இயக்குநர் ஸ்ரீதர் பிறந்த தினம். ஜூலைலை 22 ,1933 .
ஸ்ரீதர் ( 1933 - அக்டோபர் 20 , 2008 ) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு , கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர்.
வாழ்க்கைச் சுருக்கம்
ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த இளங்கோவனின் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் என்பதும், அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.
1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".
ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள்
தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டியுள்ளனர். ஸ்ரீதரின் ஆரம்பப்படங்கள் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் வின்செண்ட் என்னும் ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் அன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன. சரோஜாதேவி (கல்யாணப்பரிசு), ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை), நிர்மலா, மூர்த்தி (வெண்ணிற ஆடை - இப்படமே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாகவும் இருந்து வருகிறது) ஆகியோர் ஸ்ரீதரால் அறிமுகமான நட்சத்திரங்கள்.
பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப்பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் , வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்க நேரமில்லை (சஷிகபூர், கிஷோர் குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான கல்யாணப் பரிசு, விடி வெள்ளி போன்றவை தவிர, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம் போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி
இளையராஜா வுடன் அவர் இணைந்த இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.
இயக்கிய திரைப்படங்கள் சில
1957 கல்யாணப் பரிசு
1960 விடிவெள்ளி , மீண்ட சொர்க்கம்
1961 தேன் நிலவு
1962 நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள்
1963 நெஞ்சம் மறப்பதில்லை
1964 காதலிக்க நேரமில்லை
1965 சுமை தாங்கி , வெண்ணிற ஆடை
1967 ஊட்டி வரை உறவு
1968 கலாட்டா கல்யாணம்
1969 சிவந்த மண்
1971 உத்தரவின்றி உள்ளே வா
1972 அவளுக்கென்று ஒரு மனம்
1974 உரிமைக்குரல்
1978 இளமை ஊஞ்சலாடுகிறது
1979 அழகே உன்னை ஆராதிக்கிறேன்
1980 சௌந்தர்யமே வருக வருக
1981 நினைவெல்லாம் நித்யா
மறைவு
சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.
நெஞ்சம் மறப்பதில்லை - இயக்குநர் ஸ்ரீதர்
என்னுடைய சிறிய வயதில் நான் பார்த்த பிரம்மாண்டமான திரைப்படங்களே திரையுலகம் பற்றிய ஒரு மாயையை எனக்குள் தோற்றுவித்திருந்தது.
லவகுசா, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், அடிமைப்பெண், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், என்ற திரைப்படங்களையெல்லாம் நான் காணும்போது அதனுடைய கதையைவிட அதைப் பெரிதாக உருவாக்கிய சித்திரம்தான் எனது மனக்கண்ணில் ஆழ்ந்திருந்தது.
அந்த வரிசையில் ஒரு மதியானப் பொழுதில் திண்டுக்கல் சென்ட்ரல் திரையரங்கில் நான் பார்த்த “சிவந்த மண்” என்கின்ற திரைப்படம் எனக்குள் ஏனோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது.. எப்படி இத்தனை நாடுகளுக்குப் போய், இவ்வளவு செலவு செய்து, இத்தனை ஜோடனைகள் செய்து, அரங்குகள் அமைத்து செலவு செய்து படத்தை எடுத்தார்கள் என்ற சிந்தனை, திரைப்படம் பற்றிய அறிவு எனக்குள் விளைந்த நாளிலிருந்தே தோன்றியிருந்த ஒன்று.
அப்போது ஸ்ரீதர் என்கிற இயக்குநர் மிகப் பிரம்மாண்டமான இயக்குநர் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னாளில் எனது அம்மாவுடன் ஒரு நாள் அதே சென்ட்ரல் திரையரங்கில் “போலீஸ்காரன் மகள்” திரைப்படத்தைக் காண நேர்ந்தபோது ஸ்ரீதரின் பெயர் மறுபடியும் வீட்டில் உச்சரிக்கப்பட்டபோது அந்த இயக்குநர்தான் இவர் என்பதும் எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திரையுலகம் எனக்குள் வண்ணமயமான கனவுகளைக் கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தபோதுதான் ஸ்ரீதர் பற்றி மேலும் அறிந்தேன்.
திரையில் மின்னிய அலங்காரத் தோரணங்களையும், படோபடமான காட்சியமைப்புகளையும்,. கதாநாயகனின் கையில் இருக்கும் வாள் காட்டும் வீச்சில் தெறிக்கும் வீரத்தையும், நாயகியின் தலைகுனிவில் தெரியும் வெட்கத்தையும் மட்டுமே வைத்து திரைக்கதைகள் பின்னப்பட்டுக் கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் வசனங்களைத் துருப்புச் சீட்டுக்களாக வைத்து திரையில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியவர் ஸ்ரீதர்.
டி.கே.சண்முகம் அண்ணாச்சியால் “ரத்தபாசம்” என்கிற திரைப்படத்தின் வசனகர்த்தாவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஸ்ரீதர் அடுத்தத் தலைமுறையின் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழப் போகிறார் என்று சண்முகம் அண்ணாச்சிக்கே நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“அவர் வசனம் மட்டுமே எழுதியத் திரைப்படங்களிலும் தனித்தன்மை வாய்ந்தவராகத்தான் தெரிந்தார்” என்று அப்போதே பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மனதாரப் பாராட்டியிருந்தார்.
அவர் திரைப்படங்கள் இயக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் ஒரு புதுமையைச் சேர்க்க விரும்பித்தான் செட் பிராப்பர்ட்டீஸ் என்றழைக்கப்படும் பொருட்களையே ஒரு குறியீடாக, கதாபாத்திரங்களாக பயன்படுத்தத் தொடங்கினார்.
“கல்யாணப் பரிசு” திரைப்படத்தில் அவர் காதலர்களுக்காக ஆரம்பித்து வைத்த ஒற்றை வரி வசனம் காலம் கடந்தும் இன்றைக்கும் காதலர்களால் மறக்க முடியாத வசனமாக உள்ளது. “அம்மா நான் காலேஜ்க்கு போயிட்டு வரேன்..” என்று சரோஜாதேவி தனது காதலருக்காக ஊருக்கே கேட்கும் அளவுக்குச் சொல்லிவிட்டுச் செல்லும் காட்சி இன்றைக்கும் “கல்யாணப் பரிசு” படத்தின் மையமான காட்சியாக உள்ளது.
வெறும் வாய் வார்த்தைகளால் சிரிக்க வைத்துவிட்டு திரையரங்கைவிட்டு வெளியில் வந்தவுடன் மறந்துவிடக் கூடியதல்ல இவருடைய திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள். அனைத்தும் மீண்டும், மீண்டும் அசைபோட வைக்கும் ரகங்கள்.
இன்றைக்கும் குப்பை கொட்டுபவரிலிருந்து, கடைசியாக ஆட்குறைப்பால் வெளியேற்றப்படும் ஐ.டி. அலுவலக ஊழியர்கள் வரை அனைவராலும் உச்சரிக்கப்படும் “மன்னார் அண்ட் மன்னார் கம்பெனி” இவருக்கு மட்டுமே சொந்தம்..
அந்த “பைரவர்” கேரக்டரில் வாழ்ந்து காட்டிய தங்கவேலுவையும், அவர் தம் துணையையும் இன்றைக்கும் நம் ஊரில், நம் தெருவில், நம் வீட்டில் என்றைக்காவது ஒரு நாள் நாம் நிச்சயம் காண முடியும். காலம் கடந்து நிற்கிறதே “கல்யாணப் பரிசின்” காட்சிகள்..
அத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப் பலவாறாக யோசித்து வைத்து ஒரு துன்பவியல் நாடகம்போல் ஆக்கியிருந்தார் ஸ்ரீதர். அதனை பல இயக்குநர்கள் பார்த்தும், விநியோகஸ்தர்கள் பார்த்தும் முடிவை மாற்றும்படி சொல்லியும் “முடியாது.. பரீட்சித்துப் பார்ப்போம்” என்று சொல்லி அதனையே வைத்து வெற்றியும் கண்டார். அந்த முடிவு தமிழ்ச் சினிமாவின் வழக்கமான வெற்றி, அல்லது இணைதல் என்பதற்கு மாற்றாக முதல் எடுத்துக்காட்டாக அமைந்தது.
“வெளில எங்கேயும் போக வேண்டாம்.. ஒரேயொரு செட்டுதான் படமே..” என்று முடிவெடுத்து 17 நாட்களில் படத்தை எடுத்து முடித்தார் “நெஞ்சில் ஓர் ஆலயத்தை”..
மறக்கக் கூடிய திரைப்படமா இது..? கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, பாடல்கள் என அனைத்திலும் ஒரு சதவிகிதம்கூட சோடை போகாமல் தமிழ்ச் சினிமாவுக்கு இந்தியா முழுவதிலும் பெருமை சேர்த்தது இத்திரைப்படம்.
“சொன்னது நீதானா..” பாடல் காட்சியில் கேமிரா டாப் ஆங்கிளில் இருந்து இறங்கி முத்துராமன் அமர்ந்திருக்கும் கட்டிலுக்கு அடியில் சென்று அந்தப் புறமாக எழுந்து மேலே செல்கின்ற வித்தையை இன்றைக்கும் ஒளிப்பதிவாளர்கள் வியந்து பார்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வின்சென்ட் செய்த அந்த டெக்னிக்கை பாராட்டாதவர்களே இல்லை. இன்றைக்கும் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் இந்தப் பாடல் காட்சியும் ஒரு பாடமாக அடிக்கடி காட்டப்படுவது இதனுடைய தனிச்சிறப்புதான்.
“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “எங்கிருந்தாலும் வாழ்க” என்கின்ற காவியப் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் படைப்பதற்கு முதல் காரணமாகத் திகழ்ந்துள்ளார் என்பதே இயக்குநர் ஸ்ரீதருக்கு பெருமை சேர்க்கக் கூடிய விஷயம்.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து எடுத்த “நெஞ்சம் மறப்பதில்லை” ஒரு தோல்விப் படமாக அமைந்துவிட்ட போதிலும் அதிலும் பாடல்கள் மிக, மிக பிரபலம். தேவிகாவின் நடிப்பில் ஒரு எல்லைக் கல் இந்தப் படமே என்று சொல்லலாம்.
வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே செல்பவர்களுக்காக ஒரு பொன்னான ஊக்க வரிகளை கவியரசரின் மூலமாக எழுத வைத்த ஸ்ரீதரை நாம் என்றென்றைக்கும் மறக்கவே கூடாது.. என்ன ஒரு பாடம் அந்தப் பாடல்.. “மயக்கமா கலக்கமா? மனதிலே கலக்கமா? வாழ்க்கையில் நடுக்கமா?” என்றென்றைக்கும் ஊக்க சக்தியை அளிக்கிறது இப்பாடல். “சுமைதாங்கி” படத்தில் ஜெமினி கணேசன் காட்டிய உருக்கத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எந்தவிடத்திலும் பின்னணி இசையை அநியாயத்திற்கு உயர்த்தி செலவிடாமல் அளவாகக் காட்டி சோகத்தின் முகமூடியைக் கழட்டிக் காண்பித்தத் திரைப்படம் இது.
முற்றிலும் புதுமுகங்களை வைத்து அவர் உருவாக்கிய “வெண்ணிற ஆடை”யில் நடித்த அனைவரும் இன்றைக்கும் ஏதோ ஒருவகையில் பேசப்பட்டவர்களாக உருமாறிவிட்டார்கள். ஸ்ரீகாந்த், நிர்மலா, ஜெயலலிதா, மூர்த்தி என்கிற இந்த இளைய பட்டாளத்தை வைத்து ஒரு சோதனை முயற்சியாக எடுத்த அத்திரைப்படம் பெரும் வெற்றியடைந்து நல்ல கதையும், இயக்குநரும் கிடைத்தாலே போதும்.. புதுமுகங்களை வைத்து திரைப்படம் துவக்கலாம் என்று தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய தைரியத்தையும் முன் உதாரணத்தையும் தந்தது.
தமிழ்ச் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு விதமாகத் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், ஒவ்வொருவரும் தத்தமது திரைப் பயணத்திலும் நீண்ட முடிவுறாத தனித்தன்மை வாய்ந்த ஒரு சாதனையை உருவாக்கிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீதர் கொடுத்த மறக்க முடியாத இன்னொரு சினிமா “காதலிக்க நேரமில்லை.”
“உண்மையாகவே இதுதான் சினிமா” என்று அப்போதே ‘கல்கண்டு’ பத்திரிகையில் விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. எது சினிமா? ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும்? அது பொழுது போக்குக்காகவா அல்லது பிரச்சாரத்திற்காவா என்றெல்லாம் கேள்விகள் எழக்கூட இடம் தராமல் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்குக் கொடுத்தது அத்திரைப்படம்.
இயக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. ஒரு நடிகரை அழைத்து வந்து, “இந்த டயலாக்கை உங்க பாணில பேசிருங்க. அவ்ளோதான்..” என்று சொல்லிவிட்டு “ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன்” என்று சொல்வதல்ல இயக்கம். அந்த நடிகரிடம் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு வெளியாகுமா என்று முழுமையாகத் தெரிந்து வைத்திருந்து அதன் பின் அவர்களிடமிருந்து நடிப்பை வரவழைப்பதே இயக்கம்.
முற்றிலுமாக இதனை இத்திரைப்படத்தில் சாதித்திருந்தார் ஸ்ரீதர். முதலில் ரவிச்சந்திரன் வேடத்தில் ஜெய்சங்கரைத்தான் நினைத்திருந்தாராம். பின்புதான் திடீரென்று மனம் மாறி ரவிச்சந்திரனை புக் செய்திருக்கிறார். இதில் இவருடைய கனகச்சிதமான தேர்வுகள் பாலையாவும், நாகேஷ¤ம்.
இப்போதும் மறக்க முடியவில்லை. எப்போதும் முடியாத அளவுக்கு ஒரு 5 நிமிட காட்சியை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஸ்ரீதர்.
நாகேஷ் கதை சொல்கின்ற காட்சியில், அவர் சொல்கின்ற விதத்தைவிட என்னை அதிகம் கவர்ந்தது அதற்கு பாலையா காட்டிய ரியாக்ஷன்தான். அதுதான் முக்கியம். எப்போதும் காமெடியில் எதிர் நபர் காட்டுகின்ற ரியாக்ஷன்தான் அது காமெடியா இல்லையா என்பதைக் காட்டும். இப்போதும் பாருங்கள்.. பாலையாவின் நடிப்பசைவில் அவர் காட்டுகின்ற நவரசங்களால்தான் காமெடியே உருவாகியிருக்கிறது. ஸ்ரீதரின் இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு இந்தப் படத்தில் இந்த ஒரு காட்சிக்கே கிடைத்துவிட்டது என்று சொல்லலாம்.
ஒரு விடுதலைப் போராட்டத்தைக் காட்ட வேண்டி அவர் எடுத்த “சிவந்தமண்” திரைப்படம் அவருடைய திரைப்பட வாழ்க்கையில் ஒரு மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். இத்திரைப்பட உருவாகிய காலக்கட்டம்தான் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக கஷ்டமான காலமாகிவிட்டது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெளிநாடுகளில் ஷ¥ட்டிங் என்று திட்டம் தீட்டிவிட்டு கால்ஷீட் கிடைக்காமல் தவியாய் தவித்துப் போனார். அப்போது அத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள் சூழ்ந்து ஒரு கட்டத்தில் படம் நகருமா, நகராதா என்கிற அளவுக்குப் பிரச்சினைகள் வந்தபோதும் மனம் தளராமல் நான் எடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எடுத்துக் காட்டிய திரைப்படம் இது.
இத்திரைப்படத்திற்காக சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய தாயாரின் மரணச் செய்தி அவருக்குக் கிடைத்தது. இருந்தும் தனக்கு இந்தப் படத்தை முடிப்பதுதான் முதல் வேலை என்று கருதி தாயாரின் முகத்தைக் கூடப் பார்க்க வராமல் விட்டுவிட்டார். இந்த ஒரு நிகழ்வு அவருடைய வாழ்க்கையில் பிற்காலத்தில் அவரால் பல முறை பல பேரிடம் சொல்லிச் சொல்லி அழுக வைத்த நிகழ்வாகப் போய்விட்டது.
“சிவந்தமண்” சிவாஜிக்கும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது நிச்சயம் பொய்யில்லை.. ஸ்ரீதரின் திரைப்பட வரிசையில் இத்திரைப்படம் எந்த இடத்தைப் பிடித்திருந்தாலும் சரி.. தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் மிக முக்கியமானத் திரைப்படத்தை இத்திரைப்படம் பிடித்திருக்கிறது. காரணம் படத்தின் கதையும், களமும்தான்..
மிகப் பெரிய பட்ஜெட் என்றில்லாமல் “ஊட்டி வரை உறவு” என்கின்ற நகைச்சுவையை மையமாக வைத்து ஒரு சிறிய படத்தையும் அவரால் எடுக்க முடிந்தது. “இத்திரைப்படத்தில் தன் அழகை வெளிப்படுத்தியதுபோல் வேறு எந்தத் திரைப்படத்திலும் வேறு யாரும் காட்டவில்லை” என்று திருமதி கே.ஆர்.விஜயாவே பிற்காலத்தில் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
திரைப்பட உலகம் எப்போதுமே ஒரு மாய வலைதான்.. யாரை, எப்போது, எங்கே, எப்படி உச்சாணிக் கொம்பிற்குக் கொண்டு செல்லும் என்பதும், யாரை எங்கே எப்படி குப்புறக் கவிழ்க்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த இரண்டு வித வாழ்க்கைச் சக்கரத்தில் திரையுலகப் புள்ளிகள் பலரை உருட்டி விளையாடிவிட்டது திரையுலகம்.
30 ஆண்டு காலமாக திரையுலகில் நீடித்திருந்தும் தோல்விப் படங்களால் கடன் சுமையை ஸ்ரீதரின் மேல் ஏற்றி விட்டிருந்தது இத்திரையுலகம். அப்போதுதான் அவர் தனது திரையுலகப் பயணத்தைச் சற்று நிறுத்தியிருந்த நேரம்.
அவருடைய கட்டாய ஓய்வு அப்போதைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரின் கவனத்திற்குச் சென்றபோது ஸ்ரீதரை வரவேற்றுப் பேசினார் எம்.ஜி.ஆர். தன்னை வைத்து இதுவரையிலும் திரைப்படம் எதையும் இயக்காமலிருந்த இவருக்கு படம் தயாரிக்கவும், இயக்கவும் வாய்ப்பு தந்தார் எம்.ஜி.ஆர். அது “உரிமைக்குரல்”. முதல் ஷெட்யூலிலேயே ஸ்ரீதரின் கடனை அடைக்கும் அளவுக்கு விநியோகஸ்தர்களிடமிருந்து பண வசூல் குவிந்துவிட்டது.
படம் வெளிவந்து எம்.ஜி.ஆருக்கு பெயர் கிடைத்ததோ இல்லையோ.. ஸ்ரீதரின் பெயர் கெட்டது என்னவோ மறுக்க முடியாத உண்மை. கிட்டத்தட்ட அப்போதைய தமிழ்த் திரைப்பட உலகை ஆட்டிப் படைத்த கிளாமர் மோகத்தில், நடிகை லதா காட்டிய அதீத கவர்ச்சியில் ஸ்ரீதரின் பெயரும் ஆட்டம் கண்டு போனது. ஆனாலும் எம்.ஜி.ஆருக்காக மீண்டும் “மீனவ நண்பன்” படத்தினை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே அவருடைய புகழ் பெற்ற படங்களின் பட்டியலில் வராதது சோகம்தான்.
எம்.ஜி.ஆரை வைத்து எத்தனையோ இயக்குநர்கள் படங்களை இயக்கியிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. 1977-ல் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பதவியேற்கும் சூழல் உருவானபோது அப்போது உருவாக்கத்தில் இருந்த “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” படத்தின் சில காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது.
கிடைத்த 10 நாட்கள் இடைவெளியில் எம்.ஜி.ஆர். மீதமிருந்த தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் பதவியேற்றார். அப்போது அந்தப் படத்தினை இயக்கிக் கொண்டிருந்தது ஸ்ரீதர்தான். பதவியேற்பு விழாவுக்கு முதல் நாள்தான் அவருடைய ஷ¥ட்டிங் முடிந்தது. அந்தக் காட்சியை முடித்து வைத்தவர் ஸ்ரீதர் என்பது அவருக்குப் பெருமை சேர்க்கின்ற விஷயம்தான்.
திரைப்படத் துறை மேலும், மேலும் வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருந்த காலத்தில்கூட சிவாஜி என்னும் நடிகன் மேலிருந்த தாபத்திலும், ஆர்வத்திலும், அவருடைய புகழையே மங்கச் செய்யும் அளவுக்கு மிக மிக சாதாரணமான திரைப்படங்களை பலரும் இயக்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்திலும் ஸ்ரீதர் தன்னுடைய பழைய பாணி இயக்கத்திலிருந்து மாறவும் தைரியம் கொண்டிருந்தார்.
சிவாஜி-எம்.ஜி.ஆர். என்ற இரட்டைச் சக்கரவர்த்திகளைப் போல் தமிழ்த் திரையுலகம் கமல்-ரஜினி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் வசீகர வளையத்தில் சிக்கத் தொடங்கியபோது அதனையும் தனது பாணியில் பயன்படுத்தத் தவறவில்லை ஸ்ரீதர்.
“இளமை ஊஞ்சலாடுகிறது” ஸ்ரீதரின் இளமையைச் சோதிக்க அவர் எடுத்தத் திரைப்படம் என்று சொல்லலாம். பாடலுக்கும், இசைக்கும் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டத் திரைப்படம்.
அவருடைய பேவரைட்டான முக்கோணக் காதலை அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் தேன் தடவி அவர் கொடுத்த மருந்துதான் இப்படம்.
எனக்கு கமலஹாசனைவிடவும் இப்படத்தில் ரஜினிதான் மிகவும் கவர்ந்தார். அந்த சோடாபுட்டி கண்ணாடி அவர் ஒரு மதிப்புற்குரிய கனவான் என்ற தோற்றத்தைக் கொடுத்தது. படம் நெடுகிலும் அவருடைய நடிப்பும் அப்படியே இருந்தது என்னவோ உண்மைதான்.
எப்படி இவரால் இப்படியொரு திரைப்படம் எடுக்க முடிந்தது என்பதைவிட எப்படி இவரால் எம்.எஸ்.விஸ்வநாதனைவிட்டு விலக முடிந்தது என்றுதான் அப்போதைக்கு பத்திரிகைகளில் கிசுகிசு பரவியது. தனது நீண்ட நாள் நெருங்கிய நண்பர்களான சித்ராலயா கோபு, மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் பாஸ்கர் ஆகியோரின் ஆலோசனையில் காலத்திற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளவும் தயங்கவில்லை இயக்குநர் ஸ்ரீதர்.
“தென்றலே என்னைத் தொடு” படத்தின் வெளியிட்டீன்போது “யாரோ ஸ்ரீதராம்ல.. மோகனை வைச்சுப் பண்றாராம்..” என்று அப்போதுதான் பரவலாகப் பரவியிருந்த புத்தம்புது மஞ்சள் வியாபார விநியோகஸ்தர்களிடையே பேச்சு இருந்தது. இளையராஜாவின் இன்னிசையால் படம் வழக்கம்போல பிய்த்துக் கொண்டு போன போதுதான் ஸ்ரீதரின் பழைய ஜாதகமும் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டது.
‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’.. ‘ஒரு ஓடை நதியாகிறது’.. இந்த இரண்டு திரைப்படங்களின் பாடல்களை மட்டுமே நான் கேட்டுள்ளேன்.. அசத்தல் பாடல்கள். ஸ்ரீதர் ஆரம்பக் காலத்திலிருந்தே தனது திரைப்படங்களின் இன்னொரு கதாபாத்திரமாக உருவாக்கி வைத்திருந்தது திரையிசைதான்..
பாடலுக்கும், இசைக்கும் இவர் கொடுக்கின்ற முக்கியத்துவம் ரசிகர்களின் மனநிலையை அறிந்து வைத்திருந்த இவரது தனித்தன்மையைக் காட்டுகிறது.
‘கல்யாணப் பரிசு’ தொடங்கி ‘தந்து விட்டேன் என்னை’ வரையிலுமான இவரது திரைப்பயணத்தில் அற்புதமானத் திரைப்படப் பாடல்களை ஸ்ரீதர் தொகுத்து வழங்கியிருப்பது, தமிழ்த் திரைப்படத் துறைக்கு இவர் செய்திருக்கும் மிகப் பெரிய உதவியும்கூடத்தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது.
ஸ்ரீதரின் இயக்கத்தில் நான் பார்த்து பிரமித்த திரைப்படங்களைத்தான் இங்கே பட்டியலிட்டுள்ளேன். பார்த்தும் விரும்பாத படமும் ஒன்று உண்டு. அது ‘நானும் ஒரு தொழிலாளி’.
முதல் இரண்டு ரீல்களில் அம்பிகா எல்.கே.ஜி. மாணவிபோல் இருப்பார். அதே போலத்தான் கமலஹாசனும். அடுத்த நான்கு ரீலுக்கு யு.கே.ஜி. பின்பு ஒன்றாம் வகுப்பு என்று காலம் கடந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு ரீலாக எடுக்கப்பட்ட படம் என்பதனை மேக்கப்பே காட்டிக் கொடுத்தது என்றாலும், இத்திரைப்படத்தின் பாடல்களும் தேனிசை. மறக்க முடியாத பாடல்கள்.
கடைசியாக அவர் எடுத்த ‘தந்து விட்டேன் என்னை’ என்கிற திரைப்படத்தில்தான் விக்ரம் அறிமுகமானதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. “விக்ரமை வைத்து தான் மீண்டும் ஒரு திரைப்படம் செய்வேன்” என்று அவ்வப்போது பத்திரிகையாளர்களிடமும், பார்க்க வருபவர்களிடமும் சொல்லிக் கொண்டுதான் இருந்தார் ஸ்ரீதர். ஆனால் விக்ரம் இதுவரையில் ஸ்ரீதரைப் பற்றி எந்த வார்த்தையும் சொல்லாமல் இருப்பது(ஒரு வேளை எனக்குத் தெரியாமல் இருக்கலாம்) ஏன் என்பதுதான் புரியவில்லை.
இயக்குநர் ஸ்ரீதருக்கு திரையுலகிலும் பலமான வாரிசுகள் உண்டு. முதலிடம் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சில ஆண்டுகள் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அடுத்து குறிப்பிடத்தக்கவர்கள் வாசுவும், சந்தானபாரதியும்.
திடீரென்று ஒரு நாள் பக்கவாதம் தாக்கி அவரை முடக்கிப் போட்டது. அந்த ஒரு நாளில் அவருடைய அனைத்துமே முடங்கிப் போனது. அன்றிலிருந்து நேற்றுவரையிலும் அவர் மரணத்தை எதிர்கொண்டபடியேதான் இருந்தார். மருத்துவமனையில் அவர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்து மருத்துவர்கள், எந்தவொரு முக்கியப் பிரமுகர்கள் அவரைப் பார்க்கச் சென்றாலும், அவரிடம் பழைய கதைகளை சிறிது நேரமாவது பேசும்படி பணிக்கப்பட்டார்கள்.
அப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக அவர் மறுபடியும் இயக்குநர் ஸ்ரீதராக உருவெடுக்கப்பட்டார். பெற்ற தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூட வர முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டதை, இந்தக் காலக்கட்டத்தில்தான் தன்னைச் சந்திக்க வந்த அத்தனை பேரிடமும் சொல்ல முற்பட்டதை கண் கலங்கச் சொல்கிறார்கள் அவருடைய நேசிப்பாளர்கள்.
குடும்பம், மனைவி, மக்கள் ஏன்? எதற்கு? என்று கேட்பவர்களுக்கு மிகப் பெரிய உதாரணத்தை உருவாக்கித் தந்திருக்கிறார் ஸ்ரீதர்.
இவருடைய மனைவி தேவசேனா அம்மாவின் உறுதுணையும், அன்பும், பரிவும், பாசமும்தான் இவரை இத்தனை வருடங்கள்(கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்) நீண்டு வாழ வைத்துள்ளது என்றால் அதில் கொஞ்சமும் மிகையில்லை.
எத்தனையோ பணக்காரர்கள் வீட்டில், வயதான பெரியவர்களை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு நர்ஸ்களை சம்பளத்திற்கு வேலைக்கு வைத்துவிட்டு அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போகும் சூழல் உள்ள நிலையில் (விஜயா-வாஹினி ஸ்டூடியோ அதிபர் திரு.நாகிரெட்டி தனது கடைசிக் காலங்களில் தான் உருவாக்கிய விஜயா மருத்துவமனையிலேயே ஒரு அறையில் இப்படித்தான் முடங்கிப் போய் கிடந்தார்) தன் கண்ணின் மணி போல கணவரை கடைசி வரையில் தனது இல்லத்தில் பாதுகாத்து வந்தவர் தேவசேனா. இதனால்தான் சமீப காலமாக நடிகர் சிவக்குமாரும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் “பெண்மையின் அடையாளமாகத் திகழ்கிறார் தேவசேனா” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்தப் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவரை குழந்தை போல பாவித்து வந்தது முதல், மருந்து, மாத்திரை கொடுத்து கவனித்து வந்து, சொல்வதே புரியாத நிலையில் அவர் சொல்வதைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்றும், அவர் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ஸார் பார்க்கணும்கிறார்.. கொஞ்சம் வர முடியுமா?” என்று கேட்டு அவர்களை வரவழைத்து, கணவரின் சிறிது நிமிட சந்தோஷத்தையும் அந்த நேரத்தில் பூர்த்தி செய்த அவருடைய மனைவி தேவசேனாவை தெய்வம் என்றே சொல்லலாம்.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி நிலைக்கும்”
என்ற வரிகளை ஸ்ரீதர்தான் தனது “சுமைதாங்கி” திரைப்படத்திற்காக கவியரசர் கண்ணதாசனிடம் கேட்டு வாங்கியவர். நன்றி..உண்மைத்தமிழன்.விக்கிப்பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக