வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

நடிகர் கே. ஆர். ராமசாமி நினைவு தினம் ஆகஸ்ட் 5 , 1971.



நடிகர் கே. ஆர். ராமசாமி நினைவு தினம் ஆகஸ்ட் 5 , 1971.

கே. ஆர். ராமசாமி (இறப்பு: ஆகஸ்ட் 5 , 1971 ) தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். நடிப்பிசைப் புலவர் என்றழைக்கப்பட்டவர். 1935 முதல் 1969 வரை திரைப்படங்களில் நடித்தவர். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். அறிஞர் அண்ணாவின்
வேலைக்காரி திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.
வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமசாமியின் கலை வாழ்க்கை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனியில் ஆரம்பமானது. தனது ஆறாவது வயதிலேயே நாடக மேடையில் ஏறினார். தனது பதின்மூன்றாவது வயதில் டி. கே. எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் இணைந்து கொண்டார். எட்டாண்டு காலம் இதே கம்பனியில் பணியாற்றினார். அப்போது
மேனகா என்ற தங்களது நாடகத்தை டி.கே.எஸ் சகோதரர்கள் மேனகா என்ற அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். 1935 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தில் பைத்தியக்காரனாக கே.ஆர்.ராமசாமி நடித்தார். இதுவே இவரது முதலாவது படமும் தமிழில் வெளிவந்த முதலாவது சமூகப்படமும் ஆகும்.
இதன் பின்னர் சண்முகம் சகோதரர்களின்
குமாஸ்தாவின் பெண் ( 1941 ) படத்தில் "சினிமா இயக்குநர் வி.பி.வார்" என்ற நகைச்சுவை வேடத்தில் நடித்தார். ராமசாமியை முதன் முதலாகக் கதாநாயகனாக்கியது பூம்பாவை ( 1944 ). இவருடன் யூ. ஆர். ஜீவரத்தினம் இணைந்து நடித்தார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் என்.எஸ்.கே நாடகக் குழுவில் இணைந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் சிறை செல்ல நேர்ந்த பிறகு, அவரது நாடக சபையில் இருந்து விலகி கலைவாணர் பெயரிலேயே கிருஷ்ணன் நாடக சபாவை
ஜூலை 17 , 1946 இல் தொடங்கினார். திராவிட இயக்கத்தோடு, குறிப்பாக அறிஞர் அண்ணாவோடு மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சொந்தத்தில் ராமசாமி நாடகக் குழுவைத் தொடங்கியதும், இக்குழுவிற்காகவே அண்ணா வேலைக்காரி , ஓர் இரவு ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.
தெய்வ நீதி ( 1947 ), கங்கணம் ( 1947 ),
பில்ஹணா ஆகிய படங்களில் நடித்தார்.
கிருஷ்ண பக்தியில் துணை நடிகராக நடித்தார்.
ராமசாமிக்கு பெரும்புகழைத் தேடித்தந்த படம் வேலைக்காரி . இது 1949 இல் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து
1950 இல் விஜயகுமாரியில் டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து நடித்தார். அண்ணாவின் ஓர் இரவு ( 1951 ) திரைப்படமும் இவருக்குப் புகழைத் தேடித்தந்தது.
எதையும் தாங்கும் இதயம் திரைப்படத்தில்
எஸ். ஜானகியுடன் இணைந்து உள்ளம் தேடாதே என்று சொல்லுதே என்ற பிரபலமான பாடலைப் பாடினார்.
பிற்காலம்
பின்னாட்களில் நாடோடி ( 1966 ), அரச கட்டளை ( 1967 ), நம் நாடு ( 1969 ) போன்ற படங்களில் கௌரவ நடிகராக ராமசாமி நடித்தார். திரையுலகில் பல துறைகளிலும் தன்னை நிலை நிறுத்திப் புகழ்பெற்ற கே. ஆர். ராமசாமி ஆகஸ்ட் 1971 இல் மறைந்தார்.
நடித்த திரைப்படங்களின் பட்டியல்
1. காஞ்சனா (1952)
2. மேனகா (1955)
3. துளி விசம்
4. சொர்க்க வாசல்
5. தெய்வ நீதி
6. கிருஷ்ண பக்தி
7. வேலைக்காரி
8. விஜயகுமாரி
9. சதாரம்
10. அவன் அமரன்
11. கன்னியின் சபதம்
12. தலை கொடுத்தான் தம்பி
13. செந்தாமரை
14. எதையும் தாங்கும் இதயம்
15. கங்கணம்
16. பூம்பாவை
17. சுகம் எங்கே
18. நீதிபதி


அபூர்வ தகவல்கள்: கே.ஆர்.ராமசாமி
திரைகானம் பாடிய நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, கும்பகோணத்தில் பிறந்தவர். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி, டி.கே.எஸ். நாடக குழு, கிருஷ்ண நாடகசபா (இவரது சொந்த சபா) ஆகிய நாடக சபாக்களில் நடித்து தம் நடிப்பை வளர்த்துக் கொண்ட இவர், நாடகத்தைக் கண்ணாகப் போற்றியவர். தனது தந்தை காலமான அன்றும் கூட, தந்தையின் இறுதிக் கடன்களை முடித்த கையோடு, அன்றிரவே நாடகத்தில் நடித்தார்.
இவர் சார்ந்திருந்த திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 1960 ஆம் ஆண்டிலேயே எம்.எல்.சி. பதவி வகித்தவர் இவர். அறிஞர் அண்ணா இவருக்கு "நடிப்பிசைப் புலவர்' என்ற பட்டமளித்தார். நடிப்பிசைப் புலவரை அனைவரும் "அண்ணாவின் செல்லப்பிள்ளை' என்று செல்லமாக அழைத்தார்கள்.
நீதிபதி, பூம்பாவை, பில்ஹணா, கங்கணம், காஞ்சனா, விஜயகுமாரி, வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்க வாசல், செல்லப் பிள்ளை, அவன் அமரன், மேனகா (1955), கன்னியின் சபதம், துளிவிஷம், சுகம் எங்கே ஆகிய 15 படங்களில் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்துள்ளார்.
 இவர் நடித்து 100 நாட்கள் ஓடிய திரைப் படங்கள், குமாஸ்தாவின் பெண், பூம்பாவை, கிருஷ்ண பக்தி, வேலைக்காரி, சொர்க்கவாசல் ஆகியவை.
*பராசக்தி படத்திற்கு முன்பே, கே.ஆர்.ஆர். நடித்த வேலைக்காரி படத்தில், அறிஞர் அண்ணாவின் வசனத்தில் ஓர் அருமையான நீதிமன்றக் காட்சி இடம் பெற்றது. "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு' என்ற அண்ணாவின் வசனம் பிரபலமாயிற்று. சட்டம் ஒரு இருட்டறை என்ற இந்த வசனம்தான் பின்னாளில் விஜயகாந்த் நடித்த படத்தின் தலைப்பாகியது.

*தமிழ்த் திரையின் பிரதான நான்கு நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெமினி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் கே.ஆர்.ராமசாமி. எம்.ஜி.ஆருடன் அரச கட்டளை, நம் நாடு, நாடோடி ஆகிய படங்களிலும், சிவாஜியுடன் செந்தாமரை, துளிவிஷம் ஆகிய படங்களிலும், எஸ்.எஸ்.ஆருடன் செந்தாமரை, சொர்க்கவாசல், தலை கொடுத்தான் தம்பி ஆகிய படங்களிலும்,
 ஜெமினியுடன் நீதிபதி, சதாரம் ஆகிய படங்களிலும் கே.ஆர்.ஆர். சேர்ந்து நடித்துள்ளார்.

*கிருஷ்ண லீலா என்ற நாடகத்தில் இவர் கிருஷ்ணனாக நடித்தார். இந்த நாடகத்தில் இவருடன் ருக்மணியாக நடித்த கல்யாணியை இவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இவரின் துணைவியார் கே.ஆர்.ஆர். கல்யாணி, கோழி வளர்ப்பு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர்களுக்கு 4 மகள்களும் 1 மகனும் உள்ளனர்.

*அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா ஆகிய நான்கு தமிழக முதலமைச்சர்களுடன் கலையுலகத் தொடர்பு கொண்டவர் கே.ஆர்.ராமசாமி. அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்தில் உருவான வேலைக்காரி, சொர்க்கவாசல், ஓர் இரவு, எதையும் தாங்கும் இதயம் ஆகிய படங்களிலும், எம்.ஜி.ஆர். நடித்த அரச கட்டளை, நம்நாடு, நாடோடி ஆகிய படங்களிலும், ஜெயலலிதா நடித்த அரச கட்டளை, நம்நாடு ஆகிய படங்களிலும், வி.என்.ஜானகி நடித்த வேலைக்காரி படத்திலும் கே.ஆர்.ராமசாமி நடித்துள்ளார்.

* திராவிட இயக்கப் பிரமுகர்களான கண்ணதாசன் வசனம் எழுதிய கன்னியின் சபதம் படத்திலும், இராம.அரங்கண்ணல் வசனம் எழுதிய செந்தாமரை படத்திலும், முரசொலி மாறன் திரைக்கதை வசனம் எழுதிய தலை கொடுத்தான் தம்பி படத்திலும் கே.ஆர்.ராமசாமி நடித்துள்ளார். மேலும், கண்ணதாசனும் ஏ.கே.வேலனும் சேர்ந்து வசனம் எழுதிய சுகம் எங்கே என்ற படத்திலும் கே.ஆர்.ராமசாமி நடித்துள்ளார்.

*எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி ஆகிய நான்கு திராவிட இயக்க நடிகர்களில், நடித்தும் பாடவும் கூடியவராக விளங்கியவர் கே.ஆர்.ராமசாமி மட்டுமேயாவார்.

*இவர் நன்றாக நடித்து சொந்தக் குரலில் பாடக்கூடியவராக இருந்தும், இரு பாடல் காட்சிகளில் இவருக்கு வேறு பின்னணிப் பாடகர்கள் குரல் கொடுத்திருப்பது ஒரு வியப்பான சினிமா வரலாறாக உள்ளது. "அவன் அமரன்' படத்தில் வான்மதி நீயறிவாய் என்ற பாடல் காட்சியில் கே.ஆர்.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்துள்ளார். தலை கொடுத்தான் தம்பி படத்தில் கதை கதையாம் காரணமாம் என்ற பாடல் காட்சியில் கே.ஆர்.ஆருக்கு ஏ.எல்.ராகவன் குரல் கொடுத்துள்ளார்.

* நடிப்பிசைப் புலவர் பெண் வேடமிட்டு நடித்த ஒரே படம் நீதிபதி என்ற படம் மட்டுமே. பெண் வேடமிட்ட நடிப்பிசைப் புலவரை, காதலிக்கும் காதலனாக நடித்தவர் டி.எஸ்.பாலையா.

*குமாஸ்தாவின் பெண் படத்தை இயக்கிய பி.என்.ராவ் என்ற இயக்குநர், படப்பிடிப்பின் போது மது மயக்கத்திலேயே இருப்பாராம். கலைஞர்களை மதிக்காமல் கெடுபிடியுடன் நடந்து கொண்டு சர்வாதிகாரம் செய்வாராம். பி.என்.ராவ் இப்படி நடந்துகொண்டதால், இவரைப் பழிவாங்கும் நோக்கில் ஒரு காரியம் செய்தார் வசனம் எழுதிய டி.கே.முத்துசாமி. பி.என்.ராவ் என்ற இயக்குநரின் பெயரை இடவலமாக்கி வி.பி.வார் என்று ஒரு நகைச்சுவை பாத்திரத்தை இப்படத்தில் உருவாக்கினார் டி.கே முத்துசாமி. இவ்வேடத்தில் கே.ஆர்.ஆர். நடித்தார். விஜயனுக்கு கைவராத வில்வித்தையா... நடிப்பிசைப் புலவருக்கு கைவராத நடிப்பா... வி.பி.வார் வேடத்தில் நடித்து நையாண்டி செய்து பி.என்.ராவை ஒரு கை பார்த்து விட்டார் கே.ஆர்.ஆர். இதைப் பற்றி அறிஞர் அண்ணா குடியரசு பத்திரிக்கையில் சிறப்பாக ஒரு விமர்சனமும் செய்துள்ளார்.

*சிரிப்பு நடிகர் வீரப்பன் நகைச்சுவை வசனம் எழுதுவது போல, கே.ஆர்.ஆர். நடித்த பில்ஹணா படத்தின் நகைச்சுவை பகுதி வசனங்களை, சிரிப்பு நடிகர் பிரண்ட் ராமசாமி எழுதியுள்ளார்.

*கிருஷ்ண பக்தி படத்தின் கதாநாயகன் பி.யு.சின்னப்பா ஆனாலும், கிருஷ்ணனாக நடித்தது நடிப்பிசைப் புலவர்தான். நீதிபதி படத்தில் ஜெமினி கணேசன் நீதிபதி, கே.ஆர்.ஆர். குற்றவாளி. காஞ்சனா படத்தில் கே.ஆர்.ஆருக்கு மைத்துனராகவும், தலை கொடுத்தான் தம்பி படத்தில் தந்தையாகவும் நடித்துள்ளார் ஆர்.எஸ்.மனோகர். துளி விஷம் படத்தில் நடிப்பிசைப் புலவர் நாயகனாகவும், சிவாஜி கணேசன் வில்லனாகவும் நடித்துள்ளார்கள்.

*இவர் முதன் முதலில் நடித்த மேனகா (1935) படத்தில் ஒரு பிச்சைக்காரனாக சிறிய வேடத்தில் நடித்தார். அடுத்து வந்த மேனகா (1955) படத்தில் கதாநாயகனாக நடித்தார். இரண்டும் ஒரே கதைதான்.

*பம்மல் சம்மந்த முதலியாரின் மனோகரா கதையானது, திரைப் படமாக தயாரிப்பதற்கு முன்பு, மனோகரா என்ற பெயரிலேயே நாடகமாக நடிக்கப் பட்டது. நாடகத்தில் மனோகரனாக கே.ஆர்.ஆரும், மனோகரனின் தாயார் பத்மாவதியாக சிவாஜி கணேசனும் நடித்தனர். பின்பு, மனோகரா நாடகம் படமாக உருவாக்கப்பட்டபோது, படத்தில் மனோகரனாக சிவாஜி கணேசனும், மனோகரனின் தாயார் பத்மாவதியாக பி.கண்ணாம்பாவும் நடித்தனர். மேனகா கதை நாடகமாக நடிக்கப்பட்டபோது, நாடகத்தில் மேனகையாக நடித்து, நாயகர் பட்சமடி எனக்கது ஆயிரம் லட்சமடி, என்ற மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பாடலைப் பாடி நன்றாக நடிப்பாராம் கே.ஆர்.ஆர்.

*கலைவாணர் தமது என்,எஸ்.கே. நாடக சபாவின் நிர்வாகத்தை கே.ஆர்.ஆரிடம் ஒப்படைத்திருந்தார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான கே.ஆர்.ஆர். சபாவை சரிவர நடத்தவில்லை. ஒரு நாள் சபாவில் மது மயக்கத்திலிருந்த நடிப்பிசைப் புலவரை, கன்னத்தில் அறைந்து விட்டார் கலைவாணர். அதுவரை யாரையுமே கைநீட்டி அடிக்காத கலைவாணர், தேம்பித் தேம்பி அழுத நடிப்பிசைப் புலவரைப் பார்த்து, "உனது வளர்ச்சிக்காகத்தாண்டா இந்த நாடக சபாவை நடத்துகிறேன். நீ இப்படி இருக்கிறாயே' என்று சொல்லிவிட்டு, தாம் அணிந்திருந்த வைரக்கடுக்கன்களை கழட்டி நடிப்பிசைப் புலவருக்கு மாட்டி விட்டார்.

*அறிஞர் அண்ணா தனக்காக எழுதி வைத்திருக்கும் நாடக ஆக்கங்களை பெற்றுச் செல்வதற்காக காஞ்சிபுரம் செல்வார் கே.ஆர்.ஆர். அப்படி அண்ணாவை சந்திக்க செல்லும் சமயத்தில் கூட மது மயக்கத்தில் செல்வார் என்று சொல்கிறார்கள், அண்ணா நடத்திய திராவிட நாடு சஞ்சிகையில் பணிபுரிந்தவர்கள். அண்ணாவும் தமது செல்லப் பிள்ளை கே.ஆர்.ஆரை கண்டித்து உள்ளார். நல்ல சாரீரம் உள்ள நடிப்பிசைப் புலவர் மதுவுக்கு அடிமையானது, அவரது சரீரத்துக்கு மட்டுமின்றி சினிமா சரித்திரத்திற்கும் இழப்புதான்.

*சொர்க்க வாசல் படமானது தணிக்கை குழுவினரின் பார்வைக்குச் சென்றபோது அப்படத்தில் உள்ள "எங்கே சொர்க்கம்' என்ற பாடலை தணிக்கை குழுவினர் நீக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதாவது அப்பாடலில் வரும் "ஆத்திகம் எது நாத்திகம் எது அறிந்து கொள்வீரே' என்ற வரிகளைக் கடுமையாக ஆட்சேபித்தார்கள் தணிக்கை குழுவினர். அதனால் அப்பாடலுக்குப் பதிலாக "ஆகும் நெறியெது ஆகா நெறியெது' என்ற பாடல் உருவாக்கப் பட்டு பின்பு படத்தில் இணைக்கப்பட்டது. இம்மாதிரியான (படத்தில் இடம் பெறாமல் இசைத் தட்டில் மட்டும் உள்ள) பாடல்களை, இலங்கை வானொலியில் "மலர்ந்தும் மலராதவை' என்ற தலைப்பில் ஒலிபரப்புவார்கள்.

*கே.ஆர்.ராமசாமி நடித்த 26 படங்களில் 16 படங்களில் மட்டும் மொத்தம் 45 பாடல்கள் பாடியுள்ளார். மேனகா (1935), குமாஸ்தாவின் பெண், பூம்பாவை, பில்ஹணா, கங்கணம், கிருஷ்ண பக்தி, தலை கொடுத்தான் தம்பி, நாடோடி, அரச கட்டளை, நம் நாடு ஆகிய 10 படங்களில் இவர் பாடல்கள் பாடவில்லை. இவர் பாடய 45 பாடல்களில் இவர் தனித்து 29 பாடல்களும், மற்ற பாடகர்- பாடகியருடன் சேர்ந்து 19 பாடல்களும் பாடியுள்ளார். "எதையும் தாங்கும் இதயம்' படத்தில், உள்ளம் தேடாதே என்று சொல்லுதே என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து கே.ஆர்.ஆர். பாடியுள்ளார்.
 
கே.ஆர்.ராமசாமியுடன் நடித்த நடிகைகளும் படங்களும்
வி.என்.ஜானகி (வேலைக்காரி), மாலினி (தலை கொடுத்தான் தம்பி), லலிதா (மேனகா, ஓர் இரவு, காஞ்சனா), பத்மினி (சொர்க்கவாசல், காஞ்சனா), டி.ஆர்.ராஜகுமாரி (விஜயகுமாரி), அஞ்சலிதேவி (கன்னியின் சபதம்), டி.கிருஷ்ணகுமாரி (துளி விஷம்), சாவித்திரி (சுகம் எங்கே).
கே.ஆர்.ராமசாமியுடன் நடித்த நடிகர்களும் படங்களும்
பி.யு.சின்னப்பா (கிருஷ்ண பக்தி), ஏ.நாகேஸ்வரராவ் (ஓர் இரவு), என்.எஸ்.கிருஷ்ணன் (பூம்பாவை, கிருஷ்ண பக்தி), எம்.ஆர்.ராதா (எதையும் தாங்கும் இதயம்), டி.எஸ்.பாலையா (நீதிபதி, விஜயகுமாரி, வேலைக்காரி, ஓர் இரவு, அவன் அமரன், செல்லப் பிள்ளை, சதாரம்), கே.ஏ.தங்கவேலு (கன்னியின் சபதம், செல்லப் பிள்ளை, சுகம் எங்கே, செந்தாமரை), சந்திரபாபு (சுகம் எங்கே, செந்தாமரை), எஸ்.வி.ரங்காராவ் (துளி விஷம்), எஸ்.வி.சஹஸ்ரநாமம் (நீதிபதி), எஸ்.ஏ.அசோகன் (கன்னியின் சபதம்), எம்.என்.நம்பியார் (விஜயகுமாரி, வேலைக்காரி, கன்னியின் சபதம்), ஆர்.எஸ்.மனோகர் (காஞ்சனா, தலை கொடுத்தான் தம்பி), பி.எஸ்.வீரப்பா (சொர்க்க வாசல், சுகம் எங்கே)
கே.ஆர்.ராமசாமி நடித்த படங்கள்
மேனகா (1935), குமாஸ்தாவின் பெண் (1941), பூம்பாவை (1944), தெய்வநீதி (1947), பில்ஹணா (1948), கங்கணம் (1948), கிருஷ்ண பக்தி (1949), வேலைக்காரி (1949), விஜயகுமாரி (1950), ஓர் இரவு (1951), காஞ்சனா (1952), சொர்க்கவாசல் (1954), துளிவிஷம் (1954), சுகம் எங்கே (1954), மேனகா (1955), செல்லப்பிள்ளை (1955), நீதிபதி (1955), சதாரம் (1956), கன்னியின் சபதம் (1958), அவன் அமரன் (1958), தலை கொடுத்தான் தம்பி (1959), செந்தாமரை (1962), எதையும் தாங்கும் இதயம் (1962), நாடோடி (1966), அரச கட்டளை (1967), நம்நாடு (1969).
அண்ணாவின் செல்லப்பிள்ளை கே.ஆர். ராமசாமி நினைவலைகள்
திரைப்படத்தை சக்தி வாய்ந்த ஊடகமாகப் பார்த்த அரசியல் தலைவர்களுள் அண்ணாவும் ஒருவர். திராவிட இயக்கத்துக்கு அது தேவை என்று கருதினார். அவர் திரைப்படங்களுக்கு எழுதியது குறைவே. ஆனால், அவரது திரை எழுத்து தமிழ் சீர்திருத்த சினிமாவுக்கு உரமாக அமைந்தது. அப்படி அவர் முதன்முதலில் கதை, வசனம் எழுதிய படம் ‘வேலைக்காரி’. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து புகழின் உச்சியைத் தொட்டவர்தான் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி. அண்ணாவின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட கே.ஆர். ஆரின் கலைவாழ்க்கை தொடங்கியது ஏழு வயதில்.
அண்ணாவின் பார்வையில்
ஒருமுறை கே.ஆர். ராமசாமி பற்றி அண்ணா கூறும்போது, “நண்பர் கே.ஆர். ராமசாமி கலை உலகில் ஒரு கருவூலம். காசுக்காக மட்டுமே நடிக்காத ஒரு கடமை வீரர். நிலம் பிளந்து விழ நேர்ந்தாலும் நெஞ்சம் குலையாத ஒரு கொள்கைத் தங்கம். எனக்கும் அவருக்கும் ஏற்பட்டுள்ள அன்பும் பிணைப்பும் எளிதிலே அறுந்து விழக்கூடிய வைக்கோல் வடம் அல்ல. எப்போதுமே அறுந்துவிடாத எஃகு கம்பி, என்னைப் பார்க்காமல் அவரோ, அவரைப் பார்க்காமல் நானோ இருக்க முடியாத ஒரு நட்புச் சங்கிலி எங்களைப் பிணைத்திருக்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பாசறையிலே சேர்ந்து அவருடைய எழுச்சியூட்டும் இலட்சியங்களைப் பரப்பும் எழுத்தாளனாக, பேச்சாளனாக இருந்துவந்த என்னை முதன்முதலில் கலையுலகம் பற்றியும் சிந்திக்க தூண்டியவர் நடிகமணி டி.வி. நாரயணசாமி. அந்தக் கலையார்வம் கருகிய மொட்டாகிவிடாமல் காய்த்திடவும், கனிந்திடவும் இன்று எனக்கு ஊக்கமூட்டுபவர், உதவிவருபவர், என் இனிய நண்பர்” என்று கே.ஆர். ராமசாமியை கொண்டாடியிருக்கிறார்.
ஆறு தகுதிகளும் நாடக வாழ்க்கை
நாடகக் கலையின் மூலம் மக்களைத் திருத்திப் பகுத்தறிவுப் பாதைக்குத் திருப்பிய முதல் நடிகர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி. கும்பகோணத்துக்கு அருகே ‘அம்மாசத்திரம்’ என்ற சிற்றூரில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இராமபத்திர செட்டியார், குப்பம்மாள் ஆகியோருக்கு 14.4.1914-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த கே.ஆர். ராமசாமி அவர்கள் தமது ஏழாவது வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடிகனாகச் சேர்ந்தார்.
ஆறு ஆண்டுகள் தொடர்ந்து நடித்தார். அந்த காலத்தில் பாய்ஸ் கம்பெனியில் நடிகனாகச் சேர்வதற்கு ஆறு தகுதிகள் தேவை. 1. வயது 2. தோற்றப் பொலிவு 3. குரல் வளம் 4. பாடும் திறன் 5. இசை ஆர்வம் 6. நடிப்புத் திறன். இவை ஆறும் நிரம்பிய ஆணழகனாக ராமசாமி விளங்கியதால் நாடக கம்பெனியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சின்னச் சின்ன வேடங்கள் வழியே கதாநாயகனாக உயர்ந்து பெரும் புகழ் பெற்றார்.
திரைப் பிரவேசம்
நாடக கம்பெனியிலிருந்து ஒரு கட்டத்தில் விலகிய கே.ஆர். ராமசாமி திரைக்கலையின் வீச்சைப் புரிந்துகொண்ட அதில் ஈடுபட முன்வந்தார். அதே நேரம் நாடக மேடையை விடவும் அவருக்கு மனமில்லை. டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற நாடகமான ‘குமாஸ்தாவின் பெண்’ திரைவடிவம் பெற்றது. அப்படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானார் கே.ஆர்.ஆர். அந்தப் படத்தின் துணை இயக்குநர்களாக பணியாற்றிய இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு பின்னாளில் ‘பூம்பாவை’என்ற படத்தை இயக்கினார்கள். அவர்களுடைய பரிந்துரையினால் அந்தப் படத்தின் கதாநாயகன் வாய்ப்பு கே.ஆர்.ராமசாமிக்குக் கிடைத்தது. இவருக்குப் படத்தில் ஜோடியாக நடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம்.
கதாநாயகனாக நடித்த முதல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘தெய்வ நீதி’, ‘கிருஷ்ண பக்தி’ ‘கங்கணம்’ஆகிய படங்களில் நடித்தார். எல்லாப் படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. திரைப்படத்துக்கு இணையாக நாடகம் செழித்து நின்றதால் பக்தி நாடகங்களை விடுத்து சமூக நாடகங்களில் நடிக்கத் தயாரானார் கே.ஆர். ராமசாமி. கலைவாணர் என்.எஸ்.கே. மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரைச் சூட்டி ‘கிருஷ்ணன் நாடக சபா’ என்ற பெயரில் சொந்தமாக நாடகக் குழுவைத் தொடங்கினார்.
பெரியாரின் திராவிட இயக்கக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட கே.ஆர். ராமசாமிக்கு அண்ணாவின் நட்பு கிடைத்தது. இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். கே.ஆர். ராமசாமி நடிப்பதற்காகவே ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகிய நாடகங்கள் எழுதினார் அண்ணா. பகுத்தறிவுக் கருத்துகளைத் தீயாகப் பரப்பிய இந்த இரண்டு நாடகங்களும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.
“அண்ணாவின் நீண்ட வசனங்களை உணர்ச்சி ததும்பப் பேசி அதற்கு மெருகூட்டியவர் கே.ஆர். ராமசாமி. புராண, சரித்திர நாடகங்களே வெற்றி பெறும் என்றிருந்த காலகட்டத்தில், ஓர் இரவு, வேலைக்காரி ஆகிய நாடகங்களைத் தொடர்ந்து எட்டு மாதங்கள் நடத்தி சுயமரியாதைக் கருத்துகளை மக்களிடம் எடுத்துச்செல்வதில் வெற்றி கண்டவர்” என்று திமுக தலைவர் கருணாநிதி, கே.ஆர். ராமசாமியைப் பற்றி நினைவுகூர்ந் திருக்கிறார்.
மறுப்பும் ஏற்பும்
வேலைக்காரி நாடகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் அதைத் திரைப்படமாகத் தயாரிக்கும் உரிமையை ஜூபிடர் நிறுவனம் வாங்கியது. நாடகத்தில் நடித்த கே.ஆர். ராமசாமியையே நாயகனாகவும் ஒப்பந்தம் செய்தது. நண்பருக்காக அண்ணா முதல்முறையாகத் திரைக்கதை, வசனம் எழுதினார். கே. ஆர். ராமசாமிக்கு வி.என். ஜானகி ஜோடியாக நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்று 100 நாட்கள் ஓடியது.
படத்தின் வெற்றியைக் கண்ட என். டி. ராமராவ் அதன் தெலுங்கு மறுஆக்கத்தில் விரும்பி நடித்தார். இந்தியிலும் வேலைக்காரி மறுஆக்கம் செய்யப்பட்டது. வேலைக்காரியின் இந்திப்பட மறு ஆக்கத்தை வாங்கி வெளியிட்ட இந்திப்பட விநியோகஸ்தர் தாராசந்த், அண்ணாவின் அறிவாற்றலைப் புகழ்ந்து பேசிப் பேட்டியளித்தார். அது இந்திப் பத்திரிகைகளில் வெளியானது.
வேலைக்காரி படத்தின் வீச்சைக் கண்ட கே. ஆர். ராமசாமி புராண இதிகாசப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார். ‘காஞ்சனா’, ‘சுகம் எங்கே’, ‘செல்லப்பிள்ளை’, ‘நீதிபதி’ ‘அவன் அமரன்’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கே.ஆர். ஆர் கடைசியாக நடித்த படம் ‘நம் நாடு.’
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அது எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்தபோது கலையுலகின் சார்பாக முதல் மேலவை உறுப்பினராகும் (எம்.எல்.சி) வாய்ப்பைப் பெற்ற முதல் நடிகர். தோழர் அண்ணாதுரை என்று அழைக்கப்பட்டுவந்தவரை ‘அறிஞர் அண்ணா’ என்று அழைத்திடுவதற்குக் காரணம் கே.ஆர்.ஆர்தான். ‘ஓர் இரவு’ நாடகம் தஞ்சையில் அரங்கேறியபோது ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரத்தில் கதை உரையாடல் - அறிஞர் அண்ணா என்று போட்டு விளம்பரம் வெளியிட்டவர் இவர்தான்.
திமுகவின் வளர்ச்சிக்காகத் தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் வாரி வழங்கிய கே.ஆர்.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவை சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை ‘திராவிட இயக்கத் தொடர்பியலின் கதாநாயகன்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கருத்தரங்காக வரும் 05.08.15 அன்று கொண்டாடுகிறது.
நன்றி - விக்கிபீடியா ,சினிமா எஸ்பிரஸ் ,தி இந்து தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக