திங்கள், 14 ஆகஸ்ட், 2017

கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் ஆகஸ்ட் 14 . 2016.



கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் ஆகஸ்ட் 14 . 2016.

நா.முத்துக்குமார் (12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்
திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள்,
சைவம் திரைப்படப் பாடல்களுக்காக
தேசிய விருது வாங்கினார்.

வாழ்க்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள
கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். [2] சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர்
பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் [3] , 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.
இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் திகதி, வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.
மறைவு
ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார்.
மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.

படைப்புகள்
இவர் பாடலெழுதிய சில திரைப்படங்கள்:
மாற்றான்
7ஜி ரெயின்போ காலனி
நந்தா
வெயில் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
புதுப்பேட்டை
சந்திரமுகி
சிவாஜி த பாஸ் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
கற்றது தமிழ்
கஜினி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
தம்பி
காதல் கொண்டேன்
காதல்
மன்மதன்
சண்டக்கோழி
தீபாவளி
போக்கிரி
பீமா
வாழ்த்துகள்
அழகிய தமிழ் மகன்
சத்தம் போடாதே
கல்லூரி
வேல்
சக்கரக்கட்டி
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஆறு
வாரணம் ஆயிரம்
சிவா மனசுல சக்தி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
அயன் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
நாடோடிகள்
வாமனன்
ஆதவன்
சுறா
யாரடி நீ மோகினி
பையா
அங்காடித் தெரு
சிங்கம்
களவாணி
மதராசப்பட்டினம்
நான் மகான் அல்ல
வானம்
ரத்த சரித்திரம்
போராளி
எத்தன்
வேட்டை
எங்கேயும் காதல்
அவன் இவன்
பொய் சொல்லப் போறோம்
நர்த்தகி
தெய்வத் திருமகள்
வந்தான் வென்றான்
நண்பன்
அரவான்
மன்னா
வழக்கு எண் 18/9
பில்லா 2
நீதானே எந்தன் பொன்வசந்தம்
இவரது நூல்கள்
நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
கிராமம் நகரம் மாநகரம்
பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
ஆணா ஆவண்ணா (கட்டுரைகள்)
என்னை சந்திக்க கனவில் வராதே
சில்க் சிட்டி (நாவல்)
பால காண்டம் (கட்டுரைகள்)
குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
வேடிக்கை பார்ப்பவன் (கட்டுரைகள்)
தூசிகள் (கவிதைகள்)
அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)
விருதுகள்
2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது [7]
2006: வெயில் திரைப்படத்திகாக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது
2009: அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
2013: தங்க மீன்கள் படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது .
2014: சைவம் திரைப்படத்தில் "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.


பேரன்பின் ஆதி ஊற்றைத் தொட்டுத் திறந்த கவிஞன்... நா.முத்துக்குமார்!

தன் வசீகரமான மொழியினால் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஆனந்த யாழை மீட்டி வந்த கன்னிகாபுரத்துக் கவிதைக்காரன் நம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. “கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு” என தன் வரிகளைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாலும் நா.முத்துக்குமாரை இழந்த துயரத்தை எளிதில் கடந்து போக இயலவில்லை.
ஒரு கலைஞனுக்கு கிடைக்கக் கூடிய மிகப்பெரிய அங்கீகாரம், காலங்கடந்தும் அவனுடைய படைப்புகள் பேசப்பட வேண்டும். அந்த வகையில் முத்துக்குமார் ரசிகர்களால் இன்னும் பல ஆண்டுகள் பேசப்பட்டுக் கொண்டே இருப்பார். காரணம், அவருடைய வரிகள். அவர் எழுதிய பாடல்களை ஓசை நயத்துடன் அன்றி வெறும் வரிகளாக வாசித்துப் பார்த்தாலே ஆகச்சிறந்த கவிதையை வாசித்துக் கொண்டிருக்கும் ஓர் இன்பத்தை அடைவோம்.
அவர் எழுதிய பாடல்கள், திரையில் வாய் அசைக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு மட்டுமன்றி பார்வையாளரும் தன்னை அந்த சொற்களுள் அடைகாத்து இதம் தேடும் வகையிலிருக்கும். உதாரணத்திற்கு; 7G படத்தில் வரும் ‘கனா காணும் காலங்கள்’ எனும் பாடல்களில் வரும் வரிகளான...
“நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்”
என்கிற வரிகளைச் சொல்லலாம்.

எத்தனையோ பேர் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த மயக்கத்தை தன் வரிகளைக் கொண்டு பகிரங்கப்படுத்தி பரவசமடைய வைத்தார்.
அது மட்டுமன்றி அவரின் கவித்துவமான வரிகள் ஒரு காட்சிப் படிமமாகவும் நமக்குள் விரியும் சாத்தியங்களை அநேக முறை நிகழ்த்தியிருக்கிறார். உதாரணத்திற்கு; 'டும் டும் டும்' படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் அவர்களின் குடும்பச் சூழ்நிலையால் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள முடியாத ஏக்கங்களை “உன் பேரை சொன்னாலே உள்நாக்கு தித்திக்குமே” என்கிற பாடலில்.. வருகிற இரண்டே வரிகளில் தெரிந்து கொள்வதுடன் ஒரு காட்சியாகவும் அதை உருவகப்படுத்திப் பார்க்கலாம். அந்த வரிகள்;
“கையை சுடும் என்றாலும் தீயைத் தொடும்
பிள்ளை போல் உன்னையே மீண்டும் நினைக்கிறேன்”
இவையெல்லாம் தவிர, முத்துக்குமாரின் பாடல்களில் உள்ள பொதுவான அம்சம் என்னவெனில், அவநம்பிக்கைச் சூழ்ந்து இருக்கிற சமயத்திலும் வாழ்க்கையை கசப்புணர்வுடன் அணுகாமல் தன் வரிகளால் அதன் மீது வெளிச்சத்தைப் பரப்புவார். அப்படி ஒரு பார்வை இருப்பதால்தான் மின்சாரக் கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டுவதை அவரால் பார்க்க முடிந்தது. மழை மட்டுமில்லை வெயிலும் அழகு என்று ரசிக்க முடிந்தது, தாயில்லை என்றாலும் ஒரு தந்தையாலும் தாலாட்டு பாட முடியும் என்று குழந்தையை உறங்க வைக்க முடிந்தது.

பாடல்களின் வழியாக அவர் கொடுக்கும் நம்பிக்கை வெறும் அறிவுரைகளாக, போதனைகளாக, தத்துவங்களாக இல்லாமல் கவிதைக்கேயுரிய அழகியலுடன் அது வெளிப்படும். உதாரணத்திற்கு காதல் கொண்டேன் படத்தில் வரும் ‘நெஞ்சோடு கலந்திடு உறவாலே’ பாடலைச் சொல்லலாம்.
பிறந்ததிலிருந்தே பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என யாருடைய துணையுமின்றி வாழ்பவனுக்கு ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அந்தப்பெண், அவன் மீது காட்டும் அன்பில் திளைக்கிறான். எப்போதும் அவள் தன்னுடனயே தனக்கு மட்டுமே இருக்க வேண்டுமென பிரியப்படுகிறான். அவன் எதிர்பார்ப்பை திருப்திபடுத்துகிற நிலையில் நாயகி இல்லை. ஆனால் ஒரு தோழியாக எல்லா வகையிலும் அவனுக்கு உறுதுணையாக இருக்கவே அவள் விரும்புறாள். நாயகனைக் காயப்படுத்தாமல் இதை அவனிடம் சொல்ல வேண்டும். அவனுக்கோ, அவளை ஒரு தோழிக்கும் மேலாக தான் நினைத்திருப்பதை அவளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். இருவருக்கும் நடக்கும் இந்தச் சிக்கலான ஊடாட்டமே அந்தப் பாடல். இதில் அவள் தன் நண்பனான நாயகனுக்கு இயல்பு வாழ்க்கையைப் புரிய வைக்கும் வரிகளை முத்துக்குமார் எழுதியிருப்பார். அதுவே ‘நெஞ்சோடு கலந்திடு உறவாலே.’
இந்தப் பாடல் வெறும் அறிவுரைகளாக இல்லாமல் அதில் இருக்கும் கவித்துவத்தை சில வரிகள் கொண்டு பார்க்கலாம்.
“கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்.
புயல்போன பின்னும் புதுபூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்.
முகமூடி அணிகின்ற உலகிது, உன் முகமென்று
ஒன்றிங்கு என்னது? நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவொன்றும் நனையாதே வா நண்பா”
முத்துக்குமார் எழுதியதில் இவையெல்லாம் சிறிய துளிகள் மட்டுமே. நா.முத்துக்குமாரின் படைப்பூக்கம் உச்சத்தில் துலக்கம் அடைந்தது அவர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் எழுதிய பாடல்களில்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். இவர்களுடன் செல்வராகவனும் இணைந்து கொள்ள மூவரின் ரசவாதமும் இரண்டாயிரத்தில் தலையெடுத்த இளைஞர்களின் காதல் உணர்வுகளுக்கு வாதையாகவும், கூடாரமாகவும் இருந்தன. எனக்காக ஒருவன் எழுதுகிறான். என்னுடைய வலிகளை யார் இவனுக்குத் தெரியப்படுத்தியது என்கிற ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அவரின் வரிகள் வழங்கின. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி ஆகிய படங்கள் அதற்கு சிறந்த உதாரணம்.
நம்முடைய உணர்வுகளை, நெருக்கமாக பிரதிபலிக்கிறவர்களின் மீது உண்டாகும் அன்னியோன்யம் முத்துக்குமாரின் மீது பெரும்பாலோனோர்க்கு இருந்தது. அதனால்தான் அவருடைய மரணத்தின் பாதிப்பு அவர் இறந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் குறையவில்லை. ஒரு அண்ணன் தம்பியைத் தேற்றுவது போல, ஒரு தந்தை மகளை அரவணைப்பது போல, ஒரு காதலி நெற்றியில் முத்தமிடுவது போல, ஒரு பாட்டியின் கையை பிடித்து சாலைக்கு அந்தப் பக்கம் கொண்டு விட்டு வருவதுபோல எல்லாவிதமான உணர்வுகளையும் கொடுத்த அவரின் பாடல்களைக் கேட்கும்பொழுது அவர் இழப்பையும் சேர்ந்து சுமக்க வேண்டிய பாரத்தை இவ்வளவு சீக்கிரம் கொடுத்துவிட்டு அவர் போயிருக்கக் கூடாது. அடுத்ததடுத்து இரண்டு தேசிய விருதுகள் வாங்கிய அவசரம் இப்படி விட்டுப் போவதற்குத்தானா
முத்துக்குமார்?
ஒரு படைப்பாளிக்கு மரணம் இல்லை. அவன் தன் கலையில் வாழ்கிறான் என்றெல்லாம் முத்துக்குமாரின் இழப்பை கடந்து போக முடியவில்லை. எல்லா வசதியுடன் இன்று நாம் வாழும் பூமியில் நம்மை ஆற்றுப்படுத்திய ஒருவர் இல்லை என்பது எவ்வளவு பெரிய இழப்பு. நம்மை அரவணைத்துக் கொண்டிருந்த கைகளில் ஒரு கை மெல்ல தன்னை விடுவித்துக் கொண்டதை யாருடைய ரேகை ஈடு செய்யும்? ஆனால் யதார்த்தமாக யோசித்துப் பார்க்கிற போது நா.முத்துக்குமார் அவர்தம் பாடல் வரிகளால் காலத்துக்கும் நம்முடன் பயணிப்பார் என்றுதான் சமாதானம் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதோ.. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் என் கணினியில் ‘பேரன்பின் ஆதி ஊற்று.. அதைத் தொட்டுத் திறக்குது காற்று’ என்று ஒலித்துக் கொண்டிருக்கிறது அவர் எழுதிய ‘தரமணி’ வரிகள்.
யாரும் இன்றி யாரும் இங்கு இல்லை... - இந்த பூமி மேலே
தன்னந்தனி உயிர்கள் எங்கும் இல்லை!
நன்றி விக்கிப்பீடியா,விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக