புதன், 14 செப்டம்பர், 2016

பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்த நாள் செப்டம்பர் 16,


பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்த நாள் செப்டம்பர் 16,
எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.

பிறப்பும், குடும்பப் பின்னணியும்
எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் 1916 புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி அன்று தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்தார். அவரது தந்தையார் சுப்பிரமணிய அய்யர் என்று பின்னாட்களில் பேட்டிகளில் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார். இவர் தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.

இசையுலகில் காலடி
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் "மரகத வடிவம்" என்ற செஞ்சுருட்டி இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்து கொண்டார்.

இசை ஆர்வம்
இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு. செம்மங்குடி சிறீனிவாச ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜ மாணிக்கம் பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார். அப்துல் கரீம்கான் மற்றும் பாதே குலாம்கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.

1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.பி இசைத்தட்டில் "மரகத வடிவும் செங்கதிர் வேலும்" எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.

சினிமாவினுள் பிரவேசம்
அந்தக் காலத்தில் பாடகிகள்தான் நடிகை ஆக முடியும். எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை. நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை "சேவாசதனம்" படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் "ஆதரவற்றவர்க்கெல்லாம்" என்ற ஜோன்புரி இராகப்பாடலும், "இஹபரமெனுமிரு" என்ற சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும் இன்னும் பலரின் நினைவில் உள்ளன.

சகுந்தலை
அதனைத் தொடர்ந்து காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். "மிகக் குதூகலிப்பதும் ஏனோ", "எங்கும் நிறை நாதப்பிரம்மம்", "பிரேமையில் யாவும் மறந்தேனே" ஆகிய பாடல்கள் மிகவும் புகள் பெற்றவை. இப்படத்தில் துஷ்யந்தனாக நடித்தவர் சங்கீத வித்துவான் ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆவார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் கோகிலகான இசைவாணி என விளம்பரம் செய்யப்பட்டார்.


திருமணம்
சகுந்தலை படத்தைத் தயாரித்தவர் கல்கி சதாசிவம் ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரதும் இணைப்பால் இசை உலகு நன்மையடைந்தது. 1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கியும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வாரஇதழ் தொடங்கப்பட்டது. சாவித்திரி படத்தில் "மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே", "மங்களமும்பெறுவாய்" போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.


மீரா திரைப்படத்தின் வரவேற்பும், சமூக சேவைகளும்
சதாசிவம் இசைப்பிரியன் மாத்திரமல்ல, இசை கற்றவருங்கூட. அதனால் மனைவியின் இசையை பக்தி மார்க்கத்துக்குத் திருப்ப முயன்றார். பக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல் வெளியிடப்பட்டது. இப்படம் அற்புதமான பாடல்கள் நிறைந்தது. "காற்றினிலே வரும் கீதம்", "பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த", "கிரிதர கோபாலா", "எனது உள்ளமே" போன்ற பாடல்கள் இன்னமும் அனைவரது செவிகளிலும் ஒலிக்கின்றன. பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவியரசு சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு "இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனப் பாராட்டினார்.

இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. 1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.

விருதுகள்
பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன. அவையாவன:

பத்ம பூசண், 1954
சங்கீத நாடக அகாதமி விருது, 1956
சங்கீத கலாநிதி, 1968
இசைப்பேரறிஞர் விருது, 1970[3]
மக்சேசே பரிசு, 1974
பத்ம விபூசண், 1975
சங்கீத கலாசிகாமணி விருது, 1975 [4]
காளிதாஸ் சம்மன் விருது, (1988 -1989)
நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது, 1990
பாரத ரத்னா - 1998
வெளி இணைப்புகள்
"ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என குழந்தைகளுக்கு இதமான பாடலை பாடினார் மகாகவி பாரதியார். அவ்வாறே ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு "பாடு" என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். அது போலவே நடந்தது. சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமி தான் இசையுலகம் போற்றும் இசையின் இமயம், இசையின் ராணியான எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள். மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம். எஸ். சுப்புலட்சுமி ஆகும்.

"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருதும் வழங்கப்பட்டது.


எம்.எஸ்.சுப்புலட்சுமி அபூர்வ தகவல்கள் 
எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த முதல் படமான "சேவாசதனம்' 1938- ஆம் ஆண்டு வெளிவந்தது. "கோகிலகான எம்.எஸ். சுப்புலட்சுமி' என்ற பெயருடன் அவரை விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இந்தத் திரைப்படத்தில் அவர் பாடிய "மா ரமணன், உடா ரமணன்', " மலரடி பணிவோமே தினமே', " ஓ ஜகஜ் ஜனனீ ஓங்கார ரூபிணி' போன்ற பாடல்கள் வெகுவிரைவிலேயே பிரபலமாகி, பின்னர் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தன.
முதன்முதலாக எம்.எஸ். சுப்புலட்சுமி தனது 10 வயதில் பாடி பதிவாக்கப்பட்ட பாடல் "மரகத வடிவும் செங்கதிர் வேலும்' வந்த வேகத்திலேயே இசைத்தட்டு விற்றுத் தீர்ந்தது. அந்தக் காலத்தில் இசைத்தட்டு உலகில் புதிய சரித்திரம் படைத்தது. செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்திருத்தது அந்தப் பாடல்.
1941 - இல் "சாவித்திரி' படத்தில் நடிப்பதற்காக கொல்கத்தா செல்லும் வழியில் சேவாக்ராமம் சென்று அண்ணல் காந்தியடிகளை தரிசித்து பிரார்த்தனைப் பாடல்களை மனம் உருகப் பாடினார் எம்.எஸ். சுப்புலட்சுமி.
அந்த கீதத்தில் மெய்மறந்த காந்திஜி ""ஹரி தும் ஹரோ ஜனகீபீர்' என்ற பஜன் எம்.எஸ்.ஸின் குரலில் நிச்சயமாக எனது பிரார்த்தனையில் இடம் பெற வேண்டும்'' என்றார்.
உலகம் முழுவதிலும் அனைத்து மேடைகளிலும் மதச் சார்பில்லாமல் இசையை வழங்கி வந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆவார். ரோமில் போப் ஆண்டவருக்கும் தமது இனிய இசையை வழங்கி அவரது தங்கப் பதக்கங்களைப் பெற்று, அதை உறுதிப்படுத்தினார்.
காஞ்சி பரமாசார்யார் முன் குருவந்தனமும் பாடுவார். சீக்கியர்களின் கோயில்களில் பாடப்படும் "ஷபத்' தும் பாடுவார். சமஸ்கிருதம், இந்தி, குஜராத்தி, பெங்காலி, மலையாளம், உருது, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் முதலான மொழிகளில் பாடும் திறன் பெற்ற ஒரே கர்நாடக சங்கீதப் பாடகி இசையரசி எம்.எஸ்.தான்.
1954- ஆம் ஆண்டின், சுதந்திர பாரத தேசத்தில் தேசிய விருதுகள் நிர்மாணிக்கப்பட்டபோது, முதல் ஆண்டிலேயே "பத்மபூஷன்' பட்டம் எம்.எஸ்.ஸýக்கு அளிக்கப்பட்டது.
1966 அக்டோபர் 23-ஆம் தேதி எம்.எஸ். சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி செய்தார். இந்தப் புகழ் இன்று வரை எம்.எஸ். ஒருவருக்குத்தான் கிடைத்திருக்கிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் பாடி, அதன் மூலம் வரும் ராயல்டி தொகையை அப்படியே திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் வேத பாடசாலைக்கு அளித்தார் எம்.எஸ்.
1956-ல் எம்.எஸ்.ஸýக்கு ஜனாதிபதி பரிசு வழங்கப்பட்டது. அதே போன்று சென்னை மியூசிக் அகாதெமியில் "சங்கீத கலாநிதி' விருது பெற்ற முதல் பெண் கலைஞர் இவர்தான்.
சென்னைக்கு 1946- ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்து இந்தி பிரச்சார சபாவில் தங்கியிருந்தார். அப்போது ஒவ்வொரு நாள் மாலையிலும் பிரார்த்தனைக் கூட்டங்களைக் காந்திஜி நடத்துவார். ஏராளமான மக்கள் வந்து கலந்து கொண்டு மகாத்மாவோடு பஜன் பாடல்களைப் பாடுவார்கள்.
காந்திஜி தனக்குப் பிடித்தமான "வைஷ்ணவ ஜனதோ' பாடலை பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு எம்.எஸ். சுப்புலட்சுமி பாட வேண்டும் என்று விரும்பினார்.
எம்.எஸ். அதைப் பெருமையோடு ஏற்றுக் கொண்டு அண்ணல் விரும்பிய அந்தப் பாடலை நெஞ்சுருகப் பாடினார்.
அமெரிக்காவுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி பாடச் சென்ற போது கச்சேரி செய்ய வேண்டிய தினத்தன்று - திடீரென அவரது குரல் எழும்பவில்லை. அனுதினமும் அவர் போற்றி வணங்கும் காஞ்சி முனிவரை நினைத்து உள்ளமுருகி பிரார்த்திக்க அடுத்த சிலமணி நேரங்களிலேயே அவரது குரல் பழைய நிலைமைக்கு வந்துவிட்டது.
அண்டை நாடான இலங்கைக்குச் சென்று கச்சேரிகள் மூலம் நாற்பது லட்ச ரூபாய் நிதி திரட்டி, அவ்வளவு தொகையையும் அந்த நாட்டின் பல்வேறு தர்ம ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாகத் தந்து விட்டுத் திரும்பினார் எம்.எஸ். சுப்புலட்சுமி.

தனது இசைப்பணியின் மூலம் மக்களை மேம்படுத்தி வருவதோடு அப்பணியின் மூலம் கிடைக்கும் செல்வத்தைச் சமூக பணிக்கும், அறப்பணிக்கும் அளித்து மக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்டு வரும் மக்கள் தொண்டர் என்றும் எம்.எஸ் சுப்புலட்சுமி குறிப்பிட்டு, அந்த அடிப்படையில் அவருக்கு 1974- இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான "மகசாசே விருது' வழங்கப்பட்டது.
மணிலா சென்று, குறிப்பிட்ட விழாவில் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர், எம்.எஸ். ஸýக்குப் பண முடிப்புடன் பரிசினையும் வழங்கினார். எம்.எஸ். வழக்கம் போலவே, அந்தச் செல்வத்தை, மருத்துவ, சமய, கலாச்சாரப் பணிகளைச் செய்து வரும் மூன்று நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கச் செய்துவிட்டார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி கச்சேரிக்கு ஒருமுறை லண்டனில் நடந்த இந்தியத் திருவிழாவின்போது அரங்கேற்றப்பட்டது. இந்திய அரசின் அழைப்பை ஏற்று, இந்த விழாவில் பாடி ஆங்கில இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டார் எம்.எஸ். இந்திய அரசு, எம்.எஸ்.ஸýக்கு கணிசமான தொகை ஒன்றுக்கு "செக்'கை அனுப்பித் தந்து பெருமை செய்தது.
ஜெர்மனியின் முக்கிய நகரமான பான் நகரில் "லா ரிடோன்ட்' அரங்கம் மிகப்புகழ் பெற்றது. மேற்கத்திய இசை மாமேதையும், மேலை நாட்டு இசையின் தந்தை என்று போற்றப்படுபவருமான பீத்தோவன் இந்த அரங்கிலேதான் தனது இசையை அரங்கேற்றினார். இந்த உலகப் புகழ்பெற்ற அரங்கில் இந்திய இசை பேரரசி எம்.எஸ்.ஸýம் தமது கர்நாடக இசையை அரங்கேற்றி அமுதகானம் பொழிந்தார்.
"குறையொன்றுமில்லை' என்று பல செல்போன்களில் ரிங் டோனாக ஒலிக்கிறதென்றால் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரலின் மகிமையே காரணம். இந்தப் பாடலை எழுதியவர் , ராஜாஜி. மெட்டமைத்தவர் சமயநல்லூர் வெங்கட்ராமன்.
இரட்டைஷேட் ஜரிகை - நீலவண்ண உடல் பகுதியை கொண்ட பட்டுப்புடவையை எம்.எஸ். சுப்புலட்சுமி பிரத்யேகமாக அணிவார். இதனால் இந்த நீலவண்ணப் புடவைக்கு "எம்.எஸ். ப்ளூ' என்றே பெயர் வந்துவிட்டது. சொன்னவர் நல்லிகுப்புசாமி செட்டியார்.
சதாசிவத்தின் மனைவியாகிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதா கிருஷ்ணனை நினைக்கும் பக்தை மீராவாக, "மீரா' படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றார். ஐந்து படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இந்த ஐந்து படங்களின் மூலம் அழியாப் புகழ் பெற்றார் இவர்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த படங்கள்: சேவா சதனம் (1938), சாவித்திரி (1941), சகுந்தலை (1940), மீரா (1945), மீரா 1945 (இந்தி)
கல்கத்தாவிலுள்ள ரவீந்திர பாரதி பல்கலைக் கழகமும், டெல்லி பல்கலைக் கழகமும் இவருக்கு டாக்டர் பட்டம் அளித்து கெüரவித்தன.
1974 இல் பிலிப்பைன்ஸ் நாடு வழங்கிய ரமான் மிக்சாய் விருது இவருக்கு கிடைத்தது. இவ்விருது நோபல் பரிசுக்கு இணையான விருதாகும்.
இவர் நடித்து 1945 இல் திரைக்கு வந்த "மீரா' படத்திற்கு, 1949 இல் செக்கொஸ்லேவியா நாடு வழங்கிய சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது.
சாவித்திரி, சகுந்தலை, சேவா சதனம் - ஆகிய படங்கள் சுமாரான வெற்றியடைந்தன. தமிழ் மீரா படம் 100 நாட்களுக்கு திரையிடப்பட்டு வெற்றியடைந்தது. ஆனால் இந்தி மீரா படம் மாபெரும் வெற்றியடைந்தது. காரணம், வட இந்திய பக்தையான மீராவை தமிழ் ரசிகர்களை விட, இந்தி ரசிகர்கள் மிக விரும்பிப் பார்த்து படத்தை வெற்றியடைய வைத்து விட்டார்கள்.
இவர் நடித்த 4 தமிழ்ப் படங்களின் வெற்றிக்கு பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களும் ஒரு காரணம். மேலும், சிறந்த இயக்குநர்களின் இயக்கமும் மற்றொரு காரணம். கே.சுப்பிரமணியம் (சேவா சதனம்), நடிகை லட்சுமியின் தந்தை ஒய்.வி,ராவ் (சாவித்திரி), அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் ஆர். டங்கன் (சகுந்தலை, மீரா) ஆகிய இயக்குநர்களின் சிறந்த இயக்கத்தில் இவர் சிறப்பாக நடித்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் எம்.ஜி.ஆர். மீரா படத்தில் தளபதி ஜெயமல் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.
இவர் நடித்த 5 படங்களில், இவரின் முதல் படமான சேவா சதனம் படம் மட்டுமே சமூக கதையைக் கொண்ட படமாகும். மற்ற 4 படங்களும் சரித்திர புராண கதைகளைக் கொண்ட படங்களாகும்.
மீரா படத்தில் பருவ வயது மீராவாக இவர் நடிக்க, பால மீராவாக நடித்தது இவர் கணவரின் முதல் தாரத்து மகள் பேபி ராதா. இப்படத்தைத் தயாரித்தவர், இவரின் கணவர் டி.சதாசிவம். படத்தின் வசனத்தை எழுதியவர் கல்கி. இசை எஸ்.வி.வெங்கட்ராமன். பாடல்கள் பாபநாசம் சிவன். இப்படி ஒரு பலமான கூட்டமைப்பில் உருவாகிய இப்படம் வெற்றியை எட்டியது. இப்படம் மீரா பிறந்த ராஜஸ்தான் பூமியிலேயே படமாக்கப்பட்டது.
சேவா சதனம் படத்தில், நாத்தனார் குண்டம்மாள் (சீதாலக்ஷ்மி) கொடுமையில் சிக்கி தவிக்கும் நாயகி சுமதியாக சுப்புலட்சுமி நடித்துள்ளார். நாயகியின் கணவர் ஈஸ்வர சர்மாவாக நடித்தவர் எஃப்.ஜி.நடேச ஐயர். இப்படத்தின் நாயகி ஸýமதி தனது இசைத்திறனால் முன்னேறி சிறந்த பாடகியாக விளங்குகிறாள். இவள் பாடகியானதை இவளது குடும்பத்தினர் கடுமையாக எதிர்க்கின்றனர். படத்தில் நாயகியின் முன்னேற்றத்தை அவளது கணவன் விரும்பவில்லை. ஆனால் சுப்புலட்சுமியின் நிஜவாழ்வில், அவரின் கணவர், சுப்புலட்சுமியின் கலைப்பயணத்திற்கு உறுதுணையாக விளங்கினார்.
சாவித்திரி படத்தில் இந்தி நடிகை சாந்தா ஆப்தே நாயகி சாவித்திரியாக நடித்திருந்தாலும், நாரதராக நடித்த சுப்புலட்சுமிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நாரதருக்கு 6 பாடல்கள் பாடும் வாய்ப்பும், கதையை நகர்த்துவதில் முக்கியப் பங்கும் இருந்தது. இப்படத்தில் நடித்தற்காக இவரது ஊதியம் (1941இல்) 40,000 ஆயிரம் ரூபாய். தனது கணவரின் நண்பர் கல்கிக்கு, கல்கி பத்திரிகை தொடங்குவதற்காக இத்தொகை முழுவதையும் தந்துவிட்டார் சுப்புலட்சுமி.
மகாகவி காளிதாஸரின் சாகுந்தலம் காவியத்தின் கதைதான் சகுந்தலை படத்தின் கதை. சுப்புலட்சுமி சகுந்தலையாகவும், ஜி.என்.பாலசுப்பிரமணியன் துஷ்யந்தனாகவும் நடித்திருந்தனர். கலைவாணர் மற்றும் டி.எஸ். துரைராஜின் காமெடி காட்சிகள் படத்தில் சிறப்பாக இருந்தது.
இந்த 4 படங்களிலும் மொத்தம் 37 பாடல்களைப் பாடியுள்ளார் சுப்புலட்சுமி. இவர் தனித்து 29 பாடல்களையும், குழுவினருடன் 5 பாடல்களையும், வி.நாகையாவுடன் 1 பாடலையும், ஜி.என்.பாலசுப்பிரமணியத்துடன் 2 பாடல்களையும் பாடியுள்ளார். இந்திப் படம் மீராவில் இவர் தனித்து 4 பாடல்களையும், வி.நாகையாவுடன் 1 பாடலையும் பாடியுள்ளார். மீரா, சகுந்தலை, சாவித்திரி படங்களின் பாடல்கள் அதிகம் பிரபலமாயின.


நன்றி-விக்கிபீடியா ,சினிமா எக் ஸ் பிரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக