நடிகை ஜோதிலட்சுமி பிறந்த தினம் நவம்பர் 2 ,1948.
ஜோதிலட்சுமி ( Jyothi Lakshmi , 2 நவம்பர் 1948 – 8 ஆகத்து 2016) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். 1963ஆம் ஆண்டு பெரிய இடத்துப் பெண் என்கிற திரைப்படத்தின் வழியாக வள்ளி பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர். பெரும்பாலும் இவர் திரைப்படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவின் மருமகளாவார். இவரது அத்தை டி. ஆர். ராஜகுமாரி ஆவார். இவரது தங்கை ஜெயமாலினி , இவரது மகள் ஜோதி மீனா ஆகியோர் நடிகைகள் ஆவர். இவர் நடனபயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். பல காலங்கள் திரையுலகில் இடைவெளி விட்டு நடிக்காமல் இருந்த இவர் சேது படத்தில்
கான கருங்குயிலே பாட்டுக்கு ஆடி மீண்டும் திரையுலகில் வலம் வந்தார்.
மறைவு
68 வயதான ஜோதிலட்சுமி இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்; சிகிச்சைப் பலனின்றி 2016 ஆகத்து 8 இரவு காலமானார்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
1. பெரிய இடத்துப் பெண் (1963)
2. வானம்பாடி (1963)
3. பட்டணத்தில் பூதம் (1967)
4. தேடிவந்த மாப்பிள்ளை (1968)
5. கலாட்டா கல்யாணம் (1968)
6. பூவும் பொட்டும் (1968)
7. அடிமைப் பெண் (1969)
8. தலைவன் (1970)
9. நீரும் நெருப்பும் (1971)
10. ரிக்சாக்காரன் (1971)
11. யார் ஜம்புலிங்கம் (1972)
12. ராகம் தேடும் பல்லவி (1982)
13. நாயகன் (1987)
14. முத்து (1995)
15. தர்ம சக்கரம் (1997)
16. பாசமுள்ள பாண்டியரே (1997)
17. மறு மலர்ச்சி (1998)
18. சேது (1999)
19. என்னம்மா கண்ணு (2000)
20. மிடில் கிளாஸ் மாதவன் (2001)
21. எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)
22. சண்டை (2008)
23. திரிஷா இல்லனா நயன்தாரா (2015)
தமிழ் சினிமாவின் சொப்பன சுந்தரி! வண்ணத்திரை.
“நின்றால் கோயில் சிலையழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு
நடந்தால் அன்னத்தின் நடையழகு
நாடகமாடும் இடைஅழகு”
இது ‘பூவும் பொட்டும்’ படத்திற்காக கவிஞர் கண்ணதாசனின் அழகுரசம் ததும்பும் பாடல்களில் ஒன்று. இந்த சௌந்தர்ய பூஜைக்குரிய கதாபாத்திரம் யார் என்று தெரிந்தே பாடினாரா என்று தெரியவில்லை. கோயில் சிலைகளின் அழகமைப்பான 36-24-36 அளவுகளைத் தமிழ்த்திரையில் கொண்டவர் ஜோதிலட்சுமி. பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஜோதிலட்சுமிக்கு திரையில் முதல் வாய்ப்புக் கிடைத்தது கவிஞரின் சொந்தப்படமான ‘வானம்பாடி’ படத்தில்தான்.
‘யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்....’ என்ற பாடல் ஒன்றிற்கு ஜோதிலட்சுமி ஆடுவார். முதல் படத்திலேயே நடனத்தில் முத்திரை பதித்திருந்தார். அதனால் கவிஞர் தெரிந்தே பாடியிருக்கலாம்.
ஆனாலும் ஜோதிலட்சுமி, டி.ஆர்ராஜகுமாரியின் சகோதரர் ராமண்ணா தயாரித்து இயக்கிய பெரிய இடத்துப் பெண் (இதுவே முதலில் வெளிவந்தது) படத்தில் நினைவு கொள்ளத்தக்க பாத்திரத்தில் நிறைவாக நடித்து பிரபலமானார். ‘கட்டோடு குழல் ஆட ஆட..’வை மறக்க முடியுமா?
ஜோதிலட்சுமியின் நடனம் அற்புதமானது. அதில் ஒரு நளினம் இருக்கும். சில மூவ்மென்டுகளுக்கு சிலர் திணறுவார்கள். ஆனால், இவர் அநாயாசமாக ஆடுவார். ‘அடிமைப் பெண்’ படத்தில், ‘காலத்தை வென்றவன் நீயே.....’ பாடலுக்கு தங்கப்பன் மாஸ்டரின் இடுப்பையும் மூட்டுகளையும் ஒடிக்கும் சிக்கலான மூவ்மென்டுகளை ஊதித்தள்ளி இருப்பார்.
ஊர்த்துவ தாண்டவம் போல தலை வரை கால்களை உயர்த்தி ஆடுவார். உடன் ஆடும் சக நடிகைகள் சற்றே திணறுவார்கள். எம்.ஜி.ஆருக்கு இவர் மேல் நம்பிக்கை அதிகம். தவறாமல் சரியான வாய்ப்புகளை வழங்குவார்.
‘தேடி வந்த மாப்பிள்ளை’ படத்தில் கலகலப்பான பிக்பாக்கெட் பெண்ணின் பாத்திரம். இயல்பாகச் செய்திருப்பார். ‘தலைவன்’, எம்.ஜி.ஆர் ரசிகர்களே மறக்க நினைக்கிற படம். அதில் எம்.ஜி.ஆருடன் ‘ஓடையிலே ஒரு தாமரைப்பூ’ பாடலில் அவ்வளவு நெருக்கமாக நடித்திருப்பார். அதை மட்டும் ‘தலைவன்’ ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.
தன்னுடைய 24 இஞ்ச் உடுக்கை இடை துடிப்பாகத் தெரியும்படி, உடலை ஒட்டி இறுக்கமாகக் கட்டிய சேலையுடன் 36 இஞ்ச் வளைவுகளை வாளிப்பாக அசைத்து ‘பம்பை உடுக்கை கொட்டி பரிவட்டம் மேலே கட்டி.....’ என்று ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் சூப்பர் கிளைமாக்ஸில் போடும் குத்தாட்டத்தை இன்றைக்கெல்லாமும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அதில் எம்.ஜி.ஆரையும் தனக்கு இணையாக ஆட்டி வைத்துவிடுவார். இதிலெல்லாம் கதாநாயகர்களுடைய டிலைட் ஜோதிலட்சுமி. அவர் ‘ரிவால்வர் ரீட்டா’வில் கோல்ட்ஃபிஷ் ஜோதிலட்சுமியாகவும், ‘கன்ஃபைட் காஞ்சனா’வில் டயமண்ட் கிளியோபாட்ராவாகவும் தோன்றி 1970-72 சினிமா ரசிகர்களின் டிலைட்டாக மாறினார்.
ஒரு நடிகை, ‘கிளியோபாட்ரா’ ஆங்கிலப்படம் வந்த சமயம் தானே தமிழில் கிளியோபாட்ரா வேடத்திற்கு ஏற்றவர் என்று ஒரு வார இதழில் பேட்டி கொடுத்திருந்தார். அதை மறுத்து அவரைவிட சீனியர் நடிகை சொல்லியிருந்தார், “எலிசபெத் டெய்லர் வேடத்தைத் தமிழில் போட ஜோதிலட்சுமிக்கே உடல்வாகு இருக்கிறது.”
ஜோதி, ‘பட்டணத்தில் பூதம்’ பாடல் காட்சியான, ‘இதழை விரித்தது ரோஜா எடுத்து அனுபவி ராஜா.....’ பாடலில் எகிப்தியப் பின்னணியில் கிளியோபாட்ரா போல அற்புதமான நடனம் ஆடி, அதை உண்மையாக்கி இருப்பார். ‘கன்ஃபைட் காஞ்சனா’ போன்ற டப்பிங் படங்களை செந்தில் குமரன் பிக்சர்ஸார் தயாரித்து வெளியிடுவார்கள்.
உண்மையிலேயே அவற்றுக்கு அடிமையான செந்தில் என்கிற ஒரு நண்பரின் திருமணத்திற்கு, குட்டிக் கலாட்டாவாக, நண்பர்கள் ‘பிளேபாய்’ இதழொன்றைப் பரிசு கொடுக்க முடிவெடுத்தோம். அது அவர் காதுக்கு எட்டியபோது, ‘பிளேபாய் என்றால் என்ன புத்தகம்?’ என்று விசாரித்த பின்னர் அவர், “போங்கப்பா, ஜோதிலட்சுமி படம் நாலு கொடுங்கப்பா போதும்” என்றார், கொஞ்சமும் சிரிக்காமல். எங்களுக்கு சிரித்து மாளவில்லை. அவ்வளவு தூரம் அவர் ஜோதிலட்சுமியின் ரசிகர்.
அதில் உண்மை என்னவென்றால், அந்தக் காலத்தில் ஏகப்பட்ட பேரின் சொப்பன சுந்தரி ஜோதிலட்சுமிதான். அவருக்காக ‘சுந்தரமூர்த்தி நாயனார்’ படத்தைப் பொறுமையாகக் கடைசிவரை பார்த்த குரூப் இருக்கிறது. அதில்கூட ‘தலையே நீ வணங்காய்…’ என்ற திருநாவுக்கரசரின் தேவாரத்திற்கு அப்பழுக்கற்ற பரதநாட்டியம் அழகாக ஆடியிருப்பார்.
ஜோதிலட்சுமி, கவர்ச்சியால் மட்டுமே ரசிகர்களைக் கட்டிப்போடவில்லை. ‘கலாட்டா கல்யாணம்’, ‘தேடி வந்த மாப்பிள்ளை’, ‘பெரிய இடத்துப் பெண்’ போன்ற படங்களில் நல்ல குணச்சித்திர வேடங்களிலும் ஜொலித்தவர். ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் எம்.ஜி.ஆரிடம் அவரது குழந்தையின் அழகை வர்ணித்து, “ஒங்களுக்கெல்லாம் அவனைப் பார்க்க குடுத்து வைக்கலை அத்தான்..” என்று குழந்தையைப் பார்க்க உசுப்பிவிடும் நடிப்பு, ஒரு அறிமுக நடிகையின் முதிர்ச்சியான நடிப்பு.
தான் ஒரு பாரம்பரிய நடிகை, அது தன் உறவினர்களின் படம், என்றாலும்உழைப்பு, ஈடுபாடு என்பது வேறு என்பதை அதில் திறமையாக நிரூபித்திருப்பார். திறமையை ரசிகர்கள் எளிதில் இனம் கண்டு கொள்வார்கள் என்பதற்கு ஜோதிலட்சுமியின் அந்த நடிப்பு உதாரணம். அழகு, நடனம், நடிப்பு, காமெடியில் டைமிங் என எந்தப் பாத்திரமானாலும் ஜொலித்த ஒரு நல்ல நடிகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக