புதன், 21 மார்ச், 2018

நடிகர் ஜெமினி கணேசன் நினைவு தினம் மார்ச் – 22 , 2005 .


நடிகர் ஜெமினி கணேசன் நினைவு தினம் மார்ச் – 22 , 2005 .

ஜெமினி கணேசன் ( 17 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005 ) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் ,
ஹிந்தி, தெலுங்கு , மலையாளம் மற்றும்
கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் இராமசுவாமி ஐயர், கங்கம்மா இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா வரலாறு மிஸ் மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும்
மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.
அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ , நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் " காதல் மன்னன் " என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.
ஜெமினி கணேசனின் திரை வரலாறு
ஆரம்ப காலத் திரை வாழ்க்கை
திரையுலகுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாகச் சில காலம் ஜெமினி கணேசன் ஆசிரியப் பணியாற்றி வந்தார். ஜெமினி நிறுவனத்தில் அவர் மேலாளராகச் சேர்ந்தபோது, திரையுலகுடனான அவரது வாழ்க்கைப் பயணம் துவங்கியது. பின்னாளில் எந்த நிறுவனத்தின் பல வெற்றிப் படங்களில் அவர் நாயகனாக நடித்தாரோ, அதே நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு வருபவர்களை நேர்காணல் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்!
1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் தாங்கினார். ஆனால், திரையுலகத்தின் பொற்கதவுகள் அவருக்கு உடனடியாகத் திறந்து விடவில்லை. பலரது கவனத்தையும் ஈர்த்து மஞ்சள் ஒளி அவர் மீது விழ வைத்தது 1952ஆம் ஆண்டின் வெளியீடான தாயுள்ளம். ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும், எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் அவர் காண்பவர் மனம் மயங்கும் வண்ணம் கவர்ச்சி வில்லன் வேடம் ஏற்றிருந்தார். (பின்னாளில் அவர் கதாநாயகனாக நடிக்கையில் மனோகர் வில்லன் கதாபாத்திரங்களில் நிலை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)
ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான
எஸ்.பாலச்சந்தர் ஜெமினி கணேசனின் நண்பனாக வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953ஆம் ஆண்டின் "மனம்போல மாங்கல்யம்". இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற
சாவித்திரியை அவர் மணந்து கொண்டார்.
காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று.

இயக்குனர்களின் நாயகன்

ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில்,
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் , ஸ்ரீதர் ,
கே.பாலச்சந்தர் , பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி", "பணமா பாசமா", "சின்னஞ்சிறு உலகம்" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.
புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான
கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்", "சுமை தாங்கி" போன்ற பல படங்களை இயக்கினார்.
கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "நான் அவனில்லை" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.


பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.
எம்.ஜி.ஆர் உடன் ஜெமினி கணேசன் "முகராசி" என்ற ஒரே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்.
தமக்குப் பின்னர் திரைக்கு வந்த
ஜெய்சங்கர் , ஏ. வி. எம். ராஜன் , முத்துராமன் ஆகியோருடனும் ஜெமினி கணேசன் பல படங்களில் இணைந்து நடித்தார்.
திரை நாயகியர்
எந்த ஒரு நட்சத்திர நடிகையுடனும் இயல்பாகப் பொருந்தி விடும் திறன் கொண்டமையாலேயே காதல் மன்னன் என்றும் அவர் அறியப்பட்டார். அவருடன் மிக அதிகமான படங்களில் நடித்தவர்களில் சாவித்ரி, அஞ்சலிதேவி, பத்மினி, சரோஜாதேவி மற்றும் ஜெயந்தி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சாவித்ரியுடன் அவர் நடித்த முதல் படம் "மனம்போல மாங்கல்யம்". இதன் படப்பிடிப்பு நடைபெறும் வேளையில்தான் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இதன் பிறகும், இருவரும் இணைந்து "பாசமலர்", "பாதகாணிக்கை", "ஆயிரம் ரூபாய்", "யார் பையன்" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இவற்றிற்கு முந்தைய படமான "மிஸ்ஸியம்மா"வும் மிகப் பெரும் புகழ் பெற்ற படமாகும்.
சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது, ஜெமினியை நாயகனாகக் கொண்ட "கல்யாணப்பரிசு". இதன் பின்னரும் இந்த ஜோடி, "ஆடிப்பெருக்கு", "கைராசி", "பனித்திரை" "பணமா பாசமா" போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக் கொடி நாட்டியது.
அஞ்சலிதேவி ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த மாய மந்திர அடிப்படையிலானவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்", "கணவனே கண் கண்ட தெய்வம்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

பின்னணிப் பாடகர்கள்

பின்னணிப் பாடகர்களில் மிகப் பெரும் பெயர் பெற்று விளங்கிய டி.எம். சௌந்தரராஜன் ஜெமினி கணேசனுக்காகச் சில பாடல்கள் பாடியதுண்டு. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" படத்தின் "என்னருமைக் காதலிக்கு", "சதாரம்" படத்தின் "நினைந்து நினைந்து நெஞ்சம்" மற்றும் "ராமு'வில் "கண்ணன் வந்தான்" போன்று அவை புகழ் பெற்றதும் உண்டு. ஆயினும், அவரது திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவரது ஆரம்பகாலப் படங்களில் பின்னணி அளித்த ஏ. எம். ராஜா . இரண்டாமவர், பன்மொழி வித்தகரான பி. பி. ஸ்ரீநிவாஸ் . இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்துவதானது. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் "மாப்பிள்ளை டோய்" துவங்கிப் பல படங்களில் ஏ.எம். ராஜா அவருக்குப் பின்னணி பாடினார். "கல்யாணப் பரிசு" திரைப்படத்தில்தான் அவர் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இதன் பிறகு, "ஆடிப்பெருக்கு" போன்ற சில படங்களில் அவருக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.
அறுபதுகளின் இறுதியில் வெளிவரத்துவங்கிய ஜெமினி கணேசனின் படங்களில், பி.பி.ஸ்ரீனிவாஸ் அவரது பாடற்குரலானார். சுமைதாங்கி போன்ற படங்களில் ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை.
1970ஆம் வருடங்களின் இறுதியில், "சாந்தி நிலையம்" போன்ற சில படங்களில் அப்போது பெயர் பெறத் துவங்கியிருந்த எஸ்.பி.பி. என்று அன்புடன் அழைக்கப்படும்
எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜெமினிக்குப் பின்னணி பாடியுள்ளார்.

குணச்சித்திர வேடங்கள்

ஸ்ரீதரின் "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "சாந்தி நிலையம்" ஆகிய படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் ஒரு நாயகனாக ஜெமினிக்குச் சற்று இறங்கு முகம்தான். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளிவந்த "லலிதா".
சில வருடங்களுக்குப் பிறகு குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார். அவற்றில் மிகச் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களுமே கமல்ஹாசன் நாயகனாக நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சிரஞ்சீவியின் தந்தையாக அவர் நடித்த ருத்ரவீணா தமிழில் உன்னால் முடியும் தம்பி என மறுவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் கமல்ஹாசனின் பிடிவாதம் மிக்க தந்தையாக, கருநாடக இசைத் தூய்மையில் விடாப்பிடி கொண்டவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மற்றொன்று அவரது கடைசிப் படமான
அவ்வை சண்முகி .


நடித்த திரைப்படங்களின் பட்டியல் தமிழ்த் திரைப்படங்கள்

 ஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
ஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

1941 - 1950
1. மிஸ் மாலினி (1947)
2. சக்ரதாரி (1948)
1951 - 1960
1. தாய் உள்ளம் (1952)
2. மூன்று பிள்ளைகள் (1952)
3. ஆசை மகன் (1953)
4. மனம்போல் மாங்கல்யம் (1953)
5. பெண் (1954)
6. கணவனே கண்கண்ட தெய்வம் (1955)
7. குணசுந்தரி (1955)
8. நீதிபதி (1955)
9. மகேஸ்வரி (1955)
10. மாமன் மகள் (1955)
11. மிஸ்ஸியம்மா (1955)
12. மாதர் குல மாணிக்கம் (1956)
13. பெண்ணின் பெருமை (1956)
14. மர்ம வீரன் (1956)
15. காலம் மாறிப்போச்சு (1956)
16. ஆசை (1956)
17. சதாரம் (1956)
18. சௌபாக்கியவதி (1957)
19. யார் பையன் (1957)
20. மாயா பஜார் (1957)
21. இரு சகோதரிகள் (1957)
22. மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
23. மல்லிகா (1957)
24. கடன் வாங்கி கல்யாணம் (1958)
25. பதி பக்தி (1958)
26. குடும்ப கௌரவம் (1958)
27. திருமணம் (1958)
28. வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
29. வாழவைத்த தெய்வம் (1959)
30. வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
31. நல்ல தீர்ப்பு (1959)
32. பெண்குலத்தின் பொன் விளக்கு (1959)
33. கல்யாண பரிசு (1959)
34. புதிய பாதை (1960)
35. களத்தூர் கண்ணம்மா (1960)
36. பார்த்திபன் கனவு (1960)
37. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
38. கைராசி (1960)
39. மீண்ட சொர்க்கம் (1960)
1961 - 1970
1. கப்பலோட்டிய தமிழன் (1961)
2. தேன் நிலவு (1961)
3. பனித்திரை (1961)
4. பாக்கிய லட்சுமி (1961)
5. பாசமலர் (1961)
6. பாத காணிக்கை (1962)
7. பார்த்தால் பசி தீரும் (1962)
8. காத்திருந்த கண்கள் (1962)
9. கொஞ்சும் சலங்கை (1962)
10. கற்பகம் (1963)
11. இதயத்தில் நீ (1963)
12. ஏழை பங்காளன் (1963)
13. ஆயிரம் ரூபாய் (1964)
14. வாழ்க்கை வாழ்வதற்கே (1964)
15. சுமை தாங்கி (1965)
16. ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965)
17. ராமு (1966)
18. அண்ணாவின் ஆசை (1966)
19. சின்னஞ்சிறு உலகம் (1966)
20. கந்தன் கருணை (1967)
21. பட்டத்து ராணி (1967)
22. பெண் என்றால் பெண் (1967)
23. தாமரை நெஞ்சம் (1968)
24. பணமா பாசமா (1968)
25. சாந்தி நிலையம் (1969)
26. தங்க மலர் (1969)
27. அவரே என் தெய்வம் (1969)
28. இரு கோடுகள் (1969)
29. ஐந்து லட்சம் (1969)
30. குலவிளக்கு (1969)
31. குழந்தை உள்ளம் (1969)
32. பூவா தலையா (1969)
33. காவியத் தலைவி (1970)
34. சிநேகிதி (1970)
35. எதிர்காலம் (1970)
36. கண்மலர் (1970)
37. சங்கமம் ((1970)
38. மாலதி (1970)
1971 - 1980
1. ரங்க ராட்டினம் (1971)
2. வெகுளிப் பெண் (1971)
3. திருமகள் (1971)
4. புன்னகை (1971)
5. தெய்வம் (1972)
6. சக்தி லீலை (1972)
7. கண்ணா நலமா (1972)
8. குறத்தி மகன் (1972)
9. கங்கா கௌரி (1973)
10. ஸ்கூல் மாஸ்டர் (1973)
11. நான் அவனில்லை (1974)
12. உறவுக்கு கை கொடுப்போம் (1975)
13. இதயமலர் (1976)
14. தசாவதாரம் (1976)
15. உனக்காக நான் (1976)
16. நாம் பிறந்த மண் (1977°)
17. அலாவுதீனும் அற்புதவிளக்கும் (1979)
1981 - 1990
1. உன்னால் முடியும் தம்பி (1988) (தெலுங்கில் ருத்ரவீணா)
2. பொன்மன செல்வன் (1989)
1991 - 2000
1. வீரமணி (1994)
2. அவ்வை சண்முகி (1996)

பிற மொழிப் படங்கள்

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவும் பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார்.
அவரது கல்யாணப்பரிசு இந்தி மொழியில் நஸ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் நாயகனாக நடிக்க மறுவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் அவர் நடித்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் "மிஸ் மேரி" (தமிழில் மிஸ்ஸியம்மா) போன்றவற்றிலும், அஞ்சலி தேவியுடன் அவர் நடித்த சில படங்களின் இந்தி மறுவாக்கத்திலும் கதாநாயகனாகவே நடித்தார். தமிழ் நடிகைகள் வெற்றிக் கொடி நாட்டிய
பாலிவுட் தமிழ் நடிகர்களை வெகு காலத்திற்கு வரவேற்றதில்லை. ஜெமினி கணேசனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதர மொழிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியில் அவரது பங்களிப்பு மிகக் குறைவே.
ஜெமினி கணேசன் நினைவாக வெளியிடப்பெற்ற அஞ்சல் தலை
அஞ்சல் தலை வெளியீடு
தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.


துணுக்குகள்

ஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. பராசக்தி (திரைப்படம்) மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.
ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம் நான் அவனில்லை. இது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் தமிழிலேயே ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.
தாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்". இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்ரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய "இதயமலர்" திரைப்படத்தில் " லவ் ஆல் " என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.
ஜெமினி கணேசன் இந்தி மொழியை மிக நன்றாக அறிந்திருந்தமையால், 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான
ஹம்லோக் சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் அவர் தமிழில் முன் கதைச்சுருக்கம் அளித்தார்.
இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த ரேகா தாம் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.
ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக நினைவெல்லாம் நித்யா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.
ஜெமினி கணேசனின் மகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்.

மறைவு

சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு காலமானார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்ட்டது.


‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார். ‘மனம்போல மாங்கல்யம்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்திபன் கனவு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கற்பகம்’, ‘புன்னகை’ போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புகளாகப் போற்றப்பட்டது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள அவர், சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த ஜெமினி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 17, 1920
பிறப்பிடம்: புதுக்கோட்டை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: தமிழ் திரைப்பட நடிகர்
இறப்பு: மார்ச் 22, 2005
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
ஜெமினி கணேசன் அவர்கள், 1922 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “புதுக்கோட்டை” என்ற இடத்தில் ‘ராமசாமி’, என்பவருக்கும், ‘கங்கம்மாவிற்க்கும்’ மகனாக ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சிறுவயதில் தன்னுடைய தாத்தா நாராயண சாமி ஐயர் வீட்டில் வளர்ந்த ஜெமினி கணேசன் அவர்கள், அதன் பிறகு புதுக்கோட்டையிலுள்ள குலமது பாலையா பிரைமரி ஸ்கூல் மற்றும் சென்னையில் உள்ள ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியிலும் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட சிறந்த மாணவனாக வளர்ந்தார்.
திரைத்துறையில் ஜெமினி கணேசனின் பயணம்
தன்னுடைய கல்லூரிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த ஜெமினி கணேசன் அவர்கள், ஆரம்ப காலத்தில் தான் படித்த கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்னர், ஜெமினி பட நிறுவனத்தில் மேலாளராகப் பணியில் சேர்ந்த அவர், 1947 ஆம் ஆண்டு, தான் பணிபுரியும் நிறுவனமான ஜெமினி தயாரிப்பில் ‘மிஸ் மாலினி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடம் தாங்கி நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952 ஆம் ஆண்டு கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். இத்திரைப்படம், பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் கூட, விருது பெறத்தக்க சிறந்த படமாகப் பெயர் பெற்றது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர். எஸ். மனோகர் அவர்கள், பிற்காலத்தில் வில்லன் வேடத்துக்கு மாறினார், வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் அவர்கள் கதாநாயகனாக மாறி, ‘காதல் மன்னன்’ எனப் பெயர்பெற்றார்.
வெற்றிப் பயணம்
தொடக்கத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே வில்லன் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த ஜெமினி கணேசன் அவர்கள், அதற்கு அடுத்த ஆண்டே ‘பெண்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக வேடம் ஏற்று நடித்தார். 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதே ஆண்டில் வெளியிடப்பட்ட ‘மனம்போல மாங்கல்யம்’ என்ற திரைப்படத்தில், அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். இத்திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்று ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைபடத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த, பின்னாளில் ‘நடிகையர் திலகம்’ என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துகொண்டார்.
தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்திய ஜெமினி கணேசன் அவர்கள், இயக்குனர்களின் நாயகனாகவும், திரைக்கதாநாயகிகளின் நாயகனாகவும், சினிமா ரசிகர்களின் நாயகனாகவும் விளங்கி, தமிழ் திரைப்படத்துறையில் ‘காதல் மன்னன்’ என அனைவராலும் அழைக்கப்பட்டார். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றி, தனக்கென தனி பாணியில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ‘கற்பகம்’, ‘சித்தி’, ‘பணமா?, பாசமா?’, ‘சின்னஞ்சிறு உலகம்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘கல்யாணப் பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வெள்ளி விழா’, ‘புன்னகை’, ‘கண்ணா நலமா’, ‘நான் அவனில்லை’ போன்ற படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமல்லாமல், அவர் ஒரு முன்னணி கதாநாயகனாக இருந்தபொழுதும், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், ஏவி.எம். ராஜன் போன்ற பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க எப்பொழுதும் தயங்கியதே இல்லை. 1947 ஆம் ஆண்டு தன்னுடைய திரைவாழ்க்கையினைத் தொடங்கி, 1953-க்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக முத்திரைப்பதித்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஜெமினிகணேசன் அவர்கள், 1970 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த ‘லலிதா’ என்ற திரைப்படமே அவர் கதாநாயகனாக நடித்த கடைசி படமாக அமைந்தது. அதன் பிறகு, தன்னுடைய இறுதிக்காலம் வரை கமல்ஹாசன், சிரஞ்சீவி, சத்தியராஜ், விக்ரம், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
ஜெமினி கணேசன் நடித்த சிறந்த படங்கள்
‘மளாணனே மங்கையின் பாக்கியம்’, ‘மிஸ் மாலினி’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘மாமன் மகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘கல்யாணப்பரிசு’, ‘சுமைதாங்கி’, ‘பாசமலர்’, ‘தேன் நிலவு’, ‘பாதகாணிக்கை’, ‘கற்பகம்’, ‘சின்னஞ்சிறு உலகம்’, ‘இரு கோடுகள்’, ‘புன்னகை’, ‘தாமரை நெஞ்சம்’, ‘நான் அவனில்லை’, ‘அவ்வை சண்முகி’, ‘பத்தினி தெய்வம்’, ‘வாழவைத்த தெய்வம்’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘காத்திருந்த கண்கள்’, ‘ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘வீர அபிமன்யு’, ‘சரஸ்வதி சபதம்’, ‘பணமா? பாசமா?’, ‘பூவா? தலையா?’, ‘காவியத் தலைவன்’, ‘பொன்மனச் செல்வன்’, ‘மேட்டுக்குடி’ என இன்னும் பல திரைப்படங்கள் ஜெமினி கணேசனின் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்றவைகள் ஆகும்.

இல்லற வாழ்க்கை

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய இருபது வயதில் அலமேலு என்ற பாப்ஜியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள் பிறந்தனர். பின்னர், இந்தி நடிகையான புஷ்பவள்ளியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘நடிகையர் திலகம்’ என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விஜயசாமூண்டிசுவரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் பிறந்தனர்.
விருதுகளும், மரியாதைகளும்
‘கலைமாமணி விருது’
1970 – ‘காவியத் தலைவி’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’.
1971 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
எம்.ஜி.ஆர் தங்கப்பதக்கம்.
1974 – ‘நான் அவனில்லை’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்பேர் விருது’.
1993 – வாழ்நாள் சாதனையாளருக்கான ‘சவுத் ஃபிலிம்பேர் விருது’.
‘ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது’.
இறப்பு
தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன் அவர்கள், இறுதி காலத்தில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.
1947 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பட வாழ்க்கையினைத் தொடங்கி. தான் இறக்கும் வரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்து. தமிழ் சினிமாவை ஆட்சிசெய்தார் என்று சொன்னால் யாராலும் மறுக்க இயலாது. தனக்குக் கிடைத்த அத்தனைக் கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று அனைவராலும் ‘காதல் மன்னன்’ எனப் புகழப்பட்டவர்.


திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் நாயகர்கள் ஜம்மென்று தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது உருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’.
கேஸ்டிங் உதவியாளர்
சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந்த 40களில் மதுரையும் தஞ்சையும் நூற்றுக்கணக்கான கலைஞர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுக்க, ஜெமினி கணேசன் வந்ததோ, தஞ்சை – மதுரை கலாச்சாரங்கள் சங்கமித்த புதுக்கோட்டையிலிருந்து. ஜெமினியின் இயற்பெயர் ராமசாமி கணேசன். நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஜெமினி கணேசன் சொந்த ஊரில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டுப் பட்டப் படிப்புக்காக மதராஸப் பட்டணம் வந்தார். சென்னையில் உள்ள தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் இடம் கிடைத்தபோது அவருக்குப் பதினாறு வயது. விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட மாணவராக இருந்ததால், அங்கே பாதிரியார்களின் கவனதுக்குரிய செல்லப்பிள்ளையாக இருந்தார் ஜெமினி. படிப்பு முடிந்ததும் அங்கேயே சில மாதங்கள் பயிற்சி ஆசிரியராக வேலை செய்தார். ஏனோ ஆசிரியர் பணி அவருக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனைச் சென்று சந்திக்கும்படி சிபாரிசுக் கடுதாசு ஒன்று வீட்டிலிருந்து தபாலில் வந்து சேர்கிறது. கடுதாசியை வாங்கிப் பார்த்த வாசன் வாஞ்சையுடன் அவரை கேஸ்டிங் உதவியாளராக நியமிக்கிறார். 1940-ல் ஜெமினியில் பணியில் சேர்ந்த ஜெமினி கணேசன் அதன் பிறகு ஸ்டூடியோவின் எல்லாத் தளங்களிலும் சுதந்திரமாக உலா வந்தார்.
‘முதலாளியின் உறவுக்காரப் பையன்’ என்ற அடைமொழியோடு வலம் வந்தவரைத் தன் கேமரா கண்களால் பார்த்தவர் ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பு நிர்வாகிகளுள் ஒருவராக இருந்த ஆர். ராம்நாத்.
தயாரிப்பு நிர்வாகியாக மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் எனப் புகழ்பெற்ற ராம்நாத், மிஸ் மாலினி என்னும் படத்தில் கதாநாயகனின் உதவியாளராக ஜெமினி கணேசனை அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் கதை, பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனுடையது. இப்படத்தைக் கொத்தமங்கலம் சுப்பு இயக்கிக் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சுதந்திர இந்தியாவில் வெளியான முதல் சமூகப் படமான மிஸ் மாலினி 1947 செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகி, தரமான படம் என்ற பாராட்டைப் பெற்று வெற்றிபெற்றது. ஜெமினி நிறுவனத்துக்காக ராம்நாத் தயாரித்த ஜெமினி கணேசனின் அறிமுகப் படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர்களோடு ஜெமினியின் இயற்பெயரான ராமசாமி கணேசன் என்பதன் சுருக்கமாக ‘ஆர்.ஜி’என்று டைட்டிலில் போடப்பட்டது.
காதல் மன்னன் பிறந்தார்
இதன் பிறகு ஜெமினி நிறுவனம் தயாரித்த பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தவருக்கு, 1952-ம் ஆண்டு கே. ராம்நாத் மறுபடியும் முக்கியத்துவம் கொடுக்கிறார். ராம்நாத் இயக்கத்தில் 1952-ல் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, அழகான இளம் வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். அது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விருது பெறத்தக்க சிறந்த படமாகப் பெயர் பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர். எஸ். மனோகர், பிற்காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் புகழ்பெற்றார். இதற்கு நேர்மாறாக வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் காதல் கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.
ஜெமினியின் தொடக்க காலத் திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை அமைத்துக் கொடுத்த படம், அடுத்த ஆண்டே வெளியான ‘மனம்போல மாங்கல்யம்’. முப்பத்து மூன்று வயதே நிரம்பியிருந்த ஜெமினி கணேசன் கவனம்பெறத் தொடங்கிய நான்காவது படத்திலேயே அவருக்கு இரட்டை வேடம் கிடைத்தது ஓர் அசாதாரணமான வாய்ப்பு. அந்நாள் தெலுங்குத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட ‘வேம்பட்டி’ சதாசிவ பிரம்மம் எழுதிய முழுநீள சமூக நகைச்சுவை திரைக்கதையைத் தமிழில் எழுதியவர் உமாசந்திரன். ஒரே தோற்றம் கொண்ட இருவரில் தன் காதலன் யார் எனத் தெரியாமல் பழகுகிறார் கதாநாயகி. அந்த இருவரில் ஒருவர் மனநலக் காப்பகத்திலிருந்து தப்பித்து வந்தவர். கதை எத்தனை கலாட்டாவாக இருந்திருக்கும் என்று யோசிக்க முடிகிறது அல்லவா? இந்தப் படத்தில் நடிப்பில் மட்டுமல்ல, காதல் காட்சிகளிலும் தன் தனித்த மென்னுணர்ச்சி முத்திரையை அழுத்தமாகப் பதித்தார் ஜெமினி கணேசன். இந்தப் படத்தில்தான் ஜெமினி கணேசன் என்று முதன்முதலாக டைட்டில் போடப்பட்டது. படம் மிகப் பெரிய வெற்றிபெற்று ஜெமினியைக் காதல் மன்னனாக உயர்த்தியது. ஜெமினியின் சொந்த வாழ்க்கையிலும் மிகப் பெரிய பங்காற்றியது. இந்தப் படத்தில் சாவித்திரியுடன் நடித்தபோது ஏற்பட்ட நட்பே பின்னர் மெல்ல மெல்ல காதலாகக் கனிந்து திருமணம் வரை வந்து நின்றது. பாசமலரில் இந்த ஜோடி காதலித்தபோது அது நிஜமென்றே ரசிகர்கள் நம்பினார்கள்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் எனத் தான் ஏற்று மிளிராத கதாபாத்திரம் இல்லை என்று சாதித்துக் காட்டினார். ஜெமினியைக் காதல் மன்னனாகப் பார்க்கும் ரசிகர்கள் சிவபெருமான் வேடம் ஏற்ற அந்நாளின் கதாநாயர்களில் ஜெமினிக்கே அது கச்சிதமாகப் பொருந்தியதாகச் சொல்கிறார்கள். ஜெமினி இறுதிவரை இயக்குநர்கள் விரும்பும் நடிகராக இருந்தார். காரணம் தனது நடிப்புப் பொறுப்பை இயக்குநர்களிடம் விட்டுவிடுவார். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி நடித்த ‘வெள்ளி விழா’படத்தில் முதுமை பற்றி ‘வந்தால் வரட்டும் முதுமை உனக்கென்ன குறைச்சல்,’ என்ற பாடலை எழுதியிருப்பார் வாலி. ஆனால் பழுத்த முதுமையில் இயற்கையுடன் கலந்த ஜெமினி கணேசன் இன்றும் இளமையான ‘ காதல் மன்னனாகவே’ ரசிகர்களின் மனதில் படிந்திருக்கிறார். அதற்கு அவரது நடிப்பாளுமையை மீறிய மற்றொரு காரணமும் உண்டு. தமிழ்த் திரையிசையின் மறக்க முடியாத கலைஞர்களாக இருக்கும் ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகிய இருவரது குரலும் ஜெமினியின் குரலாகவே தமிழ் ரசிர்கள் மனதில் பதிந்துவிட்டதுதான் அந்தக் காரணம்.




* வசதியான குடும்பத்தில் பிறந்து, சினிமாவில் நடிக்க வந்தவர் ஜெமினி கணேசன். ஜெமினியை குதிரை மீதமர்த்தி பள்ளிக்கு அழைத்துச் செல்வாராம், அவரின் தாத்தா நாராயணசாமி அய்யர். பள்ளியில் சேர்க்கப்பட்ட அன்று, வெள்ளித் தட்டில், தங்கக் காசால் எழுதினாராம் ஜெமினி கணேசன். கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிந்த இவர் அந்தக் காலத்திலேயே பட்டதாரி.
* இன்றைய நடிகர் அஜித் போல, ஜெமினியும் அதிவேகமாக கார் ஓட்டக் கூடியவர். இவர் கார் ஓட்டும் வேகத்துக்குப் பயந்து, சில ஸ்டுடியோக்களில் இவருக்காகவே வேகத்தடை வைத்த நிகழ்வுகள் உண்டு.
* ஜெமினி கணேசன் குடும்பத்தில், இவரது மனைவிகள் புஷ்பவல்லி, சாவித்திரி மற்றும் மகள்கள் ரேகா, ஜீ ஜீ ஆகியோரும் நட்சத்திரங்கள் ஆவார்கள்.
* தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஜெமினியின் ரசிகர்களான தமிழர்கள், அங்கு ஜெமினி என்ற ஒரு திரை அரங்கத்தை உருவாக்கியுள்ளார்கள்.
* மகாலிங்கம் என்பவர் ஜெமினி மகாலிங்கம் என்று அழைக்கப்படும் அளவிற்கு, ஜெமினியிடம் நீண்ட காலம் உதவியாளராக இருந்தார்.
* எம்.ஜி.ஆர். - சிவாஜி - ஜெமினி ஆகிய மூவரையும், தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று, புகழ்ந்து எழுதியது ஒரு பிரபல வார பத்திரிக்கை.
* "காதல் மன்னன்' என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டவர் இவர்.
* தமிழக அரசு 1990 இல் இவருக்கு எம்.ஜி.ஆர். விருதும், 1966 இல் கலைமாமணி விருதும் வழங்கி கெüரவித்தது.
* ஜெமினி கணேசன் படம் பதித்த அஞ்சல் தலையை, 25. 02. 2006 இல் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டார்.
* 1970 இல் இந்தியக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களிடம், பத்மஸ்ரீ விருது பெற்றார் ஜெமினி.
* இவர் நடித்த முதல் படம் "மிஸ்.மாலினி' (1947). கடைசிப் படம் "அடிதடி' (2004). இரு படங்களிலுமே இவர் நடித்தது கெüரவ வேடங்கள்தான். இவர் நாயகனாக நடித்த முதல் படம் "மனம் போல் மாங்கல்யம்' (1953) என்ற படமாகும். நாயகனாக நடித்த கடைசிப் படம் "உறவுக்கு கை கொடுப்போம்' (1975) என்ற படமாகும்.
* ஜெமினி கணேசன் கெüரவ வேடங்களில் நடித்த படங்கள், அன்னை வேளாங்கன்னி, அலாவுதீனும் அற்புத விளக்கும், அவ்வை சண்முகி, ஆதிபராசக்தி, இதய மலர், உன்னால் முடியும் தம்பி, ஒப்பந்தம், ஒüவையார், கப்பலோட்டிய தமிழன், காலமெல்லாம் காதல் வாழ்க, குருவாயூரப்பன், கொண்டாட்டம், சக்ரதாரி, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, தசாவதாரம் (பழைய படம்), தாய்மொழி, திருமலை தெய்வம், பொன்மனச் செல்வன், நவஜீவனம், நாம் இருவர் நமக்கு இருவர், நூற்றுக்கு நூறு, மர்ம வீரன், முகராசி, மேட்டுக்குடி, வள்ளியின் செல்வன், வீரமணி, தொடரும், ஜெமினி,அடிதடி.
* ஜெமினி கணேசன் தயாரித்து நடித்த ஒரே படம் "நான் அவனில்லை'. இதே கதைதான் இதே தலைப்பில் ஜீவன் நடித்து தற்போது வெளிவந்த "நான் அவனில்லை'
* நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்காத பாத்திரங்களே இல்லை எனலாம். ஆனால், சிவாஜி நரிக்குறவர் வேடத்தில் நடித்ததில்லை. மக்கள் திலகம் எம். ஜி. ஆர். கூட ஒளிவிளக்கு, நவரத்தினம் ஆகிய இரு படங்களில் முறையே, இரு பாடல் காட்சிகளில் மட்டும் நரிக்குறவராக நடித்திருப்பார். ஆனால், "குறத்தி மகன்' என்ற படம் முழுவதும் நரிக்குறவராக நடித்து சாதனை செய்துள்ளார், நாடக மேடை அனுபவமில்லாத காதல் மன்னன் ஜெமினி.
* இவர் தாமரை மணாளனுடன் இணைந்து "இதய மலர்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
* ஜெமினி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள், மனம் போல் மாங்கல்யம், ஆடிப் பெருக்கு, சங்கமம் ஆகிய 3 படங்களாகும்.
* இவர் பெண் வேடமிட்டு நடித்த ஒரே படம் "ஐந்து லட்சம்' என்ற படமாகும்.
* காதல் மன்னன் பல படங்களில் இரு நாயகிகளுடன் நடித்துள்ளார். இரு நாயகிகளுடன் அதிக படங்களில் நடித்தவர் இவராகத்தான் இருக்க முடியும். இவர் இரு நாயகியருடன் நடித்த படங்கள், ஒüவையார், மனம் போல் மாங்கல்யம், மாதர்குல மாணிக்கம், வஞ்சிக் கோட்டை வாலிபன், கல்யாண பரிசு, பாத காணிக்கை, கற்பகம், இரு கோடுகள், சங்கமம், வெள்ளி விழா, அவளுக்கென்று ஓர் மனம், கங்கா கெüரி, களத்தூர் கண்ணம்மா, பாக்கிய லட்சுமி, பெண் ஆகிய 15 படங்களாகும்.
* நிஜ வாழ்வில் 7 மகள்களுக்கும் 1 மகனுக்கும் தந்தையான ஜெமினி கணேசன், மாணிக்கத் தொட்டில் என்ற படத்தில் 5 பெண்களுக்குத் தந்தையாக நடித்துள்ளார்.
* இவர் நடித்த 187 படங்களில், பாடல் காட்சியில் வாயசைக்கும் வாய்ப்பு, 2 படங்களில் மட்டுமே வாய்க்கவில்லை. ஒன்று "கற்பகம்', மற்றொன்று "மாணிக்கத் தொட்டில்' ("பெண்' என்ற படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இருந்தாலும், ஜெமினிக்கு ஒரு முழு பாடல் காட்சி கூட இல்லை. அஞ்சலிதேவி, வைஜெயந்திமாலா, வி.நாகையா, ஜெமினி ஆகிய நால்வரும் சேர்ந்து "மாதர் தம்மை இழிவு செய்யும்' என்ற பாடலை ஆளுக்கு 4 வரி பாடுவார்கள்.)
*திருமணம், குறத்தி மகன், மஹேஸ்வரி, கப்பலோட்டிய தமிழன் ஆகிய படங்கள், பாரதியார் பாடல்கள் இணைக்கப் பட்ட ஜெமினி கணேசன் நடித்த படங்களாகும்.
* அதிக படங்களில் இணைந்து நடித்த நட்சத்திர ஜோடி, ஜெமினி- சாவித்திரி ஜோடியேயாகும். இவர்கள் இருவரும் மிஸ்ஸியம்மா உள்ளிட்ட 30 படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.
* ஜெமினியின் மனைவி புஷ்பவல்லி நடித்த சில படங்களில் ஜெமினி நடித்திருந்தாலும், இவர்களிருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. "சக்ரதாரி' படத்தில் கோரகும்பர் (வி.நாகையா) மனைவி துளஸிபாய் வேடத்தில் புஷ்பவல்லி நடித்துள்ளார். இந்த தம்பதியருக்கு அருள் பாலிக்கும் பாண்டுரங்கன் வேடம் ஜெமினிக்கு. மிஸ்.மாலினி படத்தில் மாலினியாக புஷ்பவல்லியும், மாலினியை மயக்கி ஏமாற்றும் மோசடிப் பேர்வழி சம்பத்தாக கொத்தமங்கலம் சுப்புவும் நடித்துள்ளார்கள். இப்படத்தில் ஜெமினிக்கு ஒரு சிறு வேடம் மட்டுமே. வாழ்க்கைப் படகு படத்தில் டி.எஸ்.பாலையாவிற்கு, மனைவியாக நடித்துள்ளார் புஷ்பவல்லி.
* சரோஜாதேவியுடன் ஜெமினி 15 படங்களில் நடித்துள்ளார்.
* பத்மினியுடன் ஜெமினி 9 படங்களில் நடித்துள்ளார்.
* ஜெயலலிதாவுடன், ஜெமினி கணேசன் நடித்த படங்கள், அன்னை வேளாங்கன்னி, ஆதிபராசக்தி, ஜீசஸ், சக்தி லீலை, கங்கா கெüரி ஆகிய 4 படங்களாகும். இவர்கள் நடித்த இந்த 4 படங்களும் பக்திப் படங்கள் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
* ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ஜெமினி நடித்த காத்திருந்த கண்கள் படத்தில் திலகம் என்ற பாத்திரத்திலும், திருமணம் என்ற படத்தில் சந்தியா என்ற (அவரது பெயரையே கொண்ட) பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
* பத்மினியின் சகோதரி ராகினியுடன் ஜெமினி ஜோடியாக நடித்த ஒரே படம் "ஏழை பங்காளன்' மட்டுமே. இருப்பினும் ஜெமினி நடித்த, வீராங்கனை, பார்த்திபன் கனவு, பொன் விளையும் பூமி ஆகிய 3 படங்களில் ராகினி துணை பாத்திரங்களில் நடித்துள்ளார்.
* எம்.ஜி.ஆர். தம்பியாகவும், ஜெமினி கணேசன் தமையனாகவும் சேர்ந்து நடித்த ஒரே படம் முகராசி படமாகும்.
* எம்.ஜி.சக்கரபாணி, ஜெமினி கணேசன் சேர்ந்து நடித்த ஒரே படம், பிரேம பாசம் படமாகும். இப்படத்தின் பாடல்களை 8 கவிஞர்கள் எழுதியுள்ளார்கள்.
* ஜெமினி கணேசனும் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்தது மொத்தம் 13 படங்களாகும்.
* ஜெமினி கணேசனும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரனும் வைராக்கியம், குல விளக்கு ஆகிய 2 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
 * இந்தி நடிகர் அசோக்குமார் நடித்த ஒரே தமிழ்ப் படம், ஜெமினி கணேசன் நடித்த அண்ணாவின் ஆசை என்ற படமாகும்.
* தெலுங்கு பட உலகின் பிரபல நாயக நடிகர்களான ஏ.நாகேஸ்வரராவ் உடன், மனிதன் மாறவில்லை, மாதர்குல மாணிக்கம், கல்யாண பரிசு ஆகிய படங்களிலும், என்.டி.ராமாராவ் உடன், லவ குசா, மாயா பஜார் ஆகிய படங்களிலும் ஜெமினி இணைந்து நடித்துள்ளார்.
* தெலுங்கு பட உலகின் பிரபலமான வில்லன் நடிகர் ராஜநளா என்பவர், ஜெமினி நடித்த ரங்க ராட்டினம் படத்தில் கெüரவ வேடத்தில் நடித்துள்ளார்.
* கல்யாணபரிசு இந்தியில் நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் நாயகனாக நடிக்க மறுவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் ஜெமினி நடித்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் மிஸ் மேரி (தமிழில் மிஸ்ஸியம்மா) போன்றவற்றிலும், அஞ்சலி தேவியுடன் அவர் நடித்த சில படங்களின் இந்தி மறுவாக்கத்திலும் கதாநாயகனாகவே நடித்தார்.
* கே.பாலசந்தர், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகிய இயக்குநர்களின் படங்களில்தான் ஜெமினி கணேசன் அதிகமாக நடித்துள்ளார்.
* காதல் மன்னனின் காதல் மனைவி சாவித்திரியின், திரைக்கதை தயாரிப்பு இயக்கத்தில் ஜெமினி நடித்த ஒரே படம் "குழந்தை உள்ளம்' என்ற படமாகும்.
* கவிஞர் ஆலங்குடி சோமு தயாரித்த "பத்தாம் பசலி' படத்தின் நாயகன் நமது காதல் மன்னனேயாகும்.
* வசனகர்த்தா ஆரூர்தாஸ் கதை வசனம் எழுதி இயக்கிய ஒரே படமான "பெண் என்றால் பெண்' படத்தின் நாயகன் நமது காதல் மன்னனே.
* கே.வி.மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி இசையமைத்த 4 படங்களில் ஒன்றான "மலை நாட்டு மங்கை' படத்தின் நாயகன் நமது காதல் மன்னனேயாகும்.
* மு.கருணாநிதியின் கதை வசனத்தில், ஜெமினி கணேசன் நடித்த ஒரே படம், "எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற படம் மட்டுமே.
 * கவிஞர் கண்ணதாசனும் ச.அய்யாப் பிள்ளையும் சேர்ந்து வசனம் எழுதிய "வீரக் கனல்' படத்தில் ஜெமினி நடித்துள்ளார். பி.எஸ்.வீரப்பா தயாரித்த படம் இது.
* தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள டெக்னிக் வண்ணப் படம், ஜெமினி கணேசன் நடித்த கொஞ்சும் சலங்கை (1962)) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட ஆன் என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ண படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும். எம்.ஜி.ஆர். நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) என்ற படம், தமிழ் சினிமாவின் முதல் முழு நீள கேவா வண்ண படமாகும். தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ண படம், நடிகர் திலகம் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படமாகும்.)
* தெலுங்குப் படவுலகின் பிரபல இயக்குநரும், தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட பல மாயாஜால மந்திர தந்திர படங்களைத் தந்தவருமான, பி.விட்டலாச்சார்யா இயக்கிய ஒரே தமிழ்ப் படம், ஜெமினி கணேசன் நடித்த "பெண் குலத்தின் பொன் விளக்கு' என்ற படமாகும்.
* கண்டசாலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.எஸ்., எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் ஆகியோர் ஜெமினிக்கு பின்னணி பாடியிருந்தாலும், ஏ.எம்.ராஜாவின் குரல்தான் ஜெமினிக்குப் பொருத்தமாக அமைந்தது. ஜெமினிக்கு ஏ.எம்.ராஜா 22 படங்களில் பின்னணி பாடியுள்ளார். அவை... ஆசை மகன், மனம் போல மாங்கல்யம், குணசுந்தரி, மஹேஸ்வரி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா, ஆசை, மல்லிகா, யார் பையன், இல்லறமே நல்லறம், கடன் வாங்கி கல்யாணம், திருமணம், பூலோக ரம்பை, கல்யாண பரிசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர், களத்தூர் கண்ணம்மா, பார்த்திபன் கனவு, மீண்ட சொர்க்கம், தேன் நிலவு, ஆடிப்பெருக்கு, பாசமும் நேசமும், ரங்க ராட்டினம் ஆகிய 22 படங்களாகும்.
* காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்து, பி.ஏ.தாமஸ் இயக்கிய, மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட "ஜீசஸ்' என்ற படம் பற்றிய சில செய்திகள்:
* இந்தப் படத்தின் பிரதான வேடத்தில் செல்வி ஜெயலலிதா நடித்துள்ளார். இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமி வசனம், பாடல்களை எழுதிள்ளார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், ஜோசப் கிருஷ்ணா, ஆலப்பி ரங்கநாதன், கே.ஜே. யேசுதாஸ் ஆகிய 4 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இப்படத்தில் வரும் "கோல்கோதா மலைகளே' என்ற பாடலை கே.ஜே. யேசுதாஸ் இசையமைத்துப் பாடியுள்ளார்.
* நான்கு பாடகர்கள் சேர்ந்து பாடும் பாடல், படங்களில் வெகு அபூர்வமாகவே இருக்கும். அவ்வகையில் "புன்னகை' படத்தில் "நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்' என்ற பாடலை டி.எம்.எஸ். (ஜெமினி), சாயிபாபா (நாகேஷ்), எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (முத்துராமன்), கே.வீரமணி (எம்.ஆர்.ஆர்.வாசு) ஆகிய நால்வரும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.
* வீர அபிமன்யூ படத்தில் நமது காதல் மன்னனுக்கு மாயக் கண்ணன் வேடம். கெüரவர் சபையில் கண்ணனை வரவேற்கிறது ஒரு பாடல்.
கள்ளத் தனமே உருவாய் வந்த
காரியக் கண்ணா வா
யமுனைக் கரையில் பெண்களைத் தேடும்
காதல் மன்னா வா
கவிஞர் கண்ணதாசன், காதல் மன்னன் என்று சொல்வது கண்ணனை மட்டுமின்றி, நமது காதல் மன்னனையும்தான்.
* ஜெமினி, ஒரே ஒரு பாடலில் மட்டும் பாடாமல் பேசியிருப்பார். கல்யாண பரிசு படத்தில் வரும் ஆசையினாலே மனம் என்ற பாடலில், ஜெமினி (ஏ.எம்.ராஜா குரலில்) ஓஹோ, ஊஹூம், ஐ ஸீ, ஆஹஹா, ஸôரி என்ற வார்த்தைகளை சொல்வதோடு சரி. பாடலை முழுமையாக பாடுபவர் பி.சுசீலா மட்டுமே.
* "மாதர் குல மணிக்கம்' படத்தில் ஜெமினிக்கு ஜோடி அஞ்சலிதேவி. நாகேஸ்வரராவுக்கு ஜோடி சாவித்திரி. இதேபோல "பாக்ய தேவதை' படத்தில் ஜெமினிக்கு ஜோடி ராஜசுலோசனா. எம்.என்.நம்பியாருக்கு ஜோடி சாவித்திரி.
* முதன் முதலில் ஒரு படத்தின் பெரும் பகுதி வெளிப்புறங்களில் படப்பிடிப்பு செய்யப்பட்டது என்ற பெருமையைக் கொண்டது "தேன் நிலவு' படமாகும். தேன் நிலவு படப் பிடிப்பின் போது, ஜெமினி தமது இரு மனைவியருடன் காஷ்மீரில் தேன் நிலவு கொண்டாடினார்.
ஜெமினி கணேசன் 1947 முதல் 2004 வரை 187 படங்களில் நடித்துள்ளார்
பிறமொழியில் நடித்த படங்கள் - 14
கெüரவ வேடத்தில் நடித்த படங்கள் - 29
நாயகன், துணை நாயகன்
வேடத்தில் நடித்த படங்கள் - 144


ஜெமினியுடன் இணைந்து நடித்த நடிகைகளும் படங்களும்
ஜெயந்தி- புன்னகை, இரு கோடுகள், நூற்றுக்கு நூறு, கண்ணா நலமா, வெள்ளிவிழா
 வைஜெயந்திமாலா- வஞ்சிக் கோட்டை வாலிபன், பெண், தேன் நிலவு, பார்த்திபன் கனவு,
 பானுமதி - சதாரம், பட்டத்து ராணி, கட்டிலா தொட்டிலா,
விஜயநிர்மலா- பந்தயம்,
ராஜசுலோச்சனா- பாக்கிய தேவதை, நீதிபதி,
 ராஜஸ்ரீ- பூவா தலையா, பத்தாம் பசலி, எல்லைக் கோடு,
வெண்ணிற ஆடை நிர்மலா- சங்கமம், சக்கரம், சுடரும் சூறாவளியும்,
காஞ்சனா- சாந்தி நிலையம், அவளுக்கென்று ஓர் மனம்,
விஜயகுமாரி- மனைவி, பொற்சிலை, அவரே என் தெய்வம்,
எம்.என்.ராஜம்- பெண் குலத்தின் பொன் விளக்கு,
 ஜமுனா- நல்ல தீர்ப்பு,
சுஜாதா- லலிதா,
லதா- ஞானக்குழந்தை,
வாணிஸ்ரீ- தபால்காரன் தங்கை,
விஜயஸ்ரீ- மலைநாட்டு மங்கை,
தேவிகா- ஆடிப்பெருக்கு, களத்தூர் கண்ணம்மா, சுமை தாங்கி, வாழ்க்கைப் படகு.
 ஜெமினியுடன் மற்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்த படங்கள்
ரஜினி - அலாவுதீனும் அற்புத விளக்கும்,
கமல் - அலாவுதீனும் அற்புத விளக்கும், இதய மலர், லலிதா,நான் அவனில்லை, உன்னால் முடியும் தம்பி, அவ்வை சண்முகி
சிறுவனாக கமல் - களத்தூர் கண்ணம்மா, பார்த்தால் பசி தீரும்,
கலைவாணர்- ஆசை, யார் பையன்,
ரவிச்சந்திரன்- காவியத் தலைவி, எல்லைக்கோடு, சிநேகிதி, மாலதி, ரங்க ராட்டினம்,
 ஜெய்சங்கர்- நூற்றுக்கு நூறு, எதிர் காலம்,
ஏ.வி.எம்.ராஜன்- சக்கரம், திருமகள், பந்தயம், சுவாமி ஐயப்பன், ஸ்ரீ காஞ்சி காமாட்சி,
கே.ஆர்.ராமசாமி- சதாரம், நீதிபதி,
சிவகுமார்- திருமகள், கட்டிலா தொட்டிலா, கங்கா கெüரி,
சி.எல்.ஆனந்தன்- மலைநாட்டு மங்கை, பொற்சிலை, யானை வளர்த்த வானம்பாடி மகன்
 எஸ்.பாலசந்தர்- பெண்,
ஸ்ரீராம்- நவஜீவனம், மர்ம வீரன், மணமாலை, மூன்று பிள்ளைகள்
எம்.கே.ராதா- மூன்று பிள்ளைகள், கற்புக்கரசி




2 கருத்துகள்:

  1. மிக அருமையான தகவல்கள். அதிலும் குறிப்பாக ஜெமினிகணேசனுக்கு மிகவும் பொருந்திய குரல் ஏ.எம்.ராஜா என்று கூறியது மிக மிக சரி. அழகன் ஜெமினிகணேசனுக்கு கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜா பாடிய பாடல்கள் தேனினும் இனியவை.

    பதிலளிநீக்கு