இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு தினம் - செப்டம்பர் 8 , 2008
குன்னக்குடி வைத்தியநாதன் ( மார்ச் 2 ,1935 - செப்டம்பர் 8 , 2008 ) இந்தியாவின்
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார்.
குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார்.
கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
வாழ்க்கைச் சுருக்கம்
1935 இல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.
ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர் ,
மகாராஜபுரம் சந்தானம் , சூலமங்கலம் சகோதரிகள் , சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.
அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு காரைக்குடியில் நடந்த இசை நிகழ்வொன்றில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தமையே வைத்தியநாதனின் வயலின் அரங்கேற்றமாகக் கருதப்படுகின்றது. காலங்காலமாக வயலினுடன் மிருதங்கம் வாசிக்கப்பட்டமையில் மாற்றஞ் செய்து வலயப்பட்டி சுப்பிரமணியம் என்பாரின்
தவிலுடன் பெருமளவு வயலின் கச்சேரிகளைச் செய்துள்ளார். கருநாடக இசை, திரைப்பட இசை என்பவற்றோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் வயலினில் வாசித்தார்.
திரைப்பட உலகில்
வா ராஜா வா ( 1969 ) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதனுக்கு
திருமலை தென்குமரி (1970) எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
இசையமைத்த பிற திரைப்படங்கள்
1. தெய்வம்
2. கந்தன் கருணை
3. திருவருள்
பிற பங்களிப்புகள்
தோடிராகம் (1983) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். டி. என். சேஷகோபாலன் இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
சிறப்புகள்
திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலராக 28 வருடம் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.
விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது , 1989
சங்கீத நாடக அகாதமி விருது , 1993
சங்கீத கலாசிகாமணி விருது , 1996; வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
பத்மஸ்ரீ விருது; வழங்கியது: இந்திய அரசு.
கலைமாமணி விருது ; வழங்கியது: தமிழக அரசு
மறைவு
இவர் 2008 , செப்டம்பர் 8 ஆம் நாள் தனது 75 ஆவது வயதில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இரவு 9மணியளவில் மாரடைப்பால் காலமானார். வைத்தியநாதன் பாகீரதி தம்பதியினருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
வயலின் மேதை குன்னக்குடி திரு. வைத்தியநாதன் மறைந்துவிட்டார். கர்நாடக இசைக் கச்சேரியில் பக்கவாத்தியமாக இருந்த வயலினுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை வைத்தே கச்சேரிகளை நடத்தி அதை முன்னிலைப் படுத்தியவர்களில் முக்கியமானவர் குன்னக்குடி வைத்தியநாதன். வயலினோடு பக்கவாத்தியமாக பரவலாக மிருதங்கம் இருந்த நிலையில், தவிலுடன் வயலின் கச்சேரிகளை இணைத்து, தவில் வித்வான் வலையப்பட்டி சுப்ரமணியத்துடன் இவர் நடத்திய கச்சேரிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
கர்நாடக இசையின் நுணுக்கங்களை, ராகங்களை அறிந்து ரசிக்கத் தெரிந்த ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதைவிட, தன் வயலின் கச்சேரிகள் மூலம் பாமரர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றவர் குன்னக்குடி. இவரது வயலின் கச்சேரிகள் எளிமைப்படுத்தப் பட்டவை என்ற விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், எளிய ரசிகர்களின் உள்ளத்தையும் தனது மயக்கும் வயலின் இசையால் கொள்ளை கொண்டவர் குன்னக்குடி. ராகங்களில் புதிய முயற்சிகள், இசை வேள்வி நடத்தி மழைபெற வாசித்தல், மக்களுக்குப் புரித்த பாடல்கள் அனைத்தையும் வயலினில் வாசித்தல் என்று தொடர்ந்து தமிழகத்தின் பாமர, பண்டித ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.
வயலின்மூலம் கர்நாடக இசைப் பாடல்கள் மட்டுமன்றி மக்களுக்கு பரிச்சயமான திரையிசைப் பாடல்களையும் வாசித்து ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார். இறைவனிடத்தில் ஆழ்ந்த பக்தி உடைய வைத்தியநாதன் எண்ணற்ற பக்திப் பாடல்களுக்கு இசையமைத்து இந்துக்களின் பக்தி உணர்வுகளைத் தூண்டியவர். அவர் இசையமைத்த ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்’ என்ற தேனினும் இனிய பக்திரசம் சொட்டும் பாடல்களைக் கேட்டு உருகாத தமிழ் நெஞ்சங்கள் இருந்திருக்க முடியாது. பக்தியை இசைமூலம் வெளியிடும் முயற்சியில் பெரும் வெற்றிகண்டவர் வைத்தியநாதன்.
வயலின் மேதையாகத் திகழ்ந்த குன்னக்குடி வைத்தியநாதனிடம் இருந்த இசையமைக்கும் திறமையைச் சரியாக இனங்கண்டு பயன்படுத்தியவர் தமிழ்த்திரை உலகில் நமது இந்துக் கடவுள்களின் மேன்மையையும், புராண பாத்திரங்களையும், தம் திரைப்படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டுசென்று பெரும்புகழ் பெற்ற திரு. ஏ.பி. நாகராஜன். தன் படங்களுக்கு குன்னக்குடி அவர்களின் இசைத் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றார். தனது வெற்றிப் படமான ‘வா ராஜா வா’வில் குன்னக்குடி வைத்தியநாதனை வெற்றிகரமான திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார். அதில் வரும் ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா’ போன்ற பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து ஏ.பி.என். அவர்கள் தயாரித்த ‘கண்காட்சி’, ‘திருமலை தென்குமரி’, ‘அகத்தியர்’, ‘மேல்நாட்டு மருமகள்’ போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து மக்களிடையே ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் அறியப்பட்டார் குன்னக்குடி வைத்தியநாதன்.
ஏ.பி.என். அவர்களின் ‘மேல்நாட்டு மருமகள்’ நம் இந்திய இந்துக் கலாசாரத்தின் மேன்மையைச் சித்தரிக்கும் திரைப்படமாகும். அதில் மேல்நாட்டுக் கலாசாரத்தை ஒட்டிய ஒரு பாப் பாடலுக்கு குன்னக்குடி இசையமைக்க வேண்டும். பெரிய குங்குமப் பொட்டுடன் இசையமைக்கத் தயாராக இருந்த வைத்தியநாதனைக் கண்ட பிரபல பாப் பாடகி உஷா உதுப் முதலில் இவர் இசையில் எப்படி தான் பாடுவது என்று தயங்கியிருக்கிறார். மெட்டை முதலில் கேளுங்கள் என்று ஏ.பி.என். வற்புறுத்த, வேண்டா வெறுப்பாக பாடத் துவங்கிய உஷா பாடலில் மெய்மறந்து பாடி முடித்தவுடன், உருவம் கண்டு எள்ளிய தன் சிறுமைக்கு வெட்கி, குன்னக்குடி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். குன்னக்குடியின் இசையமைப்பில் உஷா உதுப் பாடிய ‘கம் அலாங் சிங் வித் மீ’ என்ற பாடல் இன்றும் தமிழில் பெரிதும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பிரபலமான பாப் பாடலாக அமைந்து விட்டது.
‘திருமலை தென்குமரி’க்காக இவர் இசையமைத்த பக்திப் பாடல்கள் அனைத்தும் தேனினும் இனியவை. குன்னக்குடியின் திரையிசை முயற்சியின் உச்சம் என்று சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாத் தேவர் இயக்கிய தேவரின் ‘தெய்வம்’ அமைந்தது. முருகப் பெருமானின் பரிபூரண அருள் குன்னக்குடி அவர்களிடம் நிரம்பியிருந்தது அந்தத் திரைப்படத்தின் பாடல்கள் மூலம் தெளிவாகியது. கர்நாடக இசையை மக்களிடம் வயலின் கச்சேரிகள் மூலம் மட்டுமல்லாது தனது திரையிசை மூலமாகவும் பிரபலப்படுத்தியவர் குன்னக்குடி.
‘தெய்வம்’ திரைப்படத்துக்காக, வழக்கமான திரையிசைப் பின்ணணிப் பாடகர்களைத் தவிர்த்து, பாமரர்களிடம் அதிகம் அறிமுகமாயிராத கர்நாடக இசை வித்தகரான மதுரை சோமசுந்தரம், பஜனைப் பாடல்கள் மூலம் மட்டுமே அறிமுகமாயிருந்த பித்துக்குளி முருகதாஸ், கம்பீரமான குரலுடைய பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை விஜயா ஆகியோரைத் தமிழ் நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் அறிமுகப்படுத்தி அவர்களது பக்தியிசைச் சேவைகளுக்குரிய பெருமையைப் பெற்றுத் தந்தவர் குன்னக்குடி. தன் கச்சேரிகள் மூலமும், தன் திரையிசை மூலமும் இந்துக்களிடம் இசை சார்ந்த பக்தி எழுச்சியை உருவாக்கிய மேதைகளில் குன்னக்குடி வைத்தியநாதனின் பங்கு முக்கியமானது.
‘கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை’ எனறு கம்பீரமான மதுரை சோமு அவர்கள் பாட அதை அருகில் இருந்து கேட்டு ரசிக்க வேண்டும் என்று தானே வயலின் வாசிக்கும் பக்கவாத்தியக்காரராக குன்னக்குடி அருகில் இருந்து வாசிக்க எடுக்கப் பட்ட அந்தப் பாடலை யாரால் மறக்க முடியும். “நாடறியும் நூறு மலை நானறிவேன் சுவாமி மலை” என்று பித்துக்குளி முருகதாஸ் பாடிய பாடலில் நெக்குருகாத நெஞ்சம் இருக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக அதிக பொருட்செலவில் உருவானதும் தமிழின் முதல் 70MM வரலாற்றுத் திரைப்படமுமான ‘ராஜராஜ சோழ’னுக்கு இசையமைக்கக் குன்னக்குடி வைத்தியநாதனையே தேர்வு செய்தார்கள். அந்தப் பிரம்மாண்டத்திற்குத் தன் இசையால் மேலும் பிரமிப்பு சேர்த்தவர் குன்னக்குடி.
தான் இசையமைத்த பாடல்களில் கர்நாடகம், மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை என்று எண்ணற்ற பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்து வந்தவர் குன்னக்குடி. பிற்காலத்தில் இவரே இசையமைத்துப் பாடிய கொட்டாம்பட்டி ரோட்டிலே என்ற பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்ற வெகுஜனப் பாடலானது.
ஆண்டுதோறும் சங்கீத மும்மூர்த்திகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து இசைக் கலைஞர்களையும் திருவையாறுக்கு அழைத்துச் சென்று தியாகையருக்கு உற்சவம் எடுத்து நடத்தியவர் குன்னக்குடி. இவரது வயலின் பேசும், பாடும். அதில் இவர் செய்யாத வித்தைகள் இல்லை. தன் வயலின் இசையும், பாண்டித்யமும் சாதாரண மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிய மேதை குன்னக்குடி. தொடர்ந்து தமிழ் பக்தி இசைக்குப் பெரும் தொண்டாற்றியவர் குன்னக்குடி.
தன் வாழ்நாள் முழுவதும் இசைக்கும் இறைவனுக்கும் அர்ப்பணித்த அந்த மேதை இன்று நம்மிடம் இல்லை. அவர் ஏற்படுத்திச் சென்ற பாரம்பரியத்தை வருங்கால இசைக் கலைஞர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும், அதற்கு எல்லாம் வல்ல முருகன் அருள் புரிய வேண்டும். குன்னக்குடி வைத்தியநாதன் மறைந்தாலும், அவர் உருவாக்கிய அற்புதமான இசை நம்மை விட்டு அகலாது. தமிழின் பக்தி இசை மரபுக்கு அவர் ஆற்றிய பணி அவருக்கு என்றும் காலத்தால் அழியாப் புகழை ஏற்படுத்தியுள்ளது. அன்னார் ஆத்மா சாந்தியடைய தமிழ் இந்து சார்பாகப் பிரார்த்திக்கிறோம். அன்னாரின் குடும்பத்தார்க்கு தமிழ் இந்து தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது. “ யூட்யூப் ” தளத்தில் அன்னாரின் கச்சேரிகளில் சிலவற்றைக் கேட்டு ரசிக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக