செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

நடிகர் டி. எஸ். பாலையா பிறந்த தினம் ஆகஸ்ட் 23, 1914 .


நடிகர் டி. எஸ். பாலையா  பிறந்த தினம் ஆகஸ்ட் 23, 1914 .

டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். காதலிக்க நேரமில்லை , ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். ‘‘பதி பக்தி’’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். ‘‘ஆனந்த விகடன்’’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘‘சதிலீலாவதி’’ என்ற கதையை படமாக்க அவர் தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘பதிபக்தி’ நாடகக்கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. நாடகத்தில் எந்த மாதிரியான வேடத்தில் பாலையா நடித்தாரோ, அதே மாதிரியான வேடத்தில் அவரை 1936 இல் வெளியான ‘‘ சதிலீலாவதி ’’யில் நடிக்க வைத்தார் மருதாசலம் செட்டியார். எல்லிஸ் ஆர். டங்கன் இந்தப்படத்தை இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார்.
‘‘சதிலீலாவதி’’க்கு பிறகு பாலையா நடித்த படம் ‘‘இரு சகோதரர்கள்’’. இந்தப்படத்தையும் எல்லிஸ் ஆர். டங்கனே இயக்கினார். இந்தப்படத்திலும் பாலையாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. 1937–ம் ஆண்டில் ‘‘சதி அனுசுயா’’ என்ற படத்தில் நடித்தார்.
1937 இல் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதியில்’ வில்லனாக நடித்திருந்தார், பாலையா. எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்த இந்தப்படம், மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. பிறகு ‘பம்பாய் மெயில்’, ‘உத்தமபுத்திரன்’ (பி.யூ.சின்னப்பா), ‘பூலோக ரம்பை’, ‘ஆர்யமாலா’, ‘பிருதிவிராஜன்’, ‘மனோன்மணி’, ‘ஜகதலப்பிரதாபன்’, ‘சாலி வாஹனன்’, ‘பர்மா ராணி’, ‘மீரா’ முதலிய படங்களில் நடித்தார்.
1946–ம் ஆண்டு, பாலையாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வருடமாகும். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘‘சித்ரா’’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக நடித்தவர் கே. எல். வி. வசந்தா . இந்தப்படத்திற்கு பிறகு பாலையா நடித்த படம் ‘வால்மீகி’. ஹொன்னப்ப பாகவதரும், டி.ஆர்.ராஜகுமாரியும் இணைந்து நடித்த இப்படத்தில், பாலையா வில்லனாக நடித்தார்.
பிறகு, 1947–ம் ஆண்டு பாலையா மீண்டும் கதாநாயகனாக நடித்த படம் ‘‘செண்பகவல்லி’’. இதில் கதாநாயகியாக நடித்தவர் எம். எஸ். விஜயாள். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரியில் வில்லனாக நடித்தார் பாலையா. இருவரும் போடும் கத்திச்சண்டை படத்தின் சிறப்பு அம்சமாக விளங்கியது.
ஜூபிடர் தயாரிப்பான ‘மோகினி’ என்ற படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர். மற்றொருவர் பாலையா. பாலையாவின் ஜோடி மாதுரி தேவி. பிறகு ‘மாரியம்மன்’, ‘நாட்டிய ராணி’, ‘விஜயகுமாரி’, ‘ஏழைபடும்பாடு’, ‘சந்திரிகா’ முதலிய படங்களில் நடித்தார்.
1950–ம் ஆண்டு பட்சிராஜா ஸ்டூடியோ ‘‘பிரசன்னா’’ என்ற மலையாள படத்தை தயாரித்தனர். அதில், லலிதா கதாநாயகியாகவும் பத்மினி இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்தனர். லலிதாவுக்கு ஜோடியாக டி.எஸ்.பாலையா நடித்தார்.
சொந்தக்குரலில் பாட்டு
பாலையாவுக்கு நல்ல குரல் வளம் உண்டு. ஆரம்பக்காலத்தில், பல படங்களில் அவர் சொந்தக்குரலில் பாடியுள்ளார். ‘‘பிரசன்னா’’ விலும் ஒரு மலையாளப்பாடலை சொந்தக் குரலில் பாடினார்.
நடித்த திரைப்படங்களின் பட்டியல் (முழுமையானதன்று)
1937 - 1940
1. அம்பிகாபதி (1937)
2. பம்பாய் மெயில் (1939)
3. உத்தம புத்திரன் (1940)
4. பூலோக ரம்பை (1940)
1941 - 1950
1. ஆர்யமாலா (1941)
2. மனோன்மணி (1942)
3. பிருத்விராஜன் (1942)
4. ஜகதலப் பிரதாபன் (1944)
5. மீரா (1945)
6. ரிடர்னிங் சோல்ஜர் (1945)
7. வால்மீகி (1946)
8. ராஜகுமாரி (1947)
9. கடகம் (1947)
10. மாரியம்மன் (1948)
11. மோகினி (1948)
12. பிழைக்கும் வழி (1948)
13. சண்பகவல்லி (1948)
14. பிழைக்கும் வழி (1948)
15. வேலைக்காரி (1949)
16. நாட்டிய ராணி (1949)
17. ஏழை படும் பாடு (1950)
18. விஜயகுமாரி (1950)
19. சந்திரலேகா (1950)
1951 - 1960
1. ஓர் இரவு (1951)
2. மணமகள் (1951)
3. வனசுந்தரி (1951)
4. அந்தமான் கைதி (1951)
5. சுதர்ஸன் (1951)
6. வேலைக்காரன் (1952)
7. பொன்னி (1953)
8. ஆசை மகன் (1953)
9. அன்பு (1953)
10. ரத்த பாசம் (1954)
11. தூக்குத் தூக்கி (1954)
12. நண்பன் (1954)
13. செல்லப்பிள்ளை (1955)
14. மாமன் மகள் (1955)
15. காலம் மாறிப்போச்சு (1956)
16. ரம்பையின் காதல் (1956)
17. புதையல் (1957)
18. அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)
19. புதுமைப்பித்தன் (1957)
20. புது வாழ்வு (1957)
21. அன்பு எங்கே (1957)
22. பதி பக்தி (1958)
23. புதுமைப்பெண் (1959)
24. மரகதம் (1959)
25. பார்த்திபன் கனவு (1960)
26. எங்கள் செல்வி (1960)
27. களத்தூர் கண்ணம்மா (1960)
28. கவலை இல்லாத மனிதன் (1960)
29. சவுக்கடி சந்திரகாந்தா (1960)
30. பாக்தாத் திருடன் (1960)
31. மகாலட்சுமி (1960)
1961 - 1970
1. காதலிக்க நேரமில்லை (1964)
2. கறுப்புப் பணம் (1964)
3. பணம் படைத்தவன் (1965)
4. இதயக்கமலம் (1965)
5. திருவிளையாடல் (1965)
6. ஊட்டி வரை உறவு (1967)
7. தில்லானா மோகனாம்பாள் (1968).


டி.எஸ். பாலையா நூற்றாண்டு: எம்.ஜி.ஆர். பொறாமைப்பட்ட நடிகர்!

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண். அங்கே பிரபலமாக இருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்துவிடத் துடித்தவருக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகி, பல இளம் நடிகர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த ‘பாலமோஹன சபா’வில் இடம் கிடைத்தது.
அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.
எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.
பி.யூ.சின்னப்பா நடித்த ஆரிய மாலா (1941), ஜகதலப் பிரதாபன் (1944) போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார் பாலையா. மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர்தான் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.
மீட்டுவந்த சுந்தரம்
ஒரு குறிப்பிட்ட காலத்தில் விரக்தியில் சாமியாராகப் போய் விட்டார் பாலையா. பாண்டிச்சேரிக்குப் பட வேலையாகச் சென்றிருந்த மாடர்ன் தியேட்டர் டி.ஆர். சுந்தரம் கண்ணில் பட்டிருக்கிறார். ‘யார்டா அந்தச் சாமியார். பாலையா மாதிரி தெரியுதே’ என்று ‘கண்டு’ அவரைப் ‘பிடித்து’ அந்தக் கணமே அவரை வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றிக்கொண்டு சேலம் வந்து சேர்ந்து விட்டார். அடுத்தநாளே அங்கே படப்பிடிப்பு நடந்துவந்த ‘பர்மா ராணி’ என்ற படத்திலும் நடிக்க வைத்து விட்டாராம்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சித்ரா’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். ஒரு மலையாளப் படம் ‘ப்ரசன்ன’. லலிதா, பத்மினி நடித்த அந்த மலையாளப் படத்திலும் பாலையா கதாநாயகனாக நடித்தார். இதன் பிறகு பாலையா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார்.
முன்னோடிக் கதாபாத்திரம்
வேலைக்காரி (1949) படத்தில் பாலையா செய்த பகுத்தறிவாளன் பாத்திரம்தான் பின்னாட்களில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். செய்த பகுத்தறிவுக் கதாபாத்திரங்களுக்கு முன்னோடி என்று அசோகமித்திரன் சொல்வார். இதில் விசித்திரம் என்னவென்றால் பாலையா ஒரு பழுத்த காங்கிரஸ்வாதி! என்றாலும் பகுத்தறிவு இயக்கத்தின் அபிமானியாகவும் இருந்தார். திரையில் பகுத்தறிவு பீரங்கியாக இருந்த நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் கடைசி நாட்கள் வரை இணை பிரியாத நண்பராக இருந்தார்.
நகைச்சுவை வில்லன் முத்திரை
1956-ல் ‘மாமன் மகள்’ படத்தில் ஜெமினி,சாவித்திரி,சந்திரபாபு, டி.எஸ்.துரைராஜ் ஆகியோருடன் பாலையா நடித்தார். அதே வருடம் மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “அடடா! இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
“அரசே! நாங்கள் ‘பின் தொடர்ந்து’ போனோம்.ஆனால் அவர்கள் ‘முன் தொடர்ந்து’ போய்விட்டார்கள்!” என்பார்.
‘புதுமைப்பித்தன்’ (1957 ) படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். அப்போது, பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக் கூடியது அல்ல.
புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித 'மான' சாமான்களும் விற்கப்படும்” என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.
மாற்று இல்லாத குணச்சித்திரம்
குணச்சித்திர நடிப்பிலும் ரங்காராவ் போல உச்சத்தைத் தொட்டவர் பாலையா. பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது. ‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.
தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’
அடிமைப ்பெண் படத்தில் செங்கோடன் வில்லன் பாத்திரத்தை பாலையா செய்ய ஆசைப்பட்டார். அந்தப் பாத்திரத்தை எம்.ஜி.ஆர். தரவில்லை. அசோகன்தான் அந்தப் பாத்திரத்தில் நடித்தார்.
பாலையாவின் மூத்த மகன் சாய்பாபா திரையில் நாகேஷுக்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.
‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங்', ‘வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை' போன்ற பாடல்கள் சாய்பாபா பாடியவைதான்.
அப்பா வழியில் திரைக்கு நடிக்க வந்த அவரது மற்றொரு மகன் ஜூனியர் பாலையா. அப்படியே பாலையாவின் மற்றொரு நகலாக விளங்குகிறார்.
ஏழு பிள்ளைகளின் தந்தையான பாலையா 1972-ல் மறைந்தபோது அவருக்கு வயது 60. ரங்காராவ் போல இவரும் முதுமையைப் பார்க்காமலே தான் மறைந்தார். நடிப்புலகில் அவரது முன்மாதிரி என்றும் மறையாது.

பாலையாவுக்கு மாற்று இல்லை!
காலத்தை வெல்லும் தமிழ்ப்படங்களின் வரிசையில் 50 ஆண்டுகளைக் கொண்டாடி முடித்திருக்கிறது ’காதலிக்க நேரமில்லை’. ஒய்.ஜி.மகேந்திரனின் முன்முயற்சியில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘காதலிக்க நேரமில்லை’ பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மனோபாலா, இந்தப் படத்தின் மறுஆக்க உரிமையை வாங்கியும் அதைப் படமாக்க முடியவில்லை என்று அதற்கான காரணத்தைக் கூறியபோது, அரங்கமே அதிர்ந்தது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
“காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய சந்தோஷத்துடன், அந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீதரை பார்க்கச் சென்றேன். எனக்கு வாழ்த்துகள் சொன்ன அவர் நட்சத்திரங்களை தேர்வு செய்துவிட்டாயா என்றார். நான் இன்று பிரபலமாக இருக்கும் இளம் நட்சத்திரங்களின் பெயர்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வந்தேன். உடனே என்னை இடைமறித்த அவர், “எல்லாம் சரி.. பாலையா கேரக்டருக்கு யாரைப் போடப்போறே?” என்றார். நானும் அவர் முன்னால் அமர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் பாலையாவுக்கு மாற்றாக எனக்கு யாருமே தோன்றவில்லை. எனது தோல்வியை ஒப்புக்கொண்டு மறுஆக்க உரிமையை அவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டு வந்தேன்” என்றார்.


டி.எஸ்.பாலையா நூற்றாண்டு பிறந்தநாள் கட்டுரை!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களை எடுத்துக்கொண்டல் அதில் டி.எஸ்.பாலையாவுக்கு தனி ஒரு இடம் உண்டு! சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக, குணச்சித்திர நடிகராக, காமெடி நடிகராக கோலோச்சியவர் டி.எஸ்.பாலையா! அவருக்கு அன்றைய காலகட்டத்து பெரிய கதாநாயக நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இருந்தது மாதிரியான் புகழும், செல்வாக்கும் இருந்தது. இதற்கு காரணம், அவர் ஏற்று நடிப்பது எந்த வேடமாக இருந்தாலும் அதில் அவரது தனித்தன்மையான நடிப்பும், பங்களிப்பும் தான்! ஒரு சந்தர்பத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும்போது, ‘‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் டி.எஸ்.பாலைய்யாவும் ஒருவர்’’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த காலத்தில் சிவாஜியிடம் பாராட்டு வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று கூறுவார்கள்! அப்படிப்பட்ட நடிகர் திலகம் சிவாஜியே தன்னை பாராட்டியது குறித்து கேள்விப்பட்ட பாலையா, அது குறித்து தனது நண்பர்களிடம் கூறி மகிழ்ச்சியடைந்துள்ளார்! அது மாதிரி, பாலையா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் மிகவும் பிடித்த நடிகராக இருந்தார்! டி.எஸ்.பாலையாவை இன்னமும் நம் நினைவில் வைத்துக் கொள்ளும் படங்களாக அவர் நடித்த அம்பிகாப்தி, மதுரை வீரன், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் உட்பட பல படங்களை வரிசைப்படுத்தலாம். அப்பேர்பட்ட மாபெரும் கலைஞரான டி.எஸ்.பாலையா இந்த மண்ணில் பிறந்த நாள் இன்று! அதாவது 1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி பிறந்தார் பாலையா! அவர், இந்த பூவுலகில் 57 ஆண்டுகள் வாழ்ந்து 1972 ஜூலை 22-ஆம் தேதி காலமானார்! இன்று பாலையாவின் 100-ஆவது பிறந்த நாள்! இந்நாளில் அவரை நினைவு கூர்வதில் ‘டாப் 10 சினிமா’ பெருமிதம் அடைகிறது. அவரைப்பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை இன்றைய இளம் சினிமா ரசிகர்களுக்காக....
எவ்வளவுதான் மிகபெரிய நடிகர் நடிக்கும் படமாக இருந்தாலும் உடன் நடிக்கும் வில்லன் நடிகரோ அல்லது குணச்சித்திர நடிகரோ அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கும்போதுதான் அந்தக் காட்சியும் அந்தப்படமும் சிறப்பாகப் பேசப்படும். இன்றளவும் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் ஜொலித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைசிறந்த நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் வில்லனாகட்டும், அல்லது குணச்சித்திர வேடமாகட்டும் அதை சரிவிகித நகைச்சுவையுடன் கலந்து கொடுத்து தமிழ்த்திரையுலகில் 40 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள் மிகச்சிலரே. அதில் முதலிடம் பிடிப்பவர் பாலண்ணன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட டி.எஸ்.பாலையா!
டி.எஸ்.பாலையா திருநெல்வேலியைச் சேர்ந்தவர். நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் மதுரையில் ‘யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை’ நடத்திவந்த பாலகான நாடக கம்பெனியில் நடித்து வந்தார். அதை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் நுழைந்த இவர் நடித்த முதல் திரைப்படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய ‘சதிலீலாவதி’. 1934-ல் வெளிவந்த இந்தப் படத்தில் பாலையா வில்லனாக அறிமுகமானார். இதில்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும்கூட அறிமுகமானார்கள்.
1937ஆம் ஆண்டு எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ படத்தில் தளபதியாக வில்லன் வேடத்தில் டி.எஸ்.பாலையா நடித்தார். ஆரம்ப காலத்தில் பாலையாவுக்கு புகழ் தேடித்தந்த படம் இது. அதேபோல பி.யு.சின்னப்பாவின் பல படங்களில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்கள் அவரைத் தேடி வரத் தொடங்கின.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரி’யிலும் வில்லனாக நடித்தார் டி.எஸ்.பாலையா. இப்படத்தில் எம்.ஜி. ஆரும், பாலையாவும் போடுகின்ற கத்திச் சண்டை அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களிலும் சிவாஜி படங்களிலும் வில்லனாக நடித்தார் டி.எஸ்.பாலையா. மதுரைவீரன் படத்தில் ஆற்றில் விழுந்த பொம்மியைக் காப்பாற்றியதாக அவர் சொல்லும் கதையும் அதை அவர் சொல்லும் பாவனையும் இருக்கிறதே.. சிரிப்புக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தரும் காட்சி அது.
சிவாஜியுடன் பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, பாலும் பழமும் ஊட்டிவரை உறவு என நிறைய கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்த பட்ங்கள் தில்லானா மோகனாம்பாளும் திருவிளையாடலும். ‘திருவிளையாடல்’ படத்தில் இசையில் புகழ்பெற்ற ‘ஹேமநாத பாகவதர்’ எனும் பாடகர் வேடத்தில் நடித்திருப்பார் டி.எஸ். பாலையா. "ஒருநாள் போதுமா" என்ற பாடலைப் பாடும்போது பாலையா அப்பாடலுக்கு வாயசைப்பதும் பலவிதமான தலையசைப்பு, கையசைப்புடன் கூடிய அபிநயங்கள் காட்டுவதும் உண்மையிலேயே அவர்தான் அப்பாடலைப் பாடுகிறாரோ என்று பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் தவில் வித்துவானாக ரயிலில் அவர் அடிக்கும் கூத்துகளையும் அதற்கு சிவாஜி முறைக்கும்போதெல்லாம் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதும் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிடக்கூடிய காட்சிகளா..
அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தில் கதாநாயகன் கே. ஆர். ராசாமியின் நண்பனாக, முக்கிய வேடத்தில் பாலையா நடித்தார். அதுமட்டுமல்ல அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில் வில்லனாக நடித்தார். ஜெமினிகணேசனுடன் நடித்த பார்த்திபன் கனவு, ஜெயகாந்தன் இயக்கத்தில் நடித்த ‘யாருக்காக அழுதான்’ போன்ற படங்கள் டி.எஸ்.பாலையாவின் நடிப்பிற்கு கட்டியம் கூறின.
என்.எஸ். கிருஷ்ணனுக்குப் பிறகு பாகவதர், சின்னப்பா, எம்.ஜிஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த இன்னொரு நடிகர் டி.எஸ்.பாலையா மட்டுமே. 'மணமகள்' படத்தில் பாலையாவின் அபாரமான நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரையே அவருக்குப் பரிசளித்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
உலகப்போரை பின்னணியாக வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தயாரித்த ‘சித்ரா’ படத்தில் டி. எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக நடித்தவர் கே.எல்.வி.வசந்தா. பாலையா கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் ‘வெறும் பேச்சல்ல’ 1956-ல் வெளியான இப்படத்தில் பாலையாவுக்கு கௌபாய் வேடம். அவருக்கு ஜோடியாக நடித்தவர் நாட்டியப் பேரொளி பத்மினி.
ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை படமான ‘காதலிக்க நேரமில்லை’ பாலையாவின் படங்களில் மைல்கல் என்று சொல்ல்லாம்.. இரட்டைக் குரலில் பேசி அசத்துவதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் பாலையா ஒருவரே. இந்த யுக்தியை இப்படத்திலும் பாலையா கையாண்டிருப்பார். இன்றைக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் பெயரைச் சொன்னதும் உடனே நினைவிற்கு வருவது நாகேஷ் ஒரு மர்மக் கதையைச் சொல்ல அதைக்கேட்டு பாலையா பயந்து நடுங்கும் காட்சிதான். நகைச்சுவையின் உச்சகட்டமாக இந்தக் காட்சி அமைந்திருக்கும்.
‘தூக்கு தூக்கி’ படத்தில் சேட்ஜியாக வந்து நம்மள், நிம்மல் என தமிழ் பேசி அட்டகாசமாக நடித்திருப்பார். இன்று வரை தமிழ்ப் படங்களில் வடநாட்டு சேட் வேடத்தில் நடிப்பவர்கள் பாலையாவின் பாணியைத்தான் பின்பற்றி நடித்து வருகிறார்கள். அதேபோல கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியராக டி.எஸ் .பாலையா நடித்த பாமா விஜயம் அவருக்கு குணச்சித்திர நடிகராக மேலும் புகழ் சேர்த்தது.

நூற்றாண்டு நினைவு: காலத்தை வென்ற கலைஞன் டி.எஸ்.பாலையா - ஸ்பெஷல் ஸ்டோரி!

இயக்குனர் மற்றும் காமெடி நடிகர் ஒருவர், ஸ்ரீதர் இயக்கிய, காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய விரும்பினார். அதற்கான உரிமத்தை வாங்க அப்போது நோய்வாய்பட்டிருந்த ஸ்ரீதரை சென்று சந்தித்தார். அப்போது ஸ்ரீதர் "ஹீரோவாக யாரை போடுகிறாய்" என்று கேட்டார். முத்துராமன், ரவிச்சந்திரன் கேரக்டருக்கு இரண்டு இளம் ஹீரோக்களின் பெயரை சொல்லியிருக்கிறார். "நான் கேக்குறது ஹீரோவா யாரை போடப்பேறேன்னு" என்று திருப்பி கேட்டிருக்கிறார் ஸ்ரீதர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. முத்துராமனும், ரவிச்சந்திரனும் தானே ஹீரோக்கள் என்றார்.
"அடேய்... மடையா படத்தோட டைட்டில் கார்டை பார்த்தியா அதுல டி.எஸ்.பாலையா பேர்தான் முதல்ல வரும். அவர்தான் படத்தோட ஹீரோ. அவர் அளவுக்கு நடிக்கிறதுக்கு ஆளைக் கொண்டுவா ரீமேக் ரைட்ஸ் தருகிறேன்" என்றாராம். இன்று வரை அந்த இயக்குநர் கம் நடிகரால் பாலையாவின் இடத்தை நிரப்பும் நடிகரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது இல்லை எப்போதுமே கண்டுபிடிக்க முடியாது. காரணம் அவர் காலத்தை வென்ற மகத்தான குணசித்திர கலைஞர்.
அவரது நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிறது. அரசு கொண்டாடுமா? அல்லது சினிமா கொண்டாடுமா என்று தெரியாது. ஆனால் அந்த மகத்தான கலைஞனை மக்களுக்கு நினைவூட்டும் தார்மீக கடமை தினமலர் இணையதளத்திற்கு இருக்கிறது...
சர்க்கஸ் கலைஞனாக...
தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், சுண்டங்கோட்டை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் பாலையா. சின்ன வயதிலேயே கைதட்டலுக்கும், பாராட்டுக்கும் ஏங்கியவர். அதில் ஒரு மயக்கத்தை கண்டவர். எதையாவது செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவதில் அவருக்கு ஒரு மயக்கம் இருந்தது. கோவில் குளத்தில் மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பார். ஆற்றை இக்கரையிலிருந்து அக்கறைக்கு நீந்தி கடப்பார். முரட்டு காளைகளை அடக்குவார். எல்லாமே மற்றவர்களின் கைதட்டலுக்காக.
அப்போது தூத்துக்குடியில் ஒரு சர்க்கஸ் கம்பெனி முகாமிட்டிருந்தது. அதை பார்க்கப் போனார் பாலையா. அதில் சர்க்கஸ் கலைஞர்கள் வித்தை காட்டி முடித்ததும் எல்லோரும் கைதட்டுவதை பார்த்தார். நாமும் சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து வித்தை செய்தால் மக்கள் கைதட்டுவார்கள் என்று நினைத்தார். அந்த கம்பெனியில் வேலை கேட்டார் ஆனால் பாலையாவின் தோற்றத்தை பார்த்து கிண்டல் செய்தவர்கள் வேலை கொடுக்க மறுத்துவிட்டார்கள். மதுரையில் ஒரு சர்க்கஸ் கம்பெனி இருக்கிறது அதில் சேர்த்துக் கொள்வார்கள் என்று நம்பி வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் திருட்டு ரயிலேறி மதுரைக்கு வந்தார்.
நாடக கலைஞர்
அவர் தேடி வந்த சர்க்கஸ் கம்பெனி அங்கு இல்லை. அன்றிரவு மதுரை பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியவர். வயிற்று பிழைப்புக்காக கசாப்பு கடையில் வேலை செய்தார். அப்போது மதுரையில் நிறைய நாடக கம்பெனிகள் செயல்பட்டு வந்தது. தினமும் நாடகம் பார்க்க சென்று விடுவார். நாடகத்திற்கும் மக்கள் கைதட்டுவதை பார்த்து நாடக கம்பெனியில் சேர்ந்து விட முடிவு செய்தார். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இருந்து விலகிய சிலர் இணைந்து பாலமோஹன சபா என்ற ஒரு நாடக கம்பெனியை ஆரம்பித்தனர். அவர்களோடு இணைந்து கொண்டார் பாலையா. அவருக்கு கந்தசாமி முதலியார் என்ற குரு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். தனது 15வது வயதில் நாடக மேடை ஏறினார் பாலையா.
சினிமா நடிகர்
வெள்ளைக்கார இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் சதிலீலாவதி என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் பாலையாவின் நடிப்பு குருவான கந்தசாமி முதலியார். அப்போது அவரின் சிபாரிசின் பேரில் சதிலீலாவதியில் வில்லனாக அறிமுகமானார், பாலையா. அந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆரும் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். அந்த படத்தில் பாலையாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அப்போது சூப்பர் ஸ்டார்களாக இருந்த தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ஆகியோரின் படங்களில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். ஆரியமாலா, ஜகதலபிரதாபன் படங்கள் பாலையாவை உயர்த்திப் பிடித்தன.
ஹீரோவானார்
1937ம் ஆண்டு தியாகராஜ பாகவதருடன் பாலையா நடித்த அம்பிகாபதி படத்தில், பாகவதரும் பாலையாவும் போட்ட வாள் சண்டை மிகவும் பிரபலம். அந்த சண்டை காட்சிக்காகவே மக்கள் திரும்ப திரும்ப படத்தை பார்த்தார்கள். அதேபோல எம்.ஜி.ஆர். ஹீரோவாக அறிமுகமான ராஜகுமாரி படத்திலும் பாலையாதான் வில்லன். எம்.ஜி.ஆருடன் அவர் போட்ட வாள் சண்டையை இப்போது பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கும். மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் உலகப்போரை மையமாக வைத்து சித்ரா என்ற படத்தை தயாரித்தது. அதில் பாலையா ஹீரோவாக நடித்தார். நடனம் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த ராகிணி பத்மினி சகோதரிகள் மலையாளத்தில் பிரசன்ன என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்கள். அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாலையா. அதன் பிறகு ஹீரோவாக நடிக்கவில்லை. வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தார்.
தனிமுத்திரை
தனக்கென்று தனி மாடுலேஷன், டயலாக் டெலிவரி, மேனரிசம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார். வில்லனாக நடித்தாலும் சரி, காமெடியனாக நடித்தாலும் சரி, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தாலும் சரி அலட்டிக் கொள்ளாமல் நடிப்பார். அவர் வரும் காட்சிகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி உடன் நடித்தாலும் அவர்தான் தூக்கலாக தெரிவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி.
1949ம் ஆண்டு வெளிவந்த வேலைக்காரி படத்தில் பாலையா நடித்த பகுத்தறிவாளன் கதாபாத்திரம் தான் பின்னாளில் எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இன்றைக்கு வருகிற சிவகார்த்திகேயன் வரைக்கும் நடிக்கும் ஹீரோயிச கதாபாத்திரங்களுக்கு முன்னோடி. பஞ்ச் டயலாக்கெல்லாம் அப்பவே பாலையா பேசிவிட்டார். செந்தமிழ் பேசி நடித்துக் கொண்டிருந்த சினிமாவில், யதார்த்த தமிழை கொண்டு வந்தவர் பாலையா. சரித்திர படமாக இருந்தாலும் அவரது தமிழ் நடைமுறைத் தமிழாகத்தான் இருக்கும்.
மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆரை எதிர்க்க துணிவில்லாத தளபதி கேரக்டரில் நடித்திருந்த பாலையா "எப்பா இன்னிக்கு வெள்ளிக்கிழமை கத்திய கையால தொடக்கூடாதப்பா..." என்று சமாளிப்பார். எதிரிகளை கோட்டைவிட்டுவிட்டு "மன்னா நாங்கள் பின் தொடர்ந்து சென்றோம் அவர்கள் முன் தொடர்ந்து சென்று விட்டார்கள்" என்ற வசனம் காலத்தை கடந்தும் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும்போது அதை பலவித முகபாவங்களுடன் கேட்கும் அந்த நகைச்சுவை காட்சியை அடித்துக் கொள்ள இதுவரை எந்தப் படத்திலும் காமெடி காட்சி வரவில்லை.
பாகப்பிரிவினை படத்தில் தன் தம்பி எஸ்.வி.சுப்பையாவிடம் கண்ணீர் மல்க அவர் பேசும் காட்சி இப்போது பார்த்தாலும் கல் நெஞ்சையும் கலங்க வைக்கும்.
திருவிளையாடல் படத்தில் வித்யா கர்வமிக்க பாடகராக வந்து,"பாண்டிய நாட்டில் ஒரு விறகு வெட்டியின் பாட்டுக்கு இந்த ஹேமநாதன் அடிமையப்பா" என்று கலங்கி நிற்கும் காட்சியை இன்னொருவரால் செய்யவே முடியாது.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் அவர் தவில் வாசிக்கும் பாணி உண்மையான தவில் வித்வான்களையே கிரங்க வைத்தது. சண்முகசுந்தரத்தை (சிவாஜி) பாதுகாக்க அவர் காட்டும் அக்கறை நட்புக்கு அடையாளம். மோகனாம்பாளை சந்திக்க திருட்டுத் தனமாக செல்லும் சண்முகசுந்தரத்துக்கு பாதுகாப்பு வேண்டுமே என்று கருதி "தம்பி எனக்கு அங்க ஒரு சோடாக் கடைக்காரனை தெரியும் நானும் வர்றேன்" என்று கூடவே கிளம்புகிற காட்சி இன்றைய நட்பு காட்சிகளுக்கு முன்னோடி. இப்படி பாலையாவின் தனித்தன்மை வாய்ந்த கேரக்டர்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
வெல்ல முடியாத கலைஞன்
ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு பாலையாவை போட்டு விட்டார்கள். அன்று எம்.ஜி.ஆருக்கு பாலையா மீது கோபம். ஆனால் பின்னாளில் எம்.ஜி.ஆர்., நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் "அன்று பாலையா நடித்த கேரக்டரில் நான் நடித்திருந்தால் அந்த படம் தோற்றிருக்கும்" என்று எழுதினார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் சொன்னார் "நோ ஒன் கேன் ரீபிளேஸ் பாலையா" என்று. அவர் சொன்னது 100 ஆண்டுகளை கடந்தும் அப்படியே இருக்கிறது.



’சதி லீலாவதி’(1936) எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன்
எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா,
கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ’சதிலீலாவதி’ தான்.
ஆரியமாலா(1941), ஜகதலபிரதாபன்(1944) போன்ற படங்களில் கதாநாயகன் பி.யூ.சின்னப்பா. ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.
மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர் எம்.ஜி.ஆர்.
மீரா படத்தில் நடித்த கதாநாயகி எம்.எஸ்.சுப்புலட்சுமி,ரொம்ப சின்ன ரோல் செய்த எம்.ஜி.ஆர் இருவரும் பின்னால் பாரத ரத்னாவானார்கள்!
எம்.ஜி.ஆர் ஒரு நல்ல ரோல் கிடைத்து கல்கத்தாவுக்கு சூட்டிங் போன போது,பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட ரோல் பாலையாவுக்கு போய்விட்டது. எம்.ஜி.ஆருக்கு ஒரு சின்ன ரோல். அப்போது அவமானம், வேதனையால் துடித்த எம்.ஜி.ஆர் ”நான் ஏன் பிறந்தேன்” சுயசரிதையில்” அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாக செய்திருக்கமுடியாது” என்று எழுதினார்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் விரக்தியில் சாமியாராகப் போய் விட்டார். மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் ‘யார்டா அந்த சாமியார். பாலையா மாதிரி தெரியுதே” என்று ’கண்டு’ அவரை ’பிடித்து’ மீண்டும் திரைக்கு கொண்டு வந்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சித்ரா’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார்.ஒரு மலையாளப்படம் ’ப்ரசன்ன’. லலிதா பத்மினியும் நடித்த அந்த மலையாளப் படத்திலும் பாலையா கதாநாயகனாக நடித்தார்.
வேலைக்காரி (1949)படத்தில் பாலையா செய்த பகுத்தறிவாளன் ரோல் தான் பின்னால் எம்.ஜி.ஆர்,சிவாஜி.எஸ்.எஸ்.ஆர் செய்த திராவிட பகுத்தறிவு பாத்திரங்களுக்கு முன்னோடி என்று அசோகமித்திரன் சொல்வார்.
இதில் விசித்திரம் என்னவென்றால் பாலையா ஒரு பழுத்த காங்கிரஸ்வாதி!
1956ல் பாலையா மாமன் மகள் படத்தில் ஜெமினி,சாவித்திரி,சந்திரபாபு, டி.எஸ்.துரைராஜ் ஆகியோருடன் நடித்தார்.
அதே வருடம் மதுரை வீரன் படம்
எம்.ஜி.ஆருக்கு வில்லனாக. ஆக்ரோசமாக கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “ அடடா இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
”அரசே! நாங்கள் ”பின் தொடர்ந்து” போனோம்.ஆனால் அவர்கள் ”முன் தொடர்ந்து”போய்விட்டார்கள்!” என்பார்.
’புதுமைப்பித்தன்’ (1957 )படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். பாலையா குண்டாக கொழுகொழு என்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது.
புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித ’மான’ சாமான்களும் விற்கப்படும் “ என்று பிரித்து வாசிப்பார்.
பதிபக்தி(1958) படத்தில் சந்திரபாபுவை பார்த்து “யார்ரா இவன் குரங்குப்பய.ஒரு இடத்தில நிக்கமாட்டேங்கிறானே!” என்பார்.
குணச்சித்திர நடிப்பில் ரங்காராவ் போல உச்சத்தை தொட்டவர். பாகப்பிரிவினை(1959) படத்தில் பாகப்பிரிவினை செய்யும் செய்யும் காட்சியில் பாலையா,வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி.சுப்பையாவிடம் ஃப்ரேம் செய்யப்பட்ட தாய் தந்தையர் போட்டோவைக்காட்டி பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாவமன்னிப்பு (1961)படத்தில் அவருடைய சிறிய கதாபாத்திரம்.
பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அடிக்கும் லூட்டி.
நகைச்சுவை யின் அதிகபட்ச சாதனை
என்ன தான் முடிவு(1965) படத்தில் “ பாவி என்னை மறுபடியும் பிறக்கவைக்காதே,செய்த பாவம் தீரும் முன்னே இறக்கவைக்காதே.” பாடல் காட்சியில் அவருடைய confession.
'திருவிளையாடலில்’(1965) வித்துவ செருக்கை அழகாக காட்டி நடித்த “ ஒரு நாள் போதுமா? நான் பாட இன்றொரு நாள் போதுமா “ என்ற பாடல் காட்சியும் ”என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?” என்று எள்ளி,ஏளனமாக அவர் பேசிய வசனமும் “ பாட்டும் நானே, பாவமும் நானே” பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும். கர்வம்,எகத்தாளம்,மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் கண்ட விசேச பரிமாணம்.
பெற்றால் தான் பிள்ளையா?(1966)படத்தில் ஏட்டு வேடத்தில் அவர் டயலாக்
“ ஆத்திரி குடுக்கை!”
பாமா விஜயம் (1967) ”வரவு எட்டணா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா, கடைசியில் துந்தனா’
ஊட்டி வரை உறவு மீண்டும் ’ஸ்ரீதர்- நாகேஷ்-பாலையா’ காம்பினேசன்.
தில்லானா மோகனாம்பாள் 1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். அட்டகாசமான நடிப்பு.
’தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன்.அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான்.பித்த உடம்பா.....தூக்கிடுச்சி!’
அடிமைப்பெண் படத்தில் செங்கோடன் வில்லன் பாத்திரத்தை பாலையா செய்ய ஆசைப்பட்டார். அந்த ரோலை எம்.ஜி.ஆர் தரவில்லை. அசோகன் காட்டுக் கூப்பாடு போட்டு நடித்தார். ஒரு வேளை பாலையா செங்கோடன் ரோலை செய்திருந்தால் அடிமைப் பெண் படம் இன்னும் கௌரவப்பட்டிருக்கும்.
பாலையா காமராஜரின் பக்தர். அவரோடு ஒரு முறை உட்கார்ந்து விருதுநகர் சீனிவாசன் மது அருந்திய போது குடி போதையில் “நான் காமராஜரை தோற்கடித்த சீனிவாசன்” என்று சொன்னபோது “என்ன சொன்ன. இன்னொரு தடவ சொல்லு” என்று பாலையா சொல்ல,மீண்டும் “நான் காமராஜரை தோற்கடித்த சீனிவாசன்” என்று அவர் சொல்ல மீண்டும் மீண்டும் பாலையா
“என்ன சொன்ன. இன்னொரு தடவ சொல்லு” என விடாது கேட்டுக்கொண்டே இருக்க,சீனிவாசன் மிரண்டுபோனாராம்.
தெருவில் யாராவது தன் வீட்டு முன் இரண்டு,மூன்று முறை நடப்பதைப் பார்த்தாலே” துப்பாக்கிய எடுறா” என்று பாலையா ஆவேசமாகிவிடுவாராம்.
பாலையா “ எம்.ஜி.ஆரின் பித்தலாட்டங்கள்” என்று ஒருசிறு நூல் எழுதினார்.
அந்த நூல் படிக்க கிடைக்குமா என்று ஜூனியர் பாலையா (ரகு) விடம் ராசுக்குட்டி சூட்டிங் போது விசாரித்தேன். அவர் பதில்“ என்னிடம் இல்லை. அதன் பிரதி ஒன்று மு.கருணாநிதியிடம் இருக்கிறது.அவரிடம் எப்படி கேட்க முடியும்?”
ஜுனியர் பாலையா சபரிமலை பக்தர். அப்போதும் மாலை போட்டிருந்தார். ஐயப்பன் மகிமை பற்றி பரவசமாக பேசினார். இப்போது ‘அல்லேலூயா’ கிறிஸ்தவராக மாறி பிரச்சாரம் செய்கிறாராம்.
நடிகர் பாலையா திருநெல்வேலி சைவப்பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவர்.அவர் சினிமாவில் நடித்ததில் அவர் குடும்பத்தாருக்கு உடன்பாடு கிடையாதாம்.அவருடைய அக்கா ஒருவர்1992லும் உயிரோடு இருந்தார்.ரகு ஊருக்குபோனால் அத்தை கோபத்தோடு‘கூத்தாடிப்பய மகன்’ என்று திட்டுவாராம்.முகத்தை திருப்பிக்கொள்வாராம்.
பாலையாவிற்கு நிறைய பிள்ளைகள்.
ரகு தவிர பாலையாவின் மூத்த மகன் சாய்பாபா திரையில் நாகேஷுக்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.
’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு,கல்யாணம் பண்ணிக்கொள்ள நேரம் வந்தாச்சு’
’வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்,என்நிலைதனை கெடுத்தவள் மாலதி இந்நாளில்,அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ,இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ’ ஆகிய பாடல்கள் சாய்பாபா பாடியவை தான்.
நடிகை சந்திரகாந்தா வின் உடன் பிறந்த சகோதரர் “வயசாயிடுச்சில்ல அக்கா” சண்முகசுந்தரம். இந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான் கங்கை அமரனின் மனைவி. பாலையாவின் ஒரு துணைவி கூட சந்திரகாந்தாவின் சகோதரி தான். பாலையாவின் மகள் மனோசித்ரா ரகுவரனுக்கு ஜோடியாக ‘ஒரு ஓடை நதியாகிறது’படத்தில் நடித்தார்.
1972ல் பாலையா மறைந்த போது அவருக்கு வயது 58 தான்.ரெங்காராவ் போல இவரும் முதுமையைப் பார்க்காமலே தான் மறைந்தார்.
ஜெமினிகணேசன் இறந்த போது காலச்சுவடு பத்திரிக்கையில் எழுதிய இரங்கலில் நான் கீழ்வருமாறு சொன்னேன்.
“தமிழ்த் திரையில் உக்கிரமான நடிப்பு ஆகிருதிகளாக சிவாஜி கணேசன், எம். ஆர்.ராதா, நாகேஷ் இவர்களைக் குறிப்பிடலாம்.
மென்மையான நேர் எதிர்த் திசையில் சாதித்தவர்கள்
ஜெமினி கணேசன்,எஸ்.வி.ரங்காராவ்,டி.எஸ்.பாலையா ஆகியவர்கள்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக