செவ்வாய், 19 செப்டம்பர், 2017

பாடகி கே. பி. சுந்தராம்பாள் நினைவு தினம் செப்டம்பர் 19, 1980.



பாடகி  கே. பி. சுந்தராம்பாள் நினைவு தினம்  செப்டம்பர் 19, 1980.

கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.. அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார். 
இளமைப்பருவம்
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். 'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.
நாடக வாழ்வில்
வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.
1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார்.
வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.
கிட்டப்பாவுடன் திருமணம்.
மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.
1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் புரிந்து கொண்டனர்.
பல்வேறு இசைத் தட்டுகளில் கேபிஎஸ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின.
1933−ல் டிசம்பர் 2இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார்.
நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

திரைப்படத் துறையில்...
பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935இல் இப்படம் வெளிவந்தது.
அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.
தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.
தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30.
1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.
மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.
இவர் பாடிய சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்:
எண் பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
1 பழம் நீயப்பா... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் திருவிளையாடல்
2 அறியது அறியது... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் கந்தன் கருணை
3 துன்பமெல்லாம்... மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
4 அன்று கொல்லும் / நீதியே நீயென்னும்… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
5 வாழ்க்கை என்னும் / ஒருவனுக்கு ஒருத்தி… மு. கருணாநிதி ஆர். சுதர்சனம் பூம்புகார்
6 தப்பித்து வந்தானம்மா… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
7 கேட்டவரம்… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
8 ஓடுங்கால் ஓடி… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
9 ஏழுமலை இருக்க… உளுந்தூர்பேட்டை சண்முகம் குன்னக்குடி வைத்தியநாதன் திருமலை தெய்வம்
10 ஞானமும் கல்வியும்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
11 பழநி மலை மீதிலே… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
12 கொண்டாடும் திருச்செந்தூர்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
13 சென்று வா மகனே... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
14 காலத்தால் அழியாத… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
அரசியல் துறையில்...
காங்கிரஸ் பிரச்சாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார்.
காமராசர் ஆட்சியின் போது தமிழக மேல் சபை உறுப்பினராக பதவிவகித்தார்.
1980 செப் 19இல் இவர் மறைந்தார்.
விருதுகளும் சிறப்புகளும்
இசைப்பேரறிஞர் விருது, 1966; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
நாடக உலகின் ராணி கே.பி.சுந்தராம்பாள்
நாடகம், இசை, திரைப்படம் ஆகிய மூன்று துறைகளிலும் சாதனை படைத்த கே.பி.சுந்தராம்பாள் குழந்தைப் பருவத்தில் வறுமையில் வாடியவர். அவருடைய நிஜவாழ்க்கை, சினிமாக் கதைகளையும் மிஞ்சக் கூடியதாகும்.

கரூரை அடுத்த கொடுமுடியில் ஒரு ஏழைக்குடும்பத்தில் 1908_ம் ஆண்டு அக்டோபர் 11_ந்தேதி சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி என்று ஒரு தம்பி, சுப்பம்மாள் என்று ஒரு தங்கை.
குடும்பத் தலைவர் இறந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது. சுந்தராம்பாளின் தாயார் பாலம்பாள், குழந்தைகளை வளர்க்க வீட்டு வேலைகள் செய்ய நேரிட்டது. வறுமை அளவு கடந்து போனதால், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள பாலம்பாள் முயற்சி செய்தார்.
இதுபற்றி, பிற்காலத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுந்தராம்பாளே குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-
"வறுமையின் காரணமாக எங்களை இழுத்துக்கொண்டு போய் நல்லதங்காள் மாதிரி காவிரியில் தள்ள முயன்றார் அம்மா. நான், தம்பி, தங்கை எல்லோரும் ஓவென்று அழுதோம். வீட்டு வேலை செய்து காப்பாற்றுவதாக அம்மாவிடம் சொல்லி காலைக் கட்டிக்கொண்டு அழுதேன். அம்மாவோ எங்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டு அழுதார்.
பிழைக்க வேண்டி, கரூருக்கு ரெயிலில் பயணமானோம். அம்மா கண்களில் நீர் நிறைந்து கன்னத்தில் வழிந்தது. அவரைப் பார்த்து நாங்களும் அழுதோம். எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் மெல்ல எங்களை அணுகி, "நீங்கள் யார்? ஏன் அழுகிறீர்கள்? உங்களைப் பார்த்துக் குழந்தைகளும் அழுகின்றனவே!" என்றார்.
அம்மா விஷயத்தைச் சொன்னார். அவரும் பரிதாபப்பட்டுப் போனார். "என் தங்கை விதவையாக வந்து என்னுடன் வசிக்கிறாள். உங்களை உடன் பிறவாத பொறப்பாக நினைத்துக் கொள்கிறேன். எனக்கும் பிள்ளைகள் கிடையாது. இந்தக் குழந்தைகளை வளர்த்து விட்டுப் போகிறேன்" என்று தன் வீட்டுக்கு அழைத்தார். அம்மாவுக்கு முதலில் பயம். பின்னர் ஒத்துக்கொண்டார்.
அந்தப் பெரியவரின் பெயர் மணவாள நாயுடு. "மாமா" என்று அழைக்க ஆரம்பித்தோம். மாமா கரூர் முனிசிபாலிடியில் படிக்கற்களுக்கு முத்திரை வைக்கும் உத்தியோகம் செய்து வந்தார்.
இரவு வேளையில் நான் வாசலில் பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டு வெகுநேரம் ராகம் போட்டு ஏதாவது பாட்டுப் பாடிக்கொண்டே இருப்பேன். விடியற்காலையில் இரண்டு காவல்காரர்கள் வந்து என்னை அழைத்தார்கள். அம்மா பயந்து கொண்டே அனுப்பி வைத்தார்.  "நடு ராத்திரியில் பாடியது யார்?" என்றார் இன்ஸ்பெக்டர்.
"நான்தான்" என்றேன். அவர் நம்பவில்லை.
எங்கள் கதையைக் கேட்டார். சொன்னேன். அவர் மூலம் வேலு நாயரிடம் அனுப்பி வைக்கப்பட்டு குழந்தை நட்சத்திரமானேன். அவரிடம் சேர்ந்து நான் நடித்த முதல் நாடகம் நல்லதங்காள். அப்போது எனக்கு வயது ஏழு.
காவிரியாற்றில் அம்மா தள்ள நினைத்தபோது, எப்படி அழுது கதறினேனோ அதுவே கதாபாத்திரமாகக் கிடைத்தது. நடித்தேன், உணர்ச்சிகரமாக."
இவ்வாறு சுந்தராம்பாள் குறிப்பிட்டார்.
வேலு நாயர் நாடகக் கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய சுந்தராம்பாள் படிப்படியாக முன்னேறினார். அவர் பாடல்கள், பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது.


"ஸ்பெஷல்" நாடகங்களில் நடிக்கலானார்.




அபூர்வ தகவல்கள்-33: கே.பி.சுந்தராம்பாள்

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் நம் மனதில் நிற்பவர் சிவாஜி கணேசன், அதுபோல ஒளவையார் என்றால் நம் மனதில் நிற்பவர் கே.பி.சுந்தராம்பாள். தமிழ் சினிமாவில் நடிப்பால் புகழ் பெற்றதைவிட, குரலால் புகழ் பெற்றவர் கே.பி.சுந்தராம்பாள். கோயம்புத்தூர் மாவட்டம்(இப்போதைய ஈரோடு மாவட்டம்) கொடுமுடியில் 11.10.1908 இல் பாலாம்பாளின் புதல்வியாக பிறந்தார் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (கொ.பா.சுந்தராம்பாள் ஓ.ட.சுந்தராம்பாள்). சுந்தராம்பாள் தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். அப்பொழுது இவர் குடும்பம் வறுமையில் தவித்தது. அதனால் இவரால் நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள். சுந்தராம்பாளையும் அவரது தம்பிகள் மூவரையும் தங்கை ஒருவரையும் அவரது தாயார் பாலாம்பாளையும், சுந்தராம்பாளின் தாய்மாமன் மலைக்கொழுந்து கவுண்டர் ஆதரித்து வந்தார். சுந்தராம்பாள் நாடக உலகில் புகழ்பெற்று நடித்துக் கொண்டிருந்த போது, இந்த தாய்மாமன்தான் சுந்தராம்பாளுக்கு உதவியாளராக இருந்தார். சுந்தராம்பாளுடன் அவரது பாட்டி செளந்தராம்பாளும் வசித்ததுடன், சுந்தராம்பாள் நாடகத்திற்காக வெளியூர் செல்லும் போது அவருடன் துணையாக செல்வார். ஐந்து வயதிலேயே இவருடைய குரலும் பாடக்கூடிய திறமையும் இவரின் ஊரில் பரவியிருந்தது. அதனால் ஊர் மக்கள் கோவில் வைபவங்களில் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்பளித்தனர். இவரின் பத்தாவது வயதில் வேலு நாயர் நாடக கம்பெனியில் நடித்தார். கே.பி.எஸ். நாடகத்தில் ஆண்வேடங்களில் (ராஜபார்ட்) நடிக்கும் போது பல பிரபல நாடக நடிகைகள் இவருக்கு ஜோடியாக (ஸ்திரீ பார்ட்டில்) நடிப்பார்கள். அப்படி நடித்தவர்களில் ஒருவர்தான் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியான டி.பி.ராஜலக்ஷ்மி. சுந்தராம்பாள் பின்பு நாடகங்களில் பெண் வேடங்களிலேயே நடித்தபோது, இவருடன் நடித்த நடிகர்கள் இவருடைய நடிப்புக்கும் குறிப்பாக குரலுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் இரண்டு மூன்று நாட்களிலேயே சொல்லாமல் கொள்ளாமல் ஒடிவிடுவார்களாம். இவருக்கு ஈடுகோடுக்கும்படி கிட்டினார் கிட்டப்பா. சுந்தராம்பாள் கிட்டப்பா ஜோடி இலங்கையில் நடந்த நாடகங்களில் பிரபலமானார்கள். நாடகத்தில் இணைந்த சுந்தராம்பாளை, கிட்டப்பா தனது வாழ்க்கையிலும் இணைத்துக் கொண்டார், இளையதாரமாக. 1927இல் இருவரும் மாயவரத்தில் மாலை மாற்றி கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். 1928 இல் இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே இறந்து விட்டது. 1934 இல் கிட்டப்பா இறந்து விட்டார். கிட்டப்பாவை இவர் மணந்து 7 ஆண்டுகளில் இறந்தாலும், கிட்டப்பாவுடன் கே.பி.எஸ். வாழ்ந்தது 3 ஆண்டுகள்தான். 27 வயதில் விதவையான இந்த காவிய காதலி தன்வாழ்நாள் முழுதும் ஒரு தூய துறவிபோல் வாழ்ந்து வந்தார். சினிமா நாடகங்களில் நடித்ததுடன் கோவில்களில் பாடினார், தேசத்திற்காக பாடினார், இசைத் தட்டில் பாடினார்.
கே.பி.எஸ். ஆல் கட்டப்பட்டு எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட கே.பி.எஸ். திரையரங்கம் இன்றும் இவரின் உறவினர்களால் கொடுமுடியில் நிர்வகித்து வரப்படுகிறது. கே.பி.எஸ். போலவே டி.ஆர்.ராஜகுமாரி, சிவாஜி, நாகேஷ் ஆகியோரும் திரையரங்க உரிமையாளர்கள் என்பதை இங்கு நினைவு கொள்வோம். துணைவன் படத்தில் பாடியதற்காக 1969 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகி விருதை மத்திய அரசு இவருக்கு அளித்தது. ஏழிசை வல்லபி என்று போற்றப்பட்டவர் இவர். தமிழக அரசின் மேல் சபையில் எம்.எல்.சி. பதவியும் வகித்தார். தீரர் சத்தியமூர்த்தியை கே.பி.எஸ். தன் உடன்பிறவா அண்ணாராக மதித்துவந்தார். தீரர் வாடகை வீட்டிலிருந்த நிலையைக் கண்டு வருந்தினார் கே.பி.எஸ். அதனால் சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபாவுக்கு முன்புறம் இருந்த தனது நாலரை கிரவுண்ட் மனையை தீரர் பெயரில் எழுதி வைத்தார் கே.பி.எஸ். ஒளவையார் படம் பார்த்தவுடன் சுந்தராம்பாளை சந்தித்துப் பாராட்டினார் இந்திப் பாடகி லதா மங்கேஷ்கர். கே.பி.சுந்தராம்பாள் நடித்த படங்கள் கே.பி.சுந்தராம்பாள் நடித்த 13 படங்களில் ஞாயிறும் திங்களும் என்ற படம் மட்டும் திரைக்கு வரவில்லை. இந்த ஒரு படம் போக 12 படங்களில் இவர் நடித்துள்ளார். 1935 இல் நந்தனார் படத்தில் நடித்த பின்பு 5 ஆண்டுகள் கழித்து, பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை என்ற படத்தில் நடித்தார். அடுத்து 13 ஆண்டுகள் இடைவெளி விட்டு ஒளவையார் படத்தில் நடித்தார். அடுத்தும் 10 ஆண்டுகள் கழித்து பூம்புகார் படத்தில் நடித்தார். இவர் நடித்த படங்களில் ஒளவையார், திருவிளையாடல் ஆகிய 2 படங்களும் 175 தினங்களுக்கு திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாயின. கந்தன் கருணை, துணைவன் ஆகிய இரு படங்களும் 100 தினங்களுக்கு திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாயின. இவர் நடித்த 12 படங்களில் திருவிளையாடல், கந்தன் கருணை, திருமலை தெய்வம், சக்தி லீலை, காரைக்காலம்மையார் ஆகிய 5 படங்கள் வண்ணப் படங்கள். துணைவன் படத்தின் கடைசிக் காட்சிகள் வண்ணத்தில் உள்ளது. மீதி நந்தனார், பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை, ஒளவையார், பூம்புகார், மகாகவி காளிதாஸ், உயிர்மேல் ஆசை - ஆகிய 6 படங்களும் கருப்பு வெள்ளை படங்கள். துணைவன், உயிர்மேல் ஆசை ஆகிய இரு படங்களும் சமூக கதையைக் கொண்ட படங்கள். மற்ற 10 படங்களும் காவிய புராண பக்திப் படங்களாகும். ஒளவையார், திருவிளையாடல், கந்தன் கருணை ஆகிய 3 படங்களில் ஒளவையாராக நடித்துள்ளார். பக்த நந்தனார், பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை, காரைக்காலம்மையார் - ஆகிய படங்களில் முறையே படத்தின் தலைப்பு பாத்திரங்களான நந்தனார், மணிமேகலை, காரைக்காலம்மையார் ஆகிய வேடங்களில் நடித்துள்ளார். பூம்புகார் படத்தில் கெளந்தியடிகள் வேடத்திலும், மகாகவி காளிதாஸ் படத்தில் மாற்று ரூபங்கொண்ட காளிதேவியாகவும், துணைவன் படத்தில் முருக பக்தையாகவும், உயிர்மேல் ஆசை படத்தில் தாயாகவும் - இவர் நடித்துள்ளார். 1933 இல் ஒரு நந்தனார் படமும், 1942 இல் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் படமும் திரைக்கு வந்தன. 1935 இல் கே.பி.சுந்தராம்பாள் நடித்த பக்த நந்தனார் படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் இவர் நந்தனாராக ஆண் வேடத்தில் நடித்தது விமர்சனத்திற்குள்ளானது. இவரைப் போலவே குசேலா படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி கிருஷ்ணன் வேடத்திலும், சாவித்திரி படத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நாரதராகவும் ஆண் வேடங்களில் நடித்தனர். பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை படத்தில், பால வயதிலேயே சந்யாசினி ஆகிவிட்ட மணிமேகலை பாத்திரத்தில் நடித்தார் கே.பி.ஏஸ். நாயகன் உதயணனாக நடித்தவர் கொத்தமங்களம் சீனு. நாயகனின் தோழன் சொக்கனாக நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. வீரப்பா அறிமுகமானது இந்தப்படத்தின் மூலமாகத்தான். வீரப்பாவும் கே.பி.எஸ்ஸூம் (அப்பொழுதைய) ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோவில் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையைக் கொண்ட ஞாயிறும் திங்களும் படம் திரைக்கு வராத படப்பட்டியலில் இணைந்து விட்டது. முழுவதும் முடிந்த நிலையில், இப்படத்தின் சில இறுதிக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவில்லை. தேவிகா ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக நடித்திருப்பார். இப்படத்தின் கதை தினமணிக் கதிர் இதழில் பிரசுரமாகியுள்ளது. ஞாயிறும் திங்களும் சேர்ந்தால் அமாவாசைதான் வரும். பெளர்ணமி போல் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டிய இப்படம், அமாவாசை போலாகிவிட்டது. நாயகனை (சிவாஜியை) காதலிக்கும் நாயகி (தேவிகா) ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனை. கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக நாயகி டோக்கியோ செல்கிறாள். அது சமயம் நாயகியின் பணக்கார தாய் (கே.பி.சுந்தராம்பாள்) ஏழை நாயகனை மகனாக ஸ்வீகாரம் எடுக்கிறாள். நாயகனுக்கும் தன்னை தத்து எடுப்பது நாயகியின் தாய் எனத் தெரியாது. டோக்கியோவிலிருந்து திரும்பிய நாயகி அனைத்தும் அறிந்து வேதனைப் படுகிறாள். வாழ்வை வெறுத்த நாயகி கிருத்துவ மதத் தொண்டுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள். இரு மலர்கள் படத்தில் பத்மினியை காதலித்த சிவாஜி விதி வசத்தால் கே.ஆர்.விஜயாவை மணப்பது போலவே, இந்தப் படத்திலும் தேவிகாவை காதலித்த சிவாஜி கே.ஆர். விஜயாவை மணக்கிறார். நாயகனின் தந்தையாக வி.கே.ராமசாமியும் நாயகனின் தங்கையை மணப்பவராக முத்துராமனும் நடித்தனர். பக்தி, சோகம், தத்துவம் அறிவுரை என்ற எல்லைகளுக்குள்ளேயே இவர் பாடிய பாடகள் அமைந்துள்ளன. இவர் பாடிய 58 பாடல்களில் (ஒரு பாடல் தவிர) அனைத்து பாடல்களையும் இவர் தனித்தே பாடியுள்ளது ஒரு சிறப்பம்சம்.
கே.பி.சுந்தராம்பாளின் புகழ்பெற்ற பாடல்களில் சில பொறுமையெனும் நகையணிந்து - ஒளவையார் முத்தமிழ் தெய்வமே வா- ஒளவையார் வள்ளுவர் தந்த குறள்- ஒளவையார் (ஒருவனுக்கு ஒருத்தி) வாழ்க்கை எனும் ஓடம் - பூம்புகார் (பவளமணி மாளிகையில்) தப்பித்து வந்தானம்மா -பூம்புகார் பழம் நீயப்பா தமிழ்ஞான -திருவிளையாடல்
சென்றுவா மகனே -மகாகவி காளிதாஸ் கேளு பாப்பா கேளு பாப்பா - உயிர்மேல் ஆசை என்றும் புதியது - கந்தன் கருணை கூப்பிட்ட குரலுக்கு யார்வந்தது - துணைவன்
(ஓடுங்கால் ஓடி) தக தகவென - காரைக்காலம்மையார் ஏழு மலையிருக்க நமக்கென்ன - திருமலை தெய்வம் இவர் இரு முதல்வர்களுடன் கலைப் பணியாற்றியுள்ளார். மு. கருணாநிதி வசனம் எழுதிய பூம்புகார் படத்தில் கே.பி.எஸ். நடித்துள்ளார். ஜெயலலிதாவுடன் கந்தன் கருணை, சக்தி லீலை ஆகிய இரு படங்களில் கே.பி.எஸ். நடித்துள்ளார்.
தமிழ்த் திரையின் பிரபலமான நான்கு வேந்தர்களாளில் எம்.ஜி.ஆர். தவிர, மற்ற மூன்று நாயகர்களான சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோருடன் இவர் நடித்துள்ளார். கே.பி.எஸ். பட இயக்குநர்கள் ஏ.பி.நாகராஜன் - திருவிளையாடல், கந்தன் கருணை, காரைக்காலம்மையார், திருமலை தெய்வம் கொத்தமங்கலம் சுப்பு -ஒளவையார் பொம்மன் இரானி -பாலசந்யாசினி (அல்லது) மணிமேகலை ப.நீலகண்டன் - பூம்புகார்
எம்.ஏ.திருமுகம் - துணைவன்
ஆர்.ஆர்.சந்திரன் - மகாகவி காளிதாஸ்
ஜம்பு -உயிர்மேல் ஆசை எந்த பாடகருடனும் சேர்ந்து பாடாமல் தனித்து பாடியவர்கள் கே.பி.சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள் ஆகிய இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி.எஸ். 19.09.1980 இல் முருகனடி சேர்ந்தார்.


தமிழிசைச் செல்வி கே.பி.சுந்தராம்பாள் நினைவு  தின சிறப்பு பகிர்வு!
''கு ழந்தைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் தாயார்.

தாயைப் பின்தொடர்ந்து சென்ற அந்தக் குழந்தைகள் மூவரும் (இரு பெண்கள், ஒரு சிறுவன்) ''எதற்கம்மா எங்களை ஆற்றுக்குக் கூப்பிடு கிறாய், குளிப்பதற்கா?'' என்று கேட்டபோது, அந்தத் தாய் துக்கம் தாங்காமல் ''என் அருமைச் செல்வங்களே! உங்கள் பசித்த வயிற்றுக்குச் சோறு போட இந்தப் பாழும் ஜன்மத்துக்கு ஒரு வழியும் இல்லை. வறுமையின் கொடுமையை என்னால் தாங்கவும் முடியவில்லை. உங்கள் மூவரையும் ஆற்று வெள்ளத்திலே தள்ளிவிட்டு, நானும் உங்களுடன் உயிரை விட்டுவிடப் போகிறேன்'' என்று கதறிவிட்டாள்.
அதைக் கேட்ட அந்தப் பெண் குழந்தைகளில் ஒருத்தி, அம்மாவைத் தடுத்து, மனம் மாற்றி, வீட்டுக்குத் திருப்பி அழைத்து வந்துவிட்டாள்.
Advertisement
வறுமையின் கொடுமை தாங்காது கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டுச் சென்ற அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யாரோ ஒரு புண்ணியவான் ஏற்றுக்கொண்டார்.
அம்மாவைத் தடுத்து அழைத்து வந்த அந்தச் சிறுமி, ஒரு நாள் கரூர் வீதியில் நின்றுகொண்டு இருந்தபோது, அந்த வழியாகச் சென்ற டெபுடி போலீஸ் சூப்பரின்டென்டெண்ட் ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி அய்யருக்கு என்ன தோன்றியதோ, அந்தச் சிறுமியைப் பார்த்து, ''டிராமாவில் சேர்ந்து நடிக்கிறாயா, கண்ணு?'' என்று கேட்டார். அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு தலையை அசைத் ததும், அவளை வேல் நாயர் நாடகக் கம்பெனியில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். எட்டு வயது நிரம்பாத அந்தப் பெண்ணுக்கு அங்கே கிடைத்த வேஷம் என்ன தெரியுமா? நல்லதங்காள் நாட கத்தில் கிணற்றில் தள்ளப்படும் குழந்தைகளிலே ஒருத்தி!
பிற்காலத்தில் 'லட்ச ரூபாய் நட்சத்திரம்' என்று புகழப்பெற்ற திருமதி கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கை நாடகம் இப்படித்தான் ஆரம்பமாயிற்று!
கம்பெனி நாடகங்களிலும், ஸ்பெஷல் நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்த இவர், 1927-ம் ஆண்டில் இலங்கை சென்றபோது, அங்கே எஸ்.ஜி. கிட்டப்பாவுடன் இரண்டு ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க அழைக்கப்பட்டார்.
''என்னுடைய ஸ்வாமியை (கிட்டப்பா) நான் முதன்முதல் சந்தித்தது இலங்கையில்தான். அதற்குப் பிறகு அவருடன் சேர்ந்து வாழும் பேறு எனக்கு ஆறே ஆண்டு காலம்தான் கிட்டியது. 1933-ல் அவர் காலமாகிவிட்டார். அன்று முதல் இன்று வரை நான் பால் சாப்பிடுவதில்லை. சோடா, கலர் குடிப்பதில்லை. புஷ்டியான ஆகாரங்கள் சாப்பிடுவதில்லை. அமாவாசைதோறும் காவேரி ஸ்நானம் செய்யத் தவறுவதில்லை. இந்த 32 ஆண்டுகளில் ஒரு சில அமாவாசை களே காவேரி ஸ்நானம் இல்லாமல் விட்டுப் போயிருக்கின்றன'' என்கிறார்.
''கிட்டப்பாவை மணந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தங்களுக்கு எப்போது ஏற்ப்பட்டது?''
''அது ஒரு கதை! நானும் அவரும் சேர்ந்து நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது அவர் நந்தனார் வேதியர் பாட்டுக்களை எனக்குக் கற்றுக்கொடுப்பதற்காக என் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார். அப்போது நாங்கள் திருநெல்வேலியில் ஒரு மாடி வீட்டில் குடியிருந்தோம். பாட்டெல் லாம் சொல்லிக் கொடுத்து முடிந்த பிறகு, ஒரு நாள் அவர் என் வீட்டுக்கு வந்து என் தாயாரிடம் 'என்ன அக்கா, புள்ளே எங்கே?' என்று கேட் டார். பாட்டுச் சொல்லிக்கொடுக்கத் தான் வந்திருக்கிறார் என்று எண்ணி, என் தாயார் நான் மாடியில் இருப்ப தாகக் கூறியதும், அவர் மாடிக்கு வந்து நின்றார். அவர் உள்ளத்தில் கள்ளம் இருப்பதை அவருடைய பார்வை காட்டிக் கொடுத்துவிட்டது. 'எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டேன். அவர் மௌனமாக என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். அவர் எண்ணம் எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கடைசிவரை காப்பாற்றுவ தாக அவரிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்ட பின்னரே, அவரைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தேன். இருவரும் வெவ்வேறு ஜாதியாகையால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு இருந்தது. ஆனாலும், நான் அவரைத்தான் மணந்து கொள்வேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்துவிட்டேன். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் எங்களிருவருக்கும் மாயவரத்தில் திருமணம் நடந்தது.''
கிட்டப்பா இறந்ததும், இவ ருக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் கூறியவர்கள் 'இந்து'பத்திரிகையின் உரிமையாளரான கஸ்தூரி சீனிவாசனும், ஏ.ரங்கசாமி ஐயங்காரும்! தேனாம்பேட்டை கிராமணியார் தோட்டத்தில் ஆசிரமம் மாதிரி ஒரு வீட்டை அமைத்துக் கொடுத்து, சுந்தராம்பாளை அதிலே குடியிருக்கச் செய்தனர்.
சுந்தராம்பாளின் முதல் கச்சேரி மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில், தியாகராஜ ஸ்வாமி உற்சவத்தில் நடந்தது. இவரின் 'செந்தூர் வேலாண்டி', 'பண்டித மோதிலால் நேரு' என்னும் 'பன்னிரண்டு இன்ச்' ரிக்கார்டுகள் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தமானவை. 'ஞானப் பழம்', 'தனித்திருந்து வாழும்' ரிக்கார்டுகள் இரண்டும் சமீபகாலத்தில் புகழ்பெற்றவை.
சுந்தராம்பாள் இதுவரை நடித் துள்ள படங்கள் ஐந்து. அஸந்தாஸ் நந்தனார், ஜெமினி ஒளவையார், மணிமேகலை, பூம்புகார், திரு விளையாடல் ஆகியவை. 'ஒளவை யாரைப் போல் எனக்குப் புகழும் பொருளும் தந்த படம் வேறெதுவும் இல்லை' என்று பெருமையுடன் கூறுகிறார் இவர்.
'குயிலினும் இனிய குரல் வாய்ந்த கொடுமுடி கோகிலம்', 'தமிழிசைச் செல்வி' என்றெல்லாம் மக்களால் பாராட்டப்படும் இவருக்குத் தருமபுரம் மகா சந்நிதானம் வழங்கிய பட்டம் 'ஏழிசை வல்லபி'.
திருமதி சுந்தராம்பாள் ஆறு ஆண்டு காலம் எம்.எல்.சி-யாக இருந்திருக்கிறார்.

''கலையைக் காப்பாற்றுவதாகப் பல கலைஞர்கள் கூறிக் கொள்கிறார் கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், கலைதான் என்னைக் காப்பாற்றுகிறது'' என்கிறார் கே.பி.எஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக