வெள்ளி, 22 செப்டம்பர், 2017

நடிகை ஷோபா Shobha ,பிறந்த தினம் செப்டம்பர் 23 . 1962 .



நடிகை ஷோபா Shobha ,பிறந்த தினம்  செப்டம்பர் 23 . 1962 .

ஷோபா ( Shobha , 23 செப்டம்பர் 1962 – 1 மே 1980) தென்னிந்தியத் திரைப்பட நடிகை .
தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார்.
1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார்.  இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரமும் கிடைத்தது.  அதன் பின்னர் இவர் பல மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இயக்குனர் பாலு மகேந்திராவைத் திருமணம் புரிந்தார்.

தற்கொலை
சோபா தனது 17வது அகவையில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தாயாரும் 1984 இல் தற்கொலை செய்து கொண்டார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
தட்டுங்கள் திறக்கப்படும் (1966) – குழந்தை நடிகை
அச்சாணி (1978)
நிழல் நிஜமாகிறது (1978)
ஒரு வீடு ஒரு உலகம் (1978)
முள்ளும் மலரும் (1978)
வீட்டுக்கு வீடு வாசப்படி (1979)
ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (1979)
ஏணிப் படிகள் (1979)
பசி (1979)
அழியாத கோலங்கள் (1979)
அகல் விளக்கு (1979)
சக்களத்தி (1979)
வேலி தாண்டிய வெள்ளாடு (1980)
மூடு பனி (1980)
பொன்னகரம் (1980)
சாமந்திப்பூ (1980)
அன்புள்ள அத்தான் (1981)

விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
1979 – சிறந்த நடிகை ( பசி ).



தேசிய விருது பெற்ற பசியும் ஷோபா மரணமும்.....

தமிழ் திரையுலகில் நடிப்பால் சாதனை படைத்து, புகழ் ஏணியின் உச்சிக்கு வரும் முன்னரே மரணமடைந்தவர் நடிகை ஷோபா.முள்ளும் மலரும் படத்தில் அவர் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும்போது திரையில் தங்கையாகவே வாழ்ந்து காட்டினார்.1979 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் துரையின் சுனிதா சினி ஆர்ட்ஸ் பசி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து அகில இந்திய சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
இந்தப்படத்தை லலிதா தயாரித்திருந்தார், சங்கர் – கணேஷ் இசையமைத்திருந்தனர், ஒளிப்பதிவு ரங்கா, ஷோபாவுடன் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் காலஞ்சென்ற நடிகர் விஜயன்.
இந்தப்படம் இந்தியிலும் வெளியானது, தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றது 100 நாட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.
அந்த நேரம் பாலு மகேந்திராவுக்கும் ஷோபாவுக்கும் இரகசிய திருமணம் நடைபெற்றது, பல அவதூறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.
அந்த அவதூறுகளை நிறுத்த பத்திரிகையாளர்களைச் சந்திக்க பாலு மகேந்திரா முடிவு செய்து அழைப்பிதழ்களும் அடித்துவிட்டார்.
மே. 1ம் திகதி இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய திடீரென ஷோபா தற்கொலை செய்து கொண்டார்.
ஏன் தற்கொலை செய்தார் இன்றுவரை மர்மம்தான் நிலவுகிறது, ஆனால் இவருக்கும் தனக்கும் உள்ள தொடர்புபற்றி பாலு மகேந்திரா குமுதத்தில் தொடர் ஒன்றும் எழுதினார்.
சில்க்ஸ்மிதா போல தமிழ் திரையுலகில் ஒரு மறக்க முடியாத இழப்பு சோபாவின் மரணம்.
அலைகள் சினிமா எழுதுகை 26.03.2013 செவ்வாய் மாலை
நன்றி:- alaikal
ஷோபா என்றொரு தேவதை – என்ற தலைப்பில் சந்திரா என்பவர் எழுதியிருந்ததிலிருந்து ஒரு பகுதி
ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் கழித்துத் தான் எங்கள் ஊர் திரையரங்கிற்கு வரும் காலகட்டம் அது. அந்தப் படங்கள் வருவதற்கு முன்பே பாடல்கள் எனக்கு மனப்பாடமாக இருக்கும். திரையரங்கில் பாடல் காட்சிகள் வரும் போது அந்தப் பாடல்களைச் சத்தமாக பாடுவதற்காகவே நான் திரைப்படம் பார்க்கச் செல்வேன். ஒரு திரைப்படத்தையே பல முறை பார்த்திருக்கிறேன். எனக்குள்ள சினிமா மோகம் ஏற்பட்டதற்கு காரணமே பாட்டு மேல இருந்த பைத்தியம்தான்.
மழையில் இருளில் அதிகாலையில் செந்நிற மாலையில் நான் கேட்ட பாடலெல்லாம் திரையில எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்க்காகவே நான் சினிமாவுக்குப் போவேன்.ஒரு படத்தையும் விடறதில்ல.டப்பிங் படம் ஓடாத படம் எல்லாத்தையும் பாத்துடுவேன்.
அப்பத்தான் பாட்டு மேல் இருந்த அதிகப்படியான உணர்ச்சி சினிமா மோகமாக மாறியது. பத்து பைசா குடுத்து பிலிம் வாங்கி வீட்ல அப்பா வேட்டியில சினிமா போட்டுக் காட்டியிருக்கிறேன். என்னைப் போல பொண்ணுங்க யாரும் பிலிம் வாங்க மாட்டாங்க. வளையல் பாசி என்று வாங்கிக் கொண்டிருப்பார்கள். என்னைப் பார்த்து சரியான ‘கிறுக்கச்சி’ என்பார்கள். நான் படம் காட்டும் விளையாட்டில் ஆண்பிள்ளைகள்தான் ஆர்வம் காட்டுவார்கள்.
நிறையப் படம் பாத்து படம் பாத்து நல்ல படம் கெட்ட படம் எது என்று பிரிச்சுப் பார்க்கும் ரசனை வந்தது. அப்பவும் எல்லாம் மசாலாப் படங்களையும் பார்க்கும் கட்டாயத்திற்கு ஆளானேன். வீட்டில் மற்றவர்கள் அந்தப் படத்தை விரும்பிப் பார்த்தார்கள். அப்போது சினிமா தவிர வேறு பொழுது போக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். பாலச்சந்தர் ,பாரதிராஜா ,மகேந்திரன், பாலு மகேந்திரா படங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படங்களில் கதாநாயகிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லது தன்மேல் திணிக்கப்படும் அதிகாரத்தை எதிர்பவர்களாக இருந்த கதாநாயகிள், உண்மையில் என் இயல்பில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதன் பின் நடிகர் நடிகைகளில் நடிப்பில் என் கவனம் சென்றது.
அப்போது எனக்குள் வந்த தேவதைதான் ஷோபா. ஒரு தீவிர மோகத்தோடு நான் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாலும் எந்த நடிகர், நடிகையருக்கும் ரசிகையாக இருந்ததில்லை. ஆனால் ஷோபாவை என்னாலே எனக்குள்ள இருந்து பிரிக்க முடியவில்லை. ‘என்னை பாரு என்னை ரசி என்னை நினைச்சுகிட்டே இரு வேற எதுவும் செய்யாதே’ என்று சொன்ன மாதிரி இருந்தது. அத்தனை எளிமையான கதாநாயகியை அதற்கு முன் நான் திரையில் பார்த்ததில்லை. பக்கத்து வீட்டு காலேஜ் படிச்ச அக்கா மாதிரி, இயல்பான வாழ்வில் வரும் அன்பான தங்கை மாதிரி, நான் மாற நினைக்கும் ஒரு நாகரீகப் பெண்ணாக இருந்தார். அதுவரைக்கும் எந்த நடிகையாகவும் என்னை கற்பனை பண்ணிப் பார்க்காத நான் திரையில் வரும் ஷோபாவின் கதாபாத்திரத்தைப் போல் இயல்பில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..அதுக்கு ஒரு அன்பான காரணம் இருந்தது. ஷோபா தனக்கு கிடைச்ச எல்லா கதாபாத்திரங்களையும் ஒரு நுட்பமான அன்பின் வெளிப்பாட்டை கொண்டு நடித்திருந்தார். இயற்கையையும் அன்பையும் நேசிக்கின்ற ஒரு மனுசிதான் இத்தனை நுட்பமான அன்பை வெளிப்படுத்த முடியும்.
ஷோபாவும் என்னைப்போல் இசையும், மழையும் விருப்பமுடைய பெண்ணாக இருக்க வேண்டும். அவர் தனக்கு விருப்பப்பட்ட பாடல்களைச் சத்தமாக பாடுபவராக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். கள்ளமில்லாத அந்த சிரிப்புக்குள்ள ஒரு தேடல் தெரிந்தது. மனசுக்குப் பிடிச்ச விஷயங்களில் தன்னைத் திளைத்துக் கொண்டு அதில் கரைந்து போகும் மனம் இருந்தது. ஆனால் அவர் விருப்பங்கள் எதுவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் இருந்த ஷோபா இப்படித்தான் இருந்தார்.
அந்த முகத்தில் வழிகின்ற சந்தோசத்தை, சிரிப்பை, குழந்தைத்தனத்தை,தேடலை எனக்குள்ளேயும் கொண்டு வர விரும்பினேன். வள்ளியா ,இந்துவா நடிச்ச ஷோபாவுக்குள்ள நான் எங்கே இருக்கிறேன் என்று தேடினேன்.
அழியாதகோலங்கள், முள்ளும் மலரும், மூடுபனி, பசி ..இந்தப் படங்களெல்லாம் எனக்கும் ஷோபாவுக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தின படங்கள்.
அழியாத கோலங்கள் படத்தில் வருகின்ற இந்து டீச்சர் படத்தில் வருகின்ற எல்லா கதாபாத்திரங்களின் மேலும் சந்தேகமற்ற அன்பை செலுத்தும் பெண்ணாக இருப்பார். கடைசியில் அந்த ஆத்ம அன்பு அந்த கதாபாத்திரங்களை வாழ்நாளில் கடைசி வரைக்கும் கரைய வைக்கும். அந்தப் படம்தான் அவங்களை எனக்குத் தேவதையா காட்டியது. என்னைப் பொருத்தவரைக்கும் தேவதைகள் அழகானவர்கள் இல்லை. அன்பானவர்கள் .அன்பும் குழந்தைத்தனமும்தான் ஒரு பெண்ணை அழகாக்கும்.
சின்னச்சின்ன பாவனைகள்ல அவங்க காட்டற அக்கறை.ஒரு பாவத்திலயிருந்து இன்னொரு பாவத்துக்கு மாறி இரண்டையும் இயல்பான நடிப்பாக மாற்றி பார்வையாளனுக்கு கொண்டு சேர்த்த நடிகை ஷோபாவாகத்தான் இருக்கும்.
அப்படியொரு காட்சி முள்ளும் மலரும் படத்தில் வரும். மருத்துவமனையிலிருந்து திரும்பி வருகின்ற அண்ணனை(ரஜினி) வீட்டுக்கு தூரத்தில் வரவேற்க ஓடுவார். அண்ணனை பார்த்ததும் முகம் கொள்ளா மகிழ்ச்சியில் கட்டிக் கொள்வார். மெது மெதுவாக காற்றில் அண்ணனின் கை இல்லாத சட்டையை தொட்டும் உணரும் போது அந்த மகிழ்ச்சி கொஞ்ச கொஞ்சமாக இறங்கி தாங்க முடியாத துக்கத்தில் விம்மி அழுவார்.
அதே திரைப்படத்தில் கடைசி காட்சியில் தான் விரும்பும் ஆண், ஒரு வளமான வாழ்க்கை, தனக்காக வரும் ஊர் மக்கள் இவை எல்லாவற்றையும், அண்ணன் கூப்பிட்டதும் உதறித்தள்ளிவிட்டு ஒரு குழந்தையைப் போல் ஓடிவந்து உன்னைத் தவிர வேறு எதுவும் வேண்டாமென்று சொல்லி அழும் காட்சியைப் பார்த்தால் இன்றும் என் கண்கள் ஈரமாகிவிடும்.
மூடுபனி படத்தில் ஷோபா ஒரு சினிமா தியேட்டருக்கு போகும் காட்சி. அக்காட்சியில் இடைவேளையில் திரையரங்கிற்கு வெளியே வருவார். அப்போது யார் என்று தெரியாத ஹீரோவிடம் விரிந்திருக்கும் கூந்தலை மிக இயல்பாக கொண்டை போட்டபடி மணி என்ன என்று கேட்டுவிட்டு ஒரு திண்டில் உட்காருவார். ஹீரோவைப் போல் இப்படியொரு இயல்பான பெண்ணா என்று நாமும் திண்டாடிப் போவோம். இப்படி அவர் நடித்த படத்தை மிக நுட்பமாக பார்க்கும்படி அவர் என்னை இன்னமும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.
இன்று சினிமாதான் தொழில் ,சினிமாதான் வாழ்க்கை என்றானபின் உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்த பிறகும் ஷோபா எனக்குள் ஏற்படுத்திய பிம்பம் உடையவே இல்லை.
ஒரு தேவதைப் பெண் திடீரென்று விளிம்புநிலை கதாபாத்திரத்தில் நடித்தால், உடனே நாம் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையயோடு ஏற்பது சிரமம். ஒரு பிரியாணிக்காக தன்னை இழப்பது தெரியாமல் இழக்கும் இரு வெகுளிப்பெண்ணாக, பசித்தலையும் குப்பத்து பெண்ணாக அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பார்.
புத்தகங்களை மறுவாசிப்பு செய்வது போன்று அவருடைய திரைப்படங்களை திரும்பப் பார்க்கிறேன். அதே நடித்த படங்களின் பாடல் காட்சிகளையும் திரும்பத் திரும்ப பார்க்கிறேன். இன்று என்னைப் பற்றி, இசை பற்றி, சினிமா பற்றி, ஷோபா பற்றி எழுத முக்கிய காரணம் அவர் நடித்த ‘பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்’ பாடல் என் பழைய ஞாபங்கங்களை கிளப்பிவிட்டது. இந்தப் பாடல் முழுதும் அன்பால் நிறைந்து இருக்கும். இசையில், குரலில், பாடல் வரிகளில்,ஷோபா நடிப்பில் அன்பு தளும்பி வழியும். அந்தப் பாடலைக் திரும்ப கேட்க கேட்க ஷோபா என் மனதில் ஆழமான அழகான படிமமாக படிந்து போயிருப்பது தெரிந்தது. அவர் நடித்த நான்கு பாடல் காட்சிகளை என் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாது. ஒரு முழுநீளத் திரைப்படத்தில் காட்ட வேண்டிய பாவனைகள் அனைத்தையும் ஒரு பாடல் காட்சிக்குள்ளயே செய்து காட்டிடுவார்.
‘பூவண்ணம் வண்ணம்’ பாடல் காட்சியில் காதலனும் காதலியும் ஒருத்தரை ஒருத்தர் இறுக்கமாக கட்டிக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் உயர்ந்த அன்பை, காதலை, ரொமான்ஸை தன்னோட முக பாவனைகளில் ,உடல் மொழியில் கொண்டு வந்திருப்பார்.
‘அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ பாடல். இது ஷோபா மட்டும் தனிமையில் பாடகின்ற பாடல் .இயற்கையை நேசிக்கின்ற எந்தப் பெண்ணும் அந்தப் பாடலோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.தனக்கான ஆணின் முகம் தெரியாது,அவனுக்கான அன்போடவும் தாபத்தோடவும் இருக்கின்ற பெண்ணோட உணர்வை வெளிப்படுத்துகின்ற பாடல். ஒரு ஏரிக் கரையில தண்ணீரில் முழ்கி தன் கூந்தலை லேசாக அசைத்து தன் முகம் தெரியாத காதலனுக்காக தவிக்கின்ற தவிப்பை மிக நுட்பமாக கலை உணர்வோட வெளிப்படுத்தியிருப்பார். அந்த உணர்வு அந்த நீரோடையோடு கலந்திருக்கும் ஒரு தூய்மையான அன்பின் ,ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும்.
தன்னை கடத்திட்டு வந்தவன் தன் மேல் இருக்கும் அதீத காதலை பாடலாகப் பாடுகிறான்.’என் இனிய பொன் நிலாவே’ ..அந்தப் பாடலை சூழ்நிலை இறுக்கம் ,மனத்தவிப்பு இதையெல்லாம் மீறி அந்த நிமிசத்துக்கான நேர்மையோடு ரசனையோடும் அந்த பெண் பாடலைக் கேட்கிறாள்.இதுதான் அந்தக் காட்சி. அதில் குழந்தைத்தனமான முகபாவத்தோடும் ரசனையோடும் குறுகுறுப்பான அழகில் மின்னுவார்.
ஒரு ஆண் இயற்கையை வர்ணித்துப் பாடுகின்ற பாடல்தான் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’ பாடல். படத்தில் சரத்பாபுதான் பாடுவார். இடையிடையே சின்னச்சின்ன குளோசப் காட்சிகளில் ஷோபாவின் முகம் காட்டப்படும்.அந்த சின்னச்சின்ன காட்சிகள்தான் அந்த பாடல் காட்சிக்கு ஒரு ஜீவனைத்தரும் .அந்த பாடல் காட்சியிலிருந்து ஷோபாவோட குளோசப் காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்தப் பாடல் ஒரு முழுமையற்ற தன்மையோடு இருக்கும்.
இந்த எல்லாவற்றையும் நான் ஒரு ஏக்கத்தோடு எப்பவுமே நினைச்சுப் பார்ப்பேன்..ஏனெனில் இப்போது அந்த தேவதை உயிருடன் இல்லை. மிக அதீதமான அன்புதான் ஷோபாவின் தற்கொலைக்கு காரணம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆமாம் அவர் ஒரு அன்பின் உருவமாகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனாலும் அவர் புன்னகைக்குள் ஒரு மென்சோகம் இழையோடி இருக்கும். ஷோபாவின் புன்னகை ஒரு மோனலிசா புன்னகை. அவர் அன்பை மட்டுமே நேசித்த பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அது முழுமையாக கிடைக்காத போதுதான் அவர் இந்த உலகத்தைவிட்டுப் போயிருக்க வேண்டும். ஷோபாவின் மரணத்தை நான் ஒரு தோற்றுப் போன அன்பாகத்தான் பார்க்கிறேன்.




ஷோபா என்னும் அழியாத கோலம்
க னவு காணும்
வேலைக்காரியாய்த்தான்
முதலில் ஷோபாவைப்
பார்த்தேன். தெருவில், கோவிலில்,
கடைவீதியில் பார்க்கும் ஒரு
சாதாரணப்பெண் போல இருக்கிறார்
ஷோபா என ஆனந்தவிகடன் சொன்னது மிகச் சரியானதுதான். அறிமுகம் செய்த கே.பாலச்சந்தருக்கு
இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். அங்குமிங்கும் பார்த்து, சரத்பாபுவின் செண்ட்டைத் திருட்டுத்தனமாய் போட்டுக்கொண்டு கண்ணாடியில் தன்னுடலைப் பார்க்கும் அந்த நேரத்தில் மிக நெருக்கத்தில் உணர்ந்தேன். எந்தப் பின்னணியிசையுமின்றி, சரத்பாபுவிடம் அந்த உடலைப் பகிர்ந்து கொண்ட போது எதையோ இழந்துபோனவனாய் பார்க்கமுடியாமல் பார்த்து உட்கார்ந்திருந்தேன். அனுமந்துவின் வலி என்னிடம் இருந்தது. நிழல் நிஜமாக தெளிந்த பிறகு ஷோபாவின் முகத்தில் இருக்கும் நிதானத்தையும், பக்குவத்தையும் காணும் கமல்ஹாசனிடம் இருக்கும் பிரமிப்பு என்னிடம் இருந்தது. கடைசியில் சரத்பாபுவை மறுக்கிறபோது ஷோபாவைத் தூக்கிக் கொண்டாடி இருக்கிறேன். அன்று ஷோபா ஒரு நல்ல நடிகையாக மட்டுமேத் தெரிந்தார்.
வானவில் பின்புறம் மலர்ந்திருக்க ‘ அடி பெண்ணே...” என மலையடிவாரத்தில் ஒடிவருகிற போதுதான் என் பதின்மப் பருவத்தின் சிலிர்ப்போடு ஷோபாவை நேசிக்க ஆரம்பித்தேன். அந்தப் பெரிய குங்குமப் பொட்டும், மூக்குத்தியும் எவ்வளவு அழகானவையாக இருந்தன.
செந்தாழம் பூ வென்று அப்போது சரத்பாபு காதலித்துக்கொண்டு இருந்தார்.
பிறகு குடையோடு வந்தது இந்து டீச்சர். வெளி யாவையும் நிழல் போலாக்கி மயங்கி நிற்கும் அந்த மாலைச்சூரியனிலிருந்து உணர்வுகள் சுதிகொள்ள ஆரம்பிக்கும். பஞ்சுக்கதிர்களாய் காற்றில் உற்சாகமாய் பொங்கிக்கொண்டு இருக்கும் புற்கூட்டத்திலிருந்து சலீல் சௌத்தரியின் இசை எழும்பும் அந்த தருணத்தில் சட்டென பரவசமாகிறது உள் பூராவும். வாய்க்கால்களும், வரப்புகளும், மரத்தடிகளுமாய் கிராமத்தின் அழகெல்லாம் காட்சிப்பறவைகளாய் இசையில் சிறகு விரிக்கும். “பூவண்ணம்.... போல நெஞ்சம்.... பூபாளம் பாடும் நேரம்.. .” என்னும் வரிகளில் உடல், உள்ளம் எல்லாம் லேசாகி விட, வாழ்க்கை எவ்வளவு சுகமானதாகவும், ரம்மியாகவும் ஆகிப்போகிறது. அதோ, ஆர்கண்டிச் சேலையில் தேவதையாய் ஷோபா ஒற்றை வரப்பில் நடந்துவர, திரவம் போல கசிந்துருகிப் போகிறேன். இசை, பாடல், குரல், காட்சி, உருவங்கள் என அனைத்தும் ஒன்றிப்போய் மிதக்கும் அந்தக் காலப்பரப்பில் போதைகொண்டு இன்னும் என் இளமை வாடாமல் கிடக்கிறேன்.
தொடர்ந்து ஏணிப்படிகள், ஒரு வீடு ஒரு உலகம், பசி என்று வேறு வேறு பிம்பங்களில் வந்தாலும் எனக்குள் எல்லாம் அழியாத கோலமாகவே மீட்டிக்கொண்டு இருந்தது. law of diminishing utility பற்றி உதாரணங்களுடன் புரொபசர் பொன்ராஜ் வகுப்பறையில் விளக்கிக்கொண்டு இருக்கும் போது ஷோபாவின் கண்ணை வரைந்து கொண்டு இருப்பேன். பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள் முழுக்க ஷோபாவின் முகங்களே முளைத்திருந்தன. சிரிக்கும்போது குழந்தையும், மௌனமாய் இருக்கும்போது முதிர்ச்சியும், எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் புத்திசாலித்தனமும், குறுகுறுப்பும்தான் ஷோபா. வேகம் கூடிய நடையும் தெறிப்புகளாய் வந்து மறையும் சிறுவெட்கமும் அழகு. அந்த உருவம், அசைவுகள், உரையாடும் பாவம் எல்லாம் என் பிரியத்திற்குரியச் சாயல்களாயிருந்தன. என் தேவதைக்குரியவையாக இருந்தன. புல்வெளிகளில், கடற்கரையில் நான் ஷோபாவுடன் நடந்து கொண்டு இருந்தேன். நான் எதோ சொல்ல ஷோபா வெட்கப்பட்டுச் சிரிப்பதை உணர்ந்தேன். என் இனிய பொன் நிலாவாக வான்வெளியில் வைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தேன். விளக்குகள் அணைக்கப்பட்ட இருளில் இருந்து ஷோபா வெளியேறி நாளாகியிருந்தது.
அது எப்படி என்று தெரியவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. இனக்கவர்ச்சி என்பதெல்லாம் தாண்டிய உறவாக அதை வரித்துக்கொண்டேன். வெதுவெதுவென எப்போதும் ததும்பிக்கொண்டு இருக்கிற நினைவுகள் என்னை மிருதுவாக வருடிக்கொண்டிருந்தன. தொலை தூரத்து நட்சத்திரமே என்பதை புரிந்து கொண்டாலும், அது என் பாதையில் மட்டும் சிந்திய ஒளியை எல்லாம் பத்திரமாக்கி வைத்துக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் வானொலியில் ஷோபா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பெண் சொன்னாள். பத்திரிகையில் படங்களுடன் செய்திகள் வந்தன. அன்று நான் சாப்பிடவில்லை. பைத்தியம் போலக் கிடந்தேன். மரணம் குறித்து வந்த செய்திகளும், சர்ச்சைகளும் எனக்கு முக்கியமானதாய் படவில்லை. அருமையான ஒன்றை இழந்த சோகம் மட்டுமே என் நாட்களில் அப்பிக்கொண்டிருந்தது. இனி இந்த உலகில் எந்தப் பெண்ணும் அழகானவளாய், ரசனைக்குரியவளாய் இருக்க மாட்டாள் என்றெல்லாம் தோன்றியது. ச்சீப் பைத்தியம் என்று என்னையே நான் கோபப்பட்டாலும், அதுதான் உண்மையென்று அழுத்தமாக உறைத்துக் கொண்டிருந்தது.
ஆனால் ஷோபா எங்கும் போய்விடவில்லை. திரும்பவும் உயிரோடு எழுந்து வந்திருக்கும் செய்தியை ரகசியமாக வைத்துக் கொண்டேன். நான் வரைந்த ஷோபாக்கள் என்னைச் சுற்றி நடமாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். கால அமைதி கொண்டு நிற்கிற ஷோபா இப்போது.
ஆமாம், கு.ப.ராஜகோபாலனுக்கு ஷோபா எப்படித் தெரியும்? கள்ளங்கபடமற்ற நூருன்னிஷாவாக வடிவம் பெற்று எழுந்து நின்றது ஷோபாவேதான். அப்புறம் பார்த்தால் ஸ்டெப்பி புல்வெளிகளில் பாடித்திரிந்து கொண்டிருந்த என்னருமை ஜமிலாவும், “இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாபு” என்று தலையைக் கோதிவிட்ட யமுனாவும் ஷோபாதான். பிலிம் சுருள்களுக்குள்ளிருந்து விடுபட்டு, நான் நேசிக்கிற பெண்களுக்குள் எதோ ஒரு வார்த்தையின், அசைவின் வழியாக ஷோபா கூடு பாய்ந்து விடுவதை அறிந்து கொண்டேன்.
அந்த இடத்தை நிரப்ப முடியாத பெண் ஷோபா. ‘மேகமே... மேகமே’ என்று சுஹாசினி புல்வெளியில் உட்கார்ந்திருக்கிற நாட்கள் சில வந்தன. “பூவே பூச்சுடவா” என நதியா துள்ளித் திரிந்த நாட்கள் சில வந்தன. அவர்கள் போன சுவடு தெரியவில்லை. நான் தேடவுமில்லை. ஷோபா மட்டும் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்க முடிகிறது. நேற்று கூட ஷாஜஹானின் எழுத்தில் அண்ணியாக வந்து “நாளை இந்த நேரம் பார்த்து” என்று பாடிக்கொண்டு இருந்ததைக் கேட்டேனே.
காலம் எவ்வளவோ கடந்து போனாலும், எந்த அற்புதத்தையும், அழகையும் நாம் இழந்து போவதில்லை. ரசனைகளின் சித்திரங்கள் வயதுகள் தாண்டியும் கூடவே வருகின்றன. எப்போது பார்த்தாலும் வான்வெளியில் சட்டென்று கண்ணில் படுவதாய் எல்லோரும் தங்களுக்கென்று ஒரு நட்சத்திரம் வைத்திருக்கிறார்கள். அறிவு பூர்வமான புரிதல்களுக்குள்ளும், பக்குவங்களுக்குள்ளும் அடைபடாத அழியாத கோலங்கள் இவை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பிரச்சினைகள் குறித்து நாங்கள் எடுத்திருந்த ‘ இது வேறு இதிகாசம்’ ஆவணப்படத்தை வெளியிட மதுரைக்கு பாலுமகேந்திரா வந்திருந்தார். விமான நிலையத்தில் வரவேற்றதிலிருந்து கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க அவரோடு ஒரு ஓட்டல் அறையில் கூடவே இருந்தேன். நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தார். எழுத்தாளர்கள் தமிழ்ச்சினிமாவிற்குள் வரவேண்டியதன் அவசியம் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, “நீங்களும் நன்றாக எழுதுவீர்களே” என்றேன். “நான் எழுத்துக்களை வாசிப்பேன். எங்கே எழுதினேன்?” என்றார். கொஞ்சமும் யோசிக்காமல் “ஷோபா அவர்கள் இறந்தபோது குமுதத்தில் அந்த நினைவுகளை ஒரு தொடராக எழுதினீர்களே... நான் அதை விடாமல் படித்திருக்கிறேன். ரொம்ப நல்லாயிருந்தது” என்றேன். பதில் எதுவும் சொல்லாமல் அமைதியானார். தர்மசங்கடமாயிருந்தாலும், நானும் அமைதியாயிருந்தேன். நீண்ட அந்த மௌனத்தில் இருந்து எழுந்து வந்து கொண்டிருந்தார் ஷோபா!
நன்றி தீரா பக்கங்கள்.



100 ஆண்டு சினிமாவில் மறக்க முடியாத பேரழகு நடிகை ஷோபா..! அந்த இரவு தற்கொலை…!!

ஷோபா…! தமிழ் திரைப்பட வரலாற்றில் எளிமை கலந்த அழகி. அபார நடிபாற்றலோடு வந்த தேவதை..!
இவர் ஒளிப்பதிவு மேதை பாலு மகேந்திராவின் கண்டுபிடிப்பு..! பாலுவின் பட்டறையில் கூர் தீட்டிய வாள்..!
அழியாத கோலங்கள், மூடுபனி இப்படி பாலுமகேந்திராவினால் பட்டைத் தீட்டப் பட்ட வைரம்…!
முள்ளு மலரும் படம் வெளிவந்த போது தமிழ் நாட்டு மக்கள் ஷோபாவை தங்கள் வீட்டு பெண்ணாக.. மகளாக.. தங்கையாக.. ஏற்றுக் கொண்டார்கள்.

பாசத்தைப் பொழிந்தார்கள்..! ஷோபா படம் என்றாலே பசி மறந்து பட்டி தொட்டி திரையரங்குகளில் பெண்கள் காத்துக் கிடந்து படம் பார்த்தார்கள்.
துரை இயக்கத்தில் பசி என்றொரு படம் வந்து தேசிய விருது பெற்றது. அதில் ஷோபா, சேரி வாசிப் பெண்ணாக கலக்கி இருப்பார்..!
சரி, என்ன இருந்து என்ன பண்ணுவது..! ஷோபா காதலில் விழுந்தார் என்கிறார்கள். அதுவும் தனது குரு நாதர் பாலுமகேந்திராவையே காதலித்தார் என்று அப்போது பேசப்பட்டது..!
அவரோடு மிகவும் நெருக்கமாகவே பழகினார். கூடவே சுற்றினார்..! நடிக்கும் படங்களில் அவரிடம் மிக அதிகமாகவே பாசம் காட்டி விட்டார்.
ஆனால், இடையில் இருவருக்குள்ளும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. பொன்னகரம் என்கிற படப்பிடிப்பில் மிகவும் மனம் உடைந்த நிலையில் ஷோபா கணப்பட்டதாக அபோது கூறினார்கள்..!
அந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தவர் மீண்டும் வெளியே வரவில்லை. எப்போதும் முடங்கிக் கிடந்தார்.
மன உளைச்சலில் யாருடனும் பேசவும் இல்லை..! மீண்டும் ஒரு நாள் ஒளிப்பதிவு மேதை பாலு மகேந்திராவை ஷோபா சந்தித்தார்…!
அது இரவு எட்டு மணி இருக்கும். வாக்குவாதம் நடந்ததாக கூறுகிறார்கள்.
அனைவரும் தூங்கினார்கள். ஷோபா தூங்கவே இல்லை. இரவு ஒரு மணிக்கு மேல் தூக்கு மாட்டி உயிரைப் போக்கிக் கொண்டார்….!
தமிழ் திரையுலகம்..ஒரு நடிகையர் திலகம் ஷோபாவை இழந்தது…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக