செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நடிகர் லூசு மோகன் நினைவு தினம் செப்டம்பர் 16.


நடிகர் லூசு மோகன் நினைவு  தினம் செப்டம்பர் 16.

லூசு மோகன் என அழைக்கப்படும் ஆறுமுகம் மோகனசுந்தரம் (Arumugam Mohanasundaram, 8 பெப்ரவரி 1928 - 16 செப்டம்பர் 2012), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். சென்னைத் தமிழில் சரளமாகப் பேசி நடித்ததனால் இவர் பிரபலமானார். பல மேடை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்
காஞ்சிபுரத்தில் பிற்ந்தவர் மோகன். இவரது தந்தை ஆறுமுகமும் ஒரு நகைச்சுவை நடிகரே. 1944 ஆம் ஆண்டில் வெளியான ஹரிச்சந்திரா திரைப்படத்தில் பு. உ. சின்னப்பாவிடன் இணைந்து நடித்தார்.ஆனாலும், இவர் பிற்காலத்தில் கமலகாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

1979 இல் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர மராத்தி, போச்புரி, இந்தி, துளு ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

பிற்காலம்
இவரது கடைசித் திரைப்படம் தங்கர் பச்சானின் அழகி (2002) ஆகும். இவரது மனைவி பச்சையம்மாள் 2004 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். லூஸ் மோகன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக 2012 செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மறைந்த லூஸ் மோகனுக்கு மகன், 3 மகள்கள் உள்ளனர்.


லூஸ் மோகன் : குரலால் வாழும் நடிகன்

ஓய்வுபெற்ற பெரிய நடிகர்கள் திரும்பவும் செய்திகளில் தென்பட வேண்டுமென்றால்  அவர்கள் மறுபடியும்  சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது ஏதாவது படம் தயாரிக்க வேண்டி இருக்கும். குறைந்த பட்சம் தற்போதைய நட்சத்திர நடிகர்களின் படங்களின் வெற்றிவிழாக்களில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் வழங்கவேண்டி வரும். நகைச்சுவை நடிகன் அதுவும் நகைச்சுவைத் துணை நடிகன் திரும்பவும் செய்திகளில் அடிபட அவன் தன் சுவாசத்தையே நிறுத்தவேண்டி வரும். சினிமாவில் சமீபத்தில் காலமான நகைச்சுவை நடிகர் லூஸ் மோகனைப் பற்றிய தகவல் திரட்ட கூகிளில் அவர் பெயரில் தேடியபோது அவரது இறப்பைப் பற்றிய செய்திகள் பதிவுகளே கண்ணில்பட்டன. ஒரு வகையில் கொஞ்சம் ஆறுதலாகக் கூட இருந்தது. பல துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள் சந்தடியில்லாமல் அமைதியாக மரணம் அடைந்த செய்திகள் சினிமா ரசிகர்கள் பார்வைக்கு வராமலேயே போய்  விடுகின்றன. பானுசந்தர் சுமன் நடித்த எனக்காக காத்திரு என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த 'தாகம் எடுக்கிற நேரம்' பாடலில் அழகிய சின்ன நாசியுடன் மலர்ந்த கண்களோடு வரும்  நிஷா என்ற நடிகை சில வருடங்களுக்கு முன்னர் எய்ட்ஸ்  வந்து இறந்து போன தகவல் அறிந்திராமல் அந்தப் பாடலை அவளுக்காகவே பார்த்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் சொல்லித் தான் அந்தப் பெண் இறந்த தகவலே எனக்குத் தெரியும். பிறகு அந்த காதல் பாடல் கூட மனதை கனக்க வைக்கும் பாடலாகி அதை கொஞ்ச நாட்கள் கேட்காமலேயே இருந்தேன்.

இறப்பு செய்திக்கு முன்னர் ஒருமுறை செய்தியில் வந்தார் லூஸ் மோகன் . அவரது மகனும் மருமகளும்  அவரை பராமரிக்க மறுக்கிறார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த செய்தியும் தளர்ந்து ஒடுங்கிய அவரது தோற்றமும் என்னவோ செய்தது. பிறகு அவர் குடும்பத்தினர் சமாதானம் ஆகி விட்டதாகவும் அவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதாகவும் செய்திகள் வந்தன. அந்தப் பரிதாபத்துக்கு உரிய நடிகன் புகார் கொடுக்க போலீஸ் அலுவலகம் வரும் வரை என்ன நினைத்துக்கொண்டு வந்திருப்பாரோ. திரையுலகம் என்ன வாழ்க்கையே பெரிய சின்ன நடிகர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் புறக்கணித்து விடும் என்பது நாம் அறிந்தது தானே. லூஸ் மோகன் எனக்கு என் அண்ணன் மூலம் தான் அறிமுகம் ஆனார். அறந்தாங்கி த.மு.எ.ச கூட்டங்களில் கூட்டம் சேர்க்க என் அண்ணன் பலகுரல் நிகழ்ச்சி செய்வார். அவ்வப்போது புது நடிகர்கள் குரலில் அவர் பேசிக் காட்டினாலும் நிரந்தரமான மிமிக் குரலாக உசிலை மணியும், லூஸ்மோகனும் தான் இருந்தார்கள். முன்னவரை விட அடுத்தவரின் குரல் மிகவும் பிரத்யேகமானது. மேலும் அது பிராந்தியம் சார்ந்தது. காலம் காலமாக சென்னையில் வாழ்ந்த ஒரு குடிகார வழிப்போக்கன் குரல் அது. " அ ..வந்துக்கின்னு இருந்தேனா..திடீர்னு ஒரு நாயி எதுக்க வந்து கொல்ச்சிச்சி... நா இன்னா பண்ணேன்..ஒரு கல்ல எட்த்து வீசுனேன்  பாரு ..அது டபார்னு காலப் புட்ச்சி கட்ச்சி வச்சீச்சு பா!" என்று பேசி வளராத மிமிக்ரி கலைஞர்கள் இருக்க மாட்டார்கள். திரையுலகம் தராத அங்கீகாரத்தை அவர்களது தனித்த குரல்கள் மிமிக்ரி கலைஞர்களின் வழியாக மக்களிடம் பெற்றுத் தந்தன என்று சொல்லலாம். இன்றும் அவரது குரலில் பலர் பேசுகிறார்கள்.வேலைக்காரன், ரிக்ஷாக் காரன், வாட்ச்மேன் போன்ற அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் சாதாரண மனிதனின் வேடங்களை அவர் மிக எளிதாக செய்தார்.

கண்ணை சுருக்கி சுருக்கி அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தன. மனோரமா,பிந்துகோஷ் போன்ற நாயகிகளுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். கமலஹாசன் சட்டம் என் கையில் படத்தில் நடிக்கும்போது சென்னைத் தமிழ் உச்சரிப்புக்காக லூஸ் மோகனிடம் மொழி பயின்றார் என்பது வரலாறு. அந்த அளவுக்கு சென்னை தமிழின் வீச்சை திரையில் பாய்ச்சியவர் லூஸ் மோகன். நான் சென்னை ட்ரஸ்ட்புரம்  பகுதியில்  சில காலம் தங்கியிருந்தபோது அங்கு பல டிபிக்கல் சென்னை மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு நபரின் பெயர் ங்கோத்தா கோயிந்தன் என்று சொன்னார்கள். ஒரு வார்த்தையை தொடங்கு முன் பிள்ளையார் சுழி போல ங்கோத்தா என்று சொல்லி தான் பேசுவார் என்பதால் அவருக்கு இந்த அடைமொழியை வழங்கி இருந்தார்கள் அங்கு உள்ளவர்கள். ஒடிசலான உருவம், கலைந்த தலை, வாயில் பீடி, விளையாடும் சென்னை தமிழ்  என்று கோயிந்தன் எனக்கு லூஸ் மோகன் மாதிரியே தோற்றமளித்தார். திரையில் பார்த்த ஒரு கதாபாத்திரத்தை நேரில் கண்டது போல் இருந்தது அந்த நடிகன் எவ்வளவு தத்ரூபமாக அந்தப் பாத்திரத்தின்  தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று எனக்கு உணர்த்தியது. என்றாலும் இது போன்ற நடிகர்களுக்கு திரையில் பெரிய முக்கியத்துவம் இருக்காது. பிரபலமான நகைச்சுவை நடிகர்களுக்கு துணையாக வரும் பாத்திரங்களிலேயே நடித்து மறைந்து போன நடிகர்களுள் ஒருவராகி விட்டார்லூஸ்மோகன். எனினும் சில சிறு பட்ஜெட் படங்களில் சின்ன சின்ன நடிகர்களுடன் பிரதான நகைச்சுவை நடிகனாகவும் நடித்திருக்கிறார்.

அவரது தந்தை லூஸ் ஆறுமுகம் கூட ஒரு நடிகர் என்பது தான் நான் அறிந்திராத செய்தி. அதுவும்லூஸ்மோகனின் இறப்பு செய்திகளின் ஊடாக கிடைத்த செய்தி தான். சிவாஜி நடித்த நீலவானம் படத்தில் ஒரு காட்சியில் குடும்பம் சகிதமாக தியேட்டருக்கு படம் பார்க்க வருவார் லூஸ் ஆறுமுகம். டிக்கெட் கிழிப்பவராக வரும் சிவாஜியிடம் தன் குடும்ப நபர்களின் எண்ணிக்கையை சொல்லும்போது "அஞ்சி பொண்டாட்டி ஒரு கொழந்தைங்க" என்று சொல்லிவிட்டு பிறகு சுதாரித்துக்கொண்டு "அஞ்சி புள்ளைங்க ..ஒரு பொண்டாட்டி" என்று சொல்வார். பார்ப்பதற்கு லூஸ் மோகன் மாதிரியே இருப்பது பெரிய ஆச்சர்யம். அதே குரலும் கூட. லூஸ்அண்ட் டைட் என்ற நாடகத்தில் நடித்தால் லூஸ் ஆறுமுகம் என்ற பெயர் அவருக்கு வந்தது என்று சொல்கிறது ஒரு செய்தி. அந்தப் பெயர் மோகனிடமும் ஒட்டிக் கொண்டு விட்டது. என்றாலும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவரது பிராக்கெட் மோகன் என்று தான் டைட்டிலில் காட்டப்படுகிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறுக்கில் கோடுபோட்ட பனியன், கட்டம்போட்ட கைலி, இடுப்பில் பச்சை கலர் பட்டை பெல்ட் போன்றவை அவரது பெரும்பாலான படங்களின் பாத்திர உடைகளாக இருந்தன. எல்லா நகைச்சுவை நடிகர்களையும் போலவே லூஸ் மோகனுக்கும் சோகக் காட்சிகளில் சிறப்பாக நடிக்க முடிந்தது. சிவாஜி இயக்குனராக நடித்த 'சாதனை' படத்தில் உதவி இயக்குனராக வருவார். ஒரு காட்சியில் படப்பிடிப்பு சமயத்தில் அப்செட்டாக இருக்கும் சிவாஜி தவறான ஷாட் எண் சொல்லிவிட்டதாக எண்ணி லூஸ் மோகனைஅடித்துவிடுவார். பின்னர் தன தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்பார் சிவாஜி. அந்தக் காட்சியில் சிவாஜிக்கு முன்னாலேயே 'அழுது' நடித்து கண்கலங்க வைப்பார் லூஸ் மோகன்.

நன்றாக நினைவில் இருக்கும்படியாக கடைசியாக அவர் செய்த பாத்திரம் தங்கர்பச்சானின் அழகி படத்தில் அமைந்தது. கால்நடை மருத்துவமனை உதவியாளராக வரும் பாண்டுவின் தாய்மாமனாக வந்து விவேக் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார். தின வசூலில் பெரும்பங்கை டாக்டர் விவேக் எடுத்துக்கொள்ள  கடுப்பான பாண்டு லூஸ் மோகனை அழைத்து வந்து விவேக்கை மிரட்டுவார். மண்ணடி  மன்னாரு  என்ற அந்த பாத்திரத்தில் லூஸ் மோகன் கலக்கி இருப்பார். விவேக்கிடம் பிச்சுவா கத்தியை காட்டி மிரட்ட, அவர் அரிவாளை எடுப்பார். உடனே "ந்தா ..இதையும் நீயே வச்சிக்க" என்று ஜகா வாங்கி விடுவார் லூஸ்மோகன். பிறகு கால்நடைத்துறை அமைச்சராகவே ஆகிவிட்ட பாண்டுவிடம் விவேக் தகராறு செய்ய அவருக்கு டிஸ்மிஸ் ஆர்டர் டைப் பண்ணும் காட்சியில் அனாயாசமாக செய்திருப்பார் மோகன். பாண்டுவை மாட்டி விட நினைக்கும் விவேக் முதலமைச்சரின் போன் அழைப்பை மறைத்து வேறொருவர் பேசுவதாக சொல்லி பாண்டுவிடம் கொடுப்பார். பாண்டு கன்னாபின்னா என்று எகிற கொந்தளிக்கும் லூஸ்மோகன் போனை வாங்கி சொல்வார் " என் மாப்ளைய நீ மினிஸ்டர் ஆக்கினியா ? உன்ன அலேக்கா தூக்கி மல்லாக்க போட்டுடுவேன்".

அவருக்கு என்று பெரிய இடம் சினிமாவில் அமையவில்லை என்றாலும் அவர் விட்டுச் சென்ற அந்த சிறிய இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது உண்மை. மேலும் மிமிக்ரி கலைஞர்கள் அவரது குரலில் வெவ்வேறு வசனங்களை உருவாக்கி அவரை உலவ விட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது நிச்சயம் என்பதால் அந்திமக் காலத்தில் கஷ்டப்பட்ட அவரது ஆத்மா சற்று நிம்மதியடையும்.

-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை .
நன்றி -விக்கிபீடியா ,சந்தனார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக