புதன், 14 செப்டம்பர், 2016

நடிகர் எம். ஆர். ராதா நினைவு தினம் செப்டம்பர் 17,


நடிகர் எம். ஆர். ராதா நினைவு தினம் செப்டம்பர் 17,
எம். ஆர். ராதா (பெப்ரவரி 21, 1907 - செப்டம்பர் 17, 1979) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.

பிறப்பு
எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். மதராஸ் ராசகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.

சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார்.

குடும்பம்
நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவர் ராதாவுடன் ஒத்த அரசியல் மற்றும் கருத்துச் சாய்வு கொண்டிருந்தார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்து விட்டார். அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்து விட்டான். பின்னர் தனலெட்சுமி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் கீதா என்னும் இலங்கைப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் மகன்களான எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, மகள்களான ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர்.

எம். ஜி. ஆர். கொலை முயற்சி
முதன்மைக் கட்டுரை: ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967
1967, சனவரி 12 ஆம் நாள் எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா 1967 பிப்ரவரி 12 ஆம் நாள் முதல் 1971 ஏப்ரல் 27 ஆம் நாள் முதல் சிறையில் இருந்தார். [3] அப்பொழுது இராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார்.[சான்று தேவை] விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் ஈ.வெ.இராமசாமியின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக ஈ.வெ.இராமசாமியுடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.

அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

நடிப்பு
ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை ஐந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.

பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர்  என்ற வெற்றி நாடகத்தை திரை வெளியீடாக ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது 'இழந்தகாதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.

எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.

அரசியல் வாழ்வு
துவக்கத்தில் ஈ.வெ.இராமசாமியுடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும், பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார். காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் ஈ.வெ.இராமசாமி காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார்.[5] இவரது அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.

தனது சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்.

நடித்த படங்கள்
எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்:

ராசசேகரன்
பம்பாய் மெயில்
ரத்தக்கண்ணீர்
ஆயிரம் ரூபாய்
கை கொடுத்த தெய்வம்
பாவ மன்னிப்பு
சித்தி
புதிய பறவை
பலே பாண்டியா
பெற்றால்தான் பிள்ளையா
தாய்க்குப்பின் தாரம்
குமுதம்
கற்பகம்
தாயை காத்த தனயன்
பாகப்பிரிவினை
பணம் பந்தியிலே
நல்லவன் வாழ்வான்
எழுதிய நூல்கள்
ராமாயணத்தை தடை செய் (நூல்)
ராமாயணமா?கீமாயணமா?


அபூர்வ தகவல்கள் எம்.ஆர். ராதா
முற்போக்கு சிந்தனைகளை நக்கல் கலந்த நையாண்டியுடன் நற்போதனைகளாக உடன் நடிக்கும் பாத்திரங்களுக்குச் சொல்வது போல படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் அளித்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.
 * எம்.ஆர்.ராதாவின் பூர்வீகம் ஆந்திரப் பிரதேசம். ஆனால், ராதா பிறக்கும் போதே அவரது பெற்றோர் தமிழகத்தில் குடியேறிவிட்டனர். திருச்சிராப்பள்ளியிலுள்ள சங்கிலியாண்டபுரத்தில் ராதாவின் நினைவு இல்லமும், அவரது சிலையும் உள்ளது.
 * 1952 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளியிலுள்ள தேவர் மன்றத்தில் "போர்வாள்' என்ற நாடகத்தை நடத்திய போதுதான், பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரியால் எம்.ஆர்.ராதாவுக்கு "நடிகவேள்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. 1962 இல் தமிழக அரசு இவருக்கு "கலைமாமணி' விருது வழங்கியது.
 * எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராதிகா, நிரோஷா, ரகு, வாசு விக்ரம் ஆகியோர் எம்.ஆர்.ராதாவின் கலை வாரிசுகளாவர்.
 * தந்தையின் குரலைப் போலவே தனயனின் குரல் அமைவது அபூர்வம். அப்படி அமைந்தது, எம்.ஆர்.ராதாவின் தனயன்கள் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி ஆகியோரது குரல்களே ஆகும். அதேபோன்று, டி.எஸ்.பாலையாவின் தனயன் ஜூனியர் பாலையாவின் குரலும் அமைந்திருந்தது. இரு விதங்களில் குரலை மாற்றிப் பேசுவது எம்.ஆர்.ராதாவின் தனிச் சிறப்பாகும்.
 * "நல்ல இடத்து சம்மந்தம்' படம் தொடங்கி சில படங்களில் ராதாவுக்கு ஜோடியாக நடித்த செüகார் ஜானகி, ராதாவின் மைந்தர் எம்.ஆர்.ஆர்.வாசுவுடனும் "காவியத் தலைவி' படத்தில் நடித்திருக்கிறார்.
 * நடிகர்களில் நூல்கள் எழுதுவோர் அபூர்வம். எம்.ஆர்.ராதா எழுதிய நூல்கள்:
 * "அண்ணாவின் அவசரம்', "அண்ணாதுரையும் முன்னேற்ற நிலையும்', "ஆறவுன்ஸ் ஆட்சியிலே', "தடை செய் இராமாயணத்தை', "இராமாயணமா கீமாயணமா', "இராமாயண சிறப்பு மலர்' ஆகியவை.
 * எம்.ஆர்.ராதாவைப் பற்றி பிறர் எழுதிய நூல்கள்: "இராதாவும் தமிழ் நாடும்' -ஆதிமூலம், "விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்கள் ராதாவுக்கு இழைத்த துரோகங்கள்' -மு.ஏழுமலை, "வையகப் பெருநடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதா' -சிவகங்கை வான்மதி, "நடிகவேள் எம்.ஆர்.ராதா' -தில்லை கலைமணி, "இராமராஜ்யத்தில் இராதா' -திருவாரூர் கே. தங்கராசு, "எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்' -விந்தன், "சுட்டாச்சு சுட்டாச்சு சுட்டாச்சு' -சுதாங்கன், "பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.இராதா' -திருக்குறள் ச.சோமசுந்தரம் - ஆகியவை.
 * நடிகவேள் எம்.ஆர்.ராதா ~ஒரு நடிகராக மட்டுமின்றி காரோட்டுதல், கார் பழுது நீக்குதல், மின்சார பணிகள் செய்தல் போன்றவற்றிலும் திறமை மிக்கவராக இருந்தார்.
 * "தூக்குமேடை' நாடக விழா ஒன்றில்தான்,மு.கருணாநிதிக்கு "கலைஞர்' என்ற பட்டத்தை அளித்தார் எம்.ஆர்.ராதா. "தூக்குமேடை' நாடகத்தில் மு.கருணாநிதி கதாநாயகனாகவும், ராதா வில்லனாகவும் நடித்துள்ளனர். "போர்வாள்' நாடகத்தில் ராதாவுடன் ஈ.வெ.கி.சம்பத்தும் நடித்துள்ளார்.
 * எம்.ஆர்.ராதாவின், "இழந்த காதல்' நாடகத்தை கலைவாணர் அதே பெயரில் படமாக தயாரித்த போது, நாடகத்தில் ராதா நடித்த "ஜெகதீஷ்' என்ற வேடத்தை, கவிஞர் கே.பி.காமாட்சிக்கு கொடுத்து நடிக்க வைத்தார் கலைவாணர். கறார் குணம் கொண்ட ராதாவை சமாளித்து நடிக்க வைக்க முடியாது என்பதால் என்.எஸ்.கே. எடுத்த முடிவு இது.
 * திருவாரூர் தங்கராசு எழுதி, இவர் நடத்திய புகழ் பெற்ற "ரத்தக் கண்ணீர்' நாடகம், 14.01.1949 இல் திருச்சியில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தலைமையில் அரங்கேற்றமானது.
 * தமிழ் நாடகங்களிலேயே எம்.ஆர். ராதா நடித்த "ரத்தக் கண்ணீர்', ஆர்.எஸ்.மனோகர் நடித்த "இலங்கேஸ்வரன்' ஆகிய இரு நாடகங்கள்தான் அதிக தடவை நடத்தப் பட்ட நாடகங்களாகும்.
 * 1937 முதல் 1979 வரை 106 படங்களில் நடித்துள்ளார் எம்.ஆர்.ராதா.
 * சினிமாவை அதிகம் விரும்பாமல் நாடகங்களையே பெரிதும் விரும்பி நடித்து வந்த எம்.ஆர். ராதா, நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என பலவிதமான பாத்திரங்களில் நடித்திருந்தாலும்,1937 இல் அறிமுகமான முதல் படத்திலேயே கதாநாயகனாக நடித்த பெருமைக்குரியவர். படம்: "ராஜசேகரன்'.
 * இவர் நடித்த கடைசி படம்: "யாருக்கு யார் காவல்' (1979) என்ற படமாகும். ஒரே வருடத்தில் 24 படங்களில் நடித்த பெருமையை 1962 ஆம் ஆண்டில் இவர் பெற்றார். "பஞ்ச பூதம்', "யாருக்கு யார் காவல்' ஆகிய இரு படங்களும் இவரது இறப்புக்குப் பின்பு வெளியான படங்களாகும்.
 * நடிப்பு என்றால், எந்த வேடமாக இருந்தாலும் ஏற்று நடித்து, அந்த வேடத்திற்கு சிறப்பூட்டக் கூடியவர் ராதா. கதாநாயகன், சரித்திர கதாபாத்திரங்கள், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்துள்ளார். தொழுநோயாளியாக (ரத்தக் கண்ணீர்), சலவைத் தொழிலாளியாக (லவ குசா), முடி திருத்துபவராக (ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்), டீக்கடைக்காரராக (தாயைக்காத்த தனயன்) இப்படி எந்த வேடமானாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர்.
 * எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜசேகரன் (1937) படத்தில் 14 பாடல் காட்சிகள் இருந்தும், ஒரு பாடல் காட்சியில் கூட அவருக்கு பாடும் வாய்ப்பில்லை. ஆனால், கத்தி சண்டை இருந்தது. சத்தியவாணி (1940) படத்திலும் இதே மாதிரி (18 பாடல்களிருந்தும்) ஒரு பாடல் காட்சியில் கூட ராதாவுக்கு பாடும் வாய்ப்பில்லை.
 * "ரத்தக் கண்ணீர்' (1954) படத்திற்குப் பின்பு,4 ஆண்டுகள் கழித்து, "நல்ல இடத்து சம்மந்தம்' (1958) படத்தில் நாயகன் வேடம் ராதாவுக்கு. இப்படத்தின் அனைத்து பாடல்களையும் பாடகிகளே பாடியுள்ளனர். எல்.ஆர்.ஈஸ்வரி முதன் முதல் பாடியது இப்படத்தில்தான்.
 * எம்.ஆர்.ராதாவும் அவரின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவும், தாயைக் காத்த தனயன், சரசா பி.ஏ., தசாவதாரம்,படித்த மனைவி ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். மகள் ராதிகா நடித்த வேலும் மயிலும் துணை படத்தில் எம்.ஆர்.ராதா நடித்துள்ளார். ஆனால், ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை.
 * ராதா இரட்டை வேடமேற்று நடித்த ஒரே படம், பலே பண்டியா படம் மட்டுமே. தனவந்தர் அமிர்தலிங்கம் பிள்ளை, கள்ளர் தலைவன் கபாலி ஆகிய இரு வேடங்களே அவை.
 * எம்.ஜி.ஆர். (21 படங்கள்), அறிஞர் அண்ணா (நல்லவன் வாழ்வான்), மு.கருணாநிதி (வண்டிக்காரன் மகன், ஆடு பாம்பே) - என்.டி.ராமாராவ் (லவ குசா) ஆகிய நான்கு முதலமைச்சர்களுடன் ராதா திரையுலக தொடர்பு கொண்டுள்ளார்.
 * "விளக்கேற்றியவள்' என்ற படத்தில் மட்டுமே ராதா நல்லவராக நடித்துள்ளார்.
 * பொதுவாக சினிமாவில் எட்டு எழுத்தில் தலைப்பு வைத்தால் படம் ஓடாது என்பார்கள். ஆனால், எட்டு எழுத்துக்களைக் கொண்ட வெற்றிப் படம்தான் "ரத்தக் கண்ணீர்'. பெற்ற தாயையும் கட்டிய மனைவியையும் நாகரீக (கவுன்) உடை அணியச் சொல்லும் நாயகன், சேலை கட்டிய காந்தா என்ற பெண்ணிடம் மயங்கியதும், பெண்கள் தொடர்பினால் ஒருவனுக்கு தொழுநோய் ஏற்படுமா என்பதும் இப்படத்தைப் பற்றி அந்நாளில் எழுந்த விமர்சனங்களாகும்.
 எம்.ஆர்.ராதா கதாநாயகனாக 7 படங்களில் நடித்திருக்கிறார். அவை, ராஜசேகரன் (1937), சத்தியவாணி (1940), ரத்தக் கண்ணீர் (1954), நல்ல இடத்து சம்மந்தம் (1958), கவிதா (1962), சரசா பி.ஏ. (1965), விளக்கேற்றியவள் (1965) ஆகியவை.

 எம்.ஆர்.ராதா நடித்த நாடகங்கள்: ரத்தக் கண்ணீர் (3020 நாட்கள்), தூக்குமேடை (800 நாட்கள்), இலட்சுமிகாந்தன் (760 நாட்கள்), போர்வாள் (410 நாட்கள்), இழந்த காதல் (190 நாட்கள்), இராமாயணம் (170 நாட்கள்), தசாவதாரம் (110 நாட்கள்), கள்வர் தலைவன், பதிபக்தி, பம்பாய் மெயில், விமலா அல்லது விதவையின் கண்ணீர், கதம்பம் - ஆகிய 12 நாடகங்கள்.

 எம்.ஆர்.ராதா மற்ற நடிகர்களுடன் நடித்த படங்கள்: எம்.ஜி.ஆர். உடன் நடித்த படங்கள் - 21; சிவாஜி கணேசனுடன் நடித்த படங்கள் - 15 ; ஜெமினி கணசனுடன் நடித்த படங்கள் - 12; எஸ்.எஸ்.இராஜேந்திரனுடன் நடித்த படங்கள்- 13; ஜெய்சங்கருடன் நடித்த படங்கள் - 5; கல்யாண்குமாருடன் நடித்த படங்கள் - 4; சி.எல்.ஆனந்தனுடன் நடித்த படங்கள் - 3; மற்றவர்களுடன் நடித்த படங்கள் - 26; மொத்த படங்கள் - 106
 ராதா நடித்த சில படங்களில் பாடல் காட்சிகள் விபரம்: "ரத்தக் கண்ணீர்' படத்தில் இவர் நடித்த "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி' என்ற பாடல் காட்சியில் சி.எஸ்.ஜெயராமன் குரலும், நடு நடுவே இவரின் புலம்பல் பேச்சும் போட்டி போட்டுக் கொண்டு பாடலை வெற்றியடையச் செய்தன.
 காஞ்சித் தலைவன் (இதுவும் 8 எழுத்து) படத்தில் உலகம் சுத்துது எதனாலே (ஏ.எல்.ராகவன் குரல்), குமுதம் படத்தில் மாமா மாமா, காயமே இது பொய்யடா (டி.எம்.எஸ். குரல்), ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே (ஜி.கே.வெங்கடேஷ் குரல்), பலே பாண்டியா படத்தில், நீயே உனக்கு என்றும் (எம்.ராஜு குரல்), பஞ்சாமிர்தம் படத்தில் பொன்னார் மேனியனே, கந்தர் அலங்காரம் படத்தில் கந்தா கடம்பா கதிர்வேலா ஆகிய பாடல் காட்சிகளில் நடித்துள்ள எம்.ஆர்.ராதா, உலகம் சிரிக்கிறது என்ற படத்தில் வலது கையில் தீச்சட்டியும் இடது கையில் வேப்பிலைக் கொத்துமாக ஒரு பக்தியாட்டம் ஆடியுள்ளார். கொள்கை வேறு தொழில் வேறு என்று நினைத்தவர் இவர். இவர் நடித்துள்ள பக்திப் படங்கள் மகா வீர பீமன், லவ குசா, அருணகிரிநாதர், பட்டிணத்தார், தசாவதாரம் (ஹிரண்யன் வேடம்), வேலும் மயிலும் துணை, கந்தர் அலங்காரம் ஆகியவை.
 எம்.ஆர்.ராதா மறைவு: 14.04.1907 இல் பிறந்து 17.09.1979 இல் மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா பெரியாரின் மேல் அளவிலா அன்பும், அவரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் தேதியன்றுதான் எம்.ஆர்.ராதா மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக