வியாழன், 1 மார்ச், 2018

நடிகர் ரஞ்சன் பிறந்த தினம் மார்ச் 2, 1918.


நடிகர் ரஞ்சன் பிறந்த தினம் மார்ச் 2, 1918.

ரஞ்சன் (இயற்பெயர்: இராமநாராயண வெங்கடரமண சர்மா, மார்ச் 2, 1918 - செப்டம்பர் 12, 1983) இந்தியத் திரைப்படவுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர். நாட்டியக் கலைஞர், இசைக் கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர்.

திரையுலகில்

ரஞ்சன் கல்லூரியில் படிக்கும் போதே ஆண்டு விழாவொன்றில் நடனம் ஆடினார். ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி வந்த வேப்பத்தூர் கிட்டு என்பவர் இவரது நடனத்தைக் கண்டு பி. ஜி. ராகவாச்சாரி என்ற திரைப்பட இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். அவரது
ரிஷ்யசிருங்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு ரஞ்சனுக்குக் கிட்டியது. 1941 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளிவந்தது. உலக விடயம் எதுவும் தெரியாமல் காட்டில் வசித்து வந்த ரிஷ்யசிருங்கராக ரஞ்சனும் அவரை மயக்கி நாட்டுக்கு அழைத்துப் போக வந்த மாயாவாக வசுந்தராதேவியும் (இவர்
வைஜயந்திமாலாவின் தாயார்) நடித்தனர். ஜெமினியின் நந்தனார் ( 1941 ) படத்தில் ரஞ்சன் சிவபெருமானாக சிவதாண்டவம் ஆடி இருந்தது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பக்தநாரதர் ( 1942 ) என்ற படத்தில் ரஞ்சன் நடித்தார்.


ரஞ்சனின் முதல் வெற்றிப் படம் மங்கம்மா சபதம் ( 1943 ). இதில் ரஞ்சன் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.
வசுந்தரா தேவி இவருடன் இணைந்து நடித்திருந்தார்.
ரஞ்சனின் திரைப்பட வரலாற்றில் 1948 இல் வெளிவந்த சந்திரலேகா ஒரு புதிய ஏற்றத்தைக் கொடுத்தது. கதாநாயகனைவிட வில்லனாக நடித்திருந்த ரஞ்சனே ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார். இது வசூலிலும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. "நிஷான்" என்ற பெயரில் இந்தியிலும் இப்படம் வெளிவந்தது. நல்லவனும், கெட்டவனுமாக தமிழில் எம். கே. ராதா நடித்த வேடங்களை இந்தியில் ரஞ்சன் நடித்திருந்தார். இதையடுத்து ரஞ்சன் அகில இந்தியப் புகழைப் பெற்றார். நிஷானின் வெற்றியைத் தொடர்ந்து எஸ். எஸ். வாசன் தனது அடுத்த படமான "மங்களா" என்ற திரைப்படத்திலும் ரஞ்சனையே நடிக்க வைத்தார். ரஞ்சனின்
வாள்வீச்சு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து "ஷின் ஷினாகி பூப்லபூ", "சிந்துபாத்" என்று பல இந்திப் படங்களிலும் நடித்தார்.
சந்திரலேகா என்ற மறக்க முடியாத பாத்திரத்தை அதே பெயர்கொண்ட படத்தில் நடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, டி. ஆர். ராஜகுமாரி , சந்திரலேகா என்ற பாத்திரத்தில்
சாலிவாகனன் ( 1945 ) என்ற படத்தில் நடித்தார். படத்தின் நாயகன் சாலிவாகனனாக நடித்தார் ரஞ்சன். ஒரு காதல் பாடலில், பந்துவராளி , காம்போதி ,
கௌளை, சிம்மேந்திரமத்தியமம் என்று மாறிமாறி ரஞ்சனும் ராஜகுமாரியும் பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது.
என் மகள் 1954 இல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 1957 இல் நீலமலைத் திருடன் படத்தில் சாகசக் கதாநாயகனாக நடித்தார்.
அஞ்சலி தேவி இவருடன் இணைந்து நடித்தார். சத்தியமே லட்சியமாய் கொள்ளடா ( டி. எம். சௌந்தரராஜன் பாடல்) என்ற பாடலை குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.
1959 ஆம் ஆண்டில் மின்னல் வீரன் ,
ராஜாமலைய சிம்மன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இவை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதே ஆண்டில்
காப்டன் ரஞ்சன் என்ற படத்தில் ரஞ்சனாக நடித்தார். இது படுதோல்வியைச் சந்தித்தது. இதுவே அவர் நடித்த கடைசிப் படமாகும்.


பல்துறை ஆர்வலர்

சிறுவயதில் இருந்தே நாட்டியத்தில் நாட்டம் கொண்டிருந்தார் ரஞ்சன். பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார். திருமணம் முடித்த பின்னரும் அவரது மனைவி கமலாவுடன் மேடைகளில் நாட்டியம் ஆடியிருக்கிறார். ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார். இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.லிட் பட்டம் பெற்றார் ரஞ்சன். கோட்டு வாத்தியம் , வயலின் முதற்கொண்டு 10 இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்.
சந்திரலேகா படத்தில் நடிப்பதற்காக ஆறே மாதங்களில் குதிரைச் சவாரி பயின்ற ரஞ்சன், ஒரு நல்ல பந்தயக் குதிரை ஓட்டுநராக பின்னாளில் விளங்கினார்.
ஸ்பெயின் சென்று வாள்வீச்சு ( FENCING ) வகைக் கத்திச் சண்டைப் பயிற்சி தேர்ந்தவர்.
இந்திய மந்திரவாதிகள் சங்கத்தில் சேர்ந்து மந்திர வேலைகளையும் செய்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார். ஓவியக் கலையிலும் சிறந்தவர். ரஞ்சன் ஒரு விமான ஓட்டி. மதராஸ் ஃபிளையிங் கிளப்பில் இவர் ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறார்.
"நாட்டியம்" என்ற பத்திரிகையை ரஞ்சன் நடத்தினார். சிறுகதைகள், கட்டுரைகளையும் எழுதினார். "மாப்பிள்ளை வேட்டை" என்ற நாடகத்தை எழுதினார்.


பாடகர்

ரஞ்சன் தாம் நடித்த பக்தநாரதர், சிஷ்ய சிருங்கர், சாலிவாகனன் போன்ற படங்களில் தனது சொந்தக் குரலிலேயே அருமையாக பாடியவர். மங்கம்மா சபதத்தில் இவர் பாடிய வண்ணப் புறாவே நீ யார்? உன்னை வளர்க்கும் அச்சீமாட்டி ஊரென்ன, பேரென்ன? என்ற புறாவை வைத்து மங்கம்மாவை நினைத்துப் பாடும் பாடலும் சலிவாகனனில், எவ்விதம் தவப்பயன் அடைந்தாள், எண்ணி ஏங்குவதே என்னுள்ளம் எனும் பாடலும் ரஞ்சனின் இசை, குரல் நயத்துக்கு எடுத்துக்காட்டு.
நடிகர் ரஞ்சனின் சகோதரர் வைத்தியநாதன் ஒரு அணு அறிவியல் மாணவர். பின்னர் இங்கிலாந்தில் மேற்கத்திய இசை பயின்றுவிட்டு, சந்திரலேகா படத்துக்கு பின்னணி இசைக் கோர்ப்பு செய்திருந்தார்.

பிற்காலம்

திரைப்படத்திலிருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்றபின்னர்
சென்னையிலிருந்து 1970களில் பின்னணிப் பாடகர் பி. பி. ஸ்ரீநிவாசுடன் இணைந்து மாமியோ மாமி எனும் இசை, நகைச்சுவை நாடகமொன்றையும் மேடையேற்றினார்.
பிற்காலத்தில் ஒரு சில மராத்திப் படங்களை இயக்கியும் இருக்கிறார். இதன் பின்னர் ரஞ்சன் அமெரிக்காவில்
நியூஜெர்சி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்த அவர் தம் 65வது வயதில் 1983 ஆம் ஆண்டில் நியூ ஜெர்சியில் காலமானார்.



அந்த நாள் ஞாபகம்: ரஞ்சன்

புகழின் உச்சாணிக் கொம்பில் சூப்பர் ஸ்டாராக இருந்தார் எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது பத்துக்கும் அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரை மட்டுமே வைத்துப் படங்களைத் தயாரித்துவந்த சாண்டோ சின்னப்பா தேவர், அவருக்கென்றே உருவாக்கிய ‘ராபின் ஹுட்’ டைப் கதைதான் ‘நீலமலைத் திருடன்’.

எம்.ஜி.ஆரின் நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்ப திரைக்கதை, சென்டிமென்ட் காட்சிகள், பாடல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவற்றை அமைத்து சூப்பர் ஹிட் மசாலா படம் எடுப்பதில் தேவர் கெட்டிக்காரர். அவ்வண்ணம் எம்.ஜி.ஆருக்காகப் பார்த்துப் பார்த்து உருவாக்கிய நீலமலைத் திருடன் (1957) படத்தின் கதையை, தனது சகோதரரும் இயக்குநருமான எம்.ஏ. திருமுகத்தை அழைத்துச்சென்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல வைத்தார்.

கதையைக் கேட்டு ‘சபாஷ்’ என்று பாராட்டினாரே தவிர கால்ஷீட் தராமல் இழுத்தடித்துவந்தார். தேவர் அதற்கு முன் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தை எம்.ஜி.ஆர். மறக்கவில்லை. தேவரோ தெய்வ பக்தியும் பொறுமையும் கொண்டவர். அப்படிப்பட்டவர் இனி எம்.ஜி.ஆருக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தக் கதைக்கு எம்.ஜி.ஆரை விட்டால் வேறு யார் சரியாகப் பொருந்துவார் என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போது தேவரின் எண்ணத்தில் சட்டென்று வந்து அமர்ந்துகொண்டார் நடிகர் ரஞ்சன்.

எஸ். எஸ். வாசன் இயக்கிய ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் இந்தி மறுஆக்கம் ஆகிய படங்களின் மூலம் இந்திப் படவுலகில் பிஸியான சாகஸ நடிகராகப் புகழ்பெற்றிருந்தார் ரஞ்சன். சில ஆண்டுகள் மதராஸ் பக்கமே தலைவைத்துப் படுக்காமல் பம்பாயில் தங்கிவிட்டார். அவரை மீண்டும் இங்கே அழைத்து வந்தார் தேவர். தேவருக்கு எம்.ஜி.ஆரைப் போலவே ரஞ்சனும் ஆரம்ப கால நண்பர்.

‘சாலிவாகனன்’(1944) படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும் ரஞ்சனும் மோதிய வாள் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு பல நாட்கள் நடந்தது. படப்பிடிப்பு என்ற போர்வையில் எம்.ஜி.ஆர் தன்னைத் தாக்குவதாக ரஞ்சனும், ரஞ்சன் தன்னைத் தாக்குவதாக எம்.ஜி.ஆரும் மாறி மாறி இயக்குநரிடம் புகார் செய்தனர். படப்பிடிப்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த உரசலை நன்கு அறிந்தவர் தேவர். இருவரையும் மத்தியஸ்தம் செய்து சமாதானப்படுத்தியவர்களில் தேவரும் ஒருவர். சாலிவாகனன் படத்தில் எம்.ஜி.ஆருக்குச் சவாலாக அமைந்த ரஞ்சன்தான் இந்தக் கதையில் நடிக்க முடியும் என்று தேவர் நம்பினார்.

கவலையடைந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள்

1957-ல் வெளியான ‘நீலமலைத் திருடன்’ படத்தில் வில்லன் பி.எஸ். வீரப்பாவை ஒழித்துக்கட்ட நீலமலைத் திருடனாகத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞன் வேடத்தில் நடித்தார் ரஞ்சன். மருதகாசி எழுதி கே.வி. மகாதேவன் இசையமைத்து டி.எம்.சௌந்தர்ராஜன் உச்சஸ்தாயில் கம்பீரமாகப் பாடிய ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா! தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா!’ என்ற பாடல் காட்சியில் வெள்ளைக் குதிரையில் ஏறி ரஞ்சன் திரையில் வந்தபோது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். “நம்ம வாத்தியார் நடிச்சுருக்க வேண்டிய பாட்டு நைனா” என்று கவலைப்பட்டுப் புலம்பித் தள்ளினார்கள். படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. படத்தை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டு “தேவருக்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டதே!” என தன் அண்ணன் சக்கரபாணியிடம் வருந்தினார். இந்தச் செய்தி தேவர் காதுக்கும் வந்துசேர்ந்தது.

அப்போது, ‘ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் கத்தி சண்டை வைத்தால் இருவரில் யார் வெல்வார்கள்?' என்று டீக்கடையில் வாய்ச் சண்டை நடக்கும். “ எம்.ஜி.ஆர்தான் ஜெயிப்பார்” என எம்.ஜி.ஆர் ரசிகர்களும், “ரஞ்சனை ஜெயிக்க முடியாது” என்று ரஞ்சன் ரசிகர்களும் வாக்குவாதம் செய்துகொள்வார்கள். இதற்குக் காரணமாக அமைந்தது ரஞ்சனின் வாள் வீசும் வேகம்.

காவிரி மைந்தர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த ஊர் லால்குடி. ரஞ்சனின் அப்பா வி. ராமநாராயண சர்மா லால்குடிக்காரர். ரஞ்சனின் தாயார் அலமேலு அம்மாள் திருச்சி  ரங்கத்தைச் சேர்ந்தவர். பாரம்பரிய இசை, நடனம், பக்தி மூன்றுக்கும் பெயர்பெற்ற இந்த ஊர்களைச் சேர்ந்த பெற்றோருக்கு 10 பிள்ளைகள். அவர்களில் 4-வது பிள்ளையாகப் பிறந்தார் ரஞ்சன். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட ரமணன். வீட்டில் செல்லமாக ரமணி. சென்னை மயிலாப்பூருக்கு ரஞ்சனின் குடும்பம் குடிபெயர்ந்தது. சென்னையில் படித்து வளர்ந்த ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார்.

‘பரதம்’ நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் கற்றார். படிப்பிலும் ’பலே’ என்று சொல்ல வைத்தார். பாட்டில் சுட்டி, பரதத்தில் படு கெட்டி என்று பள்ளிப் பருவத்தில் பெயரெடுத்தார். கல்லூரியில் படித்துக்கொண்டே நாட்டிய நாடகமொன்றில் நடிக்க ஆரம்பித்தார் ரஞ்சன். ஜெமினி ஸ்டூடியோவின் ஊழியர் வேப்பத்தூர் கிட்டு, ரஞ்சனின் துருதுரு நடனத்தையும் நடிப்பையும் கண்டார். அவர் படபடவென்று திக்காமல் திணறாமல் வசனம் பேசிய அழகைக் கண்டார்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் நாயகனாக நடித்துவந்த ‘அசோக்குமார்’(1941) படத்தில் இளம் புத்தராக நடிக்க ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார் அந்தப் படத்தின் இயக்குநர் பி. ஜி. ராகவாச்சாரி. அவரிடம் ரஞ்சனை அழைத்து அறிமுகப்படுத்தினார் கிட்டு. வாய்கிழிய வசனம் பேசலாம் என்று வந்த ரஞ்சனுக்கு ஒரு வார்த்தைகூட வசனம் பேசாமல் ஒரே ஒரு காட்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் புத்தர் வேடம் கிடைத்தது. இதே படத்தில் எம்.ஜி.ராமச்சந்தர் என்று பெயர் போடப்பட்ட எம்.ஜி.ஆருக்குத் துணை வேடம்.


சகலகலா வல்லர்

ஆனால், அதே ஆண்டில் ரஞ்சனுக்கு ஏற்றம் ஏற்பட்டது. ஜெமினி ஸ்டூடியோவில் சுற்றிவந்த ரஞ்சனைக் கண்டார், அன்று புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் விளங்கிய நியூடோன் ஸ்டூடியோ ஜிடன் பேனர்ஜி. ரஞ்சனின் தோற்றத்தைப் பார்த்து அவரும் தன்னைப் போல் ஒரு வங்காளி என்று நினைத்த ஜிடன், ஆர். ரமணி என்ற பெயரை ரஞ்சன் என்று மாற்றினார். அவரை நாயகனாக்கவும் உறுதியளித்தார்.

இதற்கிடையில் ஜெமினியின் நந்தனார் (1941) படத்தில் சிவபெருமானாக ரஞ்சன் ஆடிய சிவதாண்டவ நடனம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து எஸ். சௌந்தர்ராஜன் இயக்கிய ‘ரிஷ்யசிருங்கர்’(1941) படத்தில் நாயகனாக நடித்தார். அதற்கு முன் ரஞ்சன் நாரதராக நடித்திருந்த பக்தநாரதர் (1942) என்ற படமும் வெளியாகிக் கவனம் பெற்றது. ஆனால், ரஞ்சனுக்கு முதல் பெரிய வெற்றியாக அமைந்த படம் மங்கம்மா சபதம் (1943). இதில் ரஞ்சன் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பிஸி நாயகனாக மாறிய ரஞ்சனின் திரைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது 1948-ல் வெளிவந்த எஸ். எஸ். வாசனின் பிரம்மாண்டமான படமாகிய ‘சந்திரலேகா’. இதில் கதாநாயகனாக நடித்த எம்.கே. ராதாவுக்கும் கதாநாயகியாக நடித்த டி.ஆர். ராஜகுமாரிக்கும் இணையாக வில்லன் சஷாங்கனாக நடித்திருந்த ரஞ்சன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். ரஞ்சனின் துடுக்குத்தனம் நிரம்பிய வில்லன் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட வாசன், அவரை இந்தியில் நடிக்க வைத்துப் பல படங்களை இயக்கினார். நிஷான், மங்களா, சிந்துபாத் தி செய்லர் படங்களில் தொடங்கி இந்திப் படவுலகில் பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் ரஞ்சன்.

விமானம் ஓட்டுதல், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, ஓவியம் வரைதல், பரத நாட்டியம், பக்கவாத்தியம் இசைத்தல் போன்ற பல கலைகளிலும் சிறந்தவராக விளங்கிய சகலகாலா வல்லவர் இவர். ‘நடனம்' என்ற பெயரில் பத்திரிகையொன்றைச் சில காலம் நடத்தி எழுத்தாளராகவும் விளங்கினார். ரஞ்சன் அந்தக் காலத்து பி.ஏ., எம்.லிட்., பட்டதாரி.

1959-ல் ரஞ்சன் நடித்த படம், ராஜா மலையசிம்ஹன். கடைசியாக அவர் நடித்த படம்1969-ல் வெளியான ‘கேப்டன் ரஞ்சன்’. இதன் பிறகு தனது மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் வசித்துவந்தவர் தனது 65-வது வயதில் மறைந்தார். தமிழ் சினிமாவில் ரஞ்சன் போல் ‘சகலகலாவல்லவர்’களாக இருந்த நடிகர்கள் மிகவும் குறைவே.

1 கருத்து: