சனி, 9 செப்டம்பர், 2017

கவிஞர் விவேகா பிறந்த நாள்: செப்டம்பர் 10 , 1975 .


கவிஞர் விவேகா பிறந்த நாள் செப்டம்பர் 10 , 1975 .

விவேகா (பிறப்பு: செப்டம்பர் 10 , 1975 ) ஒரு தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் .சாத்தனூருக்கு அருகில் உள்ள வேடங்குளம் எனும் கிராமத்தில் பிறந்த இவர் திருவண்ணாமலையிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிறிது காலம் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். பின்னர் தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

திரைப் பாடலாசிரியர்

விவேகா ”நீ வருவாய் என” என்ற படத்தில் “பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா” என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியராக அறிமுகமானார்.தொடர்ந்து பல படங்களில் எழுதி வந்தவருக்கு “கந்தசாமி” எனும் படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.அப்படத்தின் அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தமிழின் முன்னணி பாடலாசிரியரானார்..

நூல்கள்

உயரங்களின் வேர் - கவிதைத் தொகுப்பு.



பாடல் எழுதியுள்ள படங்களில் சில...

வேதாளம்
காஞ்சனா-2
சிங்கம்
சிங்கம்-2
வானத்தைப் போல
ஆனந்தம்
உத்தம வில்லன்
திருவிளையாடல் ஆரம்பம்
நண்பன்
துப்பாக்கி
கந்தசாமி
சிறுத்தை
வேட்டைக்காரன்
அஞ்சான்
வேலாயுதம்
கோ
வீரம்
ரன்
ஜில்லா
மாற்றான்
கண்ணா லட்டு தின்ன ஆசையா
காஞ்சனா
என்றென்றும் புன்னகை
ராமன் தேடிய சீதை
ஈரம்
சமுத்திரம்
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
சந்தோஷ் சுப்பிரமணியம்
தில்லாலங்கடி
மன்மதன் அம்பு
வில்லு
காவலன்
மாசிலாமணி
ஜி
ராட்டினம்
வேங்கை
குட்டி
தெனாலிராமன்
நையாண்டி
நீ வருவாய் என
வின்னர்
இவன் வேற மாதிரி
சகுனி
அரவான்
ரத்த சரித்திரம்
உனக்காக எல்லாம் உனக்காக
காதல் சுகமானது

சிங்கம் புலி
கச்சேரி ஆரம்பம்
கந்தக் கோட்டை
வல்லினம்
தாஸ்
பள்ளிக்கூடம்
சென்னைக் காதல்
தமிழ்
ஆயுதம்
குபேரன்
கந்தா கடம்பா கதிர்வேலா
அலேக்ஸ் பாண்டியன்
பரட்டை என்கிற அழகு சுந்தரம்
180
வேலூர் மாவட்டம்
விண்ணூக்கும் மண்ணூக்கும்
காதலுடன்
வந்தேமாதரம்
வெடி
தோரணை
யுவன்
தம்பிக்கோட்டை
சுட்டும் விழிச் சுடரே
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
பிடிச்சிருக்கு
நெஞ்சைத் தொடு
நம்பியார்
நந்தனம்
நைனா
நான் அவன் இல்லை
மிளகா
மந்திரப் புன்னகை
மதிகெட்டான் சாலை
மாஞ்சா வேலு
காசேதான் கடவுளடா
கண்பேசும் வார்த்தைகள்
கலவரம்
கலிங்கா
காத்தவராயன்
காதல் டாட் காம்
இஷ்டம்
ஆடுபுலி
இன்பா
ஃபைவ் ஸ்டார்
திக் திக் திக்
கேம்பஸ்
தனுஷ் ஐந்தாம் வகுப்பு
அரசாட்சி
அன்புத்தொல்லை
வல்லரசு
அற்புதம்
சுதேசி
ஆட்ட நாயகன்
ஆதி நாராயணா
அகம் புறம்
ப்ரியசகி
அழகிய பாண்டிபுரம்
பலம்
பொம்மலாட்டம்
மற்றும் பல படங்கள்.



நேர்காணல்  கவிஞர் விவேகா,

தமிழகத்தின் முன்னணித் திரைக் கவிஞர்களுள் ஒருவர் விவேகா. கவிஞர், பாடலாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர் என்று சுறுசுறுப்பாக இயங்கும் இளைஞர். "பூங்குயில் பாட்டு புடிச்சிருக்கா", "மின்சாரம் என்மீது பாய்கின்றதே", "ஒரு சின்னத் தாமரை", "என்ன இதுவோ", "என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்", "டாடி மம்மி வீட்டில் இல்ல...", "அமளிதுமளி" என மெல்லிசை, துள்ளிசை என்று விதவிதமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். சமீபத்திய ஹிட் உத்தமவில்லன் படத்தின் "கிஸ்ஸுக்கே லவ்வா..". இவருடன் உரையாடியதிலிருந்து....
கேள்வி: நீங்கள் கவிஞரான பின்புலம் சொல்லுங்கள்...
பதில்: நான் பிறந்து வளர்ந்தது திருவண்ணாமலை அருகே வேடங்குளம். தந்தை விவசாயி. ஊர்ப் பெரியமனிதர். கலைகளில் ஆர்வமுடையவர். ஆசுகவி. நினைத்தவுடனேயே பாடல் எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. தெருக்கூத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வம். அவர்தான் எங்கள் ஊரில் நடக்கும் தெருக்கூத்திற்கு வாத்தியார். மாரியம்மன்கோவில் திருவிழாவின்போது நடக்கும் தெருக்கூத்துக்கு எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் ஒத்திகை. அப்பா பாட்டு, வசனம் எல்லாம் கலைஞர்களுக்கு சொல்லித்தருவார். சிறு பையனாக இருக்கும்போதே வேடிக்கை பார்ப்பேன். தெருக்கூத்துக்கு ஏற்றவாறு சில பாடல்வரிகளை எழுதிக்கொடுத்த அனுபவம் உண்டு. பள்ளியில் படிக்கும்போதே சிறுசிறு கவிதைகள் எழுதுவேன். பல சிற்றிதழ்களில் அவை வெளியாகின. கவிஞனாக வெளியே அறியப்பட்டது, பிளஸ் ஒன் படிக்கும்போது "ஒரு பிரளயத்தின் அவசியம்" என்ற என் கவிதை 'புதியபார்வை' இதழில் வெளிவந்தபோதுதான். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் படிக்கும்போது மாநில அளவிலான கவிதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றேன். பரவலாக வெளியே தெரிய ஆரம்பித்தேன். தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள் எழுதினேன்.
கே: விவேகா என்ற பெயர் வித்தியாசமாக உள்ளதே, இதுதான் உங்கள் இயற்பெயரா?
ப: எனது இயற்பெயர் விவேகானந்த வீர வைரமுத்து. நிறையப் பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஆண்குழந்தை நான். இதுவும் பெண்ணோ என்று பயந்து, என் தாயார் நாட்டுமருந்து சாப்பிட்டு தடுக்கப் பார்த்தார். அதையும் மீறிப்பிறந்த ஆண்குழந்தை என்பதால் என் தந்தை எனக்கு இப்படியொரு பெயரை வைத்தார். பள்ளியில் சேரும்போது 'விவேகானந்தன்' என்ற பெயரில் சேர்த்தார்கள் என்றாலும் எல்லாரும் என்னை 'விவேகா' என்றுதான் அழைப்பார்கள். நான் இதழ்களுக்கு அந்தப் பெயரில்தான் கவிதை எழுதினேன். அந்தப் பெயரே நிலைத்து விட்டது. மற்றபடி இது நியூமராலஜி பார்த்து வைத்துக்கொண்ட பெயரல்ல.
கே: முதல் திரைப்பாடல் அனுபவம் பற்றி...
ப: நான் திரைக் கலைஞர்களே இல்லாத வறண்ட மாவட்டமான திருவண்ணாமலையில் இருந்து வந்தவன். அங்கிருந்து வந்த முதல் திரைப்படப் பாடாலாசிரியன். சென்னைக்கு வந்து சிலகாலம் வட்டார இதழ் ஒன்றில் செய்தியாளராக இருந்தேன். பின்னர் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைமை நிலையப் பேச்சாளராக இருந்தேன். கவியரங்கம், பட்டிமன்றம் என்று நிறையச் செய்தேன். கூடவே திரைப்படப் பாடலாசிரியருக்கான முயற்சிகளையும் செய்தேன். எனது முதல் பாட்டு ராஜகுமாரன் இயக்கத்தில் "நீ வருவாய் என" என்ற படத்தில் வெளியான "பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா" என்பது. இரவோடு இரவாக எழுதிய பாட்டு அது. நான் திரைப்படத்திற்குப் பாடல் எழுதியிருக்கிறேன்; அது வெளிவரப் போகிறது என்று தெரிந்தவுடன் என் கிராமத்தில் ஒரே கோலாகலம், கொண்டாட்டம், சந்தோஷம். சினிமாவை வேற்றுக்கிரக விஷயமாகக் கருதும் எளியமக்கள் வாழும் ஊர் அது. அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் ஆரம்பத்தில் என் தந்தை என்னை இந்தத் துறைக்கு அனுமதிக்கவில்லை. நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். மேலே எம்.எஸ்ஸி படிக்க வேண்டுமென்பது அவர் விருப்பம். ஏனென்றால் என் அண்ணன் எம்.எஸ்ஸி. படித்து விட்டு இந்திய விமானப் படையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். நானோ கவிதை, பட்டிமன்றம், பேச்சு என்று இருந்தேன். நான் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை என்றொரு வருத்தம் அவருக்கு இருந்தது. இந்தப் பாடல் வெளியாகிப் படமும் நன்றாக ஓடியதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இனி நன்றாக வந்து விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது. ஊர்த் திருவிழாக்களில் எல்லாம் அந்தப் பாடலை ஒலிக்கவிட்டு மக்கள் ரசித்தனர்!
கே: மெட்டுக்குப் பாட்டு, பாட்டுக்கு மெட்டு. உங்களுக்கு எது பிடிக்கிறது?
ப: மெட்டுக்குப் பாட்டு என்பது ஒரு கட்டுக்குள் எழுதுவது மாதிரி ஆரம்பத்தில் சற்றுக் கஷ்டமாக இருக்கும். ஆனால் பழகிவிட்டால் மிக எளிமையானது. மெட்டுப் போடப்போட நான் நிறையப் பாடல்கள் எழுதியிருக்கிறேன். "என் பேரு மீனாகுமாரி" பாடல் 15 நிமிடத்துக்குள் உருவானது. "ஒரு சின்னத் தாமரை" பாடலும் அப்படித்தான். "கோழி வெடக்கோழி" பாடலைக் கேட்டுவிட்டு பேரா. கு. ஞானசம்பந்தன் மனம்விட்டுப் பாராட்டினார். "இந்தச் சந்தத்துக்குப் பாடல் எழுதுவது கஷ்டம். நீங்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்" என்று வாழ்த்தினார். அந்தப் பாடல் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. அது திருப்புகழ் சந்தம் மாதிரி கடினமானது. சிறுவயதிலிருந்தே திருப்புகழ் பாடல்களைச் சரளமாகப் பாடுவேன். அதனால் சந்தத்துக்கு எழுதுவது எனக்கு எளிதான ஒன்று. தெருக்கூத்துக்கு, அந்த இசைக்கு, அதன் பழைய வரிகளை மாற்றிப் புதிதாக எழுதிக் கொடுத்த அனுபவங்கள் இருந்ததால் மெட்டுக்குப் பாட்டோ, பாட்டுக்கு மெட்டோ, இரண்டுமே சுலபமாக வரும். கதைச் சூழலுக்கேற்ப எழுதிக் கொடுப்பதும் எளிதில் கைவந்ததுதான்.

கே: உத்தம வில்லன் படப் பாடல் பற்றி...
ப: அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஹிந்தி சாயலில் ஜிப்ரான் ட்யூன் போட்டிருந்தார். 'தர்ல்லாஸ்க்கே ஜவ்வா' என்ற மாதிரி அது இருந்தது. பாடலில் "ஸ்க்கே" என்ற வார்த்தை வேண்டும் என்றார் அவர். எந்த வார்த்தை போட்டாலும் பொருத்தமில்லாதது போல் இருந்தது. கமல் சார் "'பார்த்ததுக்கே லவ்வா' என்பது மாதிரி எழுதுங்கள்" என்று ஒரு ஒன்லைன் எடுத்துக் கொடுத்தார். அது எனக்கு உதவியாக இருந்தது. கமல் படத்தின் நாயகன்; முத்தத்திற்கும் அவருக்கும் நிறையப் பொருத்தம் என்பதால் 'சிங்கிள் கிஸ்க்கே லவ்வா' என்று எழுதினேன். கமலும் பாராட்டினார். பல இடங்களிலிருந்தும் அதற்குப் பாராட்டு. அது ஒரு நல்ல அனுபவம்.
கே: கவிதைக்கும் திரைப்பாடலுக்கும் என்ன வித்தியாசம்?
ப: கவிதையை நம் விருப்பத்துக்கு எழுதலாம். நம் நிபுணத்துவத்தைக் காட்டிக் கொள்ளலாம். நம் தேடல், நம் உள்ளக்கிடக்கை என எல்லாவற்றையும் கவிதையில் முன்வைக்கலாம். நானே அதற்கு ஆசான்; நானே அதற்கு முதல் வாசகன். ஆனால் திரைப்பாடல் அப்படியல்ல. அது ஒரு கூட்டுமுயற்சி. பலவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டது. நாம் பாடல் எழுதினாலும், அது இசைக்குப் பொருத்தமாக இருந்தாலும், சில வரிகளை, வார்த்தைகளை மாற்ற வேண்டும் என்று இசையமைப்பாளரோ, இயக்குநரோ, தயாரிப்பாளரோ விரும்பினால் நாம் செய்துதான் ஆகவேண்டும். பாடல் படத்தின் ஓட்டத்தைத் தடை செய்வதாக இருக்கக்கூடாது. சிச்சுவேஷனை பாதித்துவிடக் கூடாது. ஓர் உதவி இயக்குநர்வரை பலரால் பாடலில் பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தமுடியும். ஒரு திரைப்பாடல் அப்படித்தான் உருவாகிறது. கவிதை என்பது என் சொந்த வானம் என்றால் திரைப்பாடல் என்பது ஒரு தண்டவாளப் பயணம். அதுதான் திரைப்பாடலின் சவால்.
கே: உங்கள் கவிதைத் தொகுப்பு பற்றி...
ப: "உயரங்களின் வேர்" என் முதல் கவிதைத் தொகுப்பு. 2004ல் வெளியானது. இதற்காகத் "திரைச்செம்மல்" விருது கிடைத்தது. கடைநிலை ஊழியர்கள் மாநாட்டில் 10000 பிரதிகள் விற்பனையாயின. தொடர்ந்து தினமலர் போன்ற இதழ்களில் கவிதைத் தொடர்கள், கட்டுரைகள் எழுதுகிறேன். ஏழு தொகுப்புகளுக்கான கவிதைகள் தயாராக உள்ளன. வெளியிடுவதற்கான நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
கே: கதாநாயகன்போல் இருக்கும் உங்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்திருக்குமே!
ப: ஆமாம். நான் பாடல் எழுதவந்த ஆரம்ப காலத்திலேயே வாய்ப்புகள் வந்தன. குறிப்பாக 'ஆனந்தம்' படத்துக்குப் பாடல் எழுதியதுமுதலே பல தயாரிப்பாளர்கள், இயக்குநர் நண்பர்கள் இதுகுறித்து வற்புறுத்தினார்கள் தற்போது டெக்னீஷியன்ஸ் ஹீரோவாக நடிக்கும் காலம் என்பதால் நிறையவே வாய்ப்புகள் வருகின்றன. நான்தான் இதுநாள்வரை தவிர்த்துக் கொண்டே வந்தேன். கூடிய சீக்கிரம் நல்ல விஷயம் நடக்கும் என்று நினைக்கிறேன். அப்போது சொல்கிறேன்.
கே: 'ஒரு டிக்கட்டுல இரண்டு சினிமா' படத்துக்கு கதை-வசனம் எழுதுகிறீர்கள் அல்லவா?
ப: மாஸ்டர் லாரன்ஸ் அவர்கள் நடித்து இயக்கிய 'காஞ்சனா' படத்திற்கு நான் பாடல்கள் எழுதினேன். தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் 'காஞ்சனா-2'விற்கும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். எங்களுக்கிடையே இருக்கும் புரிதல் காரணமாக, "என் அடுத்த படத்திற்குப் பாடலோடு வசனமும் எழுதுங்கள்" என்று லாரன்ஸ் மாஸ்டர் சொன்னார். 'காஞ்சனா-2' முடிந்ததும் அந்த வேலை ஆரம்பிக்கும். அது சிறப்பாக அமையும் என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே நண்பர்களின் படங்களில் வசனஉதவி செய்த அனுபவமுண்டு என்பதால் இது ஒன்றும் புதிதல்ல.
கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார், யார்?
ப: கவர்ந்த எழுத்தாளர்கள் என்றால் சுந்தர ராமசாமி, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்று பலரைச் சொல்லலாம். சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை', 'ஜே.ஜே. சில குறிப்புகள்' எனக்கு மிகவும் பிடிக்கும். சு. வெங்கடேசனின் 'காவல் கோட்டம்', பூமணியின் 'அஞ்ஞாடி' எனக்குப் பிடித்தவை. அசோகமித்திரனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது எழுத்துக்கு நான் அடிமை என்றே சொல்லலாம். அதுபோல அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் எனக்கு மிகமிகப் பிடித்தமானவை. மிக விரும்பி வாசிப்பேன். கவிஞர்கள் என்று எடுத்துக்கொண்டால் பிரமிள், கல்யாண்ஜி, கலாப்ரியா எனப் பலரது கவிதைகளால் நான் ஈர்க்கப்பட்டவன்.
கே: மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?
ப: உலக நாயகன் கமல்ஹாசனின் பாராட்டிலிருந்து இன்றைக்குக் குறுஞ்செய்தியில் "நீங்கள் தமிழகத்தின் அசைக்கமுடியாத கவிஞர்" என்று பாராட்டியிருக்கும் இணையநண்பர் வா. மணிகண்டனின் பாராட்டுவரை பல மறக்க முடியாதவைதான். கவிஞர் வாலி ஒருமுறை தொலைபேசியில் அழைத்தார். "நான் வாலி பேசறேன்யா" என்று சொன்னவர், "என்னய்யா இப்படி எழுதியிருக்கே, 'கன்னக்குழியில் தடுக்கி விழுந்தேன்; பின்னலைப் பிடித்து எழுந்தேன்'ன்னு. ரொம்பப் பிரமாதம்யா, பிரமாதம்" என்று பாராட்டினார். எந்தவித ஈகோவும் இல்லாமல் நினைத்தவுடன் அழைத்துப் பாராட்டும் பண்புள்ளமும், ரசிககுணமும் அவரிடம் இருந்தன. 'வீரம்' படத்தில் எழுதிய 'ரதகஜ துரக பதாதி' பாடலுக்காக அஜித் சார் என்னைக் கட்டிப்பிடித்துப் பாராட்டியிருக்கிறார். இப்படி சிவகுமார் சார், விஜய் சார், விக்ரம் சார், இயக்குநர் சீமான் எனப் பலர் அழைத்துப் பாராட்டியிருக்கின்றனர் 'என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சான்' பாடலை லண்டனில் நடந்த ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து ஒரு வரிகூட விடாமல் பாடிப் பாராட்டியது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்த பாராட்டு என்று சொல்லலாம்.

கே: உங்களை எழுத வைப்பது எது?
ப: பொதுவாக எழுத வைப்பது சூழல்தான் என்றாலும், பாடல்களை எழுத வைப்பது வாய்ப்புகள்தான். நாளைக்கு ஷூட்டிங்; உடனே பாடல் வேண்டும் என்று அன்றைக்கு ட்யூன் கொடுப்பார்கள். உடனடியாக எழுதித் தந்தாக வேண்டும். ஆக, அவசரம் எழுத வைக்கிறது. நிர்ப்பந்தங்கள் எழுத வைக்கின்றன. நான் காரில் போகும்போது எழுதியிருக்கிறேன்; மொட்டை மாடியில் எழுதியிருக்கிறேன். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென வரிகள் தோன்றும்; குறித்து வைத்துக்கொள்வேன். எப்போது வேண்டுமானாலும் எழுத்து வரும். அது நம்முடைய அனுபவங்களையும் பயிற்சியையும் சார்ந்து அமைகிறது.
கே: உங்கள் குடும்பம் பற்றி
ப: என் தந்தை இன்னமும் ஊரில் விவசாயம் செய்து வருகிறார். அம்மா நான்காண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். சகோதரிகள் எல்லாம் மணமாகி கிராமத்தில் இருக்கிறார்கள். சகோதரர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர். என் மனைவி பிரிட்டிஷ் ஏர்வேஸில் பைலட் ஆக இருந்தவர், தற்போது இல்லத்தரசி. மூன்று குழந்தைகள்.
கே: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
ப: புதிய பல விஷயங்களில் ஈடுபட எண்ணம் இருக்கிறது. வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை இப்போதே உறுதி செய்துவிட முடியாது. நிச்சயம் படத் தயாரிப்பு, இயக்கம் போன்ற விஷயங்களில் இறங்குவேன்.
சரளமாகப் பேசுகிறார் விவேகா. "உலகளாவிய தமிழ் மக்களுக்கு, ரசிகர்களுக்கு வணக்கங்கள். எந்தவித முயற்சியும் இல்லாமல் ஒருவர் பாடல் கேட்க முடியும். நாம் போகும்வழியில், வரும்வழியில் எங்கோ ஒலிக்கும் பாடல் நம் செவியில் விழ வாய்ப்புகள் பெருகியிருக்கிறது. உங்கள் அனுமதியுடனோ அனுமதியில்லாமலோ உங்களை நான் அடைந்துகொண்டே இருக்கிறேன். அந்த வாய்ப்பிற்காக நான் தமிழ்ச் சமூகத்திற்கு, திரைப்பாடல் ரசிகர்களுக்கு நன்றிகள். தமிழை விரும்புகிற, தமிழை நேசிக்கிற அத்துனை உள்ளங்களுக்கும் என் நன்றிகளையும், வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் இந்தப் பேட்டியின்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்கிறார். வரும்நாள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கூறி விடைபெற்றோம்.
உரையாடல்: அரவிந்த்
*****
கிராமமும் நகரமும்
விடுமுறையில் டெல்லிக்குச் செல்லும்போதுதான் சென்னையை முதன்முதலில் பார்த்தேன். பிரமித்தேன். மிகவும் பரவசமாக இருந்தது. சென்னையின் பரபரப்பு, அதன் நெரிசல் எல்லாம் குதூகலமாகவும், வியப்பாகவும் இருந்த காலகட்டம் அது. நான் திருவண்ணாமலை கலைக்கல்லூரியில் படிக்கும்போது எனக்குத் தெரிந்தது அந்தக் கல்லூரிதான். நான் சாதாரண பின்தங்கிய, வசதிகள் ஏதுமற்ற கிராமத்திலிருந்து வருபவன். ஆனால் அங்கு நடக்கும் பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொள்ள வருகிறவர்கள் எல்லாம் சென்னைபோன்ற வசதி, வாய்ப்புகள் மிக்க நகரங்களில் இருந்து வருவார்கள். அவர்களுக்கான சாளரங்கள் நிறையத் திறந்திருக்கும். ஆனால் எனக்கு என் கிராமம் மட்டும்தான். அப்படி ஒரு குக்கிராமத்தில் இருந்துதான் இந்த விவேகா வந்திருக்கிறான்.
- விவேகா


*****
விவேகாவின் குறுங் கவிதைகள்
ஃபேஸ்புக் , ட்விட்டர் என்று சமூகத் தளங்களில் சிறகடிக்கும் விவேகா அவ்வப்போது ட்விட்டரில் நிறையக் குறுங்கவிதைகள் எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில...
முத்தம் ஓர் அதிசயப் பிச்சை
பெறுவதற்கு மட்டுமல்ல
தருவதற்கும் கெஞ்ச வைக்கும்
*
நொய் அரிசி' என்றால்.. தெரியாமலிருந்தது.
'நொய் நொய்' என்று நீ பேசும்போது மின்னும்
அரிசிப்பற்களைக் காணும்வரை
*
நீ
தனியே நடக்கும்போது
ஒற்றைப் பூ கட்டிய நூலாய்த்
தெரிகிறது என் வீதி
*
நீ
வாடகை வீடு தேடுவதாய்க் கேள்விப்பட்டேன்.
என்னிடம் ஒரு பூத்தொட்டி இருக்கிறது
*
என் இதயமெங்கும் ரத்தக் கீறல்
உன் விழிகளுக்கு நகம் வெட்டவில்லையா?
*
கீழிருக்கும் குறைகளே தெரிகின்றன
கால் மட்டுமா பொய்
பொய்க்கால் குதிரை
*
வாலிபத்தில் ஞாபகமாய்க் காதலித்துவிடுங்கள்
வயோதிகத்தில் ஞாபகங்களைக் காதலிக்க!
*
****
விவேகாவின் பாடல்கள்
துள்ளலிசை, மெல்லிசை, குத்துப்பாடல், சந்தநயமிக்க பாடல் எனப் பலவகைகளிலும் எழுதும் ஆற்றல் கொண்டவர் விவேகா. "பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா", "சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லாமல் தவிக்கிறேன்", "என்ன இதுவோ", "ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்" போன்றவை மெல்லிசைப் பாடல்கள். "மின்சாரம் என்மீது பாய்கின்றதே", "என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்" போன்றவற்றின் துள்ளலிசை கேட்போரை எழுந்து ஆடவைப்பவை. "வம்பை வெலைக்கு வாங்கும்", "மியாவ் மியாவ் பூனை", "டாடி மம்மி வீட்டில் இல்ல", போன்ற குத்துப் பாடல்கள் பரபரப்பானவை. "கோழிவெடக் கோழி", "சடசடசடசட மலையென கொஞ்சம்", "கொடியவனின் கதையை முடிக்க", "ரதகஜதுரக பதாதிகள்" போன்றவை சந்தநயமிக்கவை. இவருடைய கவிதைப் பெட்டகம் பலவகை மணிகளையும் கொண்டது.

நன்றி விக்கிப்பிடியா ,தென்றல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக