இயக்குநர் பஞ்சு அருணாசலம் பிறந்த தினம் ஜூன் 18, 1941.
பஞ்சு அருணாசலம் (சூன் 18, 1941 - ஆகத்து 9, 2016) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதல்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின. பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம்.
மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு நடிகர் சுப்பு ஆவார்.
ஆரம்ப காலம்
ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை.
பணி
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராசாவை அறிமுகப்படுத்தினார். சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அவர்கள்தான் திரைக்கதை, வசனம் எழுதினார். . விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியதே இவரின் இறுதி பாடலாசிரியர் பணியாகும் . இவர் கதை - வசனம் எழுதி தயா ரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு சிறந்தப் படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத் துள்ளது. தமிழக அரசின் கலை மாமணி விருதை அவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு
இயற்றிய சில பாடல்கள்
வரிசை எண் ஆண்டு திரைப்படம் பாடல் பாடியவர்கள் இசையமைப்பாளர் குறிப்புகள்
1 1965 கலங்கரை விளக்கம் பொன்னெழில் பூத்தது டி. எம். செளந்தரராஜன் , பி. சுசீலா எம். எஸ். விஸ்வநாதன்
2 நானும் ஒரு பெண் பூப்போல பூப்போல பிறக்கும்
3 1979 ஆறிலிருந்து அறுபது வரை கண்மணியே காதல் என்பது எஸ். பி. பாலசுப்பிரமணியம் ,
எஸ். ஜானகி இளையராஜா
4 1984 தம்பிக்கு எந்த ஊரு காதலின் தீபமொன்று ஏற்றினாளே எஸ். பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா
5 ஏழை பங்காளன் தாயாக மாறவா
6 1989 மாப்பிள்ளை மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே எஸ். பி. பாலசுப்பிரமணியம் ,
எஸ். ஜானகி இளையராஜா
7 காற்றினிலே வரும் கீதம் ஒருவானவில் போலே என்
8 1976 அன்னக்கிளி திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் இளையராஜா
இயக்கிய திரைப்படங்கள்
இளைய தலைமுறை (1977)
என்ன தவம் செய்தேன் (1977)
சொன்னதை செய்வேன் (1977)
நாடகமே உலகம் (1979)
மணமகளே வா (1988)
புதுப்பாட்டு (1990)
கலிகாலம் (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
தயாரித்த திரைப்படங்கள்
ஆறிலிருந்து அறுபது வரை (1979)
கல்யாணராமன் (1979)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
ஆனந்த ராகம் (1982)
ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
குரு சிஷ்யன் (1988)
மைக்கேல் மதன காமராஜன் (1991)
ராசுக்குட்டி (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
வீரா (1994)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
ரிஷி (2001)
சொல்ல மறந்த கதை (2002)
மாயக் கண்ணாடி (2007)
காதல் சாம்ராஜ்ஜியம் (வெளிவரவில்லை)
எழுத்தாளர் என்ற வகையில்
ரிஷி (2001)
மாயா பஜார் 1995 (1995)
தொட்டில் குழந்தை (1995)
சிங்கார வேலன் (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
எங்கிட்ட மோதாதே (1990)
புதுப்பாட்டு (1990)
அபூர்வ சகோதரர்கள் (1989)
ராஜா சின்ன ரோஜா (1989)
மணமகளே வா (1988)
குரு சிஷ்யன் (1988)
என் ஜீவன் பாடுது (1988)
தர்மத்தின் தலைவன் (1988)
நீதானா அந்தக்குயில் (1986)
உயர்ந்த உள்ளம் (1985)
ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
தம்பிக்கு எந்த ஊரு (1984)
குவா குவா வாத்துகள் (1984)
வாழ்க்கை (1984)
தூங்காதே தம்பி தூங்காதே (1983)
மண்வாசனை (1983)
பாயும் புலி (1983)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
சகலகலா வல்லவன் (1982)
மகனே மகனே (1982)
எல்லாம் இன்பமயம் (1981)
மீண்டும் கோகிலா (1981)
கடல் மீன்கள் (1981)
முரட்டுக் காளை (1980)
உல்லாசப்பறவைகள் (1980)
ஆறிலிருந்து அறுபது வரை (1979)
கல்யாணராமன் (1979)
கௌரிமான் (1979)
வெற்றிக்கு ஒருவன் (1979)
வட்டத்துக்குள் சதுரம் (1978)
புவனா ஒரு கேள்விக்குறி (1977)
துணிவே துணை (1976)
மயங்குகிறாள் ஒரு மாது (1975)
பாடலாசிரியர் பணி
1960களில்
1960- தெய்வ பிறவி
1963- ஆசை அலைகள்
1965- கலங்கரை விளக்கம்
1970களில்
1975- மயங்குகிறாள் ஒரு மாது
1976- அன்னக்கிளி
1977- புவனா ஒரு கேள்விக்குறி
1977- காயத்ரி
1977- ஆடு புலியாட்டம்
1978- முள்ளும் மலரும்
1978- வட்டத்துக்குள் சதுரம்
1978- பிரியா
1979- கௌரிமான்
1979- வெற்றிக்கு ஒருவன்
1979- ஆறிலிருந்து அறுபதுவரை
1979- கவிக்குயில்
1979- பூந்தளிர்
1980களில்
1980- குரு
1980- உல்லாசப் பறவைகள்
1980- முரட்டுக்காளை
1980- நெஞ்சத்தைக் கிள்ளாதே
1980- அன்புக்கு நான் அடிமை
1981- அலைகள் ஓய்வதில்லை
1981- கர்ஜனை
1981- கழுகு
1981- சங்கர்லால்
1981- எல்லாம் இன்பமயம்
1981- கடல்மீன்கள்
1981- மீண்டும் கோகிலா
1982- கோபுரங்கள் சாய்வதில்லை
1982- ராணி தேனி
1982- எங்கேயோ கேட்ட குரல்
1983- கோழி கூவுது
1983- ஆனந்தக்கும்மி
1983- அடுத்த வாரிசு
1983- மண்வாசனை
1984- அம்பிகை நேரில் வந்தாள்
1984- தம்பிக்கு எந்த ஊரு
1984- வைதேகி காத்திருந்தாள்
1984- வாழ்க்கை
1985- புதிய தீர்ப்பு
1985- மனக்கணக்கு
1986- நீதானா அந்தக்குயில்
1987- உள்ளம் கவர்ந்த கள்வன்
1988- மணமகளே வா
1988- தர்மத்தின் தலைவன்
1989- மாப்பிள்ளை
1990களில்
1990- புதுப்பாட்டு
1991- தர்மதுரை
1993- சின்ன கண்ணம்மா
1994- வியட்நாம் காலணி
1995- மாயா பஜார் 1995
2000த்தில்
2001- ரிஷி
கவியரசர் கண்ணதாசனுக்கு பாடல் உதவி
1. புன்னகை
2. தேனும் பாலும்
3. ஆண்டவன் கட்டளை
4. சங்கே முழங்கு
5. பெரிய இடத்துப் பெண்
6. தாயைக்காத்த தனயன்
7. பழனி
8. சபதம்
9. மணி ஓசை
10. காவியத் தலைவி
மறைவு
பஞ்சு அருணாசலம் தனது 75 வது அகவையில் சென்னையில் 2016 ஆகத்து 9 அன்று காலமானார்.
பஞ்சு அருணாசலம்: துணிச்சலான பரிசோதனைகளின் மன்னன்
சுமார் அறுபதாண்டுகளாகத் தமிழ்த் திரையுலகுக்காக உழைத்த பஞ்சுஅருணாசலம், தன் சிந்தனையை நிறுத்திக்கொண்டார். தம் கடைசி மூச்சுவரை அவர் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.
அவர் இதுவரை 99 படங்களுக்குக் கதை வசனகர்த்தாகப் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூறாவது படத்துக்கான திரைக்கதை எழுதப்பட்டுத் தயாராக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
கண்ணதாசனுக்கு உதவியாளராகத் தொடங்கிய அவருடைய உழைப்பு, கவுதம் கார்த்திக் வரை தொடர்ந்திருக்கிறது. கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்துக்காக 21 ஆண்டுகளுக்குப் பின்னால் இளையராஜா இசையில் பாடல்கள் எழுதிவிட்டுத்தான் மூச்சை நிறுத்தியிருக்கிறார்.
அவர் திரைத் துறைக்குள் வந்ததும் ஏற்கெனவே யாரோ போட்டு வைத்த பாதையில் பாதுகாப்பாகப் பயணித்துவிடவில்லை. எல்லோரும் நினைக்கக்கூடப் பயந்து ஒதுங்குகிற செயல்களைத் துணிச்சலுடன் செய்து வெற்றி பெற்றுக் காட்டியிருக்கிறார்.
இளையராஜாவை அறிமுகம் செய்தார். அது சாதாரணமாக நடந்துவிடவில்லை. அப்போது உச்சத்தில் இருக்கும் எம்எஸ்.விஸ்வநாதனையே இசையமைப்பாளராகப் போடலாம் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களே வற்புறுத்தியபோதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார் பஞ்சுஅருணாசலம்.
பரிசோதனை முயற்சிகள்
அவர் கதை வசனம் எழுதிய படங்களில் அதுவரை யாரும் செய்யாத பரிசோதனை முயற்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ரஜினிக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. அந்தப் படத்துக்குத் திரைக்கதை வனம் எழுதிய பஞ்சு அருணாசலம், அதுவரை நல்லவராகவே நடித்துவந்த சிவகுமாரைக் கெட்டவராகவும் அதுவரை கெட்டவராக நடித்துவந்த ரஜினியை நல்லவராகவும் எழுதியிருக்கிறார். படக் குழுவினர் எல்லோரும் பயந்தபோதும் அவர்களுக்குத் தைரியம் சொல்லி வேடங்களை மாற்றாமல் அப்படியே வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் கமலை வைத்து ஒரு படம், ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் சுவையான நிகழ்வாகத் திரையுலகில் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்த நேரத்தில் இருவரையும் தனித்தனியாக நடிக்கவைத்துப் படமெடுக்க அவர் தயாரானார்.
அப்போதும், அதுவரை வில்லனாகவும் ஸ்டைல் மன்னனாகவும் நடித்து வந்த ரஜினியை குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நல்லவனாக நடிக்க வைத்திருக்கிறார். 25 வயது முதல் 60 வயது வரையிலான பலவிதத் தோற்றங்களில் ரஜினி நடித்தார். இம்மாதிரியான புதுவிதத் தோற்றத்தில் ரஜினியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் படம் வெளியாகும்வரை எல்லோருக்குமே இருந்ததாம். ரஜினிக்கும் அந்தச் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர் திருப்தியில்லாமல் இருந்திருக்கிறார். அப்போது பஞ்சு அருணாசலம், ஐந்தாயிரம் அடிவரை படத்தை எடுத்து அவருக்குப் போட்டுக் காட்டுவோம், அப்போதும் அவருக்குத் திருப்தியில்லை யென்றால் படத்தை நிறுத்திவிடலாம் என்று சொல்லி எடுத்தாராம்.
எடுத்தவரை போட்டுப் பார்த்து ரஜினி திருப்தியடைந்தாராம். அந்தப் படம் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. அப்படம் பெரிய வெற்றி பெற்றதுடன், அந்த ஆண்டின் சிறந்த படமாக சினிமா ரசிகர் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ரஜினிக்கும் சிறந்த இயக்குநருக்கான விருதை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் அந்தப் படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
மாறுபட்ட திரைக்கதைகள்
1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று வெளியான இரண்டு படங்களுக்கும் பஞ்சுதான் கதை வசனகர்த்தா. ஒன்று ‘எங்கேயோ கேட்ட குரல்’, இன்னொன்று ‘சகலகலா வல்லவன்’. கொஞ்சம் யோசித்தாலே ரஜினி நடிக்க வேண்டிய கதையில் கமல் நடித்திருக்கிறார் என்பதும் கமல் நடிக்க வேண்டிய கதையில் ரஜினி நடித்திருக்கிறர் என்பதும் புரிந்துவிடும்.
‘சகலகலா வல்லவன்’ படமாகும் நேரத்தில் இந்தக் கதை எனக்கு செட்டாகுமா என்று கமல் மிகவும் பயந்துகொண்டேயிருந்தார் என்று சொல்லப்படுகிறது. ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘சிம்லா ஸ்பெஷல்’ மாதிரியான படங்களிலேயே தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் கமர்ஷியலாக உங்களுக்குப் பின்னடைவு ஏற்படும்; அவ்வப்போது இப்படிப்பட்ட படங்களிலும் நடிப்பதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லி நடிக்கவைத்திருக்கிறார். அதே நேரம் கமலுக்குத் திருப்தி ஏற்பட வேண்டும் என்பதோடு அவருடைய நடனத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்ததும் அவர் நடனக்காரராகிவிடுகிறார் என்று மையக்கதைக்குப் பாதிப்பில்லாமல் திரைக்கதையை மாற்றினாராம் பஞ்சு. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘விஷ் யூ ஹேப்பி நியூஇயர்’ பாடல் இன்றுவரை பிரபலமாகவே இருக்கிறது. சில்க் ஸ்மிதாவுடனான ‘நேத்து ராத்திரி யம்ம்மா’ பாடலும் கமல் பாணி என்பதற்காகவே வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ‘போக்கிரி ராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘ரங்கா’ போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினியை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கவைத்திருந்தார். இப்படி யாரும் எதிர்பாராத விஷயங்களைப் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்து சாதனைகளாக்கியிருக்கிறார்.
‘பாபா’ படத்துக்கு முன்புவரை கிட்டத்தட்ட ரஜினியின் எல்லாப் படங்களிலும் பஞ்சு அருணாசலத்தின் பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கிறது. இயக்குநர் யாராக இருந்தாலும் திரைக்கதை எப்படியிருந்தாலும் அதற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் குறைந்தது நான்கைந்து இடங்களில் ரஜினி கைதட்டல் வாங்குகிற மாதிரி செய்துவிடுவாராம் பஞ்சு.
ஓய்வற்ற பயணம்
குள்ள மனிதராகக் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சுமார் நான்காயிரம் அடிவரை படமும் எடுக்கப்பட்டுவிட்டதாம். ஆனாலும் கமலுக்குத் திருப்தியில்லையாம். அதன் பின் பஞ்சு அருணாசலத்தை அணுகியிருக்கிறார். அவர் படத்துக்குள் வந்ததும் அதுவரை எடுத்ததை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, மறுபடியும் முதலிலிருந்து தொடங்கச் சொல்லியிருக்கிறார். அவருடைய திரைக்கதை கமலுக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவரும் எடுத்ததை அப்படியே விட்டுவிட்டு முதலிலிலிருந்து எடுத்தாராம்.
கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருந்த காரணத்தாலேயே கண்ணதாசன் அவரைச் சேர்த்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதோடு மடைதிறந்த வெள்ளம்போல கண்ணதாசனின் உதடுகளிலிருந்து ஒருமுறை மட்டுமே உதிரும் சொற்களை அட்சரம் பிசகாமல் பிடித்துக்கொள்ளும் வேகமும் பஞ்சு அருணாசலத்துக்கு இருந்த காரணத்தால் அவரோடு பல ஆண்டுகள் பயணிக்க முடிந்திருக்கிறது. கையெழுத்து மட்டுமின்றி அவர் எழுதிய எழுத்துகளும் நன்றாக இருந்ததால்தான் கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் அவருடைய பேனா ஓய்வின்றிப் பணியாற்றியிருக்கிறது.
சிறந்த கலைஞர்களிடம் உங்களுடைய ஆசை என்னவென்று கேட்டால், நான் என்னுடைய கலைப் பணியில் இருக்கும்போதே மரணிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
இவருக்கு அப்படியே நடந்திருக்கிறது. ஒரு பக்கம் இப்போது தயாராகிக்கொண்டிருக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதிக்கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் வார இதழ் ஒன்றுக்குத் தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடராக எழுதிக்கொடுத்துக்கொண்டு, மற்றுமொரு பக்கம் புதிய திரைக்கதையை எழுதிவிட்டு மரித்திருக்கிறார்.
கதை எழுதியவரின் மனமும் புண்படாமல் இயக்குநரின் தன்முனைப்பையும் சீண்டிவிடாமல் கதாநாயகர்களுக்குக் கைதட்டல் பெற்றுத் தந்துகொண்டிருந்த அந்தக் கலைஞனின் கைகள் இப்போது ஓய்வெடுக்கின்றன. தமிழ்கூறு நல்லுலகெங்கும் அவருடைய சிறப்புகளை நூற்றுக்கணக்கான கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களே அவரை வற்புறுத்திய போதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார்.
தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதாசிரியர்... என பல்துறை வித்தகரான பஞ்சு அருணாசலம் .
1941-ம் ஆண்டு, காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டி தான் பஞ்சு அருணாசலத்தின் சொந்த ஊர். தன் தாத்தாவின் பெயரான அருணாசலத்துடன் அவரது குல தெய்வமான பஞ்சநாதசாமி பெயரில் உள்ள பஞ்சையும் இணைத்து பஞ்சு அருணாசலம் என்று அவரது பெற்றோர் பெயர் வைத்திருக்கிறார்கள்.
கண்ணதாசனிடம் உதவியாளர் கவிஞர் கண்ணதாசன் இவரது சித்தப்பா. படிப்பில் ஆர்வமிக்க பஞ்சு அருணாசலம், சிறு வயதிலிருந்தே கதை, நாவல்கள், வரலாறு தொடர்பான புத்தகங்களை படிப்பதில் ஆர்வமிக்கவர். போதிய வயது இல்லாத காரணத்தால் பியூசி., தேர்வை எழுத முடியாத பஞ்சு அருணாசலம், படிப்பை அப்படியே தூக்கி போட்டுவிட்டு ரயிலேறி சென்னை கிளம்பிவிட்டார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேலைகளை பார்த்துவந்தவர், பின்னர் தன் சித்தப்பாவான கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக சேர்ந்தார். கண்ணதாசனின் ‛தென்றல்' பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். கண்ணதாசன் பாடல் எழுதிய பல படங்களுக்கு உதவியாளராக இருந்துள்ளார்.
திருமண வீடுகளில் இன்றும் ஒலிக்கும் ‛‛மணமகளே மருமகளே...'' இவர் முதன்முதலில் பாட்டு எழுதியது 1960-ல் வெளிவந்த ‛நானும் மனிதன் தான்', 1961-ல் கண்ணதாசனின் அண்ணன் தயாரிப்பில் வெளிவந்த ‛சாரதா' படத்தில் கேவி மகாதேவன் இசையில் வெளிவந்த ‛‛மணமகளே மருமகளே வா வா...'' பாடல் இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.
எம்ஜிஆருக்கு ‛பட்டுக்கோட்டை' கல்யாண சுந்தரம் ஸ்டைலில் பாட்டெழுதியவர் எம்ஜிஆருக்காக இவர் எழுதிய முதல் பாடல் ‛கன்னித்தாய்' படம். கேளம்மா சின்னப்பொண்ணு கேளம்மா என்று கட்டட தொழிலாளர்களின் நிலையை எடுத்து சொல்வது போன்று எழுதியிருப்பார். ஏழைக் குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறாய் ஓடணும் என்று எழுதியிருப்பார். எம்ஜிஆருக்கு ‛பட்டுக்கோட்டை' கல்யாண சுந்தரம் ஸ்டைலில் பாட்டெழுதியவர் இவர். கலங்கரை விளக்கம் பாடல் முழுக்க இவர் எழுதியது தான். இப்படத்தில் இடம்பெற்ற ‛பொன் எழில் பூத்தது புதுவானில்...', ‛என்னை மறந்தது ஏன் தென்றலே...', உள்ளிட்ட எல்லா பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.
முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதியவர் எம்.ஜி.ஆரை தொடர்ந்து சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியிருக்கிறார். சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியிருக்கிறார்.
இளையராஜாவை அறிமுகம் செய்தவர் ‛அன்னக்கிளி' படத்தில் இசைஞானி இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம் தான். அந்தப்படத்தில் இடம்பெற்ற ‛‛மச்சானை பார்த்தீங்களா...'' பாடல் இவர் எழுதி, இளையராஜா இசையமைத்தது தான். இந்தப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து சூப்பர் ஹிட்டானது.
பாடலாசிரியர் ஆரம்பத்தில் பாடலாசிரியராகத்தான் பஞ்சு அருணாசலம் திரையுலகில் அறிமுகமானார். அப்படி அவர் எழுதிய பிரபலமான பாடல்கள் சிலவற்றை இங்கு காணலாம்....கண்மணியே காதல் என்பது... (ஆறுலிருந்து அறுபது வரை), பேசக்கூடாது.... (அடுத்தவாரிசு), காதல் ஓவியம்... (அலைகள் ஓய்வதில்லை), மேகம் கருக்குது மழை வர... (ஆனந்த ராகம்), மச்சானை பார்த்தீங்களா... (அன்னக்கிளி), விழியிலே மலர்ந்தது... (புவனா ஓர் கேள்விக்குறி),அண்ணன் என்ன... தம்பி என்ன... (தர்மதுரை), மாமன் வீடு மச்சு வீடு... (எல்லாம் இன்ப மயம்), என்றென்றும் ஆனந்தமே... (கடல் மீன்கள்), காதல் வந்துருச்சு... (கல்யாண ராமன்), பூப்போலே... (கவரிமான்), சின்ன கண்ணன் அழைக்கிறான்... (கவிக்குயில்), பொன்னான மேனி... (மீண்டும் கோகிலா), சுந்தரி நீயும்... (மைக்கேல் மதன காமராஜன்), பொதுவாக என் மனசு தங்கம்... (முரட்டுக்காளை), ஏய் பாடல் ஒன்று... (பிரியா), காதலின் தீபம் ஒன்று... (தம்பிக்கு எந்த ஊரு), ஜெர்மனியின் செந்தேன்... (உல்லாச பறவைகள்), மேகம் கருக்கையில... (வைதேகி காத்திருந்தாள்), கொஞ்சி கொஞ்சி... (வீரா)
கதை, திரைக்கதை, வசனகர்த்தவாக சில படங்கள்... அவன் தான் மனிதன், அன்னக்கிளி, கவிக்குயில், காற்றினிலே வரும் கீதம், மயங்குகிறாள் ஒரு மாது, புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, நிறம் மாறாத பூக்கள், கல்யாணராமன், ஆறிலிருந்து அறுபது வரை, உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, மீண்டும் கோகிலா, எங்கயோ கேட்ட குரல், போக்கிரி ராஜா, பாயும் புலி, வாழ்க்கை, அடுத்தவாரிசு, தூங்காதே தம்பி தூங்காதே, குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, அபூர்வ சகோதரர்கள், அதிசய பிறவி, சிங்காரவேலன்.
பஞ்சு அருணாச்சலம் தயாரித்த படங்கள்... பிஆர் பேனரில் பல படங்கள் தயாரித்துள்ளார் பஞ்சு அருணாசலம். அவர் தயாரித்த படங்கள் இதோ... ஆறிலிருந்து அறுபது வரை(1979), அலெக்ஸாண்டர்(1996), ஆனந்த ராகம்(1982), அவர் எனக்கே சொந்தம்(1976), எல்லாம் இன்ப மயம்(1981), எங்க முதலாளி(1993), எங்கேயோ கேட்ட குரல்(1982), ஜப்பானில் கல்யாண ராமன்(1985), காதல் சாம்ராஜ்யம்(2004), கல்யாண ராமன்(1979), கழுகு(1981), மாயாபஜார்(1995), மைக்கேல் மதன காமராஜன்(1990), பூவெல்லாம் கேட்டுப்பார்(1999), ராசுக்குட்டி(1992), ரிஷி(2001), சொல்ல மறந்த கதை(2002), தம்பிக்கு எந்த ஊரு(1984), வனஜா கிரிஜா(1994), வீரா(1994).
பஞ்சு அருணாசலத்திற்கு கீதா என்ற மனைவியும், சண்முகம், சுப்பு, பஞ்சு என்ற மகன்களும், கீதா, சித்ரா என்ற மகள்களும் உள்ளனர்.
`பாதிக்கதை பஞ்சு!' இளம் இயக்குநர்களின் முன்னோடி... பஞ்சு அருணாசலம்...
தமிழ் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, அச்சுத் துறையில் சேர்ந்து, கண்ணதாசனின் உதவியாளராக இருந்து, பிறகு திரையுலகில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்து, இனிவரும் திரைக் கலைஞர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்பவர் பஞ்சு அருணாசலம். அவர் இறந்து, இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்த சூழலில், அவருக்கான அஞ்சலியாக இந்தக் கட்டுரையைச் சமர்பிக்கிறோம்.
பஞ்சு அருணாசலம், தமிழ் சினிமாவின் இசை ரசிகர்களுக்காக இளையராஜாவைக் கொண்டுவந்தவர் என்றே அடிக்கோடிட்டு அறியப்படுகிறார். இதுமட்டுமே அவர் சாதனை அல்ல, சிறந்த பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை வடிவமைப்பாளர் என, திரையின் பல பிம்பங்களில் தன்னை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக்கொண்டவர். அதேநேரம், தன்னைப் பற்றியும் தன் செயல்களைப் பற்றியும் ஒருபோதும் விளம்பரம் செய்துகொள்ளாதவர். தமிழ் சினிமாவில் கமர்ஷியலாக வெற்றிபெற்ற பல படங்களின் படைப்பாளியாக இருந்து, சத்தமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியவர்.
கல்லூரிக் காலத்தில் அப்பாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மெட்ராஸுக்கு ரயில் ஏறி, தன் பெரியப்பாவிடம் செட் அசிஸ்டென்ட்டாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, தன் சித்தப்பா கண்ணதாசனிடம் பாடல் எழுதும் உதவியாளராகப் பணிபுரிந்தார். `தென்றல்' பத்திரிகையில் `அருணன்' என்ற புனைபெயரில் எழுதினார். உறவினர்கள் சினிமாவின் பல்வேறு துறைகளில் இருந்தும்கூட, மிகச் சாதாரணமாக அவர் தன்னை முன்னிறுத்திக்கொள்ளவில்லை. கண்ணதாசனின் சிந்தனைகளுக்கு எழுதுகோலாக இருந்து, திரைத்துறையைக் கற்றவர்.
அவரின் எழுத்துத் திறமைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைத் திறம்படப் பயன்படுத்துவதில் வல்லவரான பஞ்சு அருணாசலம், ஆகச் சிறந்த பாடல் ஒன்றை எழுதினார். அதுதான் இன்றும் நம் வீட்டுத் திருமணங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் `மணமகளே மருமகளே வா வா...' பாடல். தமிழ் திரையுலகின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக விளங்கிய இந்தப் பாடலுக்குப் பிறகு, திரை வாய்ப்புகள் அவரை வாரி அணைத்துக்கொண்டன. அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் பெருங்கவிஞர்களின் மொழியாளுமைக்கு எந்த வகையிலும் குறைவில்லாதவை. உதாரணங்களாக, `கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ, காதலின் தீபம் ஒன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்...' போன்ற பாடல்களைச் சொல்லலாம். அவர் என்னென்ன பாடல்கள் எழுதினார் எனத் தேடிப் பார்க்கையில் கிடைக்கும் தகவல்கள் ஆச்சர்யத்தையும் பரவசத்தையும் ஒருங்கே தரவல்லவை.
பாடலாசிரியராக அவர் அடைந்த வெற்றி, கதை இலாகாவில் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் எழுதிய கதைகள் திரைப்படங்களாவதில் பல தடைகள் ஏற்பட்டன. தடைகளைத் தாண்டி உருவான சில படங்கள், வெளியாகவில்லை. இதனால் அவர் சினிமா துறையில் `பாதிக்கதை பஞ்சு' என்றே அழைக்கப்பட்டார். பன்னிரண்டு ஆண்டுகள் தொடர் தோல்விகளையே சந்தித்தார். தன் விடாமுயற்சியால் அவர் வெற்றிபெற ஆரம்பித்தார். அவரது வெற்றி, சுயநலம் சார்ந்த வெற்றியாக இல்லாமல் தமிழ் சினிமாவில் நிறைய புதுமைகளுக்கு வித்திட்டது. 1970-களில் இந்திப் பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வந்த சமயத்தில், `அன்னக்கிளி' என்ற திரைப்படத்துக்காக திரைக்கதை - வசனத்துடன் அனைத்து பாடல்களையும் எழுதினார். மேலும், இந்தப் படத்தின் மூலம் இளையராஜாவை அறிமுகப்படுத்தி புதிய அலையைத் தோற்றுவித்தார். `பாபி', `ஆராதனா', `ஷோலே' போன்ற படங்களின் பாடல்கள் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில் பஞ்சு அருணாசலத்தின் வரிகளில் `மச்சானப் பாத்தீங்களா...' பாடலும், மண் மனம் கமழும் இசையும் தமிழ் திரையுலகை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
தமிழ் சினிமாவில் பஞ்சு அருணாசலம் ஏற்படுத்திய இன்னொரு முக்கியமான நகர்வு, ரஜினியின் பிம்பத்தை மாற்றியது. ரஜினி என்றாலே, ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது, வேகமான உடல்மொழி என்பதைத் தாண்டி, ரஜினியால் மிகச்சிறந்த நடிகராகவும் பரிமளிக்க முடியும் என்பதை நிரூப்பித்தவர்களில் பஞ்சு அருணாசலமும் முதன்மையானவர். தான் கதை எழுதி 1977-ம் ஆண்டு வெளிவந்த `புவனா ஒரு கேள்விக்குறி' படத்தின் மூலம் ரஜினியை இன்னொரு தளத்துக்குக் கொண்டுபோனார். ரஜினியால் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம்தான் `ஆறிலிருந்து அறுபது வரை'. கலைஞர்களுக்கு ஏற்ப கதைகளை உருவாக்குவதில் தேர்ந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில், கமர்ஷியலான கதை அமைப்பில் கமல்ஹாசன் நடித்து வசூல் சாதனை படைத்த படம்தான் `சகலகலா வல்லவன்'
ரஜினி, கமல் இருவரும் இன்றைய தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக திகழ்வதற்கு, இவர் எழுதிய கதை, திரைக்கதை, வசனங்களும் ஒரு காரணம். உதாரணங்களாக, `ஜப்பானின் கல்யாணராமன்', `மனிதன்' , `உயர்ந்த உள்ளம்', `அபூர்வ சகோதரர்கள்', `தர்மத்தின் தலைவன்', `குரு சிஷ்யன்', `ராஜாதி ராஜா', `ராஜா சின்ன ரோஜா'... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தத் திரைப்படங்களை இன்றைக்குப் பார்த்தால்கூட சுவாரஸ்யம் குன்றாமல் நம்மால் ரசிக்க முடிவதற்கு பஞ்சு அருணாசலம் எழுதிய கதையம்சமே காரணம்.
ஒரு திரைப்படத்தில் பிரபலமான நடிகர், நடிகைகள், நல்ல பாடல்கள் இருந்தும் பார்வையாளர்களால் அந்தப் படத்தை ரசிக்க முடியவில்லை என்றால், `ஸ்க்ரீன் ப்ளே சரியில்லை' என்று இப்போதெல்லாம் பல் முளைக்காத குழந்தைகூட எளிதில் கண்டுபிடித்துவிடும். அதற்கான மிக முக்கியமானப் பயிற்சியை, பார்வையாளனுக்கு வழங்கியவர் பஞ்சு அருணாசலம். வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற-இறக்கங்களைச் சந்தித்து தன் கலைப் படைப்புகளால் காலத்துக்கும் அவர் மக்கள் மனதில் நிற்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக எடுக்க வேண்டும் என்ற படிப்பினையை, இன்றைய இளம் இயக்குநர்களுக்குத் தன் திரைப்படங்களின் மூலம் பாடமாக்கிவிட்டுத்தான் மறைந்திருக்கிறார் பஞ்சு அருணாசலம்.
நன்றி விக்கிப்பீடியா,தினமலர், விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக