வெள்ளி, 14 ஏப்ரல், 2017

பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் நினைவு தினம் ஏப்ரல் .14.



பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ்  தினம் ஏப்ரல் .14.

பி. பி. ஸ்ரீநிவாஸ் ( Prativadi Bhayankara Sreenivas, செப்டம்பர் 22 , 1930 - ஏப்ரல் 14 , 2013 ) [1
தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ் ,
தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவில் ,
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார்.
ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து 1951 இல் வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது.
கனஹிபரது என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவரது முதல் தமிழ்ப் பாடல்
சிந்தனை என் செல்வமே" என்ற பாடல், 1953 இல் வெளிவந்த ஜாதகம் படத்தில் இடம்பெற்றது.
ஆங்கிலம் , உருது உட்பட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர். இவற்றில் பல பாடல்களையும் எழுதியுள்ளார்.
மதுவண்டு என்ற புனைப்பெயரில் தமிழ்க் கவிதைகளை எழுதினார். வறுமையின் நிறம் சிவப்பு , நண்டு ஆகிய திரைப்படங்களில் வரும் இந்திப்பாடல்களை இவரே இயற்றினார்.
தமிழ்த் திரையிசை உலகில் டி. எம். சௌந்தரராஜன் புகழுச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி, பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். 'காலங்களில் அவள் வசந்தம்' எனும் பாடலைப் பாடி பெரும்புகழை ஈட்டினார். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் இவர் அநேகமாக அவர்களின் அனைத்துப் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.


அந்த நாட்களில் தமிழ் சினிமாவில் சீர்காழி கோவிந்தராஜன் நடத்திக் கொண்டிருந்தது வெங்கலக் குரல் கச்சேரியென்றால் டி.எம். சௌந்தரராஜன் தன் குரலின் வழியே நல்ல தமிழ் ஆண் மகனின் கம்பீரத்தை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார். இந்த இருவரிடையே தனது மோகனக் குரலின் காந்த ஈர்ப்பின் வழியே செவிமடுப்போரிடத்தில் ஒரு மதுர சுகானுபவத்தையே தோற்றுவித்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ். தாழ்விசையில் வாசிக்கப்படும் குழலின் சாயலைத் தனது குரலில் கொண்டவராயிருந்த ஸ்ரீநிவாஸ் அந்நாளைய சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர். என்னும் இரண்டு இமயங்களுக்குச் சமதையாகக் கொடியுயர்த்திக் கொண்டிருந்த முன்னணிக் கலைஞர்களின் பின்னணிக் குரலாகிப் போனார்.
ஆமாம், அந்நாளில் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு மட்டும் சில நூறு பாடல்களைப் பாடியிருக்கிறார் ஸ்ரீநிவாஸ். தமிழில் ஜெமினிக்குத்தான் அவர் அதிகப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றாலும் முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் போன்ற நட்சத்திரங்களின் கானக் குரலாகவும் அவர் இருந்திருக்கிறார். மிகமிக அரிதாக அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கும் பாடியிருக்கிறார். பி.பி.ஸ்ரீநிவாஸ் தமிழில் மட்டுமல்லாமல் மொத்தம் எட்டு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? அவருக்குத் தாய் மொழி தெலுங்கு. அவரது தாய் மொழியில் ஏராளமான கஜல் பாடல்களை எழுதியிருக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, உருது, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் திறன் பெற்றவர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது. தமிழில் அவர் எழுதிய கவிதைகள் அவரது மொழித்திறனை என்றும் பறைசாற்றும்.
1930 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஆந்திராவின் கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவுக்கு அருகிலொரு சிற்றூரில் பணிந்திர சுவாமி – சேஷகிரியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பிரதிவாதி பயங்கர ஸ்ரீநிவாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட பி.பி.ஸ்ரீநிவாஸ். வணிகவியல் இளங்கலைப் பட்டதாரியான ஸ்ரீநிவா° 1952 ல் ஜெமினி நிறுவனம் இந்தியில் தயாரித்த மிஸ்டர் சம்பத் படத்தில்தான் முதன்முதலாகப் பாடத் துவங்கினார். அவர் பாடிய முதல் பாடலில் அவருடன் இணைந்து பாடியவர் அந்நாளைய பிரபலப் பெண் பாடகர் கீதா தத். அந்தப் பாடல் வடநாட்டில் மிகப் பிரபலமான பாடலானது. 1953 ல் ஜாதகப் பலா என்னும் கன்னடப் படத்தின் மூலமாகக் கன்னடத் திரையில் நுழைந்தார் பி.பி.ஸ்ரீநிவாஸ். அதே படம் பின்னர் தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டபோது அந்தந்த மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் கிட்டின.
P. B. Sreenivas-2
ஸ்ரீநிவாஸ் பன்மொழி கான வித்தகராகத் திகழ்ந்திட்டபோதிலும் கன்னடத்தில்தான் அவர் அதிகப் பாடல் களைப் பாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமாருக்குத்தான் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இத்தனைக்கும் ராஜ்குமார் தனது சொந்தக் குரலில் பாடி நடித்தவர் என்றபோதிலும் அவருக்குத்தான் அதிகம் பாடிய சாதனை. கன்னடத்தின் இன்னொரு பெரிய நட்சத்திரமான விஷ்ணுவர்த்தனுக்கும் அவர் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். கன்னடத் திரைத்துறையில் மட்டும் மூன்று தலைமுறைகளாக அவர் கோலோச்சியிருக்கிறார். 1955 ல் மலையாளப் படமான ஹரிச்சந்திராவில் பாடினார்.
தமிழில் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? பாவமன்னிப்பு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி இசையில், கண்ணதாசனின் கற்பனை வளத்தில் உருவாகி அவர் பாடிய காலங்களில் அவள் வசந்தம் பாடலுக்கு இணையான ஒரு பாடலை இன்று வரையில் காட்டமுடியுமா எவராலும்? காதலிக்க நேரமில்லை படத்தில் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா – உதவிக்கு வரலாமா? என்று அவர் பாடுகிறபோது பாடல் வரிகளின் பொருளை உணர்ந்து, கேள்வி கேட்கிற தொனியிலேயே அவரது குழைவு அழகாக வெளிப்படும். காத்திருந்த கண்கள் படத்தில் கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா? உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா? எனும் வரிகளை பி.பி.ஸ்ரீநிவாஸ் உச்சரிக்கிறபோதே ஒரு ஆணின் பதைபதைப்பை உணர்த்துவதாக அதன் மெட்டை அவர் கையாண்டிருப்பார்.
வீரத்திருமகன் திரைப்படத்தில் வரும் ரோஜா மலரே ராஜகுமாரி பாடலில் வரும் வரிகளிலும் அதே போலத்தான் அவரது பாங்கு அமைந்திருக்கும். அருகில் வரலாமா ஹோய்… வருவதும் சரிதானா… உறவும் முறைதானா..? என்கிற இடத்தில் அந்த வரிகளின் உணர்வை அப்படியே கேட்போர் இதயங்களில் பி.பி.எஸ். இறக்குவார் கொஞ்சம் சோகமும் லேசான கிரக்கமும் குழைத்து. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்… வாரிவாரி வழங்கும்போது வள்ளலாகலாம்… என்ற வரிகளின் உயிரை அவரது உச்சரிப்பு பொத்திப் பாதுகாப்பதாக இருந்தது. உருகும்போதும் மெழுகுபோல ஒளியை வீசலாம் என்கிற இடத்தில் உருக்கம் அவரது குரலில் வழிந்தோடியது. இந்தியாவின், தமிழின் புகழ்மிக்க பின்னணிப் பாடகிகள் அனைவரோடும் இணைந்து பாடிய பி.பி.எஸ். டி.எம்.எஸ்.ஸுடன் இணைந்து பாடிய பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாடல் பாலிலே பழத்தை இட்ட ரகம். அதுபோலத்தான் தவப்புதல்வனில் இதே ஜோடி பாடும் உலகின் முதல் இசை தமிழிசையே பாடலும். இந்தப் பாடலில் ஸ்ரீநிவாஸ் இந்தி மொழியில், இந்துஸ்தானி சாயலில் பாடி அசத்தியிருப்பார். அவரது எத்தனையோ பாடல்களில் மயக்கமா தயக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா? பாடல் தனியிலும் தனி ரகம். அந்தப் பாடலின் முடிப்பில் உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்கிற இடம் துயரப்படுகிற எல்லா மனித மனங்களுக்கும் என்றென்றும் ஆறுதல் ஒத்தடம் தரும். எண்ணிலடங்காத அவரது பாடல்களின் தனித்துவம் குறித்து இன்னும் எவ்வளவோ சொல்லலாம்… இடம்தான் பிரச்சனை.
செவ்விசையின் நுட்பங்களை உட்கிரகித்துக்கொண்ட ஒரு மேதையாகவே அவர் திகழ்ந்தார். இறுதிவரையில் அவரது தன்னடக்க குணம் அவரது மேதைமையை பொத்திப் பாதுகாத்தே வந்துள்ளது. எவரோடும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் வீணான வாதங்களை, முரண்பாடுகளை முன்வைத்ததே இல்லை. இசையும் மொழியும் மட்டுமே அவருக்கு மூச்சு. இந்திய மொழிகள் பலவற்றிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள், அந்தந்த மொழிகளை அறிந்து, பாடல்களின் பொருள் புரிந்து பாடிய பாங்கு. அவர்தான் பி.பி. ஸ்ரீநிவாஸ்.
P-B. Sreenivas-4
எப்போதும் குழந்தைபோன்ற சிரித்த முகம், ஜிப்பா- ஜரிகைக் குல்லா சகிதம் சென்னையில் வலம் வரும் அவரது எளிமை, (குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் நானே பலமுறை அவர் நடந்துசெல்வதைப் பார்த்திருக் கிறேன்) மொழிகளைத் துவேசமில்லாமல் ஆக்கப்பூர்வமாக அணுகிய அவரது ஆழ்ந்து நோக்கத்தக்க முன்னுதாரண பாணி என்று அந்த இசை மேதை பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். தனது 84 வது வயதில் (14 – 4 – 2013) சென்னையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் பி.பி.ஸ்ரீநிவாஸ், இந்திய சினிமா இசை ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டு.




ஸ்ரீனிவாஸ் எனப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ், தனது பெயரின் ‘பி.பி.எஸ்’ என்னும் ஆங்கிலச் சுருக்கத்துக்கு Play Back Singer என்று பொருத்தமாக விரிவாக்கம் கூறி, தான் பின்னணிப் பாடகராக இருந்ததில் முழு நிறைவும் மகிழ்வும் கண்டவர். 1930-ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்த இவருக்கு 82 வயது.
இவரது அம்மாவுக்கு இசையில் மிகுந்த விருப்பம். அது அப்படியே மகனிடமும் தொற்றிக்கொண்டது. ஆனால், இவரது அப்பா இவரை ஓர் அரசாங்க உத்தியோகஸ்தராக்கி அழகுபார்க்கத்தான் ஆசைப்பட்டார். தன் மகன் இசையின் பக்கம் தலைவைத்தும் படுக்கக்கூடாது என்று தீர்மானித்தார். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஒரு ஜோதிடர், இவர் இசைத் துறையைத் தேர்ந்தெடுத்தால் இவரது வாழ்க்கையில் பல இன்னல்கள் நேரும், மிகுந்த சோதனைகளுக்கு உள்ளாவார் என்று பலன் சொன்னார்.
எனவே, பி.பி.ஸ்ரீனிவாஸின் தந்தையார் தன் மகனை பி.காம். படிக்க வைத்தார். பட்டப் படிப்பு முடிந்ததும், தன் மகனை வழக்கறிஞராக்கிப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், இவரை சென்னை சட்டக் கல்லூரியில் சேர்த்து விட்டார். எனினும், இசையில் இருந்த ஈடுபாடு காரணமாக, பி.பி.ஸ்ரீனிவாஸால் சட்டப் படிப்பில் நாட்டம் கொள்ள இயலவில்லை. ஜோஸியத்தைப் பொய்யாக்கியே தீருவது என்று சவால் விட்டு, இசைத் துறையைத் தேர்ந்தெடுத்தார்.
ஏ.எம்.ராஜாவை அறிமுகப்படுத்திய ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்தான் பி.பி.ஸ்ரீனிவாஸையும் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தினார். ஜெமினியின் ‘மிஸ்டர் சம்பத்’ படத்தில்தான் பி.பி.ஸ்ரீனிவாஸ் பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனார்.
கர்னாடக இசை மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகர்களுக்கு நிகரான திறமை கொண்டவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். கஸல் பாடல்களை அழகாகப் பாடுவதில் மன்னன். ‘தவப்புதல்வன்’ படத்தில் தமிழ்ப் பாடகருக்கும் இந்துஸ்தானி பாடகருக்கும் ஒரு போட்டி வரும். ‘இசையில் சிறந்தது தமிழ் இசையே’ என்று தொடங்கும் அந்தப் பாடலில் தமிழ்ப் பாடகராக சிவாஜியும், அவருக்குப் போட்டியாக இந்துஸ்தானி இசை பாடுபவராக நாகையாவும் நடித்திருப்பார்கள்.
சிவாஜிக்கு டி.எம்.எஸ். பின்னணி பாட, நாகையாவுக்குக் இந்துஸ்தானியில் பின்னணி பாடுவார் பி.பி.எஸ். கதைப்படி தமிழ் இசைதான் சிறந்தது எனக் காட்டுவதற்காக டி.எம்.எஸ்ஸின் குரலை கம்பீரமாக உயர்த்தியும், பி.பிஎஸ்ஸின் குரலை பம்மிப் பதுங்குகிற மாதிரி வளைந்தும் குழைந்தும் பாடச் செய்திருந்தாலும், அந்தப் பாடலில் பி.பி.எஸ்ஸின் குரலில் வெளீப்பட்ட இனிமையை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இப்போதும் கேட்டுப் பாருங்கள், பி.பி.எஸ்ஸின் மயக்கும் குரலில் இந்துஸ்தானி இசை உங்கள் காதுகளை ஈரமாக்கும்.
தெலுங்கு, கன்னடம், இந்தி என எட்டு மொழிகள் தெரிந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். எட்டு மொழிகள் தெரியும் என்றால், வெறுமே பேச, பாட மட்டுமல்ல; எட்டு மொழிகளிலும் கவிதை புனையத் தெரியும் அளவுக்கு வல்லமை பெற்றவர்.
உருக்கமான பாடல்களை இவர் பாடிக் கேட்கும்போது உண்டாகும் பரவசமே தனி! பேசும்போது கணீரென்று, கம்பீரமாக ஒலிக்கும் இவர் குரல் பாடும்போது மட்டும் மென்மையாகக் குழைவது ஓர் ஆச்சரியம்! தமிழில் ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜாவின் குரல்தான் பொருத்தமானது பலரும் நினைத்திருந்த காலமும் இருந்தது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என்கிற பாடலை முதன்முதலாக ஜெமினிகணேசனுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸைப் பின்னணி பாட வைத்தார் ஜி.ராமநாதன். அது அத்தனைக் கச்சிதமாக அமைந்துவிடவே, அது முதல் ஜெமினிகணேசனுக்கு அதிகம் பாடத் தொடங்கினார் பி.பி.எஸ்.
பி.பி.எஸ்ஸின் குரலில் ‘மயக்கமா, கலக்கமா? மனதிலே குழப்பமா?’ பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியுமா என்ன? ‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...’, என சோகத்தில் மூழ்குவதாகட்டும், ‘ரோஜா மலரே ராஜகுமாரி’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘தாமரைக் கன்னங்கள், தேன்மலர்க் கிண்ணங்கள்’ எனக் காதலில் களிப்பதாகட்டும்... பி.பி.எஸ்ஸின் குரல் செய்யும் மாயாஜாலத்துக்கு நிகரில்லை.
பி.பி.எஸ் - எஸ்.பி.பி. இந்த எழுத்து ஒற்றுமையில் அதிகம் மகிழ்ந்தவர் ’பாடும் நிலா பாலு’வான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். தன்னை பி.பி.எஸ்ஸின் விசிறி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர். திரைத் துறையில் வாய்ப்பு வேண்டி அவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை அணுகியபோது, தான் பி.பி.எஸ்ஸின் தீவிர ரசிகன் என்றும், அவரது பாடல்களை அட்சரம் பிசகாமல் அப்படியே தன்னால் பாட முடியும் என்று சொல்லி, அவர் பாடிக் காண்பித்த பாடல்... பி.பி.எஸ்ஸின் ‘நிலவே என்னிடம் நெருங்காதே...!’ வேடிக்கை என்னவென்றால், நிலவை நெருங்காதே என்று பாடி வாய்ப்புக் கேட்ட அதே எஸ்.பி.பி-தான் எம்.ஜி.ஆருக்காக ‘ஆயிரம் நிலவே வா’ என்று அழைத்துப் பாடி பிரபலமானார்.
கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாருக்கு பி.பி.எஸ். பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர்டூப்பர் ஹிட்! பின்னர் ஏற்பட்ட ஒரு சின்ன மனஸ்தாபத்தால் பி.பி.எஸ். குரல் வேண்டாம் என்று மறுத்து, தானே சொந்தக் குரலில் பாடத் தொடங்கிவிட்டார் ராஜ்குமார். அப்போதும் கோபமோ வருத்தமோ கொள்ளவில்லை பி.பி.எஸ். ‘ராஜ்குமார் மிகச் சிறந்த பாடகர். அவர் குரல் கம்பீரமானது’ என்று பெருந்தன்மையோடு பாராட்டினார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
மற்றவர்களை ஊக்கப்படுத்திப் பாராட்டுவதில் வஞ்சனையே செய்வதில்லை பி.பி.ஸ்ரீனிவாஸ். ‘ஜானகியா! அடேயப்பா! கேக்கணுமா! அற்புதமான பாடகி!’ என்பார். ‘ஏ.எம்.ராஜாவின் குரலில் உள்ள குழைவும் இனிமையும் யாருக்கு வரும்?’ என்பார். ‘சலீல் சௌத்ரி மிகப் பெரிய கம்போஸர்! எப்பேர்ப்பட்ட மனுஷன்’ என்று பாராட்டுவார்.
நமது ஜமுனாராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி போன்று அந்தக் காலத்தில் அழகான, இனிமையான குரலில் பாடி, இந்தித் திரையுலலில் பிரபல பாடகிகளாக இருந்தவர்கள் கீதா தத், ஷம்ஷத் பேகம் ஆகியோர். அவர்களுடன் இணைந்து பாடியிருக்கிறார் பி;.பி.ஸ்ரீனிவாஸ். ‘உங்கள் குரல் முகம்மது ரஃபியின் குரலைப் போன்று இனிமையாக உள்ளது’ என்று அவர்கள் மிகவும் பாராட்டியதோடு, இவரோடு இணைந்து பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
இந்திப் பாடகர் கிஷோர்குமாரின் பாடல்களில் ஒரு சிறப்பம்சம் உண்டு. பாடிக்கொண்டு இருக்கும்போதே ‘ஹைலுலு ஹைலுலு ஹைலுலூ...’ என்று குரலை உருட்டுவார். ‘ஜிந்தகி ஏக்சஃபர் ஹைசுஹானா...’ பாடல் போன்று பல பாடல்களில் இந்த குரல் வித்தையைச் செய்திருக்கிறார் அவர். இப்படிக் குரலை உருட்டும் வித்தையை ‘யோட்லிங்’ என்பார்கள். இப்படிப் பாடுவது கஷ்டம். தமிழில் அந்த வித்தையை முதன்முதலில் செய்து காட்டியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்தான்!
சினிமா பாடல்கள் மட்டுமின்றி, பக்தி ரசம் சொட்டும் ‘சாரதா புஜங்க ஸ்தோத்திரம்’, ’ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்’ போன்றவற்றையும் தமது இனிமையான குரலில் பாடியிருக்கிறார் பி.பி.எஸ்.
இவர் ஒரு பாடகர் மட்டுமல்ல; நினைத்த மாத்திரத்தில் கவிதை புனையும் ஆற்றல் பெற்ற வரகவியும் ஆவார். தனக்குத் தெரிந்த எட்டு மொழிகளிலும் லட்சக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார் இவர். எந்த விழாவிலாவது இவர் கலந்துகொண்டால் அந்த விழா குறித்து இவரின் ஒரு வாழ்த்துப் பாடல் நிச்சயம் இருக்கும். தெரிந்தவர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் என்றால் அதற்கும் ஒரு வாழ்த்துப் பாட்டு எழுதி அனுப்பி வைப்பார்.
இவர் தான் எழுதும் பாடல்களில் ஒரு புதுமையைச் செய்வார். அதாவது, பதினைந்து, இருபது வரிகளில் இவர் கவிதை அமைந்ததென்றால், ஒவ்வொரு வரியிலிருந்தும் ஐந்தாவது எழுத்தை மட்டும் எடுத்துச் சேர்த்துப் படித்தால், அது அந்த விழாவுக்கான, அல்லது அந்த விழா நாயகருக்கான வாழ்த்துரையாக ஆசி கூறுவது போன்று வாக்கியம் அமையும்!
பிறரை மனம் கனிய வாழ்த்துவது என்பது இவருக்கு ரொம்பவும் பிடித்தமானது. எப்போதும் இவரது சட்டைப் பையில் பத்துப் பன்னிரண்டு பேனாக்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும். சட்டென்று அவற்றை எடுத்து வண்ண வண்ண எழுத்துக்களில் கவிதையோ வாழ்த்தோ எழுதுவது இவர் பழக்கம்.
சென்னை, வுட்லண்ட்ஸ் டிரைவ் இன் ரெஸ்ட்டாரெண்ட் இருந்தவரையில், இவரை நாள் தவறாமல் அங்கே பார்க்கமுடிந்தது. வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தால் இவர் வரும் ஒரே இடம் அதுதான். இவருக்கு ரொம்பப் பிடித்தமான இடம் அது. அவரைச் சந்திக்க விரும்புகிறவர்களும் சரியாக அவர் வரும் நேரத்தைக் கணக்கிட்டு அங்கே வந்து அவருக்காகக் காத்திருப்பார்கள்.
உடையில் மிகவும் கவனம் செலுத்துவார் பி.பி.எஸ். எம்.ஜி.ஆருக்கு வெள்ளைத் தொப்பி அடையாளம் போன்று பி.பி.ஸ்ரீனிவாஸும் கறுப்பும் வெளுப்பும் கலந்த ஒரு தொப்பியை ரொம்பக் காலம் அணிந்திருந்தார். பின்பு, அதைத் துறந்து தங்க ஜிகினா பளபளக்கும் ஒரு டர்பனை அணியத் தொடங்கினார். ’சக்கரவர்த்தி போல உடை அணியணும்; சாமானியன் போல கலந்து பழகணும்’ என்பது பி.பி.எஸ்ஸின் சித்தாந்தம். அந்த அளவுக்கு எல்லோரிடமும், எந்தவொரு சின்ன பந்தாவுமின்றி எளிமையாக, இனிமையாகப் பேசிப் பழகுவதில் பி.பி.எஸ்ஸுக்கு நிகர் இல்லை.
’மெல்லிசை’ என்று சொல்கிறபோதே ‘பி.பி.ஸ்ரீனிவாஸ்’ என்ற சொல்லும் சேர்ந்து நம் மனத்தில் உதிக்கிறது. அந்த அளவுக்குத் தன் கானக் குரலால் காற்றில் தேனை நிரப்பியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
சமீபத்தில் கர்நாடக அரசு, பி.பி.எஸ்ஸின் இசைச் சேவையைப் பாராட்டி 2500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வழங்கி கௌரவித்தது.
மற்றபடி... தமிழ் இசை, இலக்கியத்துக்குச் சிறந்த பங்களிப்புச் செய்யும் ஜாம்பவான்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டுகொள்வதில்லை என்பது ஒரு சாபம்! அந்த வகையில் எழுத்தாளர் சுஜாதா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் டி.எம்.எஸ். வரிசையில் பி.பி.ஸ்ரீனிவாஸுக்கும் சுண்டல் மாதிரி யார் யாருக்கோ விநியோகம் ஆகிற தமிழக அரசின் ‘கலைமாமணி’ பட்டம் தவிர, எந்த உயரிய விருதும் கிடைத்ததில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.
வழக்கம்போல், அந்த விருதுகளுக்குக் கொடுப்பினை இல்லை என்று நாம் நம் மனத்தைச் சமாதானம் செய்துகொண்டாலும், ஒரு பக்கம் இம்மாதிரி மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை செய்யாத நமது அசிரத்தையை நினைத்து எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது.
‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
...’
பி.பி.எஸ்ஸின் குரல் காற்றில் கரைகிறது.

 நன்றி - விகடன்


பி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்
மிதமானதொரு பிற்பகல் பொழுது. இதமான தென்றல் மர இலைகளின்மேல் படபத்துக்கொண்டிருந்த்து. அடர்ந்த மரநிழல்களாக பரந்து விரிந்து கிடந்த்து உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் உணவகத்தின் விசாலமான முன்பக்கம். அங்கிருக்கும்போது சென்னை நகரமே அமைதியில் மூழ்கியிருப்பதைப் போல் தோன்றும். ஏற்கனவே ஒன்றிரண்டு சன்னா பட்டூராக்களை தின்று முடித்து, நாலைந்து பில்டர் காஃபியும் குடித்து விட்டிருந்தேன். ஆயினும் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நபர் வந்து சேரவில்லை. “எப்போதுமே இந்த நேரத்துக்கெல்லாம் வந்துவிடுவார், இன்று ஏதோ தாமதமாகிவிட்டது, ஆனால் நிச்சயம் வந்துவிடுவார்”” என்று கடந்த 45 வருடங்களாக பெரும்பாலான நாட்களில் அவரை அங்கே சந்தித்து வரும் நபர் ஒருவர் கூறினார். இருமருங்கும் மரங்கள் அடர்ந்த உள்சாலையின் ஊடே வந்து கொண்டிருக்கும் வாகனங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு காரிலிருந்து இறங்கி, முதியவர்களின் தள்ளாடும் நடையுடன் மெது மெதுவாக நடந்து வந்தார் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
எண்பது வயதுக்குரிய தளர்ச்சி உடலிலும் நடையிலும் தென்பட்டாலும், வண்ணமயமாக, அலங்காரம் மிக்க ஆடைகளை அணிந்திருந்தார். செம்பழுப்பு நிற கட்டம்போட்ட சட்டைப்பையில் பலவண்ணங்களில் ஏறத்தாழ 10 பேனாக்கள் வைத்திருந்தார். பளபளக்கும் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் தோளில் அணிந்திருந்த சால்வை அவரது வெள்ளை நிற பேண்ட் வரை தொங்கிக்கொண்டிருந்தது. நீள்வடிவ முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தாலும் தெளிந்த மூக்குக் கண்ணாடிக்குள் அவரது கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. தலையில் தங்கநிற மைசூர் தொப்பியணிந்திருந்தார். நெற்றியில் நீளவாக்கில் மெலிதான காவித் தீற்றல். அங்கிருந்த பலரும் அவருக்கு வணக்கம் சொல்லி நகர்ந்து கொண்டிருக்க, நான் அவரை நோக்கி நடந்து அவரது பாதங்களைத் தொட்டு மரியாதை செய்தேன். என்னை அறிமுகம் செய்த போது ’குறச்சு தாமஸிச்சு.. க்ஷமிக்கணம்’ என்று மலையாளத்தில் காத்திருக்க வைத்ததற்கு வருந்துவதாக கூறினார். ஓரமான ஓரிடத்தில் அமர்ந்தோம். நான் எனது புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.
சொல்லில் அடங்காத இசை என்ற என்னுடைய முதல் தமிழ் புத்தகத்தின் அறிமுக விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளவேண்டி அவரை அழைப்பதற்காகவே நான் அங்கு சென்றிருந்தேன். கனிவான முகபாவத்துடன் புத்தகத்தை புரட்டிக்கொண்டே கட்டுரைகளின் தலைப்புகளுக்கேற்றவாறு ஓரிரு வார்த்தைகளில் தனது கருத்தையும் வெளிப்படுத்தினார் பி.பி.எஸ். “சலில் சௌதுரி ...என்ன ஒரு இசையமைப்பாளர்!”..மெஹ்தி ஹஸன்...உங்க தலைப்பு போலவே அவர் கஸலின் கடவுளே தான்!”...ராஜ்குமார்...அற்புதமான பாடகர்.. சிறந்த மனிதர்..., எஸ்.ஜானகி... என்ன சொல்வது அவரைப் பற்றி!....தலைசிறந்தவர்.... ஏ.எம்.ராஜா, என்ன ஒரு அசாத்தியமான பாடகர்!....” என்று சொல்லிக்கொண்டே வந்தார்.
பக்கங்களைப் புரட்டி முடித்ததும் “இது ஒரு மிகச் சிறந்த முயற்சி”” என்று என்னிடம் சொன்னார். அவரைப் பற்றி மட்டும் ஏதும் கட்டுரைகள் இல்லாததால் அவரது முகத்தில் மெலிதான ஏமாற்றம் தென்பட்டதைப் போல் உணர்ந்தேன். இருப்பினும் விழாவுக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டார். தன்னை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல இதே உட்லேண்ட்ஸுக்கு ஒருவரை அனுப்பினால் போதும் என்று சொன்னார். ஆனால் விழா நாளான 2008 ஏப்ரல் 12ம் தேதி அன்றே ஒரு நீதிமன்ற உத்தரவினால் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் என்றென்றைக்குமாக மூடப்பட்டது!
அன்றைக்கு நான் அவரை அழைத்தபோது அவரது குரலில் துயரம் தோய்ந்து கிடந்தது. கடந்த 46 வருடங்களாக தினமும் சென்று வந்து கொண்டிருந்த, தனது வீடல்லாத வீடாக இருந்த உட்லேண்ட்ஸ் மூடப்பட்டதில் அவர் மிகவும் வருந்தினார் எனப்பட்டது. விழாவுக்கு வரமுடியாமற்கூட போகலாம் என்று சொன்னார். தொடர்ந்து நான் தொலைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்ததால், கடைசியில் அதே சாலையில் இருந்த வேறொரு உணவகத்திலிருந்து தன்னை அழைத்துக் கொள்ளச் சம்மதித்தார்.
விழா ஆரம்பிப்பதற்கான நேரம் கடந்து கொண்டிருந்தது. அவரை அழைக்கச் சென்றவரும் சொன்ன இடத்தில் காத்துக் கொண்டிருந்தார். தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்ற நினைவூட்டல்களைப் பொருட்படுத்தாமல் தனது பலவகையான பேனாக்களை பயன்படுத்தி பி.பி.எஸ் எதையோ தீவிரமாக எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். விழாவைத் தொடங்குவதற்கான அவசரத்தில் நான் அவரை அழைத்தேன், ஆனால் அவரோ மிகவும் சாதாரணமாக எனக்கு மேடையில் வழங்குவதற்காக ஒரு வாழ்த்துப்பா எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவர் கலந்து கொள்ளும் இத்தகைய விழாக்களில் எல்லாம் கண்டிப்பாக அவர் செய்யும் காரியம் இந்த வாழ்த்துப்பா எழுதி வழங்குதல். எழுதி முடித்ததும் வருகிறேன் என்றார்!
அவர் எழுதியிருந்த வாழ்த்தை மேடையில் என்னிடம் வழங்கினார். புத்தகத்தைப் பற்றி சிறப்பான வார்த்தைகளில் புகழ்ந்துரைத்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். தங்களது கடந்த கால நினைவுகளில் இரண்டு பேரும் அவ்விழாப் பொழுதை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தனர். பேசி முடித்ததும் பி.பி.எஸ் உடல் நலமில்லையென்று கிளம்பினார். உடன் மேடையில் இருந்த இளம் பாடகர் கார்த்திக் ’காலங்களில் அவள் வசந்தம்”’ பாடலிலிருந்து சிலவரிகளை பி.பி.எஸ்ஸை சிறப்பிக்கும் வகையில் பாடினார். அதோடு உற்சாகமடைந்தவராக மகிழ்வுடnnnன் மேடையிலிருந்து சென்று விட்டார்.
’காலங்களில் அவள் வசந்தம்’ போன்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பல பாடல்கள் அழியாத உணர்வாக, நமது திரையிசையின் வசந்த காலமாக என்றென்றும் நம் நினைவில் நிற்கக் கூடியவை. அவரது குரலும் பாடும் பாணியும் நமது இசையனுபவத்தின் நீங்காத பகுதிகளாக இன்றும் இருக்கிறது. ஓங்கும் குரல் வெளிப்பாட்டை விட, உணர்ச்சிக்கொந்தளிப்பை விட சின்னஞ்சிறிய இசை நுணுக்கங்களுக்கும், விவரணைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வட இந்திய பாணியிலான பாடும் முறையை அடியொற்றிப் பாடியவர் அவர். இசையின், பாடல் வரிகளின் மென்மையான உணர்வுகளை வெளிக்கொணர்வதில் அதிகமும் கவனம் செலுத்தியவர். எனவேதான் எம் எஸ் வி போன்ற இசையமைப்பாளர்களின் பல மெல்லிசைப் பாடல்களுக்கான விருப்பப் பாடகராக பி.பி.ஸ்ரீனிவாஸ் மாறினார்.
"நீங்கள் பாடும் போது அது கேட்பவர்களின் காதுகளை மட்டுமல்லாது உள்ளத்தைத் தொடுவதாக இருக்கவேண்டும்" என்பது தான் தனது தத்துவம் என்று சொன்னவர் பி.பி.எஸ். கர்நாடக இசை வியாபித்திருக்கும் குடும்பத்திலும், சூழலிலும் பிறந்து வளர்ந்தாலும் ஹிந்துஸ்தானி இசையின் மெல்லிசை வடிவங்களான கஸல், தும்ரி போன்றவற்றிலும், முகம்மது ரஃபி, மன்னா டே, தலாத் மெஹ்மூத் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய அக்காலத்தைய இந்திதிரைப் படப் பாடல்களிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இவற்றிலிருந்து பெற்ற தாக்கமே அவருடைய பாடும் முறையில் வெளிப்பட்டது. இந்த பாணியினாலேயே 1950களில் இருந்து 1970கள் வரை தென்னிந்திய திரையிசை ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக இருந்தார் பி.பி.எஸ். இந்திய திரையிசையின் பொற்காலமாக கருதப்படும் அக்காலத்தின் தவிர்க்க முடியாத பாடகராக விளங்கியவர் அவர்.
பிண்ணனிப் பாடகர் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Play Back Singer என்பதன் முதல் எழுத்துக்களான PBS தனது பெயரின் சுருக்கமாக இருப்பதால் தான் மட்டுமே உண்மையான ’பிண்ணனிப் பாடகர்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவார் பி.பி.ஸ்ரீனிவாஸ். பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் என்பதே அவரது முழுப்பெயர். செப்டம்பர் 22 1930ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தின் காக்கிநாடாவில் பிறந்தவர். தந்தை பணீந்திர ஸ்வாமி, நடுத்தர வர்க்க அரசு ஊழியராக இருந்தார். தாயார் சேஷகிரியம்மா இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த குடும்பத்தலைவி. இசையில் விருப்பமுடையவராக இருந்த பி பி எஸ் தனது தாயார் ஈர்ப்போடு பாடும் எளிமையான செவ்வியல் ராகங்களையும், பஜன்களையும் கேட்டு இசையார்வத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்.
சிறுவயதில் தனது அருகாமையிலுள்ள வீட்டில் வசித்த ஓர் சிறுமிக்கு கர்நாடக இசையாசிரியர் ஒருவர் எவ்வித உணர்ச்சி வெளிப்பாடுகளோ, ரசனையோ இல்லாமல் நடத்தி வந்த இசைப்பாடத்தைக் கேட்ட பி.பி.எஸ் கர்நாடக இசை வடிவத்தையே வெறுக்க ஆரம்பித்தார். கர்நாடக இசை என்பது எந்திரத்தனமான, உணர்ச்சியில்லாத ஒரு இசை வடிவம் என்று அவர் மனதில் பதிந்து போனது.
இதன் காரணமாகவே அவரது கவனம் வடநாட்டு இசையின் பக்கம் திரும்பியது. அப்போதைய அருமையான பல இந்தித் திரைப் பாடல்களையே தனது ஆசிரியர்களாகக் பாவித்தார் பி.பி.எஸ். அவற்றை சிரத்தையுடன் செவிமடுத்து பாடலின் ஒவ்வொரு நிமிடத்துணுக்கையும் பாடிப்பாடி தனது புலமையில் திருப்தி பெரும் வரை பயிற்சி செய்தார். இதைத்தாண்டிய பெரும் இசைப் பயிற்ச்சி எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. தாய்மாமா கிருஷ்ணமாச்சாரி மேடை நாடகங்களை இயக்கி நடிப்பவராக இருந்தார். இசையிலும் ஈடுபட்டிருந்தார். அவருடைய தூண்டுதலால் 12ஆவது வயதிலேயே மேடையில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவரது தந்தையார் பி பி எஸ்ஸின் இந்த இசை ஈடுபாட்டால் கவலையடைந்திருந்தார்.
மேலும் பிரபலமான ஜோதிடர் ஒருவர் பி பி எஸ்ஸின் ஜாதக பலனின் படி இசைத்துறையில் நுழைந்தால் அவரது வாழ்வு முற்றிலுமாக வீணாகிவிடும் என்று கூறியிருந்தார். ஆனால் துடிப்பான ஸ்ரீனிவாஸ் "உங்களது எல்லா ஜாதக முன்னறிவிப்புகளும் நிறைவேறியிருக்கிறதா?" எனக் கேள்வி கேட்டு சவால் விடுத்தார். ஜோதிடரிடம் திடமான எந்த பதிலும் இருக்கவில்லை. பிற்காலத்தில் "ஜாதக பலம்" எனும் படத்தில் பாடியதிலிருந்து தான் பி பி ஸ்ரீனிவாஸின் திரையிசை வாழ்வு உச்சத்தை நோக்கிச் சென்றது என்பது சுவாரசியமான தற்செயல்.
அவரது தந்தை, ஸ்ரீனிவாஸ் ஒரு வக்கீலாகவோ அரசு ஊழியராகவோ ஆகவேண்டும் என விரும்பினார். சிலவருடங்களில் பி.காம் முடித்துவிட்டு சட்டக்கல்லூரியில் சேருவதற்காக சென்னை வந்தார் பி பி எஸ். படிப்பில் குறைவாகவே கவனம் செலுத்தியவராக, ஈமனி சங்கர சாஸ்திரி எனும் தனது குடும்ப நண்பரைச் சந்திப்பதற்காக அடிக்கடி ஜெமினி ஸ்டூடியோவுக்குச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தார். ஈமனி ஒரு வீணை வித்வான். ஜெமினியில் இசைத்துறையின் தலைவராக இருந்தார். சட்டப் படிப்பின் முதல் வருடம் முடிவதற்குள் படிப்பை நிறுத்திவிட்டு சாஸ்திரியிடம் உதவியாளராகச் சேர்ந்தார் பி பி எஸ். ஜெமினியின் உரிமையாளரான எஸ்.எஸ்.வாஸன் ஸ்ரீனிவாஸின் குரலையும் பாடும் முறையையும் வெகுவாக ரசித்து தனது படங்களில் வாய்ப்புத்தருவதாகச் சொன்னார். ஏ.எம்.
ராஜாவையும் திரையிசைக்குள் அறிமுகம் செய்ததும் எஸ்.எஸ்.வாஸனே என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி தயாரிப்பில் 1952ல் வெளியான மிஸ்டர் சம்பத் எனும் இந்திப்படத்தில் முதன்முதலாக பி பி எஸ் ஓரிரு தனித்த வரிகளையும் கூட்டுக்குரல் வரிகளையும் பாடினார். பெண்குரல்களுக்கு முக்கியத்துவம் இருந்த "அஜி ஹம் பாரத் கி நாரி" மற்றும் "சலோ பனியா பரன் கோ" என்ற அப்பாடல்களில் அவருடன் இணைந்து பாடியவர்கள் கீதா தத், சம்ஷாத் பேகம் மற்றும் ஜிக்கி! மூவருமே அப்போது நட்சத்திரப் பாடகிகள்! இந்திமொழியுடன் பிணைப்பில்லாத ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியிலிருந்து வந்திருந்தாலும் பி பி எஸின் இந்தி உச்சரிப்பு சிறப்பானதாகவே இருந்தது.
அடுத்த வருடமே மூன்று மொழிகளில் வெளியான ஜாதகம் (தமிழ்) ஜாதகபலம் (தெலுங்கு), ஜாதகபலா (கன்னடா) எனும் படங்களில் இரண்டு தனிப் பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். தமிழில் ’சிந்தனை என் செல்வமே’,’மூட நம்பிக்கை
யாலே’ எனும் அந்த இரண்டு பாடல்களும் மூலப்படமான கிஸ்மத் எனும் புகழ்பெற்ற இந்திப் படத்தில் வந்த மெட்டுக்களில் அமைந்திருந்தது. இப்பாடல்கள் மூலமே பிண்ணனி பாடகர் எனும் முக்கிய இடத்தைப் பெற்றார் பி பி எஸ்.
அடுத்த வருடம் விடுதலை எனும் படத்தில் ’அன்போடு இன்பமாக’ எனும் பாடல் வாய்ப்புக் கிட்டியது. பின்னர் வெளிப்பட்ட அவரது பாடும்முறையின் பாங்கும் அவருடைய தனித்துவமான பாணி என்று சொல்லக்கூடியவற்றின் சாயல்களும் இப்பாடலில் இடம்பெற்றிருந்தது. இதே வருடத்தில் பி.எஸ்.திவாகர் இசையமைப்பில் வெளியான ’புத்ர தர்மம்’ படத்தின் வழியாக மலையாள சினிமாவிலும் நுழைந்தார்
பி பி எஸ்.
விரைவிலேயே மலையாளத்தில் தனக்கான இட்த்தை உருவாக்கினார். "மஹல் தியாகமே" (ஹரிச்சந்த்ரா), 'கத பறயாம்' (உம்மா), 'பாவன பாரத’ (சீதா), 'மன்னவனாயாலும்" (சத்யபாமா), 'இனியொரு ஜன்மமுண்டோ' மற்றும் "பலியல்லா எனிக்கு வேண்டது" (ரெபேக்கா), ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரின் இசையமைப்பில் ஆயிஷா பட்த்தில் வெளிவந்த 'யாத்ரக்காரா போவுக போவுக', போன்ற பாடல்களும், அழியாப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பாபுராஜின் இசையமைப்பில் வந்த 'கீதே ஹ்ருதய சகீ' (பூச்சக்கண்ணி), 'இணக்குயிலே இணக்குயிலே' (காட்டுதுளசி) பாடல்களும் மலையாளத் திரை இசையின் காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்கள்.
சலில் சௌதுரியின் இசையமைப்பில் அவர் பாடிய ஒரே பாடலான ‘ராத்றி ராத்றி’ (படம் – ஏழு ராத்றிகள்) பி பி எஸின் ஆழ்ந்த அடிக்குரலின் சாத்தியங்களை முற்றிலுமாக பயன்படுத்திய பாடலாகும். அவரது மிகமிகப் பிரபலமான மலையாளப் பாடல் என்பது பாபுராஜ் இசையமைப்பில், நிணமணிஞ்ஞ கால்ப்பாடுகள் படத்தில் இடம்பெற்ற "மாமலகள்க்கப்புறத்து" தான். இப்பாடல் தாய் மண்ணை விட்டு வெளிநாடுகளில் வாழும் பல லட்சம் மலையாளிகளின் தேசிய கீதம் போல் இன்றும் ஓலிக்கும் பாடல். தனது மலையாள நாட்டைப் பற்றிய ஏக்க நினைவுகளில், அதன் அழகிய கனவுகளில் ஆழ்ந்திருப்பவர்களை பற்றிய பாடல் இது.
கண்டசாலா பேராதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தெலுங்கு திரையிசையில், 1956ம் ஆண்டு வெற்றி பெற்ற தனது முதல் பாடலைப் பாடினார் பி பி எஸ். எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையமைப்பில் வெளியான ’பலே ராமுடு’ எனும் படத்தில் இடம்பெற்ற ’பயமேலே ஓ மனசா’ எனும் பாடல் அது. இதன் தமிழ்ப்பதிப்பு தான் பிரேம பாசம் படத்தில் அவரே பாடிய ’அவனல்லால் புவிமேலே அணுவும் அசையாது’. தெலுங்கின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜேஸ்வர ராவ் இதைப்பற்றி ஒருமுறை,"கண்டசாலா இருக்கும்போது ஏன் பி பி எஸ்ஸை கொண்டுவந்தீர்கள் என பெரும்பாலோர் கேட்டனர். ஸ்ரீனிவாஸின் ஆழமான குரலும் அதன் மென்மையான நடையும் எனக்குப் பிடித்திருந்தது. இது புதுமையானதாகவும் கண்டசாலாவிலிருந்து ஒரு சிறந்த மாற்றமாகவும் இருக்கும் எனப்பட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆயினும், பி பி எஸுக்கு அவரது தாய்மொழியில் மிகப்பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. வெகு குறைவான பாடல்களே அவருக்கு அங்கே கிடைத்தது. அவற்றில் 'மனசுலோனி கோரிக' (பீஷ்மா), 'ஓஹோ குலாபி பாலா' (மஞ்சி மனிஷி), 'புஜ்ஜி புஜ்ஜி பாப்பாயி' (ஆட பர்த்துலு), 'வெண்ணல ரேயி' (பிரேமிஞ்சி சூடு), 'ஒஹோ சிட்டெம்மா' (அசாத்யுடு) மற்றும் ’அன்தால ஓ சிலகா’ (லேத மனசுலு) - தமிழில் டி.எம்.எஸ் பாடிய அன்புள்ள மான்விழியே- போன்ற பாடல்கள் இன்றும் வெகுவாக ரசிக்கப்படுபவையே.
1956 ஆம் ஆண்டு கன்னட்த்திரையின் உச்ச் நட்சத்திரமான ராஜ்குமார் நடித்த 'ஒஹிலேஷ்வரா" எனும் படத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் முக்கியமானதொரு பாடலைப் பாடினார் பி பி எஸ். அதுவரை ராஜ்குமாரின் பாடலுக்கு பிண்ணனிக் குரலாக கண்டசாலாவே இருந்து வந்தார். ராஜ்குமார் கூட ஒருபாடலை அந்த படத்தில் பாடியிருந்தார். எனினும் ராஜ்குமார் உட்பட அனைவருமே பி பி எஸ்ஸின் குரல் தான் ராஜ்குமாரின் திரையாளுமைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக கருதினர். அதன் பின்னர் கன்னட சினிமாவின் மிக முக்கியமான பாடகராக பி பி எஸ் ஆனார். அவருடைய திரையிசைப் பயணத்தில் கன்னடத்தில் மட்டும் தான் ஒரு உச்சநட்சத்திரப் பாடகராக பி பி எஸ் அங்கீகரிக்கப்பட்டார். தனது படத்தின் பாடல்களை ராஜ்குமார் சொந்தமாகப் பாடத்தொடங்கிய 1974 ஆம் ஆண்டு வரை இது நீடித்தது. ராஜ்குமாருக்காக மட்டுமே ஏறத்தாழ 200 படங்களில் பாடியிருக்கிறார் பி பி எஸ்.
பி பி எஸ்ஸின் கன்னடப் பாடல்களை நீங்கள் கேட்டிராவிட்டால் ஒரு பாடகராக அவரை நீங்கள் அறிந்து வைத்திருப்பது குறைவானதேயாகும். பெட்டத ஹுலி
படத்தில் 'ஆகாசத லோகதி தூரா’ மற்றும் 'ஆடித்திருவா மோடகளே", மிஸ் லீலாவதி படத்தில் ’தோணி சாகலி', ஸ்வர்ண கௌரி படத்தில் 'பார சந்த்ரமா', விஜயநாகரத வீரபுத்ரா படத்தில் 'அபார கீர்த்தி கெளிஸி', அரிஷின கும்குமா படத்தில் 'கோபுர கண்டு', தூமகேது படத்தில் 'ஆஹா இதேனு நடெ’, சந்த்யா ராகா படத்தில் 'தீன நா பந்திருவே', ஸ்வர்ணகௌரி படத்தில் 'பாரே நீ செலுவே', கனகதாசா படத்தில் 'பாகிலனு தெரெது', புனர்ஜென்மா படத்தில் 'ஒலுமெய ஹுவே' மற்றும் ‘அனுராகதி நீ பாடலேகே, தினா தினா ஒலுமெயு கண்டாக" போன்ற பாடல்கள் பி பி எஸின் சிறந்த கன்னடப் பாடல்களுக்கு சில உதாரணங்கள்.
தமிழில் பி பி எஸ்ஸின் இசைப்பயணம் 1957ம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய அடியை எடுத்து வைத்தது. சமயசஞ்சீவி படத்தில் ஜிக்கியுடன் சேர்ந்து பாடிய ’கம கமவென’, எம்.என்.நம்பியாருக்கு பின்னணியாக மக்களைப் பெற்ற மகராசி படத்தில் ’ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’, மக்தலநாட்டு மேரி படத்தில் ’கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை’ போன்ற பாடல்கள் இவ்வருடத்திலே வெளியாயின. 1959ல் முதன்முதலாக ஜெமினி கணேசனுக்காக பின்னணி பாடினார். அதுவரை ஏ.எம்.ராஜாவே ஜெமினியின் திரையிசைக் குரலாக இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம்பெற்ற ’இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை பி பி எஸ்ஸுக்கு வழங்கியிருந்தார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.
அடுத்த வீட்டுப் பெண் (1960) படத்தில் மூன்று மிக முக்கியமான பாடல்களை ஆதிநாராயண ராவ் இசையில் பாடினார். 'வாடாத புஷ்பமே (வனிதா மணியே)', 'கண்ணாலே பேசிப் பேசி' என்ற இருபாடல்கள் வெகுவாக ரசிக்கப்பட்டது, இப்பட்த்தின் 'மாலையில் மலர் சோலையில்' என்ற பாடல் எக்காலத்துக்குமுரிய எனது விருப்பமான பி பி எஸ் பாடல் ஆகும். பாவமன்னிப்பு (1961) படம் வெளியான பிறகுதான் பி பி எஸ் தமிழில் வெகுவாக பிரபலமடைந்தார். அதில்தான் ’காலங்களில் அவள் வசந்தம்’ பாடல் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் அமைந்திருந்தது.
எம்.எஸ்.விஸ்வநாதன் ஒருமுறை பி பி எஸ்ஸைப் பற்றி குறிப்பிட்டபோது "அப்போது டி.எம்.எஸ்ஸின் குரல் மட்டுமே சிவாஜி, எம்.ஜி.ஆருக்கும், ஏ.எம்.ராஜாவின் குரல் மட்டுமே ஜெமினி கணேசனுக்கும் பொருத்தமாக இருக்கும் என பெரும்பாலோர் நம்பி வந்தனர். நான் அதை மாற்ற விரும்பினேன். பி பி எஸ்ஸை ஜெமினிக்காக பாடவைத்தேன். என்னிடமும், மற்ற இசையமைப்
பாளர்களிடமும் அவர் ஏற்கனவே பாடியிருந்தாலும், முதன்முறையாக ஒரு பெரிய கதாநாயகனுக்காக அவர் பாடியது அப்போதுதான். பின்னர், சிவாஜி மற்றும் எம் ஜி ஆருக்காகவும் பாடியிருக்கிறார். தெலுங்கில் என்.டி.ராமராவுக்காகவும் அவரைப் பாட வைத்தேன். கண்டசாலாவின் குரல் மட்டுமே என்.டி.ஆருக்கு பொருந்தும் என பலர் மறுப்பு தெரிவித்தனர். எனினும் பி பி எஸ்ஸின் குரலிலேயே பாடலை வைத்தேன். ’புஜ்ஜி புஜ்ஜி பாப்பாயி’ என்ற அந்த பாடல் வெளிவந்த உடனே வெகுவாக ரசிக்கப்பட்டு புகழடைந்தது.
"ஸ்வரங்களைப் பற்றி அவருக்கிருக்கிற ஞானமே பி பி எஸ்ஸின் பலம்" என்று எம்.எஸ்.வி குறிப்பிடுகிறார். மேலும் "மெட்டையும் பாடல் வரிகளையும் கேட்ட உடனே அவரால் பாடமுடியும். அவர் கௌரவமான நடத்தை கொண்டவராகவும், ஒழுக்கமானவராகவும் இருந்தார். அவரது தனித்துவமான தொனியும் சிறப்பான குரலும் பாடலுடன் எளிதில் கலந்து விடுகிறது என்று கூறியிருக்கிறார்.
ஆனால் பி பி எஸ் அவரது வெற்றிகளை இசையமைப்பாளர்களுக்கே உரியதாக்குகிறார். "ஒரு பாடல் பிரபலமடைய வேண்டுமென்றால் அது காட்சியமைப்புகளாலும் ஒளிப்பதிவாலும் சிறப்பானதாக இருக்க வேண்டும். அல்லாது பாடகர் எவ்வளவு சிறப்பாக பாடி இருந்தாலும், வரிகளும், மெட்டும் எவ்வளவு நன்றாக அமைந்திருந்தாலும் அது பாடலை வெற்றியடையச் செய்யாது" என்றும்
பி பி எஸ் குறிப்பிட்டிருக்கிறார். பி பி எஸின் பாடல்கள் இடம்பெற்ற படங்களில் பெரும்பாலானவற்றை நான் பார்த்த்தில்லை என்பதால் இக்கருத்து உண்மையில்லை என்றே சொல்லுவேன்.
பி பி எஸ்ஸைப்பற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசுகையில், "நான் பி பி எஸ்ஸின் தீவிர பக்தன். அவருடைய பல பாடல்களை மேடையில் பாடும் நல்வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நான் முதலில் பார்த்த பாடல் பதிவு பி பி எஸ் பாடியதாகும். காதலிக்க நேரமில்லை படத்தின் ’நாளாம் நாளாம்’ எனும் பாடலின் தெலுங்குப் பதிப்பு தான் அது. பாடும் வாய்ப்பு தேடி எம்.எஸ்.வியை சந்தித்த போதும் குரல்தேர்வுக்காக நான் பாடிக்காட்டியது பி பி எஸ் பாடிய ’நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலே. பி பி எஸ் ஒரு சிறந்த கவிஞரும் எழுத்தாளருமாவார். எட்டு மொழிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேலான கவிதைகளையும் பாடல்களையும் எழுதியிருக்கிறார்" என்று உணர்வு பூர்வமாக குறிப்பிடுகிறார்.
உடலுக்கு உயிர் காவல் (மணப்பந்தல்), பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் (வீரத்திருமகன்), மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மற்றும் மயக்கமா கலக்கமா (சுமைதாங்கி), மௌனமே பார்வையால் (கொடிமலர்), இந்த மன்றத்தில் ஓடிவரும் (போலீஸ்காரன் மகள்), பூஜைக்கு வந்த மலரே வா (பாத காணிக்கை), கண்படுமே பிறர் கண்படுமே (காத்திருந்த கண்கள்), பொன் ஒன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா), அவள் பறந்து போனாளே (பார் மகளே பார்), அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை) போன்ற பி பி எஸின் அனைத்துப் பாடல்களுமே பல ஆண்டுகளாக நாம் ரசித்து வருபவை.
நம்பிக்கையின்மையின் துயரத்தை வெளிப்படுத்தும் "யார் சிரித்தால் என்ன?, ஏமாற்றத்தை உணர்த்தும் "கண்களே கண்களே" காதலின் மெல்லுணர்வைத் தரும் "மலரோடு விளையாடும்", சோகமும் ஏக்கமும் வெளிப்படுத்தும் "நிலவே என்னிடம் மயங்காதே" மற்றும் "தென்னங்கீற்று ஊஞ்சலிலே", நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட"நேற்றுவரை நீ யாரோ?" பரிதாப உணர்வை வெளிப்படுத்தும் "என்னைப் பார்த்தால் பரிகாசம்", தத்துவப்பாடல்களான "மயக்கமா கலக்கமா", ’வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும்", "ஆற்று வெள்ளம் போன பின்னாலே", காதல் உணர்வின் உச்சமான "ரோஜா மலரே ராஜகுமாரி", காதலின் உற்சாகத்தை அளிக்கும் "போகப் போகத் தெரியும்" மற்றும் "தாமரைக் கன்னங்கள்", குழந்தைப் பாசத்தை வெளிப்படுத்தும் "சின்னச் சின்னக் கண்ணுக்கு", வேட்கையின் சிருங்காரத்தை தரும் "என்னருகே நீயிருந்தால்" மற்றும் "எந்தன் பருவத்தின் கேள்விக்கு", கவித்துவமான "காற்றுவெளியிடைக் கண்ணம்மா", ராக பாவங்கள் வெளிப்படுத்தும் "பொன் என்பேன்" மற்றும் "பார்த்தேன் சிரித்தேன்" போன்ற பாடல்களெல்லாம் பி பி எஸ்ஸால் சிறப்பாக பாடப்பட்டவையாகும்.
பொதுவாக எல்லோரைப் பற்றியும் நல்ல கருத்துக்கள் சொல்வதையே விரும்புபவர் பி பி எஸ். ஆனால் ஒருமுறை பாடகி அனுராதா ஸ்ரீராம் ஒரு மேடை நிகழ்ச்சியில் மோசமாகப் பாடிவிட்டு அங்கிருந்த பி பி எஸ்ஸிடம் கருத்தைக் கேட்டபோது எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். எவ்வளவோ வலியுறுத்திக் கேட்டும் எதுவும் சொல்லாமலேயே இருந்து விட்டார். அனுராதா பாடியதை அவர் விமர்சனபூர்வமாக அணுகியிருந்தார் என்று உறுதியாகச் சொல்லலாம். பி பி எஸுக்குள்ளே இருக்கும் இசை விமர்சகர்தான் அப்போது வெளிப்பட்ட்து என்றே நினைக்கிறேன்.
அதைப்போலவே பி பி எஸ்ஸின் பாடல்களையும் விமர்சனபூர்வமாக அவதானித்தால், அவரது பாடல்களில் பெரிய மந்திர ஜாலங்களோ, எல்லையற்ற பரவசமோ, உள்ளம் பேதலித்த உச்ச அனுபவங்களோ வெளிப்பட்டதில்லை எனக்காணலாம். அவருக்கு வழங்கப்பட்ட பாடல்களின் உணர்வுகளை தீவிரமடையாமல் அவர் மீளுருவாக்கிப் பாடினார் என்றும் கருதலாம். உணர்ச்சிகளின் உச்சங்களை அடைவதை விட சங்கதிகளை கச்சிதமாகவும் மென்மையாகவும் பாடுவதில் தேர்ச்சியை வெளிப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தினார் பி பி எஸ் என்றும் கூறலாம். இத்தகைய குணாம்சத்தால் அவரது பல பாடல்கள் ஒருவகையான இயந்திரத்தனத்துடன் ஒலித்தது. இதற்க்கு காரணம் பெரும் ஏற்றங்களோ தாழ்வுகளோ இல்லாத சாதாரணமான ஒரு வாழ்வை சிறுவயதிலிருந்தே அனுபவித்து வந்ததனால் கூட இருக்கலாம். ஒரு உன்னதமான கலைஞனிடம் வெளிப்படும் கலை என்பது நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவனது வாழ்வின் பிரதிபலிப்பேயாகும். அவனது வாழ்வு சாதாரணமானதாக, சராசரியானதாக இருக்கும் பட்சத்தில் அவனது கலைவெளிப்பாடும் அவ்வாறானதாகவே இருக்கும்.
பந்தபாசம் படத்தில் டி.எம்.எஸ் உடன் இணைந்து பாடிய 'கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு' என்ற பாடலை அவர் பாடும் விதம் அவரது இந்த அமைதியான பாடும்முறைக்கு மிகச்சிறந்த உதாரணம். அதே பாடலில் டி எம் எஸ் வெளிப்படுத்தும் உணர்வுகள் வெளிப்படையானதாக இருக்கும். ஆக்ரோசமான உணர்வுகள் முதல் மனச்சோர்வின் ஆழங்கள் வரை எல்லா வகையான உணர்ச்சிகளையும் டி எம் எஸ் தனது பாடல்களில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, பி பி எஸ் மென்மையான காதலுணர்வுகளை மறைவாக வெளிப்படுத்தும் பாடல்களை மகிழ்வோடு பாடி கொண்டிருந்தார். அத்தகைய காதல் உணர்வைக்கூட டி எம் எஸ் எவ்வாறு வெளிப்படையாக வெளிப்படுத்தினார் என்பதற்க்கு டி.ஜி.லிங்கப்பா இசையில் வந்த ’சித்திரம் பேசுதடி’ (சபாஷ் மீனா) போன்ற பாடல்கள் சான்று. ’அந்தால ஓ சிலகா’ என்ற பி பி எஸின் தெலுங்கு பாடலையும் அதன் தமிழ் வடிவமான 'அன்புள்ள மான்விழியே' என்ற டி எம் எஸ் பாடலையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
கச்சிதமாகப் பாடும் உத்திகளில் பி பி எஸ் ராஜ்குமாரை விட பல மடங்கு சிறப்பானவர் ஆயினும் பி பி எஸுக்கு இல்லாத உணர்ச்சிகளின் உயிரோட்டம் ஒன்று ராஜ்குமாரின் பாடும்முறையில் இருந்த்து. வெவ்வேறுபட்ட உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்துவதாக இருந்தன ராஜ்குமாரின் பல பாடல்கள். சந்தேகம் இருந்தால் ராஜ்குமாரின் 'பெளதிங்களாகி பா' (ஹுலிய ஹாலினா மேவு) பாடலையோ அல்லது 'பானிகொந்து எல்லெ எல்லிதே (பிரேமத காணிகெ) பாடலையோ கேட்டுபார்ருங்கள். அதேபோல் ஏ.எம்.ராஜாவை விட மிக ஆழ்ந்த, முழுமையான குரலைக் கொண்டிருந்தவர் பி பி எஸ். ஆயினும் ஏ.எம்.ராஜாவின் பாடும் முறை தான் இயல்பானதாகவும் உயிர்ப்புள்ளதாகவும் இருந்தது. வெகு இயல்பாகப் பாடுபவராக ஏ எம் ராஜா இருந்தார் என்பதை பி பி எஸே ஒத்துக்கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் பி பி எஸ்ஸின் சிறப்பு என்னவென்றால், அவர் தனக்கு இயல்பாக பாடவராத உணர்ச்சிகளை பாட ஒருபோதும் போலியாக எத்தனித்ததில்லை என்பது தான். அவருக்குப் பின் வந்த, அவரை வழிபடுவதாக்க்கூறும் சில பாடகர்களைப் போல தனது பல்வேறு திறமைகளை நிரூபிக்க வேண்டி மிகையான உணர்ச்சி வெளிப்பாடுகளை தனது பாடலில் அவர் ஒருபோதும் காட்டியதில்லை. பி பி எஸின் பாடல்கள் நம்மை பரவச உணர்வின் உச்சிக்குக் கொண்டு செல்லாமல் போகலாம் என்றாலும் மனித வாழ்வின் அமைதியான, மென்மையான பல பகுதிகளை தொட்டுச்சென்றது அவை.
அத்தகைய மென்னுணர்வுகளைப் பாடுவதில் அவர் மெய்யாகவே சிறந்து விளங்கினார். சிறந்த உதாரணமாக, இந்தியில் புகழ்பெற்ற அவரது ஒரேயொரு பாடலான ’சந்தா ஸே ஹோகா வோ பியாரா’’ எனும் பாடலைச் சொல்லலாம். லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடிய இப்பாடல் மே ஃபி லட்கி ஹூம் (1961) படத்தில் இடம்பெற்றிருந்த்து. இதே பாடலின் தமிழ் வடிவமான ’பூப்போல பூப்போல பிறக்கும்’” (நானும் ஒரு பெண்)’ எனும் டி.எம்.எஸ் பாடிய பாடல் மற்றும் அதன் தெலுங்கு வடிவமான கண்டசாலா பாடிய ‘சின்னாரி பொன்னாரி பூவு (நீடி ஆட ஜென்ம) பாடலையும் கேட்டுப் பார்க்கலாம். பி பி எஸ் பாடிய இந்திப்பாடல் மற்ற இரு பாடல்களையும் விட பல மடங்கு சிறப்பாக இருப்பதை உணரலாம்.
1970 களின் கடைசியில் எம்.எஸ்.வி திரையிசையிலிருந்து வெளியேறியபோதே பி பி எஸ்ஸின் திரையிசை வாழ்வும் முடிந்து போனது. அதன்பின்னர் 1979ம் ஆண்டு சங்கர்-கணேஷ் இசையமைப்பில் இனிக்கும் இளமை எனும் படத்தில் இடம்பெற்ற 'மாலை மயங்கினால் இரவாகும்" என்ற பாடலைப் பாடினார். வழக்கமான பி பி எஸ் பாணியிலிருந்து வேறுபட்டதொரு இனிமையான பாடல். இளையராஜா பி பி எஸுக்கு குறிப்பிடும்படியான எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை. கடவுள் அமைத்த மேடை (1979) படத்தில் 'தென்றலே நீ பேசு' பாடலை இளையராஜா இசையில் பாடினார். ஏ.ஆர்.ரஹ்மானும் தனது படங்களில் பி பி எஸ்ஸுக்கு எந்த வாய்ப்பும் வழங்கியதில்லை. 2004ல் யுவன் சங்கர் ராஜா இசையில் 7ஜி ரெயின்போ காலனி பட்த்தில் ஓரிரு வரிகளைப் பாடினார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் சிலவரிகளைப் பாடினார். இவ்விரண்டுக்குமே அப்படங்களின் இயக்குனரான செல்வராகவன் தான் காரணமாக இருக்கலாம்.
பாடும் வாய்ப்புக்கள் குறைந்துபோன பின் தன்னை ஒரு பல்மொழிக்கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் தான் பி பி எஸ் முன்வைத்து வருகிராற். ஆனால் அதிலும் சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைத்த்தாக தெரியவில்லை.
இளையராஜாவின் நண்டு (1981) படத்திலும் தடாகம் என்ற மலையாளப்பட்த்திலும் சில இந்திப் பாடல்களை எழுதினார். மற்றபடி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற 8 மொழிகளில் அவர் எழுதியதாக்க் கூறப்படும் 2 லட்சத்துக்கும் மேலான பாடல்களோ கவிதைகளோ எங்கே பயன்பட்ட்து என்றும் தெரியவில்லை. தனக்காக மட்டுமே அவர் விடாமல் எழுதுகிறார் என்றே படுகிறது.
அவருடைய கன்னடமொழிக்கான கலைச்சேவையைப் பாராட்டி சமீபத்தில் கர்னாடக அரசு அவருக்கு பெங்களூரின் முக்கியமான பகுதியில் 2500 சதுர அடி நிலத்தைப் பரிசளித்தது. பி பி எஸ்ஸின் ஆயுட்காலத்திலேயே அவருக்கு கிடைத்த தலைசிறந்த அங்கீகாரம் இதுவாகத் தான் இருக்கக் கூடும். இதை வழங்கும்போது "இது மிக மிக தாமதமாக வழங்கப்படுகிறது, எனினும் ஒருபோதும் வழங்கப்படாமலே இருப்பதற்கு தாமதாயினும் சிறந்தது" என்று கர்நாடக முதலமைச்சர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசோ அவருக்கு எவ்வித மதிப்புமற்ற கலைமாமணி விருதையும், ஒரு முறை இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியையும் வழங்கியது!
இதைத்தவிர பி பி எஸுக்கு அவரது தகுதிக்கோ சாதனைகளுக்கோ ஏற்ற எந்தவொரு விருதுமே கிடைத்ததில்லை. மாநில அரசுகளோ மத்திய அரசோ எந்த விருதையும் அவருக்கு வழங்கியதில்லை. பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்றவை போகட்டும் ஒரு பிலிம்ஃபேர் விருதுக்கோ சினிமா எக்ஸ்பிரஸ் விருதுக்கோ கூட அவர் பரிந்துரைக்கப்பட்ட்தாக தெரியவில்லை! பல்வேறு பல்கலைக் கழங்கள் இசைத்துறையின் பல்வேறு சில்லுண்டிகளுக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துக் கொண்டிருந்தும் யாருமே பி பி எஸ்ஸை பொருட்படுத்துவதில்லை.
இப்போதும் சென்னையில் நிகழும் பல மேடை இசை நிகழ்ச்சிகளில் பி பி எஸ் அமர்ந்திருப்பதைக் காணலாம். எவ்வித அழைப்பும் இல்லாமல், சாதாரண பார்வையாளனாக நிகழ்ச்சிகுச் சென்று கலைஞர்களைப் பாராட்டி விடைபெறுவார். அங்கேயும் பெரும்பாலும் அவர் அவமதிக்கப்ப்டுகிறார் என்றே படுகிறது. தமிழ் திரை இசையில் மட்டுமே இதுவரைக்கும் 1300க்கும் மேற்பட்ட பாடகர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்று அறியும்போதாவதுகூட பி பி ஸ்ரீநிவாஸ் யார் என்பது இவற்களுக்கு விளங்குமா என்று தெரியவில்லை.
போன செப்டம்பரில் என்னுடைய இரண்டாவது தமிழ் நூலான ’இசையின் தனிமை’ புத்தக அறிமுக விழா சென்னை பிலிம் சேம்பர் திரையரங்கில் நிகழ்ந்தது. நிகழ்வு முடிந்து வெளிவருகையில் பி பி எஸ் தனியாக முதுமையின் தடுமாற்றத்துடன் நடந்து அரங்கிற்குள் செல்வதைப் பார்த்தேன். நேரம் இரவு 10.30 இருக்கும். அங்கே ஏதோ தெலுங்கு சினிமா ஒன்று இரவுக்காட்சியாக துவங்க இருந்தது. இந்த முதிய வயதில் இவரால் எப்படி இரவுக்காட்சிகளை அமர்ந்து பார்க்க முடிகிறது? ஒருவேளை இரவுகளில் தூக்கமில்லாமல் இருப்பதால் இருக்குமோ அல்லது போக விருப்பமான வேறு இடங்கள் ஏதும் இல்லாததால் இருக்குமோ என்றெல்லாம் தீவிரமாக யோசித்து சங்கடமடைந்தேன். சாலைக்கு எதிரே அமைந்திருந்த புதிய செம்மொழிப் பூங்காவின்மேல் இருள் மட்டும் நிலவியது. அங்குதான் முன்பு
பி பி எஸ் விரும்பிச்செல்லும் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் இருந்தது.
தமிழில் முபாரக்



பழம்பெரும் பின்னணிப் பாடகரும், 12 மொழிகளில் ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடியவருமான P.B.ஸ்ரீநிவாஸ் (P.B.Srinivas) நினைவு தினம் இன்று அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் (1930) பிறந்தவர். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் என்பது முழு பெயர். தந்தை அரசு ஊழியர். தாய் இசை ஆர்வலர். அவர் பாடும் ராகங்களையும், பஜன்களையும் கேட்டு இசை ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.
l இந்திப் பாடல்களை கவனமாகக் கேட்டு, இசை ஆசிரியர்களின் உதவியுடன் பயிற்சி செய்வார். முழு திருப்தி வரும்வரை பயிற்சியை விடமாட்டார். இவர் அரசு உத்தியோகம் அல்லது வக்கீல் தொழிலுக்குச் செல்லவேண்டும் என்பது பெற்றோர் விருப்பம். அதனால், முறையான இசைப்பயிற்சி இவருக்கு வாய்க்கவில்லை.
l பெற்றோர் ஆசைப்படியே இளங்கலையில் பட்டம் பெற்றார். பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். வேண்டா வெறுப்பாக கல்லூரியில் சேர்ந்தவர், குடும்ப நண்பரும் வீணை வித்வானுமாகிய ஈமணி சங்கர சாஸ்திரியைப் பார்க்க ஜெமினி ஸ்டுடியோவுக்கு அடிக்கடி செல்வார். அந்த சூழலால் ஈர்க்கப்பட்டவர், படிப்பை நிறுத்திவிட்டு, அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். முறையாக சங்கீதம் பயின்றார்.
l ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பில் 1951-ல் வெளிவந்த ‘மிஸ்டர் சம்பத்’ என்ற இந்தி திரைப்படத்தில் ‘கனஹிபரது’ என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார். பின்னர் தமிழில் ‘ஜாதகம்’ என்ற திரைப்படத்தில் ‘சிந்தனை செய் செல்வமே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.
l ‘யார் யார் யார் இவர் யாரோ’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘தாமரைக் கன்னங்கள்’, ‘காத்திருந்த கண்களே’, ‘மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம்’, ‘ரோஜா மலரே’ என காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களைப் பாடி அழியாப் புகழ்பெற்றார்.
l சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் அனைவருக்கும் பாடியுள்ளார். தமிழில் ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் ஏறக்குறைய அவர்களது எல்லா பாடல்களுக்குமே இவர்தான் பின்னணி பாடினார். பி.சுசீலா, ஜானகி, பானுமதி, ஜிக்கி, லதா மங்கேஷ்கர் என அனைத்து பாடகிகளுடனும் இணைந்து பாடியுள்ளார்.
l தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். கர்னாடக இசை மட்டுமல்லாது, ஹிந்துஸ்தானியிலும் சிறந்து விளங்கியவர். கஜல் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
l பிறரை மனம் திறந்து பாராட்டுவார். உடையில் அதிக கவனம் செலுத்துவார். இவரது சட்டைப் பையில் எப்போதும் வெவ்வேறு நிறங்களில் 10, 12 பேனாக்கள் இருக்கும்.
l ஆங்கிலம், உருது உட்பட 8 மொழிகளில் புலமை பெற்றவர். நினைத்த மாத்திரத்தில் கவிதை புனையக்கூடியவர். பல மொழிகளில் ஏராளமான பாடல்கள், கவிதைகளை எழுதியுள்ளார். தமிழில் ‘மதுவண்டு’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.
l கலைமாமணி, கன்னட ராஜ்யோத்சவா, டாக்டர் ராஜ்குமார் சவுஹர்தா உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பாடி, தனது வசீகரக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற P.B.ஸ்ரீநிவாஸ் 83-வது வயதில் (2013) மறைந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக