திரைப்படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு தினம் –செப்டம்பர் 8., 1978.
சாண்டோ சின்னப்பா தேவர் (28 சூன் 1915 – 8 செப்டம்பர் 1978)) என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆரை நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். எம். ஜி. ராமச்சந்திரன் இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 - 1971இல் கலைமாமணி விருது பெற்றவர்.
ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில், இதே கருதுகோள்களோடு தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தவர்; அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, திரை உலகை வியக்க வைத்தவர் எம் எம் ஏ சின்னப்பா தேவர்.
இளமை
சின்னப்பா தேவர் கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜூன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவுத்தேவர்- ராமாக்காள். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான்' சுப்பையா தேவர். நடராஜதேவர், ஆறுமுகம், மாரியப்பன் என்று மூன்று தம்பிகள். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆகும். இதில் மருதமலை மருதால மூர்த்தி என்பது மருதமலை முருகனின் பெயராகும்.
இவர்களில் ஆறுமுகம்தான் பிற்காலத்தில் திரைப்படத்துறையில் எடிட்டராகி,
எம்.ஏ.திருமுகம் என்ற பெயரில் இயக்குநராக விளங்கினார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சின்னப்பா தேவர் ஐந்தாவது வகுப்பு வரைதான் படித்தார். பின்னர்,கோவை பங்கஜா மில்லில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்தில் சம்மட்டியால் இரும்பு அடிக்கும் வேலையில் வாழ்க்கையைத் தொடங்கினார். அக்காலத்தில் கோவையில் புகழ்பெற்று விளங்கிய நிறுவனமாக "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி"யில் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்தார்.
அதன் பின் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டார். சோடா தயாரித்து விற்பனை செய்தார். சின்னப்பா தேவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து, "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார்கள்.
குடும்பம்
சின்னப்பா தேவருக்கு 1936-ல் அவருடைய 21-வது வயதில் திருமணம் நடந்தது.இவர் மனைவியின் பெயர் மாரிமுத்தம்மாள். இவ்விணையருக்குத் தண்டாயுதபாணி என்ற ஒரு மகன், சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று இரண்டு மகள்கள். தண்டாயுதபாணி 'பி.காம்' பட்டதாரி. தேவர் தயாரித்த பெரும்பாலான படங்களைத் தேவரின் தம்பியும், புகழ் பெற்ற எடிட்டருமான ஆறுமுகம் என்கிற
எம். ஏ. திருமுகம் இயக்கினார். தேவர் பிலிம்ஸ் நிர்வாகத்தை மற்றொரு தம்பியான மாரியப்பன் கவனித்துக்கொண்டார்.
தேவரின் மூத்த மகள் சுப்புலட்சுமியை மணந்தவர் ஆர். தியாகராஜன். இவரும் பிறகு இயக்குநர் ஆனார். 'வெள்ளிக்கிழமை விரதம்', 'ஆட்டுக்கார அலமேலு' ஆகியவை இவர் இயக்கியப் படங்கள் ஆகும்.
திரைப்பட வாய்ப்பு
சின்னப்பா அங்கு உடற்பயிற்சிகள் செய்து கட்டுடல் பெற்றார் மல்யுத்தம் , கத்திச்சண்டை, கம்புச்சண்டை முதலியவற்றையும் கற்றார். இந்த காலத்தில் கோவையில் ’’ஜுபிடர் பிக்சர்ஸ் ’’ என்ற நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. அந்நிறுவனத்தில்
எம்.ஜி.ஆர் , எம். என். நம்பியார் , எஸ். வி. சுப்பையா ஆகியோர் ஒப்பந்த நடிகர்களாக மாத ஊதியத்தில் வேலை பார்த்து வந்தனர். திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிக்கவும், புராண கதாபாத்திரங்களில் நடிக்கவும் கட்டுடல் பெற்ற நடிகர்கள் தேவைப்பட்டனர். அப்போது, சின்னப்பா தேவருக்கு அந்த வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்ஹா என்னும் இயக்குநரின் பார்வையில் பட்டுத் துணை நடிகரானார். 20 படங்கள் வரை பல வேடங்களில் நடித்தார்.
எம். ஜி. ஆருடன் நட்பு
திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக எம்.ஜி.ஆருடனும், மற்ற நடிகர்களுடனும் தேவருக்கு நட்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரும், தேவரின் "வீர மாருதி தேகப்பயிற்சி சாலை"க்கு வந்து உடற்பயிற்சி செய்வது உண்டு. எம்.ஜி.ஆருக்கு ஏற்கனவே கத்திச்சண்டை அறிந்திருந்தார். கம்புச்சண்டையில் தேர்ந்தவரான சின்னப்பா தேவர், அதுபற்றிய நுட்பங்களை எம்.ஜி.ஆருக்குக் கற்றுத்தந்தார். இவர்களின் நட்பு சிறு சிறு சர்ச்சைகளுக்கிடையேயும் இறுதி வரைத் தொடர்ந்தது.
தயாரிப்பாளர்
அக்காலத்தில், புராணப் படங்கள் தயாரிப்பதில் புகழ் பெற்ற சி.வி.ராமன் என்ற இயக்குநர் கோவையில் இருந்தார். அவரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் பணியாற்றினார். சினிமாத் தயாரிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இதற்கிடையில், தேவரின் தம்பி திருமுகம் எடிட்டிங் துறையில் பெயர் பெற்றார். ஜுபிடர் தயாரித்த "வேலைக்காரி", "மனோகரா" முதலிய படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றினார்.
சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று தேவருக்கு ஆசையில் நண்பர்களிடம் பணம் சேகரித்து 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு வந்தார். ஜீலை 7, 1955 "தேவர் பிலிம்ஸ்" படக்கம் பெனியை தொடங்கினார். முதல் படத்தையே, பெரிய நட்சத்திரங்களை வைத்து தயாரிக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். கோவையில் நண்பராகப் பழகியிருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ஆர். சம்மதித்தார். அதன் பின்னர் பானுமதி மற்றும் பாலையா, கண்ணாம்பா, ஈ.ஆர்.சகாதேவன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
திரைப்படங்கள்
தன் தம்பி எம்.ஏ. திருமுகம் இயக்க "தாய்க்குப்பின் தாரம்" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இந்தப்படத்துக்கு முதலில் ஏ.பி.நாகராஜன் வசனம் எழுத ஏற்பாடாகியிருந்தது. பின்னர், கண்ணதாசன் எழுதுவார் என்று கூறப்பட்டது. இறுதியில் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அய்யாப்பிள்ளை எழுதினார். பாடல்களை கோவை லட்சுமணதாஸ், மருதகாசி ஆகியோர் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். தேவரின் நேர்மை, நாணயம், திறமை பற்றி அறிந்திருந்த நாகிரெட்டி, படத்தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிக்கொண்டு, பணம் தந்தார். இப்படத்தில் முரட்டுக்காளை ஒன்று நடித்தது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரு வெற்றிப் படமாக அமைந்தது. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால், தேவர் உற்சாகம் அடைந்தார். அடுத்த படத்தையும் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்கத் திட்டமிட்டார். ஆனால் அது இயலாமல் போனது. அடுத்து சில படங்களை ரஞ்சன், உதய குமார், ஜெமினி கணேசன், ஆனந்தன் போன்றாரை வைத்து தயாரித்தார்.
'கொங்கு நாட்டுத் தங்கம்' படத்தை அடுத்து, மீண்டும் எம்ஜி ஆர் கூட்டணி அமைந்தது. தேவர் பிலிம்ஸ் படங்களில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதித்தார். 'தாய் சொல்லை தட்டாதே' படத்தில் எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவியையும் நடிக்க வைக்க தேவர் தீர்மானித்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, கதை- வசனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
'தாய் சொல்லை தட்டாதே' படம் ஒரே மாதத்தில் தயாராகியது. 7-11-1961-ல் வெளியான இப்படம் நூறு நாள் ஓடியது. இதை அடுத்து 'தாயைக் காத்த தனயன்', குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் வெற்றிப் படங்களை எடுத்தவர் என்ற பெயர் தேவருக்கு கிடைத்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த 16 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்தவர் தேவர்தான். 1977-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனபின், திரைப்படங்களில் நடிக்கவில்லை. எனவே தேவர் பிற நடிகர்களை வைத்துத் திரைப்படங்கள் எடுக்கத் திட்டமிட்டார்.
தேவர் படங்களிலேயே எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த போது, சில பெரிய திரைப்பட நிறுவனங்கள் எம்.ஜி.ஆரை அணுகி, தங்களுடைய படங்களிலும் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இதன் காரணமாக, எம்.ஜி.ஆர். இல்லாமல் சில படங்களைத் தயாரிக்க தேவர் முடிவு செய்து, அதற்கென்றே 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் தொடங்கினார். இந்தப்நிறுவனம் சார்பில் பல்வேறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், பக்தி கலந்த சமூகப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமே தெரிந்த தேவர் ராஜேஷ்கண்ணாவை வைத்து ஹாத்தி மேரா சாத்தி என்னும் பெரும் வெற்றிப்படத்தை இந்தியிலும் எடுத்தார்.
இவற்றில் ’துணைவன்’ (1969), 'தெய்வம்' (1972), 'வெள்ளிக்கிழமை விரதம்' (1974) ’ஆட்டுக்கார அலமேலு’(1972 )ஆகியவை மாபெரும் வெற்றிப்படங்களாகும். 'தெய்வம்' படத்தில், புகழ்பெற்ற கிருபானந்தவாரியார் நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைப்பில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை சோமு,
டி.எம்.சவுந்தரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன் , ராதா ஜெயலக்ஷ்மி,
பித்துக்குளி முருகதாஸ் ஆகிய இசைக் கலைஞர்கள் பாடினார்கள்.
திட்டமிடல்
தேவரின் படங்கள் குறைந்த செலவில், குறுகிய காலத்தில் (பொதுவாக 40 நாட்களுக்குள்)தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றன.நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்தார். மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது. இதன் காரணமாக ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது வெளியாகும் தேதியையும் தேவர் அறிவித்து விடுவார். அதே தேதியில் படம் நிச்சயம் வெளியாகும்.
பண்பு நலன்கள்
சிறந்த முருக பக்தராக விளங்கிய தேவர் ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரிப்பார். இதில் ஒரு பங்கு முருகனுக்கு வழங்குவார். முருகன் அருளால்தான் தனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டுவதாக தேவர் எண்ணினார். அதனால், லாபத்தில் கால் பகுதியை, முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். பழனி கோவில், மருதமலை முருகன் கோவில் உள்பட பல கோவில்கள் இதனால் பலன் அடைந்தன. ஒரு பங்கை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொரு பங்கை, தனக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று பணம் கொடுத்து, திரை படம் எடுக்க 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு அனுப்பி வைத்த பழைய நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். மற்றொரு பங்கை நன்கொடைகளாக வழங்கினார். தேவர், காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கிவிட்டு வேலை தொடங்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார்.
இறுதிக்காலம்
1977-இல் முதலமைச்சர் ஆனபின், எம்.ஜி. ஆர் படங்களில் நடிக்கவில்லை. எனவே, நடிகர்
ரஜினிகாந்த்தை வைத்து 'தாய் மீது சத்தியம்' படம் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். வசனங்களை தூயவன் எழுதினார். ரஜினிகாந்த்தின் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார்.சங்கர் கணேஷின் இசையில் தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் இப்படத்தை இயக்கினார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. 6-9-1978-ல் தேவர் ஊட்டி சென்று படபிடிப்புகளில் கலந்துகொண்ட போது தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தது. ஊட்டியில் கடும் குளிர் இருந்ததால், கோவைக்கு சென்று சிகிச்சை பெறுவது நல்லது என்று கருதப்பட்டது. எனவே, தேவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைகள் தொடர்ந்தன. மறுநாள் 7-9-1978 இல் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, காலை 10 மணி அளவில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 63. தேவரின் உடல் கோவை ராமநாதபுரத்தில் உள்ள வீட்டுக்குக் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு திரையுலகப் பிரமுகர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள். சின்னப்பா தேவரின் உடல் அடக்கம் கோவையிலேயே நடந்தது. இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். நடந்து சென்று கலந்து கொண்டார். ஜெய்சங்கர் உள்பட திரை உலக பிரமுகர்கள் பலரும் சென்றனர். சின்னப்பா தேவர் மறைவையொட்டி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வெளியிட்ட அனுதாப செய்தி
“ சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை. ”
தேவர் மறைந்த பிறகும் அவர் குடும்பத்தினர் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் நடித்த 'தாய் மீது சத்தியம்', 'அன்னை ஓர் ஆலயம்', 'ரங்கா', 'தர்மத்தின் தலைவன்' உள்பட பல படங்களை எடுத்தனர். அவை வெற்றிகரமாகவே ஓடின. இந்த சமயத்தில், 'மை டியர் குட்டிச்சாத்தான்' என்ற முப்பரிமான ('3 டி') படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, தமிழ் உள்பட பல மொழிகளில் 'மொழிமாற்றம்' செய்யப்பட்டு வெற்றிபெற்றது. அதனால், தேவர் பிலிம்ஸ் உள்பட பல பட நிறுவனங்கள் '3 டி' படங்கள் எடுத்தன.
ஆனால், குட்டிச்சாத்தான் தவிர மற்ற எல்லா '3 டி' படங்களும் தோல்வியைத் தழுவின. இதனால் தேவர் பிலிம்ஸ் நிறுவனம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. தேவர் குடும்பத்தினர் பல திசைகளில் பிரிந்தனர். சாண்டோ சின்னப்பா தேவர் என்ற மகத்தான மனிதரால் உருவாக்கப்பட்ட நிறுவனம், படத்தொழிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேவரின் தம்பியும், இயக்குநருமான எம்.ஏ. திருமுகம், 2004 டிசம்பரில் மரணம் அடைந்தார்.
கருவி நூல்
பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம். கிழக்குப்பதிப்பகம் வெளியீடு.
சாண்டோ சின்னப்ப தேவர்
ந டிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது.
அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் - சாண்டோ சின்னப்ப தேவர்.
கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்த சாண்டோ சின்னப்பா தேவருக்கு நூற்றாண்டு விழா துவக்கம் இன்று. மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர்.
ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்த தேவர், வறுமையான குடும்ப சூழலால் கோவையில் தனியார் மில் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளி மற்றும் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் என அடுத்தடுத்து பல வேலைகளில் ஈடுபட்டும், போதிய வருமானமில்லாத நிலையில் சோடா கம்பெனி ஒன்றையும் கொஞ்ச காலம் நடத்தினார்.
இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடைய சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். சின்னப்பா தேவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது இந்த உடற்பயிற்சிக் கூடம்தான். அங்கு ஓய்வு நேரத்தில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் தேர்ந்தவரானார்.
நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. இதனால் திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர்.
பிரபலமான ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தன. பிரபலமான கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.
நடிப்புத்தொழில் கொஞ்சம் பிசிறடிக்கவும் நடிப்புத் தொழிலோடு, சி.வி.ராமன் என்ற இயக்குநரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் குறைந்த காலம் பணியாற்றினார். அங்கு சினிமாத் தயாரிப்பு தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது நண்பர்கள் சிலருடன் இணைந்து படத்தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதுபோல, தம்பி திருமுகம் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றியது, தனது சினிமா தயாரிப்பு அனுபவம், மனதில் படுவதை செயல்படுத்திக்காட்டும் இயல்பான துணிச்சல் இவை திரைத்துறையை விட்டு விலகியிருந்தாலும், தேவரை கோவையில் சும்மா இருக்கவிட வில்லை. சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நண்பர் களின் உதவியுடன் சென்னைக்கு ரயில் ஏறினார்.
முன்பு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த நாகிரெட்டி, படத் தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் கதாநாயகனாக யாரை போடுவது என்ற குழப்பம் வந்தபோது, அவர் கண் முன் சட்டென வந்தது, அவரது பழைய நண்பர் ராம்சந்தர். ஆம் எம்.ஜி. ஆரின் அப்போதைய பெயர் அதுதான்.
திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெருவெற்றிபெற்ற அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். முதல்பட தயாரிப்பின்போது எம்.ஜி. ஆருக்கும், தேவருக்கும் இடையில் சிறு மனத்தாங் கல் ஏற்பட்டதால், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த ரஞ்சன், உதயகுமார், போன்றோரை வைத்து தன் அடுத்தடுத்த படங்களை தயாரித்தார் தேவர்.
தேவரின் வெற்றிகரமான தயாரிப்பு முறை எம்.ஜி. ஆருக்கு என்னவோ செய்திருக்கலாம். இருவருமே ஒரு சந்திப்பில் ஈகோவின்றி தங்கள் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். விளைவு, பெரிய இடைவெளிக் குப்பின் 'தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்த திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தேவர்!
தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, 'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர்.
1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது.
அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.
“சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.
தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள், படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாளில் முடியும் என்ற அறிவிப்போடு துவங்கும். இது அன்றைய திரையுலகில் ஆச்சரியமான விஷயம்.
காரணம், திரைத்துறை நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு துறை. ஆரவாரமாக துவங்கப்படும் எந்தப் படமும் வழக்கமான பல பிரச்னைகளை தாண்டி வெளியாகுமா? என்பதே நிச்சயமில்லாத விஷயம். அதில் விநியோகஸ்தர்களுக்கு முன்கூட்டி வெளியீடு தேதி அறிவிப்பது என்பது, பெரிய நிறுவனங்களே சொல்லத் தயங்கு கிற விஷயம். தேவர் இந்த விஷயத்தில் பெரிய முதலாளிகளை ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைத்தார். அறிவித்த தேதியில் படம் நிச்சயம் வெளியாகும்.
குறைந்த பட்ஜெட், குறுகிய கால தயாரிப்பு என்பதையும் தாண்டி தேவரிடம் திரையுலகம் வியந்த விஷயம் அவர் கலைஞர்களை மதித்த குணம். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்துவிடுவார். மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது வெளியாகும் தேதியையும் தேவர் அறிவிக்க இதுவும் ஒரு காரணம்.
திரையுலகில் சிரமப்படும் கலைஞர்களுக்கு உதவி செய்தால், அவர்களிடம் அதை திரும்ப பெறமாட்டார். தன் கதையில் அவருக்கு ஒரு வேடம் அளித்து அதை சரிப்படுத்திக்கொள்வார். கடனை அடைத்தது போலவும் ஆகிவிட்டது, அவர்களுக்கு வேலை கொடுத்ததுபோலவும் ஆகிவிட்டது என திருப்தியடைவார். இப்படி ஒரு மனிதாபிமானியாகவும் விளங்கினார்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டபின் 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் துவங்கி படங்கள் தயாரித்தார் தேவர். முருக பக்தரான தேவர், பக்தி கலந்த சமூகப்படங்களை தயாரித்து அவற்றை வெற்றிப்படமாக்கினார். திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் தேவர் பிரபலமானார்.
முருக பக்தரான தேவர், தன் படங்களில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை முருகன் கோவில் திருப்பணி களுக்கு வழங்கினார். காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கி விட்டுத்தான் வேலையை துவக்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார். திறமையானவர் களை எப்படியாவது தம் படங்களில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்.
கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்கு களை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான். படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் அவற்றை நடத்துவார். படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறிவிட்டிருக் கும்.
'ஆட்டுக்கார அலமேலு' படத்திற்கான வெற்றிவிழாவில், மற்ற கலைஞர்களுக்கு ஈடாக அதில் நடித்த ஆட்டுக்கும் வெற்றிமாலையை சூட்டி அசத்தினார். விலங்குகள் மீது அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம். தம் வீட்டில் சில விலங்குகளையும் வளர்த்து வந்தார் அவர்.
நாள் முழுவதும் அவர் நாவில் 'முருகா..!' என்ற வார்த்தை எத்தனை ஆயிரம் முறை வந்திருக்கும் என்று சொல்ல முடியாது. பணியாளர்களையும், தெரிந்தவர்களையும் 'முருகா' என்றே அழைப்பார். வார்த்தைக்கு வார்த்தை 'முருகா... முருகா!' என உருகிப்போகும் பக்தனான அவர், அதே முருகனை வசைபாடும்போது அந்த வார்த்தைகளை காதுகொடுத்து கேட்க முடியாது.
புகழ்பெற்ற முருகன் கோவில்களில், சிறப்பு நாட்களில் முருகனுக்கு கட்டும் கோவணம், பூஜை முடிந்ததும் தேவரை தேடி வரும். லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் தேவர் வீட்டு பீரோவை அலங்கரித்தவை அவர் சேமித்த இந்த கோவணங்கள்தான். நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வரழைத்ததும் அவரது சாதனைதான்.
ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே மறுநாள் 7 -9-1978 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார்.
தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது. தேவருக்கு மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள். தேவருக்குப்பின் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார். கமல், ரஜினி நடித்து பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர்.
சின்னப்பா தேவர் காலத்திற்குப்பின் சில ஆண்டுகள் வரை படங்கள் தயாரித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம், கால மாற்றத்தினால் திரையுலகில் தொடர்ந்து செயல்படுவதில் சுணங்கியது. தொடர் தோல்விகளால் சின்னப்பா தேவர் என்ற தனி மனிதரால் உருவான அந்நிறுவனம், படத்தொழிலிலிருந்து முற்றாக விலகி தம் திரைப்படங்களை மட்டும் ஆவணங்களாக்கி ஒதுங்கிக்கொண்டது.
விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - தேவரின் நட்பை தமிழ்த் திரையுலகமே அறிந்து போற்றிக் கொண்டிருக்கிறது.
'அரசிளங்குமரி' படத்தில் மல்யுத்தம் கதாபாத்தரத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக சாண்டோ சின்னப்பா தேவரை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார்.
பின்னர் சண்டை நடிகராக இருந்தவரை 'தாய்க்குப்பின் தாரம்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்த்தியது, தொடர்ந்து 16 படங்கள் கதாநாயகனாக நடித்து கொடுத்து தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தை வெற்றிப்பட நிறுவனமாக பேச வைத்தது எல்லாமே எம்.ஜி.ஆர் தான் என்பதை எல்லோரும் அறிவார்கள்... தேவரும் உணர்வார். எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையையும் கொண்டவர். தான் வணங்கும் முருகப் பெருமானுக்கு இணையாகத்தான் தன் மனதில் எம்.ஜி.ஆரை உயர்த்தி வைத்திருந்தார் தேவர். அது மிகையான செய்தியும் அல்ல.
அவ்வளவு ஏன்... எம்ஜிஆரை ஆண்டவா என்றுதான் தேவர் அழைப்பார்.
அப்படிப்பட்ட இறுக்கமான நண்பர்களாக இருந்த இவர்களுக்குள், இவர்களே எதிர்பார்க்காத ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அந்தப் பிரச்சனைதான் பூதாகரமாகி இருவருக்குள்ளும் ஒரு மோதலை உருவாக்கி பிரித்து வைத்தது.
நட்பு வேறு தொழில் வேறு என்று நினைப்பவர் தேவர். என்னதான் நட்பாக இருந்தாலும் தொழில் விஷயத்தில் கரெக்டா இருக்க வேண்டும் என்பதை சம்பந்தபட்டவர்களிடமே நேரிலேயே முகதாட்சணை பார்க்காமல் சொல்லிவிடுவார் தேவர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வழக்கம் போல் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக மறுபடியும் ஒப்பந்தம் செய்து 'காதல் வாகனம்' என்ற படத்திற்கான பூஜையைப் போட்டார் தேவர். பூஜையன்றே தீபாவளி வெளியிடு என்றுஎல்லா பேப்பர்களிலும் விளம்பரம் கொடுத்தார். படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடக்கத் தொடங்கியது. இதில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடியாக நடித்தார்கள். சின்னப்பா தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார்.
ஒருநாள் இந்தப் படத்தின் காலை 9 மணி படப்பிடிப்பிற்கு 8 மணிக்கே நடிகர் அசோகன் வந்துவிட்டார். எம்.ஜி.ஆர். லேட்டாக வந்தார். உள்ளே போய் மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து உட்கார்ந்தார். தேவருக்கு கோபம் கொப்பளித்தது. தேவர் எப்பொழுதும் எம்.ஜி.ஆரை மட்டும் நேராகத் திட்டமாட்டார். யாரையாவது கூப்பிட்டு அவர்களைத் திட்டுவதுபோல் ஆபாசமாக திட்டத் தொடங்கிவிடுவார். அப்படித்தான் அன்று அசோகனைத் திட்டுவதுபோல் எம்.ஜி.ஆரைத் திட்டினார்.
அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசினார். பணம் மட்டும் கட்டு கட்டாக வாங்கத் தெரிகிறது. ஆனால் படப்பிடிப்பிற்கு மட்டும் சீக்கிரமா வரத் தெரியாது. உன்னால எவ்வளவு வேலைகள் நின்னுப் போச்சு. அதனால உண்டான நஷ்டத்தை நீயா தருவ... என்றுபடப்பிடிப்பிற்கு வந்தவர்களெல்லாம் வேடிக்கைப் பார்க்கின்ற அளவிற்கு சத்தம் போட்டார் தேவர். அசோகனுக்குத் தெரியும் இந்தத் திட்டு நமக்கில்லை என்று.
இருந்தாலும் அசோகன், 'அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே... கொஞ்சம் லேட்டாயிடுச்சு நாளைக்கு சீக்கிரம் வந்துடறண்ணே...' என்று தேவரிடம் கெஞ்சுவார். இந்தத் திட்டு நமக்குத்தான் என்று உணர்த்திருந்தாலும் இதைக் கண்டுக் கொள்ளாதவர் போல் வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொள்வார் எம்.ஜி.ஆர். இப்படி எம்.ஜி.ஆர். மேல் தேவருக்கும் தேவர் மேல் எம்.ஜி.ஆருக்கும் கோபம் இருந்தாலும் அதை வெளியேக் காட்டிக் கொள்ளாமல், வெளிப்படையாக மோதிக் கொள்ளாமல் அண்ணே அண்ணே என்று தன்மையாகப் பேசிக்கொள்வார்கள்.
தேவர் பிலிம்ஸ் 'காதல் வாகனம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் 'அடிமைப் பெண்' என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். 'அடிமைப்பெண்' படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் போக வேண்டியிருந்ததால் தேவரை நேரில் சந்தித்து எம்.ஜி.ஆர். சென்னார்.
"நான் சம்பந்தப்படாத காட்சிகளை எடுத்துக் கொண்டிருங்கள், நான் சீக்கிரமாக வந்து என் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்து விடுகிறேன். படத்தை நீங்கள் சொன்னதுபோல் தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிடலாம்," என்றுஎம்.ஜி.ஆர். நம்பிக்கையோடு சொன்னார். தேவரும் ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். இல்லாத காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டு எம்.ஜி.ஆரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். சொன்னப்படி வரவில்லை. ராஜஸ்தானில் நடந்த 'அடிபைப்பெண்' படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நவம்பர் 1ந்தேதி வந்து சேர்ந்தார். நவம்பர் 7ந் தேதிதீபாவளி அன்றுதான் 'காதல் வாகனம்' படத்தை வெளியிடுவதாக விளம்பரம் கொடுத்திருந்தார் தேவர்.
தேவருக்கு எம்.ஜி.ஆர். போன் பண்ணி பேசினார். "அண்ணே மன்னிச்சிடுங்க திரும்பிவர கொஞ்சம் லேட்டாகிவிட்டது. நானும் மிகவும் களைப்படைந்து வந்திருக்கிறேன். படத்தை ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் பண்ணிடலாம். ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்து நான் வந்து என் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்து விடுகிறேன்," என்றார். தேவருக்கு கோபம் அதிகமாகியது.
"என் படம் தீபாவளியன்று நிச்சயமாக வெளிவரும். முடிந்தால் இப்போதே புறப்பட்டு வந்து வேலை செய்யுங்கள். இல்லாவிட்டால் ஒரு கழுதையை ஹீரேவாகப் போட்டு நான் படத்தை முடித்துவிடுவேன். தீபாவளிக்கு படம் வருவது மட்டும் தள்ளிப்போகாது".
பட்டாசு போல் வெடித்துத் தள்ளினார் தேவர். அதைக்கேட்ட எம்.ஜி.ஆருக்கு கோபம் ஒரு பக்கம். வருத்தம் ஒரு பக்கம். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உடனடியாக படப்பிடிப்புக்கு தயாரானார். எம்.ஜி.ஆர் மூன்று நாட்களாக இரவு பகலாக நடித்து முடித்துக் கொடுத்தார். தீபாவளியன்று 'காதல் வாகனம்' படம் ரிலீசானது. படம் படு தோல்வியடைந்தது.
அத்துடன் 'எம்.ஜி.ஆர். உறவே இனி வேண்டாம்' என்று அறுத்துக் கொண்டார் தேவர். அதன்பிறகு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், என்று சில சிறிய ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தார். கூடவே குதிரை, குரங்கு, ஆடு, மாடு, என்று விலங்குகளையும் நடிக்க வைத்து படங்களை எடுத்து வெளியிட்டார்.
பின்னர் இந்தியில் ராஜேஷ்கண்ணாவை நடிக்க வைத்து 'ஹாத்தி மேரா சாத்தி' படத்தை எடுத்தார். இந்தியா முழுவதும் படம் சூப்பர் ஹிட்டானது. தேவருடன் உறவு அறுந்திருந்த போதிலும் 'ஹாத்திமேராசாத்தி' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். அதே கதையில் தமிழில் தான் நடிக்க வேண்டுமென்று விரும்பினார்.
கௌரவம் பார்க்காமல் தேவரைச் சந்தித்து, "அண்ணே இறுதியாக எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள். இந்தஒரேபடத்தில் மட்டும் நான் நடித்து முடித்துக் கொள்கிறேன்," என்றார்.
தேவரும் ஒத்துக் கொண்டார். எம்.ஜி.ஆரும் நடித்தார். தேவர் பிலிம்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம 'நல்ல நேரம்' தமிழிலும் அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
இப்படம் ஏற்கனவே மேஜர் சுந்தராஜன் கதாநாயகனாகநடிக்க தெய்வச் செயல் என்ற பெயரில் குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருந்தார் தேவர். அதேபடம் சில மாற்றங்களுடன் 'ஹாத்தி மேரா சாத்தி' என்ற பெயரில் இந்திக்குப்போனது. மறுபடியும் தமிழில் நல்ல நேரமாக வெளியே வந்து வெற்றிப் பெற்றது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக