செவ்வாய், 25 ஏப்ரல், 2017



நடிகர் ஜி. பட்டு ஐயர் (ஏப்ரல் 26, 1906 
ஜி. பட்டு ஐயர் (ஏப்ரல் 26, 1906 - ) தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் அம்மாஞ்சி பட்டு ஐயர் என்றும் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

பட்டு ஐயர் 1906 ஏப்ரல் 26 இல்
நாகப்பட்டினத்தில் பிரபலமான வணிகராக இருந்த என். கணேசய்யர் என்பவருக்குப் பிறந்தார். பள்ளியில் படிக்கும் போதே இசை, மற்றும் நாடகங்களில் இவருக்கு அதிக நாட்டம் இருந்தது. பள்ளிக்கூட நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று பரிசுகளும் பெற்றிருக்கிறார். இவரும் நாகை மணி என்ற பெயரில் திரைப்படப் பாடல்கள் எழுதி வந்த எம். எஸ். மணி என்பவரும் மற்றும் சில நண்பர்களும் இணைந்து நாடகக் குழு ஒன்றை நிறுவி நாகப்பட்டினம், மாயவரம், திருவாரூர் போன்ற இடங்களில் நாடகங்களை நடத்தி வந்தனர்.

திரைப்படங்களில்

இவரது நாடகம் ஒன்றைக் காண வந்த ராவ்பகதூர் கே. எஸ். வெங்கட்ராமய்யர் என்பவர் இவரது நடிப்பைக் கண்டு, தனது பேத்தியின் கணவரான இயக்குநர் கே. சுப்பிரமணியத்திடம் இவரைத் திரைப்படங்களில் நடிக்கப் பரிந்துரைத்தார். அப்போது கே. சுப்பிரமணியம் மதுரை முருகன் டாக்கீசுக்காக கல்கத்தா சென்று நவீன சாரங்கதாரா என்ற திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். அப்படத்தில் பட்டு ஐயருக்கு நடிக்க சந்தர்ப்பம் கொடுத்ததோடு மட்டுமன்றி தன் உதவி இயக்குநராகவும் நியமித்தார். [1] நவீன சாரங்கதாராவில் கதாநாயகி எஸ். டி. சுப்புலட்சுமியின் தந்தை சித்திரசேனனாக நடித்தார். இத்திரைப்படம் 1936 இல் வெளிவந்தது. இதே வேளையில் கே. சுப்பிரமணியத்தின்
நவீன சதாரம் திரைப்படத்தில் கள்வர் தலைவனாக நடித்தார். இத்திரைப்படம் 1935 இல் வெளிவந்தது. பின்னர் பக்த குசேலாவில் எஸ். எஸ். மணி பாகவதர் சாந்தீப முனிவராக நடிக்க பட்டு ஐயர் அவரது சீடராக நடித்தார். ]இதன் பின்னர் மெட்ராஸ் யுனைட்டட் ஆர்ட்டிஸ்டு நிறுவனத்தின் மிஸ்டர் அம்மாஞ்சி (1937) என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் அம்மாஞ்சி என்ற பாத்திரத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். எஸ். டி. சுப்புலட்சுமி அத்தங்காளாக இதில் நடித்திருந்தார்.
சேவாசதனம் (1938) திரைப்படத்தில் வக்கீல் பத்மநாபனாக நடித்தார். பத்மநாபனின் மனைவியாக ஜெயலட்சுமி வரதாச்சாரி என்பவர் நடித்தார். தொடர்ந்து அனந்த சயனம் (1942) படத்தில் நாடோடி மக்களின் தலைவனாகவும், பர்த்ருஹரியில் விக்ரமாதித்திய மன்னனாகவும்,
மானசம்ரட்சணம் படத்தில் கதாநாயகி சுப்புலட்சுமியின் சகோதரனாகவும் நடித்தார்.
ரிஷ்யசிருங்கரில் விபாண்டக முனிவர் வேடத்தில் நடித்த பட்டு ஐயர்,
காமதேனுவில் வயதான சமீன்தார் வேடத்தில் நடித்தார். ஆர்.கே.எஸ் பிக்சர்சின் குண்டலகேசியில் நடித்த பின்னர் சிறீகமல் புரடக்சன்சாரின் மகாத்மா உதங்கர் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, அத்திரைப்படத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் (1949) திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான மருத்துவர் வேடத்தில் நடித்தார்.
பின்னாளில், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கர்ணனுக்கு உதவியாக படத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டார்.

குடும்பம்

பட்டு ஐயருக்கு ஒரு மகனும், மூன்று பெண்களும் உள்ளனர். இவரது சகோதரர் ஜி. ராமச்சந்திரன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

நடித்த திரைப்படங்கள்

1. நவீன சதாரம் (1935)
2. உஷா கல்யாணம் (1936)
3. நவீன சாரங்கதாரா (1936)
4. பக்த குசேலா (1936)
5. கௌசல்யா பரிணயம் (1937)
6. காமதேனு (1941) [3]
7. குண்டலகேசி (1947)
8. அபூர்வ சகோதரர்கள் (1949)
9. அவ்வையார் (1953)
இயக்கிய திரைப்படங்கள்
1. மன்மத விஜயம்
2. மகாத்மா உதங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக