ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

பாடகி ஏ. பி. கோமளா பிறந்த தினம் ஆகஸ்ட் 28.





பாடகி ஏ. பி. கோமளா பிறந்த தினம் ஆகஸ்ட் 28.

ஏ. பி. கோமளா ( A. P. Komala , பிறப்பு: 28 ஆகத்து 1934) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.  இவர் தமிழ் ,மலையாளம் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார்.
ஜி. ராமநாதன் , கே. வி. மகாதேவன் , எஸ். வி. வெங்கட்ராமன் , ம. சு. விசுவநாதன் ,
சி. எஸ். ஜெயராமன் , எஸ். எம். சுப்பையா நாயுடு , டி. ஆர். பாப்பா , வெ. தட்சிணாமூர்த்தி , ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.
பெண் மனம் , தங்கப்பதுமை , தங்கமலை ரகசியம் , மாமியார் மெச்சின மருமகள்,
பொம்மை கல்யாணம் , எங்கள் குடும்பம் பெரிசு , ஸ்ரீ வள்ளி , தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏ.பி.கோமளா – பின்னணிப் பாடகி
திரைப்படங்களில் பின்னணி பாடும் முறை ஆரம்பித்த காலகட்டத்திலேயே திரையிசையில் அறிமுகமானவர் தாய்மொழி தெலுங்காக இருந்தபோதும், தமிழ்ப் பாடல்களை அழகான உச்சரிப்புத் திறமையினால் மெருகூட்டியவர் ஏ.பி.கோமளா.
மிகச் சிறிய வயதிலேயே வானொலிக் கலைஞராகச் சேர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது தந்தை பார்த்தசாரதி கர்நாடக இசை வகுப்புகள் நடத்தி வந்தார். தந்தை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதைக் கேட்டு தானே பாடத்தொடங்கியவர் ஏ.பி.கோமளா. ஆறாவது வயதிலேயே இசை ஞானம் அவருக்குத் தானாகவே வந்தது. 9-ஆவது வயதில் வானொலி இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார். மற்றொரு வானொலிக் கலைஞரான கே.வி.ஜானகி அப்போது திரைப்படங்களில் பின்னணிப் பாடி வந்தார். ஏ.பி.கோமளாவை இவரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.
ஜூபிடர் பிக்சர்ஸ் 1949-களில் தயாரித்த “வேலைக்காரி” படத்தில் பாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார் சி.ஆர்.சுப்பராமன். உடன் இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இதில் ஏ.பி.கோமளா முதல் முதலில் பாடியது ‘உலகம் பலவிதம் அதிலேதான் ஒரு விதம்’ என்ற பாடல். இப்பாடலைப் பாடும்போது ஏ.பி.கோமளாவுக்கு வயது 13. அதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் மந்திரிகுமாரி வெளிவந்தது. அந்தப் படத்தில் ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் ஒரு பாடலைப் பாடினார். திரையிசையில் 1950-களிலேயே கர்நாடக இசையோடு இந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளும் கையாளப்பட்டு வந்தன. 1950-இல் வெளிவந்த ‘விஜயகுமாரி’ படத்தில் வைஜயந்திமாலாவுக்காக மேற்கத்திய இசையில் கே.டி.சந்தானத்தின் வரிகளில் சி.ஆர்.சுப்பராமனின் இசையில் லாலு லாலு லாலு லாலு இன்பம் என்றும் தங்கும் என்று எண்ணாதே துன்பம் வந்தால் சஞ்சலம் கொள்ளாதே’ என்ற பாடலைப் பாடினார்.
1952-இல் “பெண் மனம்” என்ற படத்தில் ரி.ஏ.மோதியுடன் இணைந்து அறஞ்செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று ஔவை சொன்னாளே என்ற இனிமையும் இளமையும் நகைச்சுவையும் ததும்ப அந்தப் பாடலைப் பாடினார். 1953-இல் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த “காதல்” என்ற படத்தில் ஸ்ரீரஞ்சனி என்ற நடிகைக்காக ஆனந்தமே ஆகா ஆனந்தமே என்று ஏ.பி.கோமளா பாடினார்.
பழம்பெரும் தெலுங்கு இயக்குநர் ரெட்டியின் தயாரிப்பில் 1953-இல் வெளிவந்தது வஞ்சம் என்ற படம். இந்தப் படத்தில் ரி.ஏ.கல்யாணம் இசையமைப்பில் ’வரப்போறார் இதோ வரப்போறார்’ என்ற பாடலைப் பாடினார். இது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்ணை கேலி செய்து பாடுவதாக அமைந்த பாடல்.
1954-இல் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் சுகம் எங்கே. இந்தப் படத்தில் தையற்கலையின் மகிமையைச் சொல்லும் ஒரு பாடல். ‘கண்ணைக் கவரும் அழகு வலை, கலைகளில் சிறந்தது தையற்கலை என்ற பாடலை கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்து ஏ.பி.கோமளா பாடினார்.
1955-இல் மீண்டும் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த ”கள்வனின் காதலி” படத்திலும் ’அல்லி மலர்ச் சோலையிலே இந்த வள்ளி இவள்’ என்ற பாடலை பி.பானுமதியுடன் சேர்ந்து பாடினார். ஏ.பி.கோமளா தனியாக பாடிய பாடல்களைவிட மற்றவர்களுடன் இணைந்து பாடிய பாடல்களே அதிகம்.
1956-இல் வெளிவந்த “நான் பெற்ற செல்வம்” என்ற படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார். மாதா பிதா குரு தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம் மற்றும் திருடாதே பொய் சொல்லாதே பிச்சை எடுக்காதே என்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். கா.மு.ஷெரீப்பின் வரிகள்.இசை ஜி.ராமனாதன்.
1958-இல் ‘உத்தம புத்திரன்’ படத்தில் பாலசரஸ்வதி தேவியோடு ஏ.பி.கோமளா இணைந்து ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் முத்தே பவளமே…… ஆளப் பிறந்த என் கண்மணியே என்ற பாடலைப் பாடினார். இவ்வாறு எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரிக்காக ஒரு பாடலைப் பாடினார் ஏ.பி.கோமளா. அதுவரை தனக்குரிய பாடல்களைத் தானே பாடி வந்தார் ரி.ஆர்.ராஜகுமாரி ரி.ஜி.லிங்கப்பாவின் இசையில் ஏ.பி.கோமளா ரி.ஆர்.ராஜகுமாரிக்கு பின்னணிப் பாடினார். அந்த பாடல் ‘யவ்வனமே என் யவ்வனமே அன்பொடு காதல் அள்ளி வழங்கும் சீதனமே என்ற பாடல்.
ஏ.பி.கோமளா தமிழ்த் திரையுலகில் கடைசியாக பாடியது 1969-இல் வெளிவந்த “மன்னிப்பு” என்ற படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் ‘குயிலோசையை வெல்லும்’ என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடியதே. தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியது போலவே மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலையாளத்தில் கே.பி.ஏ.சி நாடகக்குழுவுக்காக இவர் பாடிய பாடல்களைப் பல இளந்தலைமுறையினர் மேடைகளில் பாடி வருகின்றனர். மலையாளத்தில் மிகவும் பிரபலமான பாடல் ‘சக்கரைப்பந்தலில் தேன் மழைப் பொழியும் சக்ரவர்த்தி குமாரா’ என்ற பாடல்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவையில் 14.11.2015 அன்று திருமதி.விசாலாக்ஷி ஹமீது அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட “இன்னிசைச் சுவடிகள்” நிகழ்ச்சியிலிருந்து மேற்கண்ட விவரங்கள் திரட்டப்பட்டன.
http://www.m3db.com/artists/205

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக