நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் நினைவு தினம் அக்டோபர் 24, 2014 .
எஸ். எஸ். ஆர். அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும்
சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் (சனவரி 1928 - அக்டோபர் 24, 2014 ) தமிழகத் திரைப்பட நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரும் பாடலாசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள் , 60களில் தமிழ்த் திரையுலகில் தனது அழகு, அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஆகியவற்றால் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 85 படங்களில் நடித்தார். இவர் நடித்த
பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. 1962 ஆம் ஆண்டில் இவர்
தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது தன்வரலாற்றை நான் வந்த பாதை என்னும் பெயரில் நூலாக எழுதியிருக்கிறார்.
நாடகத் துறையில்
சே.சூ.இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்க அடுத்துள்ள நகரப் பள்ளிக்குப் போக வேண்டும். குறைந்த வயதுடையவராக இராசேந்திரன் ஓராண்டு வீட்டிலேயே இருந்தார். அப்பொழுது அவர் தந்தைக்கு நண்பரான சுப்பு ரெட்டியார் என்பவரின் நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.
பின்னர், 'பாய்ஸ் நாடகக் கம்பெனி"யில் குழந்தை நடிகராகச் சேர்ந்தார். பின்னர்
தி. க. சண்முகம் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா வில் துணை நடிகராக நுழைந்து கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் அக்குழுவில் இருந்து வெளியேறினார்.
திரைப்படத் துறையில்
ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சே.சூ.இராஜேந்திரன், ஜி. இராமநாதனின் இசையமைப்பில் பின்னணிப்பாடகராக திரையுலகில் நுழைந்தார். [3] கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கருணாநிதியின்
அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற
ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
1958 -இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது.
எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
சாரதா என்னும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கே. எஸ். கோபாலகிருட்டிணனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.
திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் நாடகத்தின் தொடர்பை சே.சூ.இரா.விட்டுவிடவில்லை. எஸ்.எஸ்.ஆர்.நாடக சபா என்னும் அமைப்பின் வழியாக பல நாடகங்களை நடத்தினார். அதன் வழியாக பின்னாளில் திரைவுலகில் புகழ்பெற்ற மனோரமா, ஷீலா ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்தார்.
சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் 1982ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.
இலட்சிய நடிகர்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.
தயாரிப்பாளர்
சே.சூ. இரா. தனது ராஜேந்திரன் பிக்சர்ஸ், எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழியாக முத்துமண்டபம், தங்கரத்தினம், மணிமகுடம், அல்லி ஆகிய ப்டங்களைத் தயாரித்தார். முத்துமண்டபம் படத்தில் கே. ஆர். விஜயாவை அறிமுகம் செய்தார். அதேபோல மனோரமாவை மற்றொரு படத்தில் அறிமுகம் செய்தார்.
இயக்குநர்
சே.சூ.இராசேந்திரன் தானே கதைத்தலைவனாக நடித்து தங்கரத்தினம் (1960), மணிமகுடம், அல்லி ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
நாடகக் குழு
சே. சூ. இரா. திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கியபொழுது எஸ். எஸ். ஆர். நாடக மன்றம் என்னும் நாடக நிறுவனத்தின் உரிமையாளாராக இருந்தார். அந்நிறுவனத்தில் நடிகர்களாக இருந்த மனோரம்மா , ஷீலா ஆகியோர் பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களாக விளங்கினார்கள். [2]
அரசியல்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சே.சூ.இராசேந்திரன் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
1958ஆம் ஆண்டில் தி.மு.க. அறிவித்த பிரதமர் நேருவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தின் பொழுது முன்னெச்சரிகை நடவடிக்கையாக சே.சூ.இரா. கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். [4]
1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திப் போராட்டத்தின் பொழுது கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் 12நாள்கள் அடைக்கப்பட்டார்.
1962 இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் இவராவார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி. மு. க.வின் சார்பில் 1970 ஏப்ரல் 3 ஆம் நாள் முதல் 1976 ஏப்ரல் 2 வரை பணியாற்றினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தொடங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் சார்பாக பின்வரும் பதவிகளை வகித்தார்.
1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் இவர் வென்றார். [4]
1980ஆம் ஆண்டில் சிறுசேமிப்பு கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1984ஆம் ஆண்டில் ம.கோ.இரா. மருத்துவமனையில் இருந்தபொழுது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து பிரிந்துசென்று எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ] ம.கோ.இரா. நலம்பெற்ற பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ம.கோ.இரா. மறைவிற்கு பின்னர் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டம்ன்றத் தொகுதியில் அ.தி.மு.க.(ஜெயலலிதா அணி) சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். [3] அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார்.
குடும்பம்
சூரிய நாராயண தேவர் - ஆதிலட்சுமி இணையர் மகனான சே.சூ.இராசேந்திரன் நாடகத்தில் தன்னோடு இணைந்து நடித்த கேரளத்தைச் சேர்ந்த பங்கசம் என்பவரை மணந்து கொண்டார். அவர்களுக்கு இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ் என்னும் நான்கு மகன்களும் பாக்யலட்சுமி என்னும் மகளும் பிறந்தனர். 1956ஆம் ஆண்டில் குலதெய்வம் படத்தில் தன்னோடு இணைந்து நடித்த சி.ஆர். விசயகுமாரியை அவ்வாண்டிலேயே களவுத் திருமணம் செய்துகொண்டார். அத்திருமணம் சில ஆண்டுகளில் வெளியே தெரியவந்தது. இவர்களுக்கு ரவிக்குமார் என்னும் மகன் பிறந்தார். பின்னர் இருவரும் மனமொத்து மணவிலக்குப் பெற்றுக்கொண்டனர். [2] மூன்றாவதாக தாமரைச்செல்வி என்பவரை சே.சூ.இரா. மணந்துகொண்டார். இவர்களுக்கு கண்ணன் என்னும் மகனும் ஒரு மகளும் பிறந்தனர்.
மறைவு
மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்.எஸ்.ஆர் அக்டோபர் 24, 2014 காலை 11 மணிக்கு சென்னையில் காலமானார்.
நடித்த திரைப்படங்கள்
சே.சூ.இரா. பின்வரும் படங்களில் நடித்திருக்கிறார்:
வ.எண். ஆண்டு திரைப்படம்
01 1947.09.26 பைத்தியக்காரன்
02 1948 ஸ்ரீ ஆண்டாள்
03 1952.10.17 பராசக்தி கதை தம்பி
04 1952.12.27 பணம்
05 1954.03.03 மனோகரா கதை நண்ப
06 1954 சொர்க்க வாசல்
07 1954.09.24 அம்மையப்பன்
08 1954.10.25 ரத்தக்கண்ணீர் கதை நண்ப
09 1956.02.25 ராஜா ராணி
10 1956.09.29 குலதெய்வம்
11 1956.11.01 ரங்கோன் ராதா
12 1957.10.22 முதலாளி கதை
13 1957 புதுவயல்
14 1958.01.14 தை பிறந்தால் வழி பிறக்கும்
15 1958.05.30 பிள்ளைக் கனியமுது
16 1958.05.30 பெற்ற மகனை விற்ற அன்னை
17 1958.07.16 தேடிவந்த செல்வம்
18 1958.12.12 அன்பு எங்கே
19 1958 பெரிய கோவில்
20 1959.02.14
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
21 1959.04.23 கல்யாணிக்கு கல்யாணம்
22 1959.05.19 சிவகங்கைச் சீமை போர்
23 1959.06.26 புதுமைப்பெண்
24 1959.07.10 பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
25 1959.07.17 நாட்டுக்கொரு நல்லவன்
26 1959.10.31 பாஞ்சாலி
27 1959
தலை கொடுத்தான் தம்பி
28 1959 உத்தமி பெற்ற ரத்தினம்
29 1959 அல்லி பெற்ற பிள்ளை
30 1959 சொல்லு தம்பி சொல்லு
31 1959
மாமியார் மெச்சிய மருமகள்
32 1959 பாண்டித்தேவன்
33 1959.12.11 சகோதரி
34 1960.04.13 தெய்வப்பிறவி
35 1960.05.27 சங்கிலித்தேவன்
36 1960.09.02 ராஜா தேசிங்கு
கதை நண்ப
37 1960.10.19 பெற்ற மனம்
38 1960.11.25 தங்கரத்தினம்
39 1960 பொன்னிர் திருநாள்
40 1960 தங்கம் மனசு தங்கம்
41 1961.04.27
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே
42 1961.07.29 குமுதம்
43 1961.11.7 பணம் பந்தியிலே
44 1961 முத்துப்பந்தல்
45 1962.03.16 சாரதா
46 1962.09.14 செந்தாமரை
47 1962.11.23 ஆலயமணி
48 1962 எதையும் தாங்கும் இதயம்
49 1962 முத்துமண்டபம்
50 1962 தெய்வத்தின் தெய்வம்
51 1963.03.09 வானம்பாடி
52 1963.03.15 நீங்காத நினைவு
53 1963.04.12 காட்டு ராஜா
54 1963.06.06 நானும் ஒரு பெண்
55 1963.08.02 குங்குமம்
56 1963.10.26 காஞ்சித் தலைவன்
57 1963.11.15 ஆசை அலைகள்
58 1963.12.25 கைதியின் காதலி
59 1963 வீரத் தளபதி வேலுதம்பி
60 1964 பூம்புகார் கதை
61 1964.04.03 பச்சை விளக்கு
62 1964.07.18 கை கொடுத்த தெய்வம்
63 1964.08.22 வழி பிறந்தது
64 1964.11.03 உல்லாச பயணம்
65 1964 அல்லி
66 1965.01.15 பழநி
67 1965.04.22 சாந்தி
68 1965.06.04 படித்த மனைவி கதை
69 1965.06.19 காக்கும் கரங்கள்
70 1965.07.17 வழிகாட்டி
71 1965.10.23 பூமாலை
72 1965.11.19 மகனே கேள்
73 1965.12.25 ஆனந்தி
74 1966.04.29 அவன் பித்தனா
75 1966.06.18 தேடிவந்த திருமகள்
76 1966.08.12 மறக்க முடியுமா கதை
77 1966.12.09 மணிமகுடம்
78 1969 பெண்ணை வாழ விடுங்கள்
79 1982 இரட்டை மனிதன்
80 1985.05.17 அன்பின் முகவரி
81 1996.04.17 ராஜாளி
82 1998.07.09 தர்மா முதல
83 2000.04.14 வல்லரசு
84 2001.02.16 ரிஷி முதல
85 2003 தம்.
அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்
உணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று.
60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
மதுரையை அடுத்த சேடப்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார்.
தென்னிந்தியாவின் சிறந்த நாடக கலைக்கூடமாக திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பயிற்சி பெற்றார். பின் அவரது தனிப்பட்ட குரல்வளத்தால் வெகுசீக்கிரத்தில் 'பால அபிமன்யு' என்ற நாடகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் தரப்பட்டது. தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சில வருடங்களில் அங்கிருந்து விலகி, நாடக உலகில் அப்போது புதுமைகளை புகுத்திவந்த பிரபல டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக மன்றத்தில் இணைந்தார். பின்னர் நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு நுழைந்தார்.
சிவாஜிகணேசனின் முதல்படமான 'பராசக்தி'தான் இவருக்கும் முதல் படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்தில் ராஜேந்திரனுக்கு, நாயகன் சிவாஜியின் அண்ணன் வேடம் தரப்பட்டது. தெள்ளிய தமிழில் கணீர் குரலோடு ஞானசேகரன் என்ற பாத்திரத்தில் வெளிப்பட்ட இவரின் நடிப்பு, சிவாஜிக்கு அடுத்தபடியாக யார் இந்த நடிகன் என்று ரசிகர்களால் பேசப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார். எஸ்.எஸ். ஆர்.
'முதலாளி', 'தலைகொடுத்தான் தம்பி', 'எதையும் தாங்கும் இதயம்', 'குமுதம்', 'ரத்தக்கண்ணீர்', 'கை கொடுத்த தெய்வம்', 'பச்சை விளக்கு', 'குலதெய்வம்', 'தை பிறந்தால் வழிபிறக்கும்', 'தெய்வப்பிறவி', ராஜாராணி', 'காஞ்சித்தலைவன்', 'ராஜா தேசிங்கு', 'ரங்கூன் ராதா' என பல படங்கள் அவருக்கு புகழைத் தந்தன. கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பூம்புகார்' அவரது சிறந்த திரைப்பட வரிசையில் ஒன்று. 'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் இவரது கணீர் குரல் வசனங்கள் அப்போது பிரபலம்.
பொதுவாக திரையுலகில் பிரபலமடைந்த பின் தனித்துவமான கதாநாயகனாக நடிப்பதையே பலரும் விரும்புவர். ஆனால் பிரபலமான கதாநாயகனான பின்பும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது கதாநாயகனாக தன் சக நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். அந்த படங்களில் தமிழ் உச்சரிப்பாலும், கணீர் குரலாலும் தனித்து தெரிந்தார் எஸ். எஸ். ஆர். வீரம், சோகம், அழுகை, நகைச்சுவை என எந்த பாத்திரமானாலும் தன் தனித்த நடிப்பால் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு வரவேற்பை பெற்றவர் ராஜேந்திரன்.
அவரைப்போன்று தமிழை தெளிவாக உச்சரித்தவர்கள் அன்றைய திரையுலகில் சொற்பமே. இயல்பில் திராவிட கொள்கையில் ஈர்ப்பு கொண்டவரான அவர், ஈரோட்டில் 'சந்திரோதயம்' நாடகம் நடத்த வந்த அண்ணாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்க, அது இன்னமும் தீவிரமானது. பின்னாளில் திமுகவில் இணைந்தார்.
அண்ணாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன், அவரையே தன் அரசியல் குருவாக ஏற்று இறுதிவரை அவரை கொண்டாடி மகிழ்ந்தவர். திமுக முதன்முறை போட்டியிட்ட 1957 தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. வெறுமனே உறுப்பினராக இல்லாமல், கட்சி மேடைகளில் அண்ணா புகழ்பாடி கட்சியை வளர்த்த அவர், திமுவிற்காக நாடகங்கள் நடத்தி நிதி திரட்டிக்கொடுத்திருக்கிறார்.
தன் இல்லத்தில் எந்த நிகழ்வானாலும் அண்ணா இன்றி நடத்தமாட்டார். தான் கட்டிய இல்லத்திற்கு அண்ணாவின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.
உச்சகட்டமாக தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு ஆதரவாக பகுத்தறிவு கொள்கையில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக புராண, இதிகாச படங்களில் இனி நடிப்பதில்லையென ஒருநாள் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு. காரணம், அப்போது புகழின் உச்சத்தில் அவர் இருந்தார். இதனாலேயே தமிழ்த்திரையுலகின் லட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றார்.
திரையுலகில் 50 களில் துவங்கி 60 களின் இறுதிவரை இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் தன்னிகரில்லாத நடிகனாக திகழ்ந்த ராஜேந்திரன், இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த முதல் நடிகர் என்ற புகழுக்குரியவர். 1962- ம் ஆண்டு தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திரையுலகில் தன்னோடு இணைந்து பல படங்களில் நடித்த பிரபல நடிகை விஜயகுமாரியுடன் காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில் குழந்தை பிறந்த கையோடு, இருவரும் மனமொத்து பிரிந்தனர்.
திரையுலகில் பிரபலமாகியிருந்தபோதே தனது பெயரில் நாடக மன்றம் ஒன்றை துவக்கி, அதில் திறமையான நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பளித்தவர் எஸ்.எஸ்.ஆர். அவரது நாடக மன்றம் பல பிரபலமான கதைகளை நாடகமாக அரங்கேற்றியது. அண்ணாவின் 'ஓர் இரவு', 'சந்திரமோகன்', மு.கருணாநிதி எழுதிய 'அம்மையப்பன்' ஆகிய நாடகங்களை நடத்தினார். திரையுலகில் அவரால் பலர் ஏற்றம் பெற்றனர். அவர்களில் சமீபத்தில் மறைந்த மனோரமா மற்றும் நடிகர் முத்துராமன் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழகத்தில் அறிமுகமாகி, பின்னாளில் கேரளாவில் பிரமலமடைந்த ஷீலா இவரது அறிமுகமே. அண்ணாவின் மறைவிற்கு பின் தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால், ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி, எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். 1980 -ம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவருக்கான அரசியல் களம் தெளிவற்ற நிலையில் போனது. தி.மு.க., அ.தி.மு.க என இரு கழகங்களிலும் தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாமல், வேறு வழியின்றி அரசியலிலிருந்து ஒதுங்கினார் எஸ். எஸ். ஆர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
முதன்முறை சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.ஆரை சந்தித்து வாழ்த்து சொன்ன சிவாஜி, “சம்பிரதாயமாத்தான் உங்களை வாழ்த்தறேன். பதவி, அதிகாரம்னு சினிமாவிலிருந்து ஒதுங்கிடாதீங்க. அதெல்லாம் வயசான பின்னாடி பார்த்துக்கலாம். திரும்பவும் நடிக்க வந்திடணும்” என்றார் வாஞ்சையாக. தொழில்முறை போட்டியாளரிடமும் அவர் பேணிய ஆரோக்கியமான நட்புக்கு இது சான்று.
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான 'முதலாளி' எஸ்.எஸ்.ஆருக்கு திருப்புமுனை கொடுத்த திரைப்படம். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'மறக்க முடியுமா' திரைப்படத்தில் தன் சொந்த சகோதரியையே யார் எனத் தெரியாமல் பெண்டாள முயற்சிக்க, அப்போது அவள் தன் கழுத்தை அறுத்துக்கொள்வாள். அப்போது எஸ்.எஸ்.ஆர் வெளிப்படுத்தும் உணர்ச்சிவயப்பட்ட நடிப்பை வேறு எந்த நடிகரிடத்தும் எதிர்பார்க்க முடியாதது. வெளிப்படங்களில் வாய்ப்பு குறைந்தபோது, தன் சொந்தப்பெயரில் படம் தயாரித்து நடித்தார் எஸ்.எஸ்.ஆர்.
திரையுலகில் அடுத்த தலைமுறை நடிகர்களாலும் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர், அவர்கள் விரும்பி அழைத்தபோது அவர்களின் படங்களில் நடித்தார்.
தம் இறுதிநாளில் ஞாபக மறதி நோயால் சிரமப்பட்ட அவர், எம். ஜி. ஆர் ரசிகர்கள் ஏற்பாடு செய்த ஒரு மேடையில் கருணாநிதியை புகழ்ந்து பேசி சங்கடப்பட்டுப்போனார். காரணம் எல்லா காலங்களிலும் தனக்கு எதிரிகளாக யாரையும் வரித்துக்கொண்டு அரசியல் செய்யாமல், தனித்துவமாக விளங்கிய அவரது குணம். திரையுலகில் பந்தா இல்லாமல், சக நடிகர்களுடன் போட்டி மனப்பான்மையின்றி இணைந்து பணியாற்றியது அவரது சிறந்த குணத்திற்கு சான்று. ஒரு வகையில் அரசியலில் அவர் முழு வெற்றி பெறாததற்கும் அதுவே காரணம் எனலாம்.
திரையுலகில் எத்தனை புகழோடு விளங்கினாலும் அண்ணாவை நேசித்த தன் சக திரைக்கலைஞர்களைபோல எஸ்.எஸ்.ஆர் அரசியலில் பெரும் உயரத்தை எட்டி பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம் ஒன்று உண்டு. அது, அண்ணாவை அவர் நிஜமாய் நேசித்ததுதான்! - எஸ்.கிருபாகரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக