இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் பிறந்த நாள் ஆகஸ்ட் 23, 1964.
எஸ்.ஏ. ராஜ்குமார் ( ஆங்கிலம் :S. A. Rajkumar) என்பவர் தமிழ் நாடு , சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ் ,தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.
எஸ். ஏ. ராஜ்குமார்
S. A. Rajkumar
பிறப்பு ஆகத்து 23, 1964
(அகவை 52)
சென்னை , தமிழ் நாடு, இந்தியா
தொழில் இசையமைப்பாளர்
நடிப்புக் காலம் 1987 - தற்போது
துணைவர் மீரா ராஜ்குமார்.
வாழ்க்கை சுருக்கம்
செ. ஏ. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாட்டின்
சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் அவர்களுக்கு ஆகஸ்ட் 23 , 1964 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள்
திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவர். இளையராஜா ,
கங்கை அமரன் , தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை
நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.
திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு தலைப்பு
1987
சின்னபூவே மெல்லப்பேசு
இச அறி திர
தங்கச்சி
வீரன் வேலுத்தம்பி
1988
இரயிலுக்கு நேரமாச்சு
மனசுக்குள் மத்தாப்பூ
பறவைகள் பலவிதம்
குங்குமக் கோடு
1989 என் தங்கை
1990
புது வசந்தம்
தங்கத்தின் தங்கம்
புது புது ராகங்கள்
1991 பெரும் புள்ளி
1996 பூவே உனக்காக
கிருஷ்ணா
1997
சூரிய வம்சம் தமி திர
புத்தம் புது பூவே
பிஸ்தா
1998
அவள் வருவாளா
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
பொன்மனம்
மறுமலர்ச்சி
சிம்மராசி
1999
நீ வருவாய் என
துள்ளாத மனமும் துள்ளும்
பாட்டாளி
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
சுயம்வரம்
கண்ணுபடப்போகுதைய்யா
சூரிய பார்வை
மலபார் போலீஸ்
2000 முதல் 2012 வரை
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2000
குபேரன்
ஜேம்ஸ் பாண்டு
உன்னை கொடு என்னை தருவேன்
மாயி
என்னவளே
வானத்தைப் போல
பிரியமானவளே
பெண்ணின் மனதைத் தொட்டு
ராஜகாளியம்மன்
பட்ஜெட் பத்மநாபன்
பாளையத்து அம்மன்
வண்ணத் தமிழ்ப்பாட்டு
கந்தா கடம்பா கதிர்வேலா
சுதந்திரம்
2001
ஆனந்தம்
பிரியாத வரம் வேண்டும்
நாகேஷ்வரி
விஸ்வனாதன் ராமமூர்த்தி
2002
புன்னகை தேசம்
காமராசு
நம்ம வீட்டு கல்யாணம்
பந்தா
ராசா
2003
திவான்
ஆளுக்கொரு ஆசை
வசீகரா
பிரியமான தோழி
தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
காதலுடன்
2004
மானஸ்தன்
கண்ணாடிப் பூக்கள்
2005 கண்ணம்மா
2008 வள்ளுவன் வாசுகி
2012 சொக்காலி
தெலுங்குத் திரைப்படங்கள்
பெள்ளி ( 1997 )
சூபாகாங்ஜாலு (1997)
சுஸ்வாகதம் ( 1998 )
சூர்யவம்ஷம் (1998)
எதுருலேனிமனிஷி ( 1999 )
ராஜா (1999)
ஸ்னேஹங் கோசம் (1999)
கலிஸுந்தாம் ரா ( 2000 )
நுவ்வு வஸ்தாவனி (2000)
மா அன்னய்ய (2000)
நின்னே பிரேமிஸ்தா (2000)
பிரியமாய்ன நீகு ( 2001 )
சிம்ஹராஷி (2001)
நீப்ரேமகை (2001)
டாடி (2001)
சிவராமராஜு ( 2002 )
வஸந்தம் ( 2003 )
செப்பவே சிருகாலி ( 2004 )
ஸங்க்ராந்தி ( 2005 )
நாயுடு எல்.எல்.பி (2005)
அந்தால ராமுடு ( 2006 )
நவ வஸந்தம் ( 2007 )
அஸ்த்ரம் ( 2008 )
கோரிண்டாகு (2008)
மிஸ்டர். பெல்லிகொடுகு ( 2013 )
ராணி ராணெம்ம (2013)
கன்னடத் திரைப்படங்கள்
மாடுவே ( 1997 )
சந்த்ர சகோரி ( 2003 )
ராம கிருஷ்ணா ( 2004 )
காஞ்சன கங்கா (2004)
ஜேயேஷ்டா (2004)
சிரிவன்தா ( 2006 )
தந்தெகெ தக்க மக (2006)
சேவந்தி சேவந்தி (2006)
தாயிய மடிலு ( 2007 )
பிரீத்திகாகி (2007)
கோகுல கிருஷ்ணா ( 2012 )
மலையாளத் திரைப்படங்கள்
வேஷம் ( 2004 )
விருதுகள்
1997 - சிறந்த இசையமைப்பாளர்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு -
பெள்ளி
1999 - சிறந்த இசையமைப்பாளர்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு - ராஜா
1997 - சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது –
தமிழ் - சூரிய வம்சம்.
இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலம்
கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக அமைந்த "மனசுக்குள் மத்தாப்பு" திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்களைக் கொண்ட தொகுப்பாக இப்பதிவு அமைகின்றது.
ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார்.
அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தானே எழுதி இசையமைத்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்கின்றது. தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கின்றார்.
"ஒரு வழிப்பாதை" போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்ததோடு "முதல் பாடல்" என்ற படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து அதுவரை தன் பாடல்கள் மூலம் சேர்த்து வைத்த பணத்தையும் கரைய வைத்தார்.
இன்றைய தொகுப்பிலே எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலப்படங்களை மட்டும் வைத்துக் கொண்டு இவரின் முதல் படமான "சின்னப்பூவே மெல்லப் பேசு" திரைப்படத்தில் ஆரம்பித்து சினிமா ரவுண்டில் முதல் ஆட்டத்தை நிறுத்திய படங்களில் ஒன்றான "பெரும் புள்ளி படத்தோடு நிறைவாக்குகிறேன்.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட "சின்னப்பூவே மெல்ல பேசு" திரையில் இருந்து இரண்டு பாடல்கள் வருகின்றன.
முதலில் "சங்கீத வானில்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பாடுகின்றார்கள்.
அடுத்து இதே படத்தில் வந்த "ஏ புள்ள கருப்பாயி" என்ற பாடலை எழுதி, இசையமைத்து முதன் முதலில் பாடுயிருக்கின்றார் எஸ்.ஏ.ராஜ்குமார். அந்தப் படம் வந்த வேளை ஏகத்துக்கும் பிரபலமாகி இருந்தது இப்பாடல்.
அடுத்து வருவது இந்த வாரம் றேடியோஸ்புதிரில் கேள்வியாக அமைந்த படமான "மனசுக்குள் மத்தாப்பு" . மலையாளத்தில் தாள வட்டம் என்ற பெயரில் மோகன்லால் நடிக்க பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். இந்தப் படமே ராபர்ட் ராஜசேகரன் இயக்கத்த்தில் "மனசுக்குள் மத்தாப்பு" என்ற பெயரில் பிரபு, சரண்யா, லிஸி நடிப்பில் வந்தது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்தில் நடித்த லிஸி தன் வாழ்க்கைத் துணையாக பிரியதர்ஷனை பின்னாளில் தேடிக் கொண்டார். சரண்யா இந்தப் படத்தின் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகரனை மணமுடித்து கொஞ்ச காலம் ஒன்றாக வாழ்ந்தவர். "மனசுக்குள் மத்தாப்பு" படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்தபோது தான் அவதானித்தேன் அப்படத்தின் பின்னணி இசை கொடுத்திருந்தவர் வித்யா சாகர். ஏனோ எஸ்.ஏ.ராஜ்குமார் அப்போது பின்னணி இசைக்காகப் பயன்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்பே வித்யாசாகர் முழு இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
மனசுக்குள் மத்தாப்பு படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்களைத் தருகின்றேன்.
முதலில் வருவது றேடியோஸ்புதிரில் இடையிசையாக வந்த பாடலான "ஓ பொன்மாங்குயில்" என்ற இனிய பாடலைப் பாடுகின்றார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
அடுத்து வருவது "பூந்தென்றலே ஓடோடி வா" என்னும் பாடல், இதனை ஜெயச்சந்திரன், சுனந்தா ஆகியோர் பாடுகின்றார்கள்.
தொடர்ந்து வரும் படம் "பறவைகள் பலவிதம்"
. கல்லூரி வாழ்வில் எதிர்காலக்கனவோடு இணைந்த நண்பர்கள் பின்னர் திசைமாறிய பறவைகளாய் மாறும் சோகமே படத்தின் கரு. இப்படத்தினையும் ராபர்ட் ராஜசேகரன் இரட்டையர்கள் இயக்கியிருந்தார்கள். இப்படத்தின் தோல்வி இரட்டை இயக்குனர்களையும் நிரந்தரமாகப் பிரித்தது. பின்னர் "பூமணம்" என்ற பெயரில் ராஜசேகரன் நாயகனாக ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்து இப்போது தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் அப்பா வேஷம் கட்டுகிறார். நிழல்கள் படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடலைப் பாடி நடித்த இந்த ராஜசேகரனை மறக்க முடியுமா?
"பறவைகள் பலவிதம்" திரையில் வந்த "மனம் பாடிட நினைக்கிறதே" என்ற இனிய பாடலை மனோ, சுனந்தா, எஸ்.சந்திரன், எஸ்.பி.சைலஜா ஆகியோர் பாடுகின்றார்கள்.
தொடர்ந்து எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு பெயர் சொல்லும் விதமாக எந்தப் படமோ இயக்குனரோ அமையவில்லை. அவரின் சரிவுக்காலத்தில் வந்த படங்களில் வந்த " ஒரு பொண்ணு நெனச்சா" படத்தில் வரும் "உதயமே உயிரே" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் பாடும் பாடலை கேட்க கேட்க இனிமை. கேட்டுப் பாருங்களேன்
எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஆரம்பத்தில் நல்லதொரு அறிமுகத்தை ராபர்ட் ராஜசேகரன் கொடுத்தது போல இவருக்கு
"புதுவசந்தம்" மூலம் வாழ்க்கையே கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். "இது முதல் முதலா வரும் பாட்டு" என்று பாடியே புதுவசந்தத்தை வெற்றி வசந்தமாக்கினார். புது வசந்தம் படத்தின் பாடல்கள் எல்லாமே தேன் தேன் தேனே தான். இப்படம் வந்த காலம் குறித்து இன்னொரு விரிவான பதிவு தேவை. எனவே "புதுவசந்தம்" படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்களைக் கேளுங்கள்.
ஆர்மோனியத்தினை முக்கிய பலமாக வைத்துக் கொண்டு "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா" என்று கே.ஜே.ஜேசுதாஸ் பாடுவது ஒரு வகை இனிமை.
அதே "அதே பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா" (மற்றைய வரிகளில் மாறுதலோடு) வேக இசை கலந்து பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் தான் அன்று சூப்பர் ஹிட்.
ராஜாவின் புண்ணியத்தில் பொழைப்பை நடத்திய ராமராஜன் சொந்தக் காலிலும் நின்று பார்ப்போமே என்று தன் குருவானவர் எம்.ஜி.ஆரின் படங்களின் தலைப்புக்களை உல்டா செய்து அன்புக்கட்டளை (அரசகட்டளை) இதுக்கு ராஜா தான் இசை, மற்றும் மில் தொழிலாளி (விவசாயி), வகையறாக்களில் நடித்த படம் "தங்கத்தின் தங்கம்" (எங்கள் தங்கம்). தங்கத்தின் தங்கம் படத்தின் இசை எஸ்.ஏ.ராஜ்குமார். ஆஷா போன்ஸ்லேயை வைத்தும் பாடல் கொடுத்திருப்பார், அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் தருகின்றேன். இப்போது அந்தப் படத்தில் இருந்து " செவ்வந்திப்பூ மாலை கட்டு" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடக் கேளுங்கள்.
பல வருஷமாக எடுபிடியாகவும், உதவி இயக்குனராகவும் அலைந்து திரிந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இயக்குனர் பட்டம் கொடுத்தது "புரியாத புதிர்" முந்திய தனது தயாரிப்பான புது வசந்தம் பெரு வெற்றி கண்டதால் சூப்பர் குட் பிலிம்ஸ் எஸ்.ஏ.ராஜ்குமாரையே ஆஸ்தான இசையமைப்பாளராக பல காலம் வைத்திருந்தது. அந்த வகையில் புரியாத புதிர் படத்திலும் "கண்ணோரம் கங்கை தான்" பாடலோடு இங்கே நான் தரும் "ஓர் இரவில் பாட்டு வந்தது" பாடலும் இனிமை. பாடலைப் பாடுகின்றார்கள் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பி.சுசீலா.
எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும், இயக்குனர் விக்ரமனுக்கும் சரிவைக் கொடுத்த காலம்
"பெரும்புள்ளி" படத்தோடு. இப்படத்தில் தற்போது செயல் இழந்து பரிதாப நிலையில் இருக்கும் பாபு மற்றும் சுமா ரங்கனாத் நடித்திருப்பார்கள். இப்போது ரீமிக்ஸ் பாட்டில் பேயாய் அலையும் இசையமைப்பாளர்களுக்கும் முன்னோடியாக சொர்க்கம் படத்தில் வரும் "பொன்மகள் வந்தாள்" என்ற ரி.எம்.செளந்தரராஜன் பாடலை புது இசை கலந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கொடுத்திருந்தார். அதை விட்டு விட்டு இன்னொரு இனிய பாடலான "மனசும் மனசும் சேர்ந்தாச்சு" பாடலை சுனந்தா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
'லாலாலா... லாலாலா...' - எஸ்.ஏ.ராஜ்குமாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 200 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்தநாள் இன்று. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையால் கவரப்பட்டு இசையமைக்கத் தொடங்கியவர் இருபது வருடங்களுக்கு முன்பு பல ஹிட் பாடல்களைக் கொடுத்த எஸ்.ஏ.ராஜ்குமார்.
'
ஆரம்பகாலம் :
இவரது அப்பா ஒரு மேடைப் பாடகர். சிறுவயதிலேயே திரைத்துறையில் மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் எனும் ஆர்வத்தோடு இருந்தார். ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்தவர் ராபர்ட் ராஜசேகரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவர் ராஜ்குமாரிடம் இருந்த இசைத்திறமையைக் கண்டறிந்து வாய்ப்புக் கொடுத்தார். யதேச்சையாக நடந்த இந்த வாய்ப்பு சில ஆண்டுகள் வெற்றிகரமான இசையமைப்பாளராக உச்சாணிக் கொம்பில் வைத்திருந்தது.
இளையராஜாவின் காலம் அது :
ஒரு வருடத்தில் 100 படம் வந்தால் அவற்றில் 75 படங்கள் இளையராஜா இசையமைத்ததாக இருக்கும். இளையராஜாவின் இசையாட்சி நடந்துவந்த அந்தக் காலகட்டத்தில் அறிமுகமாகி, அதுவும் நடிகர் பிரபு தவிர, முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய 'சின்னப்பூவே மெல்லப்பேசு' திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் இன்னொரு மிக முக்கியமான விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதி இசையமைத்தது எஸ்.ஏ.ராஜ்குமார்தான்.
பாடகர் அவதாரம் :
கானா பாடல்களின் பிறப்பிடம் எனச் சொல்லப்படும் சென்னை திருவல்லிக்கேணிதான் ராஜ்குமாரின் ஏரியா. நண்பர்களுடன் கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது நிறைய பாடல்கள் எழுதிப் பாடுவாராம். அப்படிப் பாடும்போது எழுதி வைத்திருந்த பாடல்தான் இதே படத்தில் வந்த 'ஏ புள்ள கருப்பாயி...' பாடல் . இயக்குநரின் வற்புறுத்தலால் அந்தப் பாடலை அவரே பாடினார். அந்தப் படம் வந்த நேரத்தில் ஏகத்துக்கும் பிரபலமாகி இருந்தது இப்பாடல்.
டி.ஆருக்குப் பின்பு :
தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்ந்தது. கவிஞரான இவர் தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கிறார். 'ஒரு வழிப்பாதை' படத்தில் வில்லனாகவும் நடித்தார். 'முதல் பாடல்' என்ற படத்தை புதுமுகங்களை வைத்துத் தயாரித்து அதுவரை தன் பாடல்கள் மூலம் சேர்த்து வைத்த பணத்தையும் விரயம் செய்தார்.
விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் கூட்டணி :
எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ராபர்ட் ராஜசேகர் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது போல, 'புதுவசந்தம்' மூலம் வாழ்க்கையே கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். 'இது முதல் முதலா வரும் பாட்டு' என்று பாடியே புதுவசந்தத்தை வெற்றி வசந்தமாக்கினார். 'புது வசந்தம்' படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகின. இந்தப் படம் வந்த காலம், இவர் இசையமைத்த வகையிலான மெலடி பாடல்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டிருந்தது. அந்த ட்ரெண்டைப் பயன்படுத்தி வரிசையாக இசையமைத்துக் குவித்தார். பல படங்களின் பின்னணி இசையை எல்லாம் தனது 'லாலாலா...' கோரஸ்களாலேயே பின்னுக்குத் தள்ளினார்.
தொடர் வெற்றி :
ஆர்மோனியத்தை முக்கிய பலமாக வைத்துக் கொண்டு 'பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா...' என்று எஸ்.பி.பி-யும் சுசீலாவும் பாட, பட்டிதொட்டியெங்கும் ரிப்பீட் மோடில் ஒலித்துக்கொண்டிருந்தது அந்தப் பாடல்.
பல வருடங்களாக உதவி இயக்குனராக இருந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இயக்குனர் பட்டம் கொடுத்தது 'புரியாத புதிர்'. தங்களது முந்தைய தயாரிப்பான 'புது வசந்தம்' பெரிய வெற்றி கண்டதால் சூப்பர் குட் பிலிம்ஸ் எஸ்.ஏ.ராஜ்குமாரையே ஆஸ்தான இசையமைப்பாளராகப் பல காலம் வைத்திருந்தது.
எனது மானசீக குரு! - எஸ்.ஏ.ராஜ்குமார்
திரைத்துறையில் கால் பதித்து கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருப்பவர். சின்ன்ப் பூவை மெல்லப் பேசச் சொன்னவர். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். வானத்தைப் போல, பூவே உனக்காக இப்படி தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் பாடல்களைக் கேட்டால் துள்ளாத மனமும் துள்ளும்.
உங்களுடைய முதல் படமான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ வாய்ப்பு பற்றிச் சொல்லுங்களேன் .
பொதுவா எனக்கு அதிர்ஷடத்து மேல நம்பிக்கைக் கிடையாது. உழைப்புதான் மிகப் பெரிய வெற்றியை தரும். உழைப்புதான் மனித வாழ்வியலுக்கு மூலாதாரம் என்று நினைக்கிறேன். நான் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவன். எங்க அப்பா மேடைப் பாடகர். எனக்கும் அதனால பாரம்பரியமா இசை ஆர்வம் வந்துச்சு. ஆனா நான் சின்ன வயசுல திரைத்துறையில மிகப் பெரிய இயக்குனரா வரனும்னு ஆர்வமா இருந்தது. அதை நினைச்சுதான் ராபர்ட் ராஜசேகரிடம் உதவியாளரா சேர்ந்தேன். அவங்க என்கிட்ட இருக்குற இசைத்திறமையை கண்டறிந்து ‘இவன் இசைக்கு நல்லா வருவான் போலிருக்கே’னு முடிவு பண்ணி இசையமைப்பாளர் ஆக்கினாங்க. பொதுவா இது ஒரு விபத்தான விஷயம் வெற்றிகரமான ஒரு நிலையாக மாறிவிட்டது. இசையில எல்லாமே விபத்துதாங்க. ராகங்களே ஒரு சுரம் இன்னொரு சுரத்தோட சேரும் போது கிடைக்குறதுதானே. சுரமோடு அனுசுரம் ஜாயின்ட் பண்ணும் போது அத மியூசிக்கல் ஆக்ஸிடன்ட்னு சொல்வாங்க. அது போல என்னுடைய வாழ்க்கைல விபத்தா நடந்த விஷயம் நான் இசையமைப்பாளரா ஆனது. ஆனா எனக்கு கம்போஸ் பண்ற திறமை இருந்தாலும் அந்த நேரத்துல ஒரு வெற்றியாளனா வருவேன்னு நினைக்கல. ஏன்னா இளையராஜா நான் வரும் போது ரொம்ப பெரிய லெவல்ல இருந்தாங்க. ஒரு நூறு படம் வருதுனா அதுல 75 படம் இசைஞானி இசைல இருக்கும். அவர் இருக்கும் போது அவரைத் தாண்டி ஒருத்தர் வர்றதுங்றது நடக்கவே முடியாத ஒரு விஷயம்னு நான் அவநம்பிக்கையோட இருந்த நேரத்துல எனக்கு மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்து இன்று வரை வெற்றியாளனா வச்சிருக்கிற என் இயக்குனர் ராபர்ட் ராஜசேகர் அவர்களை இந்த நேரத்துல நன்றியோட நினைச்சுப் பாக்குறேன்.
அந்த படத்துல நீங்க ஒரு பாடல் கூட பாடியிருக்கீங்க இல்லையா? அத பத்தி சொல்லுங்களேன் .
ஆமா.. ‘ஏபுள்ள கருப்பாயி’ பாட்டு. அதாவது எல்லா பாட்டும் கம்போஸ் பண்ணோம். அப்ப வித்தியாசமா ஏதாவது பாட்டு இருக்கணும்னு சொல்லிட்டு ராஜசேகர் கேட்டாரு. அப்பதான் என்கிட்ட வித்தியாசமான நாட்டுப்புறப் பாட்டு இருக்குன்னு சொன்னேன். கானா பாடல்களுக்கு ஆரிஜின்னு சொல்லப்படுற சென்னை திருவல்லிக்கேணிதான் நான் பொறந்து வளர்ந்த இடம். அதனால நண்பர்களோட கடற்கரையில உட்கார்ந்திருக்கும் போது நிறைய பாடல்கள் எழுதி அந்த நேரத்துல அப்படியே பாடுறதுண்டு. அந்த மாதிரியான பாட்டுதான் ‘ஏ புள்ள கருப்பாயி’. அது ரொம்ப சோகமான சூழ்நிலைல எழுதின பாட்டு. அந்த பாட்ட நான் இயக்குனருக்குப் பாடிக் காண்பிச்சேன். அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்தப் பாட்டைப் பாட வித்தியாசமான குரல் வேணும்னு சொல்லிட்டாங்க. நானும் அந்த நேரத்துல மலேசியா வாசுதேவன் பாடுனா நல்லா இருக்கும்னு ஏதேதோ சொன்னேன். அப்ப இயக்குனர் ‘நீயே பாடு. உன்னுடைய குரலே வித்தியாசமான இருக்குதுனு’ என்னுடைய பாடலை எனது முதல் படத்துலேயே நானே எழுதி இசையமைச்சுப் பாடுற வாய்ப்பை வழங்குனாரு. இன்னைக்கு வரை கேக்குற அளவுக்கு பாப்புலரான பாட்டா இருக்கு.
இயக்குனர்கள்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்து அந்த உதவி இயக்குனர் பின்னாள்ல பெரிய இயக்குனரா வர்ற மாதிரி இசைத்துறையில, உங்ககிட்ட உதவி இசையமைப்பாளரா இருந்து பெரிய ஆளா ஆகியிருக்காங்களா?
அப்படி சொல்ல முடியாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட என் இசைக்குழுவுல வாசிச்சவர்தான். ஹாரிஸ் ஜெயராஜ் என் மியூசிக்ல கீ&போர்டு வாசிச்சவர்தான். இசைக்குழுவுல சேர்ந்து அஸிஸ்டென்டா இருந்து வர்றவங்க ரொம்ப கம்மி. அதெல்லாம் பாரம்பரியமா ஒரு காலத்துல இருந்தது. ஜி.கே.வெங்கடேஷன்கிட்ட இளையராஜா உதவியாளரா இருந்தாங்க. எம்.எஸ்.விஸ்வநாதன் சுப்பாராவ்ங்ற இசையமைப்பாளர்கிட்ட இருந்து வந்தவரு. அது நான் அறிமுகமாகுற காலகட்டம் வரை இருந்தது. ஆனா அதுக்கு பிறகு இல்லை. ஆனா பொதுவாக இன்னைக்கு நிறைய கீ&போர்டு ப்ளேயர்ஸ், மிருதங்கம் வாசிக்கிறவங்களா இருக்குறவங்க ஒரு வகைல நிறைய இசையமைப்பாளர்கிட்ட இருந்தவங்கதான். அவங்களும் எல்லா வித அனுபவங்களோடும் சேர்ந்துதான் வர்றாங்க. அதனால அஸிஸ்டென்டா இருந்து வர்ற பாரம்பரிய முறை இப்ப இல்லன்னாலும் சிலரிடம் வாசித்து விட்டுதாம் பிறகு பெரிய ஆளாகிருக்காங்க.
இடைக்காலப் பாடல்கள்னு சொல்லப்படுற 80க்கும் 90க்கும் இடையிலான பாடல்கள் இன்னைக்கும் கேக்குற அளவுக்கு இருக்கு. இன்னைக்கி திசை மாறிப் போன மாதிரி இருக்கு. ஏன்?
இதுக்கு காரணம் என்னனா நிறைய அவசரமான முடிவுகள்தான். ரொம்ப ஷார்ட் டைம் சிந்தனை. இன்னைக்கு வெற்றி கிடைச்சா போதும் என்கிற துரிதகதில தான் போய்ட்டிருக்கு. பாடல்ங்றது காலத்துக்கும் நிக்கக்கூடியது. படத்த தாண்டி ஒரு பாட்டு நிக்கனும். அந்த காலத்துல நிறைய பாடல்கள் வானொலில கேட்டீங்கன்னா அதுல யார் நடிச்சிருக்காங்கன்னு தெரியாது. நிறைய பாடல்கள எம்.ஜி.ஆர்., சிவாஜினு நினைச்சுட்டு இருப்போம். ஆனா அதெல்லாம், எஸ்.எஸ்.ஆர், அப்புறம் பெயர் தெரியாத பிற மொழி நடிகர்கள், முகம் தெரியாத நடிகர்கள் நடிச்சிருப்பாங்க. படம் பேர் கூட ஞாபகம் வராது. ஆனா அந்த பாட்டு உயிரோட இருக்கும். இதுக்கு காரணம் என்னனா பாடல்களுக்கு தனிகவனம் செலுத்தி கதையோட ஜீவன் இருக்குற மாதிரி அந்த காலத்துல பண்ணிட்டு இருந்தாங்க. எங்களுடைய ஆரம்ப காலமான 80&90கள்ல கூட அப்டிதான் பண்ணிட்டிருந்தேன். இன்னைக்கு வரைக்கும் நான் அப்டிதான் பண்ணிட்டிருக்கேன். ஆனா இப்ப அதை விட்டுட்டு நாம மாடர்னா இருக்கனும் அப்டிங்ற விஷயங்கள் மாத்திரம்தான் இருக்கு. மாடர்னா எந்த விஷயம் இருக்குனு எனக்கு உண்மையிலயே தெரியல. ஏனா மாடர்ன்ங்ரது வெஸ்டர்ன் கல்ச்சர். அந்த மாதிரி மேற்கத்தியமா யாராவது பண்றாங்கன்னா அதுவும் இல்லை. சில குறிப்பிட்ட சத்தங்கள், வாத்தியங்களுடைய காம்பினேஷன்ஸ்தான் இருக்கே தவிர மாடர்னாவும் பண்றாங்களான்னா ரொம்ப குறைவு. குறிப்பிட்ட சொல்ற மாதிரிதான் இருக்கு. ஒரு அவசரகதியில போய்ட்டிருக்கிறதாலதான் இப்டி இருக்குனு நினைக்கிறேன்.
உங்களுடைய பாடல்கள் பெரும்பாலும் மெல்லிசை ரகமானவை. சில பாடல்கள் அதிரடியானவை. இதில் உங்களுக்கு பிடித்தது எது ?
நான் எல்லா பாட்டும் செய்துட்டுதான் இருக்கேன். நான் என்ன சொல்றேன்னா எனக்கு மெலடி மட்டும் தெரிஞ்சிருந்தா நான் கர்னாடக வித்துவான்னு நினைச்சுடக் கூடாதுல. நானும் எல்லாவிதமான பாடல்களும் டப்பாங்குத்துப் பாட்டு உள்பட பண்னியிருக்கேன். ஒரு பாட்டோட சூழல்தான் அது வெஸ்டர்ன, ஃபோக்கா, மெலடியானு இயக்குனர தீர்மானிக்க வைக்கும். கரெக்டா கம்போஸ் பண்ணி ஒரு வெரைட்டியா கொடுக்க முடிஞ்சதுனா அந்த பாட்டு காலத்த தாண்டி நிக்கும். அது மாதிரி நிக்கலனா அவங்க சரியா கவனம் செலுத்தலனு அர்த்தம்.
இதுவரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க?
தென்னிந்திய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு 200 படங்கள் பண்ணியிருக்கேன்.
உங்களுடைய இசையமைப்பில் பாடிய பாடகர்களில் யாருடைய குரல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? எனக்கு ரொம்ப பிடிச்ச குரல் கே.ஜே.யேசுதாஸ் குரல்தான். என்னோட பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா? பாடலை ரொம்ப ஆசை தீர பாட வைச்சு ஹிட்டாக்குனேன். அதுக்கப்புறம் எஸ்.பி.பி. எனக்கு நிறைய பாடல்கள் பாடியிருக்காரு. அதே மாதிரி சித்ராம்மா எனக்கு நிறைய பாடியிருக்காங்க. ஆனா ஹரிஹரனோட வாய்ஸ் ரொம்ப வித்தியாசமானது. என்னுடைய பாடல்கள அவர் பாடும் போது அது ரொம்ப வித்தியாசமான பாடல்களாவே அமைஞ்சிருக்கு. ப்ரியமானவளே, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ இதெல்லாம் அவர் வாய்ஸ்ல நல்லா இருக்கும்னு பாட வச்சது. அதெல்லாம் மிகப் பெரிய வெற்றி.
பாடுறவங்களுக்கு தனி குரல் வளம் வேணுமா? இல்லை இசைஞானம் மட்டும் போதுமா?
குரல் வளம் ரொம்ப முக்கியம். இசை தெரிஞ்சுக்கிட்டுப் பாடுனா நல்லது. இசை தெரியலன்னா கூட குரல் வளம் இருந்தா பாட வச்சுடலாம். ஆனா பாடகர்களுக்கு இசை தெரிஞ்சுருக்க வேண்டியது அவசியம்.
நீங்க ஒரு கவிஞரும் கூட இல்லையா?
நான் அடிப்படைல ஒரு கவிஞன், அதற்கு பிறகுதான் இசையமைப்பாளர். முதல்ல கவிதை எழுததான் வரும். அதுக்கப்புறம் இசை கத்துக்கிட்டேன். என்னுடைய எழுத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.
கவிதைத் தொகுதி போட்டிருக்கீங்களா?
இல்ல. ஆனா என்னுடைய பாடல்கள் எல்லாத்துலயும் அது யாரு எழுதியிருந்தாலும் சரி அதுக்குள்ள என்னோட கவிதை வரிகள் இருக்கும். அத என்னுடைய இயக்குனர்கள்கிட்டயும், பாடலாசிரியர்கள்கிட்டயும் கேட்டா தெரியும். பெரும்பாலும் என்னுடைய பாடல்களுக்கு பல்லவியில இருந்து அதோட மியூஸிக் வரைக்கும் என்னோட பங்களிப்பு இருக்கும். முதல்ல 25 படத்துக்கு நானே எழுதிட்டிருந்தேன். அதுக்கப்புறம் நாமளே எழுதிட்டு இருந்தா வேலைப்பளு சாஸ்தியாயிரும்னு விட்டுட்டேன். அப்புறம் டம்மியா ஏதாவது எழுதுறத சில பேர் பயன்படுத்தியிருக்காங்க. வானத்தைப் போல படத்துல காதல் வெண்ணிலா அப்டிங்ற பாட்டுல பல்லவி முழுக்க எழுதின பிறகுதான் சரணம் எழுதுனாங்க. இந்த கவிதை தாகம் இப்படியே போய்ட்டு இருக்கு. கவிதை நான் காதலிக்கிற பொண்ணு. வெளியில இன்னும் தெரியல அவ்ளோதான்.
உங்க குடும்பத்த பத்தி சொல்லுங்க .
எனக்கு ஒரு மனைவி. ஒரு பொண்ணு, ஒரு பையன். இரண்டு பேரும் படிக்கிறாங்க. சங்கீதம்னாலே கொஞ்ச தூரம் ஓடிடுவாங்க. அந்தளவுக்கு படிப்புல ஆர்வம் அதிகம். பாட்டு கேக்குறதோட சரி. என்னுடைய வாரிசுகளா வரனும்னு விருப்பம் இல்லாதவங்க. பண்பாட்டை இழக்காமல் நம்ம வாழ்க்கையில முன்னேறனும் அப்டிங்ற விஷயத்த மட்டும் நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்.
எனது மானசீக குரு! - எஸ்.ஏ.ராஜ்குமார்...
திரைப்பட இசையமைப்பாளரும், இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவருமான எஸ்.ஏ.ராஜ்குமார், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்த நினைவுகளை பகிந்து கொள்கிறார்.
"இந்தியாவில் உதித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் இசைக் கலைஞர் எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழ் நாட்டின் சொத்து என்றே அவரை நான் சொல்வேன். புராணப் படங்களும் சரித்திரப் படங்களும் அதிகம் வந்து கொணடிருந்த காலகட்டத்தில் திரையிசைப் பாடல்கள் எல்லாம் கர்நாடக சங்கீதத்தையே மையப்படுத்தி அமைந்திருந்தன. இந்த பின்னணியில் திரை இசைக்கு வந்த எம்.எஸ்.விஸ்வநாதன், மேற்கத்திய இசையை நவீன பாணியில் புகுத்தி மாபெரும் வெற்றி கண்டார்.
அறுபதுகளில் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்தி மொழித் திரைப்படங்களின் பாடல்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த தமிழ்நாட்டில், எல்லோரும் ரசிக்கும் வகையில் தமிழ்ப் படங்களில் மெல்லிசைப் பாடல்களைக் கொடுத்து சாதனை செய்தவர் எம்.எஸ்.வி.தான் என்று அழுத்தம் திருத்தமாக நான் சொல்லுவேன். கஜல் பாடலைக் கேட்டால் நம் மனதை என்னமோ செய்யுமே அதைப்போல "கர்ணன்' படத்தில் இடம் பெற்ற "இரவும் நிலவும் வளரட்டுமே' பாடலைக் கேட்டால் நம் உள்ளத்தை என்னவோ செய்யும். "காதலிக்க நேரமில்லை' படத்தில் இடம் பெற்ற "அனுபவம் புதுமை' என்று தொடங்கும் பாடல், கேட்பவர்களுக்கு புதுமையான அனுபவத்தைத் தரும் அற்புதமான பாடல். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும், இயக்குநர் ஸ்ரீதரும் இணைந்து எப்படி இந்தப் பாடலை செய்திருப்பார்கள் என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை. இதேபோல் "பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடலைப்போல் ஒரு வெஸ்டர்ன் கிளாஸிக் பாடலை சத்தியமாக வேறு யாராலும் போட முடியாது. அந்தக் காலத்திலேயே ஏராளமான வாத்தியக் கருவிகளுடன் மிகவும் புதுமையான முறையில் "எங்கே நிம்மதி' பாடலுக்கு இசையமைத்து சாதனை புரிந்தவர் அவர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைதான் பல படங்களையே உயர்த்தியது என்பதுதான் உண்மை. தமிழ்ப் படங்களின் இசையின் தரத்தை உயர்த்தியவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்றால் மிகையில்லை. வெஸ்டர்ன் கிளாஸிகல் இசையை மிகவும் உயர்ந்த தரத்தில் கொடுத்தவர் அவர். திரைப்படப் பாடல்கள் உருவாக்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாடலை எழுதி அதற்கு மெட்டு போடுவது. மற்றொன்று மெட்டமைத்து விட்டு அதற்கு ஏற்ப பாடல் எழுதுவது. எம்.எஸ்.விஸ்வநாதன் இரண்டாவது வகையைச் சேர்நதவர். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களிடம் பாடலை எழுதிக் கொடுத்தால் அதற்கு அற்புதமாக மெட்டமைத்து பாடலை உருவாக்கி விடுவார். எம்.எஸ்.விஸ்வநாதன் முதலில் மெட்டமைத்துக் கொடுப்பார். பின்னர்தான் அந்த மெட்டுக்கேற்ப பாடல் எழுதப்படும். ஒரு கம்போஸராக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதால்தான் கண்ணதாசன், வாலி என்று எல்லோருடனும் இணைந்து காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்களை அவரால் கொடுக்க முடிந்தது.
பாடலுக்கு ட்யூன் போட உட்கார்ந்தால் சளைக்காமல் ஐம்பது அறுபது ட்யூன்கள் என்று போட்டுக் கொண்டே போவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் அன்றாடம் புதுப்புது உயரங்களை அவரால் தொட முடிந்தது. செய்ததைத் திரும்பத் திரும்ப செய்வதல்ல இசை. புதிது புதிதாக முயற்சி செய்து கொண்டிருப்பதுதான் இசை. வாத்தியக் கருவியை மீட்டுவதால் வருவதல்ல இசை. இசைக் கருவியை இயக்குபவரின் இதயத்திலிருந்து வருவது இசை. அப்போதுதான் அந்த இசை கேட்பவர்களின் காதுகளில் நுழைந்து இதயத்தைத் தொடும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை எல்லா தரப்பு ஆட்களாலும் விரும்பப்படும் இசையாக இருப்பதன் காரணம் இதுதான். என்னைப் போன்றவர்கள் எல்லாம் அவரது அடியொற்றி வரவே ஆசைப்படுகிறோம்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். இது சம்பிரதாயத்துக்காக சொல்லும் வார்த்தை அல்ல. சத்திய வாக்கு. அவரது இசையைக் கேட்டே வளர்ந்தவன் நான். என் தந்தை செல்வராஜ் மேடைப் பாடகராக இருந்தவர். மேடைப் பாடகராகவே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவர் அவர். வீட்டில் எப்போதும் எதையாவது பாடிக் கொண்டேயிருப்பார். அந்தப் பாடல்களில் பெரும்பாலானவை எம்.எஸ்.வி. இசையமைப்பில் உருவான பாடல்களாக இருக்கும். முன்னர் நாங்கள் வசித்து வந்த திருவல்லிக்கேணி வீட்டின் பின் பகுதியில் மாலை நேரங்களில் என் தந்தை ஆர்மோனியப் பெட்டியில் சினிமா பாடல்களை இசைத்துக்கொண்டிருப்பார். பள்ளியிலிருந்து திரும்பியதும் அப்பா வாசிப்பதை வைத்து அது என்ன பாடல் என்பதைக் கண்டுபிடிப்பேன். இதுதான் என் மாலை நேரப் பொழுது போக்கு. எங்கள் வீட்டில் உள்ள எல்.பி. ரெக்கார்ட் பிளேயரில் பெரும்பாலும் எம்.எஸ்.வியின் பாடல்கள்தான் ஒலித்துக் கொண்டிருக்கும். இப்படித்தான் சிறு வயதிலேயே என்னுள் புகுந்து விட்டார் எம்.எஸ்.வி. எனது இசைக்கு என் அப்பாதான் குரு என்றால், எனது மானசீக குரு எம்.எஸ்.விஸ்வநாதன்தான்.
என் சின்ன வயதில் நான் கேள்விப்பட்ட சம்பவம் இது. எம்.எஸ்.வி வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தாராம். பிரபலமான இசைக் கலைஞர் ஒருவரின் பியானோ கச்சேரிக்குச் சென்ற அவர், மேடையில் இருந்த பியானோவைப் பார்த்ததும், வேகமாகச் சென்று இருக்கையில் அமர்ந்து அதை வாசிக்க ஆரம்பித்து விட்டாராம். குட்டையான ஒரு மனிதர், நெற்றியில் சந்தனத்துடன் பியானோவை வாசித்த லாவகத்தையும், அதிலிருந்து பொழிந்த இசை மழையையும் கண்டு பெருத்த ஆரவாரத்துடன் கை தட்டினார்களாம் அங்கிருந்த பார்வையாளர்கள். இளையராஜா சொன்ன சம்பவம் இது. திடீரென ஒரு பழைய பாடலைக் கேட்கும்போது, நேரம் காலம் பாராமல் எம்.எஸ்.வி. வீட்டுக்கு சென்று, "எப்படி அண்ணே அந்த ட்யூனைப் போட்டீர்கள்?' என்று கேட்டால், "நான் எங்கே போட்டேன்... ஆர்மோனியப் பெட்டியில் கை வைத்தேன். அந்த ட்யூன் அதுவாக வந்து விட்டது' என்று பதில் சொல்வாராம். இன்று சில இசையமைப்பாளர்கள் "வெளிநாடு சென்றால்தான் இசையமைக்க எனக்கு மூடு வரும்' என்று சொல்வதும், "அந்த நாட்டு கடற்கரைக்குப் போனால்தான் ட்யூன் வரும்' என்று சொல்வதையும் கேட்கிறோம். "காலியான எங்கள் பிச்சைப் பாத்திரங்களை பாட்டால் நிரப்பிய வள்ளல் எம்.எஸ்.விஸ்வநாதன்' என்று ஒருமுறை இளையராஜா குறிப்பிட்டது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. பாடல் கம்போஸிங்கின்போது கதைக்குள் நுழைந்து, கதாபாத்திரமாக வாழ்ந்து, ஆர்மோனியத்தில் கை வைத்து விரல்கள் வழியாக இசையை வெளியே எடுத்ததால்தான் காலங்களைக் கடந்து நிற்கும் பாடல்களை அவரால் தர முடிந்தது. பல்லவியைச் சொன்னதும் சரணத்தை இப்படி அமைக்கலாம்... அப்படி அமைக்கலாம் என்று அவர் சொல்லும்போதே பாடல்வரிகளும் வர ஆரம்பித்து விடும். பாடலை எழுதி வாங்கும்போதே பாடியும் காட்டி விடுவார். பல்லவியிலிருந்து வெகுவாக விலகி சரணங்களை எடுப்பது அவருக்கு கை வந்த கலை. இப்படி நாள் முழுவதும் பாடலின் சூழ்நிலையிலேயே இருந்ததுதான் அவரது தொடர் வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தது. ஆயிரத்து இருநூறு படங்களுக்கு இசையமைப்பது என்பது சாதாரண சாதனையா என்ன? எத்தனை ஆயிரம் பாடல்களுக்கு அவர் இசையமைத்திருப்பார்? இந்த உழைப்பைத் தருவதற்கு அவர் எத்தனை நாள் ஓய்வின்றி உழைத்தாரோ?
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்த செய்தியைக் கேட்டு அவரது வீட்டுக்கு ஓடோடிச் சென்று, அவரது குடும்பத்தில் ஒருவனைப்போல் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடுகளைச் செய்ததில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன். அவரது இறுதி ஊர்வலத்தில் எங்கள் இசைக் கலைஞர்கள், அன்னார் இசையமைத்த பாடல்களைப் பாடிக் கொண்டே செல்லவும் ஏற்பாடு செய்தேன். இறுதியில் அவரது பூதவுடலைத் தூக்கிச் செல்லும் பாக்யம் என் தோளுக்குக் கிடைத்தது.
எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களைப் பாடச் சொன்னால் சுமார் ஐநூறு பாடல்களையாவது தொடர்ந்து நான் பாடிக் கொண்டேயிருப்பேன். அந்த அளவுக்கு அவரது பாடல்கள் என் உடலோடும் உயிரோடும் கலந்திருக்கின்றன. என்னைப் போன்ற ரசிகர்கள் கோடிக்கணக்கில் அவருக்கு இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை எம்.எஸ்.விஸ்வநாதன் மறையவில்லை. காற்றில் கலந்து இசையாக நம்முடன் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக