காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த நாள் நவம்பர் 17
காதல் மன்னன்’ என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார். ‘மனம்போல மாங்கல்யம்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்திபன் கனவு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கற்பகம்’, ‘புன்னகை’ போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புகளாகப் போற்றப்பட்டது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள அவர், சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த ஜெமினி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 17, 1920
பிறப்பிடம்: புதுக்கோட்டை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: தமிழ் திரைப்பட நடிகர்
இறப்பு: மார்ச் 22, 2005
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
ஜெமினி கணேசன் அவர்கள், 1922 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “புதுக்கோட்டை” என்ற இடத்தில் ‘ராமசாமி’, என்பவருக்கும், ‘கங்கம்மாவிற்க்கும்’ மகனாக ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சிறுவயதில் தன்னுடைய தாத்தா நாராயண சாமி ஐயர் வீட்டில் வளர்ந்த ஜெமினி கணேசன் அவர்கள், அதன் பிறகு புதுக்கோட்டையிலுள்ள குலமது பாலையா பிரைமரி ஸ்கூல் மற்றும் சென்னையில் உள்ள ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியிலும் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட சிறந்த மாணவனாக வளர்ந்தார்.
திரைத்துறையில் ஜெமினி கணேசனின் பயணம்
தன்னுடைய கல்லூரிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த ஜெமினி கணேசன் அவர்கள், ஆரம்ப காலத்தில் தான் படித்த கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்னர், ஜெமினி பட நிறுவனத்தில் மேலாளராகப் பணியில் சேர்ந்த அவர், 1947 ஆம் ஆண்டு, தான் பணிபுரியும் நிறுவனமான ஜெமினி தயாரிப்பில் ‘மிஸ் மாலினி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடம் தாங்கி நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952 ஆம் ஆண்டு கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். இத்திரைப்படம், பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் கூட, விருது பெறத்தக்க சிறந்த படமாகப் பெயர் பெற்றது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர். எஸ். மனோகர் அவர்கள், பிற்காலத்தில் வில்லன் வேடத்துக்கு மாறினார், வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் அவர்கள் கதாநாயகனாக மாறி, ‘காதல் மன்னன்’ எனப் பெயர்பெற்றார்.
வெற்றிப் பயணம்
தொடக்கத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே வில்லன் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த ஜெமினி கணேசன் அவர்கள், அதற்கு அடுத்த ஆண்டே ‘பெண்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக வேடம் ஏற்று நடித்தார். 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதே ஆண்டில் வெளியிடப்பட்ட ‘மனம்போல மாங்கல்யம்’ என்ற திரைப்படத்தில், அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். இத்திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்று ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைபடத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த, பின்னாளில் ‘நடிகையர் திலகம்’ என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துகொண்டார்.
தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்திய ஜெமினி கணேசன் அவர்கள், இயக்குனர்களின் நாயகனாகவும், திரைக்கதாநாயகிகளின் நாயகனாகவும், சினிமா ரசிகர்களின் நாயகனாகவும் விளங்கி, தமிழ் திரைப்படத்துறையில் ‘காதல் மன்னன்’ என அனைவராலும் அழைக்கப்பட்டார். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றி, தனக்கென தனி பாணியில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ‘கற்பகம்’, ‘சித்தி’, ‘பணமா?, பாசமா?’, ‘சின்னஞ்சிறு உலகம்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘கல்யாணப் பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வெள்ளி விழா’, ‘புன்னகை’, ‘கண்ணா நலமா’, ‘நான் அவனில்லை’ போன்ற படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமல்லாமல், அவர் ஒரு முன்னணி கதாநாயகனாக இருந்தபொழுதும், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், ஏவி.எம். ராஜன் போன்ற பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க எப்பொழுதும் தயங்கியதே இல்லை. 1947 ஆம் ஆண்டு தன்னுடைய திரைவாழ்க்கையினைத் தொடங்கி, 1953-க்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக முத்திரைப்பதித்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஜெமினிகணேசன் அவர்கள், 1970 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த ‘லலிதா’ என்ற திரைப்படமே அவர் கதாநாயகனாக நடித்த கடைசி படமாக அமைந்தது. அதன் பிறகு, தன்னுடைய இறுதிக்காலம் வரை கமல்ஹாசன், சிரஞ்சீவி, சத்தியராஜ், விக்ரம், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
ஜெமினி கணேசன் நடித்த சிறந்த படங்கள்
‘மளாணனே மங்கையின் பாக்கியம்’, ‘மிஸ் மாலினி’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘மாமன் மகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘கல்யாணப்பரிசு’, ‘சுமைதாங்கி’, ‘பாசமலர்’, ‘தேன் நிலவு’, ‘பாதகாணிக்கை’, ‘கற்பகம்’, ‘சின்னஞ்சிறு உலகம்’, ‘இரு கோடுகள்’, ‘புன்னகை’, ‘தாமரை நெஞ்சம்’, ‘நான் அவனில்லை’, ‘அவ்வை சண்முகி’, ‘பத்தினி தெய்வம்’, ‘வாழவைத்த தெய்வம்’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘காத்திருந்த கண்கள்’, ‘ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘வீர அபிமன்யு’, ‘சரஸ்வதி சபதம்’, ‘பணமா? பாசமா?’, ‘பூவா? தலையா?’, ‘காவியத் தலைவன்’, ‘பொன்மனச் செல்வன்’, ‘மேட்டுக்குடி’ என இன்னும் பல திரைப்படங்கள் ஜெமினி கணேசனின் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்றவைகள் ஆகும்.
இல்லற வாழ்க்கை
1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய இருபது வயதில் அலமேலு என்ற பாப்ஜியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள் பிறந்தனர். பின்னர், இந்தி நடிகையான புஷ்பவள்ளியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘நடிகையர் திலகம்’ என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விஜயசாமூண்டிசுவரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் பிறந்தனர்.
விருதுகளும், மரியாதைகளும்
‘கலைமாமணி விருது’
1970 – ‘காவியத் தலைவி’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’.
1971 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
எம்.ஜி.ஆர் தங்கப்பதக்கம்.
1974 – ‘நான் அவனில்லை’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்பேர் விருது’.
1993 – வாழ்நாள் சாதனையாளருக்கான ‘சவுத் ஃபிலிம்பேர் விருது’.
‘ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது’.
இறப்பு
தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன் அவர்கள், இறுதி காலத்தில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.
1947 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பட வாழ்க்கையினைத் தொடங்கி. தான் இறக்கும் வரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்து. தமிழ் சினிமாவை ஆட்சிசெய்தார் என்று சொன்னால் யாராலும் மறுக்க இயலாது. தனக்குக் கிடைத்த அத்தனைக் கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று அனைவராலும் ‘காதல் மன்னன்’ எனப் புகழப்பட்டவர்.
******************************************************************************** வசதியான குடும்பத்தில் பிறந்து, சினிமாவில் நடிக்க வந்தவர் ஜெமினி கணேசன். ஜெமினியை குதிரை மீதமர்த்தி பள்ளிக்கு அழைத்துச் செல்வாராம், அவரின் தாத்தா நாராயணசாமி அய்யர். பள்ளியில் சேர்க்கப்பட்ட அன்று, வெள்ளித் தட்டில், தங்கக் காசால் எழுதினாராம் ஜெமினி கணேசன். கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிந்த இவர் அந்தக் காலத்திலேயே பட்டதாரி.
* இன்றைய நடிகர் அஜித் போல, ஜெமினியும் அதிவேகமாக கார் ஓட்டக் கூடியவர். இவர் கார் ஓட்டும் வேகத்துக்குப் பயந்து, சில ஸ்டுடியோக்களில் இவருக்காகவே வேகத்தடை வைத்த நிகழ்வுகள் உண்டு.
* ஜெமினி கணேசன் குடும்பத்தில், இவரது மனைவிகள் புஷ்பவல்லி, சாவித்திரி மற்றும் மகள்கள் ரேகா, ஜீ ஜீ ஆகியோரும் நட்சத்திரங்கள் ஆவார்கள்.
* தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஜெமினியின் ரசிகர்களான தமிழர்கள், அங்கு ஜெமினி என்ற ஒரு திரை அரங்கத்தை உருவாக்கியுள்ளார்கள்.
* மகாலிங்கம் என்பவர் ஜெமினி மகாலிங்கம் என்று அழைக்கப்படும் அளவிற்கு, ஜெமினியிடம் நீண்ட காலம் உதவியாளராக இருந்தார்.
* எம்.ஜி.ஆர். - சிவாஜி - ஜெமினி ஆகிய மூவரையும், தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று, புகழ்ந்து எழுதியது ஒரு பிரபல வார பத்திரிக்கை.
* "காதல் மன்னன்' என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டவர் இவர்.
* தமிழக அரசு 1990 இல் இவருக்கு எம்.ஜி.ஆர். விருதும், 1966 இல் கலைமாமணி விருதும் வழங்கி கெüரவித்தது.
* ஜெமினி கணேசன் படம் பதித்த அஞ்சல் தலையை, 25. 02. 2006 இல் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டார்.
* 1970 இல் இந்தியக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களிடம், பத்மஸ்ரீ விருது பெற்றார் ஜெமினி.
* இவர் நடித்த முதல் படம் "மிஸ்.மாலினி' (1947). கடைசிப் படம் "அடிதடி' (2004). இரு படங்களிலுமே இவர் நடித்தது கெüரவ வேடங்கள்தான். இவர் நாயகனாக நடித்த முதல் படம் "மனம் போல் மாங்கல்யம்' (1953) என்ற படமாகும். நாயகனாக நடித்த கடைசிப் படம் "உறவுக்கு கை கொடுப்போம்' (1975) என்ற படமாகும்.
* ஜெமினி கணேசன் கெüரவ வேடங்களில் நடித்த படங்கள், அன்னை வேளாங்கன்னி, அலாவுதீனும் அற்புத விளக்கும், அவ்வை சண்முகி, ஆதிபராசக்தி, இதய மலர், உன்னால் முடியும் தம்பி, ஒப்பந்தம், ஒüவையார், கப்பலோட்டிய தமிழன், காலமெல்லாம் காதல் வாழ்க, குருவாயூரப்பன், கொண்டாட்டம், சக்ரதாரி, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, தசாவதாரம் (பழைய படம்), தாய்மொழி, திருமலை தெய்வம், பொன்மனச் செல்வன், நவஜீவனம், நாம் இருவர் நமக்கு இருவர், நூற்றுக்கு நூறு, மர்ம வீரன், முகராசி, மேட்டுக்குடி, வள்ளியின் செல்வன், வீரமணி, தொடரும், ஜெமினி,அடிதடி.
* ஜெமினி கணேசன் தயாரித்து நடித்த ஒரே படம் "நான் அவனில்லை'. இதே கதைதான் இதே தலைப்பில் ஜீவன் நடித்து தற்போது வெளிவந்த "நான் அவனில்லை'
* நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்காத பாத்திரங்களே இல்லை எனலாம். ஆனால், சிவாஜி நரிக்குறவர் வேடத்தில் நடித்ததில்லை. மக்கள் திலகம் எம். ஜி. ஆர். கூட ஒளிவிளக்கு, நவரத்தினம் ஆகிய இரு படங்களில் முறையே, இரு பாடல் காட்சிகளில் மட்டும் நரிக்குறவராக நடித்திருப்பார். ஆனால், "குறத்தி மகன்' என்ற படம் முழுவதும் நரிக்குறவராக நடித்து சாதனை செய்துள்ளார், நாடக மேடை அனுபவமில்லாத காதல் மன்னன் ஜெமினி.
* இவர் தாமரை மணாளனுடன் இணைந்து "இதய மலர்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
* ஜெமினி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள், மனம் போல் மாங்கல்யம், ஆடிப் பெருக்கு, சங்கமம் ஆகிய 3 படங்களாகும்.
* இவர் பெண் வேடமிட்டு நடித்த ஒரே படம் "ஐந்து லட்சம்' என்ற படமாகும்.
* காதல் மன்னன் பல படங்களில் இரு நாயகிகளுடன் நடித்துள்ளார். இரு நாயகிகளுடன் அதிக படங்களில் நடித்தவர் இவராகத்தான் இருக்க முடியும். இவர் இரு நாயகியருடன் நடித்த படங்கள், ஒüவையார், மனம் போல் மாங்கல்யம், மாதர்குல மாணிக்கம், வஞ்சிக் கோட்டை வாலிபன், கல்யாண பரிசு, பாத காணிக்கை, கற்பகம், இரு கோடுகள், சங்கமம், வெள்ளி விழா, அவளுக்கென்று ஓர் மனம், கங்கா கெüரி, களத்தூர் கண்ணம்மா, பாக்கிய லட்சுமி, பெண் ஆகிய 15 படங்களாகும்.
* நிஜ வாழ்வில் 7 மகள்களுக்கும் 1 மகனுக்கும் தந்தையான ஜெமினி கணேசன், மாணிக்கத் தொட்டில் என்ற படத்தில் 5 பெண்களுக்குத் தந்தையாக நடித்துள்ளார்.
* இவர் நடித்த 187 படங்களில், பாடல் காட்சியில் வாயசைக்கும் வாய்ப்பு, 2 படங்களில் மட்டுமே வாய்க்கவில்லை. ஒன்று "கற்பகம்', மற்றொன்று "மாணிக்கத் தொட்டில்' ("பெண்' என்ற படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இருந்தாலும், ஜெமினிக்கு ஒரு முழு பாடல் காட்சி கூட இல்லை. அஞ்சலிதேவி, வைஜெயந்திமாலா, வி.நாகையா, ஜெமினி ஆகிய நால்வரும் சேர்ந்து "மாதர் தம்மை இழிவு செய்யும்' என்ற பாடலை ஆளுக்கு 4 வரி பாடுவார்கள்.)
*திருமணம், குறத்தி மகன், மஹேஸ்வரி, கப்பலோட்டிய தமிழன் ஆகிய படங்கள், பாரதியார் பாடல்கள் இணைக்கப் பட்ட ஜெமினி கணேசன் நடித்த படங்களாகும்.
* அதிக படங்களில் இணைந்து நடித்த நட்சத்திர ஜோடி, ஜெமினி- சாவித்திரி ஜோடியேயாகும். இவர்கள் இருவரும் மிஸ்ஸியம்மா உள்ளிட்ட 30 படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.
* ஜெமினியின் மனைவி புஷ்பவல்லி நடித்த சில படங்களில் ஜெமினி நடித்திருந்தாலும், இவர்களிருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. "சக்ரதாரி' படத்தில் கோரகும்பர் (வி.நாகையா) மனைவி துளஸிபாய் வேடத்தில் புஷ்பவல்லி நடித்துள்ளார். இந்த தம்பதியருக்கு அருள் பாலிக்கும் பாண்டுரங்கன் வேடம் ஜெமினிக்கு. மிஸ்.மாலினி படத்தில் மாலினியாக புஷ்பவல்லியும், மாலினியை மயக்கி ஏமாற்றும் மோசடிப் பேர்வழி சம்பத்தாக கொத்தமங்கலம் சுப்புவும் நடித்துள்ளார்கள். இப்படத்தில் ஜெமினிக்கு ஒரு சிறு வேடம் மட்டுமே. வாழ்க்கைப் படகு படத்தில் டி.எஸ்.பாலையாவிற்கு, மனைவியாக நடித்துள்ளார் புஷ்பவல்லி.
* சரோஜாதேவியுடன் ஜெமினி 15 படங்களில் நடித்துள்ளார்.
* பத்மினியுடன் ஜெமினி 9 படங்களில் நடித்துள்ளார்.
* ஜெயலலிதாவுடன், ஜெமினி கணேசன் நடித்த படங்கள், அன்னை வேளாங்கன்னி, ஆதிபராசக்தி, ஜீசஸ், சக்தி லீலை, கங்கா கெüரி ஆகிய 4 படங்களாகும். இவர்கள் நடித்த இந்த 4 படங்களும் பக்திப் படங்கள் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
* ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ஜெமினி நடித்த காத்திருந்த கண்கள் படத்தில் திலகம் என்ற பாத்திரத்திலும், திருமணம் என்ற படத்தில் சந்தியா என்ற (அவரது பெயரையே கொண்ட) பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
* பத்மினியின் சகோதரி ராகினியுடன் ஜெமினி ஜோடியாக நடித்த ஒரே படம் "ஏழை பங்காளன்' மட்டுமே. இருப்பினும் ஜெமினி நடித்த, வீராங்கனை, பார்த்திபன் கனவு, பொன் விளையும் பூமி ஆகிய 3 படங்களில் ராகினி துணை பாத்திரங்களில் நடித்துள்ளார்.
* எம்.ஜி.ஆர். தம்பியாகவும், ஜெமினி கணேசன் தமையனாகவும் சேர்ந்து நடித்த ஒரே படம் முகராசி படமாகும்.
* எம்.ஜி.சக்கரபாணி, ஜெமினி கணேசன் சேர்ந்து நடித்த ஒரே படம், பிரேம பாசம் படமாகும். இப்படத்தின் பாடல்களை 8 கவிஞர்கள் எழுதியுள்ளார்கள்.
* ஜெமினி கணேசனும் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்தது மொத்தம் 13 படங்களாகும்.
* ஜெமினி கணேசனும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரனும் வைராக்கியம், குல விளக்கு ஆகிய 2 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
* இந்தி நடிகர் அசோக்குமார் நடித்த ஒரே தமிழ்ப் படம், ஜெமினி கணேசன் நடித்த அண்ணாவின் ஆசை என்ற படமாகும்.
* தெலுங்கு பட உலகின் பிரபல நாயக நடிகர்களான ஏ.நாகேஸ்வரராவ் உடன், மனிதன் மாறவில்லை, மாதர்குல மாணிக்கம், கல்யாண பரிசு ஆகிய படங்களிலும், என்.டி.ராமாராவ் உடன், லவ குசா, மாயா பஜார் ஆகிய படங்களிலும் ஜெமினி இணைந்து நடித்துள்ளார்.
* தெலுங்கு பட உலகின் பிரபலமான வில்லன் நடிகர் ராஜநளா என்பவர், ஜெமினி நடித்த ரங்க ராட்டினம் படத்தில் கெüரவ வேடத்தில் நடித்துள்ளார்.
* கல்யாணபரிசு இந்தியில் நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் நாயகனாக நடிக்க மறுவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் ஜெமினி நடித்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் மிஸ் மேரி (தமிழில் மிஸ்ஸியம்மா) போன்றவற்றிலும், அஞ்சலி தேவியுடன் அவர் நடித்த சில படங்களின் இந்தி மறுவாக்கத்திலும் கதாநாயகனாகவே நடித்தார்.
* கே.பாலசந்தர், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகிய இயக்குநர்களின் படங்களில்தான் ஜெமினி கணேசன் அதிகமாக நடித்துள்ளார்.
* காதல் மன்னனின் காதல் மனைவி சாவித்திரியின், திரைக்கதை தயாரிப்பு இயக்கத்தில் ஜெமினி நடித்த ஒரே படம் "குழந்தை உள்ளம்' என்ற படமாகும்.
* கவிஞர் ஆலங்குடி சோமு தயாரித்த "பத்தாம் பசலி' படத்தின் நாயகன் நமது காதல் மன்னனேயாகும்.
* வசனகர்த்தா ஆரூர்தாஸ் கதை வசனம் எழுதி இயக்கிய ஒரே படமான "பெண் என்றால் பெண்' படத்தின் நாயகன் நமது காதல் மன்னனே.
* கே.வி.மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி இசையமைத்த 4 படங்களில் ஒன்றான "மலை நாட்டு மங்கை' படத்தின் நாயகன் நமது காதல் மன்னனேயாகும்.
* மு.கருணாநிதியின் கதை வசனத்தில், ஜெமினி கணேசன் நடித்த ஒரே படம், "எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற படம் மட்டுமே.
* கவிஞர் கண்ணதாசனும் ச.அய்யாப் பிள்ளையும் சேர்ந்து வசனம் எழுதிய "வீரக் கனல்' படத்தில் ஜெமினி நடித்துள்ளார். பி.எஸ்.வீரப்பா தயாரித்த படம் இது.
* தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள டெக்னிக் வண்ணப் படம், ஜெமினி கணேசன் நடித்த கொஞ்சும் சலங்கை (1962)) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட ஆன் என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ண படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும். எம்.ஜி.ஆர். நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) என்ற படம், தமிழ் சினிமாவின் முதல் முழு நீள கேவா வண்ண படமாகும். தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ண படம், நடிகர் திலகம் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படமாகும்.)
* தெலுங்குப் படவுலகின் பிரபல இயக்குநரும், தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட பல மாயாஜால மந்திர தந்திர படங்களைத் தந்தவருமான, பி.விட்டலாச்சார்யா இயக்கிய ஒரே தமிழ்ப் படம், ஜெமினி கணேசன் நடித்த "பெண் குலத்தின் பொன் விளக்கு' என்ற படமாகும்.
* கண்டசாலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.எஸ்., எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் ஆகியோர் ஜெமினிக்கு பின்னணி பாடியிருந்தாலும், ஏ.எம்.ராஜாவின் குரல்தான் ஜெமினிக்குப் பொருத்தமாக அமைந்தது. ஜெமினிக்கு ஏ.எம்.ராஜா 22 படங்களில் பின்னணி பாடியுள்ளார். அவை... ஆசை மகன், மனம் போல மாங்கல்யம், குணசுந்தரி, மஹேஸ்வரி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா, ஆசை, மல்லிகா, யார் பையன், இல்லறமே நல்லறம், கடன் வாங்கி கல்யாணம், திருமணம், பூலோக ரம்பை, கல்யாண பரிசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர், களத்தூர் கண்ணம்மா, பார்த்திபன் கனவு, மீண்ட சொர்க்கம், தேன் நிலவு, ஆடிப்பெருக்கு, பாசமும் நேசமும், ரங்க ராட்டினம் ஆகிய 22 படங்களாகும்.
* காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்து, பி.ஏ.தாமஸ் இயக்கிய, மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட "ஜீசஸ்' என்ற படம் பற்றிய சில செய்திகள்:
* இந்தப் படத்தின் பிரதான வேடத்தில் செல்வி ஜெயலலிதா நடித்துள்ளார். இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமி வசனம், பாடல்களை எழுதிள்ளார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், ஜோசப் கிருஷ்ணா, ஆலப்பி ரங்கநாதன், கே.ஜே. யேசுதாஸ் ஆகிய 4 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இப்படத்தில் வரும் "கோல்கோதா மலைகளே' என்ற பாடலை கே.ஜே. யேசுதாஸ் இசையமைத்துப் பாடியுள்ளார்.
* நான்கு பாடகர்கள் சேர்ந்து பாடும் பாடல், படங்களில் வெகு அபூர்வமாகவே இருக்கும். அவ்வகையில் "புன்னகை' படத்தில் "நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்' என்ற பாடலை டி.எம்.எஸ். (ஜெமினி), சாயிபாபா (நாகேஷ்), எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (முத்துராமன்), கே.வீரமணி (எம்.ஆர்.ஆர்.வாசு) ஆகிய நால்வரும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.
* வீர அபிமன்யூ படத்தில் நமது காதல் மன்னனுக்கு மாயக் கண்ணன் வேடம். கெüரவர் சபையில் கண்ணனை வரவேற்கிறது ஒரு பாடல்.
கள்ளத் தனமே உருவாய் வந்த
காரியக் கண்ணா வா
யமுனைக் கரையில் பெண்களைத் தேடும்
காதல் மன்னா வா
கவிஞர் கண்ணதாசன், காதல் மன்னன் என்று சொல்வது கண்ணனை மட்டுமின்றி, நமது காதல் மன்னனையும்தான்.
* ஜெமினி, ஒரே ஒரு பாடலில் மட்டும் பாடாமல் பேசியிருப்பார். கல்யாண பரிசு படத்தில் வரும் ஆசையினாலே மனம் என்ற பாடலில், ஜெமினி (ஏ.எம்.ராஜா குரலில்) ஓஹோ, ஊஹூம், ஐ ஸீ, ஆஹஹா, ஸôரி என்ற வார்த்தைகளை சொல்வதோடு சரி. பாடலை முழுமையாக பாடுபவர் பி.சுசீலா மட்டுமே.
* "மாதர் குல மணிக்கம்' படத்தில் ஜெமினிக்கு ஜோடி அஞ்சலிதேவி. நாகேஸ்வரராவுக்கு ஜோடி சாவித்திரி. இதேபோல "பாக்ய தேவதை' படத்தில் ஜெமினிக்கு ஜோடி ராஜசுலோசனா. எம்.என்.நம்பியாருக்கு ஜோடி சாவித்திரி.
* முதன் முதலில் ஒரு படத்தின் பெரும் பகுதி வெளிப்புறங்களில் படப்பிடிப்பு செய்யப்பட்டது என்ற பெருமையைக் கொண்டது "தேன் நிலவு' படமாகும். தேன் நிலவு படப் பிடிப்பின் போது, ஜெமினி தமது இரு மனைவியருடன் காஷ்மீரில் தேன் நிலவு கொண்டாடினார்.
ஜெமினி கணேசன் 1947 முதல் 2004 வரை 187 படங்களில் நடித்துள்ளார்
பிறமொழியில் நடித்த படங்கள் - 14
கெüரவ வேடத்தில் நடித்த படங்கள் - 29
நாயகன், துணை நாயகன்
வேடத்தில் நடித்த படங்கள் - 144
ஜெமினியுடன் இணைந்து நடித்த நடிகைகளும் படங்களும்
ஜெயந்தி- புன்னகை, இரு கோடுகள், நூற்றுக்கு நூறு, கண்ணா நலமா, வெள்ளிவிழா
வைஜெயந்திமாலா- வஞ்சிக் கோட்டை வாலிபன், பெண், தேன் நிலவு, பார்த்திபன் கனவு,
பானுமதி - சதாரம், பட்டத்து ராணி, கட்டிலா தொட்டிலா,
விஜயநிர்மலா- பந்தயம்,
ராஜசுலோச்சனா- பாக்கிய தேவதை, நீதிபதி,
ராஜஸ்ரீ- பூவா தலையா, பத்தாம் பசலி, எல்லைக் கோடு,
வெண்ணிற ஆடை நிர்மலா- சங்கமம், சக்கரம், சுடரும் சூறாவளியும்,
காஞ்சனா- சாந்தி நிலையம், அவளுக்கென்று ஓர் மனம்,
விஜயகுமாரி- மனைவி, பொற்சிலை, அவரே என் தெய்வம்,
எம்.என்.ராஜம்- பெண் குலத்தின் பொன் விளக்கு,
ஜமுனா- நல்ல தீர்ப்பு,
சுஜாதா- லலிதா,
லதா- ஞானக்குழந்தை,
வாணிஸ்ரீ- தபால்காரன் தங்கை,
விஜயஸ்ரீ- மலைநாட்டு மங்கை,
தேவிகா- ஆடிப்பெருக்கு, களத்தூர் கண்ணம்மா, சுமை தாங்கி, வாழ்க்கைப் படகு.
ஜெமினியுடன் மற்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்த படங்கள்
ரஜினி - அலாவுதீனும் அற்புத விளக்கும்,
கமல் - அலாவுதீனும் அற்புத விளக்கும், இதய மலர், லலிதா,நான் அவனில்லை, உன்னால் முடியும் தம்பி, அவ்வை சண்முகி
சிறுவனாக கமல் - களத்தூர் கண்ணம்மா, பார்த்தால் பசி தீரும்,
கலைவாணர்- ஆசை, யார் பையன்,
ரவிச்சந்திரன்- காவியத் தலைவி, எல்லைக்கோடு, சிநேகிதி, மாலதி, ரங்க ராட்டினம்,
ஜெய்சங்கர்- நூற்றுக்கு நூறு, எதிர் காலம்,
ஏ.வி.எம்.ராஜன்- சக்கரம், திருமகள், பந்தயம், சுவாமி ஐயப்பன், ஸ்ரீ காஞ்சி காமாட்சி,
கே.ஆர்.ராமசாமி- சதாரம், நீதிபதி,
சிவகுமார்- திருமகள், கட்டிலா தொட்டிலா, கங்கா கெüரி,
சி.எல்.ஆனந்தன்- மலைநாட்டு மங்கை, பொற்சிலை, யானை வளர்த்த வானம்பாடி மகன்
எஸ்.பாலசந்தர்- பெண்,
ஸ்ரீராம்- நவஜீவனம், மர்ம வீரன், மணமாலை, மூன்று பிள்ளைகள்
எம்.கே.ராதா- மூன்று பிள்ளைகள், கற்புக்கரசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக