பாடகி சித்ரா பிறந்த நாள் ஜூலை 27 .1963.
சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா ( Krishnan Nair Shantakumari Chithra, பிறப்பு: 27 சூலை 1963), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம் , கன்னடம் , தமிழ் ,
தெலுங்கு , ஒரியா , இந்தி , அசாமிய ,
வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியர்களிடையே சின்னக்குயில் சித்ரா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
குடும்பம்
திருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் சித்ரா பிறந்தார்.
வானொலியில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், வீணை வித்தகி சாந்தகுமாரிக்கும் இளையமகள் ஆவார். இவரின் சகோதரியான பீனா, இனிமையான குரலைக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் நாயருடைய மனைவி ஒரு பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்றிருந்த பீனாவிற்கு சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது. சித்ராவின் இளவயதிலேயே பாடல்களை நினைவில் கொண்டு பாடினார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே அகில இந்திய வானொலி ஒளிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.
இசைப் பயிற்சி
சித்ரா (2015)
பள்ளியில் பயின்ற நாட்களிலே அவர் தந்தையார் தம் மகள் சார்பாக தேசிய அளவில் திறமை வாய்ந்தோருக்கான உதவித்தொகைக்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்கு சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும், பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட உதவித்தொகையைப் பெற்றார். பின்னர், இசை பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
இவர் பேராசிரியர் ஓமண்ணக்குட்டியிடம் இசை பயின்று வந்தார். அவருடைய சகோதரர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் திரைத்துறையில் புது குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். ஓமண்ணக்குட்டி, சுட்டிப்பெண் சித்ராவின் பெயரை முன்மொழிய திரைப்பட பின்னணிப் பாடகியாகப் பிரவேசித்தார்.
திரைப்பட அறிமுகம்
தனக்கு முழு நேரப் பின்னணி பாடகியாகும் எண்ணம் முன்பே இருக்கவில்லை என்று நினைத்திருந்தார். பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது, கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து யேசுதாசுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், 'தரங்கிணி' பதிப்புகளிலும் சித்ராவிற்கு பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக் குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடிபெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.
சென்னை வருகை
முகமறியாத இடத்திற்கு வர முதலில் சித்ராவிற்கு விருப்பமில்லை. ஒரு முறை 'குஷி ஔர் குஷி' என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை பி.பி.சீனிவாசுடன் இணைந்து பாடுவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை.
இளையராஜாவுடனான அறிமுகம்
ஒரு முறை இயக்குனர்
பாசில் தம்முடைய நோக்காத தூரத்து கண்ணும் நட்டு என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த இளையராஜா சித்ராவிற்கு அழைப்பு விடுத்தார். இளையராஜாவின் இசையமைப்பில் ' நீ தானா அந்தக் குயில் ' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது', 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன. 1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ('கீதாஞ்சலி ' திரைப்படத்தில் 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயிலிசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ' ஆகிய பாடல்கள் சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட ' சின்னக்குயில் சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து', 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். சித்ராவின் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் இளையராஜாவின் பங்கும் அடங்கியிருக்கிறது.
அடுத்து 1985-1986ஆம் ஆண்டில், இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் வெற்றியடைந்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன்படுத்தினர். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய கங்கை அமரன் , மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் , சங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா
மற்ற இசையமைப்பாளர்கள்
எண்பதுகளின் பிற்பகுதியில் சந்திரபோசின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
மேலும் வி.குமாரின் இசையமைப்பில் எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் குன்னக்குடி வைத்யநாதனின் 'உலா வந்த நிலா' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், டி.ராஜேந்திரனின் இசையில் சில பாடல்களையும் பாடினார்.
சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். ஆர்.டி.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லட்சுமிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), வி.எஸ். நரசிம்மன் (விழிகளில் கோடி அபிநயம்), எல்.வைத்யநாதன் (என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்சலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) , பாக்கியராஜ் (அம்மாடி இது தான் காதலா), எஸ்.பி.பி (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), எஸ். ஏ. ராஜ்குமார் (ஆயிரம் திருநாள்) , தேவா (சந்திரலேகா, வேண்டும் வேண்டும்), போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.
அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் ஏ. ஆர். ரகுமான் , மரகதமணி,
வித்யாசாகர், சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின. இத்துறையில் முதன்மையாக நின்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சித்ராவின் குரலில் 'புத்தம்புது பூமி வேண்டும்' , 'என் மேல் விழுந்த மழைத்துளியே' , 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே' , ’ஊ லலலா’, ’எங்கே எனது கவிதை’ போன்ற பல வெற்றிப்பாடல்களை வழங்கினார்
சித்ராவின் இசைப்பயணத்தில் இசையமைப்பாளர் மரகதமணியும் ஒரு மைல் கல்லாக நிற்கிறார். 'அழகன் ' படத்தில் தாம் 'தத்தித்தோம் ' என்ற பாடலை பாடினார். அவர் இயக்கத்தில் 'நாடோடி மன்னர்களே' , 'நீ ஆண்டவனா?' , ' கம்பங்காடே' (வானமே எல்லை) போன்ற பாடல்களையும் பாடினார். 'உயிரே உயிரே' என்ற பாடலும், 'தேவராகம்' என்ற இரு மொழிப்படத்துப் பாடல்களும் அவருக்கென்றே இசையமைக்கப்பட்டவை.
பாலபாரதி (உன்னைத் தொட்ட தென்றல்), ஆதித்யன் (ஒயிலா பாடும் பாட்டிலே, வெள்ளி கொலுசு ஜதி போடுதே), மஹேஷ் (பூங்குயில் பாடினால்), சிற்பி (கன்னத்துல வை, ஐ லவ் யூ ஐ லவ் யூ, தென்றல் தென்றல் தென்றல் வந்து) , ரஞ்சித் பாரோடு (மின்னல் ஒரு கோடி), ஆகோஷ் (தொலைவினிலே, முந்தானை சேலை), வித்யாசாகர் (பாடு பாடு பாரத பண்பாடு, அடி ஆத்தி, அன்பே அன்பே நீ என் பிள்ளை, நீ காற்று நான் மரம்), பரத்வாஜ் (ஒரு பூ வரையும் கவிதை , வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே), ரமேஷ் வினாயகம் (காதலை வளர்த்தாய்), எஸ்.ஏ.ராஜகுமார் (தொடு தொடு எனவே, இன்னிசை பாடி வரும்) போன்ற பல வேறு இசையமைப்பாளர்களின் இசையில் சித்ரா பாடிய பாடல்களில் சில.
இருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி,
பி. லீலாவிற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்து, தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் பாடியிருக்கிறார். ஹரிஹரன் ,
உன்னிகிருஷ்ணன் , எஸ். பி. பி, மனோ, ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி வாலி , வைரமுத்து,
பழனி பாரதி, பா.விஜய் போன்றவர்களின் வரிகளை தம் குரலால் உயிர்ப்பித்திருக்கிறார்.
தெலுங்கில் சித்ராவை 'பிரளயம்' திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய திரு.கே.வி.மஹாதேவன் 'ஸ்வாதி கிரணம்' என்ற திரைப்படத்தில் 'பிரணதி பிரணதி' என்ற பாடலை திரு.எஸ். பி. பியுடனும், திருமதி.வாணி ஜெயராமுடனும் பாடும் அரிய வாய்ப்பைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி.பி,, இளையராஜா, கீரவாணி (மரகதமணி) போன்றவர்கள் அவரை தெலுங்கில் பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார்கள். முதலில் மொழி அறியாது அவர் சற்று சிரமப்பட்டாலும் எஸ்.பி.பி அவர்கள் மொழியை பொருளோடு புரியவைத்து உச்சரிக்கும் முறை சுட்டிக் காட்டியபொழுது கற்றுக் கொண்டார். திருமதி.பாலசரஸ்வதியும், பிறரும் பாரட்டும் வண்ணம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றே அம்மொழிப் பாடல்களை மிகச் சிறப்பாக பாடினார்.
இந்திப் பாடல்கள்
பாலிவுட்டில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஆனந்த் மிலிந்த் 'ப்ரேம' என்ற தெலுங்கு படத்தை 'லவ்' என்ற பெயரில் தயாரித்த பொழுது, இளையராஜாவின் பாடல்களைப் பின்பற்றி இசை அமைத்து சித்ராவையும், எஸ்.பி.பியுடன் இணைந்து பாட வைத்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் அநேக ஹிந்தி மொழிப்படங்களில் அவரைப் பாட வைத்தார். ராஜேஷ் ரோஷன், நாதீம் ஷ்ரவண், அனு மாலிக், நிகில் வினய், இஸ்மாயில் தர்பார் போன்ற இசையமைப்பாளர்கள் அந்த காலகட்டத்தின் மிகச் சிறந்த பாடகி என்று திருமதி.சித்ராவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். லதா மங்கேஷ்கர் எழுபத்தைந்தாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது அந்தேரியில் நடந்த பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் லதா கேட்டுக் கொண்டதற்கேற்ப சித்ரா அவர்கள் 'ரசிகா பல்மா' பாடலைப் பாடி விழாவைத் துவக்கி வைத்தார்.
சித்ரா அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் முன்னணிக் கலைஞராக பல வருடங்கள் இருந்ததோடு வங்காள, ஒரிய, பஞ்சாபி மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடி வெளிவந்த திரையசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சலீம் சுலைமானுடன் இணைந்து 'ராக ராகா' என்ற இண்டிபாப் தொகுப்பும், சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட 'பியா பசந்தி' என்ற தொகுப்பும் விற்பனையில் சாதனை படைத்ததுடன் எம் டி.வி விருதையும் பெற்றுத் தந்தன. 'சன்செட் பாயின்ட்' எனற தொகுப்பில் குல்சார் கதை சொல்லி வருகையில் இடையிடையில் பூபேந்திர சிங்கும், சித்ராவும் பாடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மலையாள பக்திப்பாடல்கள்
அவர் தன் தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடல் தொகுப்புகளில் பாடியுள்ளார். அவை கேரளக் கோவில்களில் திருவிழாக் காலங்களில் ஒலி பரப்பப்படுகின்றன. 'சலீல் சௌத்ரி' யின் இசையமைப்பில் உண்ணி மேனனும், சித்ராவும் 'ஸ்வர்ணரேக' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அன்னை மூகாம்பிகையே' என்ற தொகுப்பும், சுவாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான 'என்சாண்டிங் மெலடீஸ்' என்ற பாடலும்ம், ' ' கிருஷ்ணபிரியா'வும் அவருடைய மற்ற தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. எம். சுப்புலட்சுமியின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக 'மை டிரிபியூட்' என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற 'குறை ஒன்றும் இல்லை' , 'பாவயாமி ரகுராமம்' , 'காற்றினிலே வரும் கீதம்' போன்ற பாடல்களைப் பாடியதோடு, ' சுனாமி' வெள்ள நிவாரண நிதிக்காக உஷா உதுப்பின் 'வி பிலீவ் இன் நவ்' என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.
இருப்பிடம்
'ஸ்ருதி' என்று பெயரில்
சாலிகிராமத்தில் தன் கணவர் விஜய ஷங்கருடன் வசிக்கிறார். அவர் பொறியியல் வல்லுனர்.சித்ராவின் சகோதரரும், சகோதரியும் பெற்றோரின் மறைவிற்குப் பிறகு வெளிநாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்கிறார்கள்.
விருதுகள்
சித்ரா பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா , ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்றுள்ள ஒரே பின்னணிப்பாடகி. 1985ஆம் ஆண்டில் துவங்கி பதினைந்து முறை ( எஸ். ஜானகி அவர்கள் 12 முறை) கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். அவர் ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும், நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. அவருக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்தி படத்தில் ’பாயாலேன் சுன்முன் சுன்முன்' பாடலின் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து இந்தி மொழியில் பாடி, தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார்.
தேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 12000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா, எஸ். பி. சரண், விஜய் யேசுதாஸ் முதலிய அடுத்த தலைமுறை பாடகர்களுடனும் பாடுகிறார்.
அவர் சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து ' பத்ம ஸ்ரீ ' விருது பெற்றதைச் சொல்லலாம். புகைப்படக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் அவருடைய ஒரு நிமிடப் பேட்டிக்காக வரிசையில் காத்து நின்ற பொழுது தன் சகோதரியின் குழந்தைகளுக்காக நடிகர் ஷாரூக்கானின் கையெழுத்தைப் பெறும் முயற்சியில் இருந்தார்.
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்" என்று கூறுகிறார்.
மகள்
இவருக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா எனும் பெண் பிறந்தார். 14 ஏப்ரல் 2011 அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக