும் கவனித்தார். இவரது கலைச்சேவைகளுக்காக 1962ஆம் ஆண்டில்
பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

திரைப்படங்கள்

1950 இல் பாலச்சந்தர்
1934 ஆம் ஆண்டில் பிரபாத் கம்பனியின் சீதா கல்யாணம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது தந்தை சனகராகவும், தமையன் ராஜம் இராமராகவும், தமக்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தமக்கை சரசுவதி ஊர்மிளையாகவும் நடித்திருந்தனர். பாலச்சந்தர் இதில் இராவணனின் அரண்மனையில் கஞ்சிரா வாசிப்பவராகத் தோன்றினார். தொடர்ந்து "ரிஷயசிருங்கர்" (1934), "ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்" (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: தேவகி (1951),
ராஜாம்பாள் (1951 திரைப்படம்) , ராணி (1952), இன்ஸ்பெக்டர் (1953), பெண் (1954),
கோடீஸ்வரன் (1955), டாக்டர் சாவித்திரி (1955) மற்றும் மரகதம் (1959).
திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். இது நிஜமா (1948),
என் கணவர் (1948), கைதி (1951), அவனா இவன்? (1962), பொம்மை (1964) மற்றும் நடு இரவில் (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளிலும் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய அந்த நாள் (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது.
எதி நிஜம் (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

விருதுகள்

சங்கீத நாடக அகாதமி விருது , 1977
சங்கீத கலாசிகாமணி விருது , 1982, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி த
1934 சீதா கல்யாணம் தமிழ் பிர கம்ப
1941 ரிஷ்யசிருங்கர் தமிழ் தமி டாக்
1942
ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்
தமிழ் கந்த
1948 இது நிஜமா தமிழ் கே. புர
1948 என் கணவர் தமிழ் அஜி
1951 கைதி தமிழ்
1951 தேவகி தமிழ் கண பிக்
1951 ராஜாம்பாள் தமிழ் அரு பில
1952 ராணி தமிழ் ஜுப பிக்
1953 இன்ஸ்பெக்டர் தமிழ்
1954 அந்த நாள் தமிழ் ஏவி
1954 பெண் தமிழ் ஏவி
1954 சங்கம் தெலுங்கு ஏவி
1955 கோடீஸ்வரன் தமிழ் சிறீ மூ
1955 டாக்டர் சாவித்திரி தமிழ் அரு பில
1956 எதி நிஜம் தெலுங்கு பிர பில
1958 பூலோக ரம்பை தமிழ் அச பிக்
1958 அவன் அமரன் தமிழ் தி பீ பில
1959 மரகதம் தமிழ் பக்ச ஸ்ட
1962 அவனா இவன் தமிழ் எஸ். கிர
1964 பொம்மை தமிழ் எஸ். கிர
1965 நடு இரவில் தமிழ் எஸ். கிர

மறைவு

பாலச்சந்தர் 1990 , ஏப்ரல் 15 இல் சத்தீசுக்கர் மாநிலத்தில் பிலாய் நகரில் கச்சேரி நடத்தச் சென்றிருந்த போது காலமானார்.



த மிழ் திரையுலகில் மறக்கமுடியாத ஒரு நபர் வீணை எஸ்.பாலசந்தர் . ஐந்து வயதில் கஞ்சிரா என்ற இசைக் கருவியை தானாகவே இசைக்க கற்றுக்கொண்டார். 'சீதா கல்யாணம்' என்ற படத்தில் ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் முதல் ஆண் குழந்தை நடிகர் என்ற பெருமையும் பெற்றார்.
1934-ல் பாபுராவ் பெந்தர்க்கர் என்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வி.சாந்தாராம் ஆகியோர் ஒரு தபேலாவை பாலச்சந்தருக்கு பரிசாக வழங்கினார்கள். அதையும் தாமாகவே இசைக்க கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றார்.அப்போது அவருக்கு வயது 7.
தனது அண்ணன் எஸ்.ராஜத்துடன் இணைந்து இந்தியாவின் பல பகுதிகளில் இசை கச்சேரி நடத்தி வந்தார் அவர். அப்படி ஒரு கச்சேரியை இன்றைய பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் அவர்கள் நடத்திய போது அந்த நிகழ்ச்சியை ரசித்த பெண் ஒருவர் பாலச்சந்தருக்கு 'சிதார்' என்ற இசைக்கருவியை பரிசாக கொடுத்தார். அதையும் தாமாகவே கற்றுக் கொண்டார்.
ஐந்தாண்டு கழித்து மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'ஆராய்ச்சி மணி' படத்தில் மனுநீதி சோழனின் மகனாக நடித்தார். அப்போது அவரது வயது 11.
'இது நிஜமா' படத்தில் பாலச்சந்தர் சரோஜினி
1948-ல் 'இது நிஜமா' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்தார். இதுதான் சமூகப் படத்தில் முதன்முதலாக வந்த இரட்டை வேடக் கதை. அந்த படம்தான் பின்னாளில் கமலஹாசன் நடித்த 'கல்யாணராமன்' படத்தின் கதை. 'இது நிஜமா' படத்தின் இசையமைப்பாளரும் பாலசந்தர்தான். யாரிடமும் மாணவனாக சேர்ந்து முறைப்படி கற்றுக் கொள்ளாமலேயே கர்நாடக, மேற்கத்திய மற்றும் கவாலி பாணி இசையில் பாடல்களை மெட்டமைத்து பாடியும் இருந்தார் .
அதே 1948 -ம் வருடத்திலே மற்றொரு சாதனையையும் புரிந்தார் பாலசந்தர். அது யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியமலேயே சினிமா குறித்த அனைத்து தொழிநுட்பங்களையும் தானே அறிந்து கொண்டு 'என் கணவர்' என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். அப்போது அவரின் வயது 21.வீணை எஸ்.பாலச்சந்தர் போல் சுயம்புவாக எல்லாவற்றையும் அறிந்து கொண்டவர்கள் வெகு சிலரே.



இவர் பிரமாதமாக வீணை வாசிக்கக்கூடியவர். வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வீணைக் கச்சேரி செய்திருக்கிறார். அந்தக் கச்சேரிகளை பார்த்தவர்கள் இவர் சினிமாவின் இயக்குனர் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்கு அதில் ஒன்றிப் போகக் கூடியவர். இன்று நிறைய பேர் இயக்குனர், இசையமப்பாளர், எடிட்டர் என்று பலவற்றையும் ஒருவரே செய்கிறார்கள். இதற்கு முன்னோடி இவரே. இவர் ஒரு நடிகர், இயக்குனர், திரைக்கதையாளர், எடிட்டர், இசையமைப்பாளர், தபேலா, சிதார், ஷெனாய், வீணை வாசிக்கத் தெரிந்த ஒரே கலைஞர் இவர்தான். இதுபோக பாடகர், ஒளிப்படக் கலைஞர், பாடலாசிரியர், பாடகர், செஸ் விளையாட்டு வீரர் என்று ஏகப்பட்ட திறமைகள் கொண்டவர்.
'பொம்மை' படத்தில் பாலச்சந்தர்
இன்றைக்கு ஒருநாளில் முடியும், அதாவது 24 மணி நேரத்தில் முடியும் கதைகளைக் கொண்ட படங்கள் வெளிவருகின்றன. அதற்கு முன்னோடி இவர்தான். 1964-ல் வெளிவந்த 'பொம்மை' படம் ஒரு நாளில் நடக்கும் நிகழ்சிகளைக் கொண்டது. ஒருவரைக் கொள்ள பொம்மைக்குள் வெடிகுண்டு வைக்கிறார்கள். அந்த பொம்மை கைமாறிப் போய்விடுகிறது. அதை தேடி அலைவதுதான் கதை. சஸ்பென்சாக செல்லும் இந்த படத்தில்தான் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற உன்னதக் கலைஞனை பாலசந்தர் அறிமுகப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தில் வரும் 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற பாடல்தான் ஜேசுதாசின் முதல் பாடல்.
இந்தப் படத்தின் இறுதியில் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களையும் வீணை எஸ். பாலசந்தர் அறிமுகப்படுத்துவார். அதில் ஒரு கல்லூரி மாணவனைப்போல் ஜேசுதாஸ் நிற்பார். இன்று வரை வேறுயாருமே செய்யாத வித்தியாசமான முயற்சி இது.
தமிழில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம் 'அந்த நாள்' . பிளாஷ் பேக் உத்தியை அதிகம் பயன்படுத்தி கதையை நகர்த்திய முதல் படமும் இதுதான். தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த இந்தப் படத்தை இயக்கும்போது இவரின் வயது 27. வித்தியாசமான படம். இவரது படத்தில் வரும் திரைக்கதையும், காட்சிக் கோணமும் பிரமிக்க வைப்பவை. அதனால் தான் இயக்குனர் மகேந்திரன் தனது குருநாதராக வீணை எஸ். பாலச்சந்தரைக் குறிப்பிடுகிறார்.
'நடு இரவில்'
இவர் இயக்கிய 'நடுஇரவில்' படம் இன்றைக்கும் த்ரில்லர் படத்தின் உச்சமாக சொல்லப்படுகிறது. குறை காணமுடியாத திறமையான படங்களை தருவதில் வீணை எஸ். பாலச்சந்தருக்கு இணையாக ஒருவரை தமிழ் திரையுலகில் காணமுடியாது.
1990, ஏப்ரல் 13-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் நகரில் வீணைக் கச்சேரி நடத்த சென்ற போயிருந்தபோது அங்கேயே காலமானார்.சினிமாவில் பல புதுமைகளை செய்த இந்தக் கலைஞன் தனது சினிமா அனுபவத்தை இப்படி சொல்கிறார்.
"நான் முற்பிறவியில் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால் வீணை கிடைத்தது. நிறைய பாவம் செய்திருக்க வேண்டும். அதனால் சினிமா வாய்த்தது" என்றார்.
இப்படிப்பட்ட உன்னதக் கலைஞனை இன்றைய தலைமுறை சுத்தமாக மறந்து விட்டது வேதனையான ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக