நடிகை சுதா சந்திரன் பிறந்த நாள் செப்டம்பர் 21 , 1963 .
சுதா சந்திரன் (பி. செப்டம்பர் 21 , 1963 ) ஒரு இந்திய பரதநாட்டியக் கலைஞர்.
மேலும் இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார் இவர். 1981-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அருகே காயமடைந்த சுதா சந்திரனின் வலது காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் நடனக் கலையை கைவிடவில்லை.
மும்பையில் உள்ள மித்பாய் கல்லூரியில் இருந்து பி.ஏ. பட்டப்படிப்பு மற்றும் அதன் பிறகு எம்.ஏ. பொருளாதாரவியல் என பள்ளி கல்லூரி படிப்பு மும்பையிலேயே முடித்துக் கொண்டார். 1981-ம் ஆண்டு புணித யாத்திரை மேற்கொண்டபோது இவர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானது.
விபத்தைத் தொடர்ந்து கால் இழந்த நிலையில் ஜெய்பூர் செயற்கைக் காலை பொருத்திய பிறகு இவர் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பா, கனடா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். உலகின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்திருந்தாலும் தன்னை கவர்ந்த அமைதியான நகரம்
சென்னை என்றார் சுதா சந்திரன்.
திரைப்படத் துறையில் சுதா சந்திரன்.
1984-ம் ஆண்டு வெளி வந்த மயூரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 1986-ம் ஆண்டு இந்த திரைப்படம் நாச்செ மயூரி என்ற பெயரில் இந்தி மொழியில் ரீ மேக் செய்யப்பட்டது. மயூரி திரைப்படத்திற்காக 1986-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளார்.
தமிழில் விஷால் நடித்த சத்தியம் மற்றும்
ஆதிபகவன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இது தவிர பல்வேறு சின்னத் திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
'ஆடிக்கொண்டே இருக்கவேண்டும்'... 'நாகினி' சுதா சந்திரன் நெகிழ்ச்சிப் பேட்டி! விகடன்.
'வசந்த ராகம்', 'சின்னதம்பி பெரியதம்பி',' சின்ன பூவே மெல்ல பேசு ' என்று பல்வேறு மெகா ஹிட் படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய ரோல்களில் நடித்தும் எண்பதுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுதாசந்திரன். இவருக்கென்று அப்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என்று இந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி நாயகியாக வலம் வந்தவர், பின்னர் சினிமாவைவிட டிவியில் நடிப்பதை அதிகம் விரும்பி தொலைக்காட்சியில் உலகிலும் கலக்க தொடங்கினார்.
தற்போது வயது ஐம்பதைக் கடந்தபின்னும் டிவி சீரியல்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.அவருடன் ஒரு நெகிழ்ச்சிப் பேட்டி. விகடன் வாசகர்களுக்காக...
உங்களுக்கு நடந்த விபத்து பற்றி?
எனக்கு சின்ன வயதில் திருச்சி பக்கத்தில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு என்னுடைய வலது காலில் பலத்த அடிபட்டது. உடனே, திருச்சியில் இருந்த மருத்துவமணையில் முதலில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றேன். அதன் பிறகு சென்னையின் பிரபல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் குணமானேன். கிட்டத்தட்ட இரண்டு வருடம் என் கால்களுக்கு ஓய்வு கொடுத்த பிறகு, மும்பையில் நடந்த நடன விழாவில் கலந்து கொண்டு மீண்டும் என்னுடைய நடனக் கலையைத் தொடர்ந்தேன். இதோ இப்போது எனக்கு வயது 51 ஆகிறது. இப்போதுதான் நடனம் ஆட தொடங்கியிருப்பதாக உணர்கிறேன்.'
சீரியலில் நடிக்க ஆரம்பித்தது எப்போது?
முதல் முதலில் நான் நடித்தப் படம் 'மயூரி. தெலுங்கில் 1986- ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் என்னுடைய வாழ்க்கைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதன் பிறகு சில படங்கள் நடித்தேன். சில வருடங்களிலேயே சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தன. எனக்கான கதாப்பாத்திரங்கள் எல்லாமே வித்தியாசமாகவே கொடுக்கப்பட்டன. என்னுடைய முதல் சீரியலே ஹிந்தி மொழியில்தான். அதற்குப் பிறகு பல ஹிந்தி சீரியல்களில் நடித்தேன். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் விடாமல் தொடர்ந்தேன். சில தமிழ்ப் படங்களிலும் நடித்தேன். தமிழ் சீரியலை பொறுத்தவரை நான் முதலில் நடித்து, நல்ல பெயர் வாங்கி கொடுத்தது விஜய் டி.வியின் 'தெய்வம் தந்த வீடு'.
பெரும்பாலும் உங்களுடைய கதாப்பாத்திரம் மிகவும் தைரியமான பெண்மணியைப் போலவே அமைக்கப்படுகிறதே....?
'தெய்வம் தந்த வீடு' சீரியலில் தெரிந்தோ, தெரியாமலோ எப்படி அந்த கதா பாத்திரத்தைக் கொடுத்தார்களோ எனக்குத் தெரியாது. ஆனால்,உண்மையில் என்னுடைய 'ரியல் லைஃப்' கேரக்டரும் இதுதான். தவறோ, சரியோ எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுவேன். இன்னும் சொல்லப் போனால் எந்தப் பிரச்னைகளையும் கண்டு பயப்பட மாட்டேன்.
தெய்வம் தந்த வீடு, சொல்வதெல்லாம் உண்மை இரண்டிலும் திடீரென விலகிட்டீங்களே ஏன்?
திடீரென விலவில்லை. விஜய் டிவி 'தெய்வம் தந்த வீடு' ஒரு சில மனஸ்தாபத்தால விலக வேண்டியதாயிற்று. ஜி தமிழ் 'சொல்வதெல்லாம் உண்மை' ஒரு வருட அக்ரிமெண்ட். ஒரு வருடத்தை முடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டேன். இந்த இரண்டின் மூலமும் தமிழ் மக்கள் மனதில் நல்ல இடம் எனக்குக் கிடைச்சது. குறிப்பாக, 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் நிறைய கத்துக்கிட்டேன். எனக்கு ஹிந்திதான் ஸ்போக்கன் லாங்குவேஜ். என்னதான் தமிழ் தெரிந்தாலும் அந்த நிகழ்ச்சியில மக்கள் பேசுற தமிழ் வார்த்தைகள் சில புரியாமலே இருந்தது. ஆனா, அவர்களுடைய உணர்வுகள், ஏமாற்றங்கள், வலிகள் எல்லாவற்றையும் புரிஞ்சுக்க முடிந்தது. வெளியில் வந்த பிறகு மற்றவர்களை அணுகும் முறையும் வித்தியாசமாகவே இருந்தது. மொத்தத்தில் அந்த நிகழ்ச்சியின் வாயிலாக மனிதநேயத்துடன் இன்னும் பலரிடம் நடந்துகொள்ள முடிந்தது. அமீர்கானின், 'சத்யமேவ ஜெயதே' சீரிஸ் போலத்தான் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை எடுக்கத் திட்டமிட்டோம். பிறகு, எப்பொழுதும் போலவே தொடர்ந்து செய்வதென்று முடிவாயிற்று.
நீங்கள் தற்போது நடித்திருக்கும் நாகினி சீரியல் பற்றி ?
ஹிந்தியில் நாகின் எனும் பெயரில் வெளிவந்த சீரியலில் நடித்ததற்காக 'சிறந்த சீரியல் நடிகை' விருது கிடைத்தது. அந்த சீரியல்தான் 'நாகினி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை வந்த சீரியல்களிலேயே மிகவும் வித்தியாசமான சீரியல் என்றால் அது இந்த சீரியல்தான். வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்புமுனைகள் என மக்களின் ஆர்வத்தை இந்த சீரியல் நிச்சயமாக தூண்ட வைக்கும் என்பதை 100% உறுதியாக சொல்வேன். தமிழ்நாட்டுல இருந்து வித்தியாசமான ரோல்களை மக்கள் எதிர்பார்க்கிறாங்க. நாகினி பார்த்த பிறகு ரொம்ப நல்லா இருந்ததாக ஃபோன் கால்ஸ் வந்துட்டே இருக்கு.
உங்களோட நடன வகுப்புகள் பற்றி?
'சுதா சந்திரன் டான்ஸ் அக்காடமி' என்கிற பெயரில் மகாராஷ்டிரா, நாக்பூர், அந்தேரி, என பல இடங்களிலும், சென்னையில் போரூரிலும் நடன வகுப்புகளை நடத்தி வருகிறேன். இதில் வெஸ்டர்ன், கிளாசிக்கல், ஃபோக் என பல நடனங்களை கற்றுத் தருகிறோம். இந்த வகுப்பில் 5-50 வயது வரை உள்ள அனைவருக்குமே பயிற்சி தருகிறோம். என்றைக்குமே இருக்கிறதை வைத்து சந்தோஷப்படனும். பெரிய அளவுக்கு பேராசைப்படக்கூடாது என என்னுடைய பெற்றோர்கள் சின்ன வயதில் சொல்லிக் கொடுத்ததைத்தான் இன்றளவும் பின்பற்றிவருகிறேன். சந்தோஷமாகவும் இருக்கிறேன்.
உங்களுடைய சொந்த ஊர்?
எங்களுக்கு சொந்த ஊர் திருச்சி. ஆனால் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பைதான். ஒவ்வொரு வருடமும், திருச்சி வயலூர் முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட், செப்டம்பர்ல மறக்காம குடும்பத்தோடு ஆஜர் ஆகிடுவோம். எனக்கு ஆரம்பத்துல சென்னை செட் ஆகாமத்தான் இருந்தது.யாதும் ஊரே,யாவரும் கேளீர் என்கிற மாதிரி நான் எந்த இடம் போனாலும் அந்த இடத்தை நேசிக்க ஆரம்பிச்சுடுவேன். அந்த வகையில ஐ லவ் சென்னை.
நீங்க பெரும்பாலும அதிகமான மேக்கப் மற்றும் ஹெவியான ஜூவல்லரியோடவே இருக்கீங்களே...?
வீட்லயோ, வெளியிலயோ எப்போதும் மேக்கப் போடமாட்டேன், ஜூவல்லரி போடமாட்டேன். இன்னும் சொல்லப்போனா திருமாங்கல்யம் கூட போடவே மாட்டேன். நான் பார்லர் போய் ரொம்ப வருஷம் ஆச்சு. வாரத்துல ஒரு நாள் தலைக்கு எண்ணெய் வச்சு குளிப்பேன். ஆனா, எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிடுவேன்.
உ ங்களோட பெரிய ஆசை?
எனக்குத் தெரிந்து இதுவரை நான் பண்ணாத ரோலே கிடையாது. இன்னும் என்னென்ன வித்தியாசமான கதாப்பாத்திரத்துல நடிக்க முடியுமோ அவ்வளவு கதாப்பாத்திரத்துல நடிக்கணும். தொடர்ந்து என் கடைசி நாள் வரை என் கால் நிற்காம ஆடிட்டே இருக்கணும். இதுதான் எப்போதும் என்னோட ஆசையா இருக்கும். எனக்கு சொத்து, பொருள் மேல எல்லாம் அந்த அளவுக்கு ஆசை கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக